என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    மதுரை கோ.புதூர் லூர்து அன்னை ஆலய கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி 12-ந்தேதி நடக்கிறது.
    மதுரை கோ.புதூர் பகுதியில் புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. பங்குத்தந்தை தாஸ் கென்னடி முன்னிலை வகித்தார். திருச்சி சலேசிய மாநில உதவித் தலைவர் அருள்மாறன் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்து விழாவினை தொடக்கி வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து "குடும்பம் நம்பிக்கையின் அடித்தளம்" என்ற தலைப்பில் ஜெபமாலை நிகழ்ச்சி. ஆடம்பர திருப்பலி உள்ளிட்டவைகள் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் உதவி பங்குத்தந்தைகள் டேவிட், ஜெரால்டு, பிரபு, நோயல்ராஜ், சலேசியர்கள், அருள்சகோதரிகள், பங்கு அருள்பணி பேரவை, பங்கு இறைமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவை தொடர்ந்து ஒவ்வொரு நாளும், பல்வேறு தலைப்புகளில் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 11-ந்தேதி நற்கருணை பவனி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர் பவனி விழா வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு அன்னையின் தேர் பவனியை தொடங்கி வைக்கிறார். திருச்சி சலேசிய மாநில தலைவர் அகிலன் தலைமை தாங்குகிறார்.

    மறுநாள் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
    ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலய சப்பர பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயத்தில் மறைசாட்சி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் மாலையில் அருட் தந்தையர்களால் நவநாள் திருப்பலி, மறையுரை நிகழ்த்தப்பட்டது.

    திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியை அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் அருட் தந்தையர்கள் நிறைவேற்றினர்.அருட்தந்தை அருள் மறையுரை நிகழ்த்தினார்.

    சப்பர பவனியை அருட்தந்தை பெலிக்ஸ் அர்ச்சித்து தொடங்கி வைத்தார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித அருளானந்தர், ஆரோக்கியமாதா ஆகியோர் பவனியாக வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர். இதில் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி இயேசு சபை குருக்கள் மற்றும் ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தல அருட்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித அருளானந்தரின் சொரூபம் தாங்கிய தேருடன் பாதயாத்திரையாக வந்து திருவிழாவில் கலந்து கொண்டனர்.விழா நிறைவாக ஓரியூர் திருத்தல அதிபர் அருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை தலைமையில் கொடியிறக்கம் நடைபெற்றது.
    நாம் எல்லாரும் மரணமே நமக்கு வரக்கூடாது என்று விரும்புவோம், ஆனால் இயேசுவோ, மரணம் அடைய வேண்டும் என்றே விரும்பி அதற்காகவே பிறந்தவர்.
    இயேசுவுக்கு அன்பானவர்களே.. சமீபத்தில் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடிய நாம், கிறிஸ்துவின் மனநிலையோடு இருப்பதே முக்கியம். ‘கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையராவீர்கள்’ என்று, உரோமையர்; 8:10 சொல்லுகிறது. கிறிஸ்துவுக்குள் இருந்த மனநிலை உங்களுக்குள்ளும் இருக்கட்டும் என்று வேதம் சொல்லுகிறது. இயேசு இந்த உலகில் வாழ்ந்தபோது அவருடைய வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியது. இந்த நாளில் அவற்றைக் குறித்து சிந்தித்து, அவரைப் போல வாழ முயற்சி செய்வோம்

    இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவரும், இந்த உலகம் மிகவும் நல்லவர்கள், நேர்மையானவர்கள், பணக்காரர்கள், படித்தவர்கள் என்று யாரை அடையாளம் காட்டுகிறதே, அவர்களுடனே நட்பு பாராட்ட விரும்புகிறோம், ஆனால் இயேசுவோ, நீதீமான்களை அல்ல பாவிகளையே தேடிவந்தேன் என்று சொல்லுகிறார்; மேலும் (மத்தேயு 9:11) இதைக்கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து உங்கள் போதகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் உண்பதேன் என்றனர் என்ற வார்தையின் படி, அவர் பல காரணங்களால் பிறரால் புறக்கணிக்கப்பட்டவர்களை தேடி சென்று அவர்களையும் இறைவனின் பார்வைக்கு உகந்தவர்களாய் உயர்த்தி வைத்தார்.

    நாம் எப்போதும் சுயநலத்தோடு நம்மைப்பற்றி மட்டுமே சிந்தித்து, கொண்டு இருக்கிறோம். ஆனால் தனது பிறப்பு முதல் இறப்பு மட்டுமல்ல, இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்று இறைவனின் அருகில் வீற்றிருக்கும் இந்நாளிலும், மற்றவர்களின் வாழ்வு உயர வேண்டும், துயரபடுவோர் விடுதலை பெற வேண்டும், உலகில் உள்ள ஒவ்வொருவரும் மீட்பை பெற்று பரலோகத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு பிறருக்கு நன்மை செய்பவராக திகழ்கிறார்.

    சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்று சொல்லி தனது வரிப்பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்தியதன் வாயிலாக, ஒவ்வொருவரும் இறை சட்டத்தையும், உலக சட்டத் திட்டங்களையும் மீறாமல் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதை வெறும் வார்த்தையால மட்டும் அல்ல செயலாலும் வலியுறுத்தி கூறுகிறார்.

    பிரச்சினைக்குரிய தருணங்களிலும் இயேசு தனது வல்லமையை அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் தனது வாழ்விலும், மரணத்திலும் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதிலே ஆர்வமாய் இருந்தார். அதனால் தான் அவர், ‘‘அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்’’ என்று கூறினார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அவருக்கு இருந்த ஆர்வத்தினால்தான், சாவை ஏற்கும் அளவிற்கு அதுவும் பிறரால் இழிவாக கருதப்பட்ட சிலுவை சாவையே ஏற்கும் அளவிற்கு கீழ்படிந்தார் என்று வேதம் சொல்லுகிறது.

