என் மலர்
அழகுக் குறிப்புகள்
- முக அழகை கெடுக்கும் வகையில் மங்கு எனும் கருப்பு நிற படைகள் இருக்கும்.
- பெண்களுக்கு தான் அதிகமாக வரும்.
உங்கள் முக அழகை கெடுக்கும் வகையில் மங்கு எனும் கருப்பு நிற படைகள் இருக்கும். இதனை போக்க வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றினால் போதும்.
சிலருக்கு ஒவ்வாமை அல்லது அலர்ஜி காரணமாக அவர்கள் பலவித தோல் நோய்களால் தாக்கப்படுகின்றனர். அதில் ஒன்றுதான் மங்கு. கன்னத்தில் கருப்பு நிறத்தில் வரக்கூடிய இதனை மெலஸ்மா என்று அழைப்பர். மங்கு வருவதே நீங்கள் முன்கூட்டியே அறிந்தால் அதனை வீட்டில் இருந்தபடியே சரி செய்து விடலாம்.
பொதுவாக இது கண்ணம் மூக்கு நிச்சயம் மற்றும் முழங்கால் பகுதியில் வரும். குறிப்பாக இது முகத்தில் கருப்பான புள்ளிகள் படர்ந்து காணப்படும். பொதுவாக இது பெண்களுக்கு தான் அதிகமாக வரும். அதுபோலவே ஹார்மோன் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மொனோபாஸ் இது போன்ற காரணத்தினால் மங்கு வரக்கூடும்.
செய்முறை:
முதலில் உங்கள் முகத்தை நன்கு தண்ணீரால் கழுவிக்கொள்ள வேண்டும். குறிப்பாக மங்கு உள்ள இடத்தை நன்கு கழுவ வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு பஞ்சை தொட்டு முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பால் கொண்டு நம் முகத்தை சுத்தம் செய்யும் போது முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கும்.
அதன்பிறகு கொழுந்தாக இருக்கும் வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து அதனை விழுந்தாக அரைத்து எடுத்து அதனை மங்கு எங்கு இருக்கிறதோ அதன் மீது தடவி நன்றாக காய்ந்த பிறகு கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் போது முகத்தில் மங்கு சிறிது சிறிதாக மறைவதை கண்கூடாக பார்க்கலாம்.
- ரேசர் கொண்டு முடியை நீக்கும்போது காயங்கள் ஏற்படாலாம்.
- உதட்டுக்கு மேல் முடி முளைப்பது முக அழகையே கெடுத்து விடும்.
உதட்டுக்கு மேல் முடி முளைப்பது பெண்களின் முக அழகையே கெடுத்து விடும். மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். எப்படியாவது இந்த முடியை நீக்க வேண்டுமென்று ரேசர் பயன்படுத்துவது, ஹேர் ரிமூவல் க்ரீம்கள் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்வார்கள். ஆனால் ரேசர் கொண்டு முடியை நீக்கும்போது காயங்கள் ஏற்படாலாம். அதோடு முடி வளர்ச்சியும் வேகமாகத் தூண்டப்படும். ஆனால் கீழ்வரும் சில இயற்கையான வழிமுறைகள் மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் உதட்டுக்கு மேலே உள்ள முடிகளை நீக்க முடியும்.
வசம்பு
அரை ஸ்பூன் வசம்பு பொடியை எடுத்து தண்ணீரில் திக்காக குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேல் முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை பயன்படுத்தும் போது உதட்டுக்கு மேலுள்ள முடிகள் உதிர ஆரம்பிக்கும்.
மஞ்சள்
ஒரு ஸ்பூன் மஞ்சளை காய்ச்சாத பால் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கி உதட்டுக்கு மேலே முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். அது நன்கு உலர்ந்ததும் தண்ணீரில் கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடிகள் நிரந்தரமாக வளராமல் தடுக்க முடியும். இதற்கு சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் இரண்டுமே பயன்படுத்தலாம். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் பாலுக்கு பதிலாக ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.
படிகாரம்
படிகாரம் என்பது ஒருவகையான உப்புக்கல். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த படிகாரம் சருமத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்கி மென்மையாக வைத்திருக்க உதவி செய்யும். ஆண்களும் ஷேவிங் செய்யும்போது இதை பயன்படுத்தலாம். ரேசர் உள்ளிட்டவற்றால் ஏற்படும் காயங்கள், தழும்புகள் ஆகியவற்றை சரிசெய்யும் தன்மை கொண்டது.
