என் மலர்tooltip icon

    இந்தியா

    அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க கோரி சென்ற விவசாயிகள் பேரணியில் கல்வீசி தாக்குதல்
    X

    விவசாயிகள் பேரணியில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட காட்சி.


    அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க கோரி சென்ற விவசாயிகள் பேரணியில் கல்வீசி தாக்குதல்

    • மத்திய அரசு ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலத்தை அறிவித்தது.
    • ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என தெலுங்கானா பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான போராட்டங்களை நடத்தினர்.

    இதையடுத்து மத்திய அரசு ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலத்தை அறிவித்தது. அப்போது ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திரா மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அறிவித்தார்.

    அமராவதியில் தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அங்குள்ள 27 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு கொடுத்தனர்.

    அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓஎஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    இந்த அறிவிப்பிற்கு தெலுங்கு தேசம், பா. ஜ.க, ஜனசேனா, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 37 நாட்களாக ஆந்திர மாநிலம் முழுவதும் பாதயாத்திரை பேரணியாக சென்று பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று 37-வது நாளாக ராஜமந்திரி, ஹர்ஷ வள்ளி பகுதியில் உள்ள சூரிய நாராயணா கோவிலுக்கு சென்ற விவசாயிகள் அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என கூறி பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து மல்லையா பேட்டை, பஸ் நிலையம், பகுதியில் பேரணியாக சென்றனர். அவர்களுக்கு ஜே வி சவுக்கு பகுதியில் தெலுங்கு தேசம், பா.ஜ.க, காங்கிரஸ், ஜனசேனா கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

    அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் மார்தாணி பரத், பில்லி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

    அப்போது விவசாயிகள் நாங்கள் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கொடுத்து உள்ளோம் நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை கூட கொடுக்காமல் 3 தலைநகரம் அமைக்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது என்றனர். அப்போது ராஜ மகேந்திரவரம் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ ஆதி ரெட்டி பவானி மற்றும் அவரது கணவர் ஆதி ரெட்டி வாசு ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் செருப்பு, கற்களை விவசாயிகள் மீது வீசி சரமாரியாக தாக்கினார்.

    இதில் பல விவசாயிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 2 தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×