என் மலர்

  குழந்தை பராமரிப்பு

  குழந்தையின் சிந்தனை திறனை அதிகரிக்க கேள்வி கேளுங்கள்...
  X

  குழந்தையின் சிந்தனை திறனை அதிகரிக்க கேள்வி கேளுங்கள்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிள்ளைகள் எந்நேரமும் எந்த பயத்தினை, கவலையை மனதில் கொண்டுள்ளார்கள் என்று கவனியுங்கள்.
  • அவர்களுக்கும் தன் வாழ்வை தன் சுய விருப்பப்படி முறையாய் அமைத்து கொள்ள உரிமை உண்டு.

  நாம் நம் குழந்தைகளை அறிவாளிகளாக, திறமை உள்ளவர்களாக, புத்தி கூர்மை உடையவர்களாக உருவாக்க ஆசைப்படுகின்றோம். அது சரிதான். அதற்காக நல்ல பள்ளியில் சேர்க்கின்றோம். செஸ் போன்ற விளையாட்டுகளில் சேர்க்கின்றோம். கூடுதல் நேர வகுப்புகளில் சேர்க்கின்றோம். கூடவே நாமும் அலைந்து, விழித்து, நொந்து நூலாகி, பின் மதிப்பெண் வரும் பொழுது அவர்களைத் திட்டுகின்றோம்.

  ஆனால் நாம் செய்யும் முயற்சி அவனை ஒரு தன்னம்பிக்கை உடைய, சிந்திக்கும் திறன் கொண்ட, உலகை அறிந்து எதிர் கொள்ளும் மனிதனாக உருவாக்குகின்றதா? என்றால் சற்று யோசிக்க வேண்டி உள்ளது.

  பிறந்த குழந்தை முதல் புத்தகம் வைத்து பல கதைகளை இன்றைய நாகரீக உலகத்திற்கேற்ப கற்றுக் கொடுக்கும் தாய்மார்கள் ஏராளம். 3-4 வயதில் குழந்தை புரிந்து பேச ஆரம்பிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு சில கேள்விகளைக் கேட்டு அக்குழந்தையின் சிந்தனைத் திறனையும் கூட்டலாமே.

  உதாரணமாக இந்த கதையின் முக்கிய கதாநாயகன் இவ்வாறு எதிரியினை வென்றான். நீ இந்த ஹீரோவாக இருந்தால் எந்த முறையில் எதிரியினை வெல்வாய் என்று என்றாவது கேட்டிருக்கிறோமா? அக் குழந்தை எந்த வயதாயினும் சிந்திக்க வைத்திருக்கிறோமா? அதனை எழுதச் சொல்லி படித்திருக்கிறோமா? இல்லையே!

  உலகத்தினையே சிறு பெட்டிக்குள் கொண்டு வந்து உலக நாடுகளைப் பற்றி பேசியிருக்கின்றோமா? பலர் செய்திருக்கலாம். வாய்ப்பிருந்தால் நீ எங்கு வசிக்க விரும்புகின்றாய்? ஏன்? என கேட்டிருக்கின்றோமா? 18 வயது ஆனாலும் கொஞ்சம் அம்மா புடவை தலைப்பும், அப்பாவின் பாதுகாப்பும் தேடும் பிள்ளைகளாகத்தான் நம் நாட்டு பிள்ளைகள் உள்ளனர். இத்தகைய கேள்விகள் உலகினைப் பற்றி அவர்களை அறிய வைக்கும்.

  வீட்டில் ஒரு அவசரம், விபத்து, ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் எப்படி கையாள வேண்டும்? எந்தெந்த எண்களை அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுத்திருக்கின்றோமா? வளரும் குழந்தைகளின் மனதில் அவனுக்குப் பிடித்த பிரபலம் யார் இருக்கின்றார்? என்ன காரணத்திற்காக அவரை பிடிக்கும் என உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை தெரிந்து கொண்டவர்களா? இல்லையே!

  வாழ்க்கையில் 40-50 வயதினை கடந்தவர்களாகிய நாம் எந்த கால கட்டத்தில் துணிச்சலாக, தன்னம்பிக்கையுடன் ஒரு சவாலை, ஒரு சோதனையை ஏற்று சாதித்தோம் என எண்ணி பார்த்தோமா? அதனை இன்னும் கூடுதல் சிறப்பாக செய்திருக்க முடியுமா? மன கலக்கம் எப்படி கீழே தள்ளியது என்று ஆராய்ந்தால் ஒரு முறை உங்கள் பிள்ளைகளிடம் (ஓயாமல் நான் கஷ்டப்பட்டேன், உழைத்தேன் என்று சொல்லி நச்சரிக்க வேண்டாம்) எடுத்துச் சொன்னால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள். உங்கள் மீதான மதிப்பும் உயரும்.