கல்போன்று கடினமாக இருக்கும் இந்த படிகாரத்தை இடித்து பொடி செய்து கொள்ளுங்கள். அரை ஸ்பூன் அளவு படிகாரத்துடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி இந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேலே முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முதல்முறையிலேயே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்துவர வேகமாக உதட்டுக்கு மேலே உள்ள முடி நிரந்தரமாக உதிர ஆரம்பிக்கும்.
சர்க்கரை
சர்க்கரை ஸ்கிரப்பை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நிரந்தரமாக உதடு மற்றும் சருமத்தில் தேவையற்ற முடி வளர்வதைத் தடுக்க முடியும். ஆனால் சர்க்கரையை லேசாக நுணுக்கி பயன்படுத்துங்கள். பெரிய பெரிய துகள்களாக இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதோடு சிறிது ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டின்மேல் முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 - 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு மெதுவாக விரல்களால் ஸ்கிரப் செய்து கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் உதட்டுக்கு மேலே உள்ள மெல்லிய முடிகள் உதிர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வரும்போது நிரந்தரமான முடிகள் நீங்கும்.
ஜெலட்டின்
ஜெலட்டின் பீல் ஆஃப் மாஸ்க் போல செயல்படும். இதை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சருமம் நெகிழ்வுத் தன்மையோடு இருக்கும். அதோடு சருமத்திலுள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து சருமம் மென்மையாக மாறும். காசு கொடுத்து விலையுயர்ந்த மாஸ்க்குகள் வாங்கிப் பயன்படுத்துவதை காட்டிலும் இது சிறந்தது.
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் ஜெலட்டின் பவுடரை எடுத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது ஆரஞ்சு பழத்தின் சாறையும் சேர்த்து கலந்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட்டாக செய்து கொள்ள வேண்டும். இதை உதட்டின் மேற்பகுதியில் முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். சருமத்தில் அது நன்கு இறுக்கிப் பிடிக்க ஆரம்பிக்கும். பீல் ஆஃப் மாஸ்க் மாதிரி மெதுவாக பிரித்து எடுக்க அந்த ஜெலட்டின் மாஸ்க்கோடு சேர்த்து சின்ன சின்ன முடிகளும் வருவதை பார்க்க முடியும். இதை அடிக்கடி பயன்படுத்தும் போது சருமத்திலுள்ள முடிகள் நிரந்தரமான நீங்கும்.
முட்டை
சருமத்திலுள்ள முடிகளை நீக்குவதற்கும் சருமத்துக்குத் தேவையான புரதத்தைக் கொடுக்கவும் முட்டையின் வெள்ளைக் கரு உதவுகிறது. இதை தொடர்ந்து மாஸ்க்காக சருமத்தில் அப்ளை செய்து வர மேல் உதட்டுக்கு மேலுள்ள முடி மற்றும் கன்னங்கள் என முகத்திலுள்ள மென்மையான முடிகள் நீங்கும்.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட்டாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதை மேல் உதட்டின்மீது உள்ள முடிகளையும் முகத்திலுள்ள வேறு மெல்லிய முடிகளும் உள்ள இடத்தில் அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்ததும் மென்மையாக விரல்களால் தேய்த்து ஸ்கிரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
- டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.
- தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
நாம் அதிகமாக வெளியில் சூரிய ஒளியில் பயணிக்கும்போது நமது முகம், கை மற்றும் கால்களில் டேன் ஏற்படுவது சகஜம். பொதுவாக வெளியில் வேலை செய்பவர்களுக்கு இது சிரமமானதாக கூட இருக்கலாம். வீட்டிலேயே இந்த டானை எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
சருமப் பராமரிப்பு என்றாலே முகத்தை ஆரோக்கியமாகவும் பளிச்செனவும் வைத்துக் கொள்வது முக்கியம். நம்முடைய முகம், கை மற்றும் கால்களின் ஒரு சில பகுதிகளில் மட்டும் சருமம் அதிக கருமையுடன் டேனாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.
நம் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தக்காளி. தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளதால் இது இயற்கையான சன் ஸ்கிரீனாக நமது சருமத்தில் செயல்படுகிறது. மேலும் வயதானது போல தோற்றத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
கடலைமாவு
தேங்காய் எண்ணெய்
கஸ்தூரி மஞ்சள்
தயிர்
தக்காளி சாறு
எலுமிச்சை சாறு
செய்முறை:
ஒரு பவுலில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து இதில் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி ஃபேஸ் பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இதை நீங்கள் குளிக்கச் செல்வதற்கு முன் இந்த கலவையை உங்கள் முகம், கழுத்து, கைகளில் தடவி குறைந்தது 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும், அதன்பிறகு மிதமான நீரில் கழுவலாம்.
