என் மலர்
குழந்தை பராமரிப்பு
- படகிற்குள் குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக விசாலமான அறை அமைக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகளை கவரும் விதத்தில் இந்த நூலக படகை அழகுபடுத்தி இருக்கிறார்கள்.
புத்தகங்களை கைகளில் புரட்டி படிக்க வேண்டிய வயதில் ஸ்மார்ட்போன்களில் அத்தனையையும் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அதனால் புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இவை பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விதமாக ஒடிசாவில் படகு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
அங்குள்ள பிதர்கனிகா தேசிய வன பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகத்தில்1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. குழந்தைகளை புத்தகங்களை படிக்க வைப்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த படகு நூலகம் நிர்வகிக்கப்படுகிறது. இதுகுறித்து பிதர்கனிகா கோட்ட வன அலுவலர் ஜே.டி. பதி கூறுகையில், ''குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இயற்கையுடன் ஒன்றிணைப்பதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நூலகத்தின் நோக்கமாகும்" என்கிறார்.
சிதிலமடைந்த நிலையில் இருந்த படகை புதுப்பித்து, குழந்தைகளை கவரும் விதத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செய்து இந்த நூலக படகை அழகுபடுத்தி இருக்கிறார்கள். படகிற்குள் குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக விசாலமான அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சூழ்ந்து 30-க்கும் மேற்பட்ட அலமாரிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குள் இருக்கும் புத்தகங்களை குழந்தைகள் எளிதாக எடுத்து படிக்கும் வண்ணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த படகு நூலகத்திற்கு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தருகிறார்கள். நாட்டுப்புறக் கதைகள், சுயசரிதைகள், சிறுகதைகள், கலைக்களஞ்சியங்கள், அட்லஸ், அறிவியல் புத்தகங்கள் என ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு, சூழலியல், சதுப்புநிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அரசாங்க வெளியீடுகள் மற்றும் பிரசுரங்களும் இந்த படகு நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
- பெற்றோர்கள் கொடுத்து அனுப்பும் பணத்தை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும்.
- மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் வழங்குகிறார்கள்.
பாடப்புத்தகத்தில் இருக்கும் கல்வியுடன் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான நடைமுறை கல்வியும் பல பள்ளிகளில் போதிக்கப்படுகிறது. சேமிக்கும் வழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் நேரடி வங்கி அனுபவத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது, கர்நாடகாவில் இயங்கும் ஒரு அரசு பள்ளி. மாணவர்களே நடத்தும் அந்த வங்கியில் பணம் சேமித்தல், முதலீடு செய்தல், டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் போன்ற நடைமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
பெங்களூரு அடுத்த முள்ளூரில் இயங்கும் அரசு பள்ளியில் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 39 வயதாகும் பள்ளி ஆசிரியர் சி.எஸ். சதீஷ் இந்த வங்கியை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த பள்ளியில் 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சதீஷ், வங்கியல் பணி பற்றிய அத்தியாவசிய நடைமுறைகளையும், பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்பினார். அதனை மாணவர்கள் முழுமையாக புரிந்து கொள்வதற்கு வங்கியை நிர்வகிப்பதுதான் சரியான நடைமுறை என்று முடிவு செய்தவர் பள்ளியிலேயே செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்.
ஸ்கூல் பேங்க் ஆப் முள்ளூர் (எஸ்.பி.எம்) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வங்கியில் மாணவர்கள் சேமித்தல், காசோலை நிரப்புதல், பணத்தை வரவு வைத்தல், பணத்தை திரும்பப் பெறுதல், வட்டி பெறுதல் போன்ற செயல்முறைகளை கற்றுக்கொள்கிறார்கள். 5-ம் வகுப்பு படிக்கும் 37 மாணவர்களின் ஒத்துழைப்போடு இந்த வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.''
குழந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அதே வேளையில் பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். பெற்றோர்கள் கொடுத்து அனுப்பும் பணத்தை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும். சேமிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு கற்பிப்பதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. எதிர்காலத்தில் இந்த வங்கிப்பணிகள் தொடர்பான அறிவு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், பணத்தை சிறந்த முறையில் கையாளுவார்கள் என்று நான் நம்புகிறேன்'' என்கிறார், ஆசிரியர் சதீஷ்.
மாணவர்கள் தாங்கள் எவ்வளவு பணம் சேமிக்கிறோம், தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு பணத்தை திரும்ப எடுத்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்கு பாஸ்புத்தகமும் வழங்கப்படுகிறது. பணம் எடுக்க விரும்பினால் வங்கியில் நடைமுறையில் இருப்பதுபோல் செல்லானை நிரப்பி கொடுத்து பணத்தை எடுக்க வேண்டும். மாணவர்கள் நடத்தும் இந்த வங்கிக்கு, வங்கிகளில் இருப்பது போலவே மேலாளர், கணக்காளர், காசாளர் போன்ற பதவிகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு பொறுப்பாளர்களாக மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் லாக்கர் வசதியும் உள்ளது.
"பள்ளிக்கூடம் வந்ததும் அனைத்து மாணவர்களும் தங்கள் பணத்தை டெபாசிட் செய்ய பாஸ் புத்தகத்துடன் வருகிறார்கள். நாங்கள் ஒரு சீட்டை நிரப்ப கொடுப்போம். அதில் பணத்தை நிரப்பி கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் கொடுக்கும் பணம் காசாளர் வித்யாவிடம் ஒப்படைக்கப்படும். அவர் அதை டெபாசிட் செய்வார்"என்கிறார், பள்ளி வங்கியின் மேலாளராக இருக்கும் தன்வி.
மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் வழங்குகிறார்கள். உதாரணமாக, ஒரு மாணவர் 100 ரூபாய் சேமித்தால் அவருக்கு பென்சில் பரிசாக வழங்கப்படும். 200 ரூபாய் சேமித்திருந்தால், போனஸாக பேனா கிடைக்கும். 300 ரூபாய் சேமித்தால் ஒரு நோட்புக்கை பெறுவார்கள். 500 ரூபாய் சேமித்ததும் 5 சதவீத வட்டி வழங்கப்படும். அவர்களின் சேமிப்பு தொகை ஆயிரம் ரூபாயை கடந்தால் அவர்களின் உண்மையான வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
''இதுநாள் வரை பெற்றோர் கொடுத்தனுப்பிய பணத்தை நொறுக்குத் தீனிகளுக்கு செலவிட்டார்கள். இப்போது வங்கி அனுபவத்தை வழங்குவதோடு, சேமிப்பு மனப்பான்மையையும் எங்கள் பள்ளி வங்கி ஊக்குவித்து வருகிறது" என்கிறார் சதீஷ். மாணவர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை சுற்றுலா, பள்ளி ஆண்டு விழா, எழுது பொருட்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு செலவிடுகிறார்கள்.
