என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பருவ காலத்தை ஒரு ஆண்டில் இள வேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு காலங்களாகப் பிரித்து அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல உணவு, வாழ்வியல் மற்றும் நோய் தடுக்கும் முறைகளை கால ஒழுக்கமாக சித்த மருத்துவம் நமக்கு அளித்துள்ளது.
    பருவ காலத்தை ஒரு ஆண்டில் இள வேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு காலங்களாகப் பிரித்து அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல உணவு, வாழ்வியல் மற்றும் நோய் தடுக்கும் முறைகளை கால ஒழுக்கமாக சித்த மருத்துவம் நமக்கு அளித்துள்ளது. ஒரு பருவ கால நிலை முடிந்து, அடுத்த பருவ கால நிலை ஆரம்பமாகும்போது சுற்றுச் சூழலில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நமது உடலிலும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

    குளிர்காலத்தில் கபம் நம் உடலில் அதிகரித்திருக்கும். அப்போது நமக்கு உடல்பலம் அதிகம் தேவை. அதற்கு ஊட்டசத்துமிக்க உணவுகளும், நல்ல தூக்கமும் அவசியம். இளவேனில், முதுவேனில் என்பவை கோடை காலமாகும். வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரிக்கும்போது நமது உடலிலும் வெப்பம் ஆரம்பிக்கும். அப்போது, குளிர்காலத்தில் உடலில் சேர்ந்துள்ள கபம் இளக தொடங்கும். இதனால் சிலருக்கு சளித் தொல்லை நீர்ஏற்றம், தலைவலி போன்றவை ஏற்படும். உடல் பலம் குறைந்து, நோய்த்தொற்று எளிதில் உடலைத்தாக்கும்.

    மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல் சியஸ். வெப்பம் அதிகமாகும்போது உடலில் அதிகமான வியர்வை சுரந்து உடலை குளிர்விக்கும். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு ரத்தத்தில் உப்பு சத்துக்கள் குறையும். அப்போது உடல் வறட்சி, உடல் சோர்வு, பசியின்மை, உணவின் மேல் விருப்பமின்மை போன்றவை ஏற்படும்.

    இந்த கால நிலையில், முதியவர்களுக்கு நீர்ச்சத்து மற்றும் உப்பு சத்து குறைவதாலும் வெப்பம் அதிகமாவதாலும் தளர்ச்சி, மயக்கம், சோர்வு ஏற்படும். வேகமாக செயல்பட முடியாமை, மனக்குழப்பம், நினைவாற்றல் குறைபாடு போன்றவைகளும் ஏற்படும். அதனால் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இந்த காலகட்டத்தில் குழந்தைகளையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். சுகாதாரமான தண்ணீர் மற்றும் உணவுகளையே கொடுக்க வேண்டும். இப்போது பெரும்பாலான வீடுகளிலும், அலுவலகங்களிலும் வெப்பத்தை தணிக்கும் குளிர் சாதன கருவிகளை பயன்படுத்துகிறோம். அதன் உள் இருக்கும் வலைகளில் தூசு படியாமல் சுத்தம் செய்து வைக்கவேண்டும். தூசுகள் மூலம் நோய்க் கிருமி பரவும் அபாயம் உள்ளது.

    சீதோஷ்ணநிலைக்கு ஏற்ற உணவுகளை சமைத்து சாப்பிடவேண்டும். வேப்பம் பூ, மாங்காய், வெள்ளரிக்காய் போன்றவைகளை உணவில் சேர்க்கவேண்டும். தர்பூசணி முலாம்பழம், நுங்கு, வேர்க்கடலை, முருங்கைக்காய் போன்ற இந்த பருவநிலைக்கே உரித்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து சாப்பிட வேண்டும்.

    நீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்து குடிப்பதன் மூலம் நீரால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். வெட்டிவேர் 10 கிராம், விளாமிச்ச வேர் 10 கிராம், சந்தனத் சிராய் 5 கிராம் ஆகியவற்றை சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி பானை நீரில் இட்டு பருகலாம். இதனால் தாகம் தணிவதோடு உடலும் குளிர்ச்சியாகும்.

    வெயிலில் அலைந்துவிட்டு திரும்பியதும் குளிர் பானங்களைப் பருகக்கூடாது. வெயில் காலத்தில் குளிர்சாதன பெட்டியில் இருந்து நீரை எடுத்து ஜில்லென்று பருகுவது ஏற்புடையதல்ல. அது அஜீரணத்திற்கு முக்கிய காரணம். இளநீர், கரும்புச்சாறு, நீர் மோர், எலுமிச்சை, நன்னாரி சர்பத், பானகம் போன்றவற்றை பருக வேண்டும். செயற்கை குளிர்பானங்கள் அதிக அளவில் இனிப்பு சுவையுடையவை. அவை கல்லீரலில் பாதிப்பை உண்டாக்கும். மிதமான இயற்கை இனிப்பு களான தேன், பனை வெல்லம் , நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. பாரம்பரியமான கம்பு, கேழ்வரகு கூழை மோர் கலந்து பருகலாம். இதனால் வைட்டமின் பி சத்து அதிகரிக்கும். குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். ஜீரண சக்தி மேம்படும். மலச்சிக்கல் ஏற்படாது.