இந்த பேஸ்டை தொடர்ந்து வாரத்திற்கு 2 தடவை பயன்படுத்தி வர முகம், கழுத்து, கைகளில் உள்ள கருமை நிறம் நீங்கி பளபளப்பாகும். தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
- மேக்கப் பிரஷ்சை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
- பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அதில் பெருகி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு பெரும்பாலான பெண்கள் மேக்கப் செய்துகொள்கிறார்கள். அதற்காக அவர்கள் தினமும் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களை உபயோகப்படுத்திய பிறகு முறையாக பராமரிப்பதில் தான் சருமத்தின் ஆரோக்கியமும் அடங்கி உள்ளது. குறிப்பாக அடிக்கடி பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்சை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அதில் பெருகி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேக்கப் பிரஷ்சை பராமரிக்கும் சில வழிகள்.
அடிக்கடி கழுவுதல்:
ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது அவற்றை தண்ணீரில் கழுவ வேண்டும். அதிக அளவு கிரீம் மற்றும் திரவப் பொருட்களை உபயோகிக்கும் போது ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் மேக்கப் பிரஷ்களை நன்றாக துடைத்து வைக்க வேண்டும். முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கென பிரத்தியேகமாக மேக்கப் பிரஷ்களை வைத்திருப்பது சிறந்தது. சருமத்தின் தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சில அழகுசாதனப் பொருட்கள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதுபோன்ற சமயங்களில், மற்றவர் பயன்படுத்திய மேக்கப் பிரஷ்சை மீண்டும் உங்கள் சருமத்தில் பயன்படுத்தும்போது நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.
சுத்தம் செய்யும் முறை:
மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்வதற்கென பிரத்தியேகமாக பிரஷ் கிளீனர்கள் உள்ளன. இவை பிரஷ்களில் உள்ள அழுக்குகளையும், பிசுபிசுப்புத் தன்மையையும் முழுமையாக நீக்கும். இதுதவிர, மென்மையான சோப்பு கொண்டு மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்யலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு அல்லது ஷாம்பு கொண்டு இவற்றை சுத்தம் செய்வது நல்லது. மேக்கப் பிரஷ்சின் ஒவ்வொரு இழையையும் சுத்தம் செய்யும் வகையில், பிரஷ் மேட் கடைகளில் கிடைக்கிறது. இது பிரஷ்சில் படித்துள்ள கிரீம் மற்றும் பிசுக்குகளை முழுமையாக நீக்கும்.
உலர்த்தும் முறை:
மேக்கப் பிரஷ்களை கழுவிய பிறகு அவற்றை ஒரு பருத்தி துண்டில் அல்லது டிரேவில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கி சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைத்து உலர்த்த வேண்டும். மேக்கப் பிரஷ்களை அடுக்கி வைக்கும் ஹோல்டர்களும் சுத்தமாக இருக்க வேண்டும்.
மேக்கப் பிரஷ்களை தேர்தெடுத்தல்:
கிரீம், பவுண்டேஷன், பவுடர் ஆகியவற்றை முகம் முழுவதும் பூசுவதற்கு ஏற்ற வகையில் மேக்கப் பிரஷ்சில் உள்ள இழைகள் மிதமான அடர்த்தியோடு மென்மையாக இருக்க வேண்டும். மேக்கப் பிரஷ்களின் இழைகள் இயற்கையாக கிடைக்கும் ரோமங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருப்பது நல்லது. இவை மென்மையாகவும், முகத்திற்கு பயன்படுத்த ஏற்ற வகையிலும் இருக்கும்.
- கணினி துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
- கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சி தேவை.
கணினி துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மூளை போன்று கண்ணுக்கும் அதிகப்படியான வேலையை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இன்றைய தலைமுறைகள். இதனால் உடல்ரீதியிலான குறைபாடுகளையும் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள்.
ஆரோக்கியத்தோடு அதிகம் சந்திக்கும் பிரச்சினைகள் என்றால் அது அழகு சார்ந்த பிரச்சினை தான். குறிப்பாக கண்கள் பொலிவிழந்து காணப்படும். முகத்தில் அழகாய் இருக்க கூடியவை கண்கள். ஆனால் கண்களுக்கு கீழ் கருவளையங்கள், கருமை நிறம், கண் இரைப்பைக்கு கீழ் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் வரகூடும்.
