என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பிள்ளைகள் ஸ்டடி ரூமில், ஸ்டடி டேபிள் மற்றும் நாற்காலியில் அமர்ந்து படிக்கும் பொழுது எந்தவித இடையூறும் இல்லாமல் மிகவும் அமைதியாகவும், கவனச்சிதறல் இல்லாமலும் படிக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது.
    இன்றைய சூழ்நிலையில் கூட்டுக்குடும்பங்கள் என்பது மாறி தனிக்குடும்பங்கள் என்ற நிலையே அதிகரித்து வருகின்றது. அதிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டடி ரூம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகவும், ஸ்டடி டேபிள் என்பது கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பர்னிச்சராகவும் உருவாகி விட்டது என்றே சொல்லலாம்.

    ஸ்டடி ரூமில், ஸ்டடி டேபிள் மற்றும் நாற்காலியில் அமர்ந்து படிக்கும் பொழுது எந்தவித இடையூறும் இல்லாமல் மிகவும் அமைதியாகவும், கவனச்சிதறல் இல்லாமலும் படிக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. இதுபோன்ற ஸ்டடி டேபிள்கள் வீட்டில் இருந்தால் அது மாணவர்களுக்கு உதவியாக இருப்பது போலவே பெரியவர்களுக்கும் அவர்களது அலுவலக வேலைகளைச் செய்வதற்குப் பெரிதும் உதவியாக உள்ளது.

    ஒரு சிறந்த ஸ்டடி டேபிளை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்ற டிப்ஸை இனி பார்க்கலாம்.

    * படிப்பதற்காகவும், ஓவியங்கள் வரைவதற்காகவும் நாம்ஸ்டடி டேபிள் வாங்குவதாக இருந்தால் அதற்கு எந்த அளவில் வாங்கினால் அது நமக்கு உதவியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் அளவைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. காலேஜ் செல்லும் மாணவர்களுக்கு என்றால் அதற்கேற்றாற் போலவும், கின்டர் கார்டன் குழந்தைகள் என்றால் அதற்கேற்றாற் போலவும், பிரைமரி பிள்ளைகள் என்றால் அதற்கேற்றாற்போலவும்வாங்குவது சிறந்தது. அதேபோல், அறையின் அளவிற்கேற்ப வாங்கப் போகும் டேபிளின் உயரம், அகலம் மற்றும் நீளத்தைக் தேர்ந்தெடுப்பது நல்லது. உங்களுடைய அறையானது சிறியதாக இருக்கும் பட்சத்தில் லினியர் டேபிளைத தேர்ந்தெடுத்தால் அவை சிறிய அறையில் கச்சிதமாகவும், அடக்கமாகவும் அதே சமயம் அழகான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்கும். பெரிய அறைகளில் ஹிஷேப் அல்லது ஷேப்மேசைகள் அருமையாகப் பொருந்தும்.

    * தற்போதைய அறை அலங்காரத்தை மனதில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் மேசைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மார்டன் ஸ்டடி டேபிள்கள் இன்றைய நகர்ப்புற உள் அலங்காரங்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. நம் அறையின் உள் அலங்காரத்திற்கு (இன்டீரியர் டிசைன்) பொருந்தும் சரியான டிசைனைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது. சில மேசைகள் நகர்ப்புறத் தோற்றத்தைத் தருவதற்காக கூரை போன்ற அமைப்பு மற்றும் கார்க் போர்டுகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுது நம் அறை மற்றும் விருப்பத்திற்கேற்ப மேசைகளை இணையதளங்களின் மூலமே தேர்ந்தெடுத்து வாங்க முடியும்.

    * ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைச் சரிபார்த்து வாங்குவது மிக மிக முக்கியமான ஒன்றாகும். படிக்கும் பொருள்களான புத்தகங்கள், பென்சில், பென், ரப்பர், சார்ட் பேப்பர்கள், ஸ்கெட்ச் பென்கள், லேப்டாப் என அனைத்தையும் அதற்கேற்ற ஸ்டோரேஜ் பெட்டியில் வைத்து விட்டால் நமக்குத் தேவையான நேரத்தில் ஒவ்வொன்றையும் தேடித் தேடி நேரத்தை வீண் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அதிக ஸ்டோரேஜ் வசதிகளுடன் கூடிய மேசைகளில், அத்தியாவசியமான பொருட்களை அதிக சிரமமின்றி எளிதாக உபயோகிக்க முடியும். புத்தகங்களை வைக்க திறந்த இழுப்பறைகளும்,

    பிற எழுதுபொருட்கள் மற்றும் லேப்டாப் போன்றவற்றை வைக்க மூடிய இழுப்பறைகளும் இருப்பது போன்ற மேசைகளைத் தேர்ந்தெடுப்பது உத்தமமாகும்.

