என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    • உடல் பருமன் என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.
    • உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

    உடல் பருமன் என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். நீங்கள் உடல் எடை இழப்பு பயணத்தில் இருந்தால், இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்க பல வழிகள் இருந்தாலும், உங்கள் அன்றாட வாழ்க்கையில் முதலில் மாற்ற வேண்டியது உங்கள் காலை பழக்கம்தான்.

    எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது உங்கள் காலை நேரத்தில் ஒரு நல்ல வழக்கத்தைச் சேர்ப்பது முக்கியம். எடை இழப்பு பானமான இஞ்சி மற்றும் எலுமிச்சை தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    இஞ்சி, எலுமிச்சை நீர் சமீப காலங்களில் இயற்கையாகவே உடல் எடையை குறைக்கும் சூப்பர் உணவாக உருவெடுத்துள்ளது. இந்த நேரடியான பானம், வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது, அதன் பல நன்மைகளுடன் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

    காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி எலுமிச்சை தண்ணீரை முதலில் குடிப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். இஞ்சி மற்றும் எலுமிச்சை பானம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. மேலும் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த கலவையானது எடை இழப்புக்கு உதவுகிறது.

    இஞ்சி எலுமிச்சை நீர் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, சிறந்த செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது. வயிற்று உப்புசம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை நிர்வகிப்பதில் எலுமிச்சை, சிட்ரிக் அமிலம் நிறைந்தது, செரிமான சாறுகளை உற்பத்தி செய்கிறது. இஞ்சியில் உள்ள பண்புகளும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகின்றன.

    உடல் எடையை குறைப்பதில் நச்சு நீக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி எலுமிச்சை நீர் அதற்கு திறம்பட பங்களிக்கிறது. இஞ்சி மற்றும் எலுமிச்சை பானம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துகின்றன, இது உடலின் சிறந்த நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கிறது. வெற்றிகரமான எடை இழப்புக்கு, சுத்தமான உள் அமைப்பு இன்றியமையாதது.

    இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் இந்த பானம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவும்.

    இஞ்சி எலுமிச்சை நீர் இயற்கையான ஆற்றல் எழுச்சியை வழங்குகிறது. இஞ்சி மற்றும் எலுமிச்சை இரண்டும் ஊக்கமளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை உடல் சோர்வை நீக்கி, ஆற்றலை அதிகரிக்கிறது.

    எனவே இந்த எளிய மற்றும் பயனுள்ள பானத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இது உங்கள் உடல் அதிகப்படியான கொழுப்புகளை அகற்றி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சீரான உணவுடன் சேர்த்து தொடர்ந்து குடிக்கவும், ஒரு மாதத்திற்குள் எடை குறைவதை நீங்கள் கவனிக்கலாம்.

    • யோகா என்பதற்கு ஒன்றிணைதல் என்பது அர்த்தம்.
    • கிரியா என்பதற்கு உள்நிலை செயல்பாடு என்பது அர்த்தம்.

    யோகா என்பதற்கு ஒன்றிணைதல் என்பது அர்த்தம். யோகா செய்யும்போது நம் உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவை ஒன்றிணைந்து மன அழுத்தங்களை குறைத்து மனதில் அமைதி நிலவச்செய்யும். யோகாவில் கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா, பக்தி யோகா என நான்கு வகை உள்ளன. இதில் கிரியா யோகா பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

    கிரியா என்பதற்கு உள்நிலை செயல்பாடு என்பது அர்த்தம். கிரியா யோகா செய்யும்போது உங்கள் உள்நிலை செயல்பாட்டை மட்டுமே உள்ளடக்கி செய்தலாகும். கிரியா யோகாவை மேற்கொள்ளும்போது ஆன்மீகப் பாதையில் நடப்பது சக்தி வாய்ந்தது. ஆனால் உங்கள் ஈடுபாடும், ஒழுக்கமும் அதில் அதிகம் தேவைப்படும். அவ்வளவு எளிதாக கிரியா பயிற்சி இருக்காது.

    ஆனால் இரக்கத்துடனும் பொறுமையுடனும் செய்தால், உங்கள் மனதின் உள்ஞானத்தை உண்மையிலேயே ஒளிரச் செய்யலாம். கிரியா யோகாவை மேற்கொள்ள எளிய முறைகளை கீழே கூடுத்துளோம். அவற்றை சிறந்த நிபுணரின் வழிகாட்டுதல் மூலமாக மேற்கொள்வது அவசியம்.