ஒருவகையில் இது ஆரோக்கியம் குறைபாடு என்பதையும் குறிப்பிட வேண்டும். உடலில் வைட்டமின் சத்துகள் குறையும் போதும், நச்சுகள் வெளியேறாத போதும் இந்த பிரச்சனைகள் வந்தாலும் கூட மறுபுறம் சருமத்தை கண்களை உரிய பாதுகாப்பில்லாமல் வைக்கும் போதும் இந்த பிரச்சனையின் தீவிரம் அதிகரித்துவிடும்
சுட்டெரிக்கும் வெயில் வாட்டவும் தொடங்கியுள்ளது. வெப்பம் மிகுந்த நமது நாட்டில் இயல்பாகவே உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும் போது இயல்பாக உண்டாகும் ஆரோக்கிய குறைபாட்டில் அழகு சார்ந்த பிரச்சினையும் உண்டாகக் கூடும். அதில் முக்கியமானது கண்கள்.
கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சி தேவை. ஓய்வும் தேவை. ஆனால் இரண்டும் கொடுக்காமல் அதிக வேலை கொடுக்கும் இந்த வெயில் காலத்தில் உரிய முறையில் கண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் கண் பார்வை பிரச்சனை, கருவளையம் பிரச்சனை போன்றவற்றை தவிர்க்கலாம் என்கிறார்கள் கண் மருத்துவ நிபுணர்கள்.
இந்த கண்களை எப்போதும் பாதுகாக்கும் பொருளாக இருக்கிறது பாதாம். ஆரோக்கியமான உணவின் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற்றிருப்பது போலவே இது அழகு சார்ந்த குறிப்பிலும் சருமத்துக்கு சத்து கொடுக்கும் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறது. பாதாம் பருப்பை முகத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் கண்கள் சத்துக்களையும் பொலிவையும் இழக்காமல் இருக்கும்.
எப்படி பயன்படுத்துவது பார்க்கலாம்
பாதமை பொடித்து வைத்துகொள்ளுங்கள். வாரம் ஒரு முறை 30 எண்ணிக்கை பாதாமை மிக்சியில் பொடித்து வைத்துகொள்ளுங்கள். தினமும் தூங்குவதற்கு முன்பு அரை டீஸ்பூன் பாதாம் பருப்புடன் மூன்று டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். பிறகு கண்களின் கீழ் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். மீதி இருப்பதை முகத்திலும் தடவிக் கொள்ளுங்கள். சற்று காய்ந்ததும் முகத்தை கழுவாமல் அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் போதுமானது.
தினமும் இரவில் இதை பயன்படுத்தி வரும் போது கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அவை படிப்படியாக குணமடையக்கூடும். கண்களில் கருவளையத்தால் உண்டான கருமையும் சிறிது சிறிதாக மறைய கூடும். கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கம், கண்களை சுற்றியுள்ள கருமை, முகத்தில் படிந்திருக்கும் கரு மையான நிறம் அனைத்துமே நீங்கும். குறிப்பாக கண்கள் புத்துணர்ச்சியோடு இருக்கும். இதனால் கண்கள் மேக்- அப் போடாமலேயே அழகாக இருக்கும். லேசான ஒப்பனையிலும் கண்கள் பளிச்சென்று இருக்கும். சோர்வு இல்லாத கண்களை எப்போதும் பெறுவீர்கள்.
முக பராமரிப்பு என்னும் போது கண்களுக்கு பராமரிப்பு கொடுப்பதும் முக்கியம். பாதாம் அதிக விலை என்பவர்கள் முகத்துக்கு இல்லையென்றாலும் கண்களுக்கு மட்டும் பயன்படுத்துவதற்காக பாதாமை பயன்படுத்தலாம். பாதாம் பருப்பை பொடித்து பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்பவர்கள் பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம். நிச்சயம் கண் ஆரோக்கிய மாகவே அழகு கூடும்.
பராமரிப்பு கடந்து அன்றாட வாழ்க்கையிலும் சில மாற்றங்களை கடைபிடியுங்கள். கோடைக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் உடலுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்வது அவசியம். பழச்சாறுகள், கீரைகள், காய்கறிகள் இவை எல்லாவற்றையும் தாண்டி தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியம். தூங்குவதற்கு முன்பு ஒரு மணி நேரம் முன்புவரை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
கம்ப்யூட்டர், டீவி முன்பு அதிக நேரம் செலவழிக்ககூடாது. செல்போன் அதிக நேரம் பார்க்க கூடாது. போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அதற்கேற்ப சிறுநீரையும் வெளியேற்ற வேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தால் கண்ணை கண் போல் ஆயுள் வரையும் பாதுகாக்கலாம். கண்கள் காந்த கண்களாக எப்போதும் அழகாய் மிளிர தேவதையாய் வலம் வரவும் செய்யலாம்.
- உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.
- லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
உதடுகளுக்கு அழகு சேர்க்கும் 'லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ரசாயனம் கலக்காமல், முழுவதும் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இல்லத்தரசிகள் இத்தகைய லிப்ஸ்டிக் தயாரிப்பை பகுதிநேர தொழிலாக மேற்கொள்ள முடியும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்...
சாக்லெட் லிப்ஸ்டிக் தயாரிக்க தேவையான பொருட்கள்:
கோகோ பவுடர்- ஒரு ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 1/2 ஸ்பூன்
தேன்மெழுகு (துருவியது)- 1/4 ஸ்பூன்
லாவண்டர் எண்ணெய்- 2 துளிகள்
செய்முறை:
ஒரு சிறிய கிண்ணத்தில் கோகோ பவுடரை போட்டு, அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்மெழுகு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். கோகோ பவுடர் இருக்கும் கிண்ணத்தை அதன் உள்ளே வைக்க வேண்டும். தண்ணீரின் வெப்பத்தால் கிண்ணத்தில் இருக்கும் கலவை உருக ஆரம்பிக்கும். முழுவதுமாக உருகியதும் அதில் லாவண்டர் எண்ணெய்யை ஊற்றி கலக்க வேண்டும்.
இந்த கலவையை ஒரு லிப்ஸ்டிக் குப்பியில் மாற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். அரை மணிநேரம் கழித்து வெளியே எடுத்தால் அந்த கலவை லிப்ஸ்டிக் வடிவில் கடினமாகி இருக்கும். அதன் முனையை லேசாக கைவிரலால் ஷேப் செய்து விடுங்கள். இப்போது சாக்லெட் லிப்ஸ்டிக் தயார். இதனை ஆறு மாதம் வரை பயன்படுத்த முடியும்.
சந்தைப்படுத்தும் முறை:
சாக்லெட் லிப்ஸ்டிக்' தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளிலேயே கிடைக்கும். முதலில் சிறிய அளவில் தயாரித்து தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி அதன் நிறை குறைகளை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு உங்களுடைய தோழிகள் வட்டத்தில் கொடுத்து அவர்களுடைய பின்னூட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
அதன்பிறகு தன்னம்பிக்கையுடன் சந்தைப்படுத்துங்கள். உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும் அழகு நிலையங்கள், பொட்டீக், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் இலவச சாம்பிள் அளித்து உங்கள் பிராண்ட் பெயரை பிரபலப்படுத்தலாம். சமூகவலை தளங்களிலும் காட்சிப்படுத்தலாம்.
- அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.
- இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை.
அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை. உடலை நன்றாக பராமரித்தாலே அழகாக தோற்றமளிக்கலாம். இயற்கை தோல் பராமரிப்பு என்பது மிகவும் எளிதானது. இயற்கையான விதிமுறைகளை பின்பற்றுவதால் உங்களது தோலுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது.
இயற்கை பராமரிப்பை மேற்கொண்டால் பாதிப்பும் இருக்காது. பலனும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். புத்தம் புதிய பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க்புட் அயிட்டங்களை தொடவே கூடாது.
கூடுமானவரை செயற்கை மேக்-அப் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி அவசியம் செய்ய வேண்டும் என்றால், நீண்ட நேரம் நீடித்து இருக்கக் கூடிய மேக்-அப்பை செய்யக் கூடாது. எப்போதும் ரிலாக்சாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். சிறிது நேரமாவது தியானம் அல்லது யோகா செய்ய வேண்டும்.
செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உங்களின் தோல் மருத்துவரை 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கன்சல்ட் செய்ய வேண்டும்.
இந்த எளிய நடைமுறைகளை பின்பற்றினாலே போதும், உங்களது முகம் மட்டும் அல்ல உடலின் அனைத்து தோல் பகுதிகளும் மிருதுவாகவும் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும். தோலை பொலிவுபடுத்துவதற்காக செயற்கை அழகுசாதன பொருட்களை தேடிப்போக வேண்டியதில்லை. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் நீங்கள் அவஸ்தைப்படவும் தேவையில்லை.
