என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    மாணவர்கள் திறந்தவெளியில் விளையாடுவது உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானதாகும். விளையாட்டு அவர்களை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ளவராகவும் மாற்றுகிறது.
    இன்றைய மாணவர்கள் செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதை போக்குவதால் விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரியாமல் இருக்கிறார்கள். இது அவர்களது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். விளையாடுவதால் எத்தனை பயன்கள் உள்ளது என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்...

    மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால் அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகிறது. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு ஏற்படுகிறது. குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு மாணவர் தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கிறார். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகிறார். எனவே அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ளவராகவும் மாறுகிறார்.

    விளையாட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளின் போது ஒவ்வொரு மாணவரும் மற்ற மாணவருடனும் பயிற்சியாளர்களுடனும் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்துக் கொன்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைகிறது.

    விளையாட்டில் ஈடுபடும் போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக் கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலையை அறிந்து கொள்ளல் போன்றவற்றை அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

    இவை அனைத்தும் எதிர்காலத்தில் அவர்கள் தங்களது இலக்குகளை வெற்றி கொள்வதற்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றனர். விளையாட்டில் ஈடுபடும் மாணவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் ஆகியோரை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே விளையாட்டில் உண்டாகும் ஏனையோரை மதிக்கும் பழக்கம் பின்னர் அவரை வாழ்க்கையிலும் தானாகவே நிலைத்து நிற்க செய்கிறது.

    விளையாட்டில் ஈடுபடும்போதும் அதற்கான பயிற்சிகளின் போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தும் போதும் போது அவர்கள் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும் இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்துவதாக விளையாட்டும், அதற்கான பயிற்சியும் அமைந்துள்ளது. எனவே மாணவர்கள் திறந்தவெளியில் விளையாடுவது உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
    குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான்.
    குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான்.

    குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள்:

    1) எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.

    2) சிறு சிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.

    3) குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக் குழந்தைகளைப் பாதிக்கும்.

    4) எந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து விடும்.

    5) குழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது.

    6) எல்லோருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.

    7) குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும்.

    8) பிள்ளைகளின் வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும்.

    9) குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்.

    10) ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது. 
    குழந்தை பருவத்தை அடிக்கடி தேர்வு என்ற பெயரில் திருடிவிடக்கூடாது. இந்த சிறிய வயதில் ஒரு வகுப்பில் மீண்டும் படிக்கும்நிலை ஏற்பட்டால், கல்விமீது அவர்களுக்குள்ள ஆர்வம் குறைந்துவிடும்.
    மத்திய அரசாங்கத்தால் 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்துக்கான விதிகள் தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் 6 வயது முதல் 14 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான தொடக்கக்கல்வியை இலவசமாக படிக்க உரிமை இருக்கிறது. தொடக்கக்கல்வி முடியும்வரை பள்ளிக்கூடத்தில் அனுமதிக்கப்படும் எந்த குழந்தைக்கும் அதேவகுப்பில் மீண்டும் படிக்கும்நிலை இருக்கக்கூடாது. அந்த குழந்தையை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றவும் கூடாது. இதுதான் மூலசட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு இதில் கொண்டு வந்த ஒரு திருத்தத்தின்படி, 5-ம் வகுப்பிலும், 8-ம் வகுப்பிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏதாவது மாணவரோ, மாணவியோ இந்தத் தேர்வில் தோல்வியுற்றால் மீண்டும் ஒருமுறை 2 மாதங்களுக்குள் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். அதிலும் அந்த மாணவர் தோல்வியுற்றால் அதேவகுப்பில் அந்த ஆண்டும் படிக்க செய்யவேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

    இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் கிளம்பிய எதிர்ப்பை கண்டு, இந்த முடிவு 3 ஆண்டுகளுக்கு இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதாவது இப்போது 5-வது மற்றும் 8-வது வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை. ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் தேர்வில் நிச்சயமாக தோல்வியடையும் மாணவர்களை பெயிலாக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். நிச்சயமாக இந்த முடிவு குழந்தைகளின் மனநிலையை பெரிதும் பாதிக்கும்.

    13 வயதுவரை ஒரு குழந்தையின் வளர்ச்சியை பதின்ம பருவத்துக்கு முந்திய குழந்தைப்பருவம் என்று அழைக்கிறார்கள். குழந்தைதனமான வயது அது. பிஞ்சு மலராக இருக்கும் வயது. போட்டித்தேர்வு என்ற பெயரில் ஆலமரங்களாக வளரவேண்டிய அந்த குழந்தைகளை, தொட்டி செடிகளாக ஆக்கிவிடக்கூடாது. தோல்வியை தாங்கிக் கொள்ளமுடியாமல் துவண்டு போய்விடும் வயது அது. அப்படிப்பட்ட வயதிலுள்ள குழந்தைகளை தேர்வு என்ற பெயரில் கழுத்தறுக்கும் போட்டிக்கு தயார் செய்வது கல்வியின் நோக்கம் அல்ல.

    குழந்தை பருவத்தை அடிக்கடி தேர்வு என்ற பெயரில் திருடிவிடக்கூடாது. இந்த சிறிய வயதில் ஒரு வகுப்பில் மீண்டும் படிக்கும்நிலை ஏற்பட்டால், கல்விமீது அவர்களுக்குள்ள ஆர்வம் குறைந்துவிடும். கிராமப்புறங்களில் ஒரு வகுப்பில் பெயிலாகி மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் நிலைமை ஏற்பட்டால், ‘நான் இனி பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன்’ என்று அடம்பிடித்து வீட்டிலேயே இருந்துவிடும் நிலைமை ஏற்படும். கிராமப்புற பள்ளிக்கூடங்களில் இதன்மூலம் இடைநிற்றல் அதிகரிக்கும். 8-ம் வகுப்புவரை சமவயதுடைய மாணவர்கள் ஒரு வகுப்பில் படிப்பதே நல்லது.

