என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    நாம் பயணம் செய்யும் போது வீதியின் ஓரங்களில் விளையாடி கொண்டும், வேலைகள் செய்து கொண்டும் இருக்கும் சிறார்களை பார்த்து இருப்போம். இவர்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி காண்போம்.
    நாம் பயணம் செய்யும் போது வீதியின் ஓரங்களில் விளையாடி கொண்டும், வேலைகள் செய்து கொண்டும் இருக்கும் சிறார்களை பார்த்து இருப்போம். இவர்களை தெரு குழந்தைகள் என்று அழைப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை வீதிகளில் வாழ்கிறார்கள். மென்மையான உள்ளம் உடைய இந்த இளம் பிஞ்சுகள் கைகளில் தட்டுகளை ஏந்தி உணவு கிடைக்குமா என தினமும் காத்து இருக்கிறார்கள். இவர்களின் கண்ணீரை துடைத்து அச்சத்தை போக்க தாயின் அரவணைப்பு இவர்களுக்கு இல்லை. இவர்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி காண்போம்.

    வறுமை என்பது ஒருவன் செய்யாத தவறுக்காக பெறும் தண்டனை போன்றது. இயற்கை பேரழிவுகள் பெற்றோரின் அறியாமை, வறுமை, பஞ்சம் போன்ற
    காரணங்களால் இவர்கள் வீதிக்கு வருகிறார்கள். அரசின் கணக்கெடுப்பில் இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கான சிறார்கள் வீதியில் வாழ்கிறார்கள். நாம் உண்ணும் உணவு சுவையாக இருக்கிறதா என்பதை பார்த்து நாம் உணர்கிறோம். ஆனால் தெரு குழந்தைகளில் உணவு இல்லாமல் இறந்து போகிறார்கள்.

    கைகளை தலையணையாகவும், காகித அட்டைகளை மெத்தையாகவும், கோணிப்பைகளை போர்வையாகவும் போர்த்திக்கொண்டும் தெரு ஓரங்களில் படுத்து அடிமையாகிறார்கள். சிறு வயதிலேயே போதைக்கு அடிமையாகிறார்கள். அதிக வேலை, குறைந்த பணம். இதுவே இவர்கள் வேலை செய்யும் இடங்களில் இவர்களின் நிலைமை, தூய்மை பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால் பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.

    வறுமை என்பது கடினமானது தான். ஆனால் ஒருவருக்கு உணவு அளிப்பது என்பது கடினமானது அல்ல. இவர்களின் தேவைகளை அறிந்து அரசு இவர்களுக்கு உதவ வேண்டும். மனிதன் என்பவன் மனிதன் தான் அவன் எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தெரு குழந்தைகள் பற்றி விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்.

    வறுமையில் வாழும் இவர்களின் வாழ்க்கையை மாற்ற அவர்களுக்கான சரியான கல்வி, பாதுகாப்பான சுற்றுசூழல், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்க அனைவரும் இணைந்து இவர்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்.

    லா.செர்லின் லின்சி, முதலாமாண்டு உயிரியல் அறிவியல் துறை,

    கிரேஸ் கல்வியியல் கல்லூரி,

    படந்தாலுமூடு.
    நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். எனவே சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
    நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும்.

    இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோருக்கு உதவுதல் அதாவது வீட்டு வேலைகளை செய்தல், கிராமங்கள் என்றால் ஓய்வு வேளையில் வயல்களுக்கு சென்று தந்தைக்கு உதவுதல் போன்றவைகளில் இன்றைய மாணவர்கள் ஈடுபடுதல் அவசியம்.

    மனித நேயம் வளர மாணவர்கள்தான் சீரிய முறையில் பாடுபடவேண்டும். சமூக தொண்டுகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். சமூக தொண்டுகளில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும். தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவேண்டும். மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமுதாய தொண்டாற்றினால் வெற்றி பெறுவது உறுதி. கிராமங்களில் உள்ள முட்புதர்களை வெட்டி அழிக்க வேண்டும்.

    குளம், குட்டைகளை தூரிவாரியும் ஆழப்படுத்தலாம். இதன் மூலம் மழை பெய்யும் போது மழை நீரை சேமிக்க முடியும். வயதானவர்கள், கண் பார்வையற்றவர்கள் சாலையை கடக்க முற்படும்போது நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்து கூறவேண்டும். விவசாயிகளிடம் அவர்களுக்கு அறியாத வேளாண் தொழில்நுட்பங்களை விளக்கி கூறி பயிர் விளைச்சலுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்குவதாலும், குப்பைகளை சாலையில் கொட்டுவதாலும் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் பொழுதுபோக்கு நேரத்தை வீணடிக்காமல் சமுதாய பணிகள் செய்வதில் ஈடுபட்டால் தேவையில்லாத வீண்பிரச்சினைகளில் சிக்காமல் நல்வழியில் செல்வதற்கு வழிவகுக்கும். இன்னும் சில மாணவர்கள் தங்கள் படிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் செல்போனில் இணையதளம் மூலம் கழிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. மாறாக சமூக விரோத செயல்களில் ஈடுபட மாணவர்களை தூண்டுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கை சீர்கேடாகிறது. இளம் வயதில் படித்து முன்னேறாமல் தவறான எண்ணங்கள் தோன்றி திசை மாறி செல்கின்றனர்.

    எனவே மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு அறிவு செல்வத்தை தேடி செல்லவேண்டும். இளம் பருவத்தில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுங்கள். நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் ஆர்வம் காட்ட மாணவர்கள் முயல வேண்டும். நாட்டுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்கள் எண்ணி செயலாற்ற வேண்டும். ஏனென்றர்ல் மாணவர்களை நம்பித்தான் வருங்காலம் இருக்கிறது.

