என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • குழந்தைகள் நடந்து கொள்வது பெற்றோர்களைப் பார்த்துத்தான்.
    • குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதும் தவறு.

    குழந்தைகளின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முதல் பொறுப்பு பெற்றோர்கள்தான். ஏனென்றால் அவர்கள்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரி. இதுதான் உலக நியதியும்கூட. முதலில் அம்மாவும், அப்பாவும் தான். பிறகுதான் இந்த சமூகம் எல்லாம்.

    குழந்தைகள் இப்படி நடந்து கொள்வது பெற்றோர்களைப் பார்த்துத்தான். குழந்தைகள் முன்பாகவே பெற்றோர்கள் சண்டைபோட்டுக் கொண்டால் அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். சாப்பாட்டில் உப்பு குறைவு அல்லது அதிகம் என்பதற்காக அப்பா சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிந்தால் குழந்தையும் ஒருநாள் இதையே செய்யும்.

    கூட்டுக் குடும்பங்கள் மறந்து தனிக் குடும்பங்கள் அதிகமாவதாலும், குழந்தைகளை கவனிப்பது, கண்டிப்பது, தட்டிக் கொடுப்பது போன்றவையும், அதிகமாக செல்லம் கொடுப்பது, எதை கேட்டாலும் வாங்கிக் கொடுப்பது போன்றவையும் தற்போது அதிகரித்துள்ளது.

    குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதும் தவறு, எதையுமே வாங்கிக் கொடுக்காமல் இருப்பதும் தவறு. அடம் பிடித்து அழுவதால் எல்லாம் நமக்கு கிடைத்துவிடும் என்ற சிந்தனை குழந்தைக்கு வந்துவிட்டால் அவ்வளவு தான். எது தேவையோ அதை வாங்கிக் கொடுங்கள். அடம் பிடித்து அழுது புரண்டால் ஒன்று புரியவையுங்கள் அல்லது புறக்கணியுங்கள்.

    • ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது.
    • உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும்.

    குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை, மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம்.

    சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்ட குழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும்.

    எடை: பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும்.

    ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை. மாறாக எடைகுறைவாய் பிறந்த குழந்தைகளின் எடை ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இரண்டுமடங்காக உயரும். ஒரு வருடத்திற்கு பின் உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது அவ்வளவு விரைவாக உயராது. பெரும்பாலும் குழந்தைகளின் உடல் எடை முதல் ஐந்து முதல் ஆறு மாதங்கள் மிக நன்கு உயர்ந்து இரண்டு மடங்காகும். ஆனால் ஆறுமாதத்திற்கு பின் எடை உயர்வு ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். ஏன் அப்படி நடக்கிறது என்றால் ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மாத்திரம் குழந்தைக்குப் போதுமானது அல்ல.

    தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுப்பொருட்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது. குழந்தையின் எடை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதனை கண்டறிவது மிக முக்கியமானது. உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லது குழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது.

    உயரம்: உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். முதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும்.

    தலை மற்றும் மார்பின் சுற்றளவு: குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும். குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

    நடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு: குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும்.

    அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும். நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது.

    • படிப்பு, மதிப்பெண் போன்ற வார்த்தைகளை பெரும்பாலான மாணவர்கள் கசப்பாகவே நினைக்கின்றனர்.
    • படிப்பும் மதிப்பெண்களும் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது.

    வாழ்க்கைக்கு வெறும் பள்ளி, தேர்வு சார்ந்த விஷயங்கள் மட்டுமே பிரதானம் என்ற கண்ணோட்டத்திலேயே பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கல்வி சார்ந்த விஷயங்களை கூறுகின்றனர். இதனால் படிப்பு, மதிப்பெண் போன்ற வார்த்தைகளை பெரும்பாலான மாணவர்கள் கசப்பாகவே நினைக்கின்றனர். இதுவே பெற்றோர் - பிள்ளை உறவினில் சுமூகமான சூழலை சீர்குலைக்கிறது.

    ''படிப்பும் மதிப்பெண்களும் அவசியம்தான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது. இன்றைய பெற்றோர் - குழந்தைகள் உறவில் அதீத பிரச்னைகளை ஏற்படுத்தும் பிள்ளைகளின் படிப்பு, மதிப்பெண் சார்ந்த விஷயங்களில் உண்மையான சிக்கல்களை பெற்றோர்கள் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை காண வேண்டும்.

    * ''ஒவ்வொரு மாணவ/மாணவிக்கும் திறன் அளவு மாறுபடும். அவர்களின் திறனையும் தாண்டி அதிக மதிப்பெண்கள் எடுக்கச் சொன்னால், அவர்களால் என்ன செய்ய முடியும்? மனஉளைச்சலுக்கு ஆளாகி, சமயங்களில் தவறான முடிவுகளைக்கூட எடுக்கத் தோன்றும். அதற்குப் பெற்றோர்களும், பள்ளிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும். தங்கள் பிள்ளை குறைவான மதிப்பெண் எடுத்தாலோ, அல்லது தேர்வில் தோல்வியடைந்தாலோ அவர்கள் அந்தச் சூழலை எதிர்கொள்ள பெற்றோர்தான் தன்னம்பிக்கை தரவேண்டும்.

    * கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளைப் படைத்த சச்சின் டெண்டுல்கரே, பல முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். பல தோல்விகளைக் கடந்துதான் இன்று உலகம் புகழும் விளையாட்டு வீரராகச் சாதித்திருக்கிறார். அதோடு விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் என பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள்தான் பின்னாளில் வெற்றியாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதனால், தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிக்காது என பெற்றோர்கள் புரிந்துகொள்வதுடன், அதைப் பிள்ளைகளுக்கும் சொல்லி, அவர்கள் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தால் அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.

    * ஒவ்வொரு கல்வியாண்டிலும் துவக்கத்தில் இருந்தே பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் அன்போடு பேசி, அவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வரும்படிச் செய்ய வேண்டும். மேலும் முதல் டெர்ம், காலாண்டுத் தேர்வு போன்ற ஆரம்பகட்ட தேர்வு சமயங்களில் மதிப்பெண் குறைவாக எடுத்தால், அப்போதே எதனால் மார்க் குறைந்தது, படிப்பதில் என்ன சிரமம் இருக்கிறது, படித்தது ஏன் மறந்து போகிறது என அவர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும். இது பிள்ளைகள் அடுத்தடுத்த தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள வைக்கும்.

    * பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளையிடம் தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அன்றைய நிகழ்வுகள் குறித்து பெற்றோர் பேச வேண்டும். 'இன்னைக்கு புதுசா என்ன கத்துகிட்ட? பாடம் எல்லாம் புரிஞ்சுதா? அது எதனால புரியல?' எனக் கேட்டால், எதாச்சும் பிரச்னைகள் இருந்தால் பிள்ளைகளும் கூறுவார்கள். அத்துடன் மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் கேள்விகளைக் கேட்க வேண்டும். தங்களுக்குத் தெரிந்ததை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதோடு, அவர்கள் வாயிலாக பெற்றோர்களும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பிள்ளைகளிடம் நண்பர்களாக மனம்விட்டுப் பேசி, பழக வேண்டும்.

    * பிள்ளை ஒரு பாடத்தில் 50 மதிப்பெண் பெறுகிறார் எனில் அவரை 55, 60, 65 என படிப்படியாக அதிக மதிப்பெண் பெற ஊக்கப்படுத்தலாம். அதைவிடுத்து, 'அடுத்த தேர்வில் கட்டாயம் 80-90 மார்க் எடுத்தே ஆக வேண்டும்' எனச் சொன்னால் பிள்ளைகளுக்கு படிப்பின் மீது ஆர்வமின்மையும், மன அழுத்தமும்தான் அதிகமாகும். பாடங்களைப் புரிந்து படிக்கும் குழந்தைகள், 45 மதிப்பெண்கள் எடுத்தாலும் வாழ்வில் எப்படியும் முன்னேறிவிடுவார்கள், பிரச்னையான சூழல்களைத் தைரியமாக எதிர்கொள்ளவார்கள். ஆனால், மனப்பாடம் செய்து 90-100 மதிப்பெண்கள் எடுத்தாலும், அது எதிர்கால வேலைச்சூழலுக்கு உதவாது என்பதுடன், அவர்கள் சிறு பிரச்னையைக்கூட பெரிய பிரச்னையாக நினைத்து கவலைப்படுவார்கள்.

    * 'நம் பிள்ளை குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ சமூகத்தில் அவமானமாகிவிடும்' என்ற எண்ணம் வேண்டாம். இந்தச் சமூகம் நமக்கு சோறு போடப்போவதில்லை. ஆறுதல் கூறப்போவதில்லை. பல வருடம் பள்ளியில் படித்து ஒரு மாணவன் தோல்வி அடைந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியும், அரசும்தான் சரியாக செயல்படவில்லை என அர்த்தம். அதனால் அவர்கள்தான் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

    * அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுத, பட்டம் பெற்றிருந்தால் போதும். எனவே, குழந்தைகளின் பள்ளி நாட்களில் மதிப்பெண் பந்தயத்தில் மட்டுமே குறியாக அவர்களை ஓடவைக்காமல், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளுக்கு அவர்களை தயார்படுத்தலாம். உங்கள் பிள்ளைக்கு எதிர்கால ஆசை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற படிப்பை படிக்க வையுங்கள்.

