என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
எண்ணூர் நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தில் கடற்கரையில் கடலை நோக்கி அமைந்துள்ள சின்னம்மன் கோவிலில் 2.15 லட்சம் எலுமிச்சை பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
எண்ணூர் நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தில் கடற்கரையில் கடலை நோக்கி அமைந்துள்ள சின்னம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 12 மூட்டை மக்காச்சோளம், 2.15 லட்சம் எலுமிச்சை பழம், 11 பெட்டி ஆரஞ்சு பழம் மற்றும் 3 ஆயிரம் சாத்துக்குடி பழங்கள் மற்றும் மணிகள் ஆகியவற்றை கொண்டு கடந்த 3 நாட்களாக கோவில் வளாகத்தில் அலங்காரம் மற்றும் தோரணங்கள் அமைத்தனர்.
பின்னர் சின்னம்மன் மற்றும் சியாமளா தேவிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு வழிபாடு முடிந்த உடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ள பழங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆங்கில புத்தாண்டையொட்டி இந்த கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது.
பின்னர் வெற்றிலை மாலையில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து எண்ணெய், பால், தயிர் மற்றும் சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு பட்டாச்சாரியர்கள் சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
இதை தொடர்ந்து ரோஜா, சம்பங்கி, மல்லிகை, சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பட்டாச்சாரியர்கள் பூக்களை கொட்டி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.
புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். ரூ.20 செலுத்தி விரைவு தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும்.
இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம்.
விரதம் என்பது ஒரு வகையான விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.
எண்வகை விரதங்கள்
சந்தாபண விரதம்
மஹாசந்தாபண விரதம்
பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம்
அதிகிரிச்சா விரதம்
பராக விரதம்
தப்த கிரிச்சா விரதம்
பதகிரிச்ச விரதம்
சாந்தாராயன விரதம்
வெண்ணந்தூர் மின்னக்கல் சாலையில் உள்ள வாமன நாராயண சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
வெண்ணந்தூர் மின்னக்கல் சாலையில் உள்ள வாமன நாராயண சாமி கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் அதிகாலை முதலே குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருமலையில் ஒருநாள் வைபவம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி, திருவேங்கடமுடையான் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் ஆறு கால பூஜை நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த மாரியம்மனை மனமுருக வணங்கினால் நினைத்தது நடக்கும், செல்வம் செழிக்கும்,குடும்பத்தில் அமைதி தவழும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். செவ்வாய், வெள்ளி, புதன்,ஞாயிறு போன்ற நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களிலும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள்.
ஆங்கில புத்தாண்டை யொட்டி சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை 5.30 மணியிலிருந்தே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் வந்தனர். பலர், குழந்தைகளை கரும்புத்தொட்டிலில் சுமந்தும், மொட்டை அடித்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் ராஜகோபுரத்தின் முன்பும், தீபம் ஏற்றும் இடத்திலும் பெண்கள் தீபம் ஏற்றி அம்மனை வணங்கினர். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.
வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் வந்ததால், கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர். மேலும் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டனர்.
உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன், எனத்தொடங்கும் திருப்பாவை பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்;
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள் :
"நந்தகோபலன் மருமகளே! நப்பின்னையே! கதவைத் திற" என நப்பின்னையிடம் வேண்டும் பாடல்.
நப்பின்னையே! மதங்கொண்ட யானைகளை, சர்வசாதாரணமாகத் தள்ளக் கூடியவர்; (ஏராளமான யானைகளைக் கட்டி வாழக் கூடியவர் என்பதும் உண்டு) எதிரிகளைக் கண்டு பயப்படாத தோள் ஆற்றலை உடையவர்; நந்த கோபர்.
அப்படிப்பட்ட நந்தகோபரின் மருமகளே! வாசம் கமழும் கூந்தலைக் கொண்டவளே! கதவைத்திற. இதோபார், கேள். சேவல்கள் எல்லாத் திசைகளிலும் கூவுகின்றன. அந்த அழைப்பைக் கேளாயோ? குயிலிணங்கள் கூவுகின்றன. அதுவும் கேட்கவில்லையா? பொழுது விடிந்து விட்டது. பந்தை அணைத்தபடி படுத்திருப்பவளே! உன் கணவனான கண்ணனை போற்றிப் பாட வந்திருக்கிறோம். வளையல்கள் சப்தமிட, தாமரை மலர் போன்ற உன் கைகளால் கதவைத் திற. வா.