    இதனை ஒரு போதும் மறக்கலாகாது. நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். ஏனென்றால் நாம் இல்லாமல் நாடு இல்லை. சிறு துளி பெரு வெள்ளம் போல் நாம் ஒவ்வொரு வரும் செய்யும் சிறு தொண்டு பெரு தொண்டாய் நாட்டை வளப் படுத்தும். எனவே சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
    குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாகத் தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்.
    தற்போது நிறைய மாணவர்கள் அதிக உடல் எடையுடனும் ரத்த அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள், மருத்துவர்கள். பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் எய்தி விடுகிறார்கள். சிலருக்கு ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சிக்கல், திருமணத்துக்குப் பிறகும் அவர்களை விடாமல் துரத்துகிறது.

    குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாகத் தவிர்த்துவிடுவது, இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

    குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாகத் தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரையை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதை தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும். முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படும். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.
    15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
    நடக்க ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு வழிகளை பின்பற்றுவார்கள். சில நேரங்களில் மற்ற குழந்தைகளை பார்க்கும் போது நீங்கள் அவர்களோடு ஒப்பிட்டு வருத்தம் அடைவீர்கள். ஆனால் 15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    வாக்கரை தவிர்த்து விடுங்கள். உங்கள் குழந்தையின் இயல்பான, சீரான, நிலையான வளர்ச்சி தடைப்படும்.

    குழந்தைகள் நடை பயில்வதில் அவர்களின் எடை ஒரு காரணமாக இருக்கின்றது. குழந்தைகள் பருமனாக இருந்தால் சிறிது தாமதமாகலாம்.

    முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தை வேகமான நடை பயில்கிறார்கள் என்று நம்பப்படுகின்றது. இதற்கு காரணம் உடன்பிறந்தவர்களின் ஊக்கத்தால் சீக்கிரமே நடை பயில்கிறார்கள்

    சில குழந்தைகள் நடக்க ஆரம்பித்த பிறகும், வேகமாக செல்ல தவழ்வார்கள். இது முற்றிகும் இயல்பானது. தங்களுக்கு பிடிமானம் கிடைக்கும் வரை இதை பின்பற்றுவார்கள் அதன் பிறகு எழுந்து வேகமாக நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

    குழந்தைகள் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களை நிறுத்தவே முடியாது. நிறுத்தவும் கூடாது. வீட்டில் அவர்களுக்கு பெரும்பாலான பொருட்களை எடுக்க முடியும். அதனால் குழந்தையின் செயலையும், இயக்கத்தையும் தடுக்காமல் வீட்டை அவர்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொடுப்பதே அவர்கள் வளர்ச்சி சிறப்பாக அமைய வழிவகுக்கும்.
    பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்விலும் வெவ்வேறு காலகட்டங்களில் நேரங்களில் அவர்களின் மைற்கல்லை அடைவார்கள். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு நாம் வருத்தம் அடைய அவசியமில்லை.
    குழந்தை பிறந்த முதல் வருடத்தில் அவர்களின் ஒவ்வொரு அடுத்த கட்ட முன்னேற்றங்களும், இயக்கங்களும் நம்மை வியக்க வைக்கும். இதில் அம்மாக்களுக்கு நம் குழந்தை வளரும் போது இன்னும் குப்புற விழவில்லையே, தவழவில்லையே, நடக்கவில்லையே என்ற ஏக்கமும் இருக்கும். பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்விலும் வெவ்வேறு காலகட்டங்களில் நேரங்களில் அவர்களின் மைற்கல்லை அடைவார்கள். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு நாம் வருத்தம் அடைய அவசியமில்லை.

    குழந்தை ஒன்பதாம் மாதத்தை கடந்து செல்லும் போது பல அறிகுறிகள் காணலாம். ஆனால் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதால், அறிகுறிகள் மாறுபடலாம்.

    * உங்கள் குழந்தை நடை போட முயற்சிக்கும் போது, அருகில் உள்ள மர பெஞ்ச், கட்டில் போன்ற மரச்சாமான்களை பிடித்து கொண்டு எழுந்து நிற்க முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த அறிகுறிகள் மூலம் உங்கள் குழந்தை ஒரு மாத காலத்திற்குள் நடக்க முயற்சிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

     * உங்கள் குழந்தை 7 அல்லது 8 மாதம் இருக்கும் போது சுற்றுவார்கள் அதாவது வட்டம் அடிப்பார்கள். இது குழந்தைகள் நடை பழக தொடங்குவதற்கான அறிகுறிகளில் ஒன்று. சில குழந்தைகள் 10 மாதத்திலேயே நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

    * சில குழந்தைகள் தங்கள் கைகளை பயன்படுத்தி மாடிப்படிகளில் ஏற முயற்சி செய்வார்கள். இந்த குழந்தைகள் தங்கள் கால்களை வைத்து வேகமாக நகர்வார்கள். இதை நீங்கள் காணும் போது உங்கள் குழந்தை சீக்கிரமே முதல் படி எடுத்து வைக்க போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

    * குழந்தை அருகில் இருக்கும் நாற்காலி அல்லது சோஃபா போன்ற பொருட்களை பிடித்து இரண்டு மூன்று அடி எடுத்து வைப்பார்கள். கனமான பொருட்களை பிடித்து முன்னேறி செல்ல தொடங்குவார்கள்.

    *  பல குழந்தைகள் தங்களின் முழங்கால்களை வைத்து சமநிலையாக்கி குனிந்து எழுந்து நின்று நடக்க தொடங்குவார்கள். முதல் ஒரு காலை வைத்து ஊன்றி நின்று பின்பு அடுத்த காலை அடி எடுத்து வைத்து நடக்க பழகுவார்கள்.