    மேலும், இந்த சிறிய வயதில் போட்டித்தேர்வு என்றால் மனப்பாடம் செய்து படிக்கும் முறைதான் ஒரே வழியாக பள்ளிக்கூடங்களில் இருக்குமே தவிர, பொது அறிவு வளராது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பருவத்தில் பள்ளிக்கூடத்துக்கு சென்று படிப்பது என்பது கற்கண்டாய் இனிக்க வேண்டுமே தவிர, பொதுத்தேர்வு என்ற கசப்பான அச்சம் வந்துவிடக்கூடாது. எனவே, 5-வது வகுப்பு, 8-வது வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை 3 ஆண்டுகள் மட்டும் தள்ளிப்போட்டு பயன் இல்லை. முழுமையாக கைவிட வேண்டும். 
    குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு வயதுவரை குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். அதன்பிறகு குழந்தைக்கு திட உணவு கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இருப்பினும் குழந்தைக்கு திட உணவு கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

    எனவே குழந்தைக்கு எந்த உணவு ஆரோக்கியம் அளிக்குமோ அந்த உணவை மட்டும் குழந்தைக்கு உணவாக கொடுக்க வேண்டும். இவற்றில் ஒரு வயதுவரை குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தையின் ஒரு வயதுவரை அந்த உணவுகள் கொடுக்காதீர்கள்.

    * ஒரு வயது குழந்தை உணவு முறையில் பசும்பால் மற்றும் சோயா பால் போன்றவற்றை குழந்தைக்கு கொடுக்க கூடாது. ஏன் என்றால் குழந்தைக்கு இந்த பாலை கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு செரிமானம் அடைவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். மேலும் இந்த பாலில் இருக்கும் புரோட்டின் மற்றும் மினரல்கள் குழந்தையின் சிறுநீரகத்தை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இதை தவிர குழந்தைக்கு வயிற்று போக்கையும் ஏற்படுத்தும்.எனவே குழந்தையின் ஒரு வயது வரை பசும்பால் மற்றும் சோயா பால் கொடுக்க கூடாது. இதற்கு பதிலாக தாய்ப்பால் கொடுக்கலாம்.

    * ஒரு வயது குழந்தை உணவு முறையில் ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது. திராட்சை மற்றும் ஆரஞ்ச் போன்ற பழங்களில் அதிகமாக அமில தன்மை உள்ளது. இது குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை கொடுக்கும்.

    * ஒரு வயது குழந்தை உணவு முறையில் நிலக்கடலையில் இருந்து பெறப்படும். இந்த பினட் பட்டரும் கூட குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்க கூடியதாக இருக்கிறது. எனவே இதை எல்லாம் நீங்கள் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு பிறகு கொடுப்பது நல்லதாகும்.

    * ஒரு வயது குழந்தை உணவு முறையில் கீரைகள், பீட்ரூட் போன்றவற்றில் லேக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. இது ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான உணவாகும். இதில் இருக்கும் சத்துக்களை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் உடலில் ஆசிட் சுரப்பது இல்லை. எனவே நீங்கள் இது போன்ற காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

    * ஒரு வயது குழந்தை உணவு முறையில் உணவுகள் பாதம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைக்கு மொத்தமாக கொடுக்க கூடாது. ஏன்னென்றால் இவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் குழந்தைக்கு இவை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியவை. எனவே குழந்தைக்கு எந்த ஒரு காரணத்திற்க்காகவும் இந்த நட்ஸ் வகைகளை ஒரு வயதுவரை கொடுக்கக்கூடாது.

    * ஒரு வயது குழந்தை உணவு முறையில் உணவுகள் எல்லா குழந்தைகளுக்கும் மிகமிக பிடித்த ஒன்று எதுவென்றால் அதுதான் சாக்லேட். இவை குழந்தை அதிகம் சாப்பிட்டால் சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

    * ஒரு வயது குழந்தை உணவு முறையில்பாப்கார்ன் ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான தினியாகும் இருப்பினும் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைக்கு ஒரு வயது முடியும் வரை கண்டிப்பாக குழந்தைக்கு பாப்கார்ன் கொடுக்கக்கூடாது.

    * ஒரு வயது குழந்தை உணவு முறையில் முட்டையின் வெள்ளைக்கருவானது குழந்தைக்கு அலர்ஜுயை கொடுக்க கூடியதாக உள்ளது. உங்களது குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்றால் முழுமையாக முட்டையின் வெள்ளைக் கருவை நீங்கிவிட்டு, மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.
    ஆட்டிசத்தைப் பலதரப்பட்ட தன்மையைக்கொண்ட ஒரு குறைபாடு என்பார்கள். இந்த குறைபாடு எதனால் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சை வகைகளை அறிந்து கொள்ளலாம்.
    ஆட்டிசம் என்பது சாதாரணமான மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு, இது ஒருவருடைய தகவல் தொடர்பு, சமூக ஊடாடல், அறிவாற்றல் மற்றும் அவர் நடந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கிறது.

    ஆட்டிசத்தைப் பலதரப்பட்ட தன்மையைக்கொண்ட ஒரு குறைபாடு என்பார்கள். காரணம் இதன் அறிகுறிகளும் பண்புகளும் குழந்தைகளில் பலவிதமாகக் காணப்படுகின்றன, அவர்களை வெவ்வேறு வகைகளில் பாதிக்கின்றன. சில குழந்தைகளுக்கு இதைச் சமாளிப்பதில் பெரிய சவால்கள் ஏற்படக்கூடும், அவர்களுக்குப் பிறருடைய உதவி தேவைப்படும், ஆனால் வேறு சில குழந்தைகள் தங்களுடைய பெரும்பாலான வேலைகளைச் சுதந்தரமாகச் செய்வார்கள், அபூர்வமாகச் சில சிறிய உதவிகள்மட்டுமே இவர்களுக்குத் தேவைப்படும்.

