என் மலர்
ஆன்மிகம்

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பு: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்றுஇரவு புத்தாண்டு திருவிருந்து ஆராதனை நடந்தது. இரவு 11.30 மணிக்கு 2020-ம் ஆண்டு இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு 2021-ம் ஆண்டு புதுவருட சிறப்பு ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையை சபை ஆயர் பிரைட் பிராங்கிளின் நடத்தினார். பயிற்சி ஆயர் சாம்மேத்யூ ஆராதனையில் உதவி செய்தார்.
இதில் சேகர குழு உறுப்பினர்கள், திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. புத்தாண்டையொட்டி ஆலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆராதனையில் பங்கேற்றவர்கள் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை தலைமை ஆயர் சாலமோன், உதவி ஆயர் சாம்நியூபிகின் ஆகியோர் தலைமையில் நடந்தது. புத்தாண்டு பிறந்தவுடன் ஆலய மணி ஒலிக்கப்பட்டது.
தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்தில் நேற்றுஇரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி பாதிரியார் வில்சன், பாதிரியார் அமர்தீப் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் புனித வின்சென்ட் தே பவுல்சபை தலைவர் பிரான்சிஸ் மெய்யப்பா உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை குழந்தை ஏசு திருத்தலத்தில் நன்றி வழிபாடு பாதிரியார் ஜஸ்டின் சுதாகர் தலைமையில் நடந்தது. அதைத்தொடர்ந்து புத்தாண்டு கூட்டுத்திருப்பலி திருத்தல அதிபர் அன்புரோஸ், திருச்சி பாதிரியார் ஜோசப் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்றுஇரவு நன்றி வழிபாடு பேராலய பங்கு தந்தை இருதயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. தொடர்ந்து புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில் உதவி பங்கு தந்தை அலெக்சாண்டர், பாதிரியார் கித்தேரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினர். கொரோனா தொற்று காரணமாக பல தேவாலயங்களில் நள்ளிரவுக்கு முன்பாக கூட்டு திருப்பலி நடந்தது. பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து இருந்தனர்.
Next Story