    * குழந்தை நண்டு போல் ஊர்ந்து செல்லும் என்று சொல்வார்கள். அது தான் கிராப் வாக். அவர்கள் தங்கள் கைகளையும், கால்களையும் பயன்படுத்தி ஊர்ந்து வேகமாக ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றுவிடுவார்கள். சீக்கிரமே உங்கள் குழந்தை நடை பயில தொடங்க போகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

    * சுவற்றை பிடித்து அல்லது பெரியவர்கள் கையை பிடித்து நடக்க தொடங்குவார்கள். இது அவர்களுக்குள் நடப்பதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கிறது. அவர்களின் இரண்டு கைகளையும் நாம் பிடித்து நடக்க உதவி செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஊக்கமாகவும் எண்ணுவார்கள். அதன் பிறகு ஒரு கையை விட்டு விட்டு நடக்க விட வேண்டும் இப்படியே தொடரும் போது அவர்கள் தாங்களாகவே நடை பயில தொடங்கிவிடுவார்கள்.

    ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு வழிகளை பின்பற்றுவார்கள். சில நேரங்களில் மற்ற குழந்தைகளை பார்க்கும் போது நீங்கள் அவர்களோடு ஒப்பிட்டு வருத்தம் அடைவீர்கள். ஆனால் 15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
    பலரும் அதிகம் அறிந்திடாத, அதேவேளையில் அன்றாட பயன்பாட்டுடன் தொடர்பில் இருக்கும் விஷயங்களை உள்ளடக்கிய படிப்புகள் ஏராளம் இருக்கின்றன.
    பலரும் அதிகம் அறிந்திடாத, அதேவேளையில் அன்றாட பயன்பாட்டுடன் தொடர்பில் இருக்கும் விஷயங்களை உள்ளடக்கிய படிப்புகள் ஏராளம் இருக்கின்றன. அவைகளை கற்று தேர்ந்து வேலை கிடைப்பதற்கான போட்டா போட்டியில் இருந்து விடுபட்டு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கி சம்பாதிக்கலாம். அத்தகைய படிப்புகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

    * உணவு தொழில்நுட்பம்:

    அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளின் தன்மையை மதிப்பீடு செய்யும் படிப்பு இது. உணவை பதப்படுத்துதல், அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாளுதல், பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்தல், பாதுகாப்பான முறையில் சேகரித்து வைத்தல், வினியோகம் செய்தல் போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். படிப்பை முடித்த பின்பு உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள், ஆய்வகங்கள், ஓட்டல்கள், குளிர்பான தொழிற் சாலைகள், அரிசி ஆலைகள், மதுபான தொழிற் சாலைகள் போன்றவற்றில் பணிபுரியலாம்.

    * பால் தொழில்நுட்பம்:

    ‘டெய்ரி டெக்னாலஜி’ எனப்படும் இது தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை கொண்ட படிப்பாக பார்க்கப்படுகிறது. பால் பொருட் களின் உற்பத்தி, தர பகுப்பாய்வு, ஆராய்ச்சி போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. 3 ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பை முடித்ததும் பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கலாம். மேலும் பால் பொருட்களை தயார் செய்து சொந்தமாக தொழில் செய்தும் வருமானம் ஈட்டலாம்.

    * நிகழ்ச்சி மேலாண்மை:

    எந்தவொரு விழாவாக இருந்தாலும் சரியான திட்டமிடுதலுடன் நேர்த்தியாக அதனை வழிநடத்தி செல்வதில்தான் அதன் வெற்றி அடங்கி இருக்கிறது. விழா வைபவங்களை சிறப்பாக நடத்தி முடிக்க கற்றுத்தரும் கல்வியாக அமைந்திருக்கிறது, ‘ஈவண்ட் மேலாண்மை’. திருவிழாக்கள், மாநாடுகள், வீட்டு விசேஷங்கள், சங்க நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என எந்த விழாவாக இருந்தாலும் மற்றவர்கள் நடத்து வதில் இருந்து தனித்துவமாக மிளிர வைக்கும் நுணுக்கங்களை மூன்று ஆண்டு படிப்பாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.

    * பெட்ரோலியம் என்ஜினீயரிங்:

    இயந்திர யுகத்தை இயக்கும் இன்றியமையாத பொருளாக எரிபொருள் மாறிவிட்டது. அதுசார்ந்த படிப்புகளுக்கு தனி மவுசு இருக்கிறது. கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவாக இருக்கக் கூடிய ஹைட்ரோகார்பன்களின் உற்பத்தி தொடர்பான படிப்பு, பெட்ரோலியம் என்ஜினீயரிங். 4 ஆண்டு கால இந்த படிப்பை முடித்ததும் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற எரிபொருள் சார்ந்த தொழிற்சாலைகளில் பணி புரியலாம்.

    * செல்ல பிராணிகள் பராமரிப்பு:

    வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்க்க ஆர்வம் காட்டுபவர்கள் அவசியம் படிக்கவேண்டிய படிப்பு, ‘பெட் குரூமிங்’. சில பிராணிகள் சுகாதார குறைபாடு பிரச்சினையால் பரிதவிக்கும். அவற்றின் உணர்வுகளை வளர்ப்பவர் களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். செல்ல பிராணிகளை எப்படி வளர்த்து, பராமரிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் இந்த படிப்புக்கு இந்தியாவில் இப்போதுதான் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

    * தேநீர் ருசிபார்த்தல்:

    உலகம் முழுவதும் மக்கள் விரும்பி பருகும் பானங்களில் தேநீருக்குத்தான் முதலிடம். எந்த டீ ருசியாக இருக்கும் என்பதை அறிய நாவின் தேடுதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கு பயணம் மேற்கொண்டாலும் அங்கு தயாரிக்கப்படும் தேநீர் வகைகளை ரசித்து ருசித்து பார்க்க பலரும் தவறமாட்டார்கள். ‘டீ டேஸ்டிங்’ படிப்பு தேநீரை பருகி அதன் சுவையை மதிப்பீடு செய்யும் விதத்தை கற்றுத்தருகிறது.