    முன்பு இந்த நிலைகள் ஒவ்வொன்றும் (ஆட்டிஸ்டிக் குறைபாடு, வேறு விதத்தில் குறிப்பிடப்படாத, பரவிய வளர்ச்சிக் குறைபாடு (PDD-NOS) மற்றும் ஆஸ்பெர்கர் குறைபாடு) தனித்தனியே குறிப்பிடப்பட்டுவந்தன, ஆனால் இப்போது இந்த நிலைகள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து ஆட்டிசம் வகைக் குறைபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.

    ஆட்டிசம் எதனால் ஏற்படுகிறது?

    ஆட்டிசத்துக்கான உறுதியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது, பல மரபு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இது நிகழலாம் என தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் காரணிகளுக்கு உதாரணங்களாக, மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய பல்வேறு நிலைகளைக் குறிப்பிடலாம். இவை பிறப்புக்கு முன்னால் நிகழலாம், பிறப்பின்போது நிகழலாம், அல்லது பிறந்தபிறகு நிகழலாம். குழந்தைப் பருவத்தில் மைய நரம்பு மண்டலத்துக்கு ஏற்படக்கூடிய எந்த ஒரு சேதமும் ஆட்டிசத்தை ஏற்படுத்தலாம் என்றும் கண்டறியப்படுள்ளது.

    ஆட்டிசத்துக்கான சிகிச்சை வகைகள்

    குறிப்பு: இந்தச் சிகிச்சைகள் அல்லது தலையீடுகள் அனைத்தும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை சந்திக்கக்கூடிய வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் சிலவற்றைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆட்டிச பாதிப்பு கொண்ட ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறுவிதமான சவால்களைச் சந்திக்கிறது என்பதால், பெற்றோரும் நிபுணர்களும் சேர்ந்து விவாதித்து, அந்தக் குழந்தைக்குச் சிறந்த, பலன்தரக்கூடிய சிகிச்சை எது என்று தீர்மானிக்கிறார்கள், அதனைத் தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள். இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஒரு குழந்தைக்கு நல்ல பலனைத் தரும் ஒரு சிகிச்சை இன்னொரு குழந்தைக்குப் பலன் தராமல் இருக்கலாம், இதற்குக் காரணம் ஆட்டிசம் வெவ்வேறு குழந்தைகளை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது.

    ஆட்டிசம் பிரச்னை கொண்ட ஒரு குழந்தைக்கான முழுமையான சிகிச்சைத் திட்டத்தில் இடம்பெறும் சில சிகிச்சைகள்:

    வளர்ச்சி சார்ந்த, தனித்துவமான வித்தியாசங்கள், உறவுகள் அடிப்படையிலான அணுகுமுறை (DIR, இதனை "ஃப்ளோர்டைம்" என்றும் அழைப்பார்கள்): இது உணர்வு மற்றும் உறவு வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது (உணர்வுகள், தன்னைக் கவனித்துக்கொள்ளுவோருடன் உறவுகள்). அத்துடன், தான் பார்ப்பவை, கேட்பவை, முகர்பவற்றை ஒரு குழந்தை எப்படிப் புரிந்துகொள்கிறது, எப்படிக் கையாள்கிறது என்பதிலும் இந்தச் சிகிச்சை கவனம் செலுத்துகிறது.   

    செயல் சார்ந்த சிகிச்சை: ஒரு குழந்தை தன்னால் இயன்றவரை சுதந்தரமாக இயங்குவதற்குத் தேவையான திறன்களைக் கற்றுத்தரும் சிகிச்சை இது. உதாரணமாக, தானே உடுத்திக்கொள்ளுதல், சாப்பிடுதல், குளித்தல் மற்றும் பிறருடன் பேசுதல் போன்ற திறன்கள் இதில் சொல்லித்தரப்படும்.

    புலன் ஒருங்கிணைப்பு சிகிச்சை: காட்சிகள், ஒலிகள் மற்றும் மணங்கள் போன்ற புலன் சார்ந்த விவரங்களைக் குழந்தைகள் முறையாகக் கையாள்வதற்கு இந்தச் சிகிச்சை உதவுகிறது. சில குழந்தைகள் ஒரு சில ஒலிகளைக் கேட்டு பயப்படும், அல்லது, பிறர் தன்னைத் தொடுவதற்கு அனுமதிக்காது, அதுபோன்ற குழந்தைகளுக்குப் புலன் ஒருங்கிணைப்புச் சிகிச்சை உதவலாம்.

    ஆட்டிசம்

    பேச்சுச் சிகிச்சை: ஒரு குழந்தை தன்னுடைய தகவல் தொடர்பை மேம்படுத்திக்கொள்வதற்குப் பேச்சுச் சிகிச்சைகள் உதவுகின்றன. இந்தச் சிகிச்சைகளில், சைகை காட்டுதல், பட அட்டைகளைப் பயன்படுத்துதல்போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தி ஒரு குழந்தை தன்னுடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் பிறருக்குத் தெரிவிப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இசைச் சிகிச்சை: இந்த வகைச் சிகிச்சையில் பாடுதல், இசையமைத்தல் மற்றும் மேடையில் இசைத்தல் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

    படங்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு (PECS): தகவல் தொடர்பைக் கற்றுத்தருவதற்குப் படச் சின்னங்களோ அட்டைகளோ பயன்படுத்தப்படுகின்றன.

    ஆரம்பத் தலையீடுகள்: ஆட்டிசம்பற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளில், எவ்வளவு சீக்கிரத்தில் குழந்தைக்குச் சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவு பலன் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது இதற்கு ஆரம்பத் தலையீடு பயன்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டவுடனேயே இந்தத் திட்டத்தைத் தொடங்கிவிடலாம். ஆறு மாதக் குழந்தைக்குக்கூட இதனைப் பயன்படுத்தலாம்.

