search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பருவகால மாற்றங்களில் உடல் பாதிக்காமல் இருக்க..
    X
    பருவகால மாற்றங்களில் உடல் பாதிக்காமல் இருக்க..

    பருவகால மாற்றங்களில் உடல் பாதிக்காமல் இருக்க..

    பருவ காலத்தை ஒரு ஆண்டில் இள வேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு காலங்களாகப் பிரித்து அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல உணவு, வாழ்வியல் மற்றும் நோய் தடுக்கும் முறைகளை கால ஒழுக்கமாக சித்த மருத்துவம் நமக்கு அளித்துள்ளது.
    பருவ காலத்தை ஒரு ஆண்டில் இள வேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு காலங்களாகப் பிரித்து அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல உணவு, வாழ்வியல் மற்றும் நோய் தடுக்கும் முறைகளை கால ஒழுக்கமாக சித்த மருத்துவம் நமக்கு அளித்துள்ளது. ஒரு பருவ கால நிலை முடிந்து, அடுத்த பருவ கால நிலை ஆரம்பமாகும்போது சுற்றுச் சூழலில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நமது உடலிலும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

    குளிர்காலத்தில் கபம் நம் உடலில் அதிகரித்திருக்கும். அப்போது நமக்கு உடல்பலம் அதிகம் தேவை. அதற்கு ஊட்டசத்துமிக்க உணவுகளும், நல்ல தூக்கமும் அவசியம். இளவேனில், முதுவேனில் என்பவை கோடை காலமாகும். வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரிக்கும்போது நமது உடலிலும் வெப்பம் ஆரம்பிக்கும். அப்போது, குளிர்காலத்தில் உடலில் சேர்ந்துள்ள கபம் இளக தொடங்கும். இதனால் சிலருக்கு சளித் தொல்லை நீர்ஏற்றம், தலைவலி போன்றவை ஏற்படும். உடல் பலம் குறைந்து, நோய்த்தொற்று எளிதில் உடலைத்தாக்கும்.

    மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல் சியஸ். வெப்பம் அதிகமாகும்போது உடலில் அதிகமான வியர்வை சுரந்து உடலை குளிர்விக்கும். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு ரத்தத்தில் உப்பு சத்துக்கள் குறையும். அப்போது உடல் வறட்சி, உடல் சோர்வு, பசியின்மை, உணவின் மேல் விருப்பமின்மை போன்றவை ஏற்படும்.

    இந்த கால நிலையில், முதியவர்களுக்கு நீர்ச்சத்து மற்றும் உப்பு சத்து குறைவதாலும் வெப்பம் அதிகமாவதாலும் தளர்ச்சி, மயக்கம், சோர்வு ஏற்படும். வேகமாக செயல்பட முடியாமை, மனக்குழப்பம், நினைவாற்றல் குறைபாடு போன்றவைகளும் ஏற்படும். அதனால் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இந்த காலகட்டத்தில் குழந்தைகளையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். சுகாதாரமான தண்ணீர் மற்றும் உணவுகளையே கொடுக்க வேண்டும். இப்போது பெரும்பாலான வீடுகளிலும், அலுவலகங்களிலும் வெப்பத்தை தணிக்கும் குளிர் சாதன கருவிகளை பயன்படுத்துகிறோம். அதன் உள் இருக்கும் வலைகளில் தூசு படியாமல் சுத்தம் செய்து வைக்கவேண்டும். தூசுகள் மூலம் நோய்க் கிருமி பரவும் அபாயம் உள்ளது.

    சீதோஷ்ணநிலைக்கு ஏற்ற உணவுகளை சமைத்து சாப்பிடவேண்டும். வேப்பம் பூ, மாங்காய், வெள்ளரிக்காய் போன்றவைகளை உணவில் சேர்க்கவேண்டும். தர்பூசணி முலாம்பழம், நுங்கு, வேர்க்கடலை, முருங்கைக்காய் போன்ற இந்த பருவநிலைக்கே உரித்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து சாப்பிட வேண்டும்.

    நீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்து குடிப்பதன் மூலம் நீரால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். வெட்டிவேர் 10 கிராம், விளாமிச்ச வேர் 10 கிராம், சந்தனத் சிராய் 5 கிராம் ஆகியவற்றை சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி பானை நீரில் இட்டு பருகலாம். இதனால் தாகம் தணிவதோடு உடலும் குளிர்ச்சியாகும்.

    வெயிலில் அலைந்துவிட்டு திரும்பியதும் குளிர் பானங்களைப் பருகக்கூடாது. வெயில் காலத்தில் குளிர்சாதன பெட்டியில் இருந்து நீரை எடுத்து ஜில்லென்று பருகுவது ஏற்புடையதல்ல. அது அஜீரணத்திற்கு முக்கிய காரணம். இளநீர், கரும்புச்சாறு, நீர் மோர், எலுமிச்சை, நன்னாரி சர்பத், பானகம் போன்றவற்றை பருக வேண்டும். செயற்கை குளிர்பானங்கள் அதிக அளவில் இனிப்பு சுவையுடையவை. அவை கல்லீரலில் பாதிப்பை உண்டாக்கும். மிதமான இயற்கை இனிப்பு களான தேன், பனை வெல்லம் , நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. பாரம்பரியமான கம்பு, கேழ்வரகு கூழை மோர் கலந்து பருகலாம். இதனால் வைட்டமின் பி சத்து அதிகரிக்கும். குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். ஜீரண சக்தி மேம்படும். மலச்சிக்கல் ஏற்படாது.

    உடல் சூடு காரணமாக உடலில் உள்ள திசுக்களில் நீர்ச்சத்து குறையும். தலைவலி மற்றும் வெப்பம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து பக்கவாதம் ஏற்படலாம். மலச்சிக்கல், மூல நோய் உண்டாகலாம். இந்த தொந்தரவுகளை தவிர்க்க நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிகம் சாப்பிடவேண்டும். காரமுள்ள, புளித்த, பொரித்த உணவுகளையும், மசாலா அதிகம் கலந்திருக்கும் உணவுகளையும் தவிர்த்து விடவேண்டும். கோடை காலத்தில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் , கல்லடைப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். சருமத்தையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுத்தமாக பராமரித்தால், சருமத் துவாரங்களில் அடைப்பு ஏற்படாது. வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சை தொற்று போன்றவை ஏற்படாது.

    கோடைகாலத்தில் மதியம் சிறிது நேரம் தூங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். கடினமான உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. சிலர் வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன், வியர்வையை கட்டுப் படுத்தக் கூடிய டியோடரண்ட் போன்றவைகளை பயன் படுத்துவார்கள். அவை வியர்வை வெளியேற தடையாக இருக்கும். அதனால் அவை சருமத்திற்கு ஏற்றதல்ல.

    இந்த பருவநிலையில் இயல்பாகவே பசி குறையும். அதனால் திரவ உணவுகள் சிறந்தது. இரவு உணவிற்கு பின்பு சிறிது நேரம் காலாற நடப்பது நல்லது. வெயிலில் சென்று வீடு திரும்பிய உடன் நீரில் முகம், கை கால் கழுவ வேண்டும். இது தொற்று நோயிலிருந்து காக்கும்.

    கோடை உஷ்ணத்தில் இருந்து உடலை காக்க வீட்டிலேயே பானகம் தயார் செய்து பருகுங்கள்.

    ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். வெல்லம் அல்லது கருப்புக்கட்டி 50 கிராம் தேவை. ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள், மிளகுத்தூள் , கிராம்புத் தூள் போன்றவைகளை தலா ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்து கோடைகாலம் முடியும் வரை தினமும் பருகி வாருங்கள்.

    - தொடரும்.

    கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை.
    Next Story
    ×