    * தோட்டக்கலை திட்டம்:

    இதில் நர்சரி மற்றும் பண்ணை வீட்டு மேலாண்மை போன்ற படிப்புகள் உள்ளடங்கி இருக்கின்றன. குறுகிய காலகட்டத்தை கொண்ட இந்த படிப்பில் பல்வேறு விதமான செடிகளை வளர்க்கும் விதம் பற்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் எந்தெந்த செடிகளை எந்ெதந்த பருவ காலங்களில் வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக செடிகளை வளர்க்கும் தோட்டக்கலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்று எண்ணும் அளவிற்கு சுவாரசியமிக்க பல்வேறு விஷயங்களை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளலாம்.

    * மலையேற்ற படிப்பு:

    இயற்கையை நேசிப்பவர்கள் மேற்கொள்ளும் சாகச பயணமான மலையேற்றத்தை எப்படி மேற்கொள்வது என்பதை கற்றுத்தருகிறது, ‘மவுண்டெய்னரிங்’. இதில் பலகட்ட பயிற்சிகள் இருக்கின்றன. மலையேற்ற பயணத்தின்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்கமாக கற்றுக் கொடுக்கிறார்கள். இதனை படித்து முடிப்பவர்கள் பயிற்சியாளராக பணிபுரியலாம்.
    குழந்தைகளுக்கு காசநோய் இருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு காசநோய் கிருமியால் சில நேரம் மூளைச்சவ்வு அழற்சி ஏற்படலாம்.
    பல்வேறு காய்ச்சல்கள் பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருந்தாலும், அதிக விழிப்புணர்வு இல்லாத நோய் மூளைக்காய்ச்சல். இது உயிரை பறிக்கும் ஆபத்து கொண்டது. குறிப்பாக, குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் அதிகம் பாதிக்கக்கூடியது. ஏழை நாடுகளில் மூளை காய்ச்சலின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவில், மூளை காய்ச்சல், ஜப்பானிய மூளை காய்ச்சல் நோய்களால் பாதிப்புக்கு ஆளாகும் 15 வயதுக்கு உட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளில் 10 ஆயிரம் பேர் இறந்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதிலிருந்தே அதன் தீவிரத்தை புரிந்துகொள்ளலாம்.

    இது கடுமையான மூளை தொற்று நோய். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை மூளை காய்ச்சல் என்றும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை ‘ஜப்பானிய மூளை காய்ச்சல்’ எனவும் மருத்துவ அறிவியல் சொல்கிறது. மூளை காய்ச்சலை ‘மெனிஞ்சைடிஸ்’ என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தமிழில் மூளைச்சவ்வு அழற்சி என்று பெயர்.

    இந்த நோய் வர வேறு சில நோய்களும்கூட காரணமாக இருக்கலாம். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, கக்குவான், இருமல், மலேரியா அல்லது காது தொற்று போன்ற நோய்கள் வந்தால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நோய்கள் மூளைச்சவ்வு அழற்சியில் கொண்டுபோய் விட்டுவிடலாம்.

    குழந்தைகளுக்கு காசநோய் இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு காசநோய் கிருமியால் சில நேரம் மூளைச்சவ்வு அழற்சி ஏற்படலாம். தாய்க்கு காசநோய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு சில மாதங்களில் காசநோய் தொடர்பான மூளைச்சவ்வு அழற்சி சில நேரம் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவர்கள்.

    அது மட்டுமல்லாமல் மூளை காய்ச்சல் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. இரண்டு முதல் 15 நாட்கள் வரை அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். உடனே எச்சரிக்கை அடைந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும். காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, குழந்தை மிகவும் நோயுற்றுக் காணப்படுவது, கழுத்தையும் தலையையும் பின்னோக்கி வளைத்துப் படுத்திருப்பது, தலையை கால் முட்டிகளுக்கு கொண்டு போக முடியாதபடி முதுகு விறைப்பாக இருப்பது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலை உச்சியின் மென்பகுதி மேல் நோக்கி புடைத்திருப்பது ஆகியவை மூளை காய்ச்சலின் அறிகுறிகள்.

    இவை மட்டுமல்லாமல் பொதுவாக வாந்தியும் இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தை எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும் அல்லது எரிச்சலுற்றதாக காணப்படும். எதையும் சாப்பிடாது. சில நேரம் வலிப்பு ஏற்படலாம். வழக்கத்துக்கு மாறான அசைவுகளும் உடலில் காணப்படும். பெரும்பாலும் நினைவு இழக்கும்வரை குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே போகும். இதில் காசநோய் கிருமியால் ஏற்படும் மூளை காய்ச்சல் மெதுவாக பல நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு பிறகுதான் அறிகுறிகளை காட்டும். மற்றப் பாதிப்புகளால் வரும் மூளை காய்ச்சல் மிக விரைவாக வெளிப்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    இவையன்றி, நோய் வராமல் தடுப்பது நம் கையிலும் உள்ளது. முதலில் வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். குப்பையகளை சேர்க்கக்கூடாது. தண்ணீர் தேங்காமலும், கொசு வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் கொசுக்கடிக்கு ஆளாகாத வண்ணம் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    உங்கள் குழந்தைகளிடம் பொறாமை குணம் ஏற்பட்டிருந்தால் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து, எடுத்துச்சொல்லி அந்த உணர்வை அவர்களிடம் இருந்து அப்புறப்படுத்திவிடுங்கள்.
    ‘குழந்தைகள் கண்ணாடி போன்ற மனநிலை கொண்டவர்கள். எதையும் அப்படியே பிரதிபலித்துவிடுவார்கள். பொறாமை, குரோதம் போன்ற தேவையற்ற குணாதிசயங்கள் அவர்களிடம் இருக்காது’ என்ற கருத்து பொதுவாக நிலவிவருவதுண்டு. ஆனால் குழந்தைகளிடம்கூட பொறாமை குணம் இருக்கிறது. ஆனால் அது பெரும்பாலும் அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவு களையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.

