என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த மாதம் 25-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 5 மணி முதல் மாலை 5.15 மணிவரை திருக்கைத்தல சேவை நடைபெற்றது. அப்போது உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குசநாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டினார்கள்.

    மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை உயபகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளுகிறார்.

    பின்னர் திருமாமணி மண்டபத்தில் இரவு 7 மணிமுதல் இரவு 8 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெறுகிறது. 10-ம் திருநாளான 3-ந்தேதி தீர்த்தவாரியும், 4- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்த பெண்களின் ஆசிகளைப் பெற்று, திருமணம் போன்ற விசேஷங்கள் நடப்பதற்கு முன்னதாகச் செய்யப்படுவது.
    சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, திருமணம் போன்ற விசேஷங்கள் நடப்பதற்கு முன்னதாகச் செய்யப்படுவது. பொதுவாக இதை, குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்களுக்கு முன்னர் செய்வது வழக்கம்.

    சிலர் இதை ஒவ்வொரு வருடமும் செய்வார்கள். வீட்டில் உள்ள பெண்களுக்கு, கல்யாணத்திற்கு முன்னரும், மகனுக்கு செய்யும்போது, வீட்டிற்கு மருமகள் வந்த பிறகும் இதைச் செய்வது வழக்கம். பொதுவாக, சுமங்கலிப் பிரார்த்தனையை, புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் செய்ய வேண்டும். சுமங்கலிப் பிரார்த்தனைக்கு, ஒற்றைப் படையில் பெண்களை வைத்து செய்ய வேண்டும். வீட்டுப் பெண்கள், அதாவது, இதைச் செய்யும் பெண்ணின் நாத்தனார், மகள் போன்ற உறவுகளை முக்கியமாக உட்கார வைக்க வேண்டும்.

    மருமகள் உறவில் உள்ளவர்கள் உட்காரக் கூடாது. இவர்களைத் தவிர, வேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம். ஒரு சிறு வயது (ஏழு அல்லது எட்டு வயது) பெண் குழந்தை இருப்பது நலம். இதில் உட்காரும் பெண்களில் ஒருவருக்காவது புடவை வாங்க வேண்டும். மற்றவருக்கு ப்ளவுஸ் பிட் வைத்துக் கொடுக்கலாம். அவரவர் வசதிப்படி செய்யலாம். இல்லாவிட்டால், ப்ளவுஸ் பிட்டும், ஓரளவு பணமும் கூட வைத்துக் கொடுக்கலாம்.

    அவரவர் குடும்ப வழக்கப்படி, அதாவது சில குடும்பங்களில், கொடுக்கும் புடவையை, நனைத்து உலர்த்தியும் கட்டிக்கொள்ளச் சொல்வார்கள். இல்லாவிட்டால், புதுப்புடவையை அப்படியேவும் கொடுப்பார்கள். இதைக் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும். முதல் நாளே, இவர்களுக்கும், செய்பவர்களுக்குமான புடவைகளை, மடியாக உலர்த்தவும். இவர்களுக்கு, அந்த நாளில், காலையில், நலுங்கு வைத்து மஞ்சள், குங்குமம், பூ வைத்து, தலையில் எண்ணெய் வைத்து, சீகக்காய் பொடி இவற்றைக் கொடுத்து விடவும்.

    இதை அந்த வீட்டு மருமகள் தான் செய்ய வேண்டும். அவர் அதற்குப் பிறகுதான் குளிக்க வேண்டும். குளித்து வந்த பெண்களுக்கு, பின் பக்கத்தில் அழைத்துச் சென்று, காலில் மஞ்சள் பூசி, ஜலம் விட்டு அலம்பி, உள்ளே அழைத்து வர வேண்டும். பெண்கள் குளித்து விட்டு வந்த பிறகு, செய்பவரின் மாமியார், சுமங்கலியாக இறந்து விட்டிருந்தால், அவரின் படத்தை, பூஜை அறையில் வைத்து, அதற்கு முன், ஒரு மனையில் கோலம் இட்டு, அதில் கொடுக்க வேண்டிய ஒரு புடவை மட்டுமாவது, அப்படியே மடித்து வைக்காமல், கொசுவி, அதனுடன் ஒரு ப்ளவுஸ் பிட் வைத்து, அதன் மீது, நிறைய மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம் (பேக்கட்), பூ, கண்மை, சிறிய கண்ணாடி, தேங்காய், பழம், மருமகளின் சில நகைகள் இவற்றை வைக்க வேண்டும்.

