என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    வருங்கால தேவைக்கு ஏற்ப தற்போது பிரபலமாக அறியப்படும் எதிர்கால படிப்புகளை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
    விவசாயப் படிப்புகள் என்று எடுத்துக் கொண்டால் கால காலமாக புகழ்பெற்று விளங்குவது பி.எஸ்சி (அக்ரி) என்கிற நான்கு வருடப் பட்டப்படிப்பாகும். தவிர, பி.எஸ்சி தோட்டக் கலைப் படிப்பு, பி.எஸ்சி மனையியல் படிப்பு மற்றும் வனத்துறை சார்ந்த படிப்பும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ளன.

    பொறியியல்

    தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சி.இ.ஜி. எனப்படும் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக், எம்.ஐ.டி, எஸ்.ஏ.பி எனப்படும் ஆர்க்கிடெக்சர் கல்லூரி ஆகிய நான்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கல்லூரிகள். அடுத்த நிலையில் மாநிலத்தின் 13 இடங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும், 10 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. இவைதவிர ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் பலதரப்பட்ட பொறியியல் படிப்புகள் இருக்கின்றன.

    மருத்துவம்

    மருத்துவத்தைப் பொறுத்தவரை எம்.பி.பி.எஸ். அளவுக்கு சமீப ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெறுகிற ஒன்று மாற்று மருத்துவப் படிப்புகள். அதாவது, ஆயுர்வேத படிப்பான பி.ஏ.எம்.எஸ்., சித்த மருத்துவத்தின் பி.எஸ்.எம்.எஸ்., ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளன. இவை தவிர, துணை மருத்துவ படிப்புகளான பி.பார்ம் எனப்படும் மருந்தியியல் பட்டப்படிப்பு, பி.பி.டி. எனப்படும் பிசியோ தெரபி, பி.ஓ.டி. எனப்படும் அக்குபேஷன் தெரபி, ஆப்டோ மெட்ரி எனப்படும் கண் மருத்துவப் பட்டயப்படிப்பு ஆகியவையும் புகழ்பெற்றவை.

    சட்டம்

    தேசிய அளவில் புகழ்பெற்ற தேசிய சட்ட கல்லூரி எனப்படும் அகில இந்திய சட்டக் கல்லூரிகள் பல்வேறு மாநிலங் களிலும் உள்ளன. இவற்றுள் டி.என்.என்.எல்.எஸ். எனப்படும் தமிழ்நாடு தேசிய சட்ட கல்லூரி திருச்சியில் செயல்படுகிறது. இவை அனைத்திலும் பிளஸ்-2 முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப் படிப்பு சேர சி.எல்.ஏ.டி. எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். ஆனால் தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு கிடையாது.

    வணிகவியல்

    கம்ப்யூட்டர் பயிற்சியோடு இணைந்த பி.காம் (கணினி அறிவியல்) மற்றும் பி.காம் (தகவல் தொழில்நுட்பம் ), வங்கித்துறை சார்ந்த (வங்கி மேலாண்மை ) மற்றும் பி.காம் (சந்தைபடுத்துதல்), பி.காம் (விளம்பரவியல்) என ஏராளமான சிறப்பு படிப்புகள் உருவாகியிருப்பது ஆரோக்கியமான விஷயம். இவற்றில் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப துறையினை தேர்வு செய்து படிக்கலாம்.

    சமையல் கலை

    சென்னை தரமணியில் மத்திய அரசு நிதி உதவியுடன் நடைபெறும் கேட்டரிங் கல்லூரியில் பி.எஸ்சி என்கிற பட்டப் படிப்பு பிரபலமாக உள்ளது. இதில் சேர அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இக்கல்லூரி தவிர, மாநில அரசு நடத்தும் கேட்டரிங் கல்லூரி திருச்சியில் உள்ளது. இவை இரண் டிலுமே உணவு தயாரிப்பு, அலுவல் பணி, மேலாண்மை, நிர்வாகம் ஆகியவற்றில் ஒன்றரை வருட டிப்ளமா படிப்புகள் உள்ளன.

    ஊடகத்துறை

    ஊடகத் துறையைப் பொறுத்தவரை புகழ்பெற்ற ஒரு படிப்பு பி.எஸ்சி (விசுவல் கம்யூனிகேஷன்) விஸ்காம். இதற்கு அடுத்த ஒன்று பி.எஸ்சி (எலக்ட்ரானிக் மீடியா), பி.எஸ்சி (அனிமேஷன்), (பிலிம் மற்றும் டி.வி. புரடக் ஷன்), பி.ஏ. (ஜர்ன லிசம்) ஆகியவையும் ஊடகத்துறையில் சாதிக்க உதவும் படிப்புகளாகும்.

    நுண்கலை

    பேச்சுலர் ஆப் ஃபைன் ஆர்ட்ஸ் என்னும் 4 வருட ஏ.எப்.ஏ. பட்டப்படிப்பு சென்னை எழும்பூரிலுள்ள 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு ஓவியக் கல்லூரியிலும், கும்பகோணத்தில் உள்ள அரசு ஓவியக் கல்லூரியிலும் உள்ளது. துணி அலங்காரம், செராமிக் வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு, ஓவியம் என பல சிறப்புப் பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பை சொல்லித்தரும் இந்த கல்லூரிகளில் கல்விக் கட்டணமும் மிகக் குறைவு.

    ஆங்கில இலக்கியம்

    காலம் காலமாக நம் கலை அறிவியல் கல்லூரிகளில் இருந்து வருகிற ஒரு படிப்புதான் பி.ஏ.ஆங்கில இலக்கியம். இருப்பினும், சமீப காலமாக இதற்கான மவுசு கூடியிருக்கிறது. இவர்களை அதிகம் ஈர்க்கிற ஒரு துறை ஊடகம். இப்பொழுது நிறைய பன்னாட்டு நிறுவனங்களும் கலை, அறிவியல் கல்லூரி களுக்கு சென்று கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இவர்களை பணியில் அமர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

    உளவியல்

    பெண்களுக்கு அதிகம் பொருத்தமான துறைகளில் ஒன்று தான் உளவியல். இத்துறை சார்ந்த பி.எஸ்சி (உளவியல்) பட்டப்படிப்பு இன்று ஆண், பெண் இருபாலரும் விரும்புகிற படிப்பாக மாறியிருக்கிறது. மேலும், வேலை வாய்ப்பு களிலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
    குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. குழந்தை வளர்ப்பில் தந்தையானவர் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.

    குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.

    இரண்டாம் கடமை

    குழந்தையை குளிப்பாட்டுவது
    தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
    பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
    நாப்கின் மாற்றுவது.
    குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
    குழந்தையுடன் நேரம் செலவழிப்பது

    இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும்

    குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது என முழுமையாக தாயே குழந்தையை பராமரித்தால், தாயிடம் மட்டுமே குழந்தைக்கு நல்லுறவு இருக்கும். தந்தையை வேறு ஒரு ஆளாக குழந்தை புரிந்து கொள்ளும். தந்தையர்கள் சிலர் விளையாட்டுக்காக குழந்தையை மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதனாலும் குழந்தை தந்தையிடம் செல்லாது. தாயுடன் மட்டுமே நெருக்கம் காண்பிக்கும்.

    தந்தை செய்ய வேண்டியவைகள்

    குழந்தையுடன் விளையாடுதல்
    நல்லது சொல்லிக் கொடுத்தல்
    குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
    குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
    மரியாதை சொல்லி தருவது
    குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
    மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
    குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
    குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
    குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
    நல்ல தரமான கதைகளை சொல்வது

    தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.

    குழந்தைகளை இதை சாப்பிடகூடாது. அதை சாப்பிடகூடாது எனச் சொல்வதைவிட இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என எடுத்து சொல்ல வேண்டும். தன் சொந்த கருத்துகளை குழந்தையின் மீது திணிக்க கூடாது. கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு பிடிக்காததை செய்வதோ செய்ய சொல்வதோ கூடாது. குழந்தை துரித உணவுகளை ஆசைப்பட்டு கேட்டால், உடனே வாங்கி தர கூடாது. இதையெல்லாம் ஏன் சாப்பிட கூடாது என முதலில் சொல்லி பழக்குங்கள்.
    குழந்தைகளின் வளர்ச்சியில் நான்கு மாதம் முதல் இரண்டு வயது வரையுள்ள காலகட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் எத்தகைய வளர்ச்சிகள் உருவாகும் என்பதை இங்கு காணலாம்!
    குழந்தை கவிழ்ந்து கிடக்கும்போது தலை நிலையாக நிமிர்ந்து நிற்கும்.

    குழந்தையின் பெயரைக் கூறி அழைக்கும்போது குரல் வந்த திசைக்கு திரும்பி புன்னகைத்து எதிர்வினையாற்றும்.

    விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். கைகளைகொண்டு முகத்தை மூடித்திறக்கும் விளையாட்டில் ரசிப்புக்காட்டும்.

    குடும்பத்தினரின் முகபாவத்திற்கு ஏற்ப எதிர்வினையாற்றும். மகிழ்ச்சி, கவலை, வலி போன்றவைகளை சத்தத்தில் வெளிப்படுத்த முயற்சிக்கும்.

    அருகில் உள்ள பொருட்களை பற்றிப்பிடிக்க முயற்சிசெய்யும். கண்களையும், கைகளையும் ஒரே திசையில் செலுத்தும்.

    கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தால் ரசித்து சிரிக்கும்.

    சுயமாக கவிழ்ந்து விழுவது, பின்பு நிமிர்ந்து இயல்பு நிலைக்கு வருவது போன்றவைகளில் அடிக்கடி ஈடுபடும்.

    சுயமாக அமர முயற்சிக்கும். சப்போர்ட் கொடுத்தால் நிமிர்ந்து நிற்கும்.

    ஏழு மாதம் முதல் ஒரு வருடம் வரை

    கவிழ்ந்து, தவழ்ந்து செல்லும். யாருடைய துணையும் இன்றி உட்காரும். கட்டில், இருக்கை போன்றவைகளை பிடித்துக்கொண்டு எழ முயற்சிக்கும்.

    பெரியவர்கள் செய்வதை போன்று தானும் செய்ய விரும்பும். கண்ணடித்தால் அதுவும் கண்ணடிக்கும். கைதட்டினால் அதுவும் கைதட்டும்.

    வீட்டில் உள்ள பொருட்களின் உபயோகத்தை உற்றுப்பார்க்கும். சீப்பால் முடியை சீவவும், கப்பில் தண்ணீர் பருகவும் முயற்சி செய்யும்.

    தலையை இருபுறமும் ஆட்டி, மறுப்பை வெளிப்படுத்தும். டாடா காட்டும்போது பதிலுக்கு கையை வீசும்.

    அம்மா, அப்பா போன்ற வார்த்தைகளை பேசத் தொடங்கும்.

    பெற்றோரோ, தாத்தா- பாட்டி போன்றவர்களோ தன் அருகில் இருந்து விலகிச்செல்லும்போது அழும்.

    பொம்மைகளை பற்றிப் பிடித்து தூக்கும். ஒரு கையில் இருந்து மறு கைக்கு அதனை மாற்றவும் செய்யும்.

    ஒன்று முதல் இரண்டு வயது வரை

    தானாகவே எழுந்து நிற்கும். துணையின்றி மெல்ல மெல்ல அடிவைத்து நடந்துசெல்லும்.

    மற்ற குழந்தைகளோடு நெருக்கம் காட்டவும், அவர்களோடு சேர்ந்து விளையாடவும் விரும்பும்.

    நிறங்கள், வடிவங்களை அடையாளங்காணத் தொடங்கும்.

    குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை உணர்ந்துகொள்ளும். அந்தந்த பெயர்களை கூறும்போது அவர்களது முகத்தைப் பார்த்து சிரிக்கும்.

    `இங்கே வா..', `அதை செய்யாதே..' போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கு உடன்பட்டு நடக்கும்.

    வீட்டில் இருக்கும் பொருட்களின் பெயர்களை கூறும்போது அதனை சுட்டிக்காட்டும்.

