என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • ஆசிரியரின் செயல், நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது
    • பள்ளி வளாகத்தில் பார்ட்டி நடந்தபோது, அந்த ஆசிரியரும் குடிபோதையில் இருந்துள்ளார்

    சிவபுரி:

    மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் மது மற்றும் அசைவ உணவு விருந்து வழங்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    கானியாதானா பிளாக்கிற்கு உட்பட்ட போட்டா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த பார்ட்டி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், ஆசிரியர் செவ்வாய்க்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் பார்ட்டி எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.

    பள்ளி வளாகத்தில் பார்ட்டி நடந்தபோது, அந்த ஆசிரியரும் குடிபோதையில் இருந்ததாகவும், அதை வீடியோ எடுத்த உள்ளுர்வாசிகளுடன் சண்டையிட்டதாகவும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கூறி உள்ளார்.

    ஆசிரியரின் செயல், நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்றும் வட்டார கல்வி அதிகாரி மற்றும் பிச்சோர் துணைக்கோட்ட வருவாய் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மாவட்ட கல்வி அதிகாரி கூறினார்.

    'பள்ளி வளாகத்தில் அந்த ஆசிரியர் இதுபோன்று தொடர்ந்து விருந்துகளை நடத்தியதாக புகார்கள் வந்துள்ளன. சமீபத்தில் நடந்த பார்ட்டி தொடர்பான வீடியோ கிளிப் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேற்கொண்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.  

    • மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
    • நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இன்று காலை 8.43 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது.

    இந்த நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.

    • தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்றவர்கள் சாலை விபத்தில் சிக்கினர்.
    • தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

    தாதியா:

    மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியது. சீதாபூர் மற்றும் உபரியா கிராமங்களுக்கு இடையே நிகழ்ந்த இந்த விபத்தில் மைனர் குழந்தைகள் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    தப்பி ஓடிய லாரி ஓட்டுநர், சிருலா பகுதியில் உள்ள சுங்கச் சாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் ஆதார் அட்டை அடிப்படையில்,குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • பலத்த காயமடைந்தவர்கள் ரேவாவின் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • தொழிலாளர்கள் குழு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர். பேருந்து ஒன்று சுமார் நூறு பேருடன் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ​​நேற்று இரவு ரேவாவில் உள்ள சுஹாகி பஹாரி என்கிற இடத்தில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

    இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்ற சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில், காயமடைந்தவர்கள் சுஹாகியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் ரேவாவின் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விபத்து குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் நவ்நீத் பாசின் கூறுகையில், "பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்றும் அவர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளதும், தொழிலாளர்கள் குழு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று கூறினார்.

    • சிறுமியின் உடலை தோளில் தூக்கிக்கொண்டு பஸ் நிலையத்தை நோக்கி நடந்தே சென்றார்
    • அவர் மேல் இரக்கம் காட்டிய சக பயணிகள் பணம் கொடுத்து உதவினார்கள்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சட்டார்பூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 4 வயது சிறுமி இறந்தார். ஆம்புலன்சு வசதி இல்லாததால் அந்த சிறுமி உடலை உறவினர்கள் தோளில் சுமந்து எடுத்து சென்றனர். இது அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போல அங்கு மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பதான் என்ற கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது உறவினர் அந்த குழந்தையை சட்டார்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அந்த குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தது. இதையடுத்த குழந்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு ஆம்புலன்சு மூலம் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உறவினர் முடிவு செய்தார். ஆனால் ஆம்புலன்சு எதுவும் கிடைக்கவில்லை.

    தனியார் வாகனத்தில் எடுத்து செல்ல அவரிடம் பணவசதி இல்லை. இதனால் அவர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் மனதை திடப்படுத்திக்கொண்டு பஸ்சில் செல்லலாம் என நினைத்தார். சிறுமியின் உடலை துணியால் மூடி தனது தோளில் தூக்கிக்கொண்டு ஆட்கள் அதிக நடமாட்டம் உள்ள ரோட்டில் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தே சென்றார். தன் ஊருக்கு செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

    ஆனால் பஸ்சில் டிக்கெட் எடுக்க கூட அவரிடம் போதுமான அளவு பணம் இல்லை. தனது நிலையை பஸ்சில் இருந்த பயணிகளிடம் கூறினார். அவர் மேல் இரக்கம் காட்டிய சக பயணிகள் பணம் கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அவர் குழந்தை உடலை தோளில் சுமந்தவாறு பஸ்சில் பயணம் செய்து சொந்த ஊருக்கு சென்றார்.