    * நாம் தேர்ந்தெடுக்கும் மேசையானது பனிச்சூழலியலுக்கு ஏற்றதா? என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்து பின்னர் வாங்குவது சிறந்தது. வீட்டில் குழந்தையும் அதே சமயம் பெரியவர்களும் ஸ்டடி டேபிளை உபயோகப்படுத்துபவர்களாக இருந்தால் அவை யாருக்கு அதிக அளவில் பயன்படும் என்பதைக் கருத்தில் கொண்டு எல்லா விதத்திலும் பயன்படக்கூடிய மேசையை வாங்க வேண்டும். சில மேசைகளில் உயரங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஆப்ஷன் இருப்பதால் அவற்றைத் தேர்ந்தெடுத்தால் அவை வீட்டில் உள்ள அனைவருக்கும் பயன்படும். கின்டர் கார்டனிலிருந்து இரண்டாம் வகுப்பு வரை குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய ஸ்டடி டேபிள்களில் அழகிய கார்ட்டூன் சித்திரங்களான சோட்டா பீம், கிருஷ்ணா, சின்ட்ரில்லா, டோரேமான், ஸ்பைடர் மேன், ஹல்க் போன்றவை வரையப்பட்டு மிகவும் க்யூட்டான டேபிள் மற்றும் நாற்காலிகள் வந்துள்ளன. மேசையின் உயரமானது இருபத்தியாறு முதல் முப்பது அங்குலத்துக்குள் இருந்தால் பெரியவர்கள் உபயோகிக்க ஏற்ற மேசையாக இருக்கும். நாற்காலியில் உட்கார்ந்து மேசையின் உயரமானது நமக்கு ஏற்றாற்போல் இருக்கின்றதா என்பதை உறுதி செய்த பின்னர் மேசையை வாங்குவது சிறந்தது.

    * தரமான பொருளால் செய்யப்பட்ட மேசையை வாங்குவது சாலச்சிறந்ததாகும். படிக்கும் மேசையானது படித்து முடித்த பிறகு, அலுவலக வேலையைப் பார்ப்பதற்கும் உபயோகப்படும் என்பதால் நீண்ட நாள் உழைக்கக்கூடிய நல்ல பொருளால் செய்யப்பட்ட மேசையை வாங்க வேண்டும். விலை சிறிது அதிகமாக இருந்தாலும், அவை தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தக்கூடிய விலைமதிப்பற்ற ஒரு பொருளாக மாறக்கூடிய சூழ்நிலை இருப்பதால் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மரத்தினால் முழுவதும் செய்த மேசை, பாதி மரம் பாதி இரும்பு இவற்றால் செய்த மேசை, முழுவதும் இரும்பினால் செய்த மேசை, இம்போர்டட் வுட்டன் மேசைகள் எனப் பல ரகங்களில் அழகழகான மேசைகள் வந்துள்ளன.
    குழந்தைகளின் அழுகை பசியை மட்டுமல்ல, வேறு பல விஷயங்களையும் உணர்த்தும். எதற்காக அழுகின்றன என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே, அவைகளின் அழுகையை நிறுத்தமுடியும்!
    குழந்தைகளின் அழுகை பசியை மட்டுமல்ல, வேறு பல விஷயங்களையும் உணர்த்தும். எதற்காக அழுகின்றன என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே, அவைகளின் அழுகையை நிறுத்தமுடியும்! விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுதால், அதற்கு தூக்கம் தேவையாக இருக்கும். தோளில்கிடத்தி தட்டிக்கொடுத்தால் சில நிமிடங்களிலேயே தூங்கிவிடும்.

    இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுவதற்கு துணிகள் ஈரப்பதமாக இருப்பதும் காரணமாக இருக்கும். சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடைகள் ஈரமாகிவிடும்போது அதை தெரியப்படுத்துவதற்காக அழும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்றால் அதன் வாயில் விரலை வைத்தவுடன் சப்ப தொடங்கிவிடும். அதை வைத்தே கண்டு பிடித்துவிடலாம்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு திரவ உணவுகளையே கொடுக்க வேண்டும். திட உணவுகளை கொடுப்பதாக இருந்தால் அதனை நன்கு மசித்து தர வேண்டும். திட உணவுகள் கொடுக்கும்போது தண்ணீர் கொடுக்கவேண்டியது மிக அவசியம். அப்போதுதான் உணவு நன்றாக ஜீரணமாகும். வெளி இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி செல்லும்போது அந்த சூழல் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பீறிட்டு அழும். வழக்கத்தைவிட அதிகமான சத்தத்தையோ, இரைச்சலையோ கேட்டாலும் குழந்தை அழுதுவிடும்.

    குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக பால் அல்லது திட உணவுகளை கொடுத்தால் வயிறு உப்பி, அந்த அவஸ்தையாலும் அழும். சாப்பிடும்போது வயிற்றுக்குள் காற்று அதிகமாக உட்புகுந்துவிடுவதும் அழுகைக்கு காரணமாக இருக்கும். ஆதலால் திட, திரவ ஆகாரங்களை சாப்பிட்டதும் தோளில் போட்டு ஏப்பம் வெளியேறும் வரை முதுகை தட்டிக்கொடுக்க வேண்டும்.

    பருவகாலநிலைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்க வேண்டும். அழகாக இருக்கிறது என்பதற்காக அதிக எடைகொண்ட செயற்கை ஆடைகளை அணிவிக்கக்கூடாது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் குழந்தைகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். கூடுமானவரை காட்டன் துணிகளையே உடுத்த வேண்டும். ஆடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இருக்கவேண்டும்.

    உடல்நிலை சரியில்லாதபோது குழந்தைகள் சரிவர பால் குடிக்காது. அடிக்கடி அழுதுகொண்டிருக்கும். வழக்கமான அழுகை சத்தத்தில் இருந்து அது வேறுபடும். குழந்தை அழுதுகொண்டிருக்கும் சமயத்தில் தொட்டிலில் போட்டு ஆட்டுவதை தவிர்க்கவேண்டும். அது குழந்தைக்கு களைப்பையும், சோர்வையும் உண்டாக்கும். அரவணைத்து தோளில் கிடத்தி தட்டிக் கொடுத்து தூங்கவைக்க வேண்டும்.

    குழந்தையின் சருமத்தில் அரிப்போ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அதனை அழுது வெளிப்படுத்தும். பெரும்பாலும் குழந்தைகள் அழுகை மூலம்தான் தங்கள் தொந்தரவுகளை வெளிப்படுத்தும். அதனை புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும். சளி, இருமல், வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் குழந்தையின் அழுகுரலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

    வயிற்றுப்போக்கால் அவதிப்படும் குழந்தைகள் வலியால் அழுது துடிக்கும். உடலில் நீர்ச்சத்து வெளியேறுவதால் நாக்கு வறண்டு தாகத்திற்காகவும் அழும். அப்போது குழந்தையை டாக்டரிடம் கொண்டுசென்றுவிடவேண்டும். சில மருந்துகள் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது. வாந்தியோ, குமட்டலோ வருவது போலிருக்கும். அதனாலும் குழந்தை மருந்து சாப்பிட மறுத்து அழுது அடம்பிடிக்கும். அந்த சமயங்களில் டாக்டர்களிடம் ஆலோசித்து மாற்று மருந்து கொடுக்கலாம்.

    குழந்தைகள் எப்போதும் தாயின் அருகாமையையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கும். தங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அழுகையின் மூலம் வெளிப்படுத்தும்.
    குழந்தைகள் ஸ்மார்ட்போன் பழக்கத்திற்கு அடிமையாக பெற்றோர் எந்த வழிகளில் காரணமாக இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
    சில வீடுகளில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த கொடுக்கிறார்கள். இதனால் அவர்களின் சுபாவம், நடத்தை எல்லாம் பெருமளவில் மாற்றம் அடையும். போனில் வீடியோகேம்ஸ் விளையாடிப் பழகி, அதற்கு அடிமையாகி விடுவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள்.

    இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும். பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது Flight modeல் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது.

    குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்திற்கு அடிமையாக பெற்றோர் எந்த வழிகளில் காரணமாக இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    * குழந்தைகள் ஸ்டைலாக செல்போன் பிடித்துப் பேசுகிறார்கள் என்பதற்காக பிஞ்சுப் பருவத்திலேயே அவர்களிடம் போனைக் கொடுப்பதுதான் தவறின் அடிப்படை.

    * தூரத்தில் இருக்கும் தந்தையுடனும், உறவுகளுடனும் பேசுகிறார்கள் என்று போனை கொடுத்துப் பேசப் பழக்குவது பெற்றோர் செய்யும் பெரும் தவறு. இவையே தவறான பழக்கத்திற்கு அடிகோலுகிறது.

    * அழும் குழந்தைகளை சமாதானப்படுத்துவதாகவும், வேடிக்கை காட்டி உணவு ஊட்டுவதற்காகவும் ஸ்மார்ட்போன்களை அவர்களின் கைகளில் கொடுப்பதும் குழந்தைகள் ஸ்மார்ட்போன் அடிமைகளாகக் காரணம். ரைம்ஸ் கற்கிறார்கள் என்று போனைக் குழந்தைகளிடம் கொடுப்பதும் இந்த வகைத் தவறுதான்.

    * செயல்பாடு இல்லாத குழந்தைகள்தான் சேட்டை செய்யும். குழந்தைகளின் சேட்டைகளை குறைப்பதற்காக அவர்களின் கைகளில் செல்போன்களைக் கொடுத்து அவர்களை சேற்றில் மூழ்க வைத்துவிடாதீர்கள்.