    இதற்குப் பக்கத்தில், மற்றவர்களுக்கு வாங்கி உள்ளதை அப்படியே வைக்கலாம். அவற்றின் மீதும் தாம்பூலங்களை வைக்கவும். பிறகு, அன்றைக்கு செய்துள்ள சமையல் பதார்த்தங்களில் எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து ஒரு நுனி இலையில் வைத்து, அந்த புடவையின் முன் வைத்து விடவும். இதற்குப் பின், அனைவரும் வெளியே சென்று விடவேண்டும்.

    அந்தக் கதவை மூடி விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து, முதலில் மகன், மருமகள் என்று வயதில் பெரியவரிலிருந்து, கையைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும். சுமங்கலியாக இறந்தவரின் படத்தின் மீது, பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து விட்டு, பெண்கள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு உரிய உடைகளைக் கொடுத்து பெரியவர்களாக இருந்தால், வீட்டில் உள்ள மகனும், மருமகளும், அவர்களை நமஸ்காரம் செய்து விட்டு, பிறகு சாப்பிட வேண்டும்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சி கொடுக்கிறார்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் சாந்தமாக காட்சி தருகிறார். திருமணக்கோலத்திலும் அருள்பாலிக்கிறார்.

    இத்தகைய கண்கொள்ளாக் காட்சியானது முருகப்பெருமான் குடிகொண்டுள்ள மற்ற தலங்களில ்காணக்கிடைக்காத ஒன்றாகும். மேலும் சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கற்பக விநாயகர், துர்க்கை அம்மாள் என்று ஒரே கருவறையில் தனித்தனியாக சன்னதிகள் அமைந்து இருப்பதும் சிறப்பாகும். இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த தலத்தில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானுக்கு தங்கக்கவசமும், ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெள்ளிக்கவசமும் சாத்துப்படி செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிறக்கிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது இதேபோல கருவறையில் சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாளுக்கும் வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி மற்றும் ஸ்தானிக பட்டர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
    இந்தப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை பிறப்பதால் சுக்கிரன் சன்னிதியில் கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபட்டு வருவது நல்லது.
    தமிழ் ஆண்டாக இருந்தாலும், ஆங்கில ஆண்டாக இருந்தாலும் ஆண்டின் முதல் நாள் எந்தக் கிழமையில் பிறக்கின்றதோ, அந்தக் கிழமைக்குரிய கிரகத்தின் சன்னிதியில் பாடல் பாடி வழிபட்டால், ஆண்டு முழுவதும் வேண்டிய நற்பலன் கிடைக்கும். அந்த அடிப்படையில் இந்தப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை பிறப்பதால் சுக்கிரன் சன்னிதியில் கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபட்டு வருவது நல்லது.

    அள்ளிக் கொடுத்து ஆதரிக்கின்ற
    வெள்ளிச் சுக்ர வேந்தே சரணம்!
    மலர் வெண்தாமரை வைரமாம் ரத்னம்
    நிலத்தில் தந்தால் நின்னருள் கிட்டும்!
    மொச்சை தான்யம் முகமலர்ந் தளித்தால்
    இச்சைகள் அனைத்தும் இனிதே தீர்ப்பாய்!
    திருமண யோகம் சிறப்புடன் வழங்கும்
    அருமைச் சுக்ரா அழைத்தோம் வருக!
    புத்தாண்டையொட்டி பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
    ஆண்டதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் புத்தாண்டு முதல் நாளில் திருச்செந்தூர் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    ஆனால், இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் மார்கழி முதல் நாளில் இருந்து தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தது. ஆனால், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அதேசமயம் புத்தாண்டையொட்டி நேற்றும், இன்றும் பக்தர்கள் கடற்கரைக்கு செல்லவோ, கடலில் புனித நீராடவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக கடற்கரை பகுதியில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பக்தர்கள் கோவில் பகுதியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதனால் நேற்று திருச்செந்தூர் கோவில் கடற்கரை பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்றுஇரவு புத்தாண்டு திருவிருந்து ஆராதனை நடந்தது. இரவு 11.30 மணிக்கு 2020-ம் ஆண்டு இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு 2021-ம் ஆண்டு புதுவருட சிறப்பு ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையை சபை ஆயர் பிரைட் பிராங்கிளின் நடத்தினார். பயிற்சி ஆயர் சாம்மேத்யூ ஆராதனையில் உதவி செய்தார்.