இப்பாடலின் பெருமை: ஸ்ரீ இராமானுஜர், திருப்பாவையைப் பாடிய படியே பிக்ஷைக்குப் போவது வழக்கம். ஒரு நாள் அவர் தன் குருநாதர். பெரியநம்பிகள் திருமாளிகைக்கு, பிக்ஷைக்குப் போன போது, இப்பாடலைப் பாடினார்.
பெரிய நம்பியின் திருமகளான அத்துழாய் என்னும் பெண் ஒடிவந்து கதவைத் திறந்தாள். அப்போது இராமானுஜர் 'செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்மாவாய்' என்னும் வரிகளைப் பாடிக் கொண்டிருந்தார்.
கதவைத் திறந்த அத்துழாயைக் கண்ட ஸ்ரீராமானுஜர், அவளை நப்பின்னையாகவே நினைத்து வணங்கினார். அத்துழாய் உள்ளே ஓடிப்போய், "அப்பா! ஸ்ரீராமானுஜர் என்னைக் கண்டு, மயக்கமடைந்து விட்டார்" என்றார். பெரியநம்பிகளோ", அவர் வந்து மதகளிறு என்னும் பாசுரத்தைப் பாடியிருப்பார்" என்றார். ஸ்ரீராமானுஜரைப் போன்ற மகான்களையே சொக்க வைத்த பாடல் இது.
எத்தனை முக தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னவென்றும் அறிந்து கொள்ளலாம்.
* இரண்டு முகம் - குடும்ப ஒற்றுமை, தன சேர்க்கை, செல்வாக்கு உண்டாகும்.
* மூன்று முகம் - காரிய வெற்றி, பராக்கிரமம், தைரியம் கிட்டும்.
* நான்கு முகம் - நிலம், வீடுகள், வாகனங்கள், கால் நடை விருத்தி, வியாபார அபிவிருத்தி, சவுபாக்கியம் உண்டாகும்.
* ஐந்து முகம் - அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாகும். சர்வ சித்தி, குறைவில்லா பெருவாழ்வு உண்டாகும்.
* வாரம் ஒரு நாள் வெள்ளி அன்றாவது பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது நல்லது.
* தீபம் ஏற்றும் பெண்மணி திருமணம் ஆன பெண்ணாக இருந்தால், வளையல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றி வகட்டில் குங்குமம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்
* தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம் , பூ சாத்தி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.
* தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகம், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை மனதில் நினைக்க வேண்டும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே? இது ஏன் என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே.
நம்பெருமாளின் திருவடிகளை சேவிப்பதற்காக ஸ்ரீரங்கம் நோக்கி வந்துள்ள பக்தர்கள் ஏராளம். அவர்கள் அனைவரையும் முதலில் வரவேற்பது வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமாக காட்சியளிக்கும் 236 அடி உயர ராஜ கோபுரம் தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் இந்த ராஜ கோபுரத்தை விட வரலாற்று சிறப்புமிக்கது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளை கோபுரம். இக்கோவிலை சுற்றி அமைந்துள்ள மொத்த கோபுரங்களின் எண்ணிக்கை 21. அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே? இது ஏன் என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெற்கு கோபுரமான ராஜகோபுரம் 1987ம் ஆண்டு அகோபில மடம் ஜீயரால் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதுவரை இக்கோவிலின் ராஜகோபுரமாக விளங்கியது வெள்ளை கோபுரம் தான். இந்த கோபுரத்திற்கு பின்னால் ஒரு தியாக வரலாறு உள்ளது. முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில் அந்நிய படையெடுப்புகளால் ஸ்ரீரங்கம் கோவில் பலமுறை சூறையாடப்பட்டு பொன் பொருள் எல்லாம் அன்னையே படையினரால் கொள்ளை அடித்து செல்லப்பட்டு இருக்கிறது என்பது வரலாறு. அந்த வரலாற்றுடன் இணைந்தது தான் இந்த வெள்ளை கோபுரத்தின் வரலாறும் உள்ளது.
