என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சாம்பல் புதனையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சாம்பல் புதன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது வழக்கம். இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும் புனித நாட்கள் என்றும் கூறி வருகின்றனர்.

    இந்த காலத்தில் அனைவரும் நற்சிந்தனை, நல் ஒழுக்கம், நற்பண்பு, அடுத்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும் பகைமையை போக்கி நல் உறவு வைத்துக்கொள்ளுதல் மற்றும் புலால் உண்ணாமலும் இருந்து 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்படும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். உடல் ஆரோக்கியம் பெறும் என கருதப்படுகிறது. இந்த தவக்காலம் நேற்று தொடங்கியது. இந்த புனித நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது.

    சாம்பல் புதனையொட்டி நேற்று நாகை பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலிகள் நடந்தன. இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் காலை 6 மணிக்கு உதவி பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    திருப்பலியின் போது கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை எரித்து உருவாக்கப்பட்ட சாம்பலை கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவைபோல் பூசி ஆசீர்வாதம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவுவதால் சாம்பலை தலையில் தெளித்தும், கையில் வழங்கியும் ஆசிர்வாதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி நடந்தது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிறிஸ்தவர்களுக்கு நற்கருணையை நாக்கில் வழங்குவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கையில் வழங்கப்பட்டது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாக்களில் மாசித்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து வருகிற 28-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகின்றன.

    மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் ஊர்வலமாக ஒன்பது சந்திகளிலும் வலம் வந்து கோவிலை சேர்ந்தது.

    அதனைதொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் காலை 5.20 மணிக்கு சந்தோஷ்குமார் பட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரம் தர்ப்பை புல்லால் அலங்கரிக்கப்பட்டது. கொடி மர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மேலும், பூஜையில் கும்பத்தில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பட்டு ஆடைகளாலும், வண்ண மலர்களாலும் கொடிமர பீடம் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.35 மணிக்கு வேதமந்திரம் முழங்க, “அரோகரா” கோஷகத்துடன் சோடச தீபாராதனை நடந்தது. பின்னர் கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. நான்கு வகை வேதங்கள் பாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கோவில்களில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

    பின்னர் சாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. பின்னர் வேத பாராயணம், திருமுறைகள் ஓதப்பட்டு, நாதஸ்வரம் இன்னிசை முழங்க கோவில்களில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

    தொடர்ந்து நேற்றிரவு அதிகும்பேஸ்வரர் கோவிலில் 10 நாதஸ்வர, மேள கலைஞர்களின் இன்னிசை முழக்கத்துடன் பஞ்சமூர்த்திகள் இந்திர விமானத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து 63 நாயன்மார்கள் வீதியுலாவும், 21-ந் தேதி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும். 23-ந் தேதி வெண்ணெய்த்தாழி அலங்காரமும், 24-ந் தேதி காலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    25-ந் தேதி மாலை அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 4 கோவில்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 26-ந் தேதி மகாமகம் குளத்தில் மதியம் 12.30 மணிக்கு மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது. அப்போது குளத்தின் நான்கு கரைகளிலும் பக்தர்கள் புனித நீராட உள்ளனர். அந்த நேரத்தில் 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவாக புறப்பட்டு மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது.

    இதேபோல் கும்பகோணம் ஆதிவராக பெருமாள், சக்கரபாணி சாமி, ராஜகோபால சாமி உள்ளிட்ட வைணவ கோவில்களில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை விழா கொடியேற்றப்படுகிறது. வருகிற 21-ந் தேதி கருட வாகனங்களில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், 26-ந் தேதி மாசிமகத்தன்று காலை சக்கரபாணி கோவில் தேரோட்டமும், அதே நாளில் சாரங்கபாணி கோவில் பெருமாள் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    விரதம் இருந்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    பெரும்பாலும் ஆன்மீக வழிபாடுகளில் பெரிதாக தேங்காய் தீபம் இடம் பெறுவது இல்லை. ஏனெனில் தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்ற மாட்டார்கள். ஒரு சில பிரச்சினைகளை போக்கவே தேங்காய் தீபம் ஏற்றப்படுகின்றது.

    இருப்பினும் விரதம் இருந்து இத்தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் விரதம் இருந்து வீட்டின் பூஜை அறையில் சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள்.

    வேலை இல்லாதவர்கள் வேலை கிடைக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், அம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு விரதம் இருந்து இரண்டு தேங்காய்களை உடைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

    தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்துவது கிடையாது. விரதம் இருந்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கவும், தொழில் வளம் சிறக்கவும், நல்ல வரன் அமையவும், வேண்டுதல்கள் விரைவாகவும் பலிக்கும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க, 20-ந்தேதி மாலை 3 மணியளவில் காலியாக உள்ள அறைகளின் விவரம் ஆன்லைன் மூலமாக ெவளியிடப்படுகின்றன.