    குழந்தைகளிடம் ஏற்படும் எண்ணச்சிக்கல்களை சரிசெய்யவேண்டியது பெற்றோரின் பொறுப்பு. உங்கள் குழந்தைகளிடம் பொறாமை குணம் ஏற்பட்டிருந்தால் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து, எடுத்துச்சொல்லி அந்த உணர்வை அவர்களிடம் இருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் குழந்தைகளிடம் பொறாமை குணமும் வளர்ந்து, அவர்களது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிவிடும்.

    பெரியவர்களிடம் இருக்கும் பொறாமை குணத்தை கண்டறிவது கடினம். அப்படி ஒரு குணமே தங்களிடம் இல்லை என்பதுபோல் நடந்துகொள்வார்கள். ஆனால் குழந்தை களிடம் பொறாமை குணம் இருந்தால் அதை தங்கள் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்திவிடுவார்கள். இதனால் ஏற்படும் நெருக்கடி என்னவென்றால், பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும்போது, அது அந்த குழந்தைகளுக்குள் வெறுப்பை உருவாக்கும். அந்த வெறுப்பால் அவைகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சூழ்நிலைகள் தோன்றும்.

    குழந்தைகள் பெற்றோர்களால் வளர்க்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது பெற்றோருக்கு தெரியாமல் குழந்தைகளிடம் எப்படி பொறாமை உணர்வு ஏற்படும்? என்ற கேள்வி எழத்தான் செய்யும். உண்மையில் குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். அவர்களுக்கு இரு குழந்தைகள் இருப்பதாக வைத்துக்கொண்டால், பின்விளைவு களைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகிறார்கள். ஆரோக்கியமற்ற போட்டியே பொறாமையாக உரு வெடுத்துவிடுகிறது.

    குழந்தைகளின் வேகத்தையும், திறமை களையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும். அது வெற்றிபெற்ற குழந்தை மீது தோல்வியடைந்த குழந்தைக்கு பொறாமை உணர்வு ஏற்பட காரணமாகிவிடும்.

    வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும் என்பதும், தோல்வியில் இருந்து புதிய பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என்பதும் பெரியவர்களுக்குதான் தெரியும். சிறுவர்களுக்கு தெரியாது. அதனால் குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளின் மன நிலையை இயல்பாக்கி, உற்சாகப்படுத்தவேண்டும்.

    தங்களுக்கும், பக்கத்து வீட்டு பெற்றோர் களுக்கும் வித்தியாசம் உண்டு என்பது எல்லா பெற்றோருக்கும் தெரியும். தங்களை போன்று பக்கத்து வீட்டு பெற்றோர்கள் சிந்திப்பதும், செயல்படுவதும் இல்லை என்பதும் அவர் களுக்கு தெரியும். ஏன்என்றால் எல்லா மனிதர் களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. மனிதருக்கு மனிதர் மன இயல்புகளில் மாற்றங்கள் இருக்கும் என்பதை பெற்றோர்கள் உணர்ந் திருந்தாலும், படிப்பிலோ- விளையாட்டிலோ பக்கத்து வீட்டு குழந்தைகள் சிறப்பாக செயல்பட்டால், அது போல் தங்கள் குழந்தைகளும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது. அவமரியாதை செய்யப்படும் குழந்தைகளிடம் கோபம், பிடிவாதம், பொறாமை போன்ற பல வகையான எதிர்மறை உணர்வுகளும் உரு வாகிவிடக்கூடும்.

    முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வளரும் வீடுகளில்தான் அவர்களிடம் போட்டி, பொறாமை உருவாகும் என கூறப்பட்டதுண்டு. ஆனால் இப்போது பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு குழந்தையைதான் பெற்று வளர்க்கிறார்கள். அந்த குழந்தை களிடமும் பொறாமைக்குணம் காணப்படுகிறது. அதனால் எத்தனை குழந்தைகள் ஒரு வீட்டில் வளர்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அவர்கள் எப்படி வளர்கிறார்கள் என்பதே முக்கியம்.

    குழந்தைகளின் குறைகளை திருத்தவும், நிறைகளை பாராட்டவும் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பாராட்டுவதும், இன்னொரு குழந்தையை குறை சொல்வதும் கூடாது. அதை தனித் தனியாக செய்ய வேண்டும். ‘உன்னைவிட அவன் சிறந்தவன்’ என்ற தொனியில் செயல்படக்கூடாது. இரு குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பெற்றோர் தங்கள் மனதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வெளிக்காட்டினால் அது குடும்பத்துக்குள்ளே பெருங்குழப்பத்தை உருவாக்கிவிடும். எல்லா குழந்தை களுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற் படுகிறது.

    பெரும்பாலான குடும்பங்களில் மூத்தபிள்ளைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும், இளைய குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் தொடர்கிறது. இத் தகையபோக்கும் மாற்றப்படவேண்டும். குழந்தைகளாக இருப்பவர்கள் வளர வளர வயதுக்கு தகுந்த அளவு முக்கியத்துவம் தரபடவேண்டும். அவர்கள் திறமை குறைந்தவர்களாக இருந்தாலும் அங்கீகரித்து ஊக்கப்படுத்தவேண்டும். பெற்றோர் வாழ்ந்து காட்டும் முறையிலும், வளர்க்கும் முறையிலும் குழந்தைகளை பொறாமை இல்லாதவர்களாக உருவாக்கலாம். குழந்தை களுக்கு பணம் சேர்த்துவைப்பதைவிட, அவர்களை நல்ல குணமிக்கவர்களாக உருவாக்குவதே பெற்றோரின் தலையாய பணியாக இருக்கவேண்டும்.
    கோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
    * பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.