    உடல் சூடு காரணமாக உடலில் உள்ள திசுக்களில் நீர்ச்சத்து குறையும். தலைவலி மற்றும் வெப்பம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து பக்கவாதம் ஏற்படலாம். மலச்சிக்கல், மூல நோய் உண்டாகலாம். இந்த தொந்தரவுகளை தவிர்க்க நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிகம் சாப்பிடவேண்டும். காரமுள்ள, புளித்த, பொரித்த உணவுகளையும், மசாலா அதிகம் கலந்திருக்கும் உணவுகளையும் தவிர்த்து விடவேண்டும். கோடை காலத்தில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் , கல்லடைப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். சருமத்தையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுத்தமாக பராமரித்தால், சருமத் துவாரங்களில் அடைப்பு ஏற்படாது. வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சை தொற்று போன்றவை ஏற்படாது.

    கோடைகாலத்தில் மதியம் சிறிது நேரம் தூங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். கடினமான உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. சிலர் வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன், வியர்வையை கட்டுப் படுத்தக் கூடிய டியோடரண்ட் போன்றவைகளை பயன் படுத்துவார்கள். அவை வியர்வை வெளியேற தடையாக இருக்கும். அதனால் அவை சருமத்திற்கு ஏற்றதல்ல.

    இந்த பருவநிலையில் இயல்பாகவே பசி குறையும். அதனால் திரவ உணவுகள் சிறந்தது. இரவு உணவிற்கு பின்பு சிறிது நேரம் காலாற நடப்பது நல்லது. வெயிலில் சென்று வீடு திரும்பிய உடன் நீரில் முகம், கை கால் கழுவ வேண்டும். இது தொற்று நோயிலிருந்து காக்கும்.

    கோடை உஷ்ணத்தில் இருந்து உடலை காக்க வீட்டிலேயே பானகம் தயார் செய்து பருகுங்கள்.

    ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். வெல்லம் அல்லது கருப்புக்கட்டி 50 கிராம் தேவை. ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள், மிளகுத்தூள் , கிராம்புத் தூள் போன்றவைகளை தலா ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்து கோடைகாலம் முடியும் வரை தினமும் பருகி வாருங்கள்.

    - தொடரும்.

    கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை.
    குளிர்காலத்தில் தோல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்..
    குளிர்காலத்தில் தோல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். உரியச் சத்துகள் நம் உடலில் இருந்தால் இந்த பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்..

    அழகுக்கான இயற்கை தயாரிப்புகளில் நெல்லி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுவதன் மூலம் நச்சுகளை அகற்றுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்படுதல் மூலம் சருமம் மிளிரத் தொடங்கும்.

    பப்பாய்ன் என்னும் நொதி (என்சைம்) பப்பாளியில் உள்ளது. அது செயல்படாத புரதத்தை உடைக்கிறது. தோலிலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகவும் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயல்படுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ சத்தும் அதிகம் உள்ளது. பப்பாளி, முதுமை அடையாளத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

    புரதம் மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் அவகோடாவில் அதிகம் அடங்கியுள்ளது. குளிர்காலத்தில் சருமம் வறண்டுவிடாமல் இது தடுக்கிறது. தோலை மிருதுவாக காத்து, மிளிரச் செய்கிறது. அவகோடாவிலுள்ள வைட்டமின் இ, தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

    சருமத்திற்குப் புத்துயிர் தரக்கூடிய பழம் மாதுளை. தோலில் சுருக்கம் விழுவதைக் குறைத்து, வயதான தோற்றத்தைத் தவிர்க்கிறது. குளிர்காலத்தில் தோல் விரிவடையும். மாதுளை தோலின் நுண்துளைகள் இறுக்கமாகக் காக்கிறது..

    வைட்டமின் சி அதிகம் காணப்படும் பழம் அன்னாசி. நுண்துளைகள் வெடித்து அதில் மாசு தங்குவதால் பருக்கள் மற்றும் கட்டிகள் ஏற்படுகிறது. அன்னாசிப்பழம் ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகக் கரும்புள்ளிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தோலின் நுண்துளைகள் சுத்தமாக்குகிறது..

    வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது வறண்ட சருமத்திற்கு நீர்ச்சத்து அளித்து, ஈரப்பதத்தைக் கூட்டுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் இ மற்றும் சி இரண்டும் சருமத்தை மிளிரச் செய்கின்றன. குளிர்காலத்தில் தோல் மங்கலாகத் தோற்றமளிப்பதை இது தடுக்கிறது..

    வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை சீத்தாப்பழத்தில் உள்ளன. இவை, உடலிலுள்ள ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில்லா அணுக்களுக்கு (ஃப்ரீ ராடிகல்ஸ்) எதிராகச் செயல்படும். சீத்தாப்பழ ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் தோலின் அடுக்குகளில் புதிய செல்கள் உருவாகிறதை ஊக்கப்படுத்தும்..

    கிவியிலும் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது கொலோஜின் என்ற சருமத்திற்குத் தேவையான புரதத்தை உடல் உற்பத்தி செய்ய உதவுகிறது. தோலுக்கு ஈரப்பதத்தை அளிக்கக்கூடிய வைட்டமின் இ சத்தும் இதில் உள்ளது..

    குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பழம் பிளம். இதில் வைட்டமின்கள் பி மற்றும் இ ஆகியவை உள்ளன. மெக்னீசியம், இரும்பு, கால்சியம் (சுண்ணாம்பு சத்து), ஸிங்க் (துத்தநாகம்) ஆகிய தாது உப்புகளும் இப்பழத்தில் உள்ளன. இது உடலைச் சுத்தப்படுத்தி, தோலின் மீளும் தன்மையைப் பராமரிக்கிறது..

    முகக்கவசங்கள் முகத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். சரியாக பொருந்தாவிட்டால் அதனை அணிவது பயனற்று போய்விடும்.
    கொரோனா நோய் தொற்றுவில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் நிறைய பேர் வீட்டிலேயே முகக்கவசங்களை தயாரித்து அணிந்து வருகிறார்கள். வீட்டில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள்தான் தனிமனித சுகாதாரத்தை பேணுவதற்கு சிறந்தது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் கூறியுள்ளது.

    ஒருமுறை பயன்படுத்திய முகக்கவசங்களை நன்றாக சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தயாரிப்பதும் சிறந்தது. அந்த முகக்கவசங்கள் முகத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். சரியாக பொருந்தாவிட்டால் அதனை அணிவது பயனற்று போய்விடும்.

    முகக்கவசங்களை அணியும்போது தாடைப்பகுதி முழுவதும் மூடியிருக்க வேண்டும். தளர்வாக இருக்கக்கூடாது. மூக்கு பகுதியையும் முழுவதுமாக மூகக்கவசம் மூடி இருக்க வேண்டும். மூக்குக்கு கீழே தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. மூக்கின் நுனிப்பகுதியை மட்டும் மறைத்திருக்கவும் கூடாது. மூக்கு பகுதியும், தாடை பகுதியும் முழுவதுமாக மூடி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    முகக்கவசத்தின் எந்த பகுதியும் தளர்வாக இருக்கக்கூடாது. முகத்தின் அனைத்து பகுதியையும் இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். முகக்கவசத்தை அடிக்கடி கைகளை கொண்டு தொடக்கூடாது. அடிக்கடி கழற்றி மாட்டிக்கொண்டிருக்கவும் கூடாது. முகக்கவசத்தை கழற்றியதும் சோப்பு கொண்டு 20 விநாடிகள் கைகளை கழுவ வேண்டியது அவசியம். ஒரு அடுக்கு கொண்ட முகக்கவசங்களை மீண்டும் உபயோகிக்கக்கூடாது.
    சுரைக்காயை சமையலுக்கு பயன்படுத்துவதோடு ஜூஸாகவும் தயாரித்து பருகலாம். அதன் மூலம் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
    பழ வகைகள் இனிப்பு சுவையும், ருசியும் கொண்டிருப்பதால் அதனை ஜூஸ் தயாரித்து பருக நிறைய பேர் விரும்புவர். காய்கறிகளில் இனிப்பு சுவை இல்லாததால் அதனை ஜூஸாக பருகுவதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் காய்கறிகளிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. சுரைக்காயை சமையலுக்கு பயன்படுத்துவதோடு ஜூஸாகவும் தயாரித்து பருகலாம். அதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.

    * சரும செல்களுக்கு வயதாகும்போது, சுருக்கங்கள் தோன்றும். சுரைக்காயில் இருக்கும் வைட்டமின் சி யும், துத்தநாகமும் முன்கூட்டியே முதுமை வருவதை தாமதப்படுத்தும் தன்மை கொண்டவை. சரும செல்கள் முதுமை அடைவதையும் தடுத்து நிறுத்தும். முகத்தில் சுருக்கங்கள் இருந்தால் அதனையும் போக்கும். தொடர்ந்து சுரைக்காய் ஜூஸ் பருகி வந்தால் முன்கூட்டியே வயதான தோற்றம் உண்டாவதை தவிர்க்கலாம்.

    * சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் இருப்பதால் இயற்கையாகவே முகத்தில் பளபளப்பு தன்மையை ஏற்படுத்தும். சுரைக்காய் ஜூஸை தினமும் குடித்துவந்தால் உடல் இயக்க செயல்பாடுகள் சீராவதோடு, சருமத்திற்கு புத்துணர்வும் கிடைக்கும்.