    இந்தத் தலையீட்டுச் சிகிச்சை, ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறது: சமூகத் திறன்கள், மொழி மற்றும் தகவல் தொடர்பு, போலச்செய்தல், விளையாடும் திறன்கள், தினசரி வாழ்வியல் மற்றும் இயக்கவியல் திறன்கள். இந்தத் திட்டத்தில் பெற்றோர் தொடர்ந்து பங்குபெறுகிறார்கள், தீர்மானம் எடுத்தல், சிகிச்சையை வழங்குதல் என அனைத்திலும் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஆகவே ஒரு குழந்தைக்கு ஆட்டிசமோ வேறு வளர்ச்சி சார்ந்த பிரச்னையோ இருக்கலாம் என்று அதன் பெற்றோர் நினைத்தால், அவர்கள் எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவரிடம் பேசுவது முக்கியம்.

    பெற்றோருக்கான பயிற்சி: தங்களுடைய குழந்தைக்கு ஆட்டிசம் வந்திருக்கிறது என்று தெரிந்தவுடன், பல பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகிறார்கள், இவர்களுக்கு ஆதரவும் ஆலோசனையும் தேவை. பழக்க வழக்கங்களை மாற்றும் கொள்கைகளையும் திறன்களையும் பற்றிப் பெற்றோருக்குப் பயிற்சி அளித்தால், அவர்கள் தங்களுடைய குழந்தைகளின் சிகிச்சையில் உதவுவார்கள், அவர்களுடன் இணைந்து பணிபுரிவார்கள். அதைவிட முக்கியமாக, குழந்தைக்குத் தாங்கள் கண்டிப்பாக உதவுவோம் என்று பெற்றோர் காட்டும் உறுதி, அந்தக் குழந்தையின் கல்வி, அறிவாற்றல் திறன்கள் மற்றும் சமூக நடத்தைகளைக் கணிசமாக முன்னேற்றக்கூடும்.
    குழந்தைகளுக்கு வரும் மனச்சோர்வு குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறது, எப்படி உணர்கிறது என்பதை பாதிக்கக்கூடும், அந்தக் குழந்தையின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கக்கூடும்.
    ஒரு குழந்தை வளரும்போது, அவ்வப்போது சோகமாக, காயப்பட்டதுபோல், வருத்தமாக... இப்படிப் பல உணர்வுகளைக் கொண்டிருப்பது இயல்புதான். ஆனால், சில குழந்தைகளுக்கு இந்த உணர்வுகள் நீண்ட நேரம் நீடிக்கலாம், இது அவர்களுடைய உணர்வு மற்றும் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    குழந்தைகளுக்கு வரும் மனச்சோர்வு மிகவும் கவலை தரும் விஷயம். ஒரு குழந்தை எப்படிச் சிந்திக்கிறது, எப்படி உணர்கிறது மற்றும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை இது பாதிக்கக்கூடும், அந்தக் குழந்தையின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கக்கூடும்.

    மனச்சோர்வு கொண்ட ஒரு குழந்தை இவ்வாறெல்லாம் இருக்கக் கூடும்:

    * படிப்பில் அதன் ஆர்வம் குறையக்கூடும், பள்ளியில் அதன் செயல்திறன் திடீரென்று குறையக்கூடும்
    * பள்ளிக்குச் செல்ல மறுக்கக்கூடும்
    * அதன் கவனம் சிதறக்கூடும், படிப்பிலோ மற்ற வேலைகளிலோ கவனம் செலுத்த இயலாமல் இருக்கக் கூடும்
    * எளிதில் களைப்படைந்து சோம்பேறித்தனமாக உணரக்கூடும்
    * பசியெடுக்காமல், தூக்கம் இல்லாமல் இருக்கக்கூடும்
    * சிந்தித்தல் மற்றும் தீர்மானம் எடுத்தலில் தடுமாறக்கூடும்
    * சிறிய விஷயங்களுக்கும் எரிச்சல் அடையக்கூடும்
    * காரணமில்லாமல் அழக்கூடும்
    * தனக்குத் தலைவலி அல்லது வயிற்றுவலி என்று சொல்லக்கூடும், ஆனால் அந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்தால், அதற்கு எந்தப் பலனும் இருக்காது
    * நண்பர்களுடன் விளையாட மறுக்கக்கூடும்
    * அவர்கள் முன்பு மகிழ்ச்சியோடு செய்த செயல்களில் இப்போது ஆர்வம் இல்லாமல் இருக்கக்கூடும்
    ஒரு தேர்வு மூலம் ஒரு மாணவர் கற்றல் திறன் வெளிப்பாட்டை மதிப்பிட்டு விட முடியாது. குழந்தை உளவியலும், சமூக உளவியலும் சரியாக உணராமல் எடுக்கப்பட்ட முடிவாகவே இதை பார்க்க வேண்டி உள்ளது?
    கல்வி பரவலாக்குவதில் இந்தியாவிற்கு முன்னோடியாக திகழும் மாநிலம் தமிழ்நாடு. பள்ளிக்கல்வி பரவலாக்கப்பட்டு அனைவரும் உயர் கல்வி செல்லும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல படி நிலைகளை தாண்டி வந்துள்ளோம். தொடக்கத்தில் முதல் வகுப்பு முதலே தேர்வு இருந்த காலம் உண்டு. எட்டாம் வகுப்பு முடிவில் ஒரு பொது தேர்வு என்பது நீண்ட காலம் நடைமுறையில் இருந்தது. இத்தகைய தேர்வுகளின் சாதக பாதகங்களை பரிசீலித்து தான் கல்வி உரிமைச் சட்டம் இயற்றும் போது 8-வது வரை எந்த மாணவரையும் தேர்ச்சியில்லை என்று கூறி அதே வகுப்பில் தங்க வைக்கக்கூடாது என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தனது கொள்கை முடிவாகவும் இதை அறிவித்தது.

    பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவு மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அதை மாற்றி அமைத்தது.

    அதன் தொடர்ச்சியாக எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அந்த வகையில், பிளஸ்-2 பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 16-ல் திருத்தம் கொண்டு வந்து 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தவும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்தவும் அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதே வகுப்பில் நிறுத்தவும் வழி செய்கிறது. அதே பிரிவில் மாநில அரசு விரும்பினால் மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்தாமல் அடுத்த வகுப்பிற்கு அனுப்பவும் வழி ஏற்படுத்தி உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு 5 - 8 வகுப்பிற்கு தேர்வு நடத்தவும் முதல் மூன்று ஆண்டுகள் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களை அதே வகுப்பில் நிறுத்தவும் வேண்டாம் என்று அறிவிக்கும் அரசாணை வெளியிட்டுள்ளது.