அது 15ம் நூற்றாண்டு கால கட்டம். அப்போது மதுரையை ஆண்ட சுல்தான் படைகள் ஸ்ரீரங்கம் கோவிலை கொள்ளையடிப்பதற்காக வந்தன. தேவையான பொன் பொருள் எல்லாம் அகப்பட்ட பின்னரும் அந்தப் படையின் தளபதிக்கு ஸ்ரீரங்கத்தை விட்டு செல்ல மனமில்லை. அதற்கு காரணம் காவிரிக்கரையில் அமைந்துள்ள இயற்கை அழகு அல்ல. அவன் மனதில் இக்கோவிலில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இன்னும் ஏராளம் இருக்கும் அவற்றையும் கவர்ந்த பின்னரே இங்கிருந்து செல்ல வேண்டுமென திட்டமிட்டான்.
இதற்காக ஒரு நாள் அல்ல பல நாள் தனது படையுடன் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டான். ஆனால் அவன் நினைத்த பொக்கிஷம் அவன் கண்களில் எளிதாக சிக்கவில்லை. இந்த நிலையில் அன்னியப் படைகளின் ஆதிக்கத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஸ்ரீரங்கம் வாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த சிரமத்தை கண்டு மனம் பொறுக்காத வெள்ளையம்மாள் என்ற பெண் வெகுண்டு எழுந்தாள். இந்த வெள்ளையம்மாள் வேறு யாரும் அல்ல அவள் கோவிலில் நடனமாடி திருப்பணி செய்து வந்தாள்.
அரங்கன் மேல் உள்ள அளவற்ற பற்றின் காரணமாக பேராசை கொண்ட தளபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என திட்டமிட்டாள் வெள்ளையம்மாள். பெண்ணாசை பிடித்த அந்த தளபதி வெள்ளையம்மாளிடம் நெருங்கி பழகினான். அந்த நெருக்கத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வெள்ளையம்மாள் ஒருநாள் தளபதியிடம் ரகசியமாக பேசினாள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பொக்கிஷம் எங்கே இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
நான் உங்களுக்கு அதை காட்டுகிறேன் பாருங்கள் என்று கையோடு அழைத்து சென்றாள் வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு. விலைமதிப்பற்ற பொக்கிஷம் இன்னும் சற்று நேரத்தில் தனக்கு கிடைக்கப்போகிறது என்ற பேராசையில் அவனும் பின் தொடர்ந்து படிகளில் ஏறினான். வெள்ளை கோபுரத்தின் உச்சியை அடைந்ததும் வெள்ளையம்மாள் அந்த தளபதியை மேலிருந்து கீழே தள்ளிவிட்டாள். இதில் மண்டை உடைந்து நொறுங்கி தளபதி ஒழிந்தான்.
ஆனால் அவன் படைகள் நம்மை சும்மா விடமாட்டார்கள் என்று கருதிய வெள்ளையம்மாள் மேலே இருந்து குதித்து தனது உயிரையும் மாய்த்துக்கொண்டாள். இதுதான் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு. அரங்கனின் பொக்கிஷத்தை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை ஈந்த அந்த மங்கையின் நினைவாகவே அந்த கோபுரம் இன்றுவரை வெள்ளை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது வெள்ளையம்மாளின் தியாகத்தை உணர்த்துவதாக.
திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்பது வழக்கத்திற்கு வந்தது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்தவர் சேந்தனார். இவர் விறகு வெட்டி விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இவர் ஒரு சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளித்து விட்டுதான், உணவருந்த வேண்டும் என்ற கொள்கையை கடமையாக செய்து வருபவர். அவரது பெருமையை உலகத்திற்கு உணர்த்த நினைத்தார் சிவபெருமான். ஈசன் நினைத்து விட்டால், அதற்கு தடை என்பது ஏது..
