என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
    • பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை போதிக்கின்றனா்.

    உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அா்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட ஜூன் மாதம் 1-ந்தேதி உலக பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    நாம் எவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்தாலும் அந்த வெற்றிக்கு முழு காரணமானவா்கள் நம் பெற்றோர்களாக தான் இருக்க முடியும். ஒரு சிற்பி எவ்வாறு தன் சிலையை நுட்பமாக செதுக்குகிறானோ அதேபோல நம் பெற்றோர் நம்மை கவனமாக செதுக்குகிறார்கள். அதாவது பிறந்ததில் இருந்து 3 வயது வரை அந்த குழந்தைக்கு பேசக் கற்றுக் கொடுக்கின்றனா்.

    அதன்பிறகு பள்ளிக்கூடத்தில் சோ்ந்து கல்வி அறிவையும் சமுதாயத்தை பற்றியும் அறிய வைத்து அறிவே ஆற்றல் என உணா்த்துகின்றனா். பிள்ளைளகளின் விருப்பத்திற்காக தங்கள் சக்திக்கு மீறி மேற்படிப்பையும் தருகின்றனர். பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை போதிக்கின்றனா். நம்மை ஓய்யாரமாய் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் அமைகின்றனா். ஆனால் இன்றைய தலைமுறையினா் சிலர் வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கின்றனா். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்தநிலை ஏற்படும் என்பதை உணராமல் மூடத்தனமாக இருக்கின்றனா்.

    இந்த உலகில் வேறு எவராலும் நம் பெற்றோர்களுக்கு இணையாக நேசிக்க முடியாது நம்மை. தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

    இன்றைய சமூகத்தினர் பெற்றோர்கள் செய்த எல்லாவற்றையும் மறந்து விட்டு அவா்களை அனாதையாக விட்டு விடுகின்றனர். சிலா் அனாதை இல்லங்களில் சோ்த்து விடுகின்றனா். தமக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்திருந்தால் இன்று நாம் இத்தகைய அழகான உலகினை பார்த்திருக்க இயலாது வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

    தன் பிள்ளைகளுக்காக முழு வாழ்வையே அா்ப்பணிக்கிறார்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகளே தங்களின் வாழ்க்கை என நினைத்து வாழ்கிறார்கள். இதெல்லாம் அவா்களின் கடமை என்று கூறிவிடுகிறார்கள். இன்றைய தலைமுறையினா் கூறுவதுபோல் பெற்றோர்களின் கடமை என்று எடுத்தால் கூட இன்றைய தலைமுறையினா் தங்கள் கடமையை செய்ய வேண்டாமா?

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்மை பெற்றவா்களுக்கு நாம் திருப்பி செலுத்தும் நன்றிக்கடன் உள்ளது. கடமை உள்ளது. இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை குழந்தையின் நிலையை உணா்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவார்கள்.

    பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவா்கள் நம்மைப் பெறவில்லையென்றால் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது ஒரு நல்ல நிலையை அடைந்திருக்க முடியாது. தெய்வத்தை காண்பித்த தெய்வம் பெற்றோர்கள். இவ்வுலகில் பல கேள்விகளுக்கு விடை இல்லை. அதுபோல் தான் பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைக்கிறார்கள். அவா்களின் பாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எழுதுவதற்கு எழுத்துகளும் இல்லை. இந்த கேள்விக்கான விடை பெற்றோர்களுக்கு மட்டும் தான் தெரியுமா என்பது கூட கேள்வியாக இருக்கிறது. பேசக் கற்றுக் கொடுத்தவா்களிடம், உங்கள் பேச்சுத் திறமையை காண்பிக்காதீா்கள்...

    • பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை காட்டிலும், தாய் முக்கியமானவர்.
    • பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.

    சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடங்குவது எங்கே? என்பது பற்றி மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கடந்த காலங்களில் எதுவெல்லாம் வெளிப்படையாக தெரியாதோ, அதை எல்லாம் இப்போது இணையதளம் மூலம் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடிகிறது.

    எல்லா தகவல்களையும் செல்போன் மூலம் தனியாக தெரிந்து கொள்வதே குற்றத்தின் தொடக்கமாகிறது. குறிப்பாக செல்போன் செயலிகள் (ஆப்ஸ்) அதிகரித்து விட்டன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் சிறார்களின் தொடர்புகள் அதிகரிக்கிறது. நல்லவர்களின் தொடர்பு மட்டுமின்றி கெட்டவர்களின் சகவாசமும் எளிமையாக கிடைக்கிறது.

    யாரென்றே தெரியாத நபர்களுடன் கூட பேச முடிகிறது. அவர்களை எளிதாக நம்பியும் விடுகிறார்கள். பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை காட்டிலும், தாய் முக்கியமானவர். அவருக்குதான் பொறுப்புகள் அதிகம். இது நவீன உலகம், குடும்பத்தில் தாய், தந்தை சம்பாதிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் சம்பாதிப்பதை விட குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். என் குழந்தையை நான் தான் பார்ப்பேன் என்ற மனநிலைக்கு பெற்றோர் வர வேண்டும். தாய், தனது பெண் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.

    அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்று நோக்க வேண்டும். குழந்தைகளின் கையில் எந்த வகையான செல்போன் இருக்கிறது, அதில் என்னென்ன தகவல்களை அவர்கள் பார்க்கிறார்கள், தேவைக்கு தான் செல்போன் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைக்க வேண்டும். தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள்தான் நடக்கின்றன. எனவே, பள்ளி செல்லும் பெண், ஆண் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கக்கூடாது. அப்படியே பிள்ளைகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றால், தாய் அல்லது தந்தை என ஒருவர் அவர்களுடன் இருந்து அதனை கண்காணிக்க வேண்டும்.

    ஆன்லைனில் வகுப்புகள் நடந்தால், அந்த வகுப்பு முடிந்த பின்னர் அவர்களிடம் இருந்து உடனடியாக செல்போன்களை வாங்கிவிட வேண்டும். கண் பார்வையில் செல்போன்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பிள்ளைகளின் கையில் செல்போனை கொடுத்து விட்டு பெற்றோர் தங்களின் வேலையை செய்யக்கூடாது. விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றார் போல் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் கட்டுப்பாடுகள் விதித்து தான் ஆக வேண்டும்.

    செல்போனை "ஸ்கிரீனிங்" செய்தாலே பெருமளவு குற்றங்கள் தடுக்கப்படும். காலை, மாலை, இரவு என நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளுடன் மனம்விட்டு பேச வேண்டும். பேசுவது குறைந்ததன் விளைவாகத்தான், செல்போன் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. பிள்ளைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். அந்த காலத்தில் எப்படி இருந்தோமோ, அதுபோல் தான் இந்த காலத்திலும் பெண் பிள்ளைகளை கவனமாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு படிப்பில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அதனை பிள்ளைகள் தவறாக பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். பெண் பிள்ளைகளை தைரியமாக வளர்க்க வேண்டும், எந்த பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்று கொடுப்பது கூடுதல் பலம்.

    எல்லாவற்றையும் விட முக்கியமாக, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு நல்ல விதமாக போதனைகளை எடுத்துரைக்க வேண்டும். வகுப்பு தொடங்கும் முன்பு செய்தித்தாள்களில் வரும் குழந்தைகள் தொடர்பான குற்றச்சம்பவங்களை எடுத்துரைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாரும் தொட்டாலோ, தவறாக நடக்க முயன்றாலோ, தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலோ அதுகுறித்து பெற்றோரிடம் அல்லது ஆசிரியர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.

    குறிப்பாக 12 வயது முதல் 14 வயதுக்குள் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கும் அனைத்தும் அவர்களின் மனதில் எளிதாக பதிந்து விடும். எனவே, அந்த காலகட்டத்தில் நல்லவிதமாக கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். அவ்வாறு எடுத்துரைத்தால் 18 வயதில் நல்ல கல்லூரியை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். அதுபோல், 21 வயதிற்கு பின்னர்தான் திருமணத்தை பற்றி பேச வேண்டும். பெற்றோரின் தூண்டுதலால், சிறிய வயதில் திருமணம் செய்வதாலும் ஏராளமான உடல்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. குழந்தை திருமணம் நடத்த ஏற்பாடு செய்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    பெண் குழந்தைகளை மற்றொருவர் கட்டுப்படுத்தும் விதமாக வைக்கக்கூடாது. முதலில் பெற்றோர், 2-வதாக ஆசிரியர்கள், அடுத்தது பள்ளி, அடுத்தது சமூகம் இவை எல்லாம் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இது சரியாக இருந்தால், பெண் குழந்தைகள் தவறான பாதையை தேர்வு செய்ய மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்.

    குடும்பத்துக்காக பட்ஜெட் போடும்போது மாதாந்திர செலவுகள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளுடைய தேவைகளை, அவர்களாகவே பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட நிதியை ஒதுக்கலாம். இந்த நிதியை குழந்தைகளின் பங்களிப்புடன் உருவாக்கும்போது, சேமிக்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கான சில வழிகள்:

    சேமிப்புக் கணக்கு தொடங்குங்கள்:

    குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். இதில் அவர்களின் தினசரி தேவையை விட, நீண்ட காலத் தேவையை நிறைவேற்றுவதுதான் முக்கியமானது. இதற்காக, குழந்தைகள் பெயரில் வங்கியிலோ, தபால் நிலையத்திலோ தனியாகச் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குழந்தைகளுக்குத் தரப்படும் நிதியை அவர்கள் மூலமாகவே கணக்கில் செலுத்தி, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

    ஊக்கத்தொகை வழங்குங்கள்:

    நீங்கள் சொல்லும் வேலைகளை குழந்தைகள் சிறப்பாகச் செய்யும்போது, அதைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கொடுக்கலாம். இந்த நிதியைக் குழந்தைகளுக்கான தனிப்பட்ட நிதியாகக் கருதச் செய்வது அவசியம். குடும்ப பட்ஜெட் போடும்போது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை தருவது போல், குழந்தைகளையும் பங்களிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு குடும்பத்தின் நிதி நிலைமை, அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என அனைத்தையும் கற்பிக்க முடியும்.

