என் மலர்
இந்தியா

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்திய 13 கிலோ தங்கம், ரூ.4.24 கோடி பறிமுதல்
- விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.
- பஸ்சில் இருந்த ஒருவரின் பையை சோதனை செய்தபோது அதில் 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதனை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி:
வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு தங்கம் கடத்தி வரப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக சுங்கத்துறை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 100 பேர் 20 குழுக்களாக ஆந்திராவில் உள்ள ஏலூர், சூலூர், காக்கிநாடா, விசாகப்பட்டினம், சிலகல்லூர், நாயுடுபேட்டை உள்ளிட்ட சோதனை சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார், பஸ், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் மடக்கி தீவிர சோதனை செய்தனர்.
சூலூர்பேட்டை சுங்கச்சாவடியில் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.
பஸ்சில் இருந்த ஒருவரின் பையை சோதனை செய்தபோது அதில் 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதனை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மற்றொரு பஸ்சை சோதனை செய்தபோது அதில் வந்த 3 பேரிடம் இருந்து 8 கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கமும், ரூ.4.24 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்த தங்கம் மற்றும் பணத்திற்கு உண்டான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து எங்கிருந்து தங்கம் கடத்திவரப்பட்டது யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வெளிநாடுகளில் இருந்து சுங்க வரி கட்டாமல் கப்பல்கள் மூலம் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது.
சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கை நடைபெறும் என்றனர்.






