என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்.
விளக்கம்: கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள். முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே!
பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! நீயும் விரைந்து துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக. கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள்.
கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து.
இந்த பிரபஞ்சத்தில் இறைவன் உருவாக்கியதாக கருதப்படும் 14 உலகங்களையும், அங்கு வசிப்பவர்கள் பற்றியும் இங்கே பார்ப்போம்.
ஈரேழு (பதினான்கு) லோகங்கள் என்று பலரும் சொல்வதை நாம் கேட்டிருப்போம். இந்த பிரபஞ்சத்தில் பூமி மற்றும் அதற்கு மேல் பகுதியில் 7 உலகங்களும், பூமிக்கு கீழே 7 உலகங்களும் இருப்பதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அதன்படி இறைவன் உருவாக்கியதாக கருதப்படும் அந்த 14 உலகங்களையும், அங்கு வசிப்பவர்கள் பற்றியும் இங்கே பார்ப்போம்.
* சத்தியலோகம் - பிரம்மதேவனின் வசிப்பிடம்
* தபோலோகம் - தேவதைகள்,
* ஜனோலோகம் - பித்ருக்கள் எனப்படும் முன்னோர்கள்
* சொர்க்கலோகம் - இந்திரன் முதலான தேவர்கள்
* மஹர்லோகம் - முனிவர்கள்
* புனர்லோகம் - கிரகங்கள், நட்சத்திரங்கள்,
* பூலோகம் - மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள். இந்த 7 உலகங்களும் பூமிக்கு மேல்பகுதியில் இருப்பவை.
* பூமிக்கு கீழ் பகுதியில் முதல் இரண்டு லோகங்களில் அசுரர்கள் வசிக்கின்றனர்.
* சுதல லோகம் - உலகளந்த நாராயணரால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி வசிக்கிறார்.
* தலாதல லோகம் - மாயாவிகள்
* மகாதல லோகம் - புகழ்பெற்ற அசுரர்கள்,
* பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்பு இனங்கள்
* ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் எனத்தொடங்கும் திருப்பாவை பாடலையும் இதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்.
விளக்கம்:
நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள்.
முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து கவலைப்படாதே என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள்.
இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது.
தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் ரெங்காநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெற்றது. அப்போது தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த மாதம் 25-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது.
ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோவில் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார்.
அங்கு இரவு 7 மணிமுதல் இரவு 8 மணிவரை அரையர் சேவையுடன், பொதுஜனசேவையும் நடைபெற்றது. இரவு9 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் 10-ம் திருநாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியும், 4- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
கடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் திருமண தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.
இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பொது மக்கள் மொட்டை யடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.
திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாண்டை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டாடினர். மேலும் பெரும்பாலான பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர்.
இரவில் புத்தாண்டு கொண்டாட்டம் என்று தேவையின்றி மோட்டார் சைக்கிளில் வலம் வருபவர்களை கட்டுப்படுத்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் நேற்று அதிகாலையில் பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீராடி கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் வெளி மாநிலம், பிற மாவட்டங்களிலிருந்தும் அதிக எண்ணி்க்கையிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். கோவிலில் பக்தர்களின் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக முகக்கவசம் அணியாமல் வந்த பக்தர்களை கோவில் பணியாளர்கள் திருப்பி அனுப்பினர். கோவிலில் பக்தர்கள் எந்தவித சிரமமின்றி வரிசையாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலையில் அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரம் செய்யப்பட்டது. மேலும் சம்பந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி சிலைக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை ஏராளமான பக்தர்கள் பனி பொழிவையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள்.
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.
"ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்."
"ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ பிராம்ஹி ப்ரசோதயாத்."
புதுச்சேரி -திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
புதுச்சேரி -திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயரை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மொரட்டாண்டியில் உள்ள காளி கோவிலிலும், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. வானூர் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பேராவூர் பேசும் பெருமாள் கோவில், வானூர் சிவன் கோவில், திருச்சிற்றம்பலம் கைலாசநாதர் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2020-ம் ஆண்டு நிறைவடைந்து 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று பிறந்தது. புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் நேற்று அதிகாலை முதலே கோவில்களில் குவிந்தனர். இதனால் கோவில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு பால், மஞ்சள், சந்தன், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் மூலவர் சன்னதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. உற்சவர் சிலைக்கு முன்பாகவே பக்தர்கள் திருப்பி விடப்பட்டனர். அர்ச்சனை எதுவும் செய்யப்படவில்லை.
தஞ்சை பில்லுக்காரத்தெரு ஜி.ஏ.கெனால் சாலையில் புதுஆற்றங்கரையோரத்தில் சக்தி முனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாகநாத விநாயகர், முருகன், நாகநாதசாமி, நாகேஸ்வரிஅம்மன், விஷ்ணுதுர்க்கை, கருப்பண்ணசாமி, மதுரைவீரன், சனீஸ்வரன், ஜெயவீரமகாஆஞ்சநேயர் ஆகிய சாமிகளின் சன்னதிகளும் உள்ளன. புத்தாண்டையொட்டி சக்தி முனியாண்டவருக்கு ரூபாய் நோட்டு, நாணயங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மற்ற சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புபூஜை நடைபெற்றது.