ஒரு நாள் மழை காரணமாக, சேந்தனாரால் விறகு வெட்ட செல்ல முடியவில்லை. விறகு வெட்டி விற்றால்தான், உணவு சமைக்க பொருள் வாங்க முடியும் என்ற நிலை. எனவே அவரால் அன்று சமைக்க முடியவில்லை. இருப்பினும் வீட்டில் இருந்த பொடித்து வைத்த அரிசி மாவைக் கொண்டு களி செய்து வைத்து, சிவனடியாருக்காக காத்திருந்தார். ஆனால் வெகுநேரம் ஆகியும் யாரும் வரவில்லை. இதனால் சேந்தனார் மன வருத்தம் அடைந்தார்.
அப்போது சிவனடியாரின் வேடத்தில் அங்கு சிவபெருமான் வந்தார். சேந்தனாரிடம், “சாப்பிட ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார். அகமகிழ்ந்து போன சேந்தனார், தான் சமைத்து வைத்திருந்த களியை, சிவனடியாருக்கு அன்போடு வழங்கினார். மேலும் எஞ்சியிருந்த களியையும், “அடுத்த வேளை உணவிற்காக தர முடியுமா?” என்று கேட்டு வாங்கிச் சென்றார், சிவனடியார் உருவில் இருந்த சிவபெருமான்.
அன்றைய தினம் இரவு சிதம்பரம் பகுதியை ஆண்ட அரசனின் கனவில் தோன்றிய சிவபெருமான், சேந்தனாரைப் பற்றியும், அவரது வீட்டில் தான் களி உண்டது பற்றியும் கூறினார்.
இந்த நிலையில் மறுநாள் காலை வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவிலின் கருவறையைத் திறந்தனர். அப்போது சிவபெருமானைச் சுற்றி களி சிதறிக் கிடந்தது. அவரது வாய் பகுதியிலும் களி ஒட்டியிருந்தது. இதுபற்றி அவர்கள், அரசனுக்கு தெரிவித்தனர். தன் கனவில் வந்ததை நினைத்துப் பார்த்த அரசன், இறைவனின் திருவிளையாடலை எண்ணி மனம் மகிழ்ந்தான்.
மறுநாள் சிதம்பரம் கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது. அரசன் உள்பட பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்தினம் பெய்த மழை காரணமாக, தேரின் சக்கரம், சகதியில் சிக்கிக்கொண்டது. பலர் முயற்சி செய்தும் பலனில்லை. இதனால் அனைவரும் மனம் வருந்தினர். அப்போது அங்கு அசரீரியாக ஈசனின் குரல் ஒலித்தது. “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்றார்.
சேந்தனாரோ “ஒன்றுமே அறிந்திடாத நான் எப்படிப் பல்லாண்டு பாடுவேன்?” என்று எம்பிரானை வணங்கித் தொழுது நின்றார். எம்பிரானோ “யாம் உனக்கு அருள்புரிவோம்” என்றார்.
இதையடுத்து இறைவனின் ஆசியோடு, பதிமூன்று பாடல்களை எம்பிரானை வாழ்த்தி வணங்கிப் பாடினார். உடனே, தேர் அசைந்தது. அரசரும், சிவனடியார்களும் சேந்தனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். சேந்தனாரோ “அரசே.. என்னுடைய காலில் நீங்கள் விழுவதா?” என்று தயங்க, அரசரோ “நடராஜப் பெருமானே தங்களின் வீட்டிற்கு களி உண்ண வந்தார் என்றால், நான் அந்த இறைவனினும் சிறியவனே” என்றார்.
அதைக்கேட்ட சேந்தனார், தன் மீது சிவபெருமான் வைத்த கருணையை எண்ணி மனம் மகிழ்ந்தார். அவரது கண்கள் ஆனந்தத்தால் நிரம்பியது. இதன் காரணமாகவே திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்பது வழக்கத்திற்கு வந்தது.
அல்லாஹ்வை நினைவு கூருங்கள், அவன்சொன்ன நல்லறங்களை, நபிகளார் வாழ்ந்து காட்டிய சிறந்த வாழ்வியலை தேர்ந்தெடுத்து வாழ முயலுங்கள். பிரச்சினைகள் இல்லாத நிம்மதியான நல் வாழ்வு மலரும்.
