என் மலர்
ஆந்திர பிரதேசம்
- புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் தரிசனம் செய்யும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- இன்றுடன் புரட்டாசி மாதம் நிறைவு பெறும் நிலையில் பக்தர்கள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி இந்த மாதம் 5-ந் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழாவை காண நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.
புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் தரிசனம் செய்யும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக 3-ம் சனிக்கிழமை முதல் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதால் இலவச தரிசனத்திற்காக சுமார் 5 கி.மீ. வரை வரிசையில் காத்திருந்து 40 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் 4-ம் சனிக்கிழமை என்பதால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்றுடன் புரட்டாசி மாதம் நிறைவு பெறும் நிலையில் பக்தர்கள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கூட்டம் குறையாமல் அப்படியே உள்ளதால் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், டீ, காபி உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். நாளை ஐப்பசி மாதம் தொடங்குவதால் படிப்படியாக பக்தர்கள் கூட்டம் குறையும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 84,794 பேர் தரிசனம் செய்தனர். 35,560 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.67 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- ஆஸ்பத்திரிக்கு செல்லும் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லை.
- மழையில் இருந்து கீழே வரும் ஒத்தையடி பாதை செங்குத்தாகவும் மழை பெய்துள்ளதால் வழுக்கும் படியும் இருந்ததால் ராதாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் விடியும் வரை காத்திருந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், நிட்டாமாமிடி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு நேற்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. மலை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லை. மழையில் இருந்து கீழே வரும் ஒத்தையடி பாதை செங்குத்தாகவும் மழை பெய்துள்ளதால் வழுக்கும் படியும் இருந்ததால் ராதாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் விடியும் வரை காத்திருந்தனர். ராதா பிரசவ வலியால் அலறி துடித்தார்.
இதையடுத்து காலை 8 மணிக்கு ராதாவை டோலியில் கட்டி தூக்கிகொண்டு நடக்க ஆரம்பித்தனர். 15 கி.மீ., தூரம் சென்றதும், ராதாவுக்கு பிரசவ வலி அதிகமாகி நடுவழியில் சென்றபோது டோலியில் இருந்த ராதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை டோலியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கண் அருகே காயம் ஏற்பட்டது.
பின்னர் ராதா மற்றும் குழந்தையை டோலியில் தூக்கி கொண்டு மலை அடிவாரத்திற்கு வந்தனர்.
அங்கு 108 ஆம்புலன்ஸ் இவர்களுக்காக காத்திருந்தது. 108 ஊழியர்கள் குழந்தைக்கும், பெண்ணுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, குழந்தை மற்றும் தாய் இருவரையும் படேருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தாய் மற்றும் சேயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் எங்கள் கிராமங்களுக்கு சரியான சாலை வசதி இல்லை. மருத்துவ உதவி கிடைப்பதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். சாலை வசதி குறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் பல முறை புகார் அளித்தோம். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை என்று மலை கிராம மக்கள் தெரிவித்தனர்.
- தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் சமுதாய கேதார கவுரி விரதப் பூஜை நடப்பது வழக்கம்.
- 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடக்கிறது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் சமுதாய கேதார கவுரி விரதப் பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
மறுநாள் 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடக்கிறது. எனவே கோவில் சுவாமிநாத குருக்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் அறிவுரையின் பேரில் கோவிலில் நடக்க இருந்த கேதார கவுரி விரத பூஜை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், எனக் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தெரிவித்துள்ளார்.
- மாதேனஹள்ளி, லட்சுமிபுரம், டிஹீரேஹால், ஓபுலாபுரம் செக் போஸ்ட் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
- ஜசிரகல்லு சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத் மற்றும் மூத்த தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருமலை:
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நேற்று நடைபயணம் சென்றார். அங்குள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ராம்புராவில் இருந்து ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திற்கு சென்றார்.
ஜசிரகல்லு சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத் மற்றும் மூத்த தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் மாதேனஹள்ளி, லட்சுமிபுரம், டிஹீரேஹால், ஓபுலாபுரம் செக் போஸ்ட் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக கையசைத்தனர். இளைஞர்கள் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.
இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஓபுலாபுரத்தில் மாலை 6.30 மணிக்கு ராகுல்காந்தி ஆந்திர எல்லையில் நடைபயணத்தை முடித்தார்.
மீண்டும் கர்நாடக மாநிலம் சென்றார். பெல்லாரியில் உள்ள ஹலகுண்டி மடம் அருகே இரவு தங்கினார்.
மீண்டும் வருகிற 18-ந் தேதி காலை ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து 22-ந் தேதி வரை ஆந்திராவில் 100 கிலோ மீட்டர் பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளார்.
- ஆந்திராவில் லோன் ஆப் கும்பல் மிரட்டலால் தற்கொலை சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- இதுவரை லோன் ஆப் ஏஜெண்டுகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திராவில் லோன் ஆப் மூலம் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் கும்பல் மிரட்டலால் தற்கொலை செய்கின்றனர்.