மாணவி ஸ்ரீஷ்மா கூறுகையில், ''நான் 45 ரூபாயைச் சேமித்துள்ளேன். இன்னும் கூடுதலாக சேமித்து பள்ளியின் வருடாந்திர சுற்றுலா பயணத்திற்கு அந்த பணத்தை பயன்படுத்தப் போகிறேன்'' என்கிறார். தன்வியின் தாயார் குலாபி கூறுகையில், ''குழந்தைகள்இடையே பெரிய வித்தியாசத்தை பார்க்கிறேன். வீட்டில் கொடுத்தனுப்பிய பணத்தை முன்பு சாக்லேட்கள், குளிர்பானங்கள் மற்றும் பிற நொறுக்கு தீனிகளுக்கு செல வழித்தனர். இப்போது வங்கியில் டெபாசிட் செய்ய பணம் கேட்கிறார்கள். பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். பள்ளி சுற்றுலா பயணங்கள் மற்றும் வெளியூர் பயணங்கள் தொடர்பான செலவுகளுக்கு இந்த பணத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்'' என்கிறார்.
- குழந்தையின் மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யாமல் அப்படியே விடக்கூடாது.
- குழந்தையின் மூக்கை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.
பெரியவர்களை போல குழந்தைகளால் தாங்களாகவே மூக்கை சுத்தம் செய்துகொள்ள முடியாது. அழுக்காகதான் இருக்கும். சில குழந்தைகள் தன் கைகளால் மூக்கைத் தேய்க்கவும் செய்வார்கள். மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யாமல் அப்படியே விடக்கூடாது. இது குழந்தைக்கு நல்லதல்ல. அழுக்கு அடைத்துள்ள மூக்கால் குழந்தை மூச்சு விட மிகவும் சிரமப்படும். மூக்கில் உள்ள அழுக்கால்,
மூச்சு விடுவதில் சிரமம்
சத்தமான மூச்சு
தூக்கம் சரியாக வராமல் தவிப்பார்கள்
தொற்றுக்கள் உருவாகவும் வாய்ப்பு அதிகம்.
குழந்தையின் மூக்கை அடிக்கடி, தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. குழந்தைகள் முழுக்க முழுக்க பெற்றோரை சார்ந்திருப்பதால் அவர்களின் சுகாதாரமும் ஆரோக்கியமும் பெற்றோரின் கையிலே இருக்கிறது. ஆகையால், குழந்தையை முறையாக கவனிக்கத் தவறி விடாதீர்கள். சுத்தமான குழந்தை என்றும் ஆரோக்கியமான குழந்தை என்பதை நினைவில் வையுங்கள். ஆரோக்கியமான குழந்தை என்றும் மகிழ்ச்சியான குழந்தையாக இருக்கும்.
குழந்தையின் மூக்கை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ்
கடையில் விற்கும் வேப்பரைசர் (Vapourizer) வாங்கிப் பயன்படுத்துவதற்கு, அவற்றால் எப்படி சுத்தம் செய்வது என மருத்துவரிடம் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை மூக்கில் உள்ள அழுக்கு, மிகவும் கடினமானதாக இருந்தால், மூக்கில் ஊற்றப்படும் டிராப்ஸ்களை (Saline drops) பயன்படுத்தலாம். மூக்கில் உள்ள அழுக்கை உங்களால் வெளியே எடுக்க முடியவில்லை என்றால், சிறிதளவு வேப்பர் ரப்பை மூக்கு, கழுத்து பகுதியில் லேசாகத் தடவி விடுங்கள்.
இதனுடன் உள்ளங்காலிலும் வேப்பர் ரப் தடவி சாக்ஸ் அணிந்து விடுங்கள். காலையில், மூக்கடைப்பு நீங்கி, அழுக்கு மூக்கில் நீர் போல வழிந்து ஒழுகிவிடும். நீங்கள் அதை எளிதில் சுத்தம் செய்து விடலாம். குழந்தைக்கு எப்போதும் அளவான வேப்பர் ரப்பை பயன்படுத்துங்கள். அதிகமாகப் பயன்படுத்த கூடாது. குழந்தைக்கு எரிச்சல் உண்டாகலாம்.
- பிள்ளைகளுடன் குடும்பமாக ஒன்றிணைந்து நேரத்தை செலவிடுங்கள்.
- பிள்ளைகளுடன் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் தன்னம்பிக்கையையும், மன தைரியத்தையும் கொடுங்கள்.
இளம் பருவத்தினரில் ஐந்தில் ஒருவர் மன நோய்க்கு ஆளாவதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. வாழ்வியல் முறை தான் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. 10 வயதாகும் சுஜாதா, தந்தையின் பணி நிமித்தம் காரணமாக டவுண் பகுதியிலிருந்து மெட்ரோ நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்தாள். புதிய வீடு மற்றும் பள்ளி சூழலுக்கு தன்னை மாற்றிக்கொள்வதற்கு சுஜாதா ரொம்பவே சிரமப்பட்டாள்.
முந்தைய பள்ளியில் படித்த நண்பர்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட வகுப்பு தோழர்களுடன் பழக வேண்டியிருந்தது. அது அவளின் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்கு வந்த பிறகும் பள்ளிச் சூழலில் இருந்து மீள முடியாமல் தவித்தாள். மகளின் சுபாவத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கவனித்த தாயார், அதுபற்றி கேட்டபோது ஆரம்பத்தில் முறையாக பதில் அளிக்கவில்லை.
தொடர்ந்து வற்புறுத்தி கேட்ட பிறகு, சில மாணவர்களின் செயல்பாடுகளால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகுவதை ஒப்புக்கொண்டாள். சுஜாதாவை போன்று இளம் பருவத்தில் மன அழுத்தம், கவலை, மனச்சோர்வுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
10 முதல் 20 சதவீதம் வரையிலான இளம் பருவத்தினர் மன நலம் சார்ந்த பாதிப்புக்கு ஆளாவதை உலக சுகாதார நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது. எனினும் அவர்களுக்கு முறையான மன நல ஆலோசனை வழங்கப்படாத நிலையே நீடிக்கிறது. அறியாமை, சமூக நிலைமை, மன நலம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவை அதற்கு காரணமாக இருக்கலாம்.