கால மாற்றத்திற்கு ஏற்ப மனிதனின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. வாழ்வு முறைகளும் மாற்றம் கண்டு, நவீன மயமாக மாறி இருக்கிறது. இயற்கையை சார்ந்து இருந்த வாழ்வு முறை மாறி, இப்போது இயந்திரங்களை சார்ந்து மனித வாழ்க்கை சுழல்கிறது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கைகளில் அடங்கிக் கிடக்கின்றன. ‘எல்லாம் என்னால் முடியும்’ என்ற இறுமாப்பும் சில மனித மனங்களில் மண்டிக் கிடக்கின்றன.
இவை எல்லாம் இருந்தும் மனிதனுக்கு நிம்மதி கிடைத் ததா? என்றால், ‘இல்லை’ என்று தான் பதில் வரும்.
எந்திரத்தனமான வாழ்க்கையில் உருவான பரபரப்பு, மன அழுத்தங்களால் ஆரோக்கியம் பாழ்பட்டுவிட்டது. வருமானத்தை தேடுவதில் வாழ்க்கையை தொலைத்து நிற்கிறான் மனிதன்.
பணம், பண்பை சீரழித்து விட்டது. மனிதன் கலாசார சீர்கேடுகளில் ஆழ்ந்து, கடமை உணர்வை மறந்து, வன்மத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறான். நட்பு, உறவு, பாசம் போன்றவை பணத்தால் விலை பேசப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் உதவும் விஞ்ஞானத்தால் அவனுக்கு நிம்மதியைப் பெற்றுத்தர முடியவில்லை.
ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அருள்மறையில் ‘நிம்மதியான வாழ்க்கையை பெறுவது எப்படி?’ என்று மிகத்தெளிவாகக் கூறுகின்றான். அல்லாஹ்வின் நினைவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் தன்மை ஆகியவற்றின் மூலம் ஒரு மனிதன் நிச்சயமாக நிம்மதியை பெற்றுக்கொள்ள முடியும்.
இதையே திருக்குர்ஆன் இப்படி கூறுகிறது:
“மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 13:28)
அண்ட சராசரங்களை, பிரம்மாண்டங்களை எல்லாம் தன் அருளினால் மனித ஆளுமையின் கீழ் கொண்டு தந்த அந்த அல்லாஹ்வை நினைத்துப் பாருங்கள். அவன் செய்த நற்செயலுக்கு நன்றி செலுத்துங்கள், நிம்மதி தானாக உங்களைத் தேடிவரும்.
திருக்குர்ஆன் சொல்கிறது, “அல்லாஹ்வை நினைவு கூர்வதால் நெஞ்சங்களில் நிம்மதி நிறைகிறது” என்று. ‘நினைவு கூர்வது’ என்றால், ‘அவனைப் போற்றிப் புகழ்வது, அவனை திக்ரு செய்வது, அவன் செய்த அருட்கிருபைகளுக்கு நன்றி செலுத்துவது’ என்பது மட்டும் அல்ல. அவன் சொல்லித்தந்த நல்லறங்களை, மனிதன் தன் வாழ்வில் தலையாய கடமையாக கருதி நிறைவேற்றி வரும்போது அந்த நிம்மதி கிடைக்கும்.
பெற்றோரை பற்றி அவன் மிக உயர்வாக திருமறையிலே பல இடங்களில் சொல்லி, அவர்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்று சொல்கின்றான். அதனால் மனிதன் மேன்மை அடைய முடியும் என்கின்றான். அவர்களுக்கு கீழ்ப்படியுங்கள், குறைந்தபட்சம் அவர்களை கருணையோடு நோக்குங்கள், அதுவே அவர்களின் திருப்தியை பெற்றுத் தருமானால் அவர்களின் பிரார்த்தனை உங்களுக்கு நிம்மதியைப் பெற்றுத்தரும்.
உறவுகளையும் பேணச் சொல்கிறான் இறைவன். என்றோ நடந்து விட்ட பாதகமான செயல்களின் தொடர்ச்சியாக பரம்பரை பரம்பரையாக பகை நிலைத்திருப்பதை பல குடும்பங்களில் காண முடியும். அவற்றை ஒரே நொடியில் போக்கிக் கொள்ள முடியும். அவர்களை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் சொன்னால் போதும், அதன் மூலம் நல்ல விளைவு ஏற்படும். அல்லாஹ் சொன்ன நிம்மதியும் நம்மிடம் வந்து சேர்ந்துவிடும்.