    * குழந்தைகளின் கண்முன்னே பெற்றோர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தால் அவர்களும் அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவார்கள் என்பதுதான் நிபுணர்கள் தரும் முதலும், முடிவுமான அறிவுரை. பெற்றோரின் பழக்க வழக்கத்தில் இருந்தே குழந்தைகள் பெரும்பாலான விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளை ஸ்மார்ட்போன்களிடம் இருந்து விடுவிப்பது பெற்றோரான உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
    கவனத்தோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த அறிவுரைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒரு கூட்டுக் குடும்பத்தில், ஒரு குழந்தை தானே நல்ல பாதுகாப்போடு, புத்திசாலியாய், பண்புகளோடு வளரும் வாய்ப்புகள் அதிகம். ஒரு தாயோ, தந்தையோ அதிக கவனத்தினை தர வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பெற்றோரும் அதிகம் தனித்தே இருக்கின்றனர். பிள்ளைகளும் அதிகம் தனித்தே இருக்கின்றனர். ஆகவே ஆய்வாளர்கள் கூறுவது அதாவது கவனத்தோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அந்த அறிவுரைகள்:

    * பெற்றோர்கள் பிள்ளைகள் பேசுவதை கவனம் கொடுத்து கேட்க வேண்டும்.

    * உங்கள் உணர்ச்சிகள். கோப தாபங்களை சட்டென வேகமாக உங்கள் பிள்ளைகள் மீது கொட்டி விடாதீர்கள். அது அவர்கள் மனதில் ஆழமான காயத்தினை ஏற்படுத்தி விடுகின்றதாம்.

    * அன்போடும், ஒழுக்கத்தோடும் வளர்க்கப்பட்டாலே திடமான மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள்.

    * இந்த கவனிப்பு பிள்ளைகள் - பெற்றோர் இடையே நன்றாக பேசி, பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தினை ஏற்படுத்தும். வேகமான, கட்டுப்படாத குழந்தைகளாக இருக்க மாட்டார்கள்.

    * பெற்றோர் தன் வேலை சுமை காரணமாக பிள்ளைகளை முறையாய் வளர்க்கவில்லை என்ற குற்ற உணர்வு இருக்காது.

    * மன உளைச்சல் இரு தரப்பினருக்கும் இருக்காது. Maindful parenting எனப்படும் முறையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவதே சிறந்த முறை என ஆய்வுகள் கூறுகின்றன.
    குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தையின் காது பராமரிப்பில் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
    குழந்தையின் காதுகள் மிகவும் மிருதுவானவை. எனவே குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

    காதுகளைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் குழந்தையின் காதுகளில் பட்ஸ், ஊக்கு போன்றவற்றை நுழைக்காதீர்கள். காதுகளைப் பராமரிக்க இயல்பாகவே சிபம் என்ற மெழுகு போன்ற திரவம் காதுகளில் சுரக்கும். அதனை அழுக்கு என்று தவறாக புரிந்துகொண்டு சுத்தப்படுத்தி விடாதீர்கள். காதுகளின் வெளிப்புறத்தைமட்டும் மாதம் ஒருமுறை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவது நல்லது.

    குழந்தையின் காதுகளில் ஏதேனும் சிறிய பூச்சி சென்றுவிட்டால், சுத்தமான எண்ணெயை அவர்களின் காதுகளில் ஊற்றி, முதலில் அந்தப் பூச்சியைச் செயலிழக்கச் செய்யுங்கள். அதன் பின்னர் காது-மூக்கு-தொண்டை சார்ந்த மருத்துவரை அணுகி, பூச்சியினை எடுத்துவிடுவது நல்லது. எக்காரணம் கொண்டும் சூடான எண்ணெய், தண்ணீரை காதில் ஊற்றாதீர்கள்.

    குழந்தைகள் காதில் பட்டாணி, காய்கறிகள் போன்று எளிதில் நீரில் ஊறக்கூடிய பொருளை நுழைத்துவிட்டால், எக்காரணம் கொண்டும் காதுகளில் தண்ணீர் ஊற்றாதீர்கள். அவை தண்ணீரில் ஊறி வெளியே எடுக்க முடியாத நிலைக்கு போய்விடலாம். எனவே உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. அதேபோல காதில் சீழ் வடிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

    குழந்தைகள் பாடல் கேட்க அல்லது போனில் பேச என இயர் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில்கூட இயர் போனுக்கு பதில் ஹெட் போன்களைப் பயன்படுத்தலாம்.

    குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஆசாரிகளிடம் இருக்கும் காது குத்தும் ஊசியை ஒரு முறை ஆண்ட்டி செப்டிக் மருந்தில் முக்கி எடுக்க வேண்டியது அவசியம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியை தடுக்கலாம்.