    * தினமும் குழந்தையை இரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.

    * குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.

    * குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

    * குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், தனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.

    * சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.

    * சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக பூசி வர குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.

    * இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.

    * வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.

    * சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும்.
    பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள்.
    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் இதில் அடக்கம். குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள்.

    குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர் களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்காக்களுக்கு அழைத்துச்செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் ஒழிந்திருக்கும் மிருகம் விழித்துக்கொள்கிறது. இதை உணர்ந்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இதை நினைத்து எல்லா முதியோர்களையும் தப்பாக பார்க்கக்கூடாது.

    வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவும் மிக நெருக்கமானவர்களால்தான் நடக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஆண்கள், மனைவி இருக்கும்போதே மனைவியின் தங்கைகளிடம் சீண்டி விளையாடும் ஆண்கள், பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

    சிறுமிகளிடம் அவர்கள் ‘நீ எனது மனைவியைவிட அழகாக இருக்கிறாய்’ என்று ஆரம்பித்துதான் தூண்டில்போடுகிறார்கள். அப்பாக்களால் பாதிக்கப்பட்ட மகள்களையும் நான் வழக்கில் சந்தித்திருக்கிறேன். நான் ஆண்களை குறைசொல்வதற்காக இதை எல்லாம் கூறவில்லை. நான் சந்தித்த வழக்குகளின் அடிப்படையில் சொல்கிறேன்.

    பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள். தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் காதல் என்ற பெயரில் தனது உடலை இழந்து கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள் கூறுவது ஒன்றேதான். ‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள்’ என்கிறார்கள். பெற்றோர், பாலியல்- காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தை களுக்கு கற்றுத்தர வேண்டும்.
    கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய சூழலில், தங்களது அனுபவங்களையும், உறவுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி தலைமுறையின் தொடர்ச்சிகளை தக்க வைத்துக்கொள்ளும் பொறுப்பு தாத்தா, பாட்டிகளுக்கே உள்ளது.
    பெரும்பாலான இளைய தலைமுறையினர் தற்போது கல்வி, பணி, சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் விருப்பத்திற்கேற்ற இடங்களுக்கு தங்கள் வாழ்க்கையை தேடிச் செல்கிறார்கள். சிலர் உணர்வுரீதியான பிணைப்புடன் ஊர் மற்றும் உறவுகளுக்கு மத்தியில் தங்களுக்கான வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் நகரம் மற்றும் கிராமம் ஆகிய இரு வேறுபட்ட வாழ்க்கை சூழலில் வீட்டில் உள்ள வயதான பெற்றோர்கள் மற்றும் மனைவி- குழந்தைகளுடன் வாழ்கிறார்கள். 30 முதல் 42 வயதுக்குள் உள்ள அவர்களை ‘சாண்ட்விச் தலைமுறையினர்’ என்று சமூக உளவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    சமூக அளவில் வயதான பெற்றோர்கள் பல வகைகளில் இருக்கிறார்கள். அரசுப் பணி அல்லது தனியார் பணியிலிருந்து ஓய்வு பெற்று மாதாந்திர ஓய்வூதியம் பெறும் பெற்றோர்கள் ஒரு வகை. அமைப்பு சாரா தொழில்கள் செய்து ஒரு குறிப்பிட்ட வயதில் உடல் தளர்ந்து வேலை செய்ய முடியாமல் ஓய்வு பெற்றவர்கள் இன்னொரு வகை. விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் முதுமை காரணமாக பிள்ளைகளுக்கு நிலத்தை கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்பவர்கள் மற்றொரு வகை.

    இப்படிப்பட்ட பெற்றோர்களால் வளர்க்கப் பட்டவர்கள் படித்து, பணியிலோ அல்லது தொழிலிலோ அமர்ந்த பின்னர் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் நிலைக்கு வருகிறார்கள். அந்த நிலையில் வயதான பெற் றோர்களை கவனித்துக்கொள்வது, தங்கள் திருமண வாழ்க்கையை தொடர்வது ஆகிய இரு பொறுப்புகளையும் அவர்கள் ஒருசேர கவனிக்கவேண்டியதிருக்கிறது.

    குடும்பத்தில் ஒரு பக்கம் வயதான பெற்றோர், இன்னொரு பக்கம் தனது மனைவி குழந்தைகள் என்று இரு தரப்பு எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது சாண்ட்விச் தலைமுறைக்கு சவாலான விஷயம். யாரை முதலில் கவனிப்பது, பெற்றோரை டாக்டரிடம் அழைத்துச் செல்வதா அல்லது குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவுக்கு செல்வதா என்பதில் ஆரம்பித்து இரு தலைமுறையின் மாறுபட்ட தேவைகளை நிறைவேற்றுவதில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.

    அதே நேரத்தில் வயதான காலத்திலும் பல பெற்றோர் தொழிலில் தங்கள் பிள்ளைகளுக்கு உதவும் வகையில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அதேபோல வீட்டு வேலைகளையும், இதர பொறுப்புகளையும் பகிர்ந்துகொண்டு தம்மால் முடிந்தவரை குடும்பத்துக்கு உதவி வரும் பாட்டிகளும் பல ஊர்களில் இருக்கிறார்கள். எப்போதுமே குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி போன்ற பலரும் ஒருங்கிணைந்து அமைந்துள்ள குடும்பம்தான் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனநிலையை இளைய தலைமுறைக்கு அளிக்கும். சின்னக் குழந்தைகள் பெற்றோர்களிடம் வெளிப்படுத்தாத எண்ணங்களை தாத்தா, பாட்டியிடம் எளிதாக வெளிக்காட்டுவார்கள். அப்படிப்பட்ட உணர்வு ரீதியான ஆதரவு குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. அதை அருமையாக ஒருங்கிணைக்கும் பொறுப்பு சாண்ட்விச் தலைமுறையினருக்கு இருக்கிறது.

