என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பழனியில் முருகன் கோவில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை, உண்டியல் காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்திவிட்டு செல்கின்றனர். இதில் வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நெரிசலான பகுதிகளில் மக்கள் கூட அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2-ந்தேதி ஆடி கிருத்திகை நாளன்று கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பழனி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்றபடி வழிபட்டனர்.

    இந்தநிலையில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று பழனியில் முருகன் கோவில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    மேலும் வெளியூரில் இருந்து அதிகாலையிலேயே பழனிக்கு வந்த பக்தர்கள் கோவில் நுழைவு பகுதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல் வெளியூரில் இருந்து பழனிக்கு வந்து அறை எடுத்து தங்கியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.
    வேளாங்கண்ணியில் தடையை மீறி கடலில் பக்தர்கள் குளித்து வருகிறார்கள். இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் கட்டிடத்தின் அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 3-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மூடப்பட்டு உள்ளது. இதனால் வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் பேராலய வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தனர். இதனால் பேராலயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    வேளாங்கண்ணி கடற்கரையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரைக்கு செல்லும் வழியில் போலீசார் தடுப்புவேலி வைத்து அடைத்து கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். ஆனால் இந்த தடையை மீறி வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக குளித்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் இதை கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று அலங்கார நுழைவு வாசலில் நின்று பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதனையொட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையன்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    நேற்று ஆடி அமாவாசையொட்டி வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் அம்மனை வெளியே நின்று தரிசனம் செய்தனர். மேலும் சிலர் அலங்கார வளைவு நுழைவு வாசலில் பூட்டப்பட்டிருந்த கேட்டின் இரும்பு கம்பிகளின் மீது மாலைகளை அணிவித்து வாசல் முன்பு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

    சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் கோவில் வளாகம் மற்றும் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள படித்துறையில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் அலங்கார வளைவிலிருந்து நெல்லித்துறை பாலம் வரை காவல்துறையினரும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம் கெண்டையூர் ரோடு காமராஜ் நகரில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் உடனமர் அஷ்டதாரா லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி அமாவாசையை யொட்டி கோவில் நடை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து லிங்கேஸ்வரர் மற்றும் தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. மேலும் காலை 7 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    காரமடையில் புகழ்பெற்ற அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 2-ந்தேதி ஆடி கிருத்திகை நாளன்று கோவிலில் சாமி தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் காரமடை அரங்கநாத சுவாமி கோவில் பக்தர்கள் வாசலில் நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று அரங்கநாத சுவாமி கோவிலில் கேட் அடைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் நுழைவு பகுதியில் நின்று கற்பூரம் ஏற்றி சாமியை வழிபட்டு சென்றனர்.
    கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை நடைபெறவில்லை. இதனால் ஆலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
    தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் அனைத்து மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு வருகிற 23-ந் தேதி வரை தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தமிழகஅரசு தடை விதித்தது. ஞாயிற்றுக்கிழமைதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

    ஆனால் வழிபாட்டிற்கு தமிழகஅரசு தடை விதித்த காரணத்தினால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நேற்று நடைபெறவில்லை. இதனால் கிறிஸ்தவர்கள் வராததால் ஆலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயம், சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், தஞ்சை குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் பிரார்த்தனை நடைபெறவில்லை.

    சில ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் மிக குறைந்த அளவு வந்திருந்து வெளியே நின்று பிரார்த்தனை செய்துவிட்டு சென்றனர்.
    ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.
    தை, ஆடி அமாவாசைகளில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரை, ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஆடி, தை அமாவாசை நாட்களில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஆடி அமாவாசையான நேற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று காலையில் சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும், பைரவர் கோவில் கடற்கரையிலும் தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அப்பகுதியில் பக்தர்கள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. திருச்செந்தூர் தாலுகா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 8 நாட்களாக கோவில் வளாகத்துக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இன்று (திங்கட்கிழமை) முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
    கொரோனா அச்சம் காரணமாக ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் தரிசனம் மேற்கொள்ளவும், நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    ஒவ்வொரு மாதமும் வரும், அமாவாசையை விட ஆடி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியத்துவம் பெற்றது. இது மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஒரு உன்னதமான நாளாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது நம்முடைய பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