    வீட்டில் உள்ள பெரியவர்கள் செய்யும் செயலை தானும் செய்ய விரும்பும். நாளிதழ்களை படிப்பவர்களின் அருகில் இருந்து தானும் அதனை பார்க்கும். துணிகளை மடிக்கும்போது தானும் அதை செய்ய முயற்சிக்கும்.

    மற்றவர்கள் பேசும் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கும். மூன்று நான்கு வார்த்தைகளை சேர்த்து பேசும்.

    இயங்கும் பொம்மைகளைவைத்து விளையாட விரும்பும். அதனை தூக்கிக்கொண்டு நடக்கும். பந்து விளையாட்டில் ஆர்வம் தோன்றும்.

    (இவை அனைத்தும் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி நிலையாகும். அந்தந்த காலகட்டத்தில் அது அதற்குரிய வளர்ச்சி நிலையை குழந்தைகள் எட்டாவிட்டால் உடனடி கவனம் செலுத்துங்கள். தேவைப்பட்டால் குழந்தை நல நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்)
    எந்த ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தினாலும் தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை கூட கவனமாக தவிர்த்து விடுவது நல்லது.
    தாய்மொழி தான் நம்முடைய உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தவும், கலை, பண்பாடு, பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுக்கவும் நமக்கு உதவும் கருவியாகும். பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி தமிழை கற்றுக்கொடுக்கிறார்கள் என கேட்ட  போது கிடைத்த வழிமுறைகள் இதோ...

    எந்த ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தினாலும் தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை கூட கவனமாக தவிர்த்து விடுவது நல்லது. ஸ்கூல் என்பதை பொதுவாக எல்லோரும் பயன்படுத்தினாலும் பள்ளிக்கூடம் என்று சொல்லிக்கொடுக்கலாம்.

    கதைகளை தமிழில் அதிகம் சொல்லிக்கொடுக்கலாம். இலக்கியங்களில் முக்கியத்துவம் பெற்ற கதாபாத்திரங்களை பற்றிய கதைகளை அதிகம் கூறலாம். புத்தகத்தில் இருக்கும் நல்ல  தமிழ் வார்த்தைகளை தொடர்ந்து கதைகளில் ஊடாகவே சொல்லி குழந்தைகள் அந்த வார்த்தைகளை பேச்சு மொழியில் பொருத்தி பார்க்க உற்சாகப்படுத்தலாம்.

    குழந்தைகள் தமிழ் மொழியை ஆர்வமாக கற்க வேண்டும் என்பதற்காக குட்டி குட்டி கதைகளை சொல்லி வரலாம்.

    வீட்டில் சமைக்கும் போது தமிழில் காய்கறிகள் மற்றும் சமையல் பொருள்களின் பெயர்களை அறிமுகப்படுத்தலாம். சில நேரங்களில் படக்கதைகள் உள்ள புத்தகங்களை வாங்கிக்கொடுத்து எழுத்துக்களை வாசிக்க சொல்லி கற்றுக்கொடுக்கலாம். பிள்ளைகளை தமிழில் கதை சொல்ல பழக்கலாம்.

    வீட்டில் முடிந்த வரை தமிழிலிலேயே பேச வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். டின்னர், பிரேக்பாஸ்ட் என்று ஆங்கிலத்தில் சொல்கிற வார்த்தைகளை கவனமாக தவிர்க்கலாம். எங்கெல்லாம் யாரிடமெல்லாம் தமிழில் பேச முடியுமோ அங்கெல்லாம் தமிழிலேயே பேசச் சொல்லலாம்.

    பாடல்கள் மூலம் இன்றைய குழந்தைகள் எளிதில் தமிழ்மொழியை கற்று கொள்கிறார்கள். எழுதுவது, பார்ப்பது, கேட்பது என்ற மூன்று வகையான கற்றல் வகைகளில் கேட்பதன் மூலம் குழந்தைகள் எளிதாக உள்வாங்கி கொள்கிறார்கள். கூடியவரை தான் நினைப்பதை தாய்மொழியிலேயே கூறுவதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம்.

    பிள்ளைகள் தனது தாய் மொழியான தமிழை நன்கு கற்க வேண்டும் என்பதில் பெற்றோர் உறுதியாக இருக்க வேண்டும். வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க, உட்காருங்க அப்படியென்று தமிழில் வரவேற்று உபசரிக்கவும் சொல்லிக் கொடுக்கலாம்.

    நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்களை கூட தமிழில் உறவுமுறை சொல்லி மாமா, அத்தை, அண்ணன், அக்கா எனறு தான் அழைக்க வேண்டும் என்று சொல்லி தரலாம். தினமும்  10 நிமிடமாவது திருப்பாவை போன்ற தமிழ் இலக்கியங்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்..

    எந்த ஒரு குழந்தைக்கும் பாடத்தின் மூலம் மட்டுமே ஒரு மொழியை கற்பித்து விட முடியாது. தமிழ் மொழியை கற்பிப்பதை விட உள்வாக்கும் சூழ்நிலைகளை அமைத்து தருவதே அதை கற்பிப்பதற்கான சிறந்த வழிமுறையாகும்.

    முதலில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி உரையாடுவது மிக முக்கியமானது. சிறு குழந்தைகள் பொதுவாகவே கதைகளை அதிகம் விரும்புவார்கள். ஆங்கிலம் கலக்காமல் கதை சொல்வதன் மூலம் அவர்கள் நிறைய வார்த்தைகளை கற்று கொள்வார்கள். கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள் என்றால் புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்லலாம்.

    பேசுவது, கதை சொல்வது மட்டுமல்லாமல், பொங்கல், தீபாவளி என்று விழா நாட்களில் அவை சார்ந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்தி வாசிக்க சொல்வது, போட்டிகள் நடத்தி பரிசளிப்பது என தமிழ் மொழி சார்ந்த ஆர்வத்தை தூண்டலாம்.
    நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பயமும், உற்சாகமும், கலந்த உணர்வு இருப்பது இயல்பானது. மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை கடைப்பிடிக்கக் கூடாதவை குறித்து இங்கே காண்போம்.
    கொரோனா கால முழு அடைப்பு முடிந்து படிப்படியாக பள்ளி கல்லூரிகள் திறக்கத் தொடங்கி உள்ளன. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பயமும், உற்சாகமும், கலந்த உணர்வு இருப்பது இயல்பானது. உங்களுக்கு இருக்கும் அதே உணர்வு உங்களின் சக மாணவருக்கும் இருக்கும். எனவே அனைவருடனும் சகஜமாக பழகுங்கள். குறிப்பாக முதலாம் ஆண்டு செல்லும் கல்லூரி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை கடைப்பிடிக்கக் கூடாதவை குறித்து இங்கே காண்போம்.

