என் மலர்tooltip icon

    சமையல்

    இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. சிறுநீரகக்கல் பிரச்சனை வராமலும் தடுக்கும்.
    தேவையான பொருட்கள்:

    இளநீர் - 1
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கேரட் - சிறியது 1
    பீன்ஸ் - 2
    காய்ச்சிய பால் - 2 தேக்கரண்டி
    மிளகு தூள், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வழுக்கை உள்ள இளநீரை வாங்கிக்கொள்ளவும். இளநீர் வழுக்கையை, கால் கப் இளநீருடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இளநீர் வழுக்கை விழுது, மிளகு தூள், உப்பு மற்றும் மீதியுள்ள இளநீர் சேர்த்து, கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்ததும், பால் ஊற்றி கிளறி இறக்கவும்.

    இப்போது சுவையான, 'இளநீர் சூப்' தயார். மிகவும் சுவையாக இருக்கும்.
    கம்பு, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இவை இரண்டையும் வைத்து சத்தான கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு – ஒரு கப்,
    கம்பு மாவு – அரை கப்,
    அரிசி நொய் – அரை கப்,
    நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்,
    கடைந்த தயிர் – அரை கப்,
    உப்பு – தேவைக்கேற்ப.

    செய்முறை:

    கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும்.

    மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும்.

    அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும்.

    வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு, உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும்.

    வெந்ததும் இறக்கி, கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.

    உடலுக்கு குளிர்ச்சியான கம்பு - கேழ்வரகு கூழ் ரெடி.
    100 கிராம் கொண்டைக்கடலையில் 9 கிராம் புரதம், 8 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது. இன்று கொண்டைக்கடலையில் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கொண்டைக்கடலை - 2 கப்
    பார்ஸ்லி - 2 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 1
    பூண்டு - 4 பற்கள்
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
    பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
    எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பார்ஸ்ஸி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் அரைத்த கொண்டைக்கடலையை போட்டு, அத்துடன் வெங்காயம், பார்ஸ்லி, பூண்டு, மல்லி தூள், சீரகம், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து அதனை கட்லெட் வடிவில் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் செய்து வைத்த கட்லெட்களை அடுக்கி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கொண்டைக்கடலை கட்லெட் ரெடி!!!
    இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணையை ஊற்றி இட்லியில் பிரட்டி அப்படியே சாப்பிட்டு தான் பாருங்களேன். சொல்வதற்கு வார்த்தையே கிடையாது‌ங்க. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வரமிளகாய் – 10,
    வேர்க்கடலை – 1/2 கப்,
    கடலைப்பருப்பு – 1/4 கப்,
    கறிவேப்பிலை – 2 கொத்து,
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    பூண்டு பல் – 5,
    உப்பு – சுவைக்கு

    செய்முறை

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வரமிளகாய் போட்டு வறுத்த பின்னர் வேர்க்கடலை, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

    வேர்க்கடலையும் கடலைப்பருப்பும் பொன்னிறமாக வறுபடும் வரை இந்த பொருட்களை எல்லாம் கை விடாமல் வறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் வறுபட்ட உடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

    கடாயில் இருக்கும் பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

    அவை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு பூண்டு பல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அவ்வளவு தான். மணக்க மணக்க காரசாரமான வேர்கடலை பொடி தயார்.

    இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணையை ஊற்றி இட்லியில் பிரட்டி அப்படியே சாப்பிட்டு தான் பாருங்களேன். சொல்வதற்கு வார்த்தையே கிடையாது‌ங்க.
    சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. தினசரி கால்சியம் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாலுக்கு பதிலாக சோயா பீன்ஸினை சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்

    சோயா பீன்ஸ் - 50 கிராம்,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    மிளகுதூள் - சிறிதளவு,
    தக்காளி - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கு,
    சிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி,
    கிராம்பு -  2,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு ,
    பட்டை, பூண்டு, தண்ணீர் - தேவைக்கு.