இதன் விளைவாக கவலை, மனச்சோர்வு, தற்கொலை சிந்தனை, பசியின்மை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்றவை தலைதூக்குகின்றன. நண்பர்களிடையே நட்பை பேணுவதில் சுமுக நிலை இல்லாமை, படிப்பு விஷயத்தில் பெற்றோரின் எதிர்பார்ப்பு போன்ற விஷயங்களும் பதின்ம வயதினரிடத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன.
அவர்களிடத்தில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஆரோக்கியமான வழிமுறைகள்:
* உங்கள் வீட்டில் உள்ள பதின்ம வயதினரின் நலனில் நீங்கள் அக்கறை கொள்வதை அவர்கள் உணர்ந்து கொள்ளும்படி செயல்படுங்கள். அன்பு, பாசத்தை வெளிப்படுத்துங்கள்.
* அவர்கள் கூறும் யோசனைகளை காது கொடுத்து கேளுங்கள். நல்ல யோசனைகளாக இருந்தால் மனதார பாராட்டுங்கள். அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுங்கள். அவர்களின் வாழ்க்கை நல்லபடியாக அமைவதற்கு நீங்கள் பக்கபலமாக இருப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
* அவர்களுடன் குடும்பமாக ஒன்றிணைந்து நேரத்தை செலவிடுங்கள்.
* அப்போது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுங்கள்.
* அவர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் தன்னம்பிக்கையையும், மன தைரியத்தையும் கொடுங்கள். நீங்கள் பின் புலத்தில் பக்கபலமாக இருப்பதை உறுதிபடுத்துங்கள். தேவைப்பட்டால் மன நல ஆலோசகர், மருத்துவரை அணுகி சுமுக தீர்வு காணுங்கள்.
- தூக்கத்தில் பயந்து, உணர்ச்சிவயப்பட்டாலோ படுக்கையிலே சிறுநீர் கழிப்பதாக சொல்லப்படுகிறது.
- வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகமாக படுக்கையை நனைப்பார்கள்.
படுக்கையை நனைத்தல் என்பது 'பெட் வெட்டிங்' எனச் சொல்கின்றனர். இதை 'நேச்சுரல் யூரினேட்டிங் சில்ரன்' என்று டெக்னிக்கலாக சொல்கின்றனர். இதன் அர்த்தம் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் என்று சொல்வது உண்டு. குழந்தைகள் பொதுவாகவே படுக்கையை நனைக்கும் பழக்கத்தில் இருப்பர். வளர வளர இந்தப் பிரச்சனை சரியாகிவிடும். படுக்கையை நனைக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களா, இது அவர்களின் பழக்கமா, குறைபாடா, உடல் பிரச்சனையா எனப் பல பெற்றோரும் பயப்படுகின்றனர்.
தூக்கத்தில் பயந்து, உணர்ச்சிவயப்பட்டாலோ படுக்கையிலே சிறுநீர் கழிப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு முக்கிய காரணம்தான். ஆனால், இது மட்டுமே காரணமா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது. குழந்தையின் வளர்ச்சிக் குறைபாடே படுக்கையை நனைப்பதற்கு முக்கிய காரணமாகும்.
பெண் குழந்தைகள் 6 வயதுக்குள்ளாகவே, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆண் குழந்தைகள் 7 வயதுக்குள்ளாகவே, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விடுகின்றனர். அதாவது இந்த பெட் வெட்டிங் பிரச்னையிலிருந்து மீண்டு வருகின்றனர்.
பெட் வெட்டிங்குக்கும் உடல்நல பிரச்னைக்கும் தொடர்பு உண்டு…
* வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகமாக படுக்கையை நனைப்பார்கள்.
* மனநல வளர்ச்சியில் குறைபாடு உள்ள குழந்தைகள்.
* மாற்று திறனாளி குழந்தைகள்
* நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ள குழந்தைகள்
* வலிப்பு பிரச்சனை உள்ள குழந்தைகள்
* கெஃபைன் ன் உணவுகளை அதிகமாக உண்ணும் குழந்தைகள் அல்லது பெற்றோர் கெஃபைன் உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கலாம்.
- உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும்.
- குழந்தைகளுக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்றாகும்.
சீரான மற்றும் சத்தான உணவுகள் ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியாக சாப்பிடாத குழந்தைகள் தங்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை பெற முடியாத சூழல் ஏற்படுகிறது.
எனவே குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்களை கணிசமாக உட்கொள்வதை உறுதி செய்வது மிகவும் முக்கியம், குறிப்பாக குழந்தைகளுக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும்.
குழந்தை பருவத்தில் அதிக புரதங்கள் தேவைப்படுகின்றன. தேசிய அறிவியல் அகாடமிகள் பரிந்துரைப்படி, 1-3 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 13 கிராம் புரதச்சத்துக்களை பெற வேண்டும், 4-8 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 19 கிராம் புரதச்சத்துக்களை எடுத்து கொள்ள வேண்டும், 9-13 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 34 கிராம் புரதச்சத்துக்களை பெற வேண்டும் என கூறப்படுகிறது.
புரதச்சத்துக்கள் நிறைந்த முட்டை, அசைவ உணவுகள், சோயா பீன்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். பாதாம், வேர்க்கடலை, சுண்டல், துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம். பச்சைப் பயிரில் மட்டும் 24 கிராம் அளவுக்குப் புரதம் உள்ளது.
புரதச்சத்து குழந்தைக்கு அதிகம் தேவை என்பதற்காக கடையில் விற்கும் ஊட்டச்சத்து மாவு வாங்கிக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. இயற்கையாகவே நாம் கொடுக்கும் உணவில் சிலவற்றை சேர்த்து கொடுத்தாலே போதுமானது. பொட்டுக் கடலை, சுண்டல், பயிறு வகைகள், பச்சைப் பயிறு, பருப்பு வகைகள் சற்று அதிகமாக குழந்தைகளின் உணவில் சேர்த்தாலே போதுமான புரதச்சத்து கிடைத்து விடும்.