அதுமட்டுமல்ல நீண்டகாலத்திற்கு இந்த பலன் நீடித்து இருக்கும். வயதான காலத்திலும் கூட சில ஆண்களும், பெண்களும் பார்ப்பதற்கு பளபளவென்று காணப்படுவார்கள். அவர்களின் தோலில் சுருக்கமோ, சொர சொரப்புத்தன்மையோ இருக்காது. அதற்கு காரணம், இது போன்ற இயற்கை பராமரிப்புதான். எனவே நீங்களும் இந்த பராமரிப்பை கடைபிடித்தால் வயதான காலத்திலும் உங்களது தோல் பார்ப்பதற்கு இளமையானதாகத் தோன்றும்.
- பாலில் ரெட்டினோல் உள்ளது.
- பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும்.
பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுசேர்க்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் பால் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை ஆய்வுகளும் உறுதிபடுத்தி உள்ளன.
* கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை சருமத்திற்கு அழகூட்டும் இரண்டு முக்கியமான ஊட்டச்சத்துக்கள். இவை இரண்டுமே பாலில் உள்ளன. இவை சருமத்திற்கு மட்டும் நன்மை செய்யாமல் மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன.
* பாலில் ரெட்டினோல் உள்ளது. இது வைட்டமின் ஏ-ன் வடிவமாகும். விரைவில் வயதாகும் அறிகுறிகள் வெளிப்படுவதை தடுக்கும் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அத்துடன் முகப்பருவை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கக்கூடியது.
* பாலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்கள் சேதம் அடைவதை தடுக்கின்றன. சருமத்தை அழகாக்கவும், இயற்கையான பிரகாசத்தை மீட்டெடுக்கவும் துணைபுரிகின்றன. சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கவும் உதவுகின்றன.
* சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பண்புகளைக் கொண்டிருந்தாலும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பாலுக்கும், முகப்பருவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பால் அதிகம் பருகும்போது பாதிப்பு அதிகரிக்கக்கூடும். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் அதற்கு காரணமாகும்.
* பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உட்கொள்வது முகப்பருவை ஏற்படுத்தும் ஆண்ட்ரோஜன்கள் போன்ற ஹார்மோன்களின் செயல்பாடுகளை தூண்டிவிடும்.
* தயிர் போன்ற புளிக்கவைக்கப்படும் பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், தோல் அழற்சி போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அதில் இருக்கும் புரோபயாட்டிக்குகள் உதவும். ஆனால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.
* முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் பால் அருந்துவதை கூடுமானவரை தவிர்க்கவும். சரும நிபுணரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது சிறந்தது.
- காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.
- அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.
மருதாணி பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு குளித்துவிடலாம். மருதாணி தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும்.
காபி:
காபியை நன்றாக காய்ச்சி ஆறவிடவும். அதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தலைமுடியை அலசிவிடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.
அவுரி:
அவுரி பவுடரை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவி விடலாம். அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.
ரூபார்ப்:
ஒரு வகை கீரையான இதன் தண்டு பகுதியை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்துவிடலாம். இது தலைமுடிக்கு சிவப்பு-பழுப்பு நிறத்தை கொடுக்கும்.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட்டை வேகவைத்து ஜூஸ் தயாரித்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவவும். பீட்ரூட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஊதா நிறத்தை கொடுக்கும்.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றை பிழிந்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். எலுமிச்சை சாறு தலைமுடிக்கு வெளிர் பொன்னிற நிறத்தை அளிக்கும்.
சீமை சாமந்தி:
இந்த சாமந்தி பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆற விடவும். பின்பு தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற விடவும். தலைமுடி உலர தொடங்கியதும் தண்ணீரில் அலசவும். இது தலைமுடிக்கு வெளிர் பொன்னிறத்தை கொடுக்கும்.
வாதுமை கொட்டை:
கருப்பு வாதுமை கொட்டை ஓடுகளை பொடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதை ஆற வைத்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். கருப்பு வாதுமை கொட்டை தலைமுடிக்கு அடர் பழுப்பு நிறத்தை கொடுக்கும்.
கேரட் சாறு:
கேரட்டை வேகவைத்து, சாறு எடுத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு தண்ணீரில் கழுவவும். கேரட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை அளிக்கும். இங்கே இடம் பெற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வர, நரை முடி மறைந்து இயற்கை வண்ண சாயத்துடன் கூந்தல் மிளிரும்.
தலைமுடி முன்கூட்டியே நரைப்பதற்கு மரபணு ரீதியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் மன அழுத்தம், புகைப்பழக்கம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உணவில் இடம்பெறாதது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு கோளாறுகள் போன்றவைகளும் முடி நரைப்பதற்கு மற்ற காரணங்களாக அமைந்திருக்கின்றன.
