என் மலர்
ஆந்திர பிரதேசம்
- உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
- யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடத்தப்பட்டது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி அதிகாலை மூலவரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, கொலுவு, பஞ்சாங்க சிரவணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன் பிறகு பவித்ர பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் தொடங்கியது.
உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரரை கல்யாண மண்டபத்துக்குக் கொண்டு வந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 6.30 வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடத்தப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.
- பஸ்சில் இருந்த ஒருவரின் பையை சோதனை செய்தபோது அதில் 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதனை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி:
வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு தங்கம் கடத்தி வரப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக சுங்கத்துறை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 100 பேர் 20 குழுக்களாக ஆந்திராவில் உள்ள ஏலூர், சூலூர், காக்கிநாடா, விசாகப்பட்டினம், சிலகல்லூர், நாயுடுபேட்டை உள்ளிட்ட சோதனை சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார், பஸ், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் மடக்கி தீவிர சோதனை செய்தனர்.
சூலூர்பேட்டை சுங்கச்சாவடியில் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.
பஸ்சில் இருந்த ஒருவரின் பையை சோதனை செய்தபோது அதில் 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதனை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மற்றொரு பஸ்சை சோதனை செய்தபோது அதில் வந்த 3 பேரிடம் இருந்து 8 கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கமும், ரூ.4.24 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்த தங்கம் மற்றும் பணத்திற்கு உண்டான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து எங்கிருந்து தங்கம் கடத்திவரப்பட்டது யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வெளிநாடுகளில் இருந்து சுங்க வரி கட்டாமல் கப்பல்கள் மூலம் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது.
சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கை நடைபெறும் என்றனர்.
- நவம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடுகிறது.
- டிசம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணியளவில் முன்பதிவு செய்யலாம்.
திருமலை
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைன் ஒதுக்கீட்டின்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடுகிறது.
டிசம்பர் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணியளவில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் இருப்புக்கு ஏற்ப முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
டிசம்பர் மாதத்துக்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மின்னணு டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கிடைக்கும். முன்பதிவு (திங்கட்கிழமை) காலை 10 மணி வரை நடைபெறும்.
பக்தர்கள் இந்தத் தகவலை கவனத்தில் கொண்டு, அதன்படி தரிசன டோக்கன்கள் மற்றும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- தீபாவளி ஆஸ்தானத்தால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
- தங்க வாசல் எதிரில் காண்ட மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி 24-ந்தேதி காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசல் எதிரில் காண்ட மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாகக் காண்ட மண்டபத்தில் அமைக்கப்படும் சர்வபூபால வாகனத்தில் கருடாழ்வாரை நோக்கி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கொண்டு வந்து வைக்கிறார்கள். இவர்களுடன் சேனாதிபதியான விஸ்வக்சேனரையும் கொண்டு வந்து மலையப்பசாமியின் இடப்பக்கத்தில் மற்றொரு பீடத்தில் தெற்கு நோக்கி வைக்கிறார்கள். அதன்பிறகு மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சிறப்புப்பூஜைகள், ஆரத்தி, பிரசாத நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இத்துடன் தீபாவளி ஆஸ்தானம் நிறைவு பெறுகிறது.
அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சஹஸ்ர தீபாலங்கார சேவையில் பங்கேற்று கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தீபாவளி ஆஸ்தானத்தால் கோவிலில் 24-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.
- ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.
திருப்பதி:
ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ஆந்திராவில் நடைபயணம் செய்து வருகிறார்.
கர்னூல் மாவட்டம் அதோனிக்கு நேற்று வந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் அங்குள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பல்வேறு கிராமங்கள் வழியாக ராகுல் காந்தி நடந்து சென்றார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்றனர்.
அப்போது ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டியே இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். போலவரம் அணை பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. அமராவதி ஒன்றே ஆந்திராவின் தலைநகராகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று 3-வது நாளாக ஆந்திராவில் ராகுல்காந்தி நடைபயணம் சென்றார். அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பலர் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.
- ஆந்திர மக்கள் பவன் கல்யாணை நம்ப தயாராக இல்லை.
- எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் தான் ஆந்திர மக்கள் வாக்களித்து 155 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளோம்.
திருப்பதி:
அமராவதியை ஆந்திராவில் தலைநகரமாக அறிவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் ஆளுங்கட்சிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
அமைச்சர் ரோஜா கார் மீது ஜனசேனா கட்சியினர் கல் வீசியது சம்பந்தமாக நடிகர் பவன் கல்யாணுக்கும், அமைச்சர் ரோஜாவுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகர் பவர் கல்யாண் பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாக கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என ஆவேசமாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரோஜா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் நிறுத்த கூட ஆட்கள் இல்லை. இதனால் அவர் சந்திரபாபு நாயுடு உடன் சேர்ந்து கொண்டு ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை சந்திரபாபு நாயுடு திருப்பி அனுப்பினார்.