என் குழந்தை ஒழுங்காக சாப்பிட மாட்டேங்குது டாக்டர் என்று பலபேர் வருகின்றனர். அவர்களிடம் கவலைப்படாதீர்கள், குழந்தைக்கு முட்டையும், கீரையும் கொடுங்கள் என்று சொன்னால், இல்ல டாக்டர் ஏதாவது டானிக் கொடுங்கள் என்கின்றனர். இயற்கையாகவே உணவில் சிலவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தாலே அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளமுடியும். டானிக்கும் வேண்டாம், எந்த ஹெல்த் பவுடரும் வேண்டாம்.
- அடிக்கடி கண்களை சுத்தம் செய்வதால், குழந்தைக்கு தொற்று வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
- சில குழந்தைகளுக்கு கண்களை சுத்தம் செய்தாலே பிடிக்காது.
குழந்தையின் கண்களை சுத்தம் செய்யும் முன், உங்களது கைகளை நன்றாகக் கழுவி கொள்ளுங்கள். சமையல் வேலை, துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்துவிட்டு கைகளை சரியாக கழுவாமல் குழந்தைக்கு அருகில் வருவது சரியல்ல. சாஃப்ட் பருத்தி துணி அல்லது பஞ்சை இளஞ்சூடான தண்ணீரில் நனைத்து, கண்களை சுற்றி மெதுவாக துடைக்கவும்.
கண்களில் அதிக நீர் வழிந்திருந்தாலும், அழுக்கு இருந்தாலும் மென்மையாகத் துடைத்து எடுக்கவும். குழந்தையின் சருமம் மிகவும் சென்ஸிடிவ் என்பதால், சோப், லிக்விட் சோப், ஃபேஸ்வாஷ் போன்ற எதுவும் பயன்படுத்த வேண்டாம். வெறும் தண்ணீரே போதுமானது. குழந்தையின் கண்களை சுத்தம் செய்யும் சமயத்தில், குழந்தையிடம் பேசுவது அல்லது பாடுவது போன்றவற்றை செய்யலாம். இதனால் குழந்தையின் கவனம் உங்கள் மீது இருக்கும். நீங்கள் எளிதில் குழந்தையின் கண்களை சுத்தம் செய்திட முடியும்.
பஞ்சு அல்லது வெள்ளை பருத்தி துணியால், குழந்தையின் மூக்கு அருகில் உள்ள கண்ணின் ஓரப் பகுதியிலிருந்து குழந்தையின் கண்களின் வெளிப் பகுதியில் உள்ள ஓரப்பகுதி வரை மெதுவாகத் துடைத்து எடுக்கவும். இரு கண்களுக்கும் இரண்டு பருத்தி துணி அல்லது பஞ்சை பயன்படுத்துங்கள். ஒரே துணி அல்லது பஞ்சால் சுத்தம் செய்தால், இந்த கண்களில் உள்ள தொற்று அடுத்த கண்ணுக்குப் பரவலாம். எனவே, இருவேறு துணிகள் அல்லது பஞ்சை பயன்படுத்துவது நல்லது.
சில குழந்தைகளுக்கு கண்களை சுத்தம் செய்தாலே பிடிக்காது. வேண்டாம் என்ற எதிர்ப்பை காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் நீங்கள் இளஞ்சூடான தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டால் உடனடியாக சுத்தம் செய்து முடித்து விடலாம். குழந்தைகளும் அழுக மாட்டார்கள். சாதாரண தண்ணீரால் அவ்வளவு சீக்கிரம் சுத்தம் செய்ய முடியாது.
அடிக்கடி கண்களை சுத்தம் செய்வதால், குழந்தைக்கு தொற்று வராமல் பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை தொற்றோ காயமோ கண்களில் இருந்தால், அவற்றை சுத்தம் செய்யும் போது சுத்தமான பஞ்சை பயன்படுத்தி, அதை தூக்கி எறிந்து விடுங்கள். குழந்தையின் கண்களுக்கு உள்ளே சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டும். வெளிப்புறம், உள் ஓரம், வெளி ஓரம் சுத்தம் செய்தாலே போதுமானது. எப்போதும் இளஞ்சூடான நீரை மட்டுமே பயன்படுத்துங்கள். வெந்நீர் பயன்படுத்த கூடாது.
6 + மாத குழந்தைகளுக்கு சமச்சீரான சத்துகள் உள்ள உணவுகளைக் கொடுக்கிறீர்களா என உறுதி செய்து கொள்ளுங்கள். விட்டமின், தாதுக்கள், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகிய சத்துகள் உள்ள உணவுகளை அன்றாடம் கொடுக்க வேண்டும். கண்களும் பார்வை திறனும் அப்போதுதான் நன்றாக இருக்கும். குழந்தைநல மருத்துவரிடம் சரியான இடைவெளிக்கு ஒருமுறை குழந்தையை காண்பியுங்கள். சில குழந்தைகளுக்கு அதிகமாக கண்ணீர் வழியலாம். அதே முறையாகத் தொடர்ந்து சுத்தம் செய்து வருவது நல்லது.
- குழந்தைகளுக்கு வரக்கூடிய விக்கல் மிகவும் பொதுவானது.
- வயிற்றில் உள்ள வாயு (காற்று) விக்கலை ஏற்படுத்துகிறது.
குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போதோ உணவு உண்ணும் போதோ விக்கல் வரலாம். தும்மல், அழுகை, ஆழ்ந்த மூச்சி விடும்போது விக்கல் வருவது இயல்பு. இதுபோல் குழந்தைகளுக்கு அடிக்கடி வரும். மிகவும் அரிதாக, உடல்நல பிரச்னைகளால் விக்கல் வரக்கூடும். விக்கல் வந்தால் ஆபத்து. பயப்பட கூடிய விஷயம் என்று இல்லை. விக்கல் வந்தால் அவசர சிகிச்சை தேவை என்பதெல்லாம் கிடையாது. அது இயல்பான ஒரு விஷயம்தான். ஒரு சிலருக்கு மிகவும் அரிதாக சில பிரச்னைகளை விக்கல் ஏற்படுத்தலாம். அவர்களுக்கு விக்கல் மாதம் முழுக்க வந்தால் என்ன பிரச்னை எனப் பார்க்க வேண்டும். இதுபோல் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
குழந்தைகளுக்கு வரக்கூடிய விக்கல் மிகவும் பொதுவானது. பயம் கொள்ள தேவையில்லை. உணவும் உண்ணும் போதோ உணவு உண்ட பின்போ ஏற்படுவது சகஜம். குழந்தைகள் தங்களை அறியாமலே அதிக காற்றை உணவு உண்ணும் போதும் பால் அருந்தும்போதும் காற்றை விழுங்கி விடுகின்றனர். வயிற்றில் உள்ள வாயு (காற்று) விக்கலை ஏற்படுத்துகிறது.