தஞ்சை வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோட்டில் உள்ள கேசவதிஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கேசவதிஸ்வரர், ஞானம்பிகைக்கும் முத்துஅங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தஞ்சையை அடுத்த வடவாறு பிருந்தாவனத்தில் உள்ள ராகவேந்திரர் கோவில், தஞ்சை சாய்பாபா கோவில், பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோவில், மேலவீதி சங்கரநாராயணசாமி கோவில், மூலைஅனுமார் கோவில், வெண்ணாற்றங்கரை கோடியம்மன்கோவில், கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில், நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோவில், மும்மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா வழிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் பலர், அந்த வழிமுறைகளை கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கோவிலுக்கு வந்திருந்தனர்.
தஞ்சை விளார் சாலையில் உள்ள அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. மக்கள் நோய் நொடியின்றி, செல்வ செழிப்புடன் வாழ வேண்டி இந்த யாகம் நடந்தது. யாகத்தை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப் பட்டுள்ளது.
கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.
கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.
திருமணம்
திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.
இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.
புனித தீர்த்தங்கள்
இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன.
தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி உற்சவம்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் வெகுவிமர்சையாக விழா நடந்து வருகிறது. அதிகாலையில் 2 மணிக்கு பெருமாள் விஷ்வரூப தரிசனம் நடக்கிறது. சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மாலையில் சாமி வீதி உலா நடைபெறும்.
தேசிகர் உற்சவம்
மேலும் புரட்டாசி மாதத்தில் முக்கிய விழாவாக தேவநாதசாமியின் பக்தராக இருந்து தியானம் செய்து முக்தி அடைந்த தேசிகர் மகா உற்சவம் நடக்கிறது. இந்த விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது பின்னர் இரவு ஹம்ச வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
தினமும் காலை மற்றும் மாலையில் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், பிள்ளைகிளை வாகனம், சந்திர பிரபை, மோகன அவதாரம், வெள்ளி சிம்ம வாகனம், வெண்ணைத்தாழி சேவை, யானை வாகனம், சூர்ணாஅபிஷேகம், தங்க விமானம், பேட்டை உற்சவம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. பின்னர் வருகிற அக்டோபர் 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை தேசிகர் தேர் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் நவராத்திரி 9-ம் நாள் உற்சவ விழாவும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
பிரம்ம உற்சவ விழாவின் முக்கிய விழாவாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவோணம் நட்சத்திரத்தன்று தேசிகர் ரத்னாங்கி சேவை அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் கோலாகலமாக நடைபெறுகிறது. பின்னர் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், ராமன், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் , பள்ளி கொண்டநாதர், ஆண்டாள், ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு சாமி சன்னதிகளில் சென்று வழிபடுகிறார்.
பின்னர் மாலையில் சாமி வீதி உலா உற்சவம் தீர்த்தவாரி பெருமாள் தாயார் தேசிகருக்கு சாற்றுமுறை உற்சவம் நடக்கிறது. இதையடுத்து கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து 9-ந்தேதி காலை, மாலை இருவேளையும் தேசிகர் பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. கடைசி நாள் உற்சவத்தில் தேசிகர் சாமி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள்
புரட்டாசி மாதம் வரக்கூடிய நான்கு சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவநாதசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பொது மக்கள் மொட்டை யடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.
இதில் முதல் சனிக் கிழமை, 2-வது சனிக் கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 3-வது சனிக்கிழமைகளில் குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுமட்டுமன்றி புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளிலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இரவு கோவில் வளாகம் அருகே தங்கி விட்டு அதிகாலையில் பெருமாளை தரிசித்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
கோவில் நடை திறக்கும் நேரம்
இந்த கோவிலில் புரட்டாசி மாதம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும். மற்ற மாதங்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு சாற்றப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். சில பெண்கள் கோவில் கிரிப்பிரகாரத்தை சுற்றிலும் அடிபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை அனுமதித்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கடந்த 2 நாட்களாக கோவில் கடற்கரைக்கு செல்லவோ, கடலில் புனித நீராடவோ பக்தர்களை அனுமதிக்கவில்லை. கோவில் கடற்கரை பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை வெறிச்சோடியது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் "லூர்து நகர்" என்று அழைக்கப்படுவதால் வேளாங்கண்ணிக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் வந்து மாதாவை வழிபட்டு செல்கின்றனர்.
கிறிஸ்தவ ஆலயங்களில் "பசிலிக்கா" என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் திகழ்கிறது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த சேவியர் திடல் மாநாட்டு பந்தலில் இரவு 10.30 மணியளவில் நன்றி அறிவிப்பு வழிபாடும் 11 மணியளவில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது.
முன்னதாக பாதிரியார்களின் திருப்பலி ஆயத்த பவனி நடந்தது. பின்னர் 11.30 மணியளவில் பேராலய அதிபர் பிரபாகர் மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி ஆங்கில புத்தாண்டு பிறப்பை அறிவித்தார். தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மன்றாட்டுகள் நடந்தது.
புத்தாண்டையொட்டி பேராலயம் அருகில் தியான மண்டபம் செல்லும் சாலை, விண்மீன் ஆலயம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.