கூந்தலுக்கு நிறத்தை தரும் மெலனின் என்ற நிறமி குறைவதால் முடி நரைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வயதாகும்போது மயிர்க்கால்களில் மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடையலாம் அல்லது இறக்கலாம். அதனால் முடி நரைக்கத் தொடங்கும். ஆனால் முன்கூட்டியே முடி நரைப்பதை சில வாழ்க்கை முறை மாற்றங்களால் தடுக்க முடியும். வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு இயற்கை வண்ண சாயங்கள் தயாரித்து பூசியும் நரை முடியை அலங்கரிக்கலாம்.
- பொதுவாகவே கிளென்சிங்கை பொருத்தவரை ஒரே புராடெக்ட்தான்.
- வறண்ட சருமத்திற்கு ஆவிப்பிடிக்கும் முறை கொடுக்கக் கூடாது.
சருமத்தில் 4 வகைகள் உள்ளன. சாதாரண சருமம், ஆயில் சருமம், வறண்ட சருமம், சென்சிட்டிவ் சருமம். ஒரு பழமொழி உண்டு `ஆல் த நேச்சுரல் புராடெக்ட்ஸ் ஆர் நாட் ஆல்வேஸ் குட்' உங்கள் சருமத்திற்கு பொருந்துகிற
இயற்கை பொருள் என்னுடைய சருமத்திற்கு விஷமாக இருக்கலாம். இயற்கையான புராடெக்ட்களிலேயே இந்த நிலை இருக்கும்பட்சத்தில் காஸ்மெட்டிக், கெமிக்கல் எனில் இன்னும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாகவே கிளென்சிங்கை பொருத்தவரை ஒரே புராடெக்ட்தான். இதனை எல்லா சருமத்திற்கும் பெரும்பாலான பார்லர்களிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு கிளென்சிங் முறை உள்ளது.
உதாரணத்திற்கு ஃபேஸ் வாஷ்களே ஜெல் முறை எனில் வறண்ட சருமத்திற்கு, வேம்பு, ஆரஞ்ச் அடிப்படையாக கொண்ட ஃபேஸ் வாஷ் எனில் ஆயில் சருமத்திற்கு வேறு என பிரிப்பது போல் கிளென்சிங்கிலும் சருமத்திற்கு ஏற்ப மாறுபடும்.
ஆனால் அந்த அளவிற்கு இங்கே மெனெக்கெடுகிறார்களா? என கவனிக்கவும். மேலும் அதீத வறண்ட சருமம் கொண்ட சருமத்திற்கு பொதுவாக ஆவிப்பிடிக்கும் முறை கொடுக்கக் கூடாது. காரணம் ஏற்கனவே வறண்ட சருமத்தின் துளைகள் திறந்து தான் இருக்கும் எனும்போது அதனை சரும இறுக்கத்திற்கான ஃபேஷியல்கள் தான் கொடுக்க வேண்டும். இதனால் முகம் இளமை பெற்று, சுருக்கங்கள் மறையும்.
அதேபோல் ஆயில் சருமம் எனில் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி முகத்திற்கு புத்துணர்வு கொடுக்கும் ஃபேஷியல்களை கொடுக்க வேண்டும். இதனால் பருக்கள், வடுக்கள் மறையும்.
இந்த கோல்டு, டைமண்ட் ஃபேஷியல்கள் எல்லாம் எந்த அடிப்படையில் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். தங்கம் விற்கும் விலைக்கு எப்படி சரும காஸ்மெட்டிக்குகளில் பயன்படுத்த முடியும். எனவே இப்படியான மாய விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
ஃபேஷியலின் சிறப்பே கொடுக்கப்படும் மசாஜ் மற்றும் க்ளீனிங் முறையில் தான் சிறப்பே உள்ளது. உங்கள் பிரச்சினை என்னவோ, சருமம் எப்படிப்பட்டதோ அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஃபேஷியல் தேர்வு இருக்க வேண்டும். எந்த கிரீம்களும் சருமத்தின் இயற்கையான மெலனினை கட்டுப்படுத்தி உங்களை வெள்ளையாக்காது, எனவே சிவப்பு நிறத்திற்கு மயங்க வேண்டாம். ஆரோக்கியமான சருமம் தான் முக்கியம். அதற்கான ஃபேஷியல் எதுவோ அதை தேர்வு செய்யுங்கள்.
- முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம்.
- அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்.