     கிரியா யோகா செய்யும் முறை:

    * முதலில் நின்றபடி, கைகளை ஒன்று சேர்த்து மார்பினை ஒட்டி வணங்கிய நிலையில் அரை வினாடிகள் கண்களை மூடி நிற்க வேண்டும்.

    * அதன் பிறகு, முட்டிக் கால் இட்டு, முன்புறமாக கைகளை ஒன்று சேர்த்து வணங்க வேண்டும். இந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும்.

    * அடுத்து, கைகளை பக்கவாட்டில், வைத்து உள்ளங்கைகளை நெஞ்சுக்கு நேரே குவித்து இருக்குமாறு வணங்க வேண்டும். அந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும்.

    * மீண்டும், கைகள் இரண்டையும் முன்புறமாக கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

    * நின்றபடி, நமக்கு பிடித்த தெய்வத்தை மனதில் கொள்ள வேண்டும்.

    * மண்டியிடும் போது யோகா குருவினை மனதில் கொள்ள வேண்டும்.

    யோகாசனம் செய்வதற்கு முன்பாக, நாம் நம் உடலை எளிய பயிற்சிகள் மூலம் ஆயத்தப்படுத்துதல்

    * நம் கால்களை 'V' வடிவில் விரித்து நிற்க வேண்டும்.

    * கைகளை முன்புறமாக தோள்பட்டை அளவிற்கு உள்ளங்கைகளைச் சேர்த்து நீட்ட வேண்டும்.

    * பக்கவாட்டில், நம்முடைய உள்ளங்கைகள் பூமியை நோக்கி இருக்குமாறு விரித்து வைக்க வேண்டும்.

    * இவ்வாறு மேற்குறிப்பிட்ட நிலையில், பத்து எண்ணிக்கை மனதில் கொண்டு முன்புறமாகவும், பக்கவாட்டிலும் மாறி மாறி கைகளை மாற்றி, சாதாரண பயிற்சி செய்ய வேண்டும்.

    • நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
    • உணவுகளில் அதிகமான கலோரி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    எடை இழப்பு என்று வரும்போது நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அதே நேரம் சாப்பிடும் உணவுகளில் அதிகமான கலோரி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பதிவில் உங்களது எடை இழப்பு இலக்கை அடைய உதவும் சுவையான குறைந்த கலோரி நிறைந்த தின்பண்டங்கள் பற்றி பார்க்கலாம். இதை எளிதாக நீங்களே வீட்டில் செய்து விட முடியும். எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக, இவற்றை சாப்பிடும்போது, திருப்திகரமாகவே உடல் எடையைக் குறைக்கலாம்.

     முளைக்கட்டிய பச்சைப் பயறு:

    முளைகட்டிய பச்சைப் பயரில் நார்ச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கிப் போட்டு, சிறிதளவு உப்பு மற்றும் கரம் மசாலாவை இதில் கலந்து, சாட் போல தயாரித்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.

     வேகவைத்த வெஜிடபிள் கட்லட்:

    உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை நன்கு வேக வைத்து, பின்னர் அவற்றை கட்டலெட்டுகளாக செய்து சாப்பிடலாம். இதை செய்வதற்கு கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவற்றை வேக வைத்து நன்றாகப் பிசைந்து, தட்டையாக்கி, பிரெட் தூளில் தொட்டு இருபுறமும் வேகும்படி தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால், வெஜிடபிள் கட்லெட் ரெடி.

     வறுத்த மசாலா கொண்டைக்கடலை:

    சென்னா என அழைக்கப்படும் கொண்டைக்கடலை ஒரு ஆரோக்கியமான உணவாகும். நன்கு காய்ந்த கொண்டக்கடலையை தண்ணீரில் நனைத்து, கொத்தமல்லி மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம் போன்ற மசாலாக்களை சேர்த்து மிதமான சூட்டில் வாணலியில் வறுத்து சாப்பிட்டால், புரதச்சத்து நிறைந்த சூப்பர் ஸ்னாக் தயார்.