பக்கத்து வீட்டாரை பற்றியும் மிக அதிகமாக புகழ்ந்து பேசுகிறான் இறைவன். பக்கத்து வீட்டாரின் நன்மை தீமைகளில் பங்கு கொள்ளுங்கள், அவர்களோடு உறவை பலப்படுத்துங்கள். குறைந்தபட்சம் அவர்களைக் காணும்போது ஒரு புன்னகையை உதிருங்கள், அது பெரும் மாற்றங்களை உள்ளங்களில் ஏற்படுத்தும். உள்ளங்கள் விழித்துக் கொண்டால் நிம்மதி பெற்ற வாழ்வு மலரும்.
மாற்றுமத சகோதரர்களுடன் மத மாச்சரியங்களைத் தாண்டி அன்போடும், பண்போடும் பாசத்தோடும் பழகிப் பாருங்கள். பகை உணர்ச்சி அங்கே தவிடு பொடியாகி, மனதிலே நிம்மதி பிறப்பதை நிதர்சனமாக உணர முடியும்.
ஏழைகளை இரக்கத்தோடு ஏறிட்டு பாருங்கள். இதயங்களில் நிம்மதி பிறப்பதை நிச்சயமாக உணர முடியும்.
இப்படிபட்ட வாழ்வியலைத் தான் அல்லாஹ் சொல்கிறான். நன்னெறிகளை கடைப்பிடித்து வாழும்போது, நாம் நிம்மதியை வெளியே தேட வேண்டிய அவசியமில்லை. நம்முள்ளே அதைப் பெற்றுக்கொள்ள முடியும். அல்லாஹ்வை நினைவு கூருங்கள், அவன்சொன்ன நல்லறங்களை, நபிகளார் வாழ்ந்து காட்டிய சிறந்த வாழ்வியலை தேர்ந்தெடுத்து வாழ முயலுங்கள். பிரச்சினைகள் இல்லாத நிம்மதியான நல் வாழ்வு மலரும்.
அஸ்லம் ஷஹீல், சென்னை.
நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு மிகவும் நுணுக்கமாக வடித்தார், சித்தர் சண்முக வடிவேலர். நடராஜருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, அந்த நரம்புகளை நாம் காண முடியும்.
ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற இடம் உள்ளது. இங்கு ஒரு மீனவர் வறுமையின் பிடியில் இருந்தாலும், தினமும் மங்களநாதரை வழிபடுவதை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் அவர் தனது பாய்மரப் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றார். அன்றைய தினம் சூறாவளிக் காற்று வீசியதால், அவரது படகு காற்றின் திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கடலுக்குள் இருந்த ஒரு பாறையில் மோதி நின்றது. சற்றுநேரத்தில் அந்தப் பாறையின் மேற்பகுதி உடைந்து அப்படியே சரிந்து படகின் மேல் விழுந்தது. மறு நொடியே சூறாவளி நின்றுபோனது. மீனவர், தன்னுடைய பலத்தை எல்லாம் கூட்டி, கரையை நோக்கி படகை செலுத்தினார். பல நாட்களுக்குப் பிறகு மண்டபம் பகுதிக்கு வந்து சேர்ந்தார்.
அவரைக் காணாது பறிதவித்துப் போய் இருந்த குடும்பத்தினர், அப்போதுதான் மன நிம்மதி அடைந்தனர். கரைக்கு வந்ததும் தன் படகில் இரண்டு சிறிய பாறைகளும், ஒரு பெரிய பாறையுமாக இருந்த கற்களை எடுத்து தனது வீட்டின் முன்பாக படிக்கட்டு போல் போட்டார். மீனவரின் வீட்டிற்கு வந்து சென்றவர்களின் பாதங்கள் படப்பட, கற்களின் மீது இருந்த பாசிகள் அனைத்தும் அகன்று அந்த கற்கள் பச்சை வண்ணத்தில் ஒளி வீசத் தொடங்கியது. அது மரகதம் என்பதை உணர்ந்த மீனவர், தன்னுடைய வறுமையைப் போக்க இறைவன் அளித்த பரிசு என்று நினைத்தார். பின்னர் அதை அரசவையில் சேர்த்தார். அதற்கு மன்னன் பெரும் பரிசை மீனவருக்கு அளித்தான்.
