search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைக்கு தேவையான புரதச்சத்துக்கு ஊட்டச்சத்து மாவு வாங்கிக்கொடுக்கலாமா?
    X

    குழந்தைக்கு தேவையான புரதச்சத்துக்கு ஊட்டச்சத்து மாவு வாங்கிக்கொடுக்கலாமா?

    • உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும்.
    • குழந்தைகளுக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்றாகும்.

    சீரான மற்றும் சத்தான உணவுகள் ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியாக சாப்பிடாத குழந்தைகள் தங்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை பெற முடியாத சூழல் ஏற்படுகிறது.

    எனவே குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்களை கணிசமாக உட்கொள்வதை உறுதி செய்வது மிகவும் முக்கியம், குறிப்பாக குழந்தைகளுக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும்.

    குழந்தை பருவத்தில் அதிக புரதங்கள் தேவைப்படுகின்றன. தேசிய அறிவியல் அகாடமிகள் பரிந்துரைப்படி, 1-3 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 13 கிராம் புரதச்சத்துக்களை பெற வேண்டும், 4-8 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 19 கிராம் புரதச்சத்துக்களை எடுத்து கொள்ள வேண்டும், 9-13 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 34 கிராம் புரதச்சத்துக்களை பெற வேண்டும் என கூறப்படுகிறது.

    புரதச்சத்துக்கள் நிறைந்த முட்டை, அசைவ உணவுகள், சோயா பீன்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். பாதாம், வேர்க்கடலை, சுண்டல், துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம். பச்சைப் பயிரில் மட்டும் 24 கிராம் அளவுக்குப் புரதம் உள்ளது.

    புரதச்சத்து குழந்தைக்கு அதிகம் தேவை என்பதற்காக கடையில் விற்கும் ஊட்டச்சத்து மாவு வாங்கிக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. இயற்கையாகவே நாம் கொடுக்கும் உணவில் சிலவற்றை சேர்த்து கொடுத்தாலே போதுமானது. பொட்டுக் கடலை, சுண்டல், பயிறு வகைகள், பச்சைப் பயிறு, பருப்பு வகைகள் சற்று அதிகமாக குழந்தைகளின் உணவில் சேர்த்தாலே போதுமான புரதச்சத்து கிடைத்து விடும்.

    என் குழந்தை ஒழுங்காக சாப்பிட மாட்டேங்குது டாக்டர் என்று பலபேர் வருகின்றனர். அவர்களிடம் கவலைப்படாதீர்கள், குழந்தைக்கு முட்டையும், கீரையும் கொடுங்கள் என்று சொன்னால், இல்ல டாக்டர் ஏதாவது டானிக் கொடுங்கள் என்கின்றனர். இயற்கையாகவே உணவில் சிலவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தாலே அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளமுடியும். டானிக்கும் வேண்டாம், எந்த ஹெல்த் பவுடரும் வேண்டாம்.

    Next Story
    ×