    * படிப்பு பாதிக்கப்படும் என, உறவினர்கள் திருமணம், திருவிழா என எந்த நிகழ்ச்சிகளுக்கும் பிள்ளைகளை அழைத்துச் செல்லாமல் இருக்கும் பழக்கத்தை மாற்றுங்கள். உறவினர், நண்பர்களைச் சந்திப்பதும், இரண்டு நாட்கள் அவர்களுடன் சந்தோஷமாகக் கழிப்பதும், படிப்பு தரும் மனச்சுமையில் இருந்து அவர்களை மீட்கும், மனவளம் தரும். தொடர்ந்து வரும் நாட்களில், ஃப்ரெஷ் மைண்டுடன் படிப்பார்கள். எப்போதும் புரிந்துகொள்ளாமல் படித்துக்கொண்டே இருப்பதால், மனப்பாடத்திறமை மட்டும்தான் அதிகமாகும்; கல்வி அறிவு வளராது. தினமும் குழந்தைகளை குறிப்பிட்ட நேரம் விளையாடவிடுங்கள்.

    • குறிப்பிட்ட ஒன்றை பற்றி ஆராய்ச்சி செய்ய, இதுபோன்ற தரவுகளே அடிப்படையாகின்றன.
    • 'டேட்டா சயின்ஸ்' படிப்பு பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா..?

    சமீபத்திய இளைஞர்களின் பேசுபொருளாக மாறியிருக்கும் 'டேட்டா சயின்ஸ்' படிப்பு பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா..?

    டேட்டா சயின்ஸ்

    டிஜிட்டல் உலகில், இணையதளம், சமூக வலைத்தளங்களில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த தரவுகளைத் தொகுத்து, அவற்றை ஒருங்கிணைத்து அவற்றிலிருந்து பயன்படக்கூடிய தேவையான தரவுகளைப் பிரித்து குறிப்பிட்ட புதிய தரவுகளை எதிர்காலச் செயல்பாட்டுக்கு தொகுப்பது, தரவு அறிவியல் எனப்படுகிறது. அதாவது டேட்டா சயின்ஸ். 'டேட்டா சயின்ஸ்' என்பது எண், வெப்பநிலை, ஒலி-ஒளி, அழுத்தம், உயரம் முதலான அளவீடுகளாகவோ, சொற்களாகவோ, மற்ற குறிப்புகளாகவோ இருக்கலாம்.

    குறிப்பிட்ட ஒன்றை பற்றி ஆராய்ச்சி செய்ய, இதுபோன்ற தரவுகளே அடிப்படையாகின்றன. அதை சேகரிப்பதும், அதன்மூலம் பல பயனுள்ள ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதுவுமே 'டேட்டா சயின்ஸ்' துறையின் மிக முக்கிய பணி. ஆராய்பவர், டேட்டா சயின்டிஸ்ட் என அழைக்கப்படுகிறார். ஒரு வாரத்தில் பதிவாகியிருக்கும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த வாரங்களில் தொற்றுப் பரவலின் எண்ணிக்கையை கணிப்பது வரை என பல தளங்களில் விரியும் பயன்பாடு என இன்றைக்கு ஏறக்குறைய அனைத்து செயல்பாடுகளிலும் டேட்டா சயின்ஸின் தாக்கம் பிரதிபலிக்கிறது.

    யாரெல்லாம் படிக்கலாம்?

    எண்கள், கணக்குகளில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் டேட்டா சயின்ஸ் படிக்கலாம். 12 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் படித்தவர்கள், இளங்கலை படிப்புகளுக்கு தகுதியானவர்கள். அதேபோல இளங்கலை படிப்பில் கணிதம், புள்ளியியல், அறிவியல் பயின்ற மாணவர்கள், முதுகலை படிப்பாக டேட்டா சயின்ஸ் படிப்புகளை படிக்கலாம்.

    மற்ற படிப்புகளில் இருந்து சற்றே மாறுபட்ட இந்தத் துறையில், எண்ணற்ற அளவிலான தரவுகளைக் கையாள்வதற்கு மன ஆற்றலும் அவசியமாகிறது. எக்ஸெல் (Excel) குறித்த அறிவும் தேவை. ஆர் (R) ப்ரோகிராமிங், டாப்ளூ (Tableau), மைக்ரோசாப்ட் பி.ஐ. (BI), கூகுள் சார்ட்ஸ் (Charts), பைதன் (Python), சாஸ் (SAS) போன்ற மென்பொருள் குறித்த அறிவு இருப்பதும் அவசியமானது.

    வேலைவாய்ப்புகள்

    டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு, டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா ஆர்க்கிடெக்ட், டேட்டா மைனிங் என்ஜினீயர், பிசினஸ் இன்டலிஜென்ஸ் அனாலிஸ்ட்... என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழகம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளதால், வரும் காலங்களில் மாணவர்களின் தவிர்க்கமுடியாத தேர்வாக டேட்டா சயின்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

    • குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை பெற்றோரின் நேரடி பார்வையில் வளர்ப்பதே நல்லது.
    • குழந்தைகளுடன் பேச, போதிய நேரத்தை பெற்றோரால் ஒதுக்க முடிவதில்லை.