     வெள்ளரிக்காய் ரைத்தா:

    வெள்ளரிக்காய் பயன்படுத்தி செய்யப்படும் ரைத்தா ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் தயிர் சார்ந்த சைடு டிஷ் ஆகும். இது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடக்கூடிய சிறந்த ஸ்னாக். இதை செய்வதற்கு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி, தயிருடன் கலந்து சீரகத்தூள், புதினா இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

     சுண்டல்:

    சில குறிப்பிட்ட பருப்பு வகைகளை வேகவைத்து செய்யப்படும் புரதம் நிறைந்த உணவுதான் இந்த சுண்டல். கொண்டைக்கடலை, காராமணி அல்லது பச்சை பயறு போன்ற பயர் வகைகளை ஊற வைத்து, பின்னர் வேக வைக்க வேண்டும். அடுத்ததாக அதில் கொஞ்சம் கடுகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு பிழிந்து தாளித்தால் சூப்பர் சுவையில் சுண்டல் ரெடி. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நார்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதே நேரம் கலோரியும் குறைவுதான் என்பதால், உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

     மசாலா பொரி:

    உங்களுக்கு மேலே குறிப்பிட்ட எந்த ஸ்நாக்கும் செய்ய முடியவில்லை என்றால், கடைக்கு சென்று பத்து ரூபாய் கொடுத்து பொரி வாங்கி சாப்பிடுங்கள். இதை நேரடியாக அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, தக்காளி, வெங்காயம், துருவிய கேரட், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து, சாட் மசாலா தூவி அப்படியே கலந்து மசாலா பொரியாக்கி சாப்பிட்டால், இதைவிட அற்புதமான குறைந்த கலோரி உணவு இருக்கவா போகிறது?.

    இவை அனைத்துமே குறைந்த கலோரியை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளாகும். இதை அதிகமாக சாப்பிட்டாலும் உங்கள் உடல் எடை கூடாது. எனவே இவற்றை சாப்பிட்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க முயலுங்கள்.

    • சைவ உணவுதான் ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
    • நாள்பட்ட நோய் பாதிப்புகளை குறைக்க முடியும்.

    சைவ உணவுதான் ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதனை சாப்பிடுவதன் மூலம் பல நாள்பட்ட நோய் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகிறார்கள். அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை தேர்ந்தெடுப்பவர்கள் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

    அசைவ உணவு பிரியர்களுக்கு அதனை கைவிடுவது கடினமானதாகத் தோன்றலாம். ஒரு மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக அசைவ உணவையும் புறக்கணித்துவிட்டு சைவ உணவை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    ஒரே மாதிரியான சத்துகள்:

    அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏதேனும் உடல்நல காரணங்களுக்காக சைவ உணவுக்கு மாறும்பட்சத்தில் சில நாட்களை கடப்பதற்கு கடினமாகவே இருக்கும். அசைவ உணவுகளில் கிடைக்கும் சத்துக்களை சைவ உணவுகளில் இருந்தும் பெறலாம். இரண்டு உணவுத் திட்டங்களிலும் ஒரே மாதிரியான சத்துகளே கிடைக்கும். உணவு தேர்வு முறையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    செரிமான செயல்முறை:

    சைவ உணவு தாவர அடிப்படையிலானது. அதில் நார்ச்சத்து நிறைந்திருக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது செரிமான செயல்முறையை மேம்படுத்தும். மேலும் தாவர அடிப்படையிலான சைவ உணவு மலச்சிக்கல் பிரச்சினையை கட்டுப்படுத்தும். குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு வழிவகை செய்யும்.

    கொழுப்பைக் குறைக்கும்:

    இறைச்சி உணவுகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடியவை. அதே சமயம் தாவர அடிப்படையிலான சைவ உணவுகளில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. கெட்ட கொழுப்பை வெளியேற்றுவதற்கு உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. சைவ உணவை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்டரால் அளவை சீராக பேண முடியும்.

    நாள்பட்ட நோய்களை குறைக்கும்:

    சைவ உணவை உண்பதால் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயங்களைக் குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் உறுதிபட கூறுகிறார்கள்.

    அழற்சியை கட்டுப்படுத்தும்:

    இறைச்சி சார்ந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அழற்சி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உட்கொள்பவர்களுக்கு பல நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். சைவ உணவை சாப்பிடுவது அழற்சி சார்ந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.