    ஒவ்வொருவரின் வாழ்விலும் குழந்தைப் பருவத்தில் முதன்மையான இடத்தை பெறுவது தாத்தா மற்றும் பாட்டியாகத்தான் இருப்பார்கள். பேரக்குழந்தைகளை சரியாக கவனிக்காத அவர்களது மகன் அல்லது மகள்களை கடிந்துகொள்வதுடன், குழந்தைகளை அரவணைத்து, பாசத்தை காட்டுவதும் வீட்டுப் பெரியவர்கள்தான். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய சூழலில், தங்களது அனுபவங்களையும், உறவுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி தலைமுறையின் தொடர்ச்சிகளை தக்க வைத்துக்கொள்ளும் பொறுப்பு தாத்தா, பாட்டிகளுக்கே உள்ளது.

    பெற்றோர்கள் மற்றும் அவர்கள் பேரக்குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை உறுதி செய்வது சாண்ட்விச் தலைமுறையினருக்கு அவசியமான ஒன்று. தூரம், காலம் போன்ற சிக்கல்கள் எல்லாம் இன்றைய தொழில்நுட்ப வசதிகள் முன் ஒன்றுமில்லாததாக ஆகி விட்டது. உலகம் உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. வீடியோ கால் மூலம் தாத்தா, பாட்டிகள் தங்கள் மேல்நாட்டு பேரன், பேத்திகளுடன் உரையாடுகிறார்கள். வாட்ஸ் அப் மூலம் உள்ளூர் செய்திகள் மற்றும் படங்களை தங்கள் பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். எப்படியோ உணர்வுபூர்வமான கலாசார தொடர்புகள் அறுந்து விடாமல் இருப்பது மிக முக்கியம்.
    வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகள் மனதில் பக்கத்தில் இருக்கும் காலி அறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதை நினைத்து தேவையில்லாமல் பயம் கொள்வார்கள்.
    ‘குழந்தைகள் என்றாலே துறுதுறுவென வலம் வருவார்கள். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருப்பார்கள்’ என்பது பெரும்பாலானவர்களின் எண்ண ஓட்டமாக அமைந்திருக்கிறது. பெற்றோர்களும் அத்தகைய மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் மனதிலும் குழப்பமான சிந்தனைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதைத் தொடர்ந்து ஏற்படும் கவலைகள் அவர்களை சஞ்சலத்தில் ஆழ்த்திவிடும். அதனை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

    தேவையற்ற பயம் மனதை ஆட்கொள்ளும்போது அவர்கள் பலவீனமடைந்து விடுகிறார்கள். அவர்கள் மனதில் எப்படிப்பட்ட பயம் ஆட்கொள்ளும் என்பதை தெரிந்துகொண்டு அதை போக்குவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். அவர்களுடைய வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். இல்லாவிட்டால் பயமும், குழப்பமும் அவர் களின் மனநிலையை சிதைத்துவிடும். எதற்கெடுத்தாலும் பயப்படும் மனநிலைக்கு மாறிப்போய்விடுவார்கள். அப்போது தனிமையை விரும்புவார்கள். தனிமை உணர்வும் அவர்களை வாட்டிவிடும்.

    குழந்தைகள் அம்மா-அப்பாவிடம் மட்டும்தான் பாதுகாப்பான சூழலை உணருவார்கள். புது இடம், புது மனிதர்களை சந்திக்கும்போது அவர்களிடத்தில் ஒருவித தடுமாற்றம் ஏற்படும். அறிமுகமில்லாத இடத்தில் விட்டுச் செல்வதும் அவர்களை தனிமையில் துவள வைத்துவிடும். ‘அம்மா - அப்பா இன்னும் வரவில்லையே. வரும் வழியில் என்ன ஆனதோ என்று தெரியவில்லையே’ என்றெல்லாம் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். வெளியில் சொல்ல முடியாத ஒருவித கலக்கம் அவர்கள் மனதில் ஏற்படும். இத்தகைய திகில் உணர்வு குழந்தை களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படவும் வழிவகுத்துவிடும். சுவாசப் பிரச்சினையும் தோன்றும். இத்தகைய திகில் உணர்வு குழந்தைகள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள்.

    வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகள் மனதில் பக்கத்தில் இருக்கும் காலி அறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதை நினைத்து தேவையில்லாமல் பயம் கொள்வார்கள். அவ்வப்போது காலி அறையை சுற்றிக்காட்டி, ‘அங்கு யாரும் இல்லை’ என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நாளடைவில் பயம் நீங்கும்.

    புதிய இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் போது அந்த இடத்தைப் பற்றி விளக்கமாக கூற வேண்டும். அங்கு இருக்கும் அறிமுகமற்றவர்களை பற்றியும் தெரிந்தவர்களை பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரியவைக்க வேண்டும். இல்லையென்றால் தங்களுடைய கற்பனை சக்திக்கேற்ப குழப்பமாக புரிந்து கொள்வார்கள். புதிய மனிதர்களிடம் பேசவும், நெருங்கவும் அஞ்சுவார்கள். இந்த பயம் அவர்களுடைய ஜீரண சக்தியை பாதிக்கும். அதனால் உடல் நலனும் பாதிப்புக்குள்ளாகும். மன நலமும் பாதிக்கப்படும்.

    நாம் பேசுவது நமக்கு நியாயமான விஷயமாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளால் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. வீட்டில் எப்போதும் பிரச்சினை, கடுமையான வாதம், விவாதம் நடந்து கொண்டிருந்தால் அது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும். விவாதம் முடிந்த பிறகும் அந்த விஷயங்கள் பற்றிய சிந்தனையே குழந்தைகள் மனதில் பல மணி நேரமாக நீடித்துக்கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்து பயங்கர காட்சிகளும் அவர்களது மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். அது தொடர்ந்து நீடிக்கும்போது ஒருவித குழப்பமான மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.

