என் மலர்
ஆந்திர பிரதேசம்
- சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
- பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்திவிழா கடந்த 2 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
இதனால் ஆந்திரா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
கீழ் திருப்பதியில் ஓட்டல்கள், கடைகள், டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.
இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்த முதியவர்கள் குழந்தைகள் உள்படபக்தர்கள் உணவு, டீ, காபி, குடிநீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர்.
பஸ் போக்குவரத்து இல்லாததால் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பக்தர்கள் தவித்தனர். ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது.
இதனால் திருப்பதி ரெயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்து உள்ளனர். திருப்பதி ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
- 11-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் எதுவும் ஏற்கப்பட மாட்டாது.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
இதனையொட்டி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தம் செய்யும் நிகழ்ச்சி 12-ந் தேதி நடக்கிறது. எனவே 12-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இதன் காரணமாக 11-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் எதுவும் ஏற்கப்பட மாட்டாது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கர்னூல் நகரத்தில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் சத்திய நாராயணா என்ற போலீஸ்காரர் நேற்று பணியில் இருந்தார்.
- தலையில் குண்டு பாய்ந்து சத்தியநாராயணா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், கர்னூல் நகரத்தில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் சத்திய நாராயணா என்ற போலீஸ்காரர் நேற்று பணியில் இருந்தார்.
குளியல் அறைக்கு சென்ற சத்தியநாராயணா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தனக்குத்தானே திடீரென நெற்றி பொட்டில் சுட்டுக் கொண்டார்.
இதில் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். துப்பாக்கி சத்தம் கேட்ட அலுவலக ஊழியர்கள் குளியலறைக்கு சென்று பார்த்தபோது சத்தியநாராயணா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்திய நாராயணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்திய நாராயணா பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- என்ன வழக்கில் கைது செய்தீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை.
- சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வேன். தொண்டர்கள் பதட்டம் அடைய வேண்டாம்.
திருப்பதி:
ஆந்திராவில் கைதான முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அரசியல் பழிவாங்கும் நோக்கில் அவர்கள் வேண்டுமென்றே என்னைக் கைது செய்து உள்ளனர்.
என்ன வழக்கில் கைது செய்தீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை. என் மீது முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யாமல் கைது செய்து உள்ளனர். நள்ளிரவில் என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன. நான் எங்காவது ஓடி விடுவேனா.
முன்னாள் முதலமைச்சருக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா?. என்னை கைது செய்வதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர்.
சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வேன். தொண்டர்கள் பதட்டம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீசார் கைது செய்தனர்
- திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் தெலுங்குதேசம் கட்சியினர் போராட்டம்
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டன.
மாநிலம் முழுவதும் உள்ள அவரது கட்சி முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் கோதாவரி மாவட்டம் பொடலடாவில் இருந்து தனது தந்தையை சந்திக்க காரில் புறப்பட்டார்.
அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திராவில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி லட்சுமி புரத்தில் சாலையில் டயர் மரக்கட்டைகளை போட்டு தீ வைத்துக் கொளுத்தினர். மேலும் மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பம் நகரில் ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அமராவதி, விஜயவாடா உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தீ வைப்பு, கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இதனால் பெரும் பதட்டம் நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மாநிலம் முழுவதும் அதிரடிபடை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தெலுங்கு தேசம் கட்சியினரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
தொடர் போராட்டத்தால் ஆந்திராவில் கடும் பதட்டம் நிலவியது.
- தாக்கப்படுவேன் அல்லது கைது செய்யப்படுவேன் என முன்னதாக தெரிவித்திருந்தார்
- திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல்
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு சட்ட விரோதமாக தனியார் நிறுவனம் மூலம் ரூ.371 கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஆந்திர மாநில சி.ஐ.டி. மற்றும் அமலாக்கத்துறை கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வருமானவரி துறையினர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். சந்திரபாபு நாயுடு மீது குற்றச்சதி, நேர்மையற்ற முறையில் சொத்து வழங்குதல், ஏமாற்றுதல், ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு நந்தியாலாவில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் கேரவனின் ஓய்வெடுத்தார்.
அதிகாலை 3 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சி.ஐ.டி. டி.எஸ்.பி. தனஞ்செயலு தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அவரை கைது செய்ய வந்துள்ளதாக பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு பாதுகாப்பு படை போலீசாரிடம் தெரிவித்தனர்.
சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் தற்போது சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய முடியாது என தடுத்து நிறுத்தினர் . அப்போது அங்கு வந்த சந்திரபாபு நாயுடுவின் வக்கீல்கள் அவரை கைது செய்வதற்கான முதல் தகவல் அறிக்கையை சி.ஐ.டி. போலீசாரிடம் கேட்டனர்.