    உயர்நிலைப்பள்ளி வரை ஆசிரியர்கள் சிறு சிறு விஷயங்களிலும் உங்களை வழி நடத்தி வந்தனர். ஆனால் கல்லூரியை பொறுத்தவரை ஒவ்வொன்றுக்கும் நீங்களாகவே தயாராக வேண்டும்.

    படிப்பதற்கு என்று பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களின் ஓய்வு அறை அல்லது நூலகம் போன்ற எந்த இடத்தையும் படிப்பதற்கு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

    வகுப்புகளை புறக்கணிக்காமல் செல்வது மிக மிக முக்கியமானது. சக மாணவர்களின் தூண்டுதல் காரணமாக வகுப்புகளை புறக்கணித்தால் பாடங்களை புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.

    பள்ளிப்படிப்பை முடித்த போதிலும், பல மாணவர்களுக்கு திறம்பட படிப்பது எப்படி என்பது தெரியாதது வருத்தத்திற்குரியது. மனப்பாடம் செய்து எழுதும் முறையை தவிர்த்து கேள்விகள் கேட்டு புரிந்து கொண்டு படிக்க வேண்டும். வகுப்புகளில் கூறப்படும் குறிப்புகளை எடுத்துக்கொண்டு தெளிவில்லாத விஷயங்களை பற்றி விவாதித்து பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டுப் படிக்க வேண்டும்.

    வகுப்புகளில் அலைபேசிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வகுப்பு நேரங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களை சரி பார்ப்பது போன்ற கவனத்தை சிதற செய்யும் செயல்களை தவிர்க்க வேண்டும்.

    முதலாம் ஆண்டு மாணவர்கள் பெரும்பாலும் அதிக அளவில் செலவு செய்கிறார்கள் என்று புகார் கூறப்படுவதுண்டு . வீட்டில் இருந்து விலகி வாழ்வதால் கிடைத்த சுதந்திரம், நண்பர்களின் தூண்டுதல் போன்றவையே அதிகமாக செலவு செய்ய வைக்கிறது. எனவே தேவையானவற்றுக்கு மட்டுமே செலவு செய்யப்பழக வேண்டும்.

    முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் கால தாமதமாக தூங்குவதை தவிர்க்க வேண்டும். தூக்கம் சீர்கெடும் போது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போக நேரிடும். படிப்பிலும் கவனம் குறையும்.
    நம் வீட்டில் பெண்களை மரியாதையாக பாலின பேதங்கள் பார்க்காமல் நடத்தினால் ஆண் குழந்தைகள் இயல்பாகவே வெளியிடங்களில் பெண்களை கண்ணியமாக நடத்துவார்கள்.
    இன்றைய சமூக சூழலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க பெண்களை பற்றிய நம் மதிப்பீடுகளை குழந்தை பருவத்திலேயே ஆண்களின் மனதில் பதிய வைக்க வேண்டியது அவசியம். இதனை மையமாக வைத்தே சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களை மதிக்க ஆண் குழந்தைகளுக்கு எப்படி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    பெணகளை மதிக்கும் பழக்கம் வீட்டு பெரியர்களிடம் இருந்து தான் துவங்க வேண்டும். அப்போது தான் வளரும் குழந்தைகளுக்கும் அந்த உணர்வு இயற்கையாக வரும். இது கற்பிக்கும் விஷயமல்ல. குழந்தைகள் நம்மை பார்த்து கற்றுக்கொள்ளும் விஷயம். பேசும் விஷயங்களில் இருந்து, அவர்களை அணுகும் விதம் வரை அனைத்தும் ஒவ்வொரு பருவத்திலும் ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் நல்ல தொடுதல் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும்.

    குடும்பமாகட்டும், சமுதாயமாகட்டும் பெண்களுக்கு சம உரிமை தர வேண்டும் என்பதை ஆண்களுக்கு அடிப்படையிலேயே கற்றுத்தர வேண்டும். வீட்டில் எந்த கருத்து கேட்பதாக இருநதாலும் ஆண் குழந்தைகளின் கருத்துக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளின் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வந்ததும் பெண் குழந்தைகளிடம் பேசும் போதே மரியாதையுடன் பேச வேண்டும் என்று சொல்லி தரவேண்டும்.

    எங்கு சென்றாலும் எந்த இடத்திலும் பெண்களை மரியாதை குறைவாக பேசக்கூடாது என்பதை சொல்லித்தர வேண்டும்.

    சமூகத்தில் ஊடகங்களில் திரைப்படங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி உங்கள் மகனுடன் தொடர்ந்து உரையாட வேண்டும். மிக முக்கியமாக பெண்களை இழிவாக சித்தரிக்கும் சில திரைப்படங்களை ஆண் குழந்தைகளை பார்க்க விடக்கூடாது.

    நம் வீட்டில் பெண்களை மரியாதையாக பாலின பேதங்கள் பார்க்காமல் நடத்தினால் ஆண் குழந்தைகள் இயல்பாகவே வெளியிடங்களில் பெண்களை கண்ணியமாக நடத்துவார்கள்.

    பெண்களை தவறான கண்ணோத்தில் பார்க்கக்கூடாது. அது பாவச்செயல் எனவும், சக பெண்களை நல்ல தோழியாக கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் சொல்லி வளர்க்க வேண்டும்.
    மொழியியல் என்பது மொழி குறித்து படிக்கும் அறிவியல் கல்வி. இது ஒரு மொழியின் வடிவம், வளர்ச்சி, மற்ற மொழிகளுடன் உள்ள தொடர்பை விளக்குகிறது.
    உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் சர்வதேச அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் இந்தத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான துறைதான் மொழியியல். மொழியியல் என்பது மொழி குறித்து படிக்கும் அறிவியல் கல்வி. இது ஒரு மொழியின் வடிவம், வளர்ச்சி, மற்ற மொழிகளுடன் உள்ள தொடர்பை விளக்குகிறது. இது ஒரு தனித்த மொழியைப் பற்றி மட்டும் படிப்பதல்ல. மனிதர்கள் பேசும் அனைத்து மொழிகள் குறித்தும் கற்பதாகும்.