    உடல் எடையை குறைக்கும்:

    உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சைவ உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாவர அடிப்படையிலான இந்த உணவுகள், விலங்கு வகை இறைச்சி உணவுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கலோரிகளை கொண்டுள்ளன. மேலும் சைவ உணவு வயிற்றுக்கு நிறைவாக சாப்பிட்ட உணர்வை தரும். அதனால் பசியை குறைக்க உதவும்.

     ஆற்றலை அளிக்கும்:

    தாவர அடிப்படையிலான சைவ உணவுகளில் ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடலிலின் ஆற்றல் அளவை அதிகரிக்கச்செய்யும். ஆனால் அசைவ உணவுகள், குறிப்பாக `ரெட் மீட்' எனப்படும் சிவப்பு இறைச்சி வகைகளை அதிகம் சாப்பிடுவது

    புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும். அதிலும் பன்றி இறைச்சி மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தொடர்ந்து அதிகம் சாப்பிடுவது மலக்குடல் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். மாட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கக்கூடும்.

    • காய்கறி என்றாலே நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்பவை.
    • நீர்க்காய்கள் மிக முக்கியமானவை.

    பொதுவாகவே காய்கறி என்றாலே நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்பவை. அதிலும் நீர்க்காய்கள் மிக முக்கியமானவை. இதில் அனைவரும் விரும்பி சாப்பிடுவதில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காயில் கிட்டத்தட்ட 85 சதவீதம் நீர்தான் இருக்கிறது.

    மேலும் உடலுக்குத் தேவையான பொட்டாசியம், மக்னீசியம், விட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்களும் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைத் தடுக்கும். சரி வாங்க, இவ்வளவு நன்மை செய்யும் சுரைக்காயை பயன்படுத்தி சூப் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சுரைக்காய்- 1

    தக்காளி- 1

    சீரகம்- கால் டீஸ்பூன்

    மிளகுதூள்- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குக்கரில் 1 தக்காளி மற்றும் சுரைக்காயை நறுக்கிப் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து, சீரகம் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

    இறுதியில் தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால், சூப்பர் சுவையில் எடையை குறைக்கும் சுரைக்காய் சூப் தயார்.

     சுரக்காய் சூப் தினசரி குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். எனவே நாள் முழுவதும் உங்களை நீரேற்றத்துடன் வைத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும் சுரைக்காய் சூப் குடிப்பதால் உங்கள் சருமம் பொலிவு பெறும்.

    சுரைக்காய் சூப் குடிப்பதால் அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இதனால் நீங்கள் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்வது தடுக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் தினசரி சுரைக்காய் சூப் குடித்தால் மன அழுத்தம் குறைவதாகவும் சொல்லப்படுகிறது.

    இப்படி சுரைக்காய் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே கட்டாயம் இந்த உணவை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    • ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது.
    • அத்தகைய உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது.

    உடல் நலனை பாதுகாப்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது. அத்தகைய உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது. நிறைய பேர் விரும்பிய நேரத்தில் உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இரவு உணவை தாமதமாக உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    அலுவலகம் முடியும் நேரத்திலோ, வீடு திரும்பும் வழியிலோ நொறுக்குத்தீனிகளை உட்கொண்டுவிட்டு இரவு உணவு உண்ணும் நேரத்தை தாமதப்படுத்துகிறார்கள். 9 மணிக்கோ, அதற்கு பிறகோ சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடுவது செரிமான செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதுதான் சரியானது. அதுதான் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது என்பது உணவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. முன்னோர்களும் அப்படி சாப்பிடும் வழக்கத்தைத்தான் பின்பற்றினார்கள். அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

     இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * தூக்கத்திற்கும், செரிமானத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இரவு தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லும்போது செரிமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும். அது தன் வேலையை செய்வதில் தொய்வு ஏற்படும். தூக்கமும் தடைபடும். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு பிறகு தூங்கச் செல்லும் வழக்கத்தை பின்பற்றினால் செரிமானம் சீராக நடைபெறும். உடல் உறுப்புகளுக்கும் எந்தவித பாதிப்பும் நேராது. அவை ஓய்வெடுத்து ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும். காலையில் எழும்போது சோர்வு எட்டிப்பார்க்காது.

    * இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பது உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும். இரவு 7 மணிக்குள் உணவு உட்கொள்ளும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    * இரவு உணவை 7 மணிக்கு உண்ணும்போது உடலில் உள்ள கலோரிகளை எதிர்த்து போராடுவதற்கு உதவும். உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.

    * இரவு தாமதமாக சாப்பிடும்போது விரைவாக செரிமானம் ஆவதற்கு செரிமான மண்டலம் ஒத்துழைப்பு கொடுக்காது. இரவு உணவுக்கும், தூங்கச் செல்லும் நேரத்திற்கும் இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். தாமதமாக சாப்பிடும்போது அந்த இடைவெளி குறைந்துவிடும். அதன் காரணமாக அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

    * இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது கூடுதல் கலோரிகளை எரிப்பதற்கு போதிய நேரமில்லாமல் போய்விடும்.

    * நீரிழிவு, இதயம், தைராய்டு சார்ந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும். மேலும் இரவில் சீக்கிரமாகவே சாப்பிட்டுவிடுவதும் நல்லது.

    • பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது.
    • ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.

    வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது. நமக்கு மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கும் சில காய்கறிகளில் மட்டும் ஜூஸ் செய்து குடிக்கலாம். அப்படிப் பார்த்தால் வாழைத்தண்டும், வெள்ளைப் பூசணியும் ஜூஸ் செய்து குடிக்க ஏற்றவை.

     இவை இரண்டையும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம். வாழைத்தண்டை பொடியாக நறுக்கிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். வாழைத்தண்டிலேயே நிறைய நீர்ச்சத்து இருக்கும் என்பதால் அதிக தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அரைத்தடுத்த ஜூசில் சிறிது சீரகத்தூள், சிறிது மிளகுத்தூள், சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கலாம்.

     இதேபோல வெள்ளைப் பூசணியை ஜூஸ் செய்து குடிக்கலாம். இவற்றை வெறும் வயிற்றில் காலையில் குடிப்பது சிறந்தது. குடித்து முடித்த அடுத்த ஒரு மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. நீங்கள் கேட்டிருந்தபடி சுரைக்காய் ஜூஸ் குடிப்பதை மட்டும் தவிர்க்கவும்.

    சுரைக்காய் ஜூசில் உள்ள கசப்புத்தன்மை காரணமாக வயிறு மற்றும் குடல்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் பற்றிக்கூட கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே அதைத் தவிர்க்கவும்.

    நெல்லிக்காய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்த ஜூசும் குடிக்கலாம். காய்கறி ஜூஸ் நல்லது என்ற எண்ணத்தில் எல்லா காய்கறிகளிலும் ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது. எனவே மேற்குறிப்பிட்ட மூன்று ஜூஸ் மட்டும் குடித்துப் பார்த்து உங்கள் உடலுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்று கவனியுங்கள். ஏற்றுக்கொண்டால் தொடரலாம். கூடவே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்களையும் பின்பற்றினால் நிச்சயம் எடைக்குறைப்பு முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

    • உடல் பருமன் பிரச்சினையால் பலரும் அவதிப்படுகிறார்கள்.
    • சில உடற்பயிற்சி செய்வதன் மூலம் இடுப்பில் கொழுப்பு சேருவதை தடுக்கலாம்.

     உடல் பருமன் பிரச்சினையால் பலரும் அவதிப்படுகிறார்கள். அதிலும் இடுப்பை சுற்றி கொழுப்பு சேரும் பிரச்சினையை முதிய பருவத்தை எட்டுபவர்கள் மட்டுமின்றி டீன் ஏஜ் வயதினரும் எதிர்கொள்கிறார்கள். அப்படி இடுப்பை சுற்றி கொழுப்பு அதிகம் சேர்வது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எளிமையான சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் இடுப்பை சுற்றி கொழுப்பு சேருவதை தடுக்கலாம்.