    இந்த காட்சிகளை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெடி மருந்தால் வெடித்ததா அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
    • காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றதாக காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சாவ்லா தெரிவித்தார்.

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள பன்மோர் நகரில் உள்ள வீட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

    7 பேர் படுகாயமடைந்த நிலையில், மேலும் சிலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து மொரேனா மாவட்ட ஆட்சியர் பாக்கி கார்த்திகேயன கூறுகையில்" இந்த சம்பவம் வெடி மருந்தால் வெடித்ததா அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். காயமடைந்தவர்கள் அனைவரும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

    இடிபாடுகளை அகற்ற இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் ஈடுபடுத்தப்பட்டனர். காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றதாக காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சாவ்லா தெரிவித்தார்.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு, படாலாவில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    • மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த ராமநவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது.
    • சிறுவனை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த ராமநவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. அப்போது நடந்த மோதலில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

    மத்திய பிரதேசத்தில் போராட்டங்களின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரிடம் இருந்து அதற்கான நஷ்டஈட்டை அந்த அமைப்பினரே வழங்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி ராமநவமியின் போது நடந்த வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துக்களுக்கு ரூ.2.9 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கர்கோன் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த நோட்டீசில் வன்முறையின் போது சேதப்படுத்தப்பட்ட பொருள்களுக்கு நஷ்டஈடாக ரூ.2.9 லட்சம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து. இதனை கண்டு சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சிறுவனை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் சிறுவனின் பெற்றோர் மத்திய பிரதேச ஐகோர்ட்டில் மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு தீர்ப்பாயத்தில் மனு செய்து தீர்வு காணும்படி கூறியுள்ளது. இது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்ட எஸ்.பி., சிறுவனின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
    • இதில் ‘ஹைலைட்’டான இன்னொரு விஷயமும் நடந்துள்ளது.

    போபால் :

    தன்னை திட்டிய தாய் குறித்து 3 வயது சிறுவன் போலீசில் 'புகார்' கொடுத்திருக்கிறான்.

    இந்த ருசிகர சம்பவம், மத்தியபிரதேச மாநிலத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள தேதலாய் கிராமத்தில் நடந்திருக்கிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்குள்ள போலீஸ் நிலையத்தின் முன் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக் அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர், குட்டிப்பையன் ஒருவனுடன் அங்கு வருவதை கண்டார். அவர்கள் அப்பா-மகன் என்பதை அறிந்தார்.

    அடுத்து அந்த சிறுவன் மழலை மொழியில் சொன்னதுதான் சப்-இன்ஸ்பெக்டரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    'நான் எங்கம்மா மேல கம்ப்ளெய்ன்ட் குடுக்கணும்.'

    'திட்டுறாங்க...'

    தொடர்ந்து நடந்த உரையாடல் வருமாறு...

    'ஏன் செல்லம்?'

    'அவங்க... நான் குளிச்சதும் என்னோட நெத்தியில திலகம் வைக்க விடலைன்னு திட்டுறாங்க... என் மிட்டாயையெல்லாம் திருடிக்கிட்டாங்க...'

    'அப்படியா?'

    'ஆமா...'

    சிறுவன் கூறிய புகாரை ஒரு தாளில் எழுதினார் சப்-இன்ஸ்பெக்டர்.

    'நீ சொன்ன புகாரை எழுதியாச்சு... இதில நீ கையெழுத்து போடணும்.'

    பொடியனும் 'கையெழுத்து' (சில கோடுகள்) போட்டான்.

    அம்மா மீது புகார் கொடுக்க வேண்டும் என்று மகன் வற்புறுத்தியதால் அவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததாக தந்தை புன்னகையுடன் கூறினார். கண்டிப்பாக 'நடவடிக்கை' எடுப்பதாக சிறுவனுக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களை அனுப்பிவைத்தார் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்ததால் பலரது கவனத்தை ஈர்த்தது.

    மாவட்ட எஸ்.பி., சிறுவனின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.

    சிறுவனிடம் கனிவோடு விசாரித்து அனுப்பிய பெண் சப்-இன்ஸ்பெக்டரையும், போலீஸ் நிலையத்துக்கு யாரும் அச்சமின்றி வரலாம் என்று காட்டியிருக்கிறார் என எஸ்.பி. பாராட்டினார்.

    இதில் 'ஹைலைட்'டான இன்னொரு விஷயமும் நடந்துள்ளது. சிறுவன் போலீஸ் நிலையம் சென்ற வீடியோவை பார்த்த மாநில உள்ளாட்சித்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, நேற்று வீடியோ காலில் சிறுவனை தொடர்புகொண்டு உரையாடினார். அப்போது, தீபாவளிக்கு அவனுக்கு ஒரு சைக்கிளும், சாக்லேட்டுகளும் அனுப்புவதாக கூறியிருக்கிறார்.

    • இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும்.
    • ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று முன்பு அறிவித்து இருந்தனர்.

    மத்திய பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை அந்த மாநில அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

    ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று முன்பு அறிவித்து இருந்தனர். ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை.

    இந்த நிலையில் அங்குள்ள ஜபுல்பூர் நகரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது.
    • கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்காது

    போபால்:

    நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.  தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மொழியில் இடம் பெற்ற மருத்துவ உயிர் வேதியியல், மருத்துவ உடற் கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் ஆகிய பாடங்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். 

    அப்போது பேசிய அவர், இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது என்றார். இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இனி, கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருக்காது, அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பெருமையுடன் படிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டது, விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும் என்றார். மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ம.பியின் குணா மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து போலீசார் அந்த 2 கிராமங்களிலும் திடீர் சோதனை நடத்தினார்கள்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள சன்சோடா, ரகோகர் ஆகிய கிராமங்களில் திருட்டுத்தனமாக கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த 2 கிராமங்களிலும் திடீர் சோதனை நடத்தினார்கள். ஆனால் சாராயம் காய்ச்சி விற்கப்படும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயை திறந்து பார்த்தனர். அப்போது அதில் குடிநீருக்கு பதிலாக சாராயம் வந்தது. குடிநீர் குழாயில் சாராயம் வருவதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து குடிநீர் குழாயைச் சுற்றி பள்ளம் தோண்டினார்கள். அப்போது பூமிக்குள் 7 அடி ஆழத்தில் ஏராளமான சாராய ஊறல் பேரல்கள் இருந்தன. போலீசார் அந்த சாராய ஊறல்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

    சாராயம் காய்ச்சிய பிறகு அதை பேரல்களில் நிரப்பி பூமிக்கு அடியில் புதைத்து வைத்து அதற்கு மேல் ஆழ்துளை குடிநீர் குழாய் போல வடிவமைத்துள்ளனர். அதற்கு மேலே கைபம்பு மாட்டியுள்ளனர். குடிநீர் எடுப்பது போல் கை பம்பு மூலம் சாராயத்தை வெளியே எடுத்துள்ளனர். பின்னர் அதை பாலித்தீன் பைகளில் அடைத்து விற் பனை செய்து வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    8 பேரல்களில் இருந்த சாராயம், எத்தினல் ஆல்கஹால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 2 கிராமங்களும் வனப் பகுதிக்குள் உள்ளது. இங்கு போதிய ஆள் நட மாட்டம் இல்லை. எனவே இங்கு சமூக விரோதிகள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துள்ளனர்.

    சாராயம் காய்ச்சிய தப்பியோடிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.
    • காசி விஸ்வநாதர் கோயில் இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கிறது.

    உஜ்ஜயினி:

    குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, உஜ்ஜயினி நகரில் 856 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மகா காளீஸ்வரர் கோயில் வளாக வழித்தடத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது ஹர ஹர மகாதேவ் என்ற கோஷமிட்ட பிரதமர், பின்னர் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த திட்டத்தின் மகத்துவம் வரும் தலைமுறையினருக்கு கலாச்சார மற்றும் ஆன்மீக உணர்வை கொடுக்கும். உஜ்ஜயினி நகரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் செழிப்பு, அறிவு, கண்ணியம் மற்றும் இலக்கியத்திற்கு வழிவகுத்தது.

    'நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் மூலம் காலனி ஆதிக்கத்தின் அடையாளங்களை நீக்கினோம். இன்று, இந்தியா முழுவதும் உள்ள கலாச்சார இடங்கள் அனைத்தும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. நாட்டின் முக்கிய ஆன்மீக தலங்களின் பெருமைகளை மீட்டெடுத்து வருகிறோம். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் இந்தியாவின் கலாசார பெருமிதம். சோம்நாத்தில் வளர்ச்சிப் பணிகள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றன. பாபா கேதாரின் ஆசியுடன் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் புதிய வளர்ச்சி அத்தியாயங்கள் எழுதப்படுகின்றன. 

    இந்தியாவைப் பொறுத்தவரை தர்மம் என்றால் கடமைகளை முடிப்பது. நமது கடமைகள் என்பது உலக சேவை மற்றும் மனித குல சேவைதான். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக உஜ்ஜயினி நகரில் உள்ள மகா காளீஸ்வரர் கோயிலுக்கு சென்ற பிரதமர் அங்கு பூஜை செய்து வழிபட்டார். 

    ×