இந்த விக்கல் ஒரு நோய் அல்ல. இதைப் பார்த்து கவலைப்பட வேண்டாம். சின்ன சின்ன முயற்சிகளை பாதுகாப்பாக மேற்கொண்டால் விக்கல் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். தாய்ப்பால் தரும்போது குழந்தையை உங்கள் தோள்ப்பட்டை அருகில் சரியான நிலையில் தூக்கி வைத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம்.
குழந்தையை சரியான நிலையில் தூக்கி வைத்து தாய்ப்பால் அருந்தும்படி செய்தால், தேவையில்லாமல் காற்று குழந்தையின் வாயின் வழியாக செல்வது தடுக்கப்படும். இதனால் விக்கல் வருவதும் தடுக்கப்படும். குழந்தைக்கு தரும் ஃபீடிங் பாட்டிலில் பெரிய துளை இருந்தாலும் அதன் வழியாக அதிக காற்று சென்று குழந்தைக்கு விக்கல் ஏற்படலாம்.
குழந்தையின் ஃபீடிங் பாட்டில் சொட்டு சொட்டாக வரும் படி இருக்கவேண்டும். அப்படியே தொடர்ந்து பால், தண்ணீர் வெளியேறும்படி பெரிதாக இருக்க கூடாது. சிலர் விக்கல் வரும்போது தாய்ப்பால் கொடுக்காதீர்கள் என்பார்கள். ஆனால், அது தவறு. விக்கல் வந்தாலும் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டலாம். கொதிக்கின்ற நீரில் ½ டீஸ்பூன் சோம்பை போட்டு, அந்த தண்ணீரை இளஞ்சூடாக 2-3 டீஸ்பூன் அளவுக்கு கொடுக்க விக்கல் நிற்கும்.
உடனடியாக விக்கலை நிறுத்தும் வைத்தியம் இது. முதல் சில மாதங்களுக்கு குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வருகிறது என்றால் நீங்கள் அதிகமாக தாய்ப்பால் கொடுக்கிறீர்களா என சிந்தித்து பாருங்கள். குழந்தைக்கு சரியான இடைவேளியில் சரியான அளவுக்கு தாய்ப்பால் கொடுப்பதே நல்லது. அதிகமாக உணவோ தாய்ப்பாலோ கொடுப்பதாக நீங்கள் எண்ணினால் குழந்தையின் தேவை அறிந்து உணவு கொடுங்கள்.
குழந்தையை கட்டாயப்படுத்தி உணவைத் திணிக்க வேண்டாம். குழந்தையின் வயிறு வலி, வாயு பிடிப்பு போன்றவற்றுக்கு ஓம தண்ணீரை சிறிதளவு கொடுக்கலாம்.. இந்த வைத்தியம் குழந்தையின் வயிற்றில் உள்ள வாயு பிரச்னையை சரியாக்கும். வயிற்று பிடிப்புகூட சரியாகும். விக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
- பச்சிளம் குழந்தைகளுக்கு திரவ உணவுகளையே கொடுக்க வேண்டும்.
- பருவகாலநிலைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்.
குழந்தைகளின் அழுகை பசியை மட்டுமல்ல, வேறு பல விஷயங்களையும் உணர்த்தும். எதற்காக அழுகின்றன என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே, அவைகளின் அழுகையை நிறுத்தமுடியும்! குழந்தைகளின் அழுகை பசியை மட்டுமல்ல, வேறு பல விஷயங்களையும் உணர்த்தும். எதற்காக அழுகின்றன என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே, அவைகளின் அழுகையை நிறுத்தமுடியும்!
விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுதால், அதற்கு தூக்கம் தேவையாக இருக்கும். தோளில்கிடத்தி தட்டிக்கொடுத்தால் சில நிமிடங்களிலேயே தூங்கிவிடும். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுவதற்கு துணிகள் ஈரப்பதமாக இருப்பதும் காரணமாக இருக்கும். சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடைகள் ஈரமாகிவிடும்போது அதை தெரியப்படுத்துவதற்காக அழும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்றால் அதன் வாயில் விரலை வைத்தவுடன் சப்ப தொடங்கிவிடும். அதை வைத்தே கண்டு பிடித்துவிடலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு திரவ உணவுகளையே கொடுக்க வேண்டும். திட உணவுகளை கொடுப்பதாக இருந்தால் அதனை நன்கு மசித்து தர வேண்டும். திட உணவுகள் கொடுக்கும்போது தண்ணீர் கொடுக்கவேண்டியது மிக அவசியம். அப்போதுதான் உணவு நன்றாக ஜீரணமாகும். வெளி இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி செல்லும்போது அந்த சூழல் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பீறிட்டு அழும். வழக்கத்தைவிட அதிகமான சத்தத்தையோ, இரைச்சலையோ கேட்டாலும் குழந்தை அழுதுவிடும்.
குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக பால் அல்லது திட உணவுகளை கொடுத்தால் வயிறு உப்பி, அந்த அவஸ்தையாலும் அழும். சாப்பிடும்போது வயிற்றுக்குள் காற்று அதிகமாக உட்புகுந்துவிடுவதும் அழுகைக்கு காரணமாக இருக்கும். ஆதலால் திட, திரவ ஆகாரங்களை சாப்பிட்டதும் தோளில் போட்டு ஏப்பம் வெளியேறும் வரை முதுகை தட்டிக்கொடுக்க வேண்டும்.
பருவகாலநிலைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்க வேண்டும். அழகாக இருக்கிறது என்பதற்காக அதிக எடைகொண்ட செயற்கை ஆடைகளை அணிவிக்கக்கூடாது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் குழந்தைகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். கூடுமானவரை காட்டன் துணிகளையே உடுத்த வேண்டும். ஆடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இருக்கவேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது குழந்தைகள் சரிவர பால் குடிக்காது. அடிக்கடி அழுதுகொண்டிருக்கும். வழக்கமான அழுகை சத்தத்தில் இருந்து அது வேறுபடும். குழந்தை அழுதுகொண்டிருக்கும் சமயத்தில் தொட்டிலில் போட்டு ஆட்டுவதை தவிர்க்கவேண்டும். அது குழந்தைக்கு களைப்பையும், சோர்வையும் உண்டாக்கும். அரவணைத்து தோளில் கிடத்தி தட்டிக் கொடுத்து தூங்கவைக்க வேண்டும்.
