search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளை அரவணைக்கும் ரெயில்வே சேவை
    X

    குழந்தைகளை அரவணைக்கும் ரெயில்வே சேவை

    • குழந்தைகளை கவரும் வகையில் பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • ஆசுவாசமாக அமர்ந்து புத்தகங்கள் படிப்பதற்கு ஏதுவாக நாற்காலிகள், மேசைகள் போடப்பட்டுள்ளன.

    ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பெற்றோரை பிரிந்து தவிக்கும் குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறி ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் வரை போலீசாரின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். பெரும்பாலும் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அறையிலோ, அங்கிருக்கும் புற காவல் நிலைய அறையிலோ, பயன்பாடு இன்றி காலியாக கிடக்கும் அறையிலோ குழந்தைகள் அமர வைக்கப்படுவது வழக்கம்.

    அடிப்படிப்பட்ட சூழலில் பாதுகாப்பான சூழலை உணர வைக்கும் நோக்கத்தில் குழந்தைக்கான சேவை மையம் நாட்டின் பல ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு ரெயில் நிலையத்தில் குழந்தைகள் மையம் கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. அதனை பின்பற்றி இரண்டாவது மையம் யஸ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 'குஷி ஹப்' எனப்படும் இந்த மையம் ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் 400 சதுர அடி பரப்பளவில் ஏற் படுத்தப்பட்டுள்ளது.

    இது குழந்தைகளை கவரும் அம்சங்களுடன் காட்சி அளிக்கிறது. அங்கு குழந்தைகளை மையப்படுத்தி அழகிய சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. குழந்தைகளை கவரும் வகையில் பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. புத்தக அலமாரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசுவாசமாக அமர்ந்து புத்தகங்கள் படிப்பதற்கு ஏதுவாக நாற்காலிகள், மேசைகள் போடப்பட்டுள்ளன. கழிப்பறை வசதியும் உள்ளது.

    ''குழந்தைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கி அவர்களை பாதுகாப்பாக உணர வைப்பதுதான் எங்கள் நோக்கம்'' என்பது அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது. வீட்டை விட்டு வெளியேறி ரெயிலில் பயணிக்கும் குழந்தைகள், கடத்தப்படும் அல்லது தொலைந்து போகும் குழந்தைகளை மீட்டு அறிவுரை வழங்கவும் செய்கிறார்கள். ரெயில் நிலையத்தில் தனியாக சுற்றினால் கடத்தல்காரர்களிடம் சிக்கும் அபாயம் இருக்கிறது என்பதையும் குழந்தைகளுக்கு விளக்கி புரிய வைக்கிறார்கள்.

    எதற்காக வீட்டை விட்டு ஓடி வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு பெற்றோரிடம் பக்குவமாக பேசி வழி அனுப்பி வைக்கவும் செய்கிறார்கள். குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாத பட்சத்தில் குழந்தை நல குழுவிடம் ஒப்படைக்கிறார்கள். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சைல்டு லைன் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இந்த குழந்தை சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

    பெங்களூரு ரெயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள குழந்தைகள் மையம் மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×