    * காலையில் எழும்போது கண்களில் வீக்கம் இருந்தால் சுரைக்காய் ஜூஸ் பருகலாம். சுரைக்காய் சருமத்தை குளிரூட்டும் தன்மை கொண்டது. வீங்கிய கண்கள் மீது சுரைக்காய் துண்டுகளை கால் மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவி வரலாம்.

    * கூந்தல் பராமரிப்புக்கும் சுரைக்காய் ஜூஸை பயன்படுத்தலாம். இது முடி நரைப்பதை தடுக்கும். உச்சந்தலையில் சுரைக்காய் ஜூஸை தடவி மசாஜ் செய்து வரலாம். முடி நிறம் மாறுவதை கட்டுப்படுத்து வதோடு முடி உதிர்வதை குறைக்கும்.

    * சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், நச்சுகள், தூசுகளை அப்புறப்படுத்தும் சுத்திகரிப்பானாகவும் சுரைக்காய் விளங்குகிறது. முகப்பரு பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சுரைக்காய் ஜூஸ் ருசிக்கலாம்.

    * இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை சுரைக்காய்க்கு இருக்கிறது. சருமம் மிருதுவாக மாறவும் இது வழி வகுக்கும். உடலின் உள் உறுப்புகளை சுத்திகரிக்க துணைபுரிவதால் ஏராளமான உடல்நல பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுரைக்காய் ஜூஸ் பருக விருப்பம் இல்லாவிட்டால் சிறிதளவு கடலைமாவு, தயிருடன் சுரைக்காய் ஜூஸ் கலந்து பசைபோல் குழப்பி வாரம் இருமுறை முகத்தில் பூசி வரலாம்.
    பெண்கள் நாற்பது வயதை நெருங்கும் போது சில எளிய வாழ்வியல் மாற்றங்களை கடைபிடித்தாலே போதும். நல்ல உடல் மற்றும் மனநலத்தை பெறுவது சாத்தியம்.
    பெண்கள் நாற்பது வயதை நெருங்கும் போது ஹார்மோன் மாற்றங்களால் உடலின் வளர்சிதை மாற்றம் குறைவது முதற்கொண்டு பல மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவாக உடல்எடை அதிகரிப்பு, மூட்டு வலி, இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் சிலவகை புற்றுநோய்கள் போன்ற பல உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.

    இவற்றை எல்லாம் எதிர்கொண்டு நல்ல உடல் மற்றும் மனநலத்தை பெறுவது சாத்தியம். அதற்கு சில எளிய வாழ்வியல் மாற்றங்களை கடைபிடித்தாலே போதும். செய்ய வேண்டிய மாறறங்களில் மிக முக்கியமானது உணவு பழக்கதில் தான். அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதம், மாவுச்சத்து, வைட்டமின்கள் தாது உப்புக்கள் போன்றவை தேவையான அளவு இருத்தல் அவசியம்.

    இதுவரை நீங்கள் சரியான உணவு முறையை கடைபிடிக்கவில்லையெனில் இப்போதிலிருந்து சத்தான உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள். பலவகையான காய்கறிகள், பருப்பு மற்றும் வகைகள் கீரைகள் உணவில் அன்றாடம் சேர்த்து கொள்ள வேண்டியதில்லை.

    தினமும் ஏதாவது ஒரு பழத்தை அவசியம் சாப்பிடுங்கள். முழு தானியங்ளை கட்டாயம் சேர்த்து கொள்ளுங்கள்.

    அதிக கொழுப்பு இல்லாத பால் பொருட்களை உண்ணுங்கள். கோழி இறைச்சி, கடல் உணவுகள், முட்டை, சோயாப்பொருட்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கொட்டைடைகளை உணவில் தவிர்க்காமல் சேர்த்து கொள்ளுங்கள். கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் உணவில் கட்டாயம் இருக்க வேண்டியவை. எனவே சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். காலை உணவை சாப்பிடாமல் இருப்பதை தவிர்த்து விடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். எட்டு மணி நேர நிம்மதியான தூக்கம் இருக்குமாறுபார்த்து கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். இவற்றையெல்லாம் சரியாக செய்தாலே எந்த வயதிலும் இளமையாகவும் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.
    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
    தேவையான பொருள்கள் :

    வெண்டைக்காய் - 100 கிராம்
    உப்பு - தேவையான அளவு         
                               
    அரைக்க :

    தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
    தக்காளி -1
    பச்சை மிளகாய் - 2 (அல்லது மிளகாய் வத்தல் -2)
    சீரகம் - 2 மேஜைக்கரண்டி
    சின்ன வெங்காயம்  - 3          
                            
    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 3
    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    கறிவேப்பில்லை - சிறிது

    செய்முறை :

    வெண்டைக்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு, வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கி  வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வெண்டைக்காய் வேகும்  வரை வதக்கவும்.          