    பெற்றோர் மன அழுத்தத்தில் இருந்தால் பிள்ளைகளின் மனப்பதற்றம் அதிகரிக்கும். அவர்கள் எப்போதும் வருத்தத்துடன் காணப்படுவார்கள். நடத்தைக் கோளாறுகள் தென்படலாம். உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படிப்பிலும் மந்தமாவார்கள்' என்கிறது ஸ்வீடனில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு. எப்போதும் எல்லா விஷயங்களுக்கும் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நம்மூர் பெற்றோருக்கு இது மிகவும் பொருத்தமானது

    பெற்றோருக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. குடும்பச்சூழல், சுற்றுச்சூழல், அலுவலகச் சூழல் எல்லாமே இதில் அடங்கி இருக்கிறது. தம்பதிகள் இருவருமே வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில், நேரமின்மை, போதிய தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. பெற்றோரில் யாராவது ஒருவருக்கு மன அழுத்தம் இருந்தால் கூட, அது அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கும்.

    மாநகரங்களில் தனிக்குடும்பமாக வசித்து வரும் தம்பதிகளின் குழந்தைகளில் 100ல் ஒரு குழந்தை இவ்விதம் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுடன் பேச, அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க போதிய நேரத்தை பெற்றோரால் ஒதுக்க முடிவதில்லை. இது குழந்தைகளுக்கு ஒருவித ஏக்கத்தை கொண்டு வந்து படிப்பையும் பாதிக்கிறது.

    வீட்டில் நேரம் ஒதுக்கி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியாதவர்கள் டியூசனுக்கு அனுப்புகிறார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு நாள் என விடுமுறை நாட்களில் கூட டியூசனுக்கு அனுப்பப்படுகிறார்கள். எல்லா டியூசனிலும் எல்லா குழந்தைகளுக்கும் சிரத்தை எடுத்து சொல்லிக் கொடுப்பதில்லை. இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

    மதிப்பெண்களும் சற்று குறைவாக எடுக்க ஆரம்பிக்கிறார்கள். இப்போது பெரும்பாலான ஆங்கில பள்ளிகளில் Grade System பயன்படுத்தப்படுகிறது. A, B, C என 3 கிரேடுகளாக தரவரிசைப் படுத்துகிறார்கள். 5 சதவிகித மதிப்பெண் குறைந்தால் கூட A கிரேடில் இருந்து B கிரேடுக்கு வந்துவிடும். இதனால் சரியாக படிப்பதில்லை என பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்புவார்கள்.

    படிக்கும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் உருவாக இதுவும் ஒரு காரணம். சிங்கிள் பேரன்டிங் முறையிலும் இவ்வித மன அழுத்தம் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதில், குழந்தையுடன் அப்பா அல்லது அம்மா யாராவது ஒருவர்தான் இருப்பார்கள். உதாரணமாக தாயுடன் வசிக்கிறது எனில் தாயின் வருமானத்தால் தான் குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். இதனால் குழந்தையை தனது மேற்பார்வையில் வளர்க்க முடியாமல் ஹாஸ்டலில் விடுவார்கள். ஏற்கனவே அப்பா இல்லாமல் வளரும் குழந்தை இப்போது அம்மாவும் வளர்க்கவில்லை என எண்ணி சோர்ந்துவிடும்.

    மனப்பாதிப்பு உண்டாகும். படிப்பில் கவனம் இல்லாமல் போய்விடும். குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை பெற்றோரின் நேரடி பார்வையில் வளர்ப்பதே நல்லது. 1984-1994 காலகட்டத்தில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மற்ற பிள்ளைகளை விட மன அழுத்தம் உடைய பெற்றோரின் பிள்ளைகள் 4.5 சதவிகிதம் மதிப்பெண் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. பார்க்கும் போது சிறிய அளவாக தெரிந்தாலும் பெரியவர்களாக மாறும் போது இன்றைய போட்டி உலகில் அரை சதவிகிதம் குறைந்தால் கூட, மருத்துவ சீட்டையோ அல்லது இன்ஜினியரிங் சீட்டையோ இழக்க நேரிடுமே. அதனால்தான் கிரேடு குறைந்தால் கூட இன்றைய பெற்றோர் பெருமளவு கவலைப்படுகிறார்கள்.

    பெற்றோர் மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் போன்ற வழிமுறைகளை மேற்கொள்ளலாம். அவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீண்டாலே அவர்களின் பிள்ளைகளும் அதிலிருந்து வெளிவந்துவிடுவார்கள். அப்படியும் வெளிவரவில்லை எனில், மனநல ஆலோசகரின் உதவியுடன் குழந்தைக்கும், பெற்றோருக்கும் கலந்தாலோசனை அளித்தால் இந்தப் பிரச்னையில் இருந்து விரைவாக வெளிவரமுடியும். முக்கியமாக தங்கள் பிள்ளைகளுடன் போதுமான நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம்.

