என் மலர்
இந்தியா

பள்ளியில் சரக்குடன் அசைவ உணவு... விதிகளை மீறி விருந்து வழங்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்
- ஆசிரியரின் செயல், நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது
- பள்ளி வளாகத்தில் பார்ட்டி நடந்தபோது, அந்த ஆசிரியரும் குடிபோதையில் இருந்துள்ளார்
சிவபுரி:
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் மது மற்றும் அசைவ உணவு விருந்து வழங்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கானியாதானா பிளாக்கிற்கு உட்பட்ட போட்டா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த பார்ட்டி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், ஆசிரியர் செவ்வாய்க்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் பார்ட்டி எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.
பள்ளி வளாகத்தில் பார்ட்டி நடந்தபோது, அந்த ஆசிரியரும் குடிபோதையில் இருந்ததாகவும், அதை வீடியோ எடுத்த உள்ளுர்வாசிகளுடன் சண்டையிட்டதாகவும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கூறி உள்ளார்.
ஆசிரியரின் செயல், நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்றும் வட்டார கல்வி அதிகாரி மற்றும் பிச்சோர் துணைக்கோட்ட வருவாய் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மாவட்ட கல்வி அதிகாரி கூறினார்.
'பள்ளி வளாகத்தில் அந்த ஆசிரியர் இதுபோன்று தொடர்ந்து விருந்துகளை நடத்தியதாக புகார்கள் வந்துள்ளன. சமீபத்தில் நடந்த பார்ட்டி தொடர்பான வீடியோ கிளிப் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேற்கொண்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.