    மொழிகளின் ஒலி, வடிவம், பொருள், செயல்பாடு குறித்து பயில்வது. இந்தத் துறை மொழியை ஆய்வு செய்து விளக்குகிறது. மொழி குறித்த அறிவியல் ரீதியான கல்வி பெறுபவரையே மொழியியலாளர் (linguists) என்கிறோம். இவர்கள் மொழிகளின் அனைத்து வகைகளிலும், உலகின் அனைத்து மொழிகளிலும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பர். சமூக அமைப்பு, புவி மண்டலம், வரலாற்று காலம், மொழிக்கும் மனதுக்கும் உள்ள உறவு உள்ளிட்ட பல கருத்துக்களில் மொழியியலாளர்கள் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர்.

    மொழியியல் கல்வி 3 முக்கியப் பிரிவுகளை கொண்டது. அவை: சின்க்ரோனிக் மற்றும் டயாக்ரோனிக், தியரிட்டிகல் மற்றும் அப்லைட், கன்டெக்சுவல் மற்றும் இண்டிபென்டன்ட். இதில், சின்க்ரோனிக் என்பது மொழியின் தற்போதைய நிலை குறித்தும், டயாக்ரோனிக் என்பது மொழிகளின் வரலாறு, அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் படிப்பதாகும். தியரிட்டிகல் என்பது ஒரு மொழி குறித்த விளக்கத்திற்கான வரம்புகளையும், அதன் உலகளாவிய கோட்பாடுகளையும் உருவாக்குவது.

    `அப்லைட்' என்பது மொழியின் செயல்பாடு மற்றும் உரையாடல் குறித்த கல்வியாகும். இது வெறுமனே கோட்பாட்டு மொழியியல் பயன்பாடாக மட்டும் இல்லாமல், அந்த மொழிக்கான ஒழுங் கமைப்பு மற்றும் தத்துவங்களைக் கொண்டதாக இருக்கும்.

    ``கன்டெக்சுவல்'' என்பது ஒரு மொழி எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு உணரப்படுகிறது, அதன் செயல்பாடுகளால் அது உலகோடு எவ்வாறு ஒன்றிப் போகிறது என்பதை விளக்குவது. இண்டிபென்டன்ட் என்பது ஒரு மொழி தொடர்பான புறநிலைகள் இல்லாமல், சொந்த நலனை மட்டுமே அந்த மொழி கொண்டிருப்பதாகும்.

    மொழியியல் கோட்பாட்டில், மொழியின் வேறுபட்ட ஒலிகள், அடிப்படை ஒலிமுறை, வார்த்தை வடிவம், வாக்கியங்களில் வார்த்தைகளின் ஒருங்கமைப்பு, வார்த்தை களின் பொருள், உச்சரிப்பு, மொழியின் நளினம் ஆகியவை இடம்பெறும். பயன்பாட்டு மொழியியல் மொழி கற்பித்தலுக்கு மட்டுமல்லாமல், பேச்சு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

    மருத்துவ அறிவியலில், உளவியல் மற்றும் நரம்பியலுடன் மொழியியல் தொடர்புடையதாக உள்ளது. எனவே, மொழியியல் கற்பது, கல்வி, பதிப்பகம், ஊடகம், சமூக சேவை, தகவல் தொடர்பு, கணினி மொழி, குரல் பகுப்பாய்வு, பேச்சுக் கோளாறு மற்றும் மொழி தொடர்பான அனைத்து பணியிடங்களிலும் மதிப்பு மிக்கதாக உள்ளது. தற்போது, பள்ளி, கல்லூரி, பல் கலைக்கழகங்களில் அயல்மொழி பாடங்கள், பயிற்சிகள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருவதால், மொழியியல் படிப்பவர்களுக்கு கல்வித் துறை மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். பல்வேறு அரசு முகமைகள் மொழி பயிற்சித் திட்டங்களை மேற் பார்வையிட மொழியியலாளர்களை பணியில் அமர்த்துகின்றன. குழந்தைகளுக்கான மொழியியல் குறைபாடுகளை மதிப்பிடுவது, சரி செய்வது, மேம்படுத்துவதில் மொழியியலாளர்களின் பங்களிப்புக்கான தேவை வருங்காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
    குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
    இன்றைய தலைமுறை குழந்தைகள் வெளி உலக தொடர்புகளை குறைத்துக்கொண்டு ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற இணைய உலக வலைப்பக்கங்களுக்குள் மூழ்கி கிடக்கிறார்கள். கணினி யுகத்திற்கேற்ப தகவல் தொடர்புகளை வளர்த்துக்கொண்டாலும் சக மனிதர்களை அணுகும் விதம் சார்ந்த தகவல் தொடர்பு திறனில் பின்தங்கி இருக்கிறார்கள். நெருங்கிய உறவினர்களிடம் பேசுவதற்குகூட தடுமாறுகிறார்கள். சில சமயங்களில் மற்றவர்கள் மனம் நோகும்படியான வார்த்தைகளையும் உச்சரித்து விடுகிறார்கள்.

    குழந்தைகள் டிஜிட்டல் திரைகளில் பார்க்கும், கேட்கும் விஷயங்கள் வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. மரியாதை கேடான அணுகுமுறை, தேவையற்ற சொற்களை பயன்படுத்துதல், மோசமான வார்த்தைகளை உச்சரித்தல், தடித்த வார்த்தைகளை உபயோகித்தல் போன்ற செயல்பாடுகளால் பெற்றோரை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள்.

    குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.