    பின்னர்  அரைத்த  விழுதை சேர்த்து 1 கப் தண்ணீர்  ஊற்றி கொதிக்க விடவும்.       
         
    தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும்.

    வெண்டைக்காய்  பச்சடி ரெடி.


    பொதுவாக 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு திடீரென்று காய்ச்சல் வரும் போது வலிப்பு நோய் ஏற்படலாம். இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நிமிஷ நேரம் வரையில் மட்டுமே இருக்கும்.
    குழந்தைகளுக்கு சாதாரண நோய் என்றாலே பெற்றோர்கள் துடிதுடித்து விடுவார்கள். அதிலும் காய்ச்சல் மற்றும் வலிப்பு சேர்ந்து வந்தால் அவர்களது அச்சத்தின் எல்லையை குறிப்பிட வார்த்தைகளே இல்லை.

    காய்ச்சலோடு வரும் வலிப்பு நோய்கள் குறித்த தகவல்கள் சில...

    வலிப்புடன் (ஜன்னி) வரும் காய்ச்சல் என்றால் என்ன?

    பொதுவாக 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு திடீரென்று காய்ச்சல் வரும் போது வலிப்பு நோய் ஏற்படலாம். இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நிமிஷ நேரம் வரையில் மட்டுமே இருக்கும். அப்போது குழந்தை மயக்க நிலையை அடையும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருக்கும்.

    வலிப்புடன் கூடிய காய்ச்சல் யாருக்கு வரும்?

    பொதுவாக 25 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இத்தகைய வலிப்பு வரலாம். இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைக்கு திரும்பத் திரும்ப வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

    ஆறு மாதங்களுக்கு முன்போ அல்லது 3 வயதுக்கு பின்போ இது முதன்முறையாக வருவதில்லை. பெரிய குழந்தைகளுக்கு வரும் போது அது திரும்ப வருவது அரிது.

    திரும்பத்திரும்ப காய்ச்சல் வலிப்பு வருவதற்குக் காரணம் என்ன?

    முதலாவதாக வரும் வலிப்பு 6 முதல் 15 மாதங்களுக்குள் வந்தால் அந்தக் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு திரும்பத் திரும்ப வரும். குடும்பத்தில் இதுபோன்று வேறு யாருக்காவது நோய் இருந்தாலும் திரும்பத் திரும்ப வருவதற்கு வாய்ப்புண்டு. காய்ச்சல் வந்த பின்பு சில மணி நேரங்களில் வரக்கூடிய வலிப்பும் திரும்பத் திரும்ப வரும்.

    வலிப்புடன் வரும் காய்ச்சலால் ஆபத்து உண்டா?

    இந்த வலிப்புடன் வரும் காய்ச்சல் பெற்றோரை பயமுறுத்துமே தவிர பொதுவாக குழந்தைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. குழந்தைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் அறிவுத்திறன் ஆகியவற்றிலும் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

    ஒரு சில குழந்தைகள் வலிப்பு வரும் போது கீழே விழுவதாலோ அல்லது வாயில் உள்ள உமிழ்நீர் மற்றும் உணவுப் பொருள்களால் புரை ஏறுவதாலோ பாதிப்பு ஏற்படலாம்.

    வலிப்பு வரும் போது என்ன செய்ய வேண்டும்?

    குழந்தைக்கு வலிப்பு வந்தவுடன், பெற்றோர் பதற்றமடைந்து விடக்கூடாது. பொறுமையாக இருந்து குழந்தையை நன்கு பராமரிக்க வேண்டும். வலிப்பு காரணமாக குழந்தையின் உடலில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வலிப்பு ஏற்படும் போது குழந்தையை அழுத்திப் பிடிக்கக்கூடாது. புரையேறுவதைத் தடுக்க குழந்தையை மல்லாக்க படுக்க வைக்காமால் பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் வாயில் உணவையோ, திரவத்தையோ வேறு ஏதேனும் பொருள்களையோ கொடுக்கக் கூடாது.

    வலிப்பு வந்த நேரத்தை குறித்து வைத்து கொண்டு 10 நிமிஷ நேரத்துக்கும் அதிகமாக வலிப்பு நீடித்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைக்கு வலிப்பு நின்ற பின்பு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குழந்தை மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

    எப்போது குழந்தையை உடனே அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்ல வேண்டும்?

    வலிப்பு 10 நிமிஷத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, குழந்தையின் கழுத்து பிடரி ஆகியவை விரைப்பாக காணப்பட்டாலோ, குழந்தை சோர்வாக இருந்தாலோ, திரும்பத் திரும்ப வாந்தி ஏற்பட்டாலோ உடனே குழந்தையை மருத்துவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் இது மூளைக் காய்ச்சல் அல்லது வேறு வகை காய்ச்சலாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு.

    காய்ச்சலால் வரும் வலிப்புக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்?

