என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் சுரால்கோட் சித்தார்க் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

    பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் இறந்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள். சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    • சேலையை மாற்றுவது போல கணவர்களை மாற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
    • ஆண் பாவம் பொல்லாதது என்பார்கள். அதுபோல பல ஆண்களை ஆசை காட்டி திருமண மோசடி செய்த ஷாஹீன் தற்போது சிறைக்கு பின்னால் நின்று கம்பி எண்ணுகிறார்.

     ஜம்முகாஷ்மீர்:

    ஜம்முகாஷ்மீர் மாநிலம் ராசவுரி மாவட்டம் நவ்ஜூரா நகரைச் சேர்ந்தவர் ஷாஹீன் அக்தர் (வயது 30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது அல்டாப் என்பவரை திருமணம் செய்த நிலையில், முகமது அல்டாப் போலீசில் கடந்த 5-ந்தேதி ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் திருமணத்திற்கு பிறகு ஷாஹீன் அக்தர் தன்னை வஞ்சிப்பதாகவும், நெருங்க விடாமல் புறக்கணிப்பதாகவும் தெரிவித்து இருந்தார். அதன் பேரில் ஷாஹீன் அக்தரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

    ஷாஹீன் அக்தர் இதுவரை 12 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அவர் அளித்த தகவலை கேட்ட போலீசாருக்கே தலை சுற்றியது. மேலும் அவர் அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்ட ஆண்களிடம் நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகி உள்ளார்.

    சேலையை மாற்றுவது போல கணவர்களை மாற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    தற்போது வரை அவரால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 12 (ஒரு டஜன்) என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர்களின் பெயர், விபரம் குறித்த தகவல்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    இதுகுறித்து அந்த பெண் மீது புகார் கொடுத்த முகமது அல்தாப் கூறியதாவது:-

    நான் திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது கல்யாண தரகர் ஒருவர்தான் ஷாஹீன் அக்தரை அறிமுகப்படுத்தினார். அவர் மீதான நம்பிக்கையின் காரணமாக ஷாஹீன் அக்தரை நான் திருமணம் செய்துகொண்டேன்.

    அதன் பிறகு முதல் நான்கு மாதங்கள் என்னுடன் ஷாஹீன் அக்தர் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினார். பின்னர் பல்வேறு பொய்யான தகவல்களை கூறி என்னிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்துக்கொண்டார். பின்னர் சில நாட்களில் என்னிடம் இருந்து அவர் பிரிந்து சென்று விட்டார். இதேபோல் ஏராளமான ஆண்களை அவர் ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    முகமது அல்தாப் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் 420 மற்றும் 120 பி ஆகிய பிரிவுகள் ஷாஹீன் அக்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 14-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து மத்திய காஷ்மீர் புட்கம் நீதிமன்றத்தில் ஷாஹீன் அக்தர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அப்போதுதான் இந்த பெண் ஏற்கனவே திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களுக்கு இவரது திருமண நாடகம் தெரியவந்தது.

    ஆண் பாவம் பொல்லாதது என்பார்கள். அதுபோல பல ஆண்களை ஆசை காட்டி திருமண மோசடி செய்த ஷாஹீன் அக்தர் தற்போது சிறைக்கு பின்னால் நின்று கம்பி எண்ணுகிறார்.

    • அமர்நாத் யாத்திரையில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பு வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் கோவிலில் ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஜூலை 1-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரையில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் சுமார் 3,800 மீட்டர் உயர பனிமலையில் பக்தர்கள் ஏறியபோது 2 பேர் மயங்கி விழுந்து இறந்தனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பு வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனால் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்றபோது பலியான பக்தர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

    • சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதாக வீரர்களுக்கு தகவல் கிடைத்தது
    • ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டை

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக அவ்வப்போது பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் உடுருவும் சம்பவம் நடைபெறுவது உண்டு. ஆனால், இந்திய வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ஊடுருவலை முறியடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூஞ்ச் செக்டார் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாட்டம் இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி, இந்திய ராணுவம் ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது இரண்டு சிறிய ஊடுருவல் தடுக்கப்பட்டதாகவும், ஒரு பெரிய ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு உதவியதாக மூன்று ஊழியர்களை ஜம்மு-காஷ்மீர் அரசு வேலையில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • யாத்திரையைக் கருத்தில் கொண்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
    • சிஆர்பிஎஃப் வீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    காஷ்மீரின் பாஹல்காமில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். இக்கோயிலில் குளிர்காலத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, அமர்நாத் யாத்திரை என்ற புகழ் பெற்ற யாத்திரையின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த யாத்திரை சந்தன்வாரி பகுதியில் ஆரம்பித்து கோயில் வரை நடைபெறும்.