    அந்தவகையில் அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடந்து வருகிறது. நீர்நிலைகளில் நீராடி காலை உணவு உண்ணாமல் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை வைத்து வழிபடுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் கொரோனா தாக்கம் காரணமாக ஆடி அமாவாசையில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்தது. கூட்ட நெரிசல் ஏற்பட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு நேற்று தடை விதிக்கப்பட்டு இருந்தது. கோவில் அருகே உள்ள நீர்நிலைகளிலும் தர்ப்பணம் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், திருவான்மியூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் கடற்கரையில் தர்ப்பணம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். பல இடங்களில் கடற்கரையை மறைத்து தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    ஒரு சிலர் போலீசார் கண்ணில் படாமல் கடற்கரை மறைவான பகுதியில்தர்ப்பணம் கொடுத்த காட்சிகளை பார்க்க முடிந்தது. இதேபோல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் அருகேயும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கோவில்களில் வழிபாடு நடத்தவும், நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

    நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதவர்கள் தங்கள் வீடுகளில் முன்னோர்களின் படங்களை வைத்து வழிபாடு நடத்தினர். சமைத்த உணவை முதலில் காகத்திற்கு வைத்து வழிபட்டனர்.

    மெரினா கடற்கரைக்கு வந்த கார்த்திக் குடும்பத்தினர் கூறும்போது, ‘அரசின் அறிவிப்பு எங்களுக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளில் தடை விதிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது' என்றனர்.

    அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் அந்த வழியாக செல்லும் பாதைகளிலும் பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
    ஆடி அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி, தர்ப்பணம் பூஜை செய்து வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் பக்தர்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    பக்தர்கள் புனித நீராடுவதை தடுக்கும் வகையில் அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் அனைத்து பாதைகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டன. மேலும் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் அந்த வழியாக செல்லும் பாதைகளிலும் பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் ஆடி அமாவாசையான நேற்று பக்தர்கள் புனித நீராடி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று கடற்கரைக்கு செல்லும் பாதைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும், கடற்கரைக்கு செல்ல வந்த சுற்றுலா பயணிகளையும் போலீசார் திருப்பி அனுப்பினர். எனவே கன்னியாகுமரி கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை, திருச்சி அம்மா மண்டபம் பகுதியும் தடையின் காரணமாக நேற்று வெறிச்சோடியது.
    மிகவும் சக்தி வாய்ந்த இந்தத் துதியை முழு நம்பிக்கையுடன் 48 நாட்கள் பாராயணம் செய்து வந்தால் நல்ல மணமகள் கிடைப்பாள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
    கந்தர்வராஜோ விஸ்வாவஸு
    மமாபிலிஷித கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா

    கந்தர்வர்களுக்கு அரசனான விஸ்வாவஸுவே: என் மனதிற்குப் பிடித்த கன்னிப் பெண்ணை எனக்கு மனைவியாகத் தந்தருள்புரிய வேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த இந்தத் துதியை முழு நம்பிக்கையுடன் 48 நாட்கள் பாராயணம் செய்து வந்தால் நல்ல மணமகள் கிடைப்பாள்.
    ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம்.
    நம் முன்னோர்கள், நம் வாழ்வின் ஏணிகள். விதைகள். அவர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்கக்கூடாது. அப்படி நன்றி சொல்லும் விஷயம்தான் தர்ப்பணம், வழிபாடு என்பதெல்லாம்!

    ஆத்மாவில் பாவம் செய்த ஆத்மாக்கள், புண்ணியம் செய்த ஆத்மாக்கள் உண்டுதானே. ஆத்மாக்களும் பாவம் புண்ணியம் என்று இரண்டும் உண்டுதான். அந்த பாவ புண்ணியங்களைக் கொண்டுதான், பித்ரு லோகத்தில் அவர்களுக்கான இடம் அமையும் என்பதாகச் சொல்கிறது சாஸ்திரம்.