குழந்தையின் சருமத்தில் அரிப்போ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அதனை அழுது வெளிப்படுத்தும். பெரும்பாலும் குழந்தைகள் அழுகை மூலம்தான் தங்கள் தொந்தரவுகளை வெளிப்படுத்தும். அதனை புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும். சளி, இருமல், வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் குழந்தையின் அழுகுரலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். வயிற்றுப்போக்கால் அவதிப்படும் குழந்தைகள் வலியால் அழுது துடிக்கும்.
உடலில் நீர்ச்சத்து வெளியேறுவதால் நாக்கு வறண்டு தாகத்திற்காகவும் அழும். அப்போது குழந்தையை டாக்டரிடம் கொண்டுசென்றுவிடவேண்டும். சில மருந்துகள் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது. வாந்தியோ, குமட்டலோ வருவது போலிருக்கும். அதனாலும் குழந்தை மருந்து சாப்பிட மறுத்து அழுது அடம்பிடிக்கும். அந்த சமயங்களில் டாக்டர்களிடம் ஆலோசித்து மாற்று மருந்து கொடுக்கலாம். குழந்தைகள் எப்போதும் தாயின் அருகாமையையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கும். தங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அழுகையின் மூலம் வெளிப்படுத்தும்.
- பிள்ளைகள் எந்நேரமும் எந்த பயத்தினை, கவலையை மனதில் கொண்டுள்ளார்கள் என்று கவனியுங்கள்.
- அவர்களுக்கும் தன் வாழ்வை தன் சுய விருப்பப்படி முறையாய் அமைத்து கொள்ள உரிமை உண்டு.
நாம் நம் குழந்தைகளை அறிவாளிகளாக, திறமை உள்ளவர்களாக, புத்தி கூர்மை உடையவர்களாக உருவாக்க ஆசைப்படுகின்றோம். அது சரிதான். அதற்காக நல்ல பள்ளியில் சேர்க்கின்றோம். செஸ் போன்ற விளையாட்டுகளில் சேர்க்கின்றோம். கூடுதல் நேர வகுப்புகளில் சேர்க்கின்றோம். கூடவே நாமும் அலைந்து, விழித்து, நொந்து நூலாகி, பின் மதிப்பெண் வரும் பொழுது அவர்களைத் திட்டுகின்றோம்.
ஆனால் நாம் செய்யும் முயற்சி அவனை ஒரு தன்னம்பிக்கை உடைய, சிந்திக்கும் திறன் கொண்ட, உலகை அறிந்து எதிர் கொள்ளும் மனிதனாக உருவாக்குகின்றதா? என்றால் சற்று யோசிக்க வேண்டி உள்ளது.
பிறந்த குழந்தை முதல் புத்தகம் வைத்து பல கதைகளை இன்றைய நாகரீக உலகத்திற்கேற்ப கற்றுக் கொடுக்கும் தாய்மார்கள் ஏராளம். 3-4 வயதில் குழந்தை புரிந்து பேச ஆரம்பிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு சில கேள்விகளைக் கேட்டு அக்குழந்தையின் சிந்தனைத் திறனையும் கூட்டலாமே.
உதாரணமாக இந்த கதையின் முக்கிய கதாநாயகன் இவ்வாறு எதிரியினை வென்றான். நீ இந்த ஹீரோவாக இருந்தால் எந்த முறையில் எதிரியினை வெல்வாய் என்று என்றாவது கேட்டிருக்கிறோமா? அக் குழந்தை எந்த வயதாயினும் சிந்திக்க வைத்திருக்கிறோமா? அதனை எழுதச் சொல்லி படித்திருக்கிறோமா? இல்லையே!
உலகத்தினையே சிறு பெட்டிக்குள் கொண்டு வந்து உலக நாடுகளைப் பற்றி பேசியிருக்கின்றோமா? பலர் செய்திருக்கலாம். வாய்ப்பிருந்தால் நீ எங்கு வசிக்க விரும்புகின்றாய்? ஏன்? என கேட்டிருக்கின்றோமா? 18 வயது ஆனாலும் கொஞ்சம் அம்மா புடவை தலைப்பும், அப்பாவின் பாதுகாப்பும் தேடும் பிள்ளைகளாகத்தான் நம் நாட்டு பிள்ளைகள் உள்ளனர். இத்தகைய கேள்விகள் உலகினைப் பற்றி அவர்களை அறிய வைக்கும்.
வீட்டில் ஒரு அவசரம், விபத்து, ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் எப்படி கையாள வேண்டும்? எந்தெந்த எண்களை அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுத்திருக்கின்றோமா? வளரும் குழந்தைகளின் மனதில் அவனுக்குப் பிடித்த பிரபலம் யார் இருக்கின்றார்? என்ன காரணத்திற்காக அவரை பிடிக்கும் என உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை தெரிந்து கொண்டவர்களா? இல்லையே!
வாழ்க்கையில் 40-50 வயதினை கடந்தவர்களாகிய நாம் எந்த கால கட்டத்தில் துணிச்சலாக, தன்னம்பிக்கையுடன் ஒரு சவாலை, ஒரு சோதனையை ஏற்று சாதித்தோம் என எண்ணி பார்த்தோமா? அதனை இன்னும் கூடுதல் சிறப்பாக செய்திருக்க முடியுமா? மன கலக்கம் எப்படி கீழே தள்ளியது என்று ஆராய்ந்தால் ஒரு முறை உங்கள் பிள்ளைகளிடம் (ஓயாமல் நான் கஷ்டப்பட்டேன், உழைத்தேன் என்று சொல்லி நச்சரிக்க வேண்டாம்) எடுத்துச் சொன்னால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள். உங்கள் மீதான மதிப்பும் உயரும்.
இளம் வயது குழந்தைகளிடம் அவர்கள் நாட்டின் தலைவராக ஆனால் நாட்டிற்காக என்னென்ன செய்வார்கள் என்று கேலி செய்யாது கேட்டிருக்கின்றீர்களா? உங்களைப் பற்றி உங்களுக்கு பிடித்தது என்ன என்ற கேள்வியினை முதலில் உங்களிடமே நீங்கள் கேட்டுப் பாருங்கள். நம் திறமை என்ன என்று முதலில் நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நம் லட்சணம் நமக்கு புரியும். அடுத்தவரிடம் சதா குறை காண்பது வெகுவாய் குறையும். முன் பின் அறியாதவர் பிள்ளைகளை அணுகும் பொழுது என்ன செய்ய வேண்டும் என விவரமாக நன்கு மனதில் பதியும் அளவு சொல்லிக் கொடுத்திருக்கின்றீர்களா?