    14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேர்வு என்பது என்றுமே உளவியல் ரீதியான பல தாக்கங்களை ஏற்படுத்தும். தேர்விற்காக பயந்து மாணவர்கள் படிப்பார்கள் என்பது ஏற்க முடியாத வாதம். வெற்றி தோல்விகளை பற்றிய புரிதல் இல்லாத வயது. ‘நீ பாஸ்’ அல்லது ‘நீ பெயில்’ என்ற முத்திரை குத்தப்பட்டு வந்து தான் சிக்கலை உண்டாக்குகிறது. மாணவர் தானாக பள்ளிக்கல்வியை விட்டு வெளியேறவோ அல்லது பெற்றோர் புரிதல் இல்லாமல் இதற்கு மேல் படிப்பு வரவில்லை என்ற முடிவிற்கு சென்று குழந்தைகளை நிறுத்திவிடவோ வாய்ப்புள்ளது.

    ஒரு தேர்வு மூலம் ஒரு மாணவர் கற்றல் திறன் வெளிப்பாட்டை மதிப்பிட்டு விட முடியாது. தேர்வு என்ற அச்சத்தோடு தேர்வு கூடத்திற்கு நுழையும் குழந்தை அறிந்ததைக் கூட சில நேரத்தில் எழுதாமல் தயங்கி அமர்ந்திருக்கும். குழந்தை உளவியலும், சமூக உளவியலும் சரியாக உணராமல் எடுக்கப்பட்ட முடிவாகவே இதை பார்க்க வேண்டி உள்ளது?

    கல்வி உரிமைச் சட்டம் கட்டணமில்லா கல்வி என்கிறது. அவ்வாறு இருக்கும் போது தேர்வுக் கட்டணம் என்பது எவ்வாறு நியாயம். கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 30 வாரியத் தேர்வில் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி அவசியம் இல்லை என்கிறது. அவ்வாறு இருக்க பொதுத்தேர்வு எவ்வாறு நடத்த இயலும். இவற்றை விளக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது.

    கற்றல் கற்பித்தல் பணி மட்டுமே ஆசிரியர்களுக்கு தந்து விளையாட்டு, இசை, ஓவியம் உள்ளிட்ட ஆசிரியர் பணி இடங்களை தொடக்கப்பள்ளிகளில் உருவாக்கி சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்கி தருவது தான் கல்வி தரத்தை உயர்த்தும். தேர்வு என்பது வடிகட்டி வெளியேற்றவே வழி வகுக்கும்.

    பிரின்ஸ் கஜேந்திரபாபு,

    பொதுச்செயலாளர்,

    பொதுபள்ளிகளுக்கான மாநிலமேடை
    தனிப்பட்ட, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் சமுதாயச் சிக்கல்களுக்கு பலியாகும் பலி ஆடுகளாகத்தான் இளம் சிறுவர்கள் இருக்கிறார்கள்.
    இளம் சிறுவர்கள் என்பவர்கள் 18 வயதிற்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகள். இவர்கள் எந்த ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கக் கூடிய மிக முக்கிய வயதுப் பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுப்பதற்கும், தண்டிப்பதற்கும் கடுமையானச் சட்டங்கள் உள்ளன. ஆனால் இளம் சிறுவர்கள் ஒரு சிலரால் இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிரானச் சட்டங்கள் மிகக் கடுமையானவை அல்ல. ஆனால் அதற்கான காரணங்களும் மிகவும் உறுதியானவை.

    தனிப்பட்ட, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் சமுதாயச் சிக்கல்களுக்கு பலியாகும் பலி ஆடுகளாகத்தான் இளம் சிறுவர்கள் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருந்தால் அந்தக்குழந்தைகள், பெற்றோர்களின் பாசத்திற்காக ஏங்கும் போது, பாசத்தைக் கொடுப்பது போல் பாசாங்கு செய்யும் கூட்டத்தின் கட்டுக்குள் இந்த இளம் சிறுவர்கள் தள்ளப் படுகிறார்கள். ஆண் குழந்தையாக இருந்தால்; குற்றங்கள் புரியும் கூட்டத்தில் சேர்ந்து கூடா நட்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பெண்குழந்தையாக இருந்தால் ஏதேனும் ஏமாற்றுக் கூட்டத்தின் கட்டுப்பாட்டில் சென்று வாழ்க்கையைப் பறி கொடுக்கும் சூழல் ஏற்படுகிறது.

    அது போல், தந்தை அல்லது தாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, வீட்டில் நடக்கும் அடிதடி பிரச்சினைகளைப் பார்க்கும் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வன்முறைதான் ஒரே வழி என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வதோ அல்லது வன்முறை என்பது ஒரு வாழ்க்கைமுறை என்ற தவறானப் புரிதலுக்கு உட்படுவதற்கோ வாய்ப்பு உள்ளது. அந்தக் குழந்தைகள் வன்முறை பாதையை தேர்ந்தெடுப்பதற்குப் பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன.

    இதையெல்லாம் தடுப்பதற்கானக் கடமை; குடும்ப நிலையில் பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும், சமூக நிலையில் நம் ஒவ்வொருவரிடமும் மற்றும் அரசு நிலையில் காவல் மற்றும் சமூக நலத் துறையிடமும் உள்ளது. குடும்ப நிலையில், பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, குறைந்த பட்சக் குடும்பங்களாக மாறிவிட்டச் சூழலில் பெற்றோர்கள் வேலைக்குச் செல்பவர்களாய் மாறிவிட்டதால் அரவணைத்து அன்பு காட்ட ஆள் இன்றி குழந்தைகள், உறவுக்காக வீட்டின் ஜன்னலோரத்தில் சமுதாயத்தைத் தேடவேண்டி வருகிறது அல்லது வீட்டு வாசலுக்கு வெளியே பாசத்தைத் தேட வேண்டியிருக்கிறது. தாத்தா, பாட்டிகளை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விட்டதால் குழந்தைகள் வேறு இல்லங்களைத் தேடி அலைகின்றனர்.