    பணம் சம்பாதிக்கும் வழிகள்:

    குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு பணத்தின் தேவை குறித்தும், அதை எவ்வாறு ஈட்ட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஈட்டும் பணத்தைக் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொடுப்பது நல்லது. சிறு வயதில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டு சாமான்களில், நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை, தேவையானவர்களுக்கு விற்பது, தங்களின் திறமையைப் பயன்படுத்தி உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்வது, பள்ளிப் படிப்புடன், பகுதி நேர வேலையை மேற்கொள்வது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டுவது பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். இவற்றால், எதிர்பாராத பணத்தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

    பண இலக்குகள்:

    குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை, கால அளவை கொண்டிருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடும் அதிகரிக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லத் திட்டம் போடுவது, நீண்ட நாட்களாக வாங்க நினைக்கும் பொருட்களை வாங்கத் திட்டமிடுவது, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவது போன்றவை இதில் அடங்கும். குழந்தைகளுக்குப் பண சுதந்திரம் அளிப்பதுடன், அதை எப்படி சம்பாதிப்பது, எப்படிச் சேமிப்பது, எதற்குச் செலவழிப்பது என்பதைக் கற்றுக் கொடுத்தால், வளர்ந்தபின் எந்தவித பண நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கும் பண்பு உருவாகும்.

    • குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கி தருவது பெற்றோரின் கடமையாகும்.
    • குழந்தைகளின் தனித்துவத்தை புரிந்து கொணடு தன்னம்பிக்கையோடு அவர்களை வளர வழிகாட்ட வேண்டும்.

    குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கி தருவது பெற்றோரின் கடமையாகும். அதை செயல்படுத்தும் விதமாக இன்றைய பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்களை கையாளவும் குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்தவும் உரிய பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.

    மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தரும் மனப்போராட்டத்துக்கான தீர்வாக அமைந்தது எமோஷனல் இன்டெலிஜன்ஸ் எனும் உணர்வுசார் நுண்ணறிவு

    இம்முறையை பயன்படுத்தி குழந்தைகளை சிறப்பாக வளர்க்கும் நுணுக்கங்களை இன்றைய பெற்றோர்களுக்கு சொல்லி கொடுத்தால் நாளைய உலகம் சிறப்பாக அமையும்.

    மனிதனின் 90 சதவீத மூளை வளர்ச்சி பிறந்தது முதல் 6 ஆண்டுகளில் நடைபெறுகிறது. எனவே 6 வயதுக்குள் குழந்தைகளுக்கு நாம் அமைத்து கொடுக்கும் அடித்தளம், அவர்களை வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும். இதை பெற்றோர்கள் உணர்ந்தால் குழந்தை வளர்ப்பை சிறப்பாக செயல்படுத்தலாம்.

    குழந்தைகளின் தனித்துவத்தை புரிந்து கொணடு தன்னம்பிக்கையோடு அவர்களை வளர வழிகாட்ட வேண்டும்.

    பெற்றோருக்கு சொல்லவிரும்புவது

    பத்தில் ஒன்பது இந்திய குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இது மிகவும் ஆபத்தானது. இம்மாதிரி சூழ்நிலையில் பெற்றோர் தேர்வில் மதிப்பெண் வாங்குவதற்குமட்டும் தங்களுடைய குழந்தைகளை தயார் செய்யும் மனப்பாங்கு தவறானது. இக்கட்டான சூழ்நிலையில் சரியான முறையில் அவர்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டிய அறிவையும், அனுபவத்தையும் குழந்தைகளுக்கு வழங்குவது முக்கியமானது. உணர்வுசார் நுண்ணறிவுடன் வளரும் குழந்தைகள் தேர்விலும் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் போதும். அவர்களது குழந்தைகளின் வாழ்வு வளம் பெறும்.

    • அவர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் தன்னம்பிக்கையையும், மன தைரியத்தையும் கொடுங்கள்.
    • தேவைப்பட்டால் மன நல ஆலோசகர், மருத்துவரை அணுகி சுமுக தீர்வு காணுங்கள்.

    இளம் பருவத்தினரில் ஐந்தில் ஒருவர் மன நோய்க்கு ஆளாவதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. வாழ்வியல் முறைதான் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. 10 வயதாகும் சுஜாதா, தந்தையின் பணி நிமித்தம் காரணமாக டவுண் பகுதியிலிருந்து மெட்ரோ நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்தாள். புதிய வீடு மற்றும் பள்ளி சூழலுக்கு தன்னை மாற்றிக்கொள்வதற்கு சுஜாதா ரொம்பவே சிரமப்பட்டாள்.

    முந்தைய பள்ளியில் படித்த நண்பர்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட வகுப்பு தோழர்களுடன் பழக வேண்டியிருந்தது. அது அவளின் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்கு வந்த பிறகும் பள்ளிச் சூழலில் இருந்து மீள முடியாமல் தவித்தாள்.

    மகளின் சுபாவத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கவனித்த தாயார், அதுபற்றி கேட்டபோது ஆரம்பத்தில் முறையாக பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தி கேட்ட பிறகு, சில மாணவர்களின் செயல்பாடுகளால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகுவதை ஒப்புக்கொண்டாள். சுஜாதாவை போன்று இளம் பருவத்தில் மன அழுத்தம், கவலை, மனச்சோர்வுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    10 முதல் 20 சதவீதம் வரையிலான இளம் பருவத்தினர் மன நலம் சார்ந்த பாதிப்புக்கு ஆளாவதை உலக சுகாதார நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது. எனினும் அவர்களுக்கு முறையான மன நல ஆலோசனை வழங்கப்படாத நிலையே நீடிக்கிறது. அறியாமை, சமூக நிலைமை, மன நலம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவை அதற்கு காரணமாக இருக்கலாம். இதன் விளைவாக கவலை, மனச்சோர்வு, தற்கொலை சிந்தனை, பசியின்மை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்றவை தலைதூக்குகின்றன.