    பச்சிளம் குழந்தைகளின் காது தசைகள் மிகவும் மென்மையானவை எனவே அவர்கள் காதினைச் சுத்தம் செய்யும்போது மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து மெதுவாக வெளிப்புறம் மட்டும் துடைத்து எடுக்கலாம்.
    சிறு குழந்தையினை 21/2 வயதில் Pre School, Play School என்ற பெயரில் சில மணி நேரங்கள் அனுப்புவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
    நவீன நாகரீக உலகில் பிள்ளைகள் வளர்க்கப்படும் முறை கூட நிறைய மாறுபட்டுக் கொண்டு வருகிறது. 5 வயது வரை அம்மா முந்தானையை பிடித்துக் கொண்டு மடியில் தூங்கிய காலம் மறைந்தே போய்விட்டது. பால் புட்டியுடன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் காலம் ஆகி விட்டது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் காலை முதல் மாலை வரை குழந்தைகள் காப்பகம், பின்னர் Pre School என்று விட்டுச் செல்கின்றனர். இதில் பல குறைபாடுகள், பாதிப்புகள் இருப்பதாக பல அக்கறை நிறைந்த முதியோர்கள் அறிவுறுத்தினாலும் காலத்தின் வேகம் அதனோடு நம்மை ஓடச் செய்கின்றது.

    * கூட்டுக் குடும்பமாய், பெற்றோர்கள் உடன் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ஆனால் அதிலும் இன்று அநேக சிக்கல்கள் உள்ளன. ஆகவே இந்த முறை பலருக்கு பயன்படுவதில்லை.

    * உறவுகளே இப்படி இருக்கும் பொழுது உதவியாளர்கள் என்ற பெயரில் வேலைக்கு வரும் நபர்களால் பிரச்சினைகள், குழந்தைகள் பாதுகாப்பு இவைகளை சமாளிப்பது மன உளைச்சலையே கொடுத்து விடுகின்றது.

    எனவே Pre School என்பது சில மணி நேரங்கள் என்றாலும் தாய்மார்களுக்கு மற்ற வேலைகளை கவனிக்க சிறிது அவகாசம் தருகின்றது. இருப்பினும் 21/2 வயதில் Pre School , Play School என்ற பெயரில் சில மணி நேரங்கள் சிறு குழந்தையினை அனுப்புவதைப் பற்றி பெரிய ஆய்வுகள் நடந்தன. அந்த ஆய்வுகள் கூறுபவை:

    * தரமான இந்த விளையாட்டு பள்ளிகளுக்கு 2 மணி நேரம் செல்லும் குழந்தைகள் சுய ஒழுக்கம், பல திறமைகள் இவற்றினை எளிதாக கற்றுக்கொள்கின்றதாம்.

    * பேசும் திறன், புத்தகம் படிக்கும் திறன் கூடுகின்றதாம்.

    * முறையாக பள்ளி செல்லும் பொழுது இக்குழந்தைகள் எளிதாக அச்சூழ்நிலைக்கு ஒத்து வருகின்றார்களாம்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு இவை உதவுகின்றன என்றே கூறுகின்றன. ஆனால் 2 முதல் 3 மணி நேர அளவில் இருந்தாலே போதும். இல்லையெனில் குழந்தைகள் சோர்ந்துவிடும்.

    பள்ளி தரமானதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

    ஒரு கூட்டுக் குடும்பத்தில், ஒரு குழந்தை தானே நல்ல பாதுகாப்போடு, புத்திசாலியாய், பண்புகளோடு வளரும் வாய்ப்புகள் அதிகம். ஒரு தாயோ, தந்தையோ அதிக கவனத்தினை தர வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பெற்றோரும் அதிகம் தனித்தே இருக்கின்றனர். பிள்ளைகளும் அதிகம் தனித்தே இருக்கின்றனர். 
    வயது வந்தவர்களைக் காட்டிலும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அதிகமாக கனவு காணுகின்றன. பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்கும்.
    வயது வந்தவர்களைக் காட்டிலும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அதிகமாக கனவு காணுகின்றன. பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்கும்.

    பல்வேறு ஆய்வுகளின்படி நம் தூக்கம் பல கட்டங்களாக அமைந்துள்ளது. அதில் ஆர்.இ.எம். (REM-Rapid Eye Movement) என்னும் ஒரு கட்டத்தில் நமக்கு கனவுகள் வருகின்றன. வயது வந்தவர்களில் தூக்க நேரத்தில் சராசரியாக 20 சதவீத அளவில்தான் அந்த ஆர்.இ.எம். என்னும் காலகட்டம் வரும். ஆனால் பிறந்த குழந்தைக்கு அந்த ஆர்.இ.எம். காலகட்டம் 50 சதவீதம் வரையில் தூக்கத்தில் இருக்கும்.

    இந்த ஆர்.இ.எம். தூக்க காலகட்டத்தில்தான் குழந்தைகள் சிரிப்பது, காலை உதைப்பது மற்றும் உடலை அசைப்பது போன்ற நிகழ்வுகளை நிகழ்த்துகின்றன. இது போன்ற உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இயக்கங்களைக் கண்டு, குழந்தைகள் கனவு காண்கின்றன என்று நாம் அறியலாம். கருவில் உள்ள குழந்தைகள் கூட தங்கள் தூக்கத்தில் சுமார் 10 மணி நேரம் ஆர்.இ.எம். நிலையில் உள்ளன.