    குழந்தைகளிடம் மரியாதையான தகவல் தொடர்பு திறனை வளர்க்க பெற்றோர் செய்யவேண்டிவை:

    குழந்தைகள் வளரவளர நல்ல விஷயங்களையும் சுயமாக கற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து அஜாக்கிரதையாக இருந்தால் அவர்களின் குணாதிசயம் மாறிப்போய்விடும். பெரும்பாலான குழந்தைகள் ஸ்மார்ட்போனில்தான் நேரத்தை செலவளிக்கிறார்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைவாக இருக்கிறது. அதற்கு பெற்றோர்தான் காரணம். குழந்தைகளுடன் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவதன் மூலம் அவர்களின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்தலாம். பெற்றோர் பேசும் வார்த்தைகளை உள்வாங்கித்தான் குழந்தைகள் மொழித்திறனை வளர்த்துக்கொள்வார்கள். மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும்? அவர்களை எப்படி அணுக வேண்டும்? என்பதை பெற்றோர் தங்கள் கடமைகளில் ஒன்றாக கருதி சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க பழகிக்கொள்வார்கள்.

    குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பதை விட நண்பராக இருப்பதுதான் சிறந்தது. அதன் மூலம் தகவல் தொடர்பை எளிமைப்படுத்தி விடலாம். புதிய சொற்களை கற்றுக்கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்றவிதத்தில் சொல்லகராதியை பின்பற்ற வைக்கலாம். குழந்தைகள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினால் கண்டிப்பு காட்டி புரிய வைக்கலாம். எது தவறு? எது சரியானது? என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் வேலை. தங்களை விட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடமும் மரியாதையோடுதான் பேச வேண்டும் என்ற பழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு முன் மாதிரியாக பெற்றோர் விளங்க வேண்டும். பேச்சில் தெளிவு, வார்த்தைகளில் கண்ணியம், மற்றவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் பாங்கு, மரியாதையான அணுகுமுறை உள்ளிட்ட நேர்மறையான தகவல் தொடர்புகளை பெற்றோர் நடைமுறைப்படுத்தவேண்டும். அதை பார்த்து குழந்தைகளும் கற்றுக்கொள்ளும்.

    குழந்தைகளின் நடத்தையில் குறைபாடு இருந்தால் அதனை தவறாமல் சுட்டிக்காட்ட வேண்டும். குழந்தைகளின் பேச்சுக்கள் மற்றவர்களை காயப்படுத்தும் விதத்தில் இருந்தால் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். இனி அதுபோல் ஏன் பேசக்கூடாது என்பதையும் அவர்களுக்கு புரியவையுங்கள். எளிமையாக அவர்கள் புரிந்துகொள்ள தக்கவகையில் வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும்.

    குழந்தைகள் தகாத வார்த்தைகளை பேசினால் கடுமை காட்டக்கூடாது. அந்த வார்த்தைகள் எந்த அளவிற்கு மோசமானவை என்பதை புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் மறுபடியும் அதுபோன்ற வார்த்தைகளை உச்சரிக்க மாட்டார்கள்.

    குழந்தைகள் தவறு செய்தால் அதனை ஒப்புக்கொள்ளும் வரை கடுமையாக நடந்து கொள்ளுங்கள். பொய் பேசினால் கண்டிக்க தவறாதீர்கள். ‘உன்னிடம் நேர்மையான பதில்களை எதிர்பார்க்கிறேன்’ என்று கண்டிப்புடன் கூறுங்கள். நேர்மையாக நடந்து கொள்ளும்போது அவர்களை பாராட்டுங்கள்.

    பெற்றோர்கள் செல்போன்களில் மூழ்கிப்போய்விடக் கூடாது. தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் உரையாடவேண்டும். அவர்களின் விருப்பங்களை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களை மனம் விட்டு பேச அனுமதிப்பதும் அவசியம். இவ்வாறு செய்தால் குழந்தைகளிடத்தில் முறையான தகவல் தொடர்புத் திறன் வளரும்.
    உங்க குழந்தைக்காக ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்யும் பெற்றோரா நீங்கள்? அப்ப இந்த பதிவு உங்களுக்காக தான் பெற்றோர்களே....
    சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள். அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருப்பார்கள். குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். அப்படி உங்க குழந்தைக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோரா நீங்கள்? நீங்கள் இப்படி நடந்து கொள்வதால் என்ன நன்மைகள் உண்டாகிறது என்பதை பார்க்கலாம்.

    ஒரு பெற்றோராக உங்கள் அனுபவங்கள் எப்பொழுதும் தனித்தன்மை உடன் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நல்ல பெற்றோரின் முக்கிய தூண்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    * பெற்றோர் குழந்தைக்கு ஒரு உறவாக இருக்க வேண்டும். குழந்தைகளை தனித்துவமான நபராக கருத வேண்டும். அவர்கள் உங்களுக்கு ஏதேனும் விஷயங்கள் கற்பித்தால் அதையும் ஏற்றுக் கொள்ள மனம் திறந்திருக்க வேண்டும்.

    * ஒரு பெற்றோராக உங்கள் ஈகோ, ஆசைகள் மற்றும் இணைப்புகளை விட்டு விட வேண்டும்.

    * உங்க குழந்தைகள் மீது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நடத்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரு பெற்றோராக அதை எப்படி சொல்லிக் கொடுக்கலாம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    * நேரத்திற்கு முன்னால் திட்டமிட்டு நேர்மறையான எண்ணங்களை உங்க குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

    * குழந்தைகள் அவர்கள் போராட்டத்தின் மூலமே வளர வேண்டும். பெற்றோரின் நோக்கம் உங்கள் குழந்தையை மகிழ்விப்பது மட்டுமல்ல.

    விழிப்புடைய பெற்றோர்கள் எப்பொழுதும் நினைவாற்றலுடனும், சுய பிரதிபலிப்புடனும் நடந்து கொள்வார்கள். இது பெற்றோரின் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.

    விழிப்புடைய பெற்றோர்கள் குறைவான எரிச்சலைக் கொண்டு குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவழிக்க முன் வருவார்கள். விழிப்புடைய பெற்றோர்கள் குழந்தைகளுடான தகவல் தொடர்புகளை கூடுதலாக வைத்து இருப்பார்கள். குழந்தைகளை தனிபட்ட நபராக ஏற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் குழந்தையுடன் ஒரு குறிப்பிட்ட மரியாதையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இது குழந்தைக்கு ஆரோக்கியமான உறவு பழக்கத்தை உருவாக்க உதவுகிறது. இது அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவி செய்கிறது.