அந்த மரகதப் பாறையைப் பார்த்த மன்னன், அதில் நடராஜரின் சிலையை வடிக்க நினைத்தான். ஆனால் அவ்வளவு பெரிய மரகதப் பாறையில் நடராஜரின் உருவத்தைப் பொறிக்க பல சிற்பிகளும் தயங்கினர். அப்போது சித்தர் சண்முக வடிவேலர் என்பவர், மரகத நடராஜரை வடிக்க முன்வந்தார். அதன்படி ஐந்தரை அடி உயர நடராஜரை, ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில், திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு மிகவும் நுணுக்கமாக வடித்தார், சித்தர் சண்முக வடிவேலர். நடராஜருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, அந்த நரம்புகளை நாம் காண முடியும்.
இத்திருக்கோயில் மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீ நரசிம்மர் வீற்றிருக்கிறார்.
ஸ்ரீ நாமகிரித் தாயாரின் சிறப்பு: இங்கு அமைந்துள்ள அரி நாமகிரித் தாயார் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஸ்ரீ நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி தாயாரை பூஜிக்க சகல செல்வங்களும், பில்லி, சூனியம் போன்றவை ஒரு மண்டல காலத்திற்குள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்திருக்கோயிலின் பெயராலேயே திருவரைக்கல் எனப்படும் நாமக்கல் நாமகிரி என முன்பு புராணங்களில் கூறப்படுகிறது.
ஸ்ரீ நரசிம்மர் சிறப்பு: இத்திருக்கோயில் மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீ நரசிம்மர் வீற்றிருக்கிறார். அருகில் பூஜக முனிவர்களான சநக சநந்தர்களும், சூர்ய சந்திரர்களும் கவரி வீச வலது புறம் ஈஸ்வரனும், இடதுபுறம் பிரம்மாவும் பகவான் இரணியனை அழித்த உக்கிரம் தீர வழிபடுகிறார்கள். ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்தால் மகிழ்ந்ததால் இங்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகியோர் ஒரே இடத்தில் அருள் பாலிப்பதால் மும்மூர்த்தி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. இங்கு இரணியனை வதைத்த பின் ரத்தக்கரையுடன் கூரிய நகங்களுடன் பகவான் காட்சி தருகிறார். உலகில் சிவன் சில இடங்களில் மட்டுமே தலையில் பிறைச்சந்திரனுடன் காட்சி தருகிறார். அவற்றில் ஒன்று இத்திருத்தலம்.
தல வரலாறு : தேவ சபையில் சகல குணம் பொருந்தியவர் மகா விஷ்ணுவே என்ற கருத்து இருந்தது. அதனையொட்டி துர்வாச முனிவரிடம் வணங்கி தேவேந்திரன் விளக்கம் கேட்டார். துர்வாச முனிவர் ராஜகோலத்தில் பிரம்மாவும், மஹாலட்சுமியும் தமஸா உலகின் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், பரமேஸ்வரியும் தோன்றியதாக கூறினார். மேலும் சரஸ்வதியை நான்முகனும், ஈஸ்வரியை ஈஸ்வரனும், லட்சுமியை மகாவிஷ்ணுவும் மணந்ததாக கூறினார். சகலவிதமான பொறுமையுடன் ராஜ கோலத்தில் பிறந்த மஹாலட்சுமியை வகித்து உலகத்தை காப்பாற்றி வருவதால் மகாவிஷ்ணுவே சிறந்தவராவார் எனக் கூறினார் துர்வாச முனிவர். இதைக் கேட்ட இந்திரன் இதனை பரீட்சை மூலம் அறிய நினைக்கிறேன் என்றார்.
பகவானை மனதில் தியானித்து துர்வாசர் சத்ய லோகம் சென்றார். அங்கு மகாவிஷ்ணு நித்திரையில் இருத்தார். துர்வாச முனிவரின் வேகத்தை கண்ட துவார பாலகர்கள் அவரைத் தடுக்கவில்லை. தான் வந்தும் மகாவிஷ்ணு நித்திரையில் இருப்பதைக் கண்டவுடன் மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல் சாந்தமுகத்துடன் முனிவரை பார்த்து தாங்கள் உதைத்ததால் மார்புபகுதி புனிதம் அடைந்ததாகவும் தங்கள் பாதம் வலிக்குமே எனக்கூறி முனிவரின் பாதத்தை வருடினார். உடனே துர்வாசர் தெளிவடைந்து மகாவிஷ்ணுவிடம் பிழை பொருந்தருளுமாறு கேட்டார்.