    வளர்ந்த மனிதர்களைப்போல குழந்தைகளும் ஒரு மங்கலான நினைவலைகளை கனவாகப் பார்க்கின்றன என்று நாம் கருதலாம். ஆனால் சில நரம்பியல் விஞ்ஞானிகள் ‘குழந்தைகள் கனவு காண்பதே இல்லை’ என்று கூறுகின்றனர். அப்படியே குழந்தைகள் கனவு கண்டாலும், அந்த குழந்தைகள் பார்க்கும் கனவில் நாம் பார்ப்பது போல் ஒரு படமோ, ஒரு நிகழ்வோ அல்லது செயல்பாடு போன்றவை இருக்காது என்று கூறுகின்றனர்.

    கனவு ஒருவரால் காணப்படுகிறது என்றால் அந்த நபருக்கு கொஞ்சமாவது கற்பனை நயம் இருத்தல் அவசியம். அதாவது அவரால் நிகழ்வுகளை வான்வெளியில் நினைத்து காணத்தெரியவேண்டும். அப்போதுதான் கனவை உணரும் சக்தி அவருக்கு அமையும்.

    குழந்தைகளின் பார்வைத்திறன் மற்றும் கற்பனை திறன் அந்தஅளவுக்கு இல்லாத காரணத்தால், நாம் காணும் கனவு போல் குழந்தைகள் கனவு காண்பது இல்லை. மேலும் உணர்வு மற்றும் உணர்ச்சி போன்றவைகளும் குழந்தைக்கு குறைவாக இருப்பதால், குழந்தையால் ஒரு கனவை உருவாக்கும் அளவுக்கு திறமை போதாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    எனவே குழந்தைகளிடம் அறிவாற்றல், சிந்தனைத்திறன் இன்னும் முழுமையாக வராத காரணத்தால், குழந்தைகள் கனவு காண்கின்றன என்று நாம் நினைக்கும் நிகழ்வு நடக்காத ஒரு நிகழ்ச்சியே.

    நான்கு அல்லது ஐந்து வயது குழந்தைகள் காணும் கனவு கூட ஒரு படம் பார்க்கும் நிகழ்வு போலவே இருக்கும். அந்தக் கனவில் நடிப்பதும் அல்லது செயல்கள் நிகழ்வது ஒன்றும் இருக்காது. ஒரு கதை சொல்ல இயலாத கனவாகவே அது அமையும். அப்படி என்றால் தூக்கத்தில் நாம் குழந்தையிடம் காணும் அந்த இயக்கங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கான ஒரு அறிகுறியே.

    தன் கை கால்கள் மற்றும் தசைகளின் இயக்கத்தை குழந்தை கற்றுக்கொள்ளும் நிகழ்வுகளே அவை எனக்கூறலாம். குழந்தை பிறந்து வளரும் ஆரம்ப காலகட்டத்தில் பல வகையான வளர்ச்சிகள் நிகழ்கின்றன. குறிப்பாக அந்த ஆர்.இ.எம். காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கனவு காணும் அளவுக்கு மூளை உபயோகப்படுவதில்லை.

    ஏழு வயது வரும்வரை பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஒரு (3டி) முப்பரிமாணத்துடன் காணக்கூடிய அளவுக்கு கனவுகள் வருவதில்லை. ஏனெனில் ஏழு வயதுக்குப் பின்னர்தான் குழந்தைகள் உணர்வு பற்றி முழுவதும் அறிய ஆரம்பிக்கின்றனர், தங்களது சுற்றுப்புறம் பற்றியும் உணர ஆரம்பிக்கின்றனர். மூளை நன்கு வளர்ச்சி பெற்ற பின் நம்மைப் போன்றே குழந்தைகள் கனவுகள் காணத் தொடங்கி விடுவர்.

    நம்மிடம் மூளை தரும் சமிக்ஞைகளை படமாக மாற்றும் தொழில்நுட்பம் வரும் வரையில் நம்மால் குழந்தைகள் கனவு காண்கின்றன என்பதையும் உறுதியுடன் அந்த கனவுகள் எப்படிப்பட்டது என்பதையும் சொல்ல இயலாது என்பதே இப்போதைய உண்மை.

    முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.
    பொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா? என்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பலவிதமான பேபி சோப்கள் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்த்தன்மையை கழுவிப்போக்கிவிடுகிறது. அந்த எண்ணெய்யில் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆற்றலும், பூஞ்சைக்கு எதிரான ஆற்றலும் உண்டு. சோப் உபயோகிக்கும்போது இந்த ஆற்றலும் நீங்கி, சருமமும் வறண்டுபோகிறது.