அப்போது வாய் திறந்து பேச முடியாத பவன் கல்யாண் தன்னை பொதுக்கூட்டத்தில் பேச முடியாதவாறு திருப்பி அனுப்பியதாக கூறுகிறார்.
அப்போது கஷ்டப்படாத நீங்கள் இப்போது ஏன் கஷ்டப்படுகிறீர்கள்.
பவன் கல்யாண் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஆந்திராவில் உள்ள ஆண்கள் 3 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சட்டம் கொண்டு வருவார்.
ஆந்திர மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை. எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் தான் ஆந்திர மக்கள் வாக்களித்து 155 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது.
- 23-ந்தேதி இரவு பவித்ர பூர்ணாஹூதியோடு வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது. கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அனைத்துப் பூஜைகளும், திருவிழாக்களிலும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
அதையொட்டி பவித்ரோற்சவ நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டி வெளியீட்டு விழா திருமலையில் உள்ள தேவஸ்தான இணை அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. அதில் இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டியை வெளியிட்டார்.
20-ந்தேதி மாலை பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம். 21-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 22-ந்தேதி மூலவர், உற்சவர், விமான பிரகாரம், கொடிகம்பம், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய சன்னதிகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. 23-ந்தேதி இரவு பவித்ர பூர்ணாஹூதியோடு வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய அரசு ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலத்தை அறிவித்தது.
- ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என தெலுங்கானா பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து மத்திய அரசு ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலத்தை அறிவித்தது. அப்போது ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திரா மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அறிவித்தார்.
அமராவதியில் தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அங்குள்ள 27 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு கொடுத்தனர்.
அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓஎஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு தெலுங்கு தேசம், பா. ஜ.க, ஜனசேனா, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 37 நாட்களாக ஆந்திர மாநிலம் முழுவதும் பாதயாத்திரை பேரணியாக சென்று பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 37-வது நாளாக ராஜமந்திரி, ஹர்ஷ வள்ளி பகுதியில் உள்ள சூரிய நாராயணா கோவிலுக்கு சென்ற விவசாயிகள் அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என கூறி பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து மல்லையா பேட்டை, பஸ் நிலையம், பகுதியில் பேரணியாக சென்றனர். அவர்களுக்கு ஜே வி சவுக்கு பகுதியில் தெலுங்கு தேசம், பா.ஜ.க, காங்கிரஸ், ஜனசேனா கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் மார்தாணி பரத், பில்லி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
அப்போது விவசாயிகள் நாங்கள் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கொடுத்து உள்ளோம் நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை கூட கொடுக்காமல் 3 தலைநகரம் அமைக்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது என்றனர். அப்போது ராஜ மகேந்திரவரம் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ ஆதி ரெட்டி பவானி மற்றும் அவரது கணவர் ஆதி ரெட்டி வாசு ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் செருப்பு, கற்களை விவசாயிகள் மீது வீசி சரமாரியாக தாக்கினார்.
இதில் பல விவசாயிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 2 தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மது அருந்திக்கொண்டு இருந்த ஆம்பூரை சேர்ந்த குமார் என்பவர் விக்னேஷிடம் சிகரெட் கேட்டுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தஞ்சாவூரை சேர்ந்தவர் மாரி செல்வம். இவரது மனைவி சரஸ்வதி. மாரி செல்வத்தின் நண்பர் விக்னேஷ் (வயது 29). இவர்கள் 3 பேரும் திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் உள்ள அலிபிரி பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது மாரி செல்வம் தனது மனைவியை பஸ் நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு தனது நண்பர் விக்னேஷீடன் அருகிலுள்ள மதுபான பாருக்கு மது அருந்த சென்றனர்.
இருவரும் மது அருந்திக்கொண்டு இருந்தபோது மாரி செல்வம் சிகரெட் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது இவர்களுக்கு அருகில் மது அருந்திக்கொண்டு இருந்த ஆம்பூரை சேர்ந்த குமார் என்பவர் விக்னேஷிடம் சிகரெட் கேட்டுள்ளார். விக்னேஷ் தன்னிடம் சிகரெட் இல்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விக்னேஷ், குமாரை சரமாரியாக தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் அருகில் இருந்த கல்லை எடுத்து விக்னேஷ் தலையில் போட்டார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அருகில் இருந்தவர்கள் குமாரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அலிபிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயா ரக அரிசியும், 550 டன் காய்ந்த மிளகாயும் தேவைப்படுவதாக கேரள பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
- ஜெயா ரக அரிசி வழங்குவது தொடர்பாக ஆந்திர அரசுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என கேரள அமைச்சர் அனில் கூறியுள்ளார்.