     வலது கையை தரையில் ஊன்றிக்கொண்டு இரண்டு கால்களையும் நேராக நீட்ட வேண்டும். அப்போது இடுப்பை நன்றாக தூக்கியபடி கால்களை நேர்கோட்டில் வைக்க வேண்டும். இடது கையை இடுப்பு மீதோ, முதுகின் மீதோ வைத்தபடி ஒரு நிமிடம் வரை சாய்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதேபோல் 10 முறை செய்ய வேண்டும்.

    இரண்டு கைகளை தரையில் ஊன்றியபடியும் பயிற்சி செய்யலாம். அப்போது தலை, இடுப்பு, கால்கள் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேன்டும். பின்னர் வலது கையை தலைக்கு பின்னால் வைத்தபடி சில வினாடிகள் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் இரு கைகளையும் தரையில் ஊன்ற வேண்டும். அதைத்தொடர்ந்து வலது கையை இடது புற தோள்பட்டை மீது வைத்தபடி சில வினாடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். பின்பு கைகளை தரையில் நன்றாக ஊன்றியபடி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

     தரையில் படுத்த நிலையில் கைகளை ஊன்றாமல் கால்களை மேலே தூக்கியும் பயிற்சி செய்யலாம். முதலில் தரையில் படுத்தபடி இரு கைகளையும் தலையின் பின்பகுதியில் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். மூட்டு பகுதியை செங்குத்தாக வைத்தபடி கால்களை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். பின்னர் தலையை இடது புறமாக திருப்பி, இரு கால்களையும் நேராக நீட்ட வேண்டும். பின்னர் ஒரு காலை மட்டும் நீட்டி மடக்க வேண்டும். பின்பு வலது புறத்தில் தலையை திருப்பிக்கொண்டு மற்றொரு காலை நீட்டி மடக்க வேண்டும்.

    தரையில் அமர்ந்து இரு கால்களையும் நீட்டிக்கொண்டு தலையை குனிந்தபடி இரு கைகளால் கால் விரல்களை தொட்டும் பயிற்சி செய்யலாம். இந்த பயிற்சிகளை தினமும் தவறாமல் தொடர்ச்சியாக செய்து வந்தால் இடுப்பு தசைகள் குறையத் தொடங்கும். உடற்பயிற்சி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முறையாக பயிற்சி செய்வது விரைவான பலனை தரும்.

    • இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
    • உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்.

    இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக்கணக்கில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார்கள்.

    அத்துடன் எடை குறைப்பிற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை.

    இந்தநிலையில், ``உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் மன நிறைவாக சாப்பிட முடியும். அதேநேரத்தில் உங்களின் எடையும் குறையும்...'' என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட `அய்ன் ட்ரீ' மருத்துவமனை, 500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது. இந்த ஆய்வை ராபர்ட் என்ற மருத்துவர் தலைமையேற்று, நடத்தி முடித்திருக்கிறார்.

    ``உணவை எப்படி வேறு விதமாக பார்ப்பது?'' என்ற கேள்விக்கு ராபர்ட் பதில் அளிக்கிறார்.

    ``உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதை போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம். அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.

    முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்த பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதை போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறி இருக்கும்'' என்றார்.

    • பலர் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள்.
    • ஆரோக்கியத்தை பராமரிக்க தூக்கம் அவசியம்.

    மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை பலரது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பலர் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள். ஆனால், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தூக்கம் அவசியம். நீங்கள் இரவில் தூங்குவதற்கு சிரமப்பட்டாலோ அல்லது ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ, நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில யோகாசனங்கள் இங்கே உள்ளது.

    ஒவ்வொரு ஆசனமும் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் அல்லது அதற்கு மேல் வைத்திருக்கலாம். இதனை மூன்று முறை மீண்டும் செய்யவும். பின்னர் படிப்படியாக 10-15 நிமிடங்களுக்கு அதிகரிக்கவும்.

     1. சுகாசனம்:

    * தரையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள்

    * உங்களின் இரு கால்களையும் நீட்டவும்

    * உங்கள் கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகக் வைக்கவும்

    * உங்கள் உள்ளங்கைகளை முழங்கால்களில் வைக்கவும்

    * முதுகெலும்பை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.

     2. வஜ்ராசனம்:

    * இந்த ஆசனத்தை உணவிற்கு பிறகு செய்யலாம்.

    * உங்கள் முழங்கால்களை மடக்கி மெதுவாக அதன் மீது உட்காரவும்.