    இதில் சேகர குழு உறுப்பினர்கள், திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. புத்தாண்டையொட்டி ஆலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆராதனையில் பங்கேற்றவர்கள் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை தலைமை ஆயர் சாலமோன், உதவி ஆயர் சாம்நியூபிகின் ஆகியோர் தலைமையில் நடந்தது. புத்தாண்டு பிறந்தவுடன் ஆலய மணி ஒலிக்கப்பட்டது.

    தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்தில் நேற்றுஇரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி பாதிரியார் வில்சன், பாதிரியார் அமர்தீப் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் புனித வின்சென்ட் தே பவுல்சபை தலைவர் பிரான்சிஸ் மெய்யப்பா உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சை குழந்தை ஏசு திருத்தலத்தில் நன்றி வழிபாடு பாதிரியார் ஜஸ்டின் சுதாகர் தலைமையில் நடந்தது. அதைத்தொடர்ந்து புத்தாண்டு கூட்டுத்திருப்பலி திருத்தல அதிபர் அன்புரோஸ், திருச்சி பாதிரியார் ஜோசப் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

    தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்றுஇரவு நன்றி வழிபாடு பேராலய பங்கு தந்தை இருதயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. தொடர்ந்து புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில் உதவி பங்கு தந்தை அலெக்சாண்டர், பாதிரியார் கித்தேரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினர். கொரோனா தொற்று காரணமாக பல தேவாலயங்களில் நள்ளிரவுக்கு முன்பாக கூட்டு திருப்பலி நடந்தது. பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து இருந்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மாலை பிரணய கலகோற்சவம் நடந்தது. அதையொட்டி உற்சவர் மலையப்பசாமி மீது ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பூப்பந்துகளை வீசி கோபம் தணிந்து கோவிலுக்குள் சென்றனர்.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது. அதன் 17-வது நாள் பிரணய கலகோற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம் நடந்தது.

    அதற்காக மாலை 4 மணியளவில் உற்சவர் மலையப்பசாமி தனியாக தங்கத்திருச்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதேபோல், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பக்தர்களின் குறைகளை போக்குவதில் ஆர்வம் காட்டும் ஏழுமலையான், நாச்சியார்களை கண்டு கொள்வதில்லை, எனக் கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் இருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மலையப்பசாமி சமாதானப்படுத்தும் நிகழ்ச்சியாக பிரணய கலகோற்சவம் நடத்தப்படுகிறது.

    உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, ஸ்ரீவாரிபுஷ்கரணியை அடுத்த வாரகசாமி கோவில் அருகில் எதிர் திசையில் வந்தார். அப்போது ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களும் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி தனியாக எதிர் திசையில் கொண்டு வரப்பட்டனர்.

    தாயார்களை சமாதானப்படுத்தும் வகையில் ஜீயர்சுவாமிகள், வேதப்பண்டிதர்கள், அர்ச்சகர்கள் இரு தரப்பினரும் எதிர் எதிர் திசையில் நின்றனர். பின்னர் மலையப்பசாமி தரப்பில் ஜீயர்சுவாமிகள் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல்கள், நம்மாழ்வார் அருளிய பாசுரங்களை பாராயணம் செய்து தாயார்களை சமாதானப்படுத்தினர்.