    ரத்த பரிசோதனை, முதுகுத் தண்டுவட நீர் பரிசோதனை மற்றும் இதர மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்வது அவசியம். இதனால் குழந்தைக்கு மூளைச் காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். பரிசோதனை முடிவுக்கு ஏற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.

    வலிப்பைத் தடுக்க என்ன வழி?

    காய்ச்சல் வரும் போது அதனைத் தொடர்ந்து வலிப்பும் வருவதால் காய்ச்சலைத் தடுக்க மருத்துவர் கொடுக்கும் காய்ச்சல் தடுப்பு மருந்தை (பாராசிட்டாமல்) வீட்டில் வைத்துக் கொண்டு சரியான நேரத்தில் குழந்தைக்குக் கொடுத்தால் வலிப்பைத் தடுக்கலாம்.

    மருத்துவர் ஆலோசனையின் படி காய்ச்சல் வரும் போது ஏற்படும் வலிப்புக்கு அளிக்குமாறு கூறிய மருந்தை முதல் மூன்று நாள்கள் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த மருந்தை 6 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது இல்லை.

    காய்ச்சல் இல்லாமல் வரும் வலிப்புக்கு என்ன செய்ய வேண்டும்?

    காய்ச்சல் இல்லாமல் வலிப்பு வந்தால் அது மேற்கூறிய வகை வலிப்பு நோயாக இருக்காது. அதற்கு தகுந்த குழந்தை மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.

    இத்தனை விவரங்களையும் தெரிந்து கொண்ட நீங்கள் இனி மேல் குழந்தைக்கு காய்ச்சலால் வலிப்பு வந்தால் பயப்பட மாட்டீர்கள் தானே!

    டாக்டர் வி.டி.ராஜேஷ் இளம்சிசு மற்றும் குழந்தை மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவமனை, பாளையங்கோட்டை செல்: 94865 59911.
    உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை படி, உலக அளவில் 3.6 சதவீதம் பேர் கவலை சார்ந்த மனநல கோளாறு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
    பதற்றத்தின்போது நிறைய பேருக்கு வியர்வை வெளிப்படும். வேலைப்பளு, எடுத்த காரியத்தை விரைவாக முடிக்கமுடியாத சூழல், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்தல், வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சினையை சந்தித்தல் போன்றவை பதற்றத்தை அதிகரிக்க செய்யும். அப்போது ஏற்படும் அச்சம் பீதியையும் உண்டாக்கும். அதனால் இனம் புரியாத கவலை வாட்டும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை படி, உலக அளவில் 3.6 சதவீதம் பேர் கவலை சார்ந்த மனநல கோளாறு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    பெருநகரங்களில் வசிப்பவர்களில் 30 சதவீதம் பேர் வாழ்க்கையில் ஒருமுறையாவது பதற்றத்தையும், பீதியையும் எதிர்கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பதற்றமும், பீதியும் ஏற்படும்போது திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிக்கும், அதிகப்படியான வியர்வை வெளியேறும். கை, கால்களில் நடுக்கம், தொண்டை வறண்டு போதல், குமட்டல், வயிற்றுவலி, கண்கள் சொருகி மயக்கம் போன்ற பாதிப்புகளும் நேரும். இத்தகைய பீதியும், பதற்றமும் சில நிமிடங்களில் நீங்கிவிடும். ஆனால் நடந்ததை நினைத்து பார்த்து வருந்தும்போது ஏற்படும் கவலை, ஆபத்தை அதிகப்படுத்திவிடும்.

    பண்டைய காலங்களில் காடுகளில் வசித்த மனிதன் விலங்குகளுடன் போராடும் மன தைரியத்தை வளர்த்துக்கொண்டான். அதற்கு அட்ரினலின் எனும் ஒருவகை ஹார்மோனின் பங்களிப்பு அவசியமானதாக இருந்தது. ஆனால் இன்று பண்டையகால மனிதன் போல் உடலளவிலும், மனதளவிலும் வலிமையை வளர்த்துக்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது. உடல் உழைப்பும் குறைந்துபோய்விட்டது. சின்ன பிரச்சினைகளை கையாள்வதற்கு கூட நிறைய பேர் தடுமாறுகிறார்கள். உடலியலும், உளவியலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. ஆயுர்வேத உணவு பழக்க வழிமுறையை பின்தொடர்ந்து வந்தால் பீதி, பயம், கவலை போன்ற மனநல பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுவிடலாம் என்றும் கூறுகிறது.

    எண்ணெய்யில் சமைத்த உணவை சாப்பிடுவதாக இருந்தால் சூடாக உடனே சாப்பிட்டுவிட வேண்டும். அது பதற்றத்தை சமாளிக்க உதவும். பீட்ரூட், காலிபிளவர், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம், பூசணி, முள்ளங்கி, நெய், வெண்ணெய், மோர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை, காபின், குளிர்விக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட பானங்கள், பொறிக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை தவிர்க்க வேண்டும். அதிகாலையில் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி நடப்பதும், சுத்தமான காற்றை சுவாசிப்பதும் கவலையை போக்க உதவும்.