    நண்பர்களிடையே நட்பை பேணுவதில் சுமுக நிலை இல்லாமை, படிப்பு விஷயத்தில் பெற்றோரின் எதிர்பார்ப்பு போன்ற விஷயங்களும் பதின்ம வயதினரிடத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன. அவர்களிடத்தில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஆரோக்கியமான வழிமுறைகள்:

    * உங்கள் வீட்டில் உள்ள பதின்ம வயதினரின் நலனில் நீங்கள் அக்கறை கொள்வதை அவர்கள் உணர்ந்து கொள்ளும்படி செயல்படுங்கள். அன்பு, பாசத்தை வெளிப்படுத்துங்கள்.

    * அவர்கள் கூறும் யோசனைகளை காது கொடுத்து கேளுங்கள். நல்ல யோசனைகளாக இருந்தால் மனதார பாராட்டுங்கள். அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுங்கள். அவர்களின் வாழ்க்கை நல்லபடியாக அமைவதற்கு நீங்கள் பக்கபலமாக இருப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

    * அவர்களுடன் குடும்பமாக ஒன்றிணைந்து நேரத்தை செலவிடுங்கள்.

    * அப்போது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுங்கள்.

    * அவர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் தன்னம்பிக்கையையும், மன தைரியத்தையும் கொடுங்கள். நீங்கள் பின் புலத்தில் பக்கபலமாக இருப்பதை உறுதிபடுத்துங்கள். தேவைப்பட்டால் மன நல ஆலோசகர், மருத்துவரை அணுகி சுமுக தீர்வு காணுங்கள்.

    • குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான்.
    • சரியான கண்காணிப்போடு 15 வயதுகளில் பிள்ளைகளை தனியாக தூங்கவைப்பதே நல்லது.

    குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான். ஆனால் எந்த வயதில் குழந்தைகளை தனியாக படுக்க வைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம். குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான். பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரப்பெண்களின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.

    சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரலை கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். 'குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்' என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்தபட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.

    குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் 'இரவுநேர நெருக்கத்திற்கு' இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்க வைக்கும் எண்ணத்துக்கும் வந்து விடுகிறார்கள்.

    இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலில் இருந்து தப்பித்து விடுகிறது.

    7,8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும்.

    அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது. இதிலும் சிலர் டி.வி.யில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன பேய் கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம்.

    நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள். இப்போது ஸ்மார்ட் போன் தொந்தரவு வந்துவிட்டதால், தங்கள் பிள்ளைகளை தனியறையில் தூங்கவைத்தால் திசைமாறிபோய் விடுவார்களோ என்று பெற்றோர் அஞ்சுகிறார்கள். ஆனாலும் சரியான கண்காணிப்போடு 15 வயதுகளில் பிள்ளைகளை தனியாக தூங்கவைப்பதே நல்லது.

    • உலகையே மாற்றக்கூடிய பலமான ஆயுதம் ஒன்று உண்டென்றால் அது கல்வியே.
    • இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும்.

    நாட்டில் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்லவும், வறுமையை போக்கவும் கல்வி மிக, மிக முக்கியமானதாகும். நல்லவை, தீயவை என பிரித்து அறிந்து வாழ்வில் நலம் பெற கல்வி உதவுகிறது.

    'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை'

    என்ற திருவள்ளுவரின் வரிகளில் ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்விதான். அதற்கு வேறு எதுவும் ஈடாகாது என்பது உணர்த்தப்படுகிறது. ஏனைய செல்வங்களை விட சிறப்புடையதாக கல்வி உள்ளது. இதற்கு காரணம் அது வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது, வேந்தராலும் கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது, உயர்வான எண்ணங்களும், உன்னதமான குணங்களும் மேம்பட வேண்டுமென்றால், அதற்கு கல்வி அவசியமாகிறது. இதுவே மனிதர்களையும் விலங்குகளையும் வேறுபடுத்தி காட்டுகிறது.

    கல்விதான் மனிதனின் அறிவு கண்களை திறக்கிறது. பகுத்தறிவை உருவாக்கி அவனை வழிநடத்துகிறது. கல்வியில் சிறந்தவர்கள் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுவார்கள். ஒரு செல்வந்தன் கால சூழ்நிலையால் ஏழை ஆகலாம். ஆனால் கல்வி அறிவுடையவன் அதுபோன்று அல்லாமல் தனது நிலையை மேன்மேலும் உயர்த்தி கொள்ளவே முடியும்.

    தான் பெற்ற கல்வியை தனக்கு மட்டும் பயன்படுவதாக அல்லாமல், பிறருக்கும் பயன்படுவதாக செய்ய வேண்டும். இதன் மூலம் அறியாமையில் இருப்பவர்களை கல்வி அறிவை ஊட்டி விழித்தெழ செய்ய முடியும். மேலும் கற்கும் கல்வியை தெளிவாக கற்க வேண்டும். கற்று முடித்த பிறகு அதன்படி நடக்க வேண்டும் இதையே திருவள்ளுவர்.

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத் தக

    என்ற குறள் மூலம் விளக்குகிறார்.

    பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது என்று மகாத்மா காந்தியடிகள் குறிப்பிடுகிறார். உலகையே மாற்றக்கூடிய பலமான ஆயுதம் ஒன்று உண்டென்றால் அது கல்வியே. தனி மனிதனையும், சமூகத்தையும் மாற்றி நல்வழியில் அழைத்து செல்லக்கூடிய சிறப்பு கல்விக்கு உண்டு. எனவே நிலையான செல்வத்தை அடைய எப்போதும் ஆவலாக இருக்க வேண்டும். கல்வி என்பது கண் போன்றது. இதை கற்காமல் விடுவது கண் இன்றி வாழ்வது போல் ஆகும்.

    இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கல்வி கற்பதில் இருந்து விலகிச்செல்வது அரிதாகவே காணப்படுகிறது. மனிதனாக பிறப்பது பெற்றுவிட்டால் கல்வி செல்வத்தையும் பெற்றுக் கொள்வது சிறப்பு. இதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் பெற முடியும். இளமையில் கற்கும் கல்வி உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.

    இதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம். கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறுவார்கள். செல்வங்களில் சிறந்த செல்வம் கல்வி செல்வம் ஆகும். இத்தகைய உயர்ந்த செல்வத்தை அடைந்து கொள்ள பிற எந்த செல்வத்தையும் இழக்கலாம். ஆனால் கல்வி செல்வத்தை அடைந்து கொள்ள பிற எந்த செல்வத்தையும் இழக்கலாம். ஆனால் கல்வி செல்வத்தை எக்காரணத்தை கொண்டும் இழக்கக்கூடாது.

    கற்கை நன்றே கற்கை நன்றே

    பிச்சை புகினும் கற்கை நன்றே என்று அவ்வையார் கூறுகிறார்.

    அதாவது பிச்சை எடுத்தாவது கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். நாட்டில் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்லவும், வறுமையை போக்கவும் கல்வி மிக, மிக முக்கியமானதாகும். நல்லவை, தீயவை என பிரித்து அறிந்து வாழ்வில் நலம் பெற கல்வி உதவுகிறது. கல்வியை பெறுவது அனைவரின் உரிமை.

    அந்த உரிமையை விட்டு கொடுக்காமல் ஆர்வத்துடன் கற்க வேண்டும். கற்றதை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். கல்வியால் தாழ்ந்தவர்கள் என்று கூறுமளவிற்கு எவருமில்லை. கல்வியால் உயர்ந்தவர்களே பெரும்பாலும் உள்ளனர்.இதை உணர்ந்து விலைமதிப்பற்ற அச்செல்வத்தை அடைய அடியெடுத்து வைப்போம்...!

    • ஒவ்வொருவரின் வளர் இளம் பருவம் (12 வயதில் இருந்து 18 வயது வரை) மிகவும் முக்கியமானது.
    • தற்போது சிறார்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட போதைப்பழக்கம் முக்கியமானதாக உள்ளது.

    "ஒவ்வொருவரின் வளர் இளம் பருவம் (12 வயதில் இருந்து 18 வயது வரை) மிகவும் முக்கியமானது. மூளை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளிலும் மாற்றம் ஏற்படும். மூளை பக்குவமடையும். ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான மாற்றமாக இருக்காது. சிலருக்கு ஹார்மோன் சுரப்பது தாமதமாகும். சிலருக்கு வயதுக்கு மீறிய மாற்றம் இருக்கும். இவை மனரீதியான மாற்றங்கள், பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். இந்த நேரத்தில்தான் தன்னிச்சையான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். பெரியவர்கள் சொல்வதை கேட்கமாட்டார்கள். அந்தநேரத்தில் குழந்தைகளை மிகவும் கவனமாக வழிநடத்த வேண்டும்.

    இந்த வயதில் ஏற்படும் பழக்கங்கள்தான் வளர்ந்தபின்பும் தொடரும். அவ்வப்போது பெற்றோர் கண்டித்தால் பெரும்பாலானவர்கள் மாறிவிடுவார்கள்.

    முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை கடைபிடிக்கப்பட்டது. அப்போது வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் தனி அக்கறை காட்டினர். பெரியவர்களின் கண்டிப்பினால் சிறியவர்கள் கட்டுபாட்டுடன் இருந்தனர். குறிப்பாக வீடுகளில் ஆபாசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. விஞ்ஞான வளர்ச்சியினால் பாலியல் விஷயங்களை உள்ளங்கையில் உள்ள செல்போன் மூலம் நொடிப்பொழுதில் பெற முடியும். தேவையில்லாத தகவல்களையும் செல்போனில் சிறியவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

    தவறான நடவடிக்கை என்பது ஒரு குழந்தையிடம் உடனடியாக வராது. ஓரிரு மாதங்களாகவே இந்த நடவடிக்கை இருக்கும். அதாவது, பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் இருப்பது, நடத்தையில் மாற்றம், தனிமையை விரும்புவது, அடிக்கடி கோபப்படுவது போன்றவற்றை சொல்லலாம். அதை பெற்றோர் கண்காணித்து, காரணத்தை தெரிந்து அவர்களை மாற்ற வேண்டும்.

    தற்போது சிறார்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட போதைப்பழக்கம் முக்கியமானதாக உள்ளது. போதைப்பொருள் மூளையை சமநிலையில் வைக்காது. அதனால்தான் போதையில் இருப்பவர்களிடம் கட்டுப்பாடுகள் இருக்காது.