  இளம் வயது குழந்தைகளிடம் அவர்கள் நாட்டின் தலைவராக ஆனால் நாட்டிற்காக என்னென்ன செய்வார்கள் என்று கேலி செய்யாது கேட்டிருக்கின்றீர்களா? உங்களைப் பற்றி உங்களுக்கு பிடித்தது என்ன என்ற கேள்வியினை முதலில் உங்களிடமே நீங்கள் கேட்டுப் பாருங்கள். நம் திறமை என்ன என்று முதலில் நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நம் லட்சணம் நமக்கு புரியும். அடுத்தவரிடம் சதா குறை காண்பது வெகுவாய் குறையும். முன் பின் அறியாதவர் பிள்ளைகளை அணுகும் பொழுது என்ன செய்ய வேண்டும் என விவரமாக நன்கு மனதில் பதியும் அளவு சொல்லிக் கொடுத்திருக்கின்றீர்களா?

  ஒரு நண்பனுக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என உங்கள் பிள்ளைகள் விரும்புகின்றார்கள் என தெரிந்து கொள்ளுங்கள். கல்லூரி படிப்பை முடித்தாலும் கூட இனிய நாட்களாக அவர்கள் படிக்கும் காலத்தில் இருந்தது எது? என்று கேளுங்கள்.

  வகுப்பில் ஆசிரியர் என்றால் எவ்வளவு மரியாதையுடன் அணுக வேண்டும், பண்போடு பேசி கற்க வேண்டும் என உருட்டி மிரட்டி பிள்ளைகளிடம் வலியுறுத்துங்கள். பொங்கல், தீபாவளி, இப்படி எந்த விடுமுறையினை அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்? டி.வி. முன் அமர்வதற்காக மட்டும் தானா? அல்லது தன் உறவுகளை சந்திக்கும் மகிழ்ச்சியால் விரும்புகிறார்களா? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  யாரை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்? உங்களுக்கு பிடிக்காத நபராக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் மனதில் என்ன உண்மைகள் இருக்கின்றது என்பதனை உண்மையாய் அறிந்து கொள்ளுங்கள். சிலர் அவர்களுக்கு பிடித்த சிறுவயது பொம்மையினை தொடர்ந்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். அதன் ஆழமான காரணத்தினை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்கள் மீது வீண்பழி, தவறு சுமத்தப்பட்ட போது நீங்கள் எத்தனை வேதனையினை அனுபவித்தீர்கள். அதனை சற்று யோசித்தால் உண்மை தெரியாமல் பிறர் மீது வீண் பழி போட மாட்டீர்கள்.

  உங்களுக்கு பிடிக்கும் இசை, அதன் தன்மை இது கூட உங்கள் மனநிலையினை காட்டும் அளவுகோள்தான். ஒரு ஹீரோ என்பவர் உங்கள் பிள்ளைகளின் மனதளவில் என்ன எண்ணங்களாய், கருத்தாய் இருக்கிறார் என என்றாவது கேட்டுள்ளீர்களா? இங்கு ஹீரோ என குறிப்பிடுவது வாழ்வின் ஹீரோவினை பற்றியதாகின்றது. வாழ்நாளில் நாம் எதற்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம் என்று எண்ணிப் பார்க்கின்றோமா? முதலில் நம் பெற்றோர்களுக்கு நன்றி உடையவர்களாக இருக்கின்றோமா என்று நினைத்துப் பாருங்கள். பல நன்றியாய் இருக்க வேண்டிய விஷயங்களை நாம் நினைத்து பார்க்கின்றோமா?

  * நீங்கள் ஒரு பிரச்சினை என்று வரும் பொழுது யாருடன் பேசுவீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். நமக்கு ஒருவராவது இருக்கின்றார்களா என்று நினைத்துப் பாருங்கள். உங்களது பிள்ளைகள் பிரச்சினை என வரும்பொழுது அவர்கள் உங்களது குடும்பத்தில் யாரை அணுகுகின்றார்கள் என்று கவனியுங்கள். இது உங்கள் பிள்ளைகளை மேலும் புரிந்து கொள்ள உதவும்.

  * சதா எதனைப் பற்றியாவது நீங்கள் கவலைப்படுகின்றீர்களா என்று உங்களையே ஆராய்ந்து கொள்ளுங்கள். அதுபோல உங்கள் பிள்ளைகள் எந்நேரமும் எந்த பயத்தினை, கவலையை மனதில் கொண்டுள்ளார்கள் என்று கவனியுங்கள். பணம் சேமிப்பின் அவசியம் பற்றி உங்கள் பிள்ளைகள் எவ்வளவு புரிந்து கொண்டு உள்ளார்கள்? ஆரோக்கியமான உணவு என்பது அவர்களின் மனதில் எந்த அளவு பதிந்து உள்ளது என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