    நல்லெண்ணெய்யை சூடுபடுத்தி நெற்றி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்வதும் பலன் தரும். வாரம் ஒருமுறையாவது உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்துவிட்டு குளிப்பதும் நல்லது. இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் மனதிற்கு இதமளிக்கும். கவலையை போக்குவதற்கும் உதவும். தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் பாலில் தேன் மற்றும் குங்குமப்பூ கலந்து பருகி வருவதும் பலன் தரும். ஒரு டம்ளர் சூடான நீரில் ரோஜா இதழ்களை கலந்து சூடு ஆறியதும் சிறிதளவு தேன் கலந்து தினமும் இரண்டு முறை பருகிவரலாம்.
    சான்விச், பர்கர், கிரில் சிக்கன் என அனைத்து உணவுகளின் சுவைக்காக பலரும் மயோனைஸை சாப்பிடுகின்றனர். இந்த பதிவில் அடிக்கடி மயோனைஸ் சாப்பிடுவதால் எந்த பிரச்சனைகள் வரும் என்று பார்க்கலாம்.
    துரித உணவு வகைகளோடு சேர்த்து சாப்பிடும் உணவு மயோனைஸ். இதனை சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். சான்விச், பர்கர், கிரில் சிக்கன் என அனைத்து உணவுகளின் சுவைக்காக பலரும் மயோனைஸை சாப்பிடுகின்றனர். இந்த பதிவில் மயோனைஸ் சாப்பிடுவது ஆரோக்கியம் தருமா என்று பார்க்கலாம்.

    மயோனைஸ் என்பது முட்டை வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, எண்ணெய், சர்க்கரை, உப்பு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அப்படி தயாரிக்கப்படும் இந்த மயோனைசில் பாக்டீரியாக்கள் எளிதில் இனப்பெருக்கம் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    ஏனெனில் மயோனைஸை தயாரித்து சரியாக சேமித்து ஃபிரிட்ஜில் பராமரிக்காமல் இருந்தால் ஒரே நாளில் கெட்ட கிருமிகள் இனப்பெருக்கம் செய்துவிடும். ஆகவே இது உடலுக்கு ஆபத்தானது. மேலும் கடைகளில் விற்கப்படும் மயோனைஸில் பதப்படுத்த தேவையான மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்படும் மூலக்கூறுகள் சிலருக்கு உடலில் பலவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

    மேலும் இதனை அதிக அளவில் சாப்பிடும் போது புற்றுநோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இதில் சேர்க்கப்படும் எண்ணெய் அதிக கொழுப்பு நிறைந்தது. அதாவது ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டதாம். எனவே இது உடலில் கலோரி அளவை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும். ஆகவே இது ஆபதனாது.

    அப்படி இருந்தும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் குறைந்த கொழுப்பு கொண்ட மயோனைஸ் சாப்பிடலாம். இது சிறிதளவு சுவை குறைவாக இருக்கும். ஆனால் உடல் எடைக் குறைக்க நினைப்போருக்கு இது சிறந்தது. ஆனாலும் நோயில்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைப்போர் இதை தவிர்ப்பது நல்லது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
    ஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும்.
    ஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். மருத்துவர்கள் 1-3 வயது நிறைந்த குழந்தைக்கு தினசரி 1300 கலோரிகளும் 16 கிராம் புரதமும் கொடுக்க வேண்டும் என்கின்றனர். ஒரு கப் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது. பாக்கெட் பால் சுத்திகரிக்கப்படுவதால் கொழுப்பு, புரத அளவு மாறுபடலாம். எனவே பசும்பால் எருமைப் பால் இருந்தால் காய்ச்சி கொடுங்கள். கிவி பழம், அத்திப்பழம், நாவல் பழம், பலாப்பழம், கொய்யா பழம் கொடுக்கலாம்.

    பலாப்பழம் கொடுக்கும்போது அளவாகக் கொடுக்க வேண்டும். விரைவில் செரிமானம் ஆகாது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இட்லி, தோசைக்கு சாம்பாரில் பருப்பு கூடுதலாக சேர்த்து ஊட்டுங்கள். அதேபோல் பாதாம், முந்திரி, வேர்க்கடலையும் கொடுக்கலாம். அவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருப்பு வகையாகக் கொடுங்கள். பசலைக் கீரையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதை நன்கு வேக வைத்து குழைத்து சாதத்துடன் கலந்து ஊட்டுங்கள்.

    முட்டையை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுக்க வேண்டும். மதிய உணவுக்கு முன் 10-11 மணி அளவில் வேக வைத்து தனியாக ஊட்டலாம். நன்கு வேக வைத்த மீனை முள் இல்லாமல் பார்த்து கவனமுடன் கொடுங்கள். கோழியை நன்கு வேக வைத்து கைகளில் மசித்துக் கொடுங்கள். ஏனெனில் விரைவில் ஜீரணிக்காது. உபாதையாகலாம். நாட்டுக்கோழி வாங்கி ஊட்டுவது நல்லது.