    சமுதாய நிலையில் வேலை வேலையென்று அன்றாடக்காட்சிகளாக அனைவரும் மாறிவிட்டதால் மற்றவர்களுக்கு நம் நேரத்தைச் செலவிட நாம் தயாராக இல்லை. எந்த வேலையும் செய்யாமல் நேரம் அதிகமாக இருப்பவர்கள் குறுக்கு வழிச் சிந்தனைகளில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களோடு பாசத்திற்காக ஏங்கும் இளம் சிறார்களுக்கு அந்த ஏக்கத்தை தீர்ப்பது போல் ஒரு கானல் நீரைக் குடிநீராகக் காட்டி அவர்களின் குடியைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு சாவை ஏற்படுத்துகிறார்கள்.

    சமூக நிலையில் இளம்சிறுவர்களின் செயல்கள் விமர்சிக்கப் படுவதோடு நின்று விடுகிறோம். அதிகபட்சம், பெரும்பாலானோர் இளைஞர்களை ஊக்குவிக்கப் புத்தகங்கள் எழுதுவதும், எழுச்சிப் பேச்சு பேசுவதும், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய அளவுக்குப் பேசுவதிலும் நம் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறோம். உண்மையான சவால் என்பது ஒற்றைப் பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள், பெற்றோர்களிடம் அன்புக் கிடைக்காத குழந்தைகள், பெற்றோர்கள் ஏதாவது ஒரு கெட்டப்பழக்கத்துக்கு ஆளாகிய நிலையில் கவனிப்பின்றி வளரும் குழந்தைகள், தந்தை, தாயை அடிப்பதைப் பார்த்து வளரும் குழந்தைகள் என மேற்சொன்ன சூழல்களில் வளரும் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் சிறப்புக்கவனத்திற்கு ஆளாக்கபட வேண்டியவர்கள்.

    இவர்கள் சமுதாயக் கவனத்திற்கு வருவது, ஏதாவது பெரிய தவறுகளை செய்து காவல்துறைக் கவனத்திற்கு வரும் போது தான். தமிழகக் காவல்துறை சார்பில் போலீஸ் பாய்ஸ் மற்றும் கேர்ல்ஸ் கிளப் என அமைக்கப்பட்டு இதுபோன்றக் குழந்தைகள் குற்றவாளிகளின் தவறானப் பாதைகளை பற்றி சென்று விடாதபடிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் சமுதாயம் ஒரு அமைப்பாக பெரிய அளவில் அப்படிப்பட்டக் குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்கள் பாதையை சீரமைப்பது மிக முக்கியம்.

    பழகிவிட்ட மற்றும் பயங்கரமான குற்றவாளிகள் இளம் சிறுவர்களை குறி வைத்து அவர்களுக்கு போதை வஸ்துகள் மற்றும் குற்றச் செயல்களால் ஏற்படும் ஒரு மாயை போதையைக் காட்டி, அதை அவர்கள் பொய் என உணர்வதற்குள், அவர்களை சட்டத்தின் மற்றும் சமுதாயப் பார்வையில் குற்றவாளிகளாக உருவாக்கி விடுகிறார்கள். ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையால் அங்கீகாரத்துக்கு ஏங்கக்கூடிய இந்த சிறுவர்களின் மனநிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, குற்றத்தில் ஈடுபடும் போது கிடைக்கும் ‘ஒரு போலி மரியாதையில்’ இருந்து அவர்கள் மீண்டு வரமுடியாத அளவிற்கு மாற்றி விடுகிறார்கள். அந்த இளம்சிறுவர்களுக்கு ஒரு மனிதனுக்கு உண்மையான மரியாதை என்பது குற்றம் செய்வதால் வருவதல்ல கடும் உழைப்பால் வருவது என்பதை உணர்த்துவது காவல் துறையின் கடமை மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்தின் பணியாகும்.

    ஒரு சில சினிமாக்களில் குற்றவாளிகள் ஹீரோக்களாகக் காட்டப்படுவதும், தவறு செய்பவர்கள் எல்லா வித போலி சுகத்தையும் அனுபவிப்பது போலக் காட்டுவதும் இறம்சிறார்கள் மனதில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காவல் துறை சார்பில் குற்றத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ள சிறுவர்களை மட்டுமன்றி சிறுகுற்றங்களில் ஈடுபட்டு குற்ற வாழக்கையை ஆரம்பிக்கும் சிறுவர்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி ஒவ்வொரு இளம் சிறாருக்கும் தனிப்பட்ட திட்டவரைவு தயார் செய்து வருகிறோம். இதில் பொதுமக்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    இளம்சிறுவர்களைக் குறிவைத்து அவர்களை குற்ற செயலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் சிறுமிகளை பாலியல் செயல்களில் குறிப்பாக இணையதள பாலியல் தளங்களில் அறிமுகமாக்கி சம்பாதிக்கும் குற்றங்களில் தொடங்கி, இளம்சிறுவர்களை கொலைக் கருவிகளாகப் பயன்படுத்தும் கொடூரமானக்குற்றங்களும் அரங்கேற்றப்படுகின்றன.

    சொல்லப்போனால், மணல் கடத்தலுக்கு வேவுபார்க்கும் வேலைகளில் கூட ஈடுபடுத்துகிறார்கள். எனவே, இளம்சிறுவர்கள் குற்றவாளிகளாக உருவாகுவதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. சமூகத்தில் ஒவ்வொருவரும் எந்த அளவு எதிர்கால இந்தியா அமைதியானதாக, வளமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதாகக் கருதுகிறார்களோ அதே அளவு அவர்கள் பெற்றோர்களாகவும், காவல்துறைக்கு இளம்சிறுவர்கள் குற்றவாளிகளாக மாறுவதைத் தடுப்பதற்கு உதவுபவர்களாகவும், இளம்சிறுவர்களின் மன ஆரோக்கியத்தில் அக்கறைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் நியாயம்.