டீடாக்ஸ் என்பது சமீபத்தில் அதிகமாக காதில் கேட்கிற வார்த்தையாக இருக்கலாம். டீடாக்ஸ் என்பது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துதல் என்று பொருள். உடல் டீடாக்ஸை போலவே முகத்தை டீடாக்ஸ் செய்யும் சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கழிவுகள், அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இதன் மூலம் சருமத்துக்குள் இருக்கும் அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு ஆகியவற்றைக் குறைத்து ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.
சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டியது மிக அவசியம். முகத்தை சோப்பு போட்டு முகத்தைக் கழுவுவோம். அது சருமத்தின் மேல்புறத்தில் இருக்கிற அழுக்குகள் மட்டும் தான் வெளியேறும். அதனால் டபுள் க்ளன்சிங் முறையை பின்பற்றுவது மிக முக்கியம். அதாவது இரண்டு முறை முகத்தை கழுவ வேண்டும்.
இப்படி இரண்டு முறை க்ளன்சிங் செய்யும்போது சருமத் துளைகளுக்குள் உள்ளே சென்றிருக்கிற மேக்கப் பொருள்கள், சன்ஸ்க்ரீன் உள்ளிட்ட லோஷன்கள், அதிகப்படியான சீபம் சுரப்பு ஆகியவற்றை நீக்கும்.
சருமத்தை க்ளன்சிங் செய்து விட்டால் மட்டும் போதுமா என்றால் போதாது. அதன்பிறகு சருமத்தில் தினமும் தேங்குகிற இறந்த செல்களை நீக்கி சருமத்தில் புதிய செல்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது முக்கியம். இதற்கு நல்ல ஸ்கிரப் ஒன்றை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி மென்மையாக சருமத்தை ஸ்கிரப் செய்து கழுவுங்கள். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்தால் போதுமானது.
க்ளே மாஸ்க்கை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மாசுக்கள் முழுமையாக வெளியேறும். கடைகளில் முகத்துக்குப் பயன்படுத்துகிற க்ளே மாஸ்க்குகள் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது அதற்கு பதிலாக முல்தானி மட்டியும் பயன்படுத்தலாம்.
சருமத்தை டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு சருமம் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அப்படி குடிக்கும்போது உடல் மற்றும் சருமத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றும்.
முகத்தை மசாஜ் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இது ஆயில் மசாஜாகவும் இருக்கலாம். அல்லது க்ரீம் அல்லது வீட்டு வைத்தியங்களின் மூலம் மசாஜ் செய்யலாம். தயிர், மஞ்சள் கலந்து முகத்துக்கு மசாஜ் செய்தால் முகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். அதேபோல பேஷியல் ஆயில் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம்.
கிரீன் டீயில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த கிரீன் டீயை சருமத்துக்கு அப்ளை செய்வதன் மூலம் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு சருமத்தை டீடாக்ஸ் செய்து பளிச்சென்று மாற்றும்.
கிரீன் டீயை நன்கு நீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் ஸ்பிரே செய்து விட்டு முகத்தை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்து கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் சுற்றுச்சூழுல் மாசுக்களால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும்.
- முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது.
- வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.
சரும அழகை கூட்ட என்னென்ன செய்யலாம் என்பதைத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்களில் சிலவற்றைத் தவிர்த்தாலே நம் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பேணிக்காக்க முடியும்.
முகப்பரு, கரும்புள்ளியை கண்டதும் முகம் பார்க்கும் கண்ணாடியும் கையுமாக மாறிவிடுவோம். முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது. அதிலும் முகப்பருவை போக்க பக்கத்து வீட்டார் கொடுத்த அறிவுரை, நண்பர்களின் டிப்ஸ், கேள்விப்பட்டது கேள்விப்படாதது என எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தால் நீங்காத தழும்பு முகத்தில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
முகத்தை பிரகாசமாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். சொல்லப்போனால் முகப்பொலிவை பாதுகாக்க இயற்கையில் சருமத்தில் இருந்து எண்ணெய் சுரக்கும். அடிக்கடி முகம் கழுவுவதால் இந்த எண்ணெய் நீக்கப்பட்டு தோலின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.
இதேபோல் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் பலர். சருமத்தின் அழகு, ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டவர்கள்கூட கழுத்து பகுதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தினமும் காலையும் இரவும் முகத்தில் கிரீம்களை பூசிவிட்டு கையில் இருக்கும் மிச்சம் மீதியை கழுத்தில் தேய்ப்பவர்கள்தான் பெரும்பாலானோர். எதையும் அதிகப்படியாக உபயோகிப்பது கேடு விளைவிக்கும்.