    அதிக தடவை சோப் பயன்படுத்தினால், அதிக அளவு பிரச்சினை தோன்றும். அதிக நுரை வராத சோப் வகைகள் குழந்தைகளுக்கு ஏற்றது. மிக மிக குறைந்த அளவு ரசாயனத்தன்மைகொண்ட, மாயிஸ்சரைசிங் கிரீம் கலந்தவைகளை பயன்படுத்தவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழந்தையின் உடல் முழுவதும் சோப்பிட்டு குளிப்பாட்டினால்போதும். குறிப்பாக கழுத்து, அக்குள், தொடைப்பகுதிகளில் சோப் பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் போதுமானது.

    குழந்தைகளின் சருமம் போன்று அவர்களின் முடியும் மென்மையாக இருக்கும். அதனால் மிகுந்த கவனத்தோடு ஷாம்பு பயன்படுத்தவேண்டும். நேரடியாக ஷாம்புவை முடியில் கொட்டாமல் சிறிதளவு ஷாம்புவை தண்ணீரில் கலந்து, கண்களில் படாத அளவுக்கு பயன்படுத்தவேண்டும். ‘பி.எச்.6’-க்கும் அதிகமான ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது குழந்தையின் மயிர்க்கால்களை பாதிக்கச் செய்துவிடும். முடியும் உடைந்துவிடும். மேலும் பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்புவையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

    குழந்தைகளின் தலையில் பொடுகு பிரச்சினையும் ஏற்படும். தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதும், தூசு படிவதும் பொடுகு உருவாகுவதற்கான காரணமாகும். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி குழந்தையின் தலையில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்பு குழந்தைகளுக்காக பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்தி சீவவேண்டும். பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்திய துண்டையோ, சீப்பையோ குழந்தைகளுக்கு பயன்படுத்திவிடக்கூடாது.

    குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. குழந்தையை வெளியே கொண்டுசெல்லும்போது தொப்பி அணியலாம். குடை பயன்படுத்தி வெயில் அதன் மீது படாமல் பார்த்துக்கொள்ளலாம். சவுகரியமான, உடலை முழுவதுமாக மூடக்கூடிய உடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டும். இரண்டு வயதுக்கு பிறகு தேவைப்பட்டால் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
    இன்றைய காலக்கட்டத்தில் தாயார்மார்கள் குழந்தைகள் பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் பிஸ்கட்டுகள் சாப்பிடுவதனால் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி பார்ப்போம்.
    இன்றைய காலக்கட்டத்தில் தாயார்மார்கள் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பதால் அவர்களின் பசியை போக்குவதற்காக பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். உண்மையில் பிஸ்கட் தயாரிக்க சேர்க்கப்படும் மைதா, குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட் , நிறமிகள், சுவையூட்டிகள் என எதுவுமே உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல.

    ஏனெனில் பிஸ்கட்டுகள் நீண்ட நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ஹைட்ரஜனேட் கொழுப்புகள் (பதப்படுத்தி) குழந்தைகளுக்கு ஒபிசிட்டி பிரச்னையை ஏற்படுத்தும் எனப்படுகின்றது. அந்தவகையில் பிஸ்கட்டுகள் சாப்பிடுவதனால் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி பார்ப்போம்.

    * பிஸ்கட்டுகளில் கலோரிகள் அதிகம் உள்ளதால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிஸ்கட் செரிமானம் ஆக, குறைந்தது ஒரு மணிநேரமாவது தேவைப்படுகின்றது.

    * குழந்தைகள், இரண்டு அல்லது மூன்று பிஸ்கட்டுகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் போது அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது. மற்ற உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்ப்பார்கள்.

    * சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும்.

    * கிரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. அதன் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

    * உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைகொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.

    * பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படும்.

    * சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது, உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம்.

    * சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் இந்த பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

    எனவே, குழந்தைகளுக்கு இயற்கை உணவு அல்லது வீட்டில் தயார்செய்த உணவுகளை சாப்பிடக்கொடுப்பதே ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது.
    டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும்.
    டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும். மேலும் இது பசியை குறைக்கும்.

    டீயில் 2 சதவீத கேபின் உள்ளது. புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைப்படுத்தும் பொருள் ஆகும். நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தும். கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனவே இந்த பழக்கத்தை விட்டால் தலைவலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படலாம்.

    டீ ஒரு டைரெடிக் அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது. உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலிந்து நீரை வெளியேற்றும். எனவே நீர் இழப்பு ஏற்படும். மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலைப்பளுவை அளிக்கிறது. சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும். டீ நேரடியாகவும், மறைமுகமாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது.

    டீயில் உள்ள அல்கலாய்டு பொருட்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச் சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் இரும்புச் சத்து பற்றாக்குறை என்ற வகை ரத்தச் சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது. மேலே சொன்ன விளைவுகள் இருமடங்கு ஏற்படும். மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது. எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது. 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ தரவும். இடையில் விடுமுறை நாட்களில் இதற்கும் விடுமுறை தரவும். 
    பருவ மழைக்காலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பருவ மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளையும், விபத்துகளையும் தடுப்பதற்காக ஆய்வு அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு உள்ளன. இது குறித்து விரிவாக அறிந்த கொள்ளலாம்.