திருப்பதி:
ஆந்திராவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் உயர் ரக அரிசியை கேரளா வாங்குகிறது. அத்துடன் பருப்பு, உளுத்தம் பருப்பு, தினை, சிவப்பு மிளகாய் போன்றவற்றையும் வாங்குகிறது.
மாதத்திற்கு 550 டன் மிளகாய் தேவைப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. ஜி.ஆர்.அனில் தலைமையிலான கேரளாவைச் சேர்ந்த தூதுக்குழு, கேரள நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஜெயா ரக அரிசி மற்றும் சிவப்பு மிளகாய் வழங்குவதற்காக ஆந்திர சிவில் சப்ளைஸ் துறை மற்றும் மார்க்ஃபெட் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
மாதந்தோறும் 4,500 டன் ஜெயா ரக அரிசியும், 550 டன் காய்ந்த மிளகாயும் தேவைப்படுவதாக கேரள பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் டிஸ்பென்சரி யூனிட் (எம்.டி.யு) மூலம் வீட்டுக்கு வீடு ரேசன் திட்டத்தை செயல்படுத்தியதற்கு கேரள பிரதிநிதிகள் அந்த அரசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் ஜெயா ரக அரிசி விலை குறித்து அக்டோபர் 27-ந்தேதி விவாதித்து முடிவெடுப்போம்.
எல்லாம் சரியாக நடந்தால் ஜெயா ரக அரிசி வழங்குவது தொடர்பாக ஆந்திர அரசுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என கேரள அமைச்சர் அனில் கூறியுள்ளார்.
- செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.
- 21-ந்தேதி வரை ஆந்திராவில் யாத்திரையை நடத்துகிறார்.
கர்னூல் :
நாட்டின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னைப் புதுப்பித்துக்கொள்வதில் முனைப்பாக உள்ளது. அந்த வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 'பாரத் ஜோடோ யாத்திரை' (இந்திய ஒற்றுமை பாதயாத்திரை) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதியன்று, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் யாத்திரையை முடித்து விட்டு கர்நாடக மாநிலத்தில் அவர் யாத்திரை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில், அவர் அங்கு பல்லாரி மாவட்டம், சங்கனகல்லு கிராமத்தில் வாக்கு அளித்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று அவர் ஆந்திர மாநிலத்தில், அலுரு தொகுதியில் உள்ள ஹலாகார்வியில் பாத யாத்திரையைத் தொடங்கினார்.
21-ந் தேதிவரை அவர் ஆந்திராவில் யாத்திரையை நடத்துகிறார். இந்த யாத்திரையில் அவர் 119 கி.மீ. தொலைவை கடக்கிறார்.
நேற்று அவர் ஷேத்ரகுடியில் அனுமன் கோவிலுக்கு சென்று அங்கிருந்த யாத்திரையைத் தொடர்ந்தார்.
ஆந்திர மாநிலத்தில் யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜாநாத், ரகுவீர ரெட்டி, தெலுங்கானாவின் நால்கொண்டா எம்.பி. உத்தம்குமார் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஆந்திராவில் 4 நாள் பாத யாத்திரைக்கு பின்னர் மீண்டும் கர்நாடகத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையை நடத்த உள்ளார்.
- நந்தி சிலை மற்றும் சிவலிங்கம் சேதப்படுத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் நாகுல்ல புறப்பாடு மண்டலம் கணபர்தி பகுதியில் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ஏலேஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதால் கோவிலுக்குள் தங்கப் புதையல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கருதி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு காரில் வந்த மர்ம கும்பல் கருவறைக்கு முன்பாக உள்ள பிரம்மாண்ட நந்தி சிலைக்கு அடியில் தங்க புதையல் இருப்பதாக எண்ணி கடப்பாறை மற்றும் இரும்பு ராடுகளைக் கொண்டு சிலையை கீழே தள்ளினர்.
பின்னர் சிலைக்கு அடியில் பெரிய அளவில் ஆழமாக பள்ளம் தோண்டினர். நந்தி சிலைக்கு அடியில் புதையல் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து கருவறைக்கு சென்ற கொள்ளை கும்பல் அங்கிருந்த மூலவர் சிவலிங்கத்தை பீடத்தில் இருந்து எடுத்துவிட்டு பள்ளம் தோண்டினர். அங்கும் புதையல் எதுவும் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் நந்தி மற்றும் சாமி சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு மீண்டும் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
காலை வழக்கம் போல் சிவாச்சாரியார்கள் கோவிலை திறக்க வந்தனர். அப்போது நந்தி சிலை மற்றும் சிவலிங்கம் சேதப்படுத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம கும்பல் காரில் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