    எனவே அறைகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாட்களில் திருமலை, திருப்பதிக்கு வந்து, தாங்கள் முன்பதிவு செய்த அறைகளில் தங்கி ஓய்வெடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் தடைப்பட்ட திருமணம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சீலி நீலிவனநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இக்கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் தடைப்பட்ட திருமணம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். மேலும், இங்கு எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது.

    இதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் மதவேறுபாடுகளின்றி தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கல்வாழைக்கு பரிகாரம் செய்தும், எமனை தரிசனம் செய்து விட்டும் செல்வார்கள்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக கோவிலில் பரிகாரம் மற்றும் பூஜைகள் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    இதன் காரணமாக திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு நேற்று திருமணம் ஆகாத ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் வந்து பரிகாரம் செய்து விட்டு சென்றனர். பல மாதங்களுக்குப் பிறகு கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்ததும் கல்வாழை பரிகாரம் செய்ததும் பக்தர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    மாசி மாதத்தில் (பிப்ரவரி - மார்ச்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    15.2.2021 திங்கள் சதுர்த்தி உத்திரட்டாதி சித்த காலை 6-7.30

    22.2.2021 திங்கள் தசமி மிருகசீர்ஷம் அமிர்த காலை 6-7.30

    24.2.2021 புதன் துவாதசி புனர்பூசம் சித்த காலை 9-10

    25.2.2021 வியாழன் திரயோதசி பூசம் அமிர்த காலை 10.30-11.30

    3.3.2021 புதன் பஞ்சமி சுவாதி சித்த காலை 9-10

    12.3.2021 வெள்ளி சதுர்த்தசி சதயம் சித்த காலை 6-7.30
    குடும்ப அமைப்பு வலிமையாக அமையும்போது சமூக அமைப்பும் வலிமையாக அமையும். குடும்ப அமைப்பு வலுவிழக்கும்போது சமூக அமைப்பும் வலுவிழந்துவிடும். ஆகவேதான் குடும்ப அமைப்புக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
    குடும்பம் எனும் செங்கற்கள் மூலமாகவே சமூகம் எனும் கட்டிடம் கட்டப்படுகிறது. அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரமாகவும் குடும்பமே அமைகிறது. குடும்ப அமைப்பு வலிமையாக அமையும்போது சமூக அமைப்பும் வலிமையாக அமையும். குடும்ப அமைப்பு வலுவிழக்கும்போது சமூக அமைப்பும் வலுவிழந்துவிடும். ஆகவேதான் குடும்ப அமைப்புக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

    இஸ்லாமிய வாழ்வின் அடித்தளமே குடும்பம்தான். குடும்பத் தலைவனும் தலைவியும் மார்க்கம் காட்டும் பாதையில் நடக்கும்போது அது இஸ்லாம் விரும்பும் லட்சியக் குடும்பமாக அமையும். சிறந்த குடும்பங்கள் உருவாகாத நிலையில் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியாது.

    இலக்கை நோக்கிய குடும்பம்

    இறைவன் உருவாக்கிய குடும்பம் எனும் அமைப்பு அவனது வழிகாட்டலுக்கும் திருப்திக்கும் ஏற்றவாறு இவ்வுலகில் செயல்பட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.

    மக்காவில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக வாழ்ந்துகொண்டிருந்த இறைநம்பிக்கையாளர்களின் ஆன்மிக வாழ்வு எவ்வாறு அமைந்து இருந்தது என்பதை திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் பிரதிபலிக்கிறது:

    “மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள். எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக”. (திருக்குர்ஆன் 25:74)

    அன்றைய மக்கத்து முஸ்லிம்களின் லட்சியம் நீண்டதாகவும், விசாலமானதாகவும் இருந்துள்ளது. தமது வாழ்நாளில் குடும்பத்தினர் மூலம் அடையும் கண்குளிர்ச்சியில் மட்டும் அவர்கள் திருப்தி அடையவில்லை. மாறாக தங்களது மறைவுக்குப் பிறகு வரவிருக்கும் முஸ்லிம் சந்ததிகளுக்குப் பொறுப்பேற்கும் தலைமைத்துவத்தையும் கேட்கிறார்கள்.

    நபிமார்கள் தங்களது குடும்ப விஷயத்தில் எவ்வளவு தூரம் கவனம் செலுத்தியிருந்தனர் என்பதை ஆரம்ப கால அத்தியாயங்களில் அல்லாஹ் விவரிக்கின்றான்:

    “இப்ராஹீம் (அலை) அவர்கள், என் இறைவா! தொழுகையை நிலைநிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக! என் வழித்தோன்றல்களிலிருந்தும் (தொழுகையை நிலைநாட்டுபவர்களை) தோற்றுவிப்பாயாக!” (திருக்குர்ஆன் 14:40) என்று பிராத்தனை செய்பவராக இப்ராஹீம் (அலை) அவர்கள் இருந்துள்ளார்.