    வி.பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி., திருச்சி.
    நிறைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிட ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் ஆய்வாளர்கள் மிகச்சிறிய வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தவறு என கூறுகின்றனர்.
    போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பள்ளியில் சேர்க்க அட்மிஷன் வாங்கிவிடுகிறார்கள். இரண்டரை வயது குழந்தைகளுக்கு கூட லட்சக்கணக்கில் பள்ளிக்கட்டணம் இருக்கிறது. ஆனால் என்ன தான் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் பெற்றோர்கள் எதற்கும் அசறுவதாக இல்லை. கடனை  வாங்கியாவது பள்ளிக்கட்டணத்தை செலுத்திவிடுகிறார்கள்.   

    பல பள்ளிகள் இரண்டரை வயது குழந்தைகளை கூட பள்ளியில் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் இந்த வயது உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாராகிவிட்டது என்பதற்கான அர்த்தம் அல்ல.

    நிறைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிட ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் ஆய்வாளர்கள் மிகச்சிறிய வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தவறு என கூறுகின்றனர்.

    குழந்தைகளை பள்ளியில் சேர்க்க சரியான வயது 6 என்றும், ஏழு வயதில் தான் குழந்தைகள் எதையும் புரிந்து கொண்டு செயல்படும் திறனை பெறுவார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
    உளவியல் மருத்துவர்கள்

    உளவியல் மருத்துவர்கள் சுயக்கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்று இது குழந்தைகளுக்கு ஏழு வயதில் தான் வரும். மேலும் இந்த வயதில் தான் குழந்தைகளுக்கு கவனம் மற்றும் சிறந்த செயல்பாடுகள் உண்டாகும் என்று கூறுகின்றனர்.

    குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. சில குழந்தைகள் தங்களது ஏழு வயதிலும் சிலர், பதினொரு வயதிலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றார்களாம். 
    விரல் சூப்பும் குழந்தையை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்கள் வாயில் விரலை வைக்கும் நேரங்களை கண்காணியுங்கள். அவர்கள் வாயில் விரல் வைக்க முனையும்போதெல்லாம் அவர்களின் கவனத்தை திசைதிருப்புங்கள்.
    உங்கள் குழந்தை கருவிலிருக்கும் போதே விரல் சப்ப ஆரம்பித்துவிடும். இது அவர்கள் பிறந்த பின்னும் தொடரும். கட்டைவிரலை சப்புவது அவர்களின் பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும். உங்கள் குழந்தை பயப்படும் போதோ, பசி வரும்போதோ, அல்லது தூக்கம் வரும்போதோ முதலில் செய்வது இதாகத்தான் இருக்கும். சிறு வயதில் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த பழக்கம் இருக்கும். அப்படி செய்யும் போது அவர்களை தடுக்காதீர்கள், அது அவர்களுக்கு நன்மை பயப்பதாகும்.  

    விரல் சப்பும் பழக்கம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர்களை இந்த பழக்கத்தை நிறுத்தச்சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்தும் போது அவர்கள் அதை அதிகம் செய்ய தொடங்குவார்கள். எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு அவர்களை கட்டாயப்படுத்துவது அவர்களை சிறு வயதிலியே அதிகம் கோபப்படுபவர்களாக மாற்றிவிடும்.

    அவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்கள் வாயில் விரலை வைக்கும் நேரங்களை கண்காணியுங்கள். அவர்கள் வாயில் விரல் வைக்க முனையும்போதெல்லாம் அவர்களின் கவனத்தை திசைதிருப்புங்கள். உதாரணமாக, தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும்போது விரல் சப்ப முயன்றால் அவர்கள் கையில் ஒரு பந்தை கொடுங்கள் அல்லது அவர்கள் விரல்களை வைத்து செய்யும் வேறு வேலை எதையாவது கொடுங்கள். தூங்குவதற்கு முன் முயன்றால் அவர்களின் கவனத்தை திசைமாற்றி அவர்களை பாட்டு பாடியோ, கதை சொல்லியோ தூங்க வையுங்கள்.

    உங்கள் குழந்தை அவர்கள் கைச்செலுத்துவதைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் ஏன் அதை செய்கிறார்கள் என்று கவனியுங்கள். ஆரம்பத்தில் சிறியதாக தொடங்குபவர்கள் பின்னர் நாக்கு மற்றும் பற்களின் செயல்பாட்டால் முழுநேரமும் விரல் சப்ப ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் விரலை கவனித்துக்கொண்டே இருங்கள். அவர்கள் இந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பதுபோல் உங்களுக்கு தெரிந்தால் 4 வயதுக்கு முன்னாடியே நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

    பற்கள் நிலையாக வளர தொடங்கியபின் விரல் சப்புவது அவர்களின் பல் அமைப்பையே சிதைத்துவிடும். 4 வயதுக்கு முன்னரே இந்த பழக்கத்தில் இருந்து விடுபட அவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை அதை தொடர முடிவு எடுத்திருந்தாலும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு அதை தடுக்க முயற்சி செய்யுங்கள்.

    அவர்கள் விரல் சப்ப போகிறார்கள் என்று தெரியும்போதெல்லாம் அவர்களை திசைதிருப்புங்கள். அவர்கள் பல் நிலையாக முளைப்பதற்கு முன் இதை நிறுத்தவேண்டும். மறந்துவிடாதீர்கள், எந்தவித கடுமையான நடவடிக்கையையும் எடுத்துவிடாதீர்கள், இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.

    குழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை பார்க்கிறீர்களா… நிச்சயம்… நீங்கள் குழந்தையின் நகங்களைப் பராமரித்தே ஆக வேண்டும் என்பதன் அறிகுறி அது.
    குழந்தை பராமரிப்பு முறை என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்தவகையில் குழந்தைகளின் ஒவ்வொரு உறுப்புகளையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். குழந்தையின் சில உறுப்புகளை சுத்தம் செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் குழந்தையின் நகங்களை (Baby Nail Cutting) எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பற்றி இப்போது இந்த பகுதியில் நாம் காண்போம்.