    அப்போது ஸ்ரீதேவி, பூதேவி தாயார் தரப்பில் 3 முறை பூப்பந்துகளை மலையப்பசாமி மீது வீசினர். அப்போது மலையப்பசாமி தான் எந்தத் தவறும் செய்யவில்லை, எனக் கெஞ்சியபடி தப்பிக்க மலையப்பசாமி பின்னால் சென்று, தாயார்களை சமாதானப்படுத்திய நிகழ்ச்சி நடந்தது.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சமாதானம் ஆனதும் உற்சவர் மலையப்பசாமியுடன் சேர்ந்தனர். அவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு, ஆஸ்தானம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    பிரணய கலகோற்சவத்தில் திருமலை-திருப்பதி தேஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
    கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
    எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
    அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர் கோமானே! உறங்கா தெழுந்திராய்;
    செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
     
    பொருள் :
     
    நந்தகோபாலர், யசோதை, பலராமன் ஆகியவர்களை எழுப்பி கண்ணனையும் எழுப்பும் பாடல்.
     
    நந்தகோபாலா! ஆடைகளையே, சோற்றையே தர்மம் செய்கின்ற எம்பெருமானே! எழுந்திரு.
     
    யசோதையே! எம்பெருமாட்டியே! பூங்கொம்பு போன்ற எங்களுக்கெல்லாம், குலத்துக்கு உண்டான மங்கள தீபம் போன்றவளே எழுந்திரு.
     
    திருவடியால் கண்ணா! திரிவிக்ரமனாகி ஆகாயத்தையும், பூமியையும் அளந்த சுவாமியே! எழுந்திரு.
     
    பலராமா! தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்ட வீரக்கழல்களை அணிந்த திருவடிகளை உடையவனே! உன் தம்பியான கண்ணனும், நீயும் துயில் நீங்கி எழுவீராக.
    புத்தாண்டிற்காக தரிசனம் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வழக்கம்போல் தரிசனமே தொடரும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் புத்தாண்டு தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக குறைந்த அளவு பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

    ஆனால் ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டை யொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதனால் கடந்த ஆண்டு முதல் ஆங்கிலப் புத்தாண்டிற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

    பக்தர்கள் வழக்கம்போல் சாமியை தரிசனம் செய்து சென்றனர். ஆனாலும் இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி ஸ்ரீவாணி டிரஸ்ட் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் தரிசனம் செய்வதற்காக கூடுதலாக பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனத்தற்கு தயாராகி உள்ளனர்.

    புத்தாண்டிற்காக தரிசனம் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வழக்கம்போல் தரிசனமே தொடரும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சுபஸ்ரீ சார்வரி வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி அன்று (1.1.2021) வெள்ளிக்கிழமை துதியை திதி, பூசம் நட்சத்திரம் கடக ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது.
    சுபஸ்ரீ சார்வரி வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி அன்று (1.1.2021) வெள்ளிக்கிழமை துதியை திதி, பூசம் நட்சத்திரம் கடக ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது. நவக்கிரகங்களில் ‘தைரியகாரகன்’ என்றழைக்கப்படும் செவ்வாயும், ‘ஆயுள்காரகன்’ என்றழைக்கப்படும் சனியும், சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் மகரத்தில் நீச்சம்பெற்று ஆட்சி பெற்ற சனியின் சேர்க்கையால் பங்கமடைந்து நீச்சபங்க ராஜயோகத்தோடும், சந்திரனை குரு பார்த்து குருச்சந்திர யோகத்தோடும் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கின்றது.

    பிறக்கும் புத்தாண்டு நமக்குப் பெருமைகளை வழங்கவும், ஆரோக்கியத்தோடு வாழ்க்கை நடத்தவும், ஆண்டின் தொடக்க நாளில் தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபட்டு காரியங்களில் வெற்றி காண வழிவகுத்துக் கொள்வோம்.

    ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கின்ற பொழுதும் இந்த ஆண்டு நமக்கு எப்படிஇருக்கும்?, நம்முடைய எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றுமா?, பொருளாதாரப் பற்றாக்குறை அகலுமா?, புதிய பாதை புலப்படுமா? என்று அனைவருமே சிந்திப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, நோய் தொற்று அகன்று மக்கள் நிம்மதியாக வாழ வழி கிடைக்குமா?, சென்ற ஆண்டு ஸ்தம்பித்து நின்ற தொழில்கள் மீண்டும் வெற்றிநடை போட வழிபிறக்குமா?, குடும்பத்தில் அனைவருக்கும் ஆரோக்கியம் சீராக இருக்குமா? என்று சிந்திக்க நேரிடுகின்றது. இவற்றிற்கெல்லாம் விடைகூறும் விதத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கப் போகின்றது.

    தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதைக் கொண் டாடுவது போல, ஆங்கிலப் புத்தாண்டையும் இப்பொழுது மக்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வின் வளர்ச்சி என்பதை மக்கள் அறிந்து கொண்டனர். அதனால் உலா வரும் கிரகங்களின் ஒப்பற்ற மாற்றங்கள் வரும்பொழுதெல்லாம் அதைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    புத்தாண்டின் கூட்டுத்தொகை 5 (2+0+2+1=5), புதனுக்குரிய எண் ஆதிக்கத்திற்குள் வருகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் மகரத்தில் புதன் சஞ்சரிக்கின்றார். அவரோடு குருவும் சனியும் கூடி இருக்கின்றார்கள். எனவே குருவருளும், திருவருளும் நமக்கு கிடைக்க விநாயகப் பெருமானையும், முருகப்பெருமானையும், குரு பகவானையும், சிவன்-உமையவள், நந்தி, சரஸ்வதி, அனுமன், விஷ்ணு, லட்சுமி ஆகியோரை முறையாக வழிபட்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல வழிபிறக்கும்.

    யோகம் பெறும் ராசி-நட்சத்திரங்கள்

    இந்தப் புத்தாண்டில் யோகம் பெறும் ராசி மற்றும் நட்சத்திரங்கள் விவரம் வருமாறு:-

    ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வையால் புனிதமடையும் ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி ஆகிய ராசிகள், ஏழரைச்சனி விலகி நன்மை பெறும் ராசியான விருச்சிகம் ஆகியவை இந்த ஆண்டில் மிகச் சிறப்பான பலன்களைப் பெறும் ராசிகளாக அமைகின்றன. அவர்கள் தொட் டது துலங்கும், தொகை வரவு திருப்தி தரும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    எண் கணித அடிப்படையில் புதனுக்குரிய எண்ணான 5-ன் ஆதிக்கத்தைக் கொண்ட 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் புதனுக்கு நட்பு கிரகமான சனியின் ஆதிக்கம் கொண்ட எண்களான 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், சுக்ரன் கிரகத்துக்குரிய எண் ஆதிக்கமான 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான பலன்களை தரும் ஆண்டாக அமையப்போகிறது.

    ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய புதனுக்குரிய நட்சத்திரத்தில் பிறந் தவர்களுக்கும் இந்த ஆண்டு பொன்கொழிக்கும் ஆண் டாக அமையப்போகின்றது.

    யோகம் பெறும் ராசிக்காரர்களும், மற்ற நட்சத்திரக்காரர்களும் தங்கள் சுய ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானத்தின் பலமறிந்து அதற்குரிய தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்துச் செய்தால் மேலும் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

    கீர்த்தி தரும் கிரக சஞ்சாரம்

    இந்தப் புத்தாண்டில் 13.11.2021 அன்று கும்ப ராசிக்கு குரு பகவான் முறையாக பெயர்ச்சியாகின்றார். அப்பொழுது அதன் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகளில் பதிகின்றது. ஆண்டின் மையப்பகுதியில் கும்ப ராசியிலும், அதன் பிறகு மகர ராசியிலும், குரு வக்ரம் பெறுகின்றார். இவற்றை அடிப்படையாக வைத்தும் சனியின் வக்ர காலம் மற்றும் செவ்வாய்-சனி பார்வை காலத்தை வைத்துக் கணித்துப் பார்த்தும் இந்த புத்தாண்டு பலன்கள் எழுதப்பட்டுள்ளது. முரண்பாடான கிரகங்களின் சேர்க்கை காலத்தில் இயற்கை சீற்றங்களில் இருந்து விடுபடவும், நோய் தொற்று பாதிப்புகள் அகலவும், போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறவும் சிறப்பு பரிகாரங்களையும், வழிபாடுகளையும் மேற்கொள்ளுங்கள்.

    விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய காலம் :

    இயற்கை சீற்றங்கள், நோய் தொற்றுகள் மற்றும் பிற தாக்கங்களில் இருந்து விடுபட இறைவழிபாடு தேவை. இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க நாம் அனைவரும் விழிப்புணர்ச்சியுடன் இருக்கவேண்டிய காலகட்டங்கள் வருமாறு:-

    செவ்வாய்-சனி பார்வை

    14.4.2021 முதல் 3.6.2021 வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகர ராசியில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கின்றார்.

    அதேசமயம் கும்பத்தில் சஞ்சரிக்கும் குரு, செவ்வாயைப் பார்த்து அதைப் புனிதப்படுத்துகின்றார்.

    4.6.2021 முதல் 21.7.2021 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் நீச்சம் பெற்ற செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியை சப்தமப் பார்வையாகப் பார்க்கின்றார்.

    சனியின் வக்ர காலம்

    12.5.2021 முதல் 26.9.2021 வரை மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார்.

    கன்னி ராசியில் செவ்வாய்

    8.9.2021 முதல் 23.10.2021 வரை கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கின்றார். ‘கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்’ என்பது பழமொழி. எனவே இந்தக்கால கட்டத்தில் மிகக்கவனமுடன் செயல்படுவது நல்லது.

    சர்ப்ப தோஷ காலம்

    7.12.2021 முதல் 31.12.2021 வரை ரிஷபத்தில் ராகுவும், விருச்சிகத்தில் கேதுவும் இருக்க மற்ற பெரும்பான்மையான கிரகங்கள் அதற்குள் அடைபட்டிருக்கின்றன. பாம்புக் கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள ராசியினர் அனைவரும் முறையாக சர்ப்ப சாந்தி செய்து கொள்வதன் மூலம் சந்தோஷத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருமலை 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    7-ந்தேதி ஆத்யான உற்சவம் நிறைவு விழா, 8-ந்தேதி உற்சவர் மலையப்பசாமி திருமலைநம்பி சன்னதிக்கு எழுந்தருளல், 9 மற்றும் 24-ந்தேதிகளில் சர்வ ஏகாதசி, 10-ந்தேதி தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநட்சத்திரம். 13-ந்தேதி போகிப் பண்டிகை, 14-ந்தேதி மகர சங்கராந்தி என்ற பொங்கல் பண்டிகை, 15-ந்தேதி மாட்டுப்பொங்கல், கோதாதேவி பரிநய உற்சவம், ஸ்ரீவாரி பார்வேடு உற்சவம், 28-ந்தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கோடி உற்சவம், 30-ந்தேதி திருமழிசை ஆழ்வார் வருட திருநட்சத்திரம்.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.
    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் நாளை விசே‌‌ஷ பூஜைகள் நடைபெற உள்ளன.
    ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி புதுவையில் உள்ள பெருமாள், சிவன் கோவில்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விசே‌‌ஷ அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர், காந்தி வீதி வேதபுரீஸ்வரர், பாகூர் மூலநாதர், வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர், திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி சமேத கங்கவராகநதீஸ்வரர், முத்தியால்பேட்டை ராமகிரு‌‌ஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர், காந்தி வீதி பொன்னுமாரியம்மன், எம்.எஸ்.அக்ரகாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர், முத்தியால்பேட்டை கற்பக விநாயகர், வசந்த் நகர் வேலாயுத ஈஸ்வரர், கணபதி நகர் ‌ஷீரடி சாயிபாபா, பெரிய ஆண்டவர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    அதேபோல் காந்தி வீதி வரதராஜபெருமாள், முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள தென்கலை சீனுவாச பெருமாள், முதலியார்பேட்டை வன்னியபெருமாள், பாகூர் லட்சுமிநாராயணா பெருமாள், மதிகிரு‌‌ஷ்ணாபுரம் பட்டாபி ராமர், திருபுவனை தென்கலை வரதராஜபெருமாள், வில்லியனூர் வரதராஜபெருமாள், காலாப்பட்டு சாயி பாபா கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அரசு விதிகளுக்குட்பட்டு கோவில்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் கட்டாயமாகும்.
    ×