    தற்போது நடைபெற்று வரும் யாத்திரைக்கு பாதுகாப்பை அதிகரிக்க, ஏராளமான சிஆர்பிஎஃப் படையினர் நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    "யாத்திரையைக் கருத்தில் கொண்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் உலகில் கிடைக்கக்கூடிய மிக நவீன தொழில்நுட்பத்தை பாதுகாப்பிற்கும் கண்காணிப்பிற்கும் பயன்படுத்துகிறோம். தெற்கு காஷ்மீர் பகுதியில் நவீன கருவிகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு பருந்து போன்ற விழிப்புணர்வுடன் சிஆர்பிஎஃப் செயல்பட்டு வருகிறது" என சிஆர்பிஎஃப் அமைப்பின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் அவஸ்தி தெரிவித்தார்.

    அமர்நாத் யாத்திரைக்கு குறிப்பிட்ட அச்சுறுத்தல் உள்ளதா என்று கேட்டதற்கு அவஸ்தி பதிலளித்திருப்பதாவது:

    "குறிப்பிட்டு சொல்லும்படியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், யாத்திரை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. எங்கள் வீரர்கள் ஓய்வெடுக்காமல் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள்; 365 நாட்களும் பணியில் இருக்கிறார்கள். உங்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இருக்கிறோம். நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் யாத்திரை குழு சுமூகமாக செல்வதை உறுதி செய்வதற்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு உள்ளூர் மக்களின் முழு ஒத்துழைப்பு உள்ளது. அவர்கள் யாத்ரீகர்களுக்கு குடிநீர் வழங்குகிறார்கள்.

    இவ்வாறு அவஸ்தி கூறினார்.

    • தமிழக பக்தர்களை மேற்கொண்டு பயணம் செய்ய பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை.
    • சி.ஆர்.பி.எப். வீரர்கள் எங்களை காப்பாற்றி முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் தேதி 21 பேர் கொண்ட குழுவினர் அமர்நாத் புனித யாத்திரை சென்றனர்.

    இவர்கள் கடந்த 7-ந் தேதி காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 14 கி.மீ தூரமுள்ள அமர்நாத் கோவிலுக்கு சென்று மலைச்சாலையில் நடந்து சென்று பனி லிங்கத்தை தரிசித்தனர்.

    அன்று இரவு கோவிலில் தங்கி மீண்டும் மறுநாள் நடந்தே பால்டால் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்து ஸ்ரீ நகருக்கு புறப்பட்டபோது நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டானது.

    இதையடுத்து தமிழக பக்தர்களை மேற்கொண்டு பயணம் செய்ய பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை.

    பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் யாரும் இங்கிருந்து செல்ல முடியாது என அவர்களை அங்கேயே தங்க அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மணிக்காம்ப் என்ற முகாம் பகுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் இருப்பதாக அவர்கள் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த குழுவில் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி, செல்வி, தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணன் நெய்வேலியைச் சேர்ந்த சரவணன், சண்முகராஜ், நிரஞ்சன், சகுந்தலா, மணி என 21 பேர் சிக்கியுள்ளனர்.

    இதுகுறித்து சின்னமனூரைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஸ்ரீநகருக்கும், காஷ்மீருக்கும் இடையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எப். வீரர்கள் எங்களை காப்பாற்றி முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    கடந்த 1-ந் தேதி தேனி மாவட்டத்தில் இருந்து வந்த நாங்கள் 7-ந் தேதியே சாமி தரிசனம் செய்து முடித்து விட்டோம். 9-ந் தேதி நாங்கள் ஊர் திரும்ப வேண்டிய நிலையில் 4 நாட்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.300 செலவாகிறது. சுகாதாரமான தண்ணீர், உணவு கிடைக்கவில்லை. வயதான பலர் இங்கு எங்களுடன் உள்ளதால் எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என்ற ஏக்கம் நிலவி வருகிறது.

    தமிழக அரசு எங்களை ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை அரசு எந்தவித உத்தரவாதமும் அளிக்காததால் அச்சத்துடனேயே உள்ளோம். எனவே உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்றனர்.

    இதனிடையே தங்கள் உறவினர்களை எப்போது காண்போம் என்ற ஏக்கத்தில் அவர்களது குடும்பத்தினரும், கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    • ஜமால்தீன், குல்கர் அகமது, சபீர் அகமது, குலாபி ஆகிய 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.


    காஷ்மீரில் உள்ள கிஸ்த்வார் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சிறப்பு போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    ஜமால்தீன், குல்கர் அகமது, சபீர் அகமது, குலாபி ஆகிய 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவாகி இருந்தன. அவர்கள் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டனர்.

    • ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் பல்டால் முகாமிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
    • 700-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை காசிகுண்ட் ராணுவ முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. யாத்திரை தொடங்கிய பக்தர்கள், தங்கள் வழிப்பாதைகளில் முன்னேற முடியாமல் சிக்கித் தவித்தனர். மூன்றாவது நாளாக இன்றும் யாத்திரை தொடங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று மதியம் வானிலை ஓரளவு சீரடைந்ததையடுத்து யாத்திரை மீண்டும் தொடங்கியது. பஞ்சதர்னி மற்றும் ஷேஷ்நாக் முகாம்களில் இருந்து யாத்திரை தொடங்கியது. குகைக் கோவிலைச் சுற்றி வானம் தெளிவானவுடன், அதிகாரிகள் வாயில்களை திறந்து, அமர்நாத் குகைக்கோயிலுக்குள் சென்று இயற்கையாக உருவாகியிருக்கும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்தனர். ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் பல்டால் முகாமிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்குள்ள சூழ்நிலையை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, கனமழை காரணமாக சிக்கித் தவித்த 700-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை ராணுவத்தினர் அழைத்துச் சென்று அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமர்நாத் பனி லிங்கத்தை இதுவரை 84,768 பேர் தரிசனம் செய்துள்ளனர்
    • இன்று காலை அடிவார முகாமில் இருந்து 17,202 பேர் புறப்பட இருந்தனர்

    அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த 1-ந்தேதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு வழியாக பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் பாத யாத்திரை செல்வார்கள்.

    வானிலை சீரடைந்தபின் யாத்திரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 84,768 பேர் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இன்று இரண்டு முகாமில் இருந்தும் 17,202 பேர் யாத்திரை மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீநகரில் சைக்கிள் ஓட்ட நிகழ்வின் நிறைவு விழா நடைபெற்றது.
    • போலீஸ் இசைக்குழு மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

    ஸ்ரீநகர்

    காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த மாதம், போலீஸ் ஏற்பாட்டில் நடந்த சைக்கிள் ஓட்ட நிகழ்வின் நிறைவு விழா நடைபெற்றது. துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா பங்கேற்ற இந்த விழாவின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    அப்போது அதற்கு மரியாதை அளிக்கும்வகையில் சிலர் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எழுந்து நிற்பதை உறுதி செய்யாத சில போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதை ஸ்ரீநகர் போலீஸ் மறுத்துள்ளது.

    அதன் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், 'தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சில போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் ஒரு தவறான தகவல் உலா வருகிறது.

    ஆனால் இந்த விவகாரத்தில் 12 பேர் மீது சட்டரீதியான நடவடிக்கைதான் எடுக்கப்படுகிறது. மேலும், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நிற்பதை உறுதி செய்யாத போலீஸ் இசைக்குழு மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் நேற்று அமர்நாத் யாத்திரையை தொடங்கி வைத்தார்
    • இன்று பால்தால் முகாமில் இருந்து சுமார் 6 ஆயிரம் பேர் கொண்ட முதல் குழு புறப்பட்டுள்ளது

    தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பக்தர் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த வருடம் ஜூலை 1 (இன்று) முதல் ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை பனி லிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    யாத்திரை மேற்கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு முகாமில் இருந்து குழு குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நேற்று அமர்நாத் யாத்திரை தொடங்கியது. ஜம்மு-காஷ்மீர மாநில ஆளுநகர் ஜம்மு முகாமில் நேற்று யாத்திரையை தொடங்கி வைத்தார். ஜம்முவில் இருந்து முதல் குழுவாக 3488 பக்தர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை பால்காம் முகாமில் இருந்து சுமார் 6 ஆயிரம் பக்தர்கள் யாத்திரை தொடங்கியுள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய இரண்டு வழிகள் பயன்படுத்தப்படுகிறது.

    அதில் ஒன்று மத்திய காஷ்மீர் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்தால். மற்றொன்று தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்னாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் ஆகும்.

    • அமர்நாத் பனிலிங்கத்தை ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்கிறார்கள்.
    • இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரை நாளை மறுதினம் தொடங்குகிறது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.

    இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 62 நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

    அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும், அமர்நாத் யாத்திரைக்கு செல்லும்போது தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவுப் பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அமர்நாத் புனித யாத்திரைக்காக சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஜம்முவின் பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து முதல் குழு நாலை புறப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என அமர்நாத் கோவில் வாரியம் தெரிவித்துள்ளது.

    ×