search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மரகத நடராஜர் சிலை
    X
    மரகத நடராஜர் சிலை

    நரம்பு தெரியும் மரகத நடராஜர் சிலை

    நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு மிகவும் நுணுக்கமாக வடித்தார், சித்தர் சண்முக வடிவேலர். நடராஜருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, அந்த நரம்புகளை நாம் காண முடியும்.
    ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற இடம் உள்ளது. இங்கு ஒரு மீனவர் வறுமையின் பிடியில் இருந்தாலும், தினமும் மங்களநாதரை வழிபடுவதை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் அவர் தனது பாய்மரப் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றார். அன்றைய தினம் சூறாவளிக் காற்று வீசியதால், அவரது படகு காற்றின் திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கடலுக்குள் இருந்த ஒரு பாறையில் மோதி நின்றது. சற்றுநேரத்தில் அந்தப் பாறையின் மேற்பகுதி உடைந்து அப்படியே சரிந்து படகின் மேல் விழுந்தது. மறு நொடியே சூறாவளி நின்றுபோனது. மீனவர், தன்னுடைய பலத்தை எல்லாம் கூட்டி, கரையை நோக்கி படகை செலுத்தினார். பல நாட்களுக்குப் பிறகு மண்டபம் பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

    அவரைக் காணாது பறிதவித்துப் போய் இருந்த குடும்பத்தினர், அப்போதுதான் மன நிம்மதி அடைந்தனர். கரைக்கு வந்ததும் தன் படகில் இரண்டு சிறிய பாறைகளும், ஒரு பெரிய பாறையுமாக இருந்த கற்களை எடுத்து தனது வீட்டின் முன்பாக படிக்கட்டு போல் போட்டார். மீனவரின் வீட்டிற்கு வந்து சென்றவர்களின் பாதங்கள் படப்பட, கற்களின் மீது இருந்த பாசிகள் அனைத்தும் அகன்று அந்த கற்கள் பச்சை வண்ணத்தில் ஒளி வீசத் தொடங்கியது. அது மரகதம் என்பதை உணர்ந்த மீனவர், தன்னுடைய வறுமையைப் போக்க இறைவன் அளித்த பரிசு என்று நினைத்தார். பின்னர் அதை அரசவையில் சேர்த்தார். அதற்கு மன்னன் பெரும் பரிசை மீனவருக்கு அளித்தான்.

    அந்த மரகதப் பாறையைப் பார்த்த மன்னன், அதில் நடராஜரின் சிலையை வடிக்க நினைத்தான். ஆனால் அவ்வளவு பெரிய மரகதப் பாறையில் நடராஜரின் உருவத்தைப் பொறிக்க பல சிற்பிகளும் தயங்கினர். அப்போது சித்தர் சண்முக வடிவேலர் என்பவர், மரகத நடராஜரை வடிக்க முன்வந்தார். அதன்படி ஐந்தரை அடி உயர நடராஜரை, ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில், திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு மிகவும் நுணுக்கமாக வடித்தார், சித்தர் சண்முக வடிவேலர். நடராஜருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, அந்த நரம்புகளை நாம் காண முடியும்.
    Next Story
    ×