    வளர்இளம் பருவம், விடலை பருவத்தில் சமவயது நண்பர்கள் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலை இருக்கும். மற்றவர்கள், தீய வழியை காட்டினாலும் அதில் பயணிக்க தயங்கமாட்டார்கள். இதை பெற்றோர்தான் கவனித்து, திசைதிருப்ப வேண்டும். தண்டனைகள் வீட்டில் கடுமையாக்கப்பட்டால், வெளியுலகத்தில் சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபடாமலும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கலாம். வளர்ச்சி அடைந்த நாடுகளில் பாலியல் தொடர்பான குற்றங்கள் மட்டுமின்றி எந்த குற்றமானாலும் தண்டனை கடுமையாக இருக்கும்.

    நம் நாட்டிலும் அதுபோல தண்டனைகளை கடுமையாக்கினால் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. இளம்வயதுக்காரர்களிடம் சொல்லி புரிய வைப்பது கடினம். எனவே தண்டனைகளை கூறி அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்..

    கொரோனா ஊரடங்கின்போது, ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன் பயன்படுத்தினர். கொரோனா காலகட்டம் முடிந்த பின்னரும் சிறார்கள் அனைவரின் கைகளிலும் செல்போன்கள் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு தேவையில்லாமல் இணைய வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் அதுவும் தவறு செய்ய தூண்டுதலாகிறது.

    மனநோய்களால் குற்றங்கள் ஏற்படுவது மிக குறைவு. 18 வயதுக்கு உள்ளானவர்களிடையே ஏற்படும் நடத்தை கோளாறுகளால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது கட்டாயமாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 7 வருடமாக குழந்தைகளுக்கான மனநல மருத்துவத்துறை செயல்பட்டு வருகிறது. அதிக அளவு மன அழுத்தத்துக்கு உள்ளாவதால், குழந்தைகளுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

    மன நோயை குணப்படுத்தி விடலாம். ஆனால், செயற்கையாக மனநோய் வந்தால் அதனை சரி செய்வது மிகவும் கடினம். போதை, செல்போன், குடும்பச்சூழல் போன்றவை சிறார்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதனை அழகாக செய்தால் குடும்பம் இனிக்கும்.

    டாக்டர் குமணன், மதுரை அரசு ஆஸ்பத்திரி மனநலத்துறை தலைவர்

    • இப்போது குழந்தை வளர்ப்புமுறை என்பதே தவறாக உள்ளது.
    • விடுமுறை நாட்களிலாவது தாத்தா-பாட்டி வீட்டுக்கு கொண்டுபோய் விடவேண்டும்.

    தற்போதைய வாழ்க்கை முறை குறித்து, மனநல ஆலோசகர் கே.ஜெ.சங்கமித்திரை என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    வாழ்க்கை முறை, உணவு பழக்கம் ஆகியவை தற்போது மாறிவிட்டன. முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை இருந்தது. ஆனால், இப்போது பணியின் காரணமாக குடும்பத்தை பிரிந்து தனித்தனியாக வாழத் தொடங்கிவிட்டார்கள். உறவுகளையும் தொடர முடியவில்லை. தனிமை, பிரிவு, ஏக்கம் இதுபோன்ற காரணங்களால்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும், கணவன்-மனைவி இடையே மனம்விட்டு பேச நேரமில்லாத நிலை, பணிபுரியும் அலுவலகத்தில் பிரச்சினை, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நண்பர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினை என்று பலவற்றை காரணமாக கூறலாம்.

    இப்போது குழந்தை வளர்ப்புமுறை என்பதே தவறாக உள்ளது. குழந்தைகள் எதைக் கேட்டாலும் வாங்கி கொடுக்கிறோம். நாம் குழந்தைகளாக இருந்தபோது, ஒரு பொருளைக் கேட்டால், அது தேவையா என்பதை முதலில் பெற்றோர் பார்ப்பார்கள். அதன்பிறகும், கையில் பணம் இருந்தால்தான் அதை வாங்கி கொடுப்பார்கள். அப்படி வளர்க்கப்பட்டதால்தான், நாம் இப்போது ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றாலும், பரவாயில்லை என்று அமைதியாக இருந்துவிடுகிறோம். ஆனால், இப்போதைய குழந்தைகளால் அதுபோன்ற நிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுதான் தவறான வளர்ப்புமுறை.

    அப்பா கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி வேலை பார்த்து வாங்கி வரும் சம்பளத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை குழந்தைகளுக்கு தாய் சொல்லிக்கொடுக்க வேண்டும். விடுமுறை நாட்களிலாவது தாத்தா-பாட்டி வீட்டுக்கு கொண்டுபோய் விடவேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பார்த்து அவர்கள் பல நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பார்கள். மனஅழுத்த பாதிப்புக்கு உள்ளானவர்கள், தமது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மனம்விட்டு பிரச்சினை குறித்து பேசலாம். யாரும் இல்லை என்றால், ஒரு காகிதத்தில் மனதில் உள்ள கஷ்டங்களை எல்லாம் எழுதி, பிறகு அதை கிழித்து எறிந்துவிடலாம்.

