என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தற்போது கொரோனா 2-வது அலை தணிந்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 23-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கொரோனா 3-வது அலை அச்சுறுத்தலும் நிலவியபடி இருக்கிறது. 3-வது அலையை எதிர்கொள்ள 13 பேர் கொண்ட செயல் திட்டக்குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது.

    கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய சந்தைகள், தெருக்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

    ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று காலையில் அமலுக்கு வந்தது. நிறைய பக்தர்கள் ஆலயத்துக்குள் செல்ல முடியாததால் வெளியில் வாசலில் நின்று வழிபட்டு சென்றனர்.

    கோப்புப்படம்

    இந்தநிலையில் நாளை ஆடி அமாவாசைக்கான வழிபாடுகள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளன. கடலோர பகுதிகளிலும், ஆலயங்கள் அருகில் உள்ள நீர்நிலை பகுதிகளிலும் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பெரிய அளவில் நடைபெறும்.

    இதேபோன்று வருகிற 11-ந் தேதி ஆடிப்பூரம் வருகிறது. அன்றைய தினம் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் திரள வாய்ப்பு உள்ளது.

    கொரோனா பரவல் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பூரம் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் அதிக அளவில் திரள்வதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் இரு நிகழ்ச்சிகளுக்கும் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசை மற்றும் 11-ந் தேதி (புதன்கிழமை) ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), ஆடி அமாவாசை மற்றும் 11-ந் தேதி (புதன்கிழமை) ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்நாட்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.


    இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் ஆடி அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அடி அமாவாசை அன்று விரதம் இருந்து நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல்வேறு சிறப்புகளை பெறலாம்.

    ஆடி அமாவாசை அன்று ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே எளிய முறையில் வழிபாடு செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

    அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.

    விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.

    முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

    ஆடி அமாவாசை  விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    சாந்தோம் தேவாலயத்தில் ஞாயிற்றுகிழமை வழிபாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் நாளை தேவாலயம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை :

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு வருகிற 23-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

    அதன் அடிப்படையில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் அனைத்து மத தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அரசு தடை விதித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பல முக்கிய கோவில்கள் மூடப்பட்டன. ஏற்கனவே தென் மாவட்டங்களில் உள்ள கோவில்கள், தேவாலங்கள் மூடப்பட்டுள்ளன.

    கூட்டம் அதிகம் இல்லாத சிறிய கோவில்கள் மட்டும் திறந்து இருந்தன. சென்னை உட்பட வட மாவட்டங்களில் கோவில்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டு இருந்தன.

    மாங்காடு கோவில், திருத்தணி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கோவில்கள் தரிசனம் நடைபெற்று வந்தது.

    தற்போது அரசு அறிவித்த வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றும் வகையில் கோவில்கள் மூடப்படுகின்றன. மயிலாப்பூர் சாய்பாபா கோவில் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சன்னதிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் வெளியில் நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டப்படி சென்றனர். பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில் இன்றும், நாளையும் தரிசனம் கிடையாது என அறிவித்து கோவிலை மூடிவிட்டனர்.

    திங்கள் கிழமை தான் தரிசனத்திற்கு அனுமதி என்று அறிவித்துள்ளனர். மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவில், முண்டகக்கண்ணியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சன்ன திக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டம் அதிகம் சேரும் கோவில்களை மூட வேண்டும் என்று அரசு அறிவித்ததையொட்டி கோவில் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    சாந்தோம் தேவாலயத்தில் ஞாயிற்றுகிழமை வழிபாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் நாளை தேவாலயம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வழிபாடுகளை காண வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் பல இடங்களில் உள்ள முக்கிய தேவாலயங்களும் நாளை மூடப்பட்டு இருக்கும் என்று சென்னை மயிலை மறைமாவட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மூடப்பட்டு இருக்கும் கோவில்கள், தேவாலயங்களுக்கு வரும் மக்கள் வாசலில் நின்று சாமிதரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
    ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 6-வது நாளான நேற்று பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வழக்கமாக ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் அம்பாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி ரத வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனாபரவல் கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதோடு திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. அதனால் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலின் உள்ளேயே நடைபெற்று வருகிறது. ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 4 நாட்களாக ராமேசுவரம் கோவிலில் அம்பாள் தங்க பல்லக்கில் உலா நிகழ்ச்சி நடத்தப் படாமல் இருந்துவந்தது.

    இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மற்றும் பக்தர்கள் கோவில் இணை ஆணையரிடம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் அம்பாள் தங்கப்பல்லக்கில் உலா வரும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணி அளவில் பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாளுடன் கூடிய தங்கப்பல்லக்கை சீர்பாத பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சுமந்து 3-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.

    அப்போது விநாயகர், சண்டிகேசுவரர், முருகப்பெருமான் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் அம்பாளுக்கு முன்பாக மரக்கேடயத்தில் 3-ம் பிரகாரத்தில் உலா வந்தனர். நிகழ்ச்சியில் கோவிலின் இணை ஆணையர் பழனிக் குமார், பேஷ்கார்கள் கமலநாதன், கலைச்செல்வன், அண்ணாதுரை, செல்லம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பச்சை வேட்டி, துண்டு, வெள்ளை சட்டை, மதிப்பிழந்த 500 ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் வைத்து பூஜிக்கப்படுகிறது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

    சுப்பிரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக்கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு பார்த்து அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

    இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் வேறு ஒரு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா (வயது 34) என்ற பக்தரின் கனவில் உத்தரவான பச்சை வேட்டி, துண்டு, வெள்ளை சட்டை, மதிப்பிழந்த பழைய 500 ரூபாய் 2 நோட்டுகள், 2 ரூபாய், 1 ரூபாய் நோட்டு மற்றும் 5 ரூபாய் என மொத்தம் ரூ.1008 மதிப்பிலும், 2 ராசி கட்டங்கள், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை பாக்கு, பூ ஆகிய பொருட்கள் நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி முதல் பாம்பு பஞ்சாங்கம், ஆதார் அட்டை, மணி, 10 ரூபாய் நாணயங்கள் (60 நாணயங்கள்) ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த விளம்பர பலகை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதில் 2 அர்ச்சகர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் பிரசித்தி பெற்ற கோவில்களில் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) கண்ணன் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து அர்ச்சகர்கள் சோமசுந்தரம், தில்லை மருதவாணன் ஆகியோர் தமிழில் அர்ச்சனை செய்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த விளம்பர பலகை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதில் 2 அர்ச்சகர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர். முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் மாசாணியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்களுக்கு வழங்குவதற்கு தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த அன்னதானத்தை ஆய்வு செய்தார்.
    வாரத்தின் கடைசி 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் நாகை மாவட்டத்தில் நேற்று அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன.
    கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிபாட்டுத்தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொது மக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது நிலவிவரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாவட்டத்திலுள்ள அனைத்து மத வழிப்பாட்டு தலங்களிலும் வாரத்தின் கடைசி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கு தரிசனம் செய்யவும், அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அந்தந்த மத ஆகம விதிகளின்படி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறுவதற்கு தடை ஏதுமில்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி பிரசித்தி பெற்ற நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சவுந்தரராஜ பெருமாள் கோவில், சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யயேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா, நாகூர் நாகநாதர் கோவில், நாகூர் பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நேற்று மூடப்பட்டன. இதனால் ஒரு சில பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்.

    நாகூர் தர்கா மூடப்பட்டதால் வெளியூர், மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆண்டவர் தர்கா அலங்கர வாசல், கால்மாட்டு வாசல், கீழக்கு வாசல் பகுதிகளில் வெளியில் நின்று பிரார்த்தனை செய்தனர்.
    பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி நேற்று அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ்முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 கோயில்களில் நேற்று "அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியகோவிலிலும் இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

    பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி நேற்று அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சாமி தரிசனம் செய்தனர். பெரியநாயகி அம்மன், வராகிஅம்மன், சுப்பிரமணியர், விநாயகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டன. மேலும் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. அதில் அர்ச்சனை செய்பவர்களின் பெயர், அவர்களது செல்நம்பர் இடம் பெற்றுள்ளது.

    மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று, நீதிமன்ற உத்தரவுப்படி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டது.

    மேலும் எல்லா கோவில் கருவறையிலும் தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகளும் போராடி வந்த நிலையில், நேற்று பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்யப்பட்டதை அனைத்து அமைப்பினரும் வரவேற்றுள்ளனர்.