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    முதலிலே சோயா பீன்சை தண்ணீரில் ஊறவையுங்கள்.

    குக்கரில் தண்ணீர்விட்டு தக்காளி, வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கிப் போடவும்.

    பட்டை, கிராம்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் கலந்து மிதமான சூட்டில் 2 விசிலுக்கு வைக்கவும்.

    அடுத்து சோயா பீன்சை குக்கரில் சேர்த்து வேகவிடுங்கள்.

    வெந்ததும் இறக்கி நன்றாக மசித்து வடிகட்டவும்.

    பின்பு இது 300 மி.லி. அளவு வரும்வரை சூடாக்கி வற்றவைக்கவும்.

    பின்பு போதுமான உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பருகவும்.

    காரத்திற்கு மிளகுதூள் கலந்து சூடாக பருகலாம்.

    குறிப்பு:- சூப்பை கொதிக்கவைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடும். அதனால் பாத்திரத்தை மூடி வைத்து தயார் செய்யவேண்டும் அல்லது குக்கரை பயன் படுத்தவும்.
    டோஃபு புரதங்கள் நிரம்பிய உணவுப்பொருள். மாமிசத்திற்கு மாற்றான சிறந்த சைவ உணவாகவும் இருப்பதால், சைவப் பிரியர்களுக்கு டோஃபு சத்தான உணவாகவே உள்ளது.
    தேவையான பொருட்கள்

    டோஃபு (உதிர்த்தது) - 1/2 கப்,
    வெங்காயம் - 1,
    கேரட் - 1,
    குடை மிளகாய் - 1
    சோள முத்துகள் - ஒரு கைப்பிடி,
    சீரகம் - 1/4 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
    கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவைக்கேற்ப,
    கோதுமை பிரெட் துண்டுகள் - 4.

    செய்முறை

    கேரட், வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் பொடியாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக அரிந்த குடை மிளகாய், கேரட், சோள முத்துகள் சேர்த்து, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் உதிர்த்த டோஃபுவை சேர்த்து கிளறவும். டோஃபு ஸ்டஃபிங் ரெடி.

    கலவை நன்கு ஆறியதும் பிரெட் துண்டங்களின் நடுவே வைத்து எண்ணெய் தடவிய தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.

    சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
    பாகற்காய் ஜூஸ் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.
    தேவையான பொருட்கள்:

    பாகற்காய் – 2
    எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
    தேன் – 1 டீஸ்பூன்
    மிளகு தூள் – அரை டீஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு
    ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

    செய்முறை:

    பாகற்காயை கழுவி தோலை சீவி துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும்.

    பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும்.

    இப்போது நீரிழிவு நோயாளிகள் குடிப்பதற்கு ஏற்ற பாகற்காய் ஜூஸ் ரெடி!!!
    அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது கம்பு. அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 கப்,
    தேங்காய்த்துருவல், வெல்லத் துருவல் - தலா 1 கப்,
    ஏலப்பொடி - சிறிது,
    நெய், உப்பு- தேவைக்கு.

    செய்முறை :

    கம்பு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும்.

    இடியாப்ப அச்சில் கம்பு மாவை போட்டு இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

    வெந்த கம்பு மாவில் தேங்காய் துருவல், வெல்லத்துருவல், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

    சத்து நிறைந்த கம்பு இடியாப்பம் ரெடி.

    வெல்லம் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெந்த இடியாப்பத்துடன் சட்னி, குருமா சேர்த்து சாப்பிடலாம்.
    டயட்டில் இருக்கும் நேரத்தில் ஒரு கூடுதல் ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்கும் காய் இந்த சௌசௌ. சௌசௌ உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.
    தேவையான பொருட்கள்:

    சௌ சௌ - 1
    சின்ன வெங்காயம் - 20
    பொட்டு கடலை - 1/4 கப்
    கறிவேப்பில்லை - 1 கொத்து
    வர மிளகாய் - 3
    துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
    புளி - நெல்லிக்காய் அளவு
    எண்ணெய் -  2 மேஜைக்கரண்டி

    செய்முறை :

    சௌ சௌவை தோல் கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், சௌ சௌ, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    சௌ சௌ நன்றாக வதங்கியதும் பொட்டுக்கடலை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிடவும்.

    இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் புளி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

    வதக்கியவற்றை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு, உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்தால் சுவையான சௌசௌ சட்னி தயார்.

    இதனை தோசை, இட்லியுடன் பரிமாறவும்.
    கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பெண்கள் தினமும் இந்த கருப்பு உளுந்தை உணவோடு சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    தேவையான பொருட்கள் :

    கருப்பு உளுந்து - 1 கப்
    கடலைப்பருப்பு - 1/4 கப்
    கட்டி பெருங்காயம் -  சிறிதளவு
    பட்ட மிளகாய்(வரமிளகாய்) - 10
    கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
    பூண்டு - 2 (முழு பூண்டு)
    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :


    கட்டி பெருங்காயத்தை 1 மேஜைகரண்டி எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் மொறு மொறு என்று வறுத்து எடுக்கவும்.

    அதே கடாயில் கருப்பு உளுந்தை எண்ணெய் சேர்க்காமல் குறைவான தீயில் வைத்து மொறு மொறு என்று சிறிது கலர் மாறும் வரை வறுக்கவும். இது நன்றாக வறுபட குறைந்தது 9 யிலிருந்து 10 நிமிடங்களாகும். பிறகு தட்டிற்கு மாற்றவும்.

    கடலைப்பருப்புடன் 2 சொட்டு எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் வைத்து 4 நிமிடத்திற்கு பின் சிறிது கலர் மாறும் வரை வறுத்து பின்பு மற்றொரு தட்டில் கொட்டி வைக்கவும்.

    மிளகாயை வெறும் வாணலியில் 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வெள்ளை எள்ளையும் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    கறிவேப்பிலையுடன் சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

    எல்லா பொருட்களை தனித்தனியாக வறுத்த பின் ஒரு அகலமான ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.

    ஆறிய பின் மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    கரகரப்பாக அரைத்த பின் அதில் தோல் உரிக்காத பூண்டு மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியை தொடர்ந்து போடாமல் சிறிது நிறுத்தி நிறுத்தி போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த பின்பு ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இது 1 மாதம் வரை நல்ல வாசனையுடன் இருக்கும்.

    சூப்பரான கருப்பு உளுந்து இட்லி பொடி ரெடி.

    கோதுமையில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் எளிதில் செரிமானம் செய்யக் கூடிய உணவாக கோதுமை இருக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    அரிசி மாவு - 1/2 கப்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    மிளகு சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, பொடித்த மிளகு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்க வேண்டும்.

    இப்போது சூடான கோதுமை வெங்காய மிளகு தோசை ரெடி!!!
    கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
    தேவையான பொருட்கள்

    கருப்பு உளுந்து - கால் கிலோ
    அரிசி - ஒரு கைப்பிடி
    இஞ்சி - சிறிய துண்டு
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    மிளகு - 1 டீஸ்பூன்
    கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை 3 மணிநேரம் நன்றாக ஊற வைத்து நைசாக அரைத்துகொள்ளவும்.

    தோல் நீக்காத கருப்பு உளுந்தை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஊறியதும் அதனுடன் இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து கலந்து கொள்ளவும். அதிகத் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

    அரைத்த மாவில் கறிவேப்பிலை, கொத்துமல்லி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையவும்.

    மாவைச் சிறிது எடுத்து, அடையாகத் தட்டி சூடான தோசைக் கல்லில் போடவும்.

    சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் வெந்த பிறகு எடுக்கவும்.

    இப்போது சுவையான கருப்பு உளுந்து அடை தயார்….
    ×