    அவரது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களைக் குறித்து குறிப்பிடும்போது, “மேலும், அவர் தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறு தம்முடைய குடும்பத்தாரைப் பணிப்பவராக இருந்தார்” (19:55) என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

    அதே பரம்பரையில் வந்த நமது நாயகம் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் விடுக்கும் வேண்டுகோளைப் பாருங்கள்: “மேலும், தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தார்க்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதனை முறையாகக் கடைப்பிடிப்பீராக!”. (திருக்குர்ஆன் 20:132)

    பெண்களை விட்டுவிட்டு ஆண்களைத் தீண்டும் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழ்ந்திருந்த ஒரு சமூகத்திற்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டவர் லூத் (அலை) அவர்கள். இரண்டு பெண் பிள்ளைகள் அவருக்கு. அல்லாஹ்விடம் அவர் தொடர்ந்து இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றார்: “என் இறைவனே! என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் இவர்களின் தீவினைகளிலிருந்து காப்பாற்றுவாயாக!” (திருக்குர்ஆன் 26:169)

    தமது குடும்பத்தினரை அந்த கேடுகெட்ட இழி செயலில் இருந்து காப்பாறுமாறு அல்லாஹ்விடம் அவர் பிரார்த்தனை புரிகின்றார் எனில் தமது குடும்பம் குறித்து அவர் எந்த அளவு கவலை கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது.

    இஸ்லாத்தின் எழுச்சிக்காக உழைக்கும் குடும்பம்

    மூஸா (அலை) அவர்களுக்கு தூதுத்துவம் வழங்கப்பட்டபோது, அல்லாஹ்விடம் அவர் விடுத்த முதல் வேண்டுகோள் என்ன தெரியுமா?

    அதனை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், என் குடும்பத்தாரிலிருந்து ஒருவரை என்னுடைய சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக நியமிப்பாயாக; அவரைக் கொண்டு என் கையை வலுப்படுத்துவாயாக! மேலும், என் பணியில் அவரை துணைவராக்குவாயாக!” (20:29-32)

    மூஸா (அலை) அவர்கள் குழந்தையாக இருந்தபோது அவரைப் பாதுகாப்பதற்கும், தயார்படுத்துவதற்கும் அவரது தாயாரும் சகோதரியும் அளித்த பங்களிப்புகள் குறித்து திருக்குர்ஆனின் 28 வது அத்தியாயம் (வசனங்கள் 10-13) விரிவாக விளக்குகிறது.

    ஆனால் இன்றைய குடும்பங்களில் உள்ள கணவன், மனைவி, பிள்ளைகள் அனைவருமே மேற்குலகின் சிந்தனைத் தாக்கத்தால் பதிக்கப்படுகின்றனர். சர்வசாதாரணமாக மண விலக்கு, மாற்று மதத்தவர்களைத் திருமணம் செய்தல், பெற்றோர் பிள்ளை உறவில் விரிசல், ரத்த உறவுகள் பேணப்படாமை, உலக லாபங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட துணைகளைத் தெரிவு செய்தல், பிள்ளை வளர்ப்பில் கோளாறு முதலான பல அம்சங்கள் இன்றைய குடும்ப வாழ்வை சிதைத்து வருகின்றன.

    இப்பிரச்சினைகளை மிகச்சரியாக இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகள் குறித்து, சமூகத் தலைமைகள் சிந்திப்பது காலத்தின் கட்டாயமும் மார்க்கத்தின் கடமையும் ஆகும்.

    வலிமையான குடும்பத்தின் லட்சியம்

    பிள்ளைகளுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கொடுப்பது குடும்பத்தின் மற்றுமொரு முக்கிய நோக்கமாக உள்ளது. பிள்ளைகள், அல்லாஹ் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் அமானிதம். அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கொடுப்பது நமது தலையாய கடமை. இல்லையேல் இவ்வுலகிலும் மறுமையிலும் பெரும் நஷ்டம் ஏற்படும்.

    அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 66:6)

    பிள்ளைகளிடம் ஏழு வயதில் தொழச் சொல்லுமாறு ஏன் இஸ்லாம் வலியுறுத்துகிறது? ஏனெனில் அந்த பருவத்தில் இருந்தே அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதால்.

    நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத சப்தமி நடைபெற இருப்பதை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ரத சப்தமி, பவித்ரோற்சவம், வசந்தோற்சவம், வருடாந்திர பிரம்மோற்சவம் என ஆண்டுக்கு 4 முறை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத சப்தமி நடைபெற இருப்பதை முன்னிட்டு நேற்று காலை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

    அதன் ஒரு பகுதியாக கோவில் சுவர்கள், மேற்கூரை, தரிசன பாதை, உயர்மேடைகள், பூஜை பொருள்கள், கருவறை விமானம், கதவுகள் உள்ளிட்ட அனைத்தும் ஸ்ரீசூரணம், நாமகட்டி, கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், குங்குமம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி உள்ளிட்ட பொருள்களால் சுகந்த திரவிய கலவை செய்து, அதனை ஊழியர்கள் அனைத்து இடங்களிலும் பூசி சுத்தம் செய்தனர்.

    இதையொட்டி, காலை 6 மணிமுதல் 9 மணி வரை தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
    மிகவும் உக்கிரமான பிரத்தியங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவளும் கூட. மனித உடலும் சிம்ம முகமும் கொண்டு தீயதையெல்லாம் அழிக்கவல்லவளாகத் திகழ்கிறாள் பிரத்தியங்கிரா தேவி.
    பிரத்தியங்கிரா தேவிக்கு சில கோயில்களில் சந்நிதி அமைந்திருக்கிறது. மிகவும் உக்கிரமான பிரத்தியங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவளும் கூட. மனித உடலும் சிம்ம முகமும் கொண்டு தீயதையெல்லாம் அழிக்கவல்லவளாகத் திகழ்கிறாள் பிரத்தியங்கிரா தேவி. ஆவணி செவ்வாயில், பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள்.

    ஸ்ரீஓம் மகாபீட பிரத்தியங்கிரா தேவ்யை நம:
    ஓம் ஸ்ரீமகாபீட பத்ரகாளி தேவ்யை நம:

    எனும் மந்திரத்தைச் சொல்லி பிரத்தியங்கிரா தேவியை வழிபடுங்கள். செவ்வாய்க்கிழமையன்று ராகுகாலம் மாலை 3 முதல் 4.30 மணிவரை. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி அலங்கரியுங்கள்.

    ஓம் அபரஜீதாய வித்மஹே பிரத்யங்கிராய தீமஹி
    தந்நோ உக்ர ப்ரசோதயாத்

    எனும் பிரத்தியங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி ஜபியுங்கள். ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி.

    செவ்வாய்க்கிழமையன்று என்றில்லாமல், எந்தநாளும் இந்த பிரத்தியங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி பாராயணம் செய்து வழிபடுங்கள்.

    அதேபோல,

    ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய க்ருதயாம் க்ரூராம் வதுரமிவே
    ஹ்ராம்தம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது

    எனும் பிரத்தியங்கிரா தேவியின் மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். இதைச் சொல்லச் சொல்ல, எம பயம் விலகும். மனோதிடம் பெருகும். ஆரோக்கியம் கூடும். முகத்தில் தேஜஸ் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

    ஆவணிச் செவ்வாயில், பிரத்தியங்கிராதேவியை மனதார வழிபடுங்கள். மங்காத புகழையும் செல்வத்தையும் தந்தருள்வாள் தேவி.
    காரைக்கால் நித்ய கல்யாணப்பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    காரைக்கால் பாரதியார் சாலையில் நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக ஸ்ரீதேவி, பூதேவியுடன் நித்ய கல்யாணப்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் கொடிகம்பம் அருகில் எருந்தளினார். பின்னர் மேள, தாளம் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணை தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், கோவில் முன்னாள் தனி அதிகாரி ஆசைத்தம்பி, மாவட்ட இந்து முன்னணி தலைவர் விஜயன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 24-ந் தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் நிகழ்ச்சியும், 27-ந் தேதி பெருமாள் திருப்பல்லக்கில் திருமலைராயன்பட்டினம் மாசிமக விழாவில் பங்கேற்கும் வண்ணம் வீதியுலாவும் நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்பத்திருவிழாவும் நடக்க இருக்கிறது.
    கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பூச்சாட்டு விழா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 3-ந் தேதி நடக்கிறது.
    கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 8.30 மணி அளவில் பூச்சாட்டு விழா நடந்தது. இதற்காக பூக்கம்பம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், அந்த கம்பம் கோவிலில் இருந்து வைசியாள் வீதி, கற்பககவுண்டர் வீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலை வந்தடைந்தது.

    அங்கு மீண்டும் பூஜை செய்யப்பட்டு கம்பம் நடப்பட்டது. அதற்கு ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். இதில் கோவில் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி, உதவி ஆணையர் விஜயலட்சுமி, ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 22-ந் தேதி கிராம சாந்தி, 23-ந் தேதி இரவு 7.30 மணிக்கு கொடியேற்றம், அக்னிசாட்டு நடைபெறுகிறது. 24-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். 2-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 3-ந் தேதி மதியம் 2 மணியளவில் நடக்கிறது.
    ×