    இது குறித்து பக்தர்கள் கூறும்போது, சாமிக்கு தமிழில் அர்ச்சனை செய்யும்போது நமக்கும் எளிதாக புரிந்தது. இந்த திட்டத்தை வரவேற்கிறோம் என்றனர். அர்ச்சகர்கள் கூறும்போது, தமிழில் சங்கல்பமும், அர்ச்சனையும் சாமிகளுக்கு செய்யப்படும். பக்தர்கள் தங்களது விருப்பபடி தமிழ், சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம் என்றனர்.

    இதேபோல் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    காரைக்காலில் 135 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயத்தின் 280-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    காரைக்காலில் 135 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயம், காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ளது. இந்த ஆலயத்தின் 280-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மாதா கொடியை, பங்குத்தந்தை அந்தோணிராஜ் அடிகளார் தலைமையில், குறைவான பங்கு மக்களால், சமூக இடைவெளியுடன் ஊர்வலமாக சுமந்துவரப்பட்டது. அதுசமயம் பங்கு மக்கள் கொடிக்கு மலர் தூவி தொட்டு வணங்கினர். பின்னர் மாலை 6.30 மணிக்கு மாவட்ட பங்குத்தந்தை அந்தோணிராஜ் கொடியை ஏற்றி வைத்தார்.

    விழாவையொட்டி குறைவான பக்தர்களுடன் தினசரி திருப்பலி நடைபெறும். விழாவின் 10-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, பெரிய தேர்பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கொரோனா பரவல் காரணமாக பொதுதரிசனத்துக்கு அரசு தடை விதித்து உள்ளதால் நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களின் வாசல் முன்பு நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் 3-வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. ஆடி மாதம் கோவில்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 8-ந்தேதி முதல் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன், சிவகங்கை மதுரை முக்கு ரோட்டில் உள்ள காளியம்மன் கோவில், காரைக்குடி சிவன் கோவிலில் அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் சிலர் கோவிலுக்கு வெளியே அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். கோவில் வாசல் முன்பு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், போதிய சமூக இடைவெளியில் நிற்கும்படி கோவில் நிர்வாகத்தினர் அவ்வப்போது அறிவிப்பு செய்தனர்.

    காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் முன்பு நின்று ஏராளமான பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். சமூக இடைவெளி இன்றி பெண்கள் திரண்டு நின்றதால் அங்கு வந்த பெண் போலீஸ்காரர் ஒருவர், பெண் பக்தர்களிடம் சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

    சிங்கம்புணரி காரைக்குடி சாலையில் அமைந்துள்ள உப்பு செட்டியார் தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும் கொேரானா வைரஸ் தொற்று ஒழிய வேண்டியும் நேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் கோவில் முன்பு உள்ள மைதானத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் 108 திருவிளக்கு பூஜை நடத்தினர்.

    சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சித்தர் மலர் மாலைகளுடன் அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து நாடார் பேட்டையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில், வேட்டையின் பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.
    புதுவை நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.பெருவிழானையொட்டி நாள்தோறும் திருப்பலி மற்றும் மறையுரைகள் நடத்தப்படும்.
    புதுவை நெல்லித்தோப்பில் பிரசித்திபெற்ற புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 170-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பரிபாலகர் அருளானந்தம் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியேற்றம் நடந்தது. பெருவிழானையொட்டி நாள்தோறும் திருப்பலி மற்றும் மறையுரைகள் நடத்தப்படும்.

    முக்கிய நிகழ்ச்சியான பெருவிழா வருகிற 15-ந்தேதி மாலை நடக்கிறது. அன்றைய தினம் புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் அபீர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது.

    மறுநாள் கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் செய்து வருகின்றனர்.
    கோவை ராஜவீதியில் உள்ள மாகாளியம்மனுக்கு நேற்று கொண்டைக் கடலை, பயிறு, பாசிப்பருப்பு உள்ளிட்ட நவதானியங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
    தமிழ் மாதங்களில் அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று கோவையில் உள்ள கோனியம்மன், தண்டு மாரியம்மன், காட்டூர் முத்துமாரியம்மன், புலியகுளம் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கோவை ராஜவீதியில் உள்ள மாகாளியம்மனுக்கு நேற்று கொண்டைக் கடலை, பயிறு, பாசிப்பருப்பு உள்ளிட்ட நவதானியங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நவ தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பெரியமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவை ராஜூ செட்டியார் வீதியில் உள்ள வன பத்ரகாளியம்மனுக்கு பல்வேறு வகையான மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல் புலியகுளம் மாரியம்மன், பத்ர காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
    ×