    * உங்கள் இடுப்பை உங்கள் குதிகால் மீது வைக்கவும்.

    * உங்கள் குதிகால் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

    * முழங்கால் முட்டிகள் மீது உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும்.

    * உங்கள் முதுகை நேராக்கி உட்காருங்கள்.

     3. தியானம்:

    * இந்த நுட்பத்தை பயிற்சி செய்ய இயற்கை சூழலைக் கண்டறியவும்.

    * சுகாசனம் போன்ற வசதியான தோரணையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

    * 5 விநாடிகளுக்கு முன்புறத்தையும், மற்றொரு 5 விநாடிகளுக்கு பின்புறத்தையும், வலது மற்றும் இடது பக்கங்களில் தலா 5 விநாடிகளும் பாருங்கள்.

    * கண்களை மூடிக்கொண்டு உங்களால் முடிந்தவரை ஏற்கனவே நடந்த விஷயங்களை நினைவு கூருங்கள் இந்த யோகாசனம் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இது உங்களிடம் அமைதியான உணர்வைத் தூண்டக்கூடும். இது ஒரு நல்ல இரவு ஓய்வை அனுபவிக்க உதவுகிறது.

    உடலுக்கான உணவைப் போலவே, உடல் அதன் உகந்த நிலையில் செயல்பட தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கம் குறைவான மன அழுத்த அளவையும், அமைதியான மனதையும், நல்ல ஆரோக்கியத்தையும் எளிதாக்குகிறது.

    • உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது.
    • மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம்.

    சிகிச்சை முறை தவிர, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும். உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    நொறுக்கு தீனியை குறைக்க சுலப வழி:

    சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப்போம். இவ்வாறு நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம்.

    இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம், எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.

     எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருத்தல்:

    `டிவி' நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, `டிவி' நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையை குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.

    தினசரி நடக்க வேண்டும்:

    தினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அவ்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உள்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர். அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.

    நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். பக்கத்து தெருவில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து, அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பேசலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம்.

    மெதுவாக சாப்பிட வேண்டும்:

    உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும். பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும்.

    குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண்டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும். மேலும், மெதுவாக சாப்பிடுவதால், எளிதில் ஜீரணமாதல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படாமல் தவிர்த்தல் போன்ற பயன்களும் உள்ளன.

    • முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும்.
    • இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி.

    யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு வலி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    உலகில் பலதரப்பட்ட வயதுடைவர்களுக்கு உலக அளவில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும். வேலைப்பளு காரணமாக உடல் சார்ந்த குறைபாடுகளில் மக்களுக்கு ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு பிரச்சினை இடுப்பு வலி. இடுப்பு வலி ஏற்படுவதால் மக்களின் அன்றாட பணிகள், உடற்பயிற்சி, மற்றும் தூக்கம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் தற்போது, அமெரிக்காவின் மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் யோகாவை பற்றிய ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    அதாவது பண்டைய இந்திய உடல் மற்றும் ஆன்மீக பயிற்சியான யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு வலி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     யோகா பயிற்சி மேற்கொள்வதால் வலி நிவாரணம் அளிக்கும் என்றும், உடலின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என்றும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வு முன்னணி எழுத்தாளரான, எல். சூசன் விலாண்ட் கூறியுள்ளார்.

    நாள்பட்ட அல்லாத குறிப்பிட்ட இடுப்பு வலியால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு, யோகா சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே எல். சூசன் விலாண்ட் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் இடுப்பு வலி குறைய யோகா பற்றி தனித்தனியாக 12 ஆய்வுகளை மதிப்பீடு செய்து பார்த்தோம் என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.

     உடற்பயிற்சி முறை செய்பவர்களுடன் யோகா பயிற்சி மேற்கொள்பவரை ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்படி ஒப்பிட்டு பார்க்கையில் யோகா பயன்படுத்திய நோயாளர்களுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களில் இடுப்பு வலியில் மிதமான மேம்பாடுகள் காணப்பட்டுள்ளது.

    அதேபோல் வலியும் சற்று குறைந்து காணப்படுகிறது என்று உறுதியாக ஆதாரங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    ×