    குழந்தை குளித்த பிறகு, நகங்கள் சாஃப்டாக இருக்கும் என்பதால் அப்போது டிரிம்மரை வைத்து நகத்தைத் தேய்க்கலாம்.

    குழந்தை தூங்கும்போது, நகம் வெட்டலாம் அல்லது ட்ரிமரால் தேய்க்கலாம். குழந்தை தூங்கவில்லை என்றால், குழந்தையின் கவனத்தை விளையாட்டு பொருளில் திருப்பிய பின்னர் நகத்தை வெட்டலாம், சுத்தம் செய்யலாம்.

    நகத்தை வெட்டுகிறேன் என்று குழந்தையின் சதைப் பகுதியை காயப்படுத்தி விடாதீர்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு நகத்தை வெட்டுவது சரி.

    நகம் வெட்டினால் அந்த இடம் கூர்மையாக இருக்கும். ஆடையின் நூலில் குழந்தையின் சின்ன சிறு விரல் நகம் சிக்கலாம். எனவே, நைல் ஃபைலரால் மென்மையாகத் தேய்த்துவிடுங்கள்.

    சில குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அவர்களுக்கு நகம் கட் செய்யும் போது, உதவிக்கு ஒரு நபரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் குழந்தையின் கவனத்தைத் திருப்ப, இன்னொருவர் குழந்தையின் நகங்களை சுத்தம் செய்யலாம்.

    நகம் கட் செய்யும்போது, தவறுதலாக, தெரியாமல் குழந்தையின் சருமத்தில் ஏதேனும் கீறலோ ரத்தமோ வந்தால் உடனடியாக பஞ்சை வைத்து அதை அப்படியே அழுத்திப் பிடியுங்கள். மிதமாக அழுத்திப் பிடிக்கவும்.

    சில அம்மாக்கள் குழந்தையின் நகங்களை தன் வாயால் கட் செய்வார்கள். இது தவறு. அப்படி செய்ய கூடாது. இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் கிருமி பாதிப்புகள் வரும்.
    குழந்தை தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரண விஷயம். இதிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது…? குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    குழந்தைகளுக்கு எளிதில் கழற்றக்கூடிய மிகவும் லேசான ஆடைகளை போட்டுவிடுவது மிகவும் நல்லது.

    குழந்தைகளுக்கு ஊசி போடும் போது நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் குழந்தையின் கவனத்தை திசைதிருப்புங்கள்.

    குழந்தை பாதுகாப்பாக உணரும் படி அரவணைத்துக் கொள்ளுங்கள். கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளையாட்டு காண்பிக்கலாம். குழந்தையை துணியால் போர்த்தி அரவணைக்கலாம். குழந்தையை, தடுப்பூசி போடும் போது உங்களது மடியில் வைத்திருங்கள்.

    குழந்தை தடுப்பூசி (Baby Vaccines) போட்ட பின்பு பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:-

    மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று குழந்தைக்கு பராமரிப்பு முறையை மேற்கொள்ள வேண்டும். குழந்தைக்கு ஊசி போட்ட இடத்தில் ஈரமான துணியை வைத்து லேசாக ஒற்றி எடுக்க வேண்டும்.

    குழந்தைக்கு ஊசி போட்ட பின்பு காய்ச்சல் வந்தால் தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் தடுப்பூசி போட்ட பின்பு ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள், இதற்கு கவலைபட வேண்டாம். இருப்பினும் உங்கள் குழந்தைகள் மீது அதிக கவனமாக இருங்கள்.

    பொதுவாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவப்பாகுதல். ஊசி போட்ட பிறகு 1-2 நாட்கள் காய்ச்சல் வரலாம்.

    M.M.R அல்லது சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு, காய்ச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஒரு வாரம் அல்லது ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கலாம்.
    குழந்தை தடுப்பூசி போட்ட பின்பு வரும் காய்ச்சலை சந்திக்க வேண்டும்:

    குழந்தை அமைதியாக உறங்குகிறதா என்பதைக் கவனியுங்கள். இதற்கு குழந்தையின் அக்குள் பகுதியில் தர்மாமீட்டர் வைத்துப் பார்க்கலாம். டிஜிட்டல் தர்மாமீட்டர் பயன்படுத்தி, உடலின் வெப்பநிலையைக் கண்டறியலாம். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சலின் வெப்பநிலையைக் கணக்கெடுங்கள்.

    மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று காய்ச்சலுக்கான மருந்தினை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தையை மிகவும் பாதுகாப்புடன் கவனித்துக்கொள்ளுங்கள்.

    மிகவும் அரிதாக வரக்கூடிய பிரச்சனை என்னவென்றால் குழந்தைகள் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் விழுங்குவதில் சிரமம் ஆகிய பிரச்சனைகள்.
    அலட்சியம் படுத்தக்கூடாத விஷயங்கள் ஆகும்.

    உதடு, நாக்கு வீங்குதல், பெரிதாகுதல், அதிகமான காய்ச்சல், பலவீனமாகுதல், தூக்கம் இல்லாமல் இருப்பது, தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாமல் போவது, சாப்பிடகூட எழுந்திருக்காத குழந்தை, 3 மணி நேரத்துக்கும் மேல் குழந்தை அழுது கொண்டே இருப்பது சாதாரணமாக அழுவதைவிட இயல்புக்கு மாறாக குழந்தை அழுவது,  சருமத்தில் சிவப்பாக திட்டு திட்டாக தோன்றுதல், உதறுதல், வலிப்பு வருவது போல இழுத்தல், வயிறு வீக்கம், மலத்தில் ரத்தம் வருதல், அடிக்கடி வாந்தி எடுத்தல், 48 மணி நேரம் ஆகியும் காய்ச்சல் இருத்தல்.

    குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, இதுபோன்ற பிரச்னைகள் வருவது மிகவும் சாதாரணமான விஷயம் தான். ஆனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

    ×