    அதன் விவரம் வருமாறு:-

    மின் சுவிட்சுகள் சரியாக உள்ளதா?

    * மழையால் ஏதாவது வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த வகுப்பறைகளை பூட்டிவைக்க வேண்டும். அங்கு யாரும் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

    * பள்ளி வளாகத்தில் நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் நீர்தேக்க தொட்டிகள் இருந்தால் அவை மூடப்பட்டிருக்க வேண்டும்.

    * மின் சுவிட்சுகள் சரியாக உள்ளதா? என்றும், மழைநீர் படாதவாறு இருக்கின்றதா? என்றும் தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும்.

    * பள்ளி வளாகங்களில் உள்ள அனைத்து கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக இருக்கின்றதா? என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பாதுகாப்பான உணவு

    * விழுகிற நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

    * ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின் கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருந்தால் உடனடியாக அகற்றவேண்டும்.

    * பள்ளிகளில் உள்ள மின்கம்பிகள் மின் கசிவின்றி பாதுகாப்பாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    * தொடர் மழையால் பள்ளி சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவர் அருகே மாணவர்கள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும், காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரை குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்த வேண்டும்.

    குடிநீரில் குளோரின் கலப்பு

    * மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்தேக்க தொட்டிகளை பிளச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்துவைக்க வேண்டும்.

    * பள்ளி வளாகத்துக்குள்ளேயும், வெளியேயும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    * மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் மருத்துவ ஆய்வாளரின் ஆலோசனைப்படி குளோரின் (அளவோடு) கலந்து பயன் படுத்த வேண்டும்.

    * மழைக்காலத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து வகுப்பறையிலேயே ஆசிரியர்களால் மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.

    பருவமழை காலங்களில் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்படி அனைத்து தலைமை ஆசிரியர்களையும் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர் கள் செயல்படுவதை கண்காணிக்க வேண்டும்.
    ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இது போன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.
    பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர்.

    பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சி வரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் பலர். ஒருவரின் வளர்ச்சி, அவர் கருவாக தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது ஆரம்பிப்பது. பொதுவாக கருவில் குழந்தை 17 முதல் 20 இன்ச் வரை வளரலாம்.

    மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியை தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன். இந்தச் சுரப்பி, மூளையின் மத்தியில் மூக்குக்கு பின்புறமாக இருக்கும். நிலக்கடலை அளவில் இருக்கும் இது, மிக முக்கியமான ஒரு சுரப்பி. உடலின் பல்வேறு சுரப்பிகளின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்துகிறது. இது சுரக்கும் ஹார்மோன்தான் ஒருவரை வளரச் செய்கிறது. உடலில் உள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு குறைவதற்கும், கூடுவதற்கும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், கிருமி தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு காரணங்கள் ஆகலாம்.

    முதற்கட்ட வளர்ச்சி, குழந்தை பிறந்ததில் இருந்து 12 வயது வரை நிகழும். இந்தப் பருவத்தில் பல் விழுந்து முளைப்பது, எலும்புகள் கூடுவது என சீரான வளர்ச்சி நடைபெறும். இரண்டாம் கட்ட வளர்ச்சி, ஆணுக்கும் பெண்ணுக்கும் 13 வயதில் ஆரம்பித்து 18 வயதுவரை இருக்கும் (சிலருக்கு அதிகபட்சமாக 23 வயது வரை வளர்ச்சி இருக்கலாம்).

    இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் அபரிமிதமாக இருக்கும். இந்த இளம் வயதில்தான் உறுப்புகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் அதிகமுள்ள முட்டை, சோயா, பருப்புகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக கொடுக்கலாம்.

    ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இது போன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மரபும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக்கூடிய புரதம் அதிகம் உள்ள உணவுகளுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும். வளர்ச்சி ஹார்மோன்களில் எந்த பாதிப்பும் இல்லாதபட்சத்தில், அவர்களின் வளர்ச்சி முழுமையடையும்.

    சில குழந்தைகளுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்சினையால் ட்வார்பிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ட்வார்பிசம் என்பது குள்ளமாக இருப்பது. 3 அடிக்கு மேல் அந்த குழந்தையால் வளர முடியாது; அதை குணப்படுத்தவும் முடியாது என்பதே உண்மை. அரசு, ட்வார்பிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அறிவித்து, சலுகைகள் வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    உயரம் குறைந்த குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அவசியம். தேவைப்படும் சூழலில் அவர்களை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.

    உயரத்தால் சமூக வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை பெற்றோர்கள், குழந்தைகளிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். உயரம் குறித்து கவலைப்படாமல் சாதித்த தன்னம்பிக்கை மனிதர்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டலாம். குழந்தைகளிடம், அவர்கள் தங்களை பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதை தவிர்க்கச் சொல்லி தம்மை தாமே உயர்வாக நினைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 
    ×