search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டிருந்த பக்தர்கள்.
    X
    பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டிருந்த பக்தர்கள்.

    தஞ்சை கோவில்களில் சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    தஞ்சை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    2020-ம் ஆண்டு நிறைவடைந்து 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று பிறந்தது. புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் நேற்று அதிகாலை முதலே கோவில்களில் குவிந்தனர். இதனால் கோவில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு பால், மஞ்சள், சந்தன், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் மூலவர் சன்னதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. உற்சவர் சிலைக்கு முன்பாகவே பக்தர்கள் திருப்பி விடப்பட்டனர். அர்ச்சனை எதுவும் செய்யப்படவில்லை.

    தஞ்சை பில்லுக்காரத்தெரு ஜி.ஏ.கெனால் சாலையில் புதுஆற்றங்கரையோரத்தில் சக்தி முனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாகநாத விநாயகர், முருகன், நாகநாதசாமி, நாகேஸ்வரிஅம்மன், வி‌‌ஷ்ணுதுர்க்கை, கருப்பண்ணசாமி, மதுரைவீரன், சனீஸ்வரன், ஜெயவீரமகாஆஞ்சநேயர் ஆகிய சாமிகளின் சன்னதிகளும் உள்ளன. புத்தாண்டையொட்டி சக்தி முனியாண்டவருக்கு ரூபாய் நோட்டு, நாணயங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மற்ற சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புபூஜை நடைபெற்றது.

    தஞ்சை வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோட்டில் உள்ள கேசவதிஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள மகி‌ஷாசுரமர்த்தினி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கேசவதிஸ்வரர், ஞானம்பிகைக்கும் முத்துஅங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    தஞ்சையை அடுத்த வடவாறு பிருந்தாவனத்தில் உள்ள ராகவேந்திரர் கோவில், தஞ்சை சாய்பாபா கோவில், பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், திட்டை வசி‌‌ஷ்டேஸ்வரர் கோவில், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோவில், மேலவீதி சங்கரநாராயணசாமி கோவில், மூலைஅனுமார் கோவில், வெண்ணாற்றங்கரை கோடியம்மன்கோவில், கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில், நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோவில், மும்மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா வழிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் பலர், அந்த வழிமுறைகளை கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    தஞ்சை விளார் சாலையில் உள்ள அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. மக்கள் நோய் நொடியின்றி, செல்வ செழிப்புடன் வாழ வேண்டி இந்த யாகம் நடந்தது. யாகத்தை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×