    அமாவாசை முதலான நாளில், முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யும்போது, அது நம் முன்னோர்களைப் போய்ச் சேரும். அதனால் அவர்கள் செய்த பாவங்களின் கெடுபலன்கள் குறையும். புண்ணியங்கள் பெருகும். நாமும் முன்னோரை வணங்கிய பலனைப் பெறலாம். முன்னோருக்குப் புண்ணியம் சேர்த்த, பாவங்களைக் குறைத்த புண்ணியத்தைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    தினமும், முன்னோரை வழிபடவேண்டும். நம்மை இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்த முன்னோர்களை தினமும் வழிபடுவதில் தப்பே இல்லை. அதேசமயம் முன்னோர் வழிபாட்டை வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்யவேண்டும், எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

    அதாவது, மன்வாதி 14 நாட்கள், யுகாதி 4 நாட்கள், மாதப் பிறப்பு 12 நாட்கள், அமாவாசை 12 நாட்கள், மஹாளய பட்சம் 16 நாட்கள், வியதீபாதம் 12 நாட்கள், வைத்ருதி 12 நாட்கள், அஷ்டகா 4 நாட்கள், அன்வஷ்டகா 4 நாட்கள், பூர்வேத்யு 4 நாட்கள் என்று தர்ப்பணம் செய்யவேண்டும்.

    தர்ப்பணம்

    சரி... யாரெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்? செய்யக்கூடாது?

    தாயும் தந்தையும் இல்லை என்றிருப்பவர்கள் அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். நம் தாய் தந்தையரைத் தவிர, முந்தைய முன்னோர்களை நமக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை மனதால் நினைத்து, அவர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசை தினங்கள். முக்கியமாக... ஆடி அமாவாசையில் வணங்கவேண்டும்.

    அமாவாசை நாளில், ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம்.

    இன்றைய தினம் 8.8.2021 ஞாயிற்று கிழமை ஆடி அமாவாசை. முன்னோர்களை வணங்குவோம். அவர்களுக்கு புண்ணியங்களைக் கொடுத்து, புண்ணியங்களைப் பெறுவோம். நம் சந்ததியினருக்கும் புண்ணியங்களைச் சேர்த்துக் கொடுப்போம்.

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் நடந்து வந்த வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று இரவு பவித்ர பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது. உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று சீதா, கோதண்டராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு ஸ்நாபன திருமஞ்சனம்,. சாத்துமுறை, ஆஸ்தானம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு பவித்ர பூர்ணாஹூதியுடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.

    உற்சவத்தில் கோவில் துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்காராஜு, ஆகம பண்டிதர் வேதாந்தம் விஷ்ணுபட்டாச்சார்யா, கோவில் சூப்பிரண்டு ரமேஷ், கோவில் ஆய்வாளர்கள் ஜெயக்குமார், முனிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    தொடர்ச்சியாக வரும் மூன்று பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று, ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமண தடை நீங்கி உடனடியாக நல்ல வரன் அமையும்.

    ஒருவரது ஜாதகத்தில் புனர்பூ தோஷம் இருந்தால் அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி பின்பு திடீரென திருமணம் நின்று விடும் அல்லது இரு வீட்டாரும் நல்ல மனநிலையில் இருந்து சுபகாரிய பேச்சுவார்த்தை நடை பெற்று திடீர் என்று ஏதாவது ஒரு பிரச்சனை மற்றும் காரணத்தால் திருமணம் தடைபெறுவது, திருமணத் தேதி குறித்த பின்பு இருவீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டு திருமணம் நிற்பது மேலும், திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவது போன்றவை நிகழும்.

    திருமணம் நடைபெற்றாலும் திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்குள் யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்படுவது, தீராத வியாதியால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுவது, இரு தார யோகம் ஏற்படுவது, திருமணம் செய்து சில நாட்களிலேயே பெண் தன் தாய் வீட்டிற்கு வந்து விடுவது, கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் சீக்கிரமாகவே இறந்துவிடுவது போன்ற துர்சம்பவங்கள் ஏற்படும்.

    புனர்பூ தோஷத்துக்கான பரிகாரங்கள்

    புனர்பூ ஜாதக அமைப்பு கொண்டவர்கள் திருமணஞ்சேரி தலத்திற்கு சென்று முறையாக பரிகாரம் செய்தால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம். குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வரலாம். முடி காணிக்கை செலுத்துவது நல்லது.

    தொடர்ச்சியாக வரும் மூன்று பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று, ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமண தடை நீங்கி உடனடியாக நல்ல வரன் அமையும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று 5-ம் நாள் திருவிழாவில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஆடிப்பூர திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டு கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அரசு உத்தரவுப்படி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீதி உலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவிலுக்குள்ளேயே ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

    இன்று 5-ம் நாள் திருவிழாவில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை நிகழ்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
    ×