    இருப்பினும் நீங்கள் இப்படி இருப்பது எல்லா நேரங்களிலும் சிறந்த தீர்வாக இருக்காது. நீங்கள் ஒரு சுய பிரதிபலிப்பு மற்றும் கட்டுப்பாட்டை அடைய நிறைய நேரம் ஆகலாம். உங்கள் குழந்தை சுயமாக நடந்து கொள்வது என்பது ஒரே நாளில் நடக்காது. விழிப்புடைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தாங்கள் செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள அனுமதிக்கின்றனர். இருப்பினும் குழந்தையை தோல்வியடைய அனுமதிப்பது சில நேரங்களில் அது பெற்றோரை கடினமாகவும் குழப்பமாகவும் மாற்றும். குழந்தை தோல்வியை அனுபவிப்பதை பார்ப்பது பெற்றோருக்கு கடினம் தான்.

    விழிப்புடைய பெற்றோர்களை பற்றி பேசுவது எளிது. ஆனால் அந்த குணநலன்களை நடைமுறையில் கடைபிடிப்பது சற்று கடினம். நீங்களும் விழிப்புடைய பெற்றோராக இருக்க என்ன செய்யலாம்? ஆத்திரத்துடன் செயல்படாதீர்கள். உடனடி தண்டனையை வழங்குவதற்கு பதிலாக அல்லது குழந்தையின் மீது பழியை சுமத்தும் முன் ஒரு நொடி மூச்சு விடுங்கள். ரிலாக்ஸ் ஆகி கொள்ளுங்கள்.

    உங்கள் சொந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். உங்க குழந்தைகளை அவர்கள் சொந்தமாக கண்டறிய அனுமதிக்க வேண்டும்.
    குழந்தைகளின் அமைதியை அலட்சியப்படுத்தாமல், அவர்களுடன் பேசி, தெளிவுப்படுத்தி அமைதி என்ற இருளில் இருந்து அவர்களை கலகலப்பான வெளிச்சத்திற்குள் கொண்டு வந்துவிடவேண்டும்.
    எங்கள் குழந்தைகள் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு அமைதியாக இருக்கும்’ என்று  ஆனந்தமாக சொல்லும் பெற்றோர், ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகள் என்றாலே அவை சுட்டித்தனத்தோடு வளர்வதுதான் இயல்பு. குழந்தைகள் சுட்டித்தனம் செய்தால்தான் அவைகளின் வளர்ச்சி இயல்பாக இருக்கிறது என்று அர்த்தம். அப்படி சுட்டித்தனம் செய்யாமல் மகா அமைதியாக இருக்கும் குழந்தைகளின் மனோவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் போதுமான அளவு இருக்கிறதா என்று கண்காணிக்கவேண்டும்.

    பொதுவாகவே பிரச்சினைக்குரிய குடும்ப சூழலில் வளரும் குழந்தைகளின் மனோவளர்ச்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. குழந்தைக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். குழந்தையை எதிரில் வைத்துக் கொண்டு பெற்றோர் வாக்குவாதம் செய்வது, சண்டை போடுவது இவையெல்லாம் குழந்தையின் மன நிலையை பாதித்து, குழந்தையை இயல்புக்கு மாறாக அமைதியாக்கி விடும். குழந்தைகள் குறும்புத்தனங்கள் செய்து, மகிழ்ச்சியாக வளர அவைகளின் குடும்பசூழல் நன்றாக இருக்கவேண்டும். அது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.

    தனிமை குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. அளவு கடந்த தனிமை குழந்தைகளை அமைதியாக்கி விடும். குழந்தைகள் பேசவும், பழகவும், சிந்திக்கவும் கற்றுக் கொள்வது மற்றவர்களை பார்த்துதான். யாருமே இல்லாத தனிமையில் அவர்கள் வெறுமையை உணர்வார்கள். அந்த வெறுமையின் அழுத்தம் அவர்களை மவுனமாக்கிவிடும். இந்த வகை அமைதி அவைகளின் அறிவு வளர்ச்சி, செயல்திறனை பாதிக்கும். அதனால் குழந்தைகளை மற்றவர்களோடு சேர்ந்து கலகலப்பாக வாழ பழக்குங்கள்.

    அதிகமான கண்டிப்பும் குழந்தைகளை அமைதியாக்கி, மூலையில் முடக்கிவிடும். கண்டிப்பதாக நினைத்துக்கொண்டு மற்ற குழந்தைகள் முன்வைத்து அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.

    தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளையும் குழந்தைகளால் விளக்கிச் சொல்ல முடியாது. ஏதோ ஒரு அசவுகரியம் என்பது மட்டுமே குழந்தைகளுக்கு புரியும். அதை வெளிப்படுத்த முடியாமல் இயல்புக்கு மாறாக அவை அமைதிகாக்கும். அந்த மவுனத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ளாமல் அவர்களை வெளியே அழைத்துச் செல்வது, உற்சாகப்படுத்த முயற்சி செய்வது எல்லாம் வீண். குழந்தைகளிடம் அன்பாக விசாரித்து அமைதிக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை பெறசெய்யவேண்டும்.

    தன்னை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குழந்தைகளின் மனதை பாதிக்கும். தனக்கு ஏற்பட்ட பாதிப்பை மற்றவர்களுடன் எப்படி பகிர்ந்துகொள்வது என தெரியாமல் குழந்தைகள் அமைதிகாக்கும். அது பாலியல்ரீதியான பாதிப்பாககூட இருக்கலாம். குழந்தைகள் தங்கள் நண்பர்களோடு ஆர்வமாக விளையாடுவார்கள். அவர்களுக்குள் அவ்வப்போது சண்டையும் ஏற்படும். சண்டையில் மனதளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் அதை பெற்றோரிடம் சொன்னால் மீண்டும் விளையாட அனுப்பமாட்டார்கள் என்று பயந்தும் அமைதியாகிவிடுவதுண்டு. விளையாட்டில் ஏற்படும் தோல்வி, பின்னடைவு, மற்ற குழந்தைகளின் கேலி, கிண்டல் போன்றவைகளும் குழந்தைகளை மவுனமாக்கிவிடும்.