    • குழந்தைக்கு காது வலிக்கிறது என்பதற்காக காதில் எண்ணெய் காய்ச்சி ஊற்றுவது தவறு.
    • குழந்தையை அடிக்கடி தாக்கும் காது பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்று பார்க்கலாம்.

    காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்னை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.

    முதலாவதாக, தெரிந்து கொள்ளுங்கள். பட்ஸ், ஹேர் பின், கொண்டை பின் என எதுவும் குழந்தைக்கு பயன்படுத்தவே கூடாது. இதெல்லாம் குழந்தையின் சின்ன காதுகளைப் பாதிக்கும். எந்தவித கூர்மையான பொருட்களையும் குழந்தையின் காது அருகில் தயவு செய்து கொண்டு செல்லாதீர்கள். டவல் (துண்டு), ஒரு முனையை எடுத்துக்கொண்டு அதை மெல்லியதாக உருட்டி, குழந்தையின் காதில் விட்டு ஈரத்தை எடுக்கலாம்.

    குழந்தை குளித்த பின் செய்ய வேண்டிய முறை இது. குழந்தையின் காது அழுக்காக இருந்தால், துணியை ஈரம் செய்துவிட்டு காதை லேசாகத் தொட்டு துடைத்து எடுக்கவும். சோப் பயன்படுத்தவே கூடாது. காதுகளின் உள் மடலையும் வெளி காதையும் மென்மையான, ஈரமான துணியால் துடைத்து எடுக்கவும். ஒவ்வொரு முறை குழந்தை குளித்த பின்னும் துண்டால் காதின் ஈரத்தை ஒத்தி ஒத்தி எடுக்கலாம்.

    குழந்தை காதில் ஏதோ அசௌகரியமான உணர்வு உணர்ந்தாலோ, காதில் வலி இருப்பது போல அழுதாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். காதை சுத்தம் செய்யும்போது, குழந்தை கதகதப்பான உணர்வை உணர வேண்டும். ஆதலால், அடர்த்தியான, துணியால் குழந்தையை போர்த்திக்கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே அதிகமாக வாக்ஸ் காதில் உருவாகும். அவர்களை கட்டாயமாக காது மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பிக்கவும்.

    * காது வலி தனியாக வருவதில்லை. சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும்போது காதுவலி, காது அடைப்பு மற்றும் சீழ் வடிதல் ஏற்படும். மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுக்கு செல்லும் யுஷ்டெசியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டு நோய்த்தொற்று உண்டாவதே காரணம்.

    * சளி இல்லாத போதும் கூட குழந்தைகளுக்கு தாங்க முடியாத காதுவலி உண்டாகலாம். பெற்றோர் அடிக்கடி குழந்தைகளின் காதை சுத்தம் செய்வதால் ஏற்படும் எழுச்சி எனப்படும் கட்டி, குருமி ஆகியவற்றால் குழந்தைகளுக்கு கடுமையான காதுவலி ஏற்படலாம். குழந்தைகளின் காது சவ்வு மிகவும் சன்னமாகவும் மிருதுவாகவும் இருக்கும். காதில் அடித்தாலோ 'சவ்வு கிழிதல்' ஏற்பட்டு நோய்த் தொற்றுப் பரவலாம்.

    * அதிக சத்தமும் குழந்தைகளின் காதுக்கு எதிரிதான். வெடி சத்தம், பெரிய மணியோசை, பட்டாசு சத்தம் ஆகியவை காதுக்கு மிக அருகில் கேட்பதால் சவ்வு கிழிதலுக்கு வாய்ப்பு உண்டு. அதிக காய்ச்சலாலும் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறையக்கூடும். பட்ஸ் பயன்படுத்தி காதில் உள்ள அழுக்கை எடுக்க முயற்சிப்பதாலும் கேட்கும் திறன் குறையலாம். காதுகளை மென்மையாகப் பராமரிக்க வேண்டும். குழந்தைக்கு காது வலிக்கிறது என்பதற்காக காதில் எண்ணெய் காய்ச்சி ஊற்றுவது தவறு. அந்தப் பழக்கம்கூட குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

    • குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.
    • வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். குழந்தைகளா...! நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்.

    பருப்பு உணவுகள் : இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் சேர்க்கும்போது, உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசிப்பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.

    ஆரோக்கியமான எண்ணெய்கள்: ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயா பீன்ஸ், பிற நட்ஸ் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.

    பால் பொருட்கள் : பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், கால்சியம் உட்கொள்ளும் இடைவெளியை ஈடுசெய்ய அவர் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    கேரட் : கேரட் 'வைட்டமின்-ஏ' நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரை, காலே மற்றும் பிற காய்கறிகளிலும் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.