    தயிர் /நெய் இவை இரண்டிலும் போதுமான அளவு புரதச்சத்து உள்ளது. எனவே தயிர் சாதம் ஊட்டலாம். நெய் சாதத்துடன் தினமும் சிறிதளவு பிசைந்து ஊட்டலாம். குறிப்பிட்டுள்ள உணவுகள் உங்கள் குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என பார்த்துவிட்டுக் கொடுங்கள். அதேபோல் குழந்தை அவற்றை சாப்பிடவில்லை எனில் அவர்கள் மறுக்காதவாறு வேறெந்த வழிகளில் கொடுக்கலாம் என சிந்தித்து ஊட்டிப் பாருங்கள்.
    உங்கள் காதலர் வற்புறுத்துகிறார் என்றோ அல்லது நாம தான் திருமணம் செய்துகொள்ள போகிறோமே என்ற அசட்டு தைரியத்திலோ, திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள்.
    திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது சரியா? தவறா? என்ற வாதம் தற்போது வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தின் படி வாழ்க்கை நடத்தத் தொடங்கியுள்ள இளம் பருவத்தினர் பலரும் திருமணத்துக்கு முன்னர் செக்ஸ் வைத்துக்கொள்வது ஒன்றும் தேசிய குற்றம் அல்ல என நினைக்கின்றனர்.

    திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது ஆண்-பெண் இருவருக்குமே நல்லது கிடையாது. குறிப்பாக இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். கடவுள் பெண்களுக்குத் தான் குழந்தை பெற்றெடுக்கும் வரத்தை கொடுத்திருக்கிறார். இதனால் திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொண்டு ஒருவேளை நீங்கள் கருவுற்றால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குழந்தைக்கும் இந்த சமுதாயம் உரிய மதிப்பளிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    ஒருவேளை நீங்கள் திருமணத்துக்கு முன் கருவுற்று வீட்டுக்குத் தெரியாமல் அல்லது வேறு சில காரணங்களால் அபார்ஷன் செய்ய நேரும்போது, பிற்காலத்தில் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும்போது அது தள்ளிப்போகலாம். சில நேரங்களில் அபார்ஷன் செய்வது உங்கள் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். அதனால் முடிந்தவரை இதுபோல விஷயங்களில் ஆர்வம்
    காட்டாதீர்கள்.

    உங்கள் காதலர் வற்புறுத்துகிறார் என்றோ அல்லது நாம தான் திருமணம் செய்துகொள்ள போகிறோமே என்ற அசட்டு தைரியத்திலோ, திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று உங்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது அதுவரை உங்கள் மேல் இருந்த ஈர்ப்பு உங்கள் காதலருக்கு குறையக்கூடும். இரண்டாவது இப்போதெல்லாம் மணமேடை வந்து திருமணம் நின்றுபோவது சகஜமாகி வருகிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை இது. அதனால் எந்த காரணம் கொண்டும் இதுபோன்ற விஷயங்களுக்கு சம்மதிக்க வேண்டாம்.

    ஒருவேளை எதிர்பாராதவிதமாக செக்ஸ் வைத்துக்கொள்ளும் சூழ்நிலை அமைந்து விட்டால் என்ன செய்வது? என்று கேட்கிறீர்களா அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது தகுந்த பாதுகாப்பு விஷயங்களை மேற்கொள்ளுங்கள். தெரிந்த மருத்துவரிடம் சொல்லி கரு உருவாகாமல் வராமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் காதலன் காண்டம் பயன்படுத்தி இருந்தாலும் கூட நீங்களும் தகுந்த பாதுகாப்பு விஷயங்களை எடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்லதாக அமையும். இருப்பினும் கூடுமானவரையில் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது உங்கள் காதல் மற்றும் உடலுக்கு நல்லது.
    நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மிளகில் காரசாரமான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
    நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    பெரிய பழுத்த தக்காளி - 2
    காய்ந்த மிளகாய் - 4
    வெந்தயம் - 1 சிட்டிகை
    சீரகம் - 1 சிட்டிகை
    தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு

    தாளிக்க:

    எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

    செய்முறை :

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும் அதில் மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஆறவிடவும்.

    அதே கடாயில், 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை முழுமையாகப் போகும் வரை வதக்கவேண்டும்.

    தக்காளி தொக்கு பதத்துக்கு வந்தவுடன் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    தக்காளி தொக்கு நன்கு ஆறியபிறகு, அதனோடு ஏற்கெனவே வறுத்து வைத்திருந்த பொருள்கள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    பிறகு இந்த கலவையோடு, எண்ணெய்யில் தாளித்த கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிப்பைச் சேர்த்தால் சுவையான மிளகு சட்னி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×