அதற்கு சிஐடி போலீசார் கைது செய்த பிறகு முதல் தகவல் அறிக்கை மற்றும் அவரை கைது செய்வதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படும் என்றனர்.
இதனால் சி.ஐ.டி. போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கேரவனில் இருந்த வெளியே வந்த சந்திரபாபு நாயுடு தன் மீது போடப்பட்டுள்ள வழக்கு விபரம் எப்.ஐ.ஆரில் பெயரில்லாமல் எப்படி கைது செய்ய வந்தீர்கள் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இதுபற்றி தகவல் அறிந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் காத்திருந்த சிஐடி போலீசார் அதிகாலை 6 மணிக்கு சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். அவர் விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ பரிசோதனை சோதனை செய்யப்பட்டது.
#WATCH | Andhra Pradesh: Criminal Investigation Department (CID) serves arrest warrant to TDP chief and former Andhra Pradesh CM N Chandrababu Naidu. pic.twitter.com/C2vtCJW0bi
— ANI (@ANI) September 9, 2023
- இன்று மாலை ஏழுமலையான், கிருஷ்ணர் தனித்தனி வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா 2 நாட்கள் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெகு விமரிசையாக நடந்தது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று திருப்பதி கோகர்ணம் அணையில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று மாலை ஏழுமலையான், கிருஷ்ணர் தனித்தனி வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுவதால் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.
திருப்பதியில் நேற்று 58,855 பேர் தரிசனம் செய்தனர். 29,014 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கடந்த மாதம் திருப்பதி அலிபிரி நடைபாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் இதுவரை 5 சிறுத்தைகள் சிக்கி உள்ளன. இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து மலைப்பாதையில் கூண்டு வைத்துள்ளனர்.
மேலும் நடைப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு கம்பு வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க 300 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
- இளம்பெண்ணின் உறவினர்கள் கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் படுக்க வைத்து தோளில் சுமந்து சென்றனர்
- இளம்பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பத்ராத்ரி மாவட்டம், போதனில்லி அடுத்த கோர்கடாபாடு பழங்குடி இன கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண்.
நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. மலையில் இருந்து கீழே வருவதற்கு சாலை வசதி இல்லை. இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் படுக்க வைத்து தோளில் சுமந்து சென்றனர். மலையின் குறுக்கே செல்லும் ஓடையை கடந்து மலை அடிவாரத்திற்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்திய நாராயணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி வந்தனர்.
அங்கு கர்ப்பிணி பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பத்ராசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இளம்பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- கோசங்கி தேவி இருவரிடமும் தனித்தனியாக ரூ.5 ஆயிரம் முன்பணம் பெற்றுக்கொண்டார்.
- கடந்த 4-ந் தேதி கோசங்கி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கோசங்கி தேவி. நிறைமாத கர்ப்பிணியான இவர் குடும்ப வறுமையால் தவித்தார். இதன் காரணமாக அவர் தனக்கு பிறக்க போகும் குழந்தையை விற்க முடிவு செய்தார்.
அம்பேத்கர் காலனி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கோசங்கி தேவி அங்கு பணியில் இருந்த ஆஷா ஊழியர் ஜெயாவை தொடர்பு கொண்டார். வறுமையின் காரணமாக தனக்கு பிறக்க போகும் குழந்தையை விற்க உள்ளதாக அவரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயா ஆட்டோ நகரை சேர்ந்த ஷபானா பேகம் மற்றும் அமீனா பேகம் என்பவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
கோசங்கி தேவி இருவரிடமும் தனித்தனியாக ரூ.5 ஆயிரம் முன்பணம் பெற்றுக்கொண்டார். அப்போது ஆண் குழந்தை பிறந்தால் ரூ 1.50 லட்சமும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசினார்.
கடந்த 4-ந் தேதி கோசங்கி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை அறிந்த ஜெயா ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார்.
அப்போது எனக்கு தெரியாமல் எப்படி 2 பேரிடம் தனித்தனியாக முன்பணம் வாங்கினாய் என சண்டையிட்டார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரும் வாக்குவாதம் செய்வதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்தனர்.
பதிவு செய்யப்பட்ட வீடியோவை போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். கோசங்கி தேவி, ஜெயா, ஷபானா பேகம், அமினா பேகம் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிட்டத்தட்ட இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மிகப்பெரிய உச்சம் தொட்ட தக்காளி தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.
திருப்பதி:
தக்காளி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஏழைகளுக்கு எட்டாத கனிகளில் ஒன்றாக மாறியிருந்தது. ஆப்பிள், மாதுளை பழங்கள் இடையே போட்டி போடும் அளவிற்கு தக்காளி விலை கடும் உச்சத்தை தொட்டது.