    கோழி : கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது.

    மீன் : அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் (EFA) மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இருதய அமைப்பை பலப்படுத்துகின்றன.

    சிட்ரஸ் பழங்கள் : எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின்-சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். வைட்டமின்-சி ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின்-சி உள்ளது.

    வாழைப்பழங்கள் : மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான கூறுகள் எனலாம். தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து சாப்பிடலாம்.

    வைட்டமின்-டி : இது ஒரு உணவு அல்ல என்றாலும், இது உடல் உறிஞ்சும் ஒன்று. எனவே உடல் வளர்ச்சியில் வைட்டமின்-டி வகிக்கும் ஒருங்கிணைந்த பங்கைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம். சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    • விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.
    • வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.

    வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது போன்ற காரணங்களால், அதற்கு அடிமையாகும் அளவுக்குப் பலரும் மாறிவிடுகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.

    மேலும் தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் 'சைபர் புல்லியிங்' என்கிறார்கள்.

    நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது. அதேபோல, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையத்தைப் பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்குப் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.

    'முள்ளை முள்ளால் எடுப்பது' போல வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும்.

    தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருள்கள் உள்ளன. தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

    • வீடியோ கேம் விளையாடுவதை திடீரென மொத்தமாக நிறுத்தினால், மனநலம் பாதிக்கப்படலாம்.
    • வன்முறை செய்யத் தூண்டும் விதமாக சில வீடியோ கேம் விளையாட்டுகள் அமைந்துள்ளன.

    கடந்த சில வருடங்களில் சிறுவர்-சிறுமிகள் வீட்டுக்கு வெளியே வந்து விளையாடுவது பெருமளவில் குறைந்திருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு, பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கு பயப்பட ஆரம்பித்தனர். காலச்சூழல் எல்லோரையும் வீட்டிற்குள் முடக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வீடியோ கேம்சுக்கு அடிமையாகி விட்டனர்.நேரத்தை போக்குவதற்கும், மனசை ரிலாக்ஸ் செய்வதற்குமான பொழுதுபோக்குதான் இது. ஆனாலும் இதன் மூலம் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் அச்சப்பட வைக்கின்றன.

    வீடியோ கேம் விளையாடும்போது பெரும்பாலும் அதிக அசைவுகள் இன்றித்தான் உட்கார்ந்திருப்போம். கூடவே, நொறுக்குத் தீனிகள், துரித உணவு, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் என தவறான உணவுப் பழக்கமும் ஒட்டிக்கொள்கிறது. பெரும்பாலான குழந்தைகள் வீடியோ கேம்ஸ், கணினி, செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களில் ஏதாவது ஒன்றைத் தினமும் சராசரியாக நான்கு மணி நேரத்துக்கும் மேலாக உபயோகப்படுத்துகிறார்கள்.

    இதன் காரணமாக உடல் எடை அதிகமாக இருப்பது, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள், மூட்டு வலி, கருப்பை பாதிப்பு, புற்றுநோய், தூக்கமின்மை போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    வன்முறை செய்யத் தூண்டும் விதமாக சில வீடியோ கேம் விளையாட்டுகள் அமைந்துள்ளன. அடித்தல், குத்துதல், துப்பாக்கியால் சுடுதல், வெடிகுண்டு வீசுதல் போன்ற விளையாட்டுகளை நண்பர்களுடன் இணைந்து விளையாடுகின்றனர். இதன் தாக்கத்தால் சிலர் சரியாகத் தூங்குவதில்லை. அப்படியே தாமதமாக இரவில் தூங்கினாலும் வீடியோ கேம் விளையாடுவது போன்ற கனவு வருவதாக கூறுகின்றனர். இத்தகைய உளவியல் ரீதியான சிக்கல்கள் பின்னாளில் பல பாதிப்புகளை உருவாக்கும்.

    வீடியோ கேம் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்க நினைப்பவர்கள் படிப்படியாக அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். புத்தகம் வாசிக்கக் கொடுப்பது, தோட்ட வேலை, வீட்டு அலங்காரம் போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். அவர்கள் வீடியோ கேம் விளையாடுவதை திடீரெனமொத்தமாக நிறுத்தினால், மனநலம் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

    நீங்கள்தான் உங்கள் குழந்தையின் ரோல்மாடல். ஆகவே, நீங்கள் முதலில் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்.

    உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.

    சத்தான, ஆரோக்கியமான உணவு வகைகளைக் கூடுமானவரை வீட்டிலேயே தயார்செய்து கொடுக்க வேண்டும்.

    சாப்பிடும்போது டி.வி., வீடியோ கேம், செல்போன் பார்க்க அனுமதிக்கக்கூடாது.

    டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

    வெளியே சென்று விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.

    தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதற்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளின் அதிகப்படியான உடல் எடை குறைவதற்கு மருத்துவரின் ஆலோசனையோடு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    • குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும்.
    • குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும்
    • தினமும் குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளுக்காகவே ஒதுக்குவதுதான் சிறப்பானது.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள். அதனை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

    குழந்தைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

    குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.

    அறிவுரை வழங்குவதை தவிருங்கள்:

    இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.

    காது கொடுத்து கேளுங்கள்:

    பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள். பெற்றோரின் பார்வையில் அவர்கள் பேசும் விஷயங்கள் சாதாரணமாக தெரியலாம். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வை முன் வைத்தால் மட்டுமே தொடர்ந்து பெற்றோரிடம் ஆர்வமாக பேசுவதற்கு முயற்சிப்பார்கள். அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவில்லை என்றால் நாளடைவில் பெற்றோரிடம் பேசும் நேரம் குறைந்து போய்விடும்.

    குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள். கண் தொடர்பு அவசியமானது. அவர்களின் கண்களை பார்த்தவாறே அவர் களின் பேச்சை ரசித்து கேளுங்கள். குழந்தைகள் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல், பேச்சுக்கு இடையே குறிப்பிடுவார்கள். அதனை பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    நேர்மறையான சம்பவங்களை சொல்லுங்கள்:

    குழந்தைகளிடம் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் கதைகளை கூறலாம். தங்கள் வாழ்க்கையில் நடந்த நேர்மறையான சம்பவங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளலாம். எதிர்மறையாக உணரக்கூடிய விஷயங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தாங்கள் செய்த தவறுகள், எதிர்பாராமல் நடந்த விபத்துகள், மனதை காயப்படுத்தும் கசப்பான சம்பவங்கள் போன்றவற்றை சொல்லக்கூடாது. நீங்கள் பகிரும் சம்பவங்கள் அல்லது கதைகள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

    தினமும் நேரம் ஒதுக்குங்கள்:

    குழந்தைகளிடம் தினமும் பேசுவது பெரிய விஷயமல்ல. தினமும் குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளுக்காகவே ஒதுக்குவதுதான் சிறப்பானது. அந்த நேரம் அவர்களுக்கு உரியதாக மட்டுமே அமைய வேண்டும். அன்றைய நாளின் செயல்பாடுகள் முழுவதையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். இது குழந்தைகளுடன் வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். பாதுகாப்பான சூழலையும் உணர்வார்கள். பெற்றோர்கள் தங்களுக்கு பக்கபலமாக இருப்பதாக அகம் மகிழ்வார்கள்.

    கேட்ஜெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்:

    பெரியவர்கள், குழந்தைகள் உட்பட பெரும்பாலானவர்கள் மொபைல் போன்கள், தொலைக்காட்சி அல்லது வீடியோ கேம் விளையாட்டுகளில் பொழுதை கழிக்கிறார்கள். அவை மன ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நெருக்கமான உறவுகளுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பையும் குறைத்துவிடும். எனவே கேட்ஜெட் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனை பின்பற்ற வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் எக்காரணம் கொண்டும் கேட்ஜெட் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அவர்களின் கவனத்தை பதிய வைக்க வேண்டும். பெற்றோரும் அவர்களுடன் நேரத்தை செலவிடவேண்டும். இது குழந்தைகளுடன் ஆழமான பிணைப்பை வளர்க்க உதவும்.

    • குழந்தைகளை கவரும் வகையில் பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • ஆசுவாசமாக அமர்ந்து புத்தகங்கள் படிப்பதற்கு ஏதுவாக நாற்காலிகள், மேசைகள் போடப்பட்டுள்ளன.

    ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பெற்றோரை பிரிந்து தவிக்கும் குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறி ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் வரை போலீசாரின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். பெரும்பாலும் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அறையிலோ, அங்கிருக்கும் புற காவல் நிலைய அறையிலோ, பயன்பாடு இன்றி காலியாக கிடக்கும் அறையிலோ குழந்தைகள் அமர வைக்கப்படுவது வழக்கம்.

    அடிப்படிப்பட்ட சூழலில் பாதுகாப்பான சூழலை உணர வைக்கும் நோக்கத்தில் குழந்தைக்கான சேவை மையம் நாட்டின் பல ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு ரெயில் நிலையத்தில் குழந்தைகள் மையம் கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. அதனை பின்பற்றி இரண்டாவது மையம் யஸ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 'குஷி ஹப்' எனப்படும் இந்த மையம் ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் 400 சதுர அடி பரப்பளவில் ஏற் படுத்தப்பட்டுள்ளது.