    மனம் அமைதி பெற தினமும் காலை, இரவு இருவேளையும் யோகா செய்யலாம். 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நன்றாக தூங்க வேண்டும். இதனால் மனஅழுத்தம் குறையும். மனஅழுத்த பிரச்சினையில் எங்களிடம் வருபவர்களுக்கு சில பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். 10 முதல் 20 கேள்விகளை அவர்கள் முன்வைக்கிறோம். அதற்கு பதில் அளிப்பதை வைத்தே, அவர்களின் பாதிப்பு அளவு தெரிந்துவிடும். அதன்பிறகு, அவர்களுக்கு கவுன்சிலிங், தெரபி சிகிச்சை ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம். அவர்கள் முறையான சிகிச்சை பெற்று மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் கல்வி கற்காமல் 40 சதவீத சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் முடங்கியிருப்பதாகவும், அவர்களில் 5 சதவீதம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    ‘பெண்களின் கல்வி' என்ற தொண்டு நிறுவனம், கிராமப்புறங்களில் கல்வி கற்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடத்தில் மீண்டும் கல்வியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
     
    கிராமப்புற பெண்களின் கல்வித்திறனை மேம்படுத்தி சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் சமமான உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கமாகும். அதனை முன்னிறுத்தி இந்த கல்வி சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் இல்லை.

    இதுவரை இந்தியாவில் 13 லட்சம் சிறுமிகள் இந்த நிறுவனத்தின் முயற்சியால் கல்வி பயின்றிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தியாவில் கல்வி கற்காமல் 40 சதவீத சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் முடங்கியிருப்பதாகவும், அவர்களில் 5 சதவீதம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அவர்களுக்குப் பொதுவான கல்வி அறிவைக்கொடுத்து, அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக அரசு மற்றும் தன்னார்வலர்களுடன் அந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. '2022 தீர்வு வகுப்புகள்' என அத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மஸாசுசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு முக்கியமான 7 பாட பிரிவுகளில் கற்பிக்கவுள்ளனர்.

    தொழில்முனைவோர்கள் இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து உரையாற்றுகிறார்கள். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கிராமப்புறங்களில் வாழும் பள்ளியில் சேராத மற்றும் கல்வியை இடைநிற்றல் செய்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை இதற்காக தேர்வு செய்ய உள்ளனர்.
    பணம் பணம் என்று தாய், தந்தை வேலைக்கு சென்றுவிட்டால், குழந்தைகள் போதிய கவனிப்பு இன்றி பாலிய பருவத்திலேயே பாதை மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.
    8-ம் வகுப்பு படிக்கும் சென்னை சிறுமி...

    தன்னுடன் படிக்கும் சிறுவர்கள்4 பேரை தனது வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியும் தேர்வுக்கு படித்தாள். அந்த 4 சிறுவர்களும் சேர்ந்து அந்த மாணவியை கட்டிப்போட்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம், அனைத்து தரப்பு பெற்றோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    முதியவர்களால் சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர்களால் தொல்லை, ஆசிரியர்களால் தொல்லை, பக்கத்து வீட்டுக்காரரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... என்று அடுக்கிக்கொண்டே போனால், ஒரு சில இடங்களில் பெற்ற தந்தையாலும், சீராட்டி வளர்க்க வேண்டிய தாத்தாவாலும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கும், வன்கொடுமைக்கும் ஆளாகும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன. சமீப காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை அதிகம் அறிய முடிகிறது.

    பெண் குழந்தையை யாருடைய பாதுகாப்பில் விட்டுச்செல்வது என்பது இப்போது பலருக்கும் புரியாத புதிராகிவிட்டது.

    பணம் பணம் என்று தாய், தந்தை வேலைக்கு சென்றுவிட்டால், குழந்தைகள் போதிய கவனிப்பு இன்றி பாலிய பருவத்திலேயே பாதை மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

    வாருங்கள், அதுசம்பந்தமான பலதரப்பட்ட தகவல்களை இங்கே காணலாம்.

    தகவல் தொடர்பு சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, கடந்த 10 ஆண்டுகளில் நம் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அதற்காக அவற்றை வேண்டாம் என்று புறந்தள்ளுவது புத்திசாலித்தனமல்ல.

    இப்போதைய புள்ளி விவரங்களின்படி, போனில் அதிக நேரம் பேசுவது, அறிமுகம் இல்லாத நபர்களுடன் வலைத்தளங்களில் உரையாடுவது, பொழுது போக்குவது, தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள் மட்டுமின்றி, அந்தரங்க விஷயங்களை பகிர்வது போன்றவைதான், பெரும்பாலான பாலியல் பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருக்கின்றன.

    இவற்றை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அந்த விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் இல்லை, குறிப்பாக பெண்கள், மாணவிகள், சிறுமிகள் அனைவரிடமும் ஏற்படவில்லை என்பதே உண்மை.

    இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்புக்குழு அதிகாரி பாண்டியராஜன் கூறியதாவது:-

    தற்போது பொருளாதாரத்தை மையப்படுத்தித்தான் நமது வாழ்க்கை நகருகிறது. கிராம, நகரங்களில் வசிக்கும் நடுத்தர, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது கட்டாயம். எனவே குழந்தைகளை வளர்ப்பதில் முழுநேரத்தையும் செலவிட அவர்களால் முடிவதில்லை. இதனாலும் குழந்தைகள் தங்கள் விருப்பம்போல இருக்கவும், அடுத்தவர்களின் சீண்டல்களுக்கும் ஆளாகவும் நேரிடுகிறது.

    இணையதளம், சமூகவலைதளங்களில் வரும் ஆபத்து நிறைந்த நிகழ்ச்சிகள், தவறான பாதைக்குள் தள்ளும் தகவல்கள், இளைய சமுதாயத்தின் உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வரும் அபாய தகவல்கள் எளிதாக மாணவிகளின் மனதுக்குள்ளும் ஊடுருவி பாழ்படுத்துகின்றன.

    குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பேசிப்பழகினால் அதை போலீசார் கண்டுபிடிப்பது கடினமானது. இதில் பழகிய 14 வயது சிறுமியும், 19 வயது இளைஞரும் சென்னைக்கு சென்றனர். அங்கு ஒருவரிடம் சிக்கிய சிறுமி, பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் வெளிவந்துள்ளது. இதற்கு யார் காரணம்?

    சிறுமியின் அறியாமை என்பதா அல்லது சமூகவலைதள மோகம் என்பதா?

    பல்வேறு பாலியல் சம்பவங்களில் சிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கிறோம். அவ்வாறான நேரங்களில் அவர்களுடன் உரையாடும்போது, தங்களிடம் பழகியவர்களை அவர்கள் விட்டுக்கொடுப்பதே இல்லை. இதற்கு அவர்களின் வீட்டில் உள்ளவர்கள், இதுபோன்ற நிலையில் இருக்கும் மாணவிகளிடம் போதிய அன்பு காட்டுவதில்லை என்ற காரணத்தை அறிய முடிகிறது. எனவே பெற்றோர், தங்களின் பிள்ளைகளிடம் இணக்கமாக இருந்தால்தான், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படும்.

    பள்ளிகளில் முன்பைப்போல மாணவர்களை கண்டிக்க முடிவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பாலியல் பிரச்சினைகளில் சிக்கினால், மீண்டும் அந்த பள்ளியில் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. உடனடியாக நீக்கப்படுகின்றனர். தெரிந்ேதா, தெரியாமலோ இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிய அவர்களை அந்த பள்ளியே நிராகரித்தால் அவர்கள் எங்கே போவார்கள்?

    இளம் சமுதாயத்தினருக்கு சரியான வழியை காட்ட வேண்டுமானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பம் என அனைத்தையும் மாற்றுப்பாதைக்கு கொண்டு செல்வது அவசியம். முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனைகளை பாடங்களில் சொல்லித்தருவார்கள். அதை கேட்கும் மாணவர்களின் மனம் சரியான திசையில் செல்லும். ஆனால் தற்போதைய பாடங்கள் அப்படி இல்லை.

    அடிப்படையில் ஒருவன் நல்ஒழுக்க சிந்தனைகளை உடையவனாக இருந்தால்தான் அவனின் செயல்பாடுகளும் சிறப்பானவையாக அமையும். ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனைகளையும் இளைய சமுதாயத்திற்கு கற்றுத்தருவதற்கான கோட்பாடுகளை செயல்படுத்துவது அரசின் கடமை. இதை பள்ளிகளின் வாயிலாகத்தான் நிறைவேற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தவறு நடந்த பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பதைக்காட்டிலும், தவறு நடப்பதற்கு முன்பே அதை தடுக்கவும், தவறுக்கான வழியை அடைப்பதுவும்தான் சாலச்சிறந்தது. இது அனைத்துக்கும் பொருந்தக்கூடிய முதுமொழி.

    புரிய வேண்டிய பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் புரிந்தால் சரி...!
    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் சேராத அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளை கண்டறியவும், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    உயர் கல்வி படிப்பை தொடரும் விஷயத்தில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது. அதுபோல் பெண் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலையும் மாறிக்கொண்டிருக்கிறது.

    இதனை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதி செய்துள்ளது. பள்ளி மாணவிகள் இடை நிற்றல் விகிதம் குறைந்துள்ளதாக மத்திய மந்திரி அன்ன பூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.

    2019-2020-ம் ஆண்டில் தொடக்க கல்வி பயின்ற மாணவிகளின் இடை நிற்றல் விகிதம் 1.2 சதவீதமாக இருந்தது. 2018-19-ம் ஆண்டுகளில் மேல் நிலை படிப்பில் மாணவிகளின் இடை நிற்றல் விகிதம் 17 சதவீதத்தில் இருந்து 15.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதுவே 2017-18-ம் ஆண்டுகளில் இடை நிற்றல் விகிதம் 18.4 சதவீதமாக இருந்தது.

    பீகார் மாநிலத்தில்தான் இடை நிற்றல் விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மூன்று ஆண்டு களாக 13.3 சதவீதம் (2017-18), 12.9 சதவீதம் (2018-19), 9.2 சதவீதம் (2019-20) இடை நிற்றல் விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் 2017-18 மற்றும் 2019- 20-ம் ஆண்டுகளில் முறையே 35.2 சதவிகிதம், 32.9 சதவிகிதத்துடன் அதிக இடைநிறுத்தல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இங்கு இடை நிற்றல் விகிதம் அதிக எண்ணிக்கை கொண்டிருந்தாலும் படிப்படியாக குறைந்து வருகிறது.

    7-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் தனி கழிவறைகள் கட்டப்பட்டு வருவதாகவும் மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி தெரித்துள்ளார்.

    மேலும் ‘‘அனைத்து நிலைகளிலும் பாலின இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக, கல்வியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்களுக்கான உண்டு உறைவிட பள்ளிகளாக செயல்படும்’’ என்றும் கூறி உள்ளார்.

    தற்போது, நாடு முழுவதும் 10,5018 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் 6 லட்சத்து 65 ஆயிரம் பெண்கள் சேர்ந்துள்ளனர்.

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் சேராத அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளை கண்டறியவும், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    ×