நேற்று விஜயவாடா மாவட்டம் பிரசாதம் பாடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டா (வயது 33) என்பவர் லோன் ஆப் கும்பல் மிரட்டியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவில் லோன் ஆப் கும்பல் மிரட்டலால் தற்கொலை சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை லோன் ஆப் ஏஜெண்டுகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 207 லோன் ஆப்கள் கண்டறியப்பட்டுள்ளன அவற்றில் 173 ஆப்கள் நீக்கப்பட்டுள்ளது. லோன் ஆப்பில் கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்ய வேண்டாம் தைரியமாக வந்து புகார் அளியுங்கள் என போலீசார் அறிவித்துள்ளனர்.
- ஆந்திர மாநிலம் இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் பாலகிருஷ்ணா.
- பாலகிருஷ்ணாவுக்கு அரசியல் பழக்கப்படாமல் இல்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் மீது தொகுதியை சரியாக கவனிக்கவில்லை அவர் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை எனவே காணாமல் போன அவரை கண்டுபிடித்து தருமாறு பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்துபுரம் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சட்டமன்றத்திற்கு 2 முறை நடிகர் பாலகிருஷ்ணா தேர்வாகி உள்ளார்.
இந்தநிலையில் தொகுதி மக்களின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை என்று பீமவரம் போலீஸ் நிலையத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நந்தமூரி பாலகிருஷ்ணனா தனது 14 வயதிலிருந்தே சினிமா துறையில் நடித்து வருகிறார். 1980களிலிருந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். தற்போதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இருப்பினும் இவர் அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து கட்சியின் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு இருக்கையில், அவர் மீது உள்ள நம்பிக்கையில் அந்த தொகுதி மக்கள் கடந்த 2 முறையும் இந்துபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக அவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஆனால் இவர் தொகுதி பக்கம் வருவதே இல்லையென்று அடிக்கடி சொல்லப்பட்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 2 முறை எம்.எல்.ஏ-வாக உள்ள அவர் தொகுதியை சரியாக கவனிப்பதில்லை. தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் சினிமா பணிகளில் மும்முரமாக இருப்பதால்தான் தொகுதி பக்கம் வரமுடியவில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வாகியும் தொகுதியில் நிலவும் பிரச்னை மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணாவுக்கு அரசியல் பழக்கப்படாமல் இல்லை. அவருடைய தந்தை என்.டி.ராமா ராவ் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். எனவே பாலகிருஷ்ணா அரசியல் பின்னணியிலிருந்து தான் வந்துள்ளார்.
இப்படி இருக்கையில் இந்த புகார்கள் அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அளிக்கப்பட்டுள்ளது என்று அவரது ரசிகர் மன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் யாரோ சிலரின் தூண்டுதலின் பெயரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
எப்படியாயினும் தொகுதியில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- சுமார் 5 கி.மீ. தாண்டி வரிசை சென்று கொண்டிருக்கின்றது.
- லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து கொண்டு உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு பிடித்த மாதமான புரட்டாசி மாதத்தில் சாமி தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டும் சாமியை தரிசனம் செய்வதற்காக திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் தரிசனத்திற்கான வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. சுமார் 5 கி.மீ. தாண்டி வரிசை சென்று கொண்டிருக்கின்றது.
பக்தர்களுக்கு போதிய அளவு தங்கும் அறைகள் கிடைக்காததால் நேரடியாக தரிசன வரிசைக்கு பக்தர்கள் சென்று விடுகின்றனர். இதனால் சாமி தரிசனம் செய்ய 30 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இரவு, பகல் பாராமல் வரிசை சென்று கொண்டிருப்பதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் தலைமுடிகாணிக்கை செலுத்தும் இடங்களிலும், லட்டு கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து கொண்டு உள்ளனர்.
ஒரு சில பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து முடி காணிக்கை செலுத்தலாம் என முடிவு செய்து இலவச தரிசனத்திற்கு சென்றால் அங்கு 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருவதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி புறப்படுவதற்கு முன்பாக சரியாக திட்டமிட்டுக் கொண்டு தரிசனத்திற்கு வருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரம்மோற்சவ விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்தாலும் ரூ.300 கட்டண தரிசனம் வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் அறக்கட்டளை உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதனால் உண்டியலில் குறைந்த அளவு வருவாய் கிடைத்தது.
தற்போது பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.
ரூ.5.65 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
திருப்பதியில் நேற்று 72,216 பேர் தரிசனம் செய்தனர். 32,388 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் மலைப்பாதையில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு 60 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- திருமலை முழுவதும் 1,679 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது .
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் மலைப்பாதை வழியாக வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
அலிப்பிரியில் இருந்து திருமலைக்குச் செல்லும் வாகனங்களின் நேரம் குறிக்கப்பட்டு 45 நிமிட நேரத்தில் மட்டுமே வாகனங்கள் திருமலைக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மலைப்பாதையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதால் நேரம் குறிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. வாகனங்கள் சரியாக 45 நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் மலைப்பாதையில் அடிக்கடி சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து விடுகின்றன. இதனால் வாகனங்கள் மற்றும் வனவிலங்குகளை கண்காணிக்க மலைப்பாதையில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதன்படி அலிப்பிரியிலிருந்து திருமலைக்கு வரும் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5 கேமராக்கள் வீதம் 90 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் மலைப்பாதையில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு 60 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மலை வளைவுகள் மற்றும் அதிக தூரம் கவரக்கூடிய வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு மலைப்பாதைகளில் வாகன விபத்து ஏற்பட்டாலோ அல்லது வனவிலங்குகள் புகுந்தாலோ உடனடியாக போலீசார் மற்றும் ஆக்டோபஸ் அதிரடிப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்து மீட்பு பணியில் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே திருமலை முழுவதும் 1,679 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் நேற்று 79,370 பேர் தரிசனம் செய்தனர். 39,199 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.25 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
- அனைத்து வகையான தரிசனமும் ரத்து.
- சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
- அன்னபிரசாதம் வழங்கப்படாது.
திருமலை
வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் பிற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேபோல் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை. அதன்படி திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனில், வைகுந்தம் கியூ வளாகத்தில் அன்னபிரசாதம் வழங்கப்படாது.
எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருமலைக்கு திட்டமிட்டு வரவேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பாம்பு கடித்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
- இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி :
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள கே.வி.பி.புரம் மண்டலம் திகுவபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சய்யா. விவசாயி. இவரது மகன் பசவையா (வயது 7). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் தங்கள் நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று செஞ்சய்யா மற்றும் குடும்பத்தினர் நிலத்தில் விவசாய வேலைசெய்து கொண்டிருந்தனர். சிறுவன் பசவையா வீட்டின் அருகே இருந்துள்ளான். அப்போது அவனை பாம்பு கடித்துள்ளது.
உடனடியாக அவனை சிகிச்சைக்காக, தந்தை செஞ்சய்யா கே.வி.பி. புரம் முதன்மை சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சிறுவன் இறந்துவிட்டான்.
அதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை வீட்டுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 108 ஆம்புலன்சை அணுகியபோது அவர்கள் சிறுவனின் உடலை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்டனர். இதேபோல் ஆட்டோ உள்ளிட்ட வாகன டிரைவர்களும் மறுத்துவிட்டனர்.
இதனால் வேறு வழியின்றி மகன் பசவையாவின் உடலை, அவனது தந்தை செஞ்சய்யா தனது தோளிலேயே சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நடக்கிறது.
- பக்தர்கள் புனிதநீராட புஷ்கரணிக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் உரிய வழிகள் அமைக்கப்படும்.
திருச்சானூா் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி கோவிலில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் நேற்று திருச்சானூரில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கோவில் வளாகம், புஷ்கரணி, அங்குள்ள உயர்நிலைப்பள்ளி வளாகம், மஞ்சள் மண்டபம், பூடி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்காகக் கோவிலில் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். விழாவின் கடைசி நாளான சக்கரஸ்நானத்தில் பங்கேற்க வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த பூடி ரோடு, ரேணிகுண்டா ரோடு, மார்க்கெட் யார்டு ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்க ஏற்பாடு செய்ய உள்ளோம்.
இதேபோல் நவஜீவன் கண் மருத்துவமனை, உயர்நிலைப்பள்ளி, கோசாலை வளாகம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுக்க 'ஜெர்மன் ஷெட்' அமைக்கப்பட உள்ளது. பக்தர்கள் புனிதநீராட புஷ்கரணிக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் உரிய வழிகள் அமைக்கப்படும். தமிழக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வர வாய்ப்பு உள்ளதால் தமிழில் வழிகாட்டி பெயர் பலகைகள் எழுதி வைக்கப்படும்.
திருமலையில் இருந்து திருச்சானூருக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஊர்வலமாகக் கொண்டு வரும் பாதையை முன்கூட்டியே பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்தப் பாதையில் போக்குவரத்து பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஊர்வலத்தின்போது யானைகள் மிரண்டு ஓடாமல் இருக்க, சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கோசாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வின்போது தேவஸ்தான என்ஜினீயர் சத்தியநாராயணா, கோவில் துணை அதிகாரி லோகநாதம், என்ஜினீயர் மனோகரம், போக்குவரத்துப் பிரிவு மேலாளர் சேஷாரெட்டி கூடுதல் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சுனில், உதவி பறக்கும் படை அதிகாரி சைலேந்திரா மற்றும் பலா் உடனிருந்தனர்.