    பள்ளிக்கூடத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் முரட்டு தனமாக நடந்துகொள்ளும்போது மனதில் ஒருவித பாதுகாப்பின்மை தோன்றும். அது ஒருவித பயத்தை ஏற்படுத்தி குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இந்த நிலை நீடித்தால் படிப்பில் கவனம் குறையும். மந்தநிலை ஏற்படும். பள்ளிச் செல்ல விருப்பம் குறையும். அதனால் பள்ளியில் நடக்கும் விஷயங்கள் பற்றி குழந்தை களிடம் அடிக்கடி கேட்டு விவாதிக்க வேண்டும்.

    அதிகப்படியான கூட்டத்தைப் பார்க்கும்போதும் குழந்தை களுக்கு ஒருவித பயம் ஏற்படும். அந்த கூட்டத்திற்கு மத்தியில், ‘நாம் காணாமல் போய்விடுவோமோ’ என்று கவலைகொள்வார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும் விதத்தில் பெற்றோர் பேச வேண்டும். வீட்டு முகவரி, தொலைபேசி எண், அம்மா, அப்பா பெயர் போன்ற முக்கியமானவற்றை அடிக்கடி சொல்ல வைத்து அவர்கள் மனதில் பதிக்க வேண்டும். ‘ஒருவேளை தொலைந்து போய்விட்டால் பயப்படாதே. அதே இடத்தில் நின்று விடு. எங்களைத் தேடி வராதே. நாங்கள் திரும்ப வந்து அழைத்துச் செல்வோம். வெகுநேரமாகிவிட்டால் அங்கு நிற்பவர்களிடம் எங்களது பெயர், செல்போன் எண்ணை கொடுத்து பேசு’ என்று கூறி தைரியப்படுத்த வேண்டும். திரளான கூட்டம், புதுப்புது முகங்கள், குழந்தைகளை பலவாறு சிந்திக்க வைத்து அவர்களை குழப்பிவிடும் என்பதை பெற்றோர் எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள்.

    சில சமயங்களில் குழந்தைகளால், ‘தாங்கள் இதற்காகத்தான் பயப்படுகிறோம்’ என்பதை விளக்கிச் சொல்ல முடியாமல் போகலாம். அந்த சமயத்தில் அவர்களிடம் பக்குவமாக பேசி, கேள்விகள் கேட்டு, அதற்கான விடையை சொல்ல வைத்து பயத்தை போக்க வேண்டும். வேண்டாத கனவுகள் கூட அவர்களை மிரள வைக்கும். ‘உண்மையில் அப்படியெல்லாம் நிகழ்ந்து விடுமோ’ என்று பயந்துபோவார்கள். சினிமா, தொலைக்காட்சி சம்பவங்களை உண்மை என்றே நினைத்து கலவரமடைவார்கள். அந்த வயதில் எது உண்மை? எது பொய்? என்பதை பிரித்துப் பார்க்கும் பக்குவம் இருக்காது. குறிப்பாக எந்த விஷயம் அவர்களை பயமுறுத்துகிறது என்பதை அவர்களிடம் பேசி தெரிந்துகொள்ள வேண்டும். சில சமயம் சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களை பயமுறுத்தும். பெற்றோர்தான் பக்குவமாக புரியவைத்து பயத்தை போக்கவேண்டும்.

    குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகளில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை. அந்த கதைகளுக்கு சுவாரசியம் சேர்ப்பதற்காக சில பொய்களை சேர்க்க வேண்டி இருக்கும். அதுவே அவர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்துவிடும். அதில் வரும் கதாபாத்திரங்களை நிஜம் என்றே நம்பி விடுவார்கள். அவ்வப்போது கட்டுக்கதை, நிஜவாழ்க்கை இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.கட்டுக்கதைகள் குழந்தைகளை ஏமாற்றுவதற்கு அல்ல. மிகப்பெரிய உண்மைகளை எளிமையாக அவர்களுக்கு புரியவைப்பதற்கு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் குழந்தைகளோ, ‘நரி பேசும், காக்கா பாடும்’ என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருப்பார்கள். அந்த இடத்தில் நிஜத்தைப் புரியவைக்க வேண்டும்.

    குழப்பமான மனநிலை குழந்தைகளை பலவீனப்படுத்திவிடும். அவர்களுடைய செயல்பாடுகளும் குறைந்து போகும். சோர்வான மனநிலையில், முகவாட்டத்துடன் காணப்படுவார்கள். அது அவர்களுடைய உடல் நலனையும் பாதிக்கும். அவ்வப்போது அவர்களிடம் பேசி தேவையற்ற குழப்பங்களை போக்க வேண்டும். பாசமாக வளர்க்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு புதிதாக சகோதரனோ, சகோதரியோ பிறக்கும்போது அவர்கள் மீதுதான் பெற்றோரின் கவனம் அதிகம் பதியும். அப்போது ‘நம்மீது முன்பு போல் பாசம் காண்பிக்காமல் இருக்கிறார்கள்’ என்ற எண்ணம் ஏற்படும். ‘இனி நாம் இவர்களுக்கு தேவை இல்லையோ’ என்று கூட சில குழந்தைகள் சிந்திக்கும். அதற்கு இடம் கொடுக்காதவாறு அவர்களின் சந்தேகங்களையும், பயங்களையும் போக்க வேண்டும். அவர்களை மனம் விட்டு பேச வைக்க வேண்டும். அப்போது அவர்கள் மனதில் இருக்கும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். குழந்தைகள் மனதில் ஒருபோதும் தேவையற்ற பயமோ, குழப்பங்களோ இருக்கக்கூடாது.
    ×