இட்டபணியை செய்யத்தவறிய துவார பாலகர்களை மூன்று பிறவிகள் எடுத்து (தமக்கு விரோதமாக) இருப்பிடம் அடைவீர் என தன்டனை கொடுத்தார். பகவானை பிரிய மனமற்ற துவார பாலகர்களை கட்டளைப்படி மூன்று பிறவிகள் விரோதமாக பிரிக்கிறோம். ஆனால் தங்களாலேயே மரணம் அடைய வேண்டும் என வேண்ட, இறைவனும் அவ்வாறே வரம் தந்தார். அவர்கள் அரக்கன் மதுகைடகர் போல் துவார பாலகர் இருவரும் இரணியகசிபு மற்றும் இரண்யாட்ஷன் ஆக பிரிந்து இரண்யாட்ஷன் பூமியை அபகரித்து பாதாளத்தில் ஒளிந்து கொள்ள மகாவிஷ்ணு யக்ஞவராக அவதாரம் எடுத்து வதம் செய்து பூமி தேவியை காப்பாற்றினார்.
இரண்யகசிபு கடும் தவத்தை மேற்கொண்டு பரம சிவனிடமிருத்து 5௦ கோடி ஆட்களையும் தேவர், மானுடர், ஜலம், அக்னி, விஷம், ஆயுதங்கள் இவைகளாலும் பூமி, ஆகாயம், பகல், இரவு வேளைகளில் சாகா வரம் பெற்றார். பரமேஸ்வரனின் வரத்தால் மூவுலகையும், முனிவர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் ஆண்ட இரணியன் ஆட்சியில் எவ்விதயாகமும், பஜனைகளும் நடைபெறவில்லை. இதனைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் சக்கரத்தாழ்வாரை பிரகலாதனாக இரண்யன் மகனாக பிறக்க கட்டளையிட்டார். கருவிலேயே நாரதரால் அனைத்தும் கற்ற பிரகலாதனை தக்க வயதில் குருகுலத்திற்கு இராணியன் அனுப்பினான்.
இராணியன் கட்டளைப்படி இராணியாய நமக என ஆசிரியர் முதலடி போதிக்க அவன் "ஓம் நாமோ நாராயணாய நமக" எனக் கூறினான். அதன்படி இரணியனிடம் ஆசிரியர் கூற. பலவகைகளிலும் தண்டித்து முயற்சித்து பார்த்தான் இரணியன். கொடுமையான தண்டனைகள், கொலை முயற்சிகள் கூட பிரகலாதனை புஷ்பங்களாக மாறி தர்மம் மற்றும் மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் ஆகியன காத்தன. இதனைக் கண்ட இரணியன் பிரகலாதனிடம், வேண்டுமானால் நாராயணனை எனக்கு காட்டு, எனக் கூற பிரகலாதன் எங்கும் நிறைந்திருக்கிறான் எனக் கூறினான்.
அப்பொழுது அங்குள்ள தூணை இரணியன் அடிக்க அங்கிருந்து நரசிம்மமூர்த்தி காட்சியளித்தார். அவன் பெற்ற வரங்கள் மாறுபடாமல் இரணியனை தன் சிங்க நகம் போன்ற கூரிய நகத்தால் அவனை அழித்தார். அப்படியும் கோபம் அடங்காத ஸ்ரீ நரசிம்ம அவதார மூர்த்தியான ஸ்ரீமந் நாராயணனை சாந்தப்படுத்த மகாலட்சுமியை தேவர்கள் வேண்ட அவளும் அருகில் செல்ல பயந்தாள். பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்ய, ஸ்ரீ நரசிம்மர் ராஜ்யபட்டாபிஷேகம் செய்து அருள்பாளித்தார் அவனும் அது முதல் பூஜித்து வரலானான்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
கோயில் முகவரி :
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,
நாமக்கல் - 637 403,
நாமக்கல் மாவட்டம்.






