என் மலர்tooltip icon

    சமையல்

    காலை வேளையில் ஆரோக்கியமான அதே சமயம் வித்தியாசமான உணவை சாப்பிட நினைத்தால், வரகு அரிசி பருப்பு அடை செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    வரகு - 1 கப்
    கடலைப் பருப்பு - 1/4 கப்
    துவரம் பருப்பு - 1/4 கப்
    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    அவல் - 2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 6
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 )
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி - சிறிய துண்டு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    நன்றாக ஊறிய பின்னர் மிக்ஸியில் வரமிளகாய், உப்பு, பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பின்பு ஊற வைத்துள்ள வரகில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, வரகுடன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள

    அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், அடை மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி!!!
    இஞ்சியை உணவுடன் துவையலாக சேர்த்து உண்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் பிரச்சனைகளுக்கும் நல்லது. சுவையான இஞ்சி துவையல் செய்வது எப்படி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இஞ்சி - 100 கிராம்
    உளுத்தம் பருப்பு - 1 1/2 ஸ்பூன்
    நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 4
    துருவிய தேங்காய் - கால் கப்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    புளி - நெல்லிக்காய் அளவு
    வெல்லம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

    வானலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுத்த, பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும்.

    இறக்கும்போது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.

    அடுத்ததாக அதில் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

    துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.

    தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம்.

    சுவையான இஞ்சி துவையல் ரெடி..!
    சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு அரிசி மாவு - 1 கப்
    கொதிநீர் - தேவையான அளவு
    உப்பு - சிறிதளவு
    வெல்லத்தூள் - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - அரை கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன் கொதிநீர், உப்பு சேர்த்து கரண்டியால் நன்றாக கிளறவும்.

    சூடு ஆறியதும் மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    இடியாப்ப அச்சில் மாவை போட்டு இட்லி தட்டில் இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சிவப்பரிசி இடியாப்பம் ரெடி.
    இப்போது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை விரட்ட முடியும்.
    கோடை வெயில் காலம் முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. என்றாலும் வெயிலின் தாக்கம் மேலும் சில வாரங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. கோடையில் வெளியில் அலைந்து தொழில் செய்பவர்களுக்கு உடல் உஷ்ணம் அதிகரித்து நோய்களை கொண்டு வந்து விடும்.

    சிலருக்கு வெப்பத்தை தாங்க முடியாமல் ‘ஸ்ட்ரோக்’ வந்துவிடுவது உண்டு. இத்தகைய அபாயத்தில் இருந்து தப்ப பல வழிகள் உள்ளன. இப்போது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை விரட்ட முடியும்.

    தேவையான பொருட்கள்

    மாங்காய் - 1
    கருப்பட்டி - சுவைக்கு
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    சுக்கு தூள் - ஒரு சிட்டிகை

    செய்முறை

    மாங்காயை தோலுடன் துருவிக் கொள்ள வேண்டும்.

    கருப்பட்டியை சிறிது கரைத்து அதில் மாங்காய் துருவல், எலுமிச்சை சாறு, சுக்கு பொடி சேர்த்து கலக்க வேண்டும்.

    இது தான் மாங்காய் ஜூஸ்.

    மதியம் வெயிலில் சென்று விட்டு வருபவர்கள் வீட்டுக்கு திரும்பியதும். 30 நிமிடம் கழித்து இதை குடிக்கலாம். உடல் சூடு மாயமாய் மறைந்து விடும். ஆனால்இரவு நேரத்தில் இந்த ஜூசை குடிக்கக் கூடாது.
    டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை சோயா பீன்ஸ் குறைக்கிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் சோயாபீன்ஸ் உட்கொள்வதன் மூலம் விரைவில் குணமாக உதவுகிறது.
    தேவையான பொருட்கள் :

    சோயா பீன்ஸ் - அரை கப்
    தக்காளி -1
    சிறிய வெங்காயம் - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகுத்தூள் -1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    பட்டை, பூண்டு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    சோயாபீன்ஸை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் சோயா பீன்ஸ், தக்காளி, வெங்காயம், தேவையான அளவு உப்பு, பூண்டு, பட்டை, மிளகுத்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

    அனைத்தும் நன்றாக வெந்தபின் அதனை மசித்து வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

    அடுத்து அதில் போதுமான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி, சூடாக பரிமாறலாம்.

    சப்பாத்தி, தோசை, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கூட்டு.
    தோசை, இட்லிக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - 1 கப்பு
    பூண்டு - 2 முழுவதும்
    தக்காளி - 1
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    கடுகு, உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - 1 சின்ன கொத்து

    செய்முறை :

    வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பச்சைவாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.