    விவரம் தெரி்ந்த மனிதர்கள் அமைதியாக இருப்பது ஒரு அற்புதமான விஷயம். அமைதி என்பது மனிதனை பண்படுத்தும் ஞானம். ஆனால் அறியாப்பருவ குழந்தைகளுக்கு அமைதி என்பது பல்வேறு மனப் போராட்டங்களால் ஏற்படும் அவஸ்தை. ஒவ்வொரு அமைதிக்கு பின்னும் பல ஆழ்ந்த காரணம் அடங்கி இருக்கும். அவை அனைத்துமே அவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதனால் குழந்தைகளின் அமைதியை அலட்சியப்படுத்தாமல், அவர்களுடன் பேசி, தெளிவுப்படுத்தி அமைதி என்ற இருளில் இருந்து அவர்களை கலகலப்பான வெளிச்சத்திற்குள் கொண்டு வந்துவிடவேண்டும்.

    குழந்தைகள் தங்களுக்கு தேவையான முக்கியத்துவம் கிடைக்காவிட்டாலும் அமைதியாகிவிடுவார்கள். அவைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத்தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக்கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவையற்ற ஆயுதமாகும்.
    மாணவர்களின் கைகளில் தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.
    இந்தியாவில் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது படிப்பறிவின்மை. நாம் பெற்ற செல்வங்களில் குறையாத செல்வம் என்று சொன்னால் அது கல்வி ஒன்றாகத்தான் இருக்க முடியும். அறியாமையை போக்க வல்லது கல்வி ஒன்று தான். அதனால் தான் பெருந்தலைவர் காமராஜர், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைத் தகர்க்கக்கூடிய சக்தி கல்விக்கு மட்டும் தான் உண்டு என்ற அடிப்படையில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதன் மூலம் கல்விக்கூடங்கள் தமிழகத்தில் வளர்ச்சியடைந்துள்ளன.

    இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில் தான் உள்ளது. மாணவன் என்றால் மாண்-அவன் என்று பிரிக்கலாம். மாண் என்றால் பெருமை. மாணவன் என்றால் பெருமைக்குரியவன், மாண்புடையவன் என்று பொருள். அதனால்தான் மாணவர்கள் என்று இந்த பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றார்கள். பெருமை மிக்க திறமைகள் இப்பருவத்தில் தான் கிடைக்கும்.

    மாணவர்களின் கைகளில் தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது. மாணவர்களின் சுயதிறன் திண்மை பெற வேண்டும் என்றால் கல்வியின் தரம் உயரவேண்டும். முக்கியமாக விஞ்ஞானம், கணிதம், கணினி பயிற்சி கற்று புதிய படைப்புகளை உருவாக்கவேண்டும். கல்விப்புரட்சி ஒன்றுதான் மாணவர்களின் சிந்திக்கும் சக்தியை வளர்க்க செய்யும்.

    தொட்டனைத்தூறும் மணற்கேணிபோல் தோண்ட தோண்ட பெருக்கெடுக்கும் வல்லமை படைத்தது படிப்பறிவு ஒன்றுதான். படிக்கும் போதே நாம் ஒரு லட்சியத்தை நோக்கி பயணிக்கவேண்டும். லட்சிய பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடைசெய்யக்கூடும். ஆனால் தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.

    மாணவர்-ஆசிரியர் இடையே அத்தகைய அறிவு பரிமாற்றம் ஏற்படவேண்டும். அதனால் தான் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று கூறப்படுகிறது. புதிய கல்வித்திட்டம் அறிவொளி மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கட்டும். இன்றைய மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். ஏனெனில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது. சுதந்திர இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம், நாட்டை வல்லரசாக உயர்த்துவோம் என்று உறுதிக்கொள்ளுங்கள்.
    குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்று கொடுக்க வேண்டும். அதை குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும்.
    குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம். குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்று கொடுக்க வேண்டும். அதை குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும். சின்னச்சின்ன நல்ல பழக்கங்கள் தான் உயர்ந்த இடத்தை ஒரு மனிதனுக்கு அளிக்கும்.

    படிப்பு மற்றும் பணம் மட்டும் ஒருவன் மீது மதிப்பை ஏற்படுத்தி விடாது. மாறாக நல்ல பண்புகள் தான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையும் பெற்றுத்தரக்கூடியது. அதிகாலையில் எழுவது, தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது, சுத்தம் பேணுவது, பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்பது போன்ற பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு குழந்தையும் நல்லவர்களாக வளர காரணமாக இருந்திடும்.

    அதிகாலையில் எழுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உரிய நேரத்தில் தூங்க செல்வதும் முக்கியமானது. அதேபோல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுக்க வேண்டும். உணவை மீதமாக்காமல் தேவையான அளவுக்கு வாங்கி சாப்பிடவும் கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள பழக்க வேண்டும். அதை அவர்கள் எவ்வளவு சரியாக செய்து முடிக்கிறார்கள் என்பதையும் உடன் இருந்தே கவனிக்க வேண்டும். தவறு செய்கிறபோது அதை திருத்தி கொள்ளவும், தோல்வியில் இருந்து மீண்டு வரவும் கற்றுக்கொடுக்க வேண்டும். உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரச்செய்ய வேண்டும். உடல் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்து ஆகும். அதற்கு சேதாரம் ஏற்பட்டால் வாழ்வு சுருங்கி விடும்.

    எனவே உடற்பயிற்சிக்கும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதை குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக கற்றுக்கொடுக்க வேண்டும்.

    ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது தான் மிகமிக முக்கியமானது. அவர்கள் எந்த ஒன்றில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதில் அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். விருப்பமான துறைகளில் பணியாற்றும்போது தான் ஒருவரின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். எனவே பெரியவர்கள் முடிவுகளால் மட்டுமே வளர்கிற குழந்தைகள் சுயமாக சிந்திப்பது இல்லை. அது மிகவும் ஆபத்தானது. எனவே சுயமாக சிந்தித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு எப்போதும் திறந்து இருக்க வேண்டும். அதுதான் அதனை வெற்றியாளனாக உயர்த்தும்.
    ×