  * திடீரென அதிக பணம் வழியில் கண்டெடுத்தால் எப்படி நீங்களும், உங்கள் பிள்ளைகளும் சிந்திப்பீர்கள்? பேசிப் பாருங்கள். இதில் இருக்கும் ஆபத்தினையும் அவர்கள் உணர வேண்டும். உதாரணம் 100 ரூபாயில் 99 ரூபாயினை திருப்பிக் கொடுத்தாலும் ஒரு ரூபாயினை இவன் எடுத்து விட்டானோ என்ற சந்தேகம் தான் தலை தூக்கும். எனவே முதலில் யாருடைய பணமும் நமக்கு வேண்டாம். இன்றைய சின்ன ஆசை நாளைய பெரிய ஆசையினைத் தூண்டி ஒருவரை அழிக்கும். முறைப்படி ஒப்படைப்பது நமக்கு புகழ் தர வேண்டாம். இகழ் இல்லாமல் இருந்தால் போதும் என்பதனை புரிய வைக்க வேண்டும்.

  * நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் எந்த விதத்தில் எந்த விஷயத்தில் என சற்று அமைதியாய் யோசித்துப் பாருங்கள். பிள்ளைகளுக்கு பிடிக்காத பிரிவு பாடம் எது? அதனை சரி செய்ய பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? நமக்கு பிடித்த எழுத்தாளர் இவர் என சொல்லும் அளவு பல புத்தகங்களை நாம் படித்து இருக்கின்றோமா?

  * நேர்மை என்பதன் பலத்தினை பிள்ளைகள் உணர்ந்து செயல்படுத்த முனைகின்றார்களா? இல்லையெனில் அதனை அவர்களே உணர எப்படி வழிகாட்ட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்னமும் இப்படி பல கேள்விகள் நாம் நம்மையே கேட்டுக் கொள்ளலாம். நம் பிள்ளைகளிடமும் கேட்கலாம். உண்மையில் முழு முயற்சியுடன் இதனை செய்து பாருங்கள். வாழ்வை பற்றிய நம் குறுகிய எண்ண ஓட்டம் நிச்சயமாய் மாறும். நம்மை நாமே அதிகமான தீய எண்ண ஓட்டங்களில் இருந்து சுத்தம் செய்து கொள்வோம். இன்று பிள்ளைகளை வளர்ப்பதற்குள் பெற்றோர் பெரும் பாடு பட்டு விடுகின்றனர். உயிரை கொடுத்து செய்யும் எதனையும் தன் பிள்ளைகள் உணரவில்லை என கண்ணீர் சிந்துகின்றனர்.

  இதற்கு ஒரு முக்கிய காரணம் சக்திக்கு மீறிய பெரும் பள்ளியில் என் பிள்ளை படிக்க வேண்டும். அவன் நினைப்பதெல்லாம் நான் வாங்கி கொடுத்து விட வேண்டும். நான் ஆசைப்படும் படி படிப்பு, வேலை, வாழ்வு என்று அவன் பெற வேண்டும் என்ற கண் மூடித்தனமான அதிக அன்பு தான். அன்பு என்பது அமைதியான அருவி போல் இருக்க வேண்டும். கட்டுக்கடங்கா காட்டு வெள்ளம் போல் இருக்க கூடாது.

  அவர்களுக்கும் தன் வாழ்வை தன் சுய விருப்பப்படி முறையாய் அமைத்து கொள்ள உரிமை உண்டு. அது தடம் மாறி செல்லாது வழிகாட்டியாக அமைய செய்வதும், நல்லவைகளை அடையாளம் காட்டி கொடுப்பது மட்டும் தான் பெற்றோரின் முக்கிய பொறுப்பு.

  இந்த கால கட்டம் பல கல்லூரிகளுக்கு 'சீட்' தேடி பெற்றோர் அலைகின்றனர். வருவாய் பெற்றுத் தரும் அநேக கல்வி படிப்புகளை பலர் ஏனோ ஒதுக்குகின்றனர். தானும் மனம் நொந்து பிள்ளைகளும் சில ஏமாற்றங்களை சந்திப்பதால் தன்னம்பிக்கை இழக்கின்றனர். வருங்கால சமுதாயம் இப்படி உருவாக கூடாது. நம்மை நாமே பல கேள்விகளை கேட்டுக் கொண்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

  பல வெளிநாடுகளில் பல கேள்விகள் மூலம் பிள்ளைகளை சிந்திக்க செய்து அவர்களின் தவறுகளை அவர்களே திருத்தி கொள்ள வழி காட்டுகின்றனர். அவைகளை படிக்க நேர்ந்த பொழுது நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சுயமாய் சிந்தித்து அவர்கள் கால்களில் அவர்கள் நிற்க இத்தகு கேள்விகள் உதவுமே என்ற ஆர்வத்தினால் உருவான ஒரு துளியே இந்த கட்டுரை ஆகும். ஆக வாழ்வில் இதுபோல் சிந்தித்து செயல்பட்டு வெற்றியாளராக வாழ்வோம்.

  Next Story
  ×