தங்கத்தின் விலை போல தக்காளி விலையை தினசரி கேட்டு வாங்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ஆசியாவில் மிகப்பெரிய தக்காளி சாகுபடி பகுதியாக உள்ளது.
இங்கிருந்து தமிழகம், கர்நாடகா, மும்பை, ஒரிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி வரத்து மிகவும் குறைந்தது.
இதனால் தக்காளி விலை கிலோ 200-க்கு மேல் விற்பனையானது. தக்காளி விவசாயிகள் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறினார்கள். இதனால் தக்காளி விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆட்டம் போடும் அளவிற்கு நிலைமை இருந்தது.
தக்காளி விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு வந்த வியாபாரிகளிடம் வழிப்பறி மற்றும் கொலை சம்பவங்களும் அரங்கேறின. கடையில் புகுந்து தக்காளி திருட்டு தோட்டத்திற்குள் புகுந்து தக்காளிகளை பறித்து கொள்ளையடித்து சென்ற சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அன்னமய்யா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிகளவு உற்பத்தியாகி மார்க்கெட்டுகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. சித்தூர் பலமனேர் புங்கனூர் பகுதிகளில் இருந்தும் அதிகளவு தக்காளி வரத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 90 டன்னுக்கும் குறைவாக வரத்து இருந்த தக்காளி தற்போது தினமும் 300 டன்னுக்கு அதிகமாக வரத்தொடங்கி உள்ளது. இதனால் தற்போது கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.
ஆந்திராவின் அன்னமய்யா உள்பட பல்வேறு மாவட்டங்களில் தற்போது தக்காளி காய்களாக உள்ளன. இன்னும் 2 வாரத்தில் இந்த தக்காளிகள் பழமாக மாறிவிடும்.
கிட்டத்தட்ட இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது தக்காளி கிலோ விலை ரூ.2-க்கும் குறைவாக இருக்கும் என கணித்துள்ளனர். இது விவசாயிகளை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்:-
இந்த காரி பருவத்தில் அதிக அளவில் தக்காளிகளை பயிரிட்டுள்ளோம். இந்த மாத இறுதியில் அதிக அளவு தக்காளி அறுவடை செய்யப்படும். அப்போது தக்காளி விலை மிக குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் பயிர்களை அறுவடை செய்யாமல் விட்டுவிடுவது தவிர வேறு வழியில்லை என்றார்.
மிகப்பெரிய உச்சம் தொட்ட தக்காளி தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.
கொஞ்ச ஆட்டமாடா போட்டீங்க... இப்போ உங்க நிலைமையை பார்த்தீர்களா என்ற வசனங்களுடன் சமூக வலைதளங்களில் படங்கள் வைரலாகி வருகிறது.
- அலிபிரி நடைபாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை கடித்துக் கொன்றது
- சிறுத்தைகளை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது
திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் தனது பெற்றோருடன் நடந்து சென்ற லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்து சென்று கடித்து கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடைபாதை அருகே கூண்டுகள் வைத்தனர்.
அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் திருப்பதியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடைபாதையில் 300-க்கும் மேல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
5-வதாக ஒரு சிறுத்தை நடைபாதை பகுதியில் சுற்றி திரிந்தது. கேமரா மூலம் அதனை கண்காணித்தனர். வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் சிறுத்தை ஆட்டம் காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
நடைபாதை அருகே அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கி உள்ள சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனவிலங்குகளிடமிருந்து பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 15 ஆயிரம் கம்புகள் வரவழைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பாதைகளில் கம்புகளுடன் பக்தர்கள் மலையேறி செல்கின்றனர்.
- பாதயாத்திரை சென்ற சாலைகளில் கற்கள் மற்றும் கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
நாரா லோகேஷ் யுவகலம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் மண்டலம், தாடேரு என்ற இடத்தில் லோகேஷ் மற்றும் தொண்டர்கள் நேற்று பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.
அப்போது பாதயாத்திரை சென்ற சாலைகளில் கற்கள் மற்றும் கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பாதயாத்திரை சென்ற இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் லோகேஷை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்.
பேனர்களை அகற்றும் படி போலீசார் தெலுங்கு தேசம் தொண்டர்களிடம் தெரிவித்தனர். இதனால் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்தனர்.
மேலும் அங்குள்ள கட்டிட மாடிகளில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது கட்சி கொடியை காண்பித்தபடி பாதயாத்திரையில் கற்கள் மற்றும் கம்புகளை சரமாரியாக வீசி தாக்கினர்.
இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமராஜு, தொண்டர்கள் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர். பாதயாத்திரையில் சென்ற வாகனங்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டினர். போலீசார் அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பாதையாத்திரை சென்றதாகவும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி பாதயாத்திரையை அப்பகுதியிலேயே நிறுத்தினர்.
இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது.