ஒரு நண்பனுக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என உங்கள் பிள்ளைகள் விரும்புகின்றார்கள் என தெரிந்து கொள்ளுங்கள். கல்லூரி படிப்பை முடித்தாலும் கூட இனிய நாட்களாக அவர்கள் படிக்கும் காலத்தில் இருந்தது எது? என்று கேளுங்கள்.
வகுப்பில் ஆசிரியர் என்றால் எவ்வளவு மரியாதையுடன் அணுக வேண்டும், பண்போடு பேசி கற்க வேண்டும் என உருட்டி மிரட்டி பிள்ளைகளிடம் வலியுறுத்துங்கள். பொங்கல், தீபாவளி, இப்படி எந்த விடுமுறையினை அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்? டி.வி. முன் அமர்வதற்காக மட்டும் தானா? அல்லது தன் உறவுகளை சந்திக்கும் மகிழ்ச்சியால் விரும்புகிறார்களா? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
யாரை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்? உங்களுக்கு பிடிக்காத நபராக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் மனதில் என்ன உண்மைகள் இருக்கின்றது என்பதனை உண்மையாய் அறிந்து கொள்ளுங்கள். சிலர் அவர்களுக்கு பிடித்த சிறுவயது பொம்மையினை தொடர்ந்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். அதன் ஆழமான காரணத்தினை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்கள் மீது வீண்பழி, தவறு சுமத்தப்பட்ட போது நீங்கள் எத்தனை வேதனையினை அனுபவித்தீர்கள். அதனை சற்று யோசித்தால் உண்மை தெரியாமல் பிறர் மீது வீண் பழி போட மாட்டீர்கள்.
உங்களுக்கு பிடிக்கும் இசை, அதன் தன்மை இது கூட உங்கள் மனநிலையினை காட்டும் அளவுகோள்தான். ஒரு ஹீரோ என்பவர் உங்கள் பிள்ளைகளின் மனதளவில் என்ன எண்ணங்களாய், கருத்தாய் இருக்கிறார் என என்றாவது கேட்டுள்ளீர்களா? இங்கு ஹீரோ என குறிப்பிடுவது வாழ்வின் ஹீரோவினை பற்றியதாகின்றது. வாழ்நாளில் நாம் எதற்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம் என்று எண்ணிப் பார்க்கின்றோமா? முதலில் நம் பெற்றோர்களுக்கு நன்றி உடையவர்களாக இருக்கின்றோமா என்று நினைத்துப் பாருங்கள். பல நன்றியாய் இருக்க வேண்டிய விஷயங்களை நாம் நினைத்து பார்க்கின்றோமா?
* நீங்கள் ஒரு பிரச்சினை என்று வரும் பொழுது யாருடன் பேசுவீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். நமக்கு ஒருவராவது இருக்கின்றார்களா என்று நினைத்துப் பாருங்கள். உங்களது பிள்ளைகள் பிரச்சினை என வரும்பொழுது அவர்கள் உங்களது குடும்பத்தில் யாரை அணுகுகின்றார்கள் என்று கவனியுங்கள். இது உங்கள் பிள்ளைகளை மேலும் புரிந்து கொள்ள உதவும்.
* சதா எதனைப் பற்றியாவது நீங்கள் கவலைப்படுகின்றீர்களா என்று உங்களையே ஆராய்ந்து கொள்ளுங்கள். அதுபோல உங்கள் பிள்ளைகள் எந்நேரமும் எந்த பயத்தினை, கவலையை மனதில் கொண்டுள்ளார்கள் என்று கவனியுங்கள். பணம் சேமிப்பின் அவசியம் பற்றி உங்கள் பிள்ளைகள் எவ்வளவு புரிந்து கொண்டு உள்ளார்கள்? ஆரோக்கியமான உணவு என்பது அவர்களின் மனதில் எந்த அளவு பதிந்து உள்ளது என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
* திடீரென அதிக பணம் வழியில் கண்டெடுத்தால் எப்படி நீங்களும், உங்கள் பிள்ளைகளும் சிந்திப்பீர்கள்? பேசிப் பாருங்கள். இதில் இருக்கும் ஆபத்தினையும் அவர்கள் உணர வேண்டும். உதாரணம் 100 ரூபாயில் 99 ரூபாயினை திருப்பிக் கொடுத்தாலும் ஒரு ரூபாயினை இவன் எடுத்து விட்டானோ என்ற சந்தேகம் தான் தலை தூக்கும். எனவே முதலில் யாருடைய பணமும் நமக்கு வேண்டாம். இன்றைய சின்ன ஆசை நாளைய பெரிய ஆசையினைத் தூண்டி ஒருவரை அழிக்கும். முறைப்படி ஒப்படைப்பது நமக்கு புகழ் தர வேண்டாம். இகழ் இல்லாமல் இருந்தால் போதும் என்பதனை புரிய வைக்க வேண்டும்.
* நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் எந்த விதத்தில் எந்த விஷயத்தில் என சற்று அமைதியாய் யோசித்துப் பாருங்கள். பிள்ளைகளுக்கு பிடிக்காத பிரிவு பாடம் எது? அதனை சரி செய்ய பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? நமக்கு பிடித்த எழுத்தாளர் இவர் என சொல்லும் அளவு பல புத்தகங்களை நாம் படித்து இருக்கின்றோமா?
* நேர்மை என்பதன் பலத்தினை பிள்ளைகள் உணர்ந்து செயல்படுத்த முனைகின்றார்களா? இல்லையெனில் அதனை அவர்களே உணர எப்படி வழிகாட்ட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்னமும் இப்படி பல கேள்விகள் நாம் நம்மையே கேட்டுக் கொள்ளலாம். நம் பிள்ளைகளிடமும் கேட்கலாம். உண்மையில் முழு முயற்சியுடன் இதனை செய்து பாருங்கள். வாழ்வை பற்றிய நம் குறுகிய எண்ண ஓட்டம் நிச்சயமாய் மாறும். நம்மை நாமே அதிகமான தீய எண்ண ஓட்டங்களில் இருந்து சுத்தம் செய்து கொள்வோம். இன்று பிள்ளைகளை வளர்ப்பதற்குள் பெற்றோர் பெரும் பாடு பட்டு விடுகின்றனர். உயிரை கொடுத்து செய்யும் எதனையும் தன் பிள்ளைகள் உணரவில்லை என கண்ணீர் சிந்துகின்றனர்.