    இவை வதங்கியதும் சிறிதுநேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் மிளகாய்தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னியில் போட்டு கலந்து பரிமாறவும்.  

    இப்போது சுவையான வெங்காய பூண்டு சட்னி தயார் !!!
    கதம்ப சட்னியில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் சத்து நிறைந்தவை. காலையில் இட்லி, தோசையில் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சட்னி.
    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு - 4 பற்கள்
    காய்ந்த மிளகாய் -5
    இஞ்சி - சிறிய துண்டு
    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
    புதினா - சிறிதளவு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    புளி - 1/2 தேக்கரண்டி
    துருவிய தேங்காய் - 1/4 கப்
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - 2 தேக்கரண்டி

     தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சிகப்பு மிளகாயை போட்டு வறுத்த பின்னர் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, புளி என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் இறக்கி ஆற வைக்கவும்.

    அனைத்து நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கதம்ப சட்னி ரெடி.
    சாமை அரிசியில் உள்ள அதிகப்படியான கால்சியம் உள்ளது. சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம். அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் சாமை.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி மாவு - 1 கப்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
    உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் - இரண்டு
    கறிவேப்பிலை - 2 கொத்து
    முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை :

    முந்திரியை சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை சிறிது துண்களாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும்.

    இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி சட்டியில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.

    புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.

    பலன்கள்: நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாகச் செய்து தரலாம்.
    கம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது மற்றும் தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து பலத்தைக் கொடுக்கும். கம்பை தோசை செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
    தேவையான பொருட்கள்

    கம்பு - 1/2 கப்
    கடலை பருப்பு - 1/2 கப்
    உளுத்தம் பருப்பு - 1/4 கப்
    துவரம் பருப்பு - 1/4 கப்
    வெங்காயம் - 1
    முட்டைகோஸ் - 100 கிராம்
    சிகப்பு மிளகாய் - 8
    இஞ்சி - 1 சிறு துண்டு
    பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
    கடுகு - 3/4 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை

    வெங்காயம், முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பருப்பு, கம்பு, ஒன்றாக களைந்து குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    மிக்சியில் மிளகாய், பெருங்காயம், உப்பு, இஞ்சி சேர்த்து பொடிக்கவும்.

    பின்பு ஊறிய பருப்பு, கம்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கம்பு அரைப்பட வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் முட்டைகோஸை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து கலக்கவும்.

    உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சிவக்கும் வரை வேகவைத்து சுட்டு எடுக்கவும்.

    இப்போது சத்தான கம்பு அடை ரெடி.

    மாவை அரைத்ததுமே அடை செய்யலாம், அல்லது, ஓரிரு மணிநேரம் கழித்தும் செய்யலாம்.

    கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.
    தேவையான பொருட்கள்:

    மூக்கிரட்டை கீரை - 2 கையளவு
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு - 2 பல்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெங்காயம், தக்காளி, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

    கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.

    சூப்பரான மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.

    மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் மூக்கிரட்டை கீரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.
    பித்தம், குமட்டல் போன்ற உடல் உபாதைகள் உள்ளவர்கள் அடிக்கடி இந்த துவையலை செய்து சாப்பிடலாம். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஆரஞ்சு தோல் - 1 கப்
    வெல்லம் - அரை கப்
    மிளகாய் வற்றல் - 5
    புளி கரைசல், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஆரஞ்சு தோலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும்.

    பின், பொடியாக நறுக்கிய ஆரஞ்சுப்பழத் தோலை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.

    நன்றாக வறுபட்டதும் ஆற வைத்து மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, துருவிய வெல்லம், புளி கரைசல் சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

    சுவைமிக்க, 'ஆரஞ்சு தோல் துவையல்' தயார்.

    சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

    நீண்ட நாட்கள் கெடாது. குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை.
    செரிமான கோளாறு உள்ளவர்கள், காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இந்த கஞ்சியை அருந்தலாம். மேலும் சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த கஞ்சி ஏற்றது.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கல் அரிசி – ஒரு கப்,
    சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
    வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
    பாசிப்பருப்பு – 25 கிராம்,
    தயிர் – ஒரு கப் (கடைந்தது),
    உப்பு – தேவையான அளவு,

    செய்முறை:

    புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு ரவை போல உடைத்துக்கொள்ளவும்.

    வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

    அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து 5 விசில் வரும் வரை வேகவிட்டால்… நன்றாக குழைந்து வெந்துவிடும்.

    பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான அரிசி மிளகு சீரக கஞ்சி ரெடி.

    ×