    இது குழந்தைகளை கவரும் அம்சங்களுடன் காட்சி அளிக்கிறது. அங்கு குழந்தைகளை மையப்படுத்தி அழகிய சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. குழந்தைகளை கவரும் வகையில் பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. புத்தக அலமாரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசுவாசமாக அமர்ந்து புத்தகங்கள் படிப்பதற்கு ஏதுவாக நாற்காலிகள், மேசைகள் போடப்பட்டுள்ளன. கழிப்பறை வசதியும் உள்ளது.

    ''குழந்தைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கி அவர்களை பாதுகாப்பாக உணர வைப்பதுதான் எங்கள் நோக்கம்'' என்பது அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது. வீட்டை விட்டு வெளியேறி ரெயிலில் பயணிக்கும் குழந்தைகள், கடத்தப்படும் அல்லது தொலைந்து போகும் குழந்தைகளை மீட்டு அறிவுரை வழங்கவும் செய்கிறார்கள். ரெயில் நிலையத்தில் தனியாக சுற்றினால் கடத்தல்காரர்களிடம் சிக்கும் அபாயம் இருக்கிறது என்பதையும் குழந்தைகளுக்கு விளக்கி புரிய வைக்கிறார்கள்.

    எதற்காக வீட்டை விட்டு ஓடி வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு பெற்றோரிடம் பக்குவமாக பேசி வழி அனுப்பி வைக்கவும் செய்கிறார்கள். குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாத பட்சத்தில் குழந்தை நல குழுவிடம் ஒப்படைக்கிறார்கள். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சைல்டு லைன் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இந்த குழந்தை சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

    பெங்களூரு ரெயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள குழந்தைகள் மையம் மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவதற்கு எவ்வாறு பயிற்றுவிப்பது என்று பார்ப்போம்.
    • மீண்டும், மீண்டும் எழுதி பயிற்சி செய்தல் வேண்டும்.

    அழகான கையெழுத்து குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. சரளமாக வாசிப்பதற்கு உதவுகிறது. காட்சி உணர்வை செயல்படுத்துகிறது. மதிப்பெண்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவதற்கு எவ்வாறு பயிற்றுவிப்பது என்று பார்ப்போம்.

    முதலில் குழந்தைகள் எந்தெந்த விரல்களைப் பயன்படுத்தி எழுதுகோல்களைப் பிடித்து எழுதுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். சிலர் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலையும், ஒரு சிலர் கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் பயன்படுத்தி எழுதுவார்கள். இதனைக் கண்டறிந்த பின்பு அவர்களின் வசதிக்கு ஏற்றது போல எளிமையாகக் கையாளும் வகையில் எடை மற்றும் தடிமன் குறைந்த எழுதுகோல்களை வழங்க வேண்டும். இதன் மூலம், எழுதும்போது அவர்களையும் அறியாமல் விரல்களுக்கு அழுத்தம் கொடுப்பது தவிர்க்கப்பட்டு விரல் வலி, கை வலி இல்லாமல் எழுதுவதில் கவனம் அதிகரிக்கும்.

    இரண்டாவதாக, எழுத்துக்களை அதன் வரி வடிவம் (நேர்க்கோடு, படுக்கைக் கோடு, சாய்வுக் கோடு), வளைவு, சுழி போன்றவற்றை வடிவம் மாறாமல் எழுதப் பழக வேண்டும். அவ்வாறு பழகும்போதுதான் கையெழுத்து அழகாகும். இதற்கு சிறு கட்டமிடப்பட்ட குறிப்பேடு, இரட்டை வரி, நான்கு வரி குறிப்பேடு பயிற்சியே சிறந்தது. இதன் மூலம் ஒரு எண் அல்லது எழுத்து, இந்த அளவில் தான் அமைய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும்.

    மூன்றாவதாக, எழுத்துக்களை முறையான அமைப்பு, வடிவத்தில் எழுதக் கற்றுக் கொண்ட பின்னர், ஒரு வரி நேர்க்கோடு இட்டக் குறிப்பேட்டில் எழுதப் பழக வேண்டும். இதன் மூலம் எழுத்துக்களின் அடிப்பகுதியை எவ்வாறு கோட்டின் மேற்புறம் அமைத்து எழுத வேண்டும்; மேல் நோக்கி மற்றும் கீழ் நோக்கி எழுத வேண்டும் என்று தெரிந்துகொள்ள முடியும்.

    நான்காவதாக, எழுதும் வார்த்தையில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் ஒரே அளவில் அமைய வேண்டும். ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது என்று அளவு மாறுபடாமல், எழுத்துக்களின் அளவிலும் கவனம் செலுத்தி எழுத வேண்டும். பயிற்சியே சிறந்த ஆசான்! எனவே மீண்டும், மீண்டும் எழுதி பயிற்சி செய்தல் வேண்டும். இதன் மூலம் நிதானமாக எழுதும் சூழலிலும், 'தேர்வு' போன்று கால அவகாசம் அளித்து, வேகமாக எழுத வேண்டிய சூழலிலும் அழகாக எழுத முடியும்.

    ×