இதற்கு ஒரு முக்கிய காரணம் சக்திக்கு மீறிய பெரும் பள்ளியில் என் பிள்ளை படிக்க வேண்டும். அவன் நினைப்பதெல்லாம் நான் வாங்கி கொடுத்து விட வேண்டும். நான் ஆசைப்படும் படி படிப்பு, வேலை, வாழ்வு என்று அவன் பெற வேண்டும் என்ற கண் மூடித்தனமான அதிக அன்பு தான். அன்பு என்பது அமைதியான அருவி போல் இருக்க வேண்டும். கட்டுக்கடங்கா காட்டு வெள்ளம் போல் இருக்க கூடாது.
அவர்களுக்கும் தன் வாழ்வை தன் சுய விருப்பப்படி முறையாய் அமைத்து கொள்ள உரிமை உண்டு. அது தடம் மாறி செல்லாது வழிகாட்டியாக அமைய செய்வதும், நல்லவைகளை அடையாளம் காட்டி கொடுப்பது மட்டும் தான் பெற்றோரின் முக்கிய பொறுப்பு.
இந்த கால கட்டம் பல கல்லூரிகளுக்கு 'சீட்' தேடி பெற்றோர் அலைகின்றனர். வருவாய் பெற்றுத் தரும் அநேக கல்வி படிப்புகளை பலர் ஏனோ ஒதுக்குகின்றனர். தானும் மனம் நொந்து பிள்ளைகளும் சில ஏமாற்றங்களை சந்திப்பதால் தன்னம்பிக்கை இழக்கின்றனர். வருங்கால சமுதாயம் இப்படி உருவாக கூடாது. நம்மை நாமே பல கேள்விகளை கேட்டுக் கொண்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பல வெளிநாடுகளில் பல கேள்விகள் மூலம் பிள்ளைகளை சிந்திக்க செய்து அவர்களின் தவறுகளை அவர்களே திருத்தி கொள்ள வழி காட்டுகின்றனர். அவைகளை படிக்க நேர்ந்த பொழுது நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சுயமாய் சிந்தித்து அவர்கள் கால்களில் அவர்கள் நிற்க இத்தகு கேள்விகள் உதவுமே என்ற ஆர்வத்தினால் உருவான ஒரு துளியே இந்த கட்டுரை ஆகும். ஆக வாழ்வில் இதுபோல் சிந்தித்து செயல்பட்டு வெற்றியாளராக வாழ்வோம்.
- குடும்பத்தில் பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
- குழந்தைகள் விஷயத்தில் தாய்மார்களின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்துள்ளது.
தந்தையின் ஆயுளுக்கும், பெண் குழந்தைக்கும் இடையே நெருங்கிய உறவு பந்தம் இருப்பதாக கீலோனியன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பத்தில் பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுக்கு 4310 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 2162 பேர் தந்தையர்.
ஆய்வின் முடிவில் மகன்களின் எண்ணிக்கைக்கும், தந்தையின் ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் மகள் இருந்தால் தந்தையின் ஆயுள் 74 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும், எத்தனை மகள்கள் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து ஆயுள் காலம் மாறுபடும் என்றும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குழந்தைகள் விஷயத்தில் தாய்மார்களின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பிரசவத்தின்போதும் தாயின் ஆரோக்கியமும், ஆயுட்காலமும் குறைகிறது. அதேவேளையில் தனியாக வாழும் பெண்களுக்கு நீண்ட ஆயுட்காலம் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குழந்தை இல்லாத தம்பதியரை விட குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதியர் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- வருடம் ஒரு முறை குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.
- வருடத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு சில மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டியது முக்கியம்.
குழந்தைகளின் உடல்நலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவரிடம் சிகிச்சைக்காக கூட்டிச்செல்வது வழக்கம். அதே சமயம் 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில், வருடத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு சில மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டியது முக்கியம். இதன்மூலம் ஆரம்ப நிலையில் இருக்கும் பாதிப்புகளை கண்டறிந்து, அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.
கண் பரிசோதனை:
ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் குழந்தைகள் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம், பாதிப்புகளைக் கண்டறிந்து கண் பார்வைக் குறைபாட்டைத் தடுக்க முடியும். எனவே வருடம் ஒரு முறை குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.
பல் பரிசோதனை:
சொத்தைப்பல், ஈறுகளில் பிரச்சினை போன்ற பாதிப்புகள் ஏற்படும்போதுதான் பலரும் பல் மருத்துவரைச் சந்திக்கிறார்கள். குழந்தைகள் அதிகப்படியான இனிப்புகள், சாக்லேட் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடுவதால் பற்களில் கிருமிகளின் தாக்கம் இருக்கலாம். இவை பாதிப்பை ஏற்படுத்தும்வரை காத்திராமல், முன்கூட்டியே பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் பற்களின் ஆரோக்கியம் காக்கலாம்.
உடல் எடை:
மோசமான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் குழந்தைகளின் எடை அதிகரித்து வருகிறது. குழந்தைகளின் வளர்ச்சி சீராக உள்ளதா? உடல் எடை சரியாக உள்ளதா? எனப் பரிசோதிக்க பொதுமருத்துவரைச் சந்திப்பது நல்லது. மேலும் குழந்தைகளிடம் குறட்டை, காது நோய்த்தொற்றுகள், டான்சிலிடிஸ், சைனஸ் போன்றவற்றின் அறிகுறிகள் இருந்தால் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அழைத்துச்சென்று பரிசோதனை செய்வதன் மூலம், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சைகளின் மூலம் அவற்றை குணப்படுத்த முடியும்.
தடுப்பூசி:
குழந்தைகள் பிறந்தது முதல் 1 வருடம் வரையும், அதற்கு பிறகு 2 முதல் 12 வருடங்கள் வரையும் தடுப்பூசிகள் போட வேண்டும். இதற்கான தடுப்பூசி அட்டவணையை மருத்துவரிடம் பெற்று, உரிய இடைவெளியில் கால தாமதம் இல்லாமல் தடுப்பூசி போடுவது பல நோய்களைத் தடுக்க உதவும்.