    இயேசுவின் பிறப்பும் மாட மாளிகையிலே அல்லது வசதி படைத்த இடத்திலோ இல்லாமல் எளிமையான ஒரு மாட்டுத் தொழுவத்தில் அமைந்தது. அதே போல் அவரது இறப்பிற்கு பிறகு அவர் உடல் வைக்கப்பட்ட இடம் அவருக்கு சொந்ததமானதாக இருக்கவில்லை.

    நாம் எல்லாரும் மரணமே நமக்கு வரக்கூடாது என்று விரும்புவோம், ஆனால் இயேசுவோ, மரணம் அடைய வேண்டும் என்றே விரும்பி அதற்காகவே பிறந்தவர். நாம் எல்லாரும் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்வோம். ஆனால் இயேசுவை கைது செய்ய வந்தபோது, இயேசுவின் சீடர் சீமோன் பேதுரு, தனது வாளை உருவி ஒரு போர்வீரரின் காதை வெட்டினார்.

    அப்போது இயேசு, சீமோன் பேதுருவை நோக்கி, “உன் வாளை உன் உறையில் போடு. நான் கேட்டால் பன்னிரண்டு பெரும்படைகளை என் தந்தை அனுப்புவார்” என்று சொன்னார். (ஒரு பெரும் படை என்பது 6000 வீரர்களை கொண்டது. அந்த படையில் இருக்கும் ஒரு வீரர், ஒரே இரவில் 1,85,000 எதிரிகளை வீழ்த்தினார் என்று வேதம் சொல்லுகிறது). அந்த இக்கட்டான நிலையிலும், இயேசு தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் தன்னை தாழ்த்தி தந்தையின் சித்தத்திற்கு தம்மையே கையளித்தார்.

    இந்த உலகம் பெருமையாக கருதுவதை எல்லாம் ஆண்டவர் வெறுத்து நமக்கு ஒரு உன்னதமான வாழ்வை வெளிப்படுத்தி சென்று இருக்கிறார். எனவே நாமும் இறைவனின் சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த உலகில் வாழும் ஏழை, எளிய, இந்த சமூகத்தால் புறக்கணித்து தள்ளப்பட்ட மக்களை நேசித்து இயேசு பிறப்பின் உன்னத நோக்கத்தை நமது வாழ்வில் இந்த புத்தாண்டிலிருந்து வெளிப்படுத்துவோம்.

    சி.கிறிஸ்டோ, சென்னை.
    குளச்சல் காணிக்கை மாதா ஆலய 3-ம் நாள் திருவிழாவையொட்டி மெழுகுவர்த்தி பவனியும், காணிக்கை மாதா தேர் பவனியும் நடைபெற்றது.
    குளச்சல் காணிக்கை மாதா ஆலய 3-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று மாலையில் மெழுகுவர்த்தி பவனியும், காணிக்கை மாதா தேர் பவனியும் நடைபெற்றது. இந்த பவனி குளச்சல் செயின்ட் மேரீஸ் பள்ளியில் இருந்து தொடங்கி காணிக்கை மாதா ஆலயம் சென்றடைந்தது. வழி நெடுக காணிக்கை மாதா தேர் பவனிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கு தந்தைகள் மற்றும் பங்கு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது. மறைமாவட்ட நிதி நிர்வாகி அலாய்சியஸ் பென்சிகர் ஜெபம் செய்தார். அருட்பணியாளர் சசி வின்சென்ட் மறையுரையாற்றினார். இரவு 8 மணிக்கு நடந்த திருப்பலியில் எட்டாம்மடை பங்குத்தந்தை ஸ்டீபன் ஜெபம் செய்தார். புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றினார்.
    பாபநாசம் புனித காணிக்கை மாதா ஆலயத்தின் மின் அலங்கார தேர்பவனி வாணவேடிக்கையுடன் விடியவிடிய நடந்தது. இதையடுத்து திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டது.
    பாபநாசம் அருகே ராஜகிரி பண்டாரவாடை மாதா கோவில் தெருவில் புனித காணிக்கை மாதா ஆலயம் உள்ளது. இங்கு தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக மறைவட்ட முதல்வர் தேவதாஸ் தலைமையில் கொடியேற்றப்பட்டது.

    பின்னர் புதுப்பிக்கப்பட்ட புதிய ஜெபி மாதா கோவில் திறக்கப்பட்டது. பாடல் குழுவினருடன் திருப்பலியும் நடைபெற்றது. விழாவில் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தின் பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ், முன்னாள் பங்குத்தந்தை பிரான்சிஸ், கும்பகோணம் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் விக்டர், பாடலூர் பங்குத்தந்தை மார்செலின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதையடுத்து மின் அலங்கார தேர்பவனி வாணவேடிக்கையுடன் விடியவிடிய நடந்தது. இதையடுத்து திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டது.
    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு புனித காணிக்கை மாதா தேர் பவனி நடைபெறும்.
    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முதல் நாளில் ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடந்தது. விழாவில் காணிக்கை மாத ஆலய முன்னாள் பங்குத்தந்தை டயனிசியஸ் கொடியேற்றி வைத்தார். கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் வின்சென்ட எட்வின் மறையுறையாற்றினார்.

    விழாவில் நேற்று முன்தினம் காலையில் திருமுழுக்கு திருப்பலி நடைபெற்றது. குளச்சல் வட்டார முதல்வர் அருட்பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ் தலைைம தாங்கினார். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்பணியாளர் டன்ஸ்டன் மறையுறையாற்றினார்.

    தொடர்ந்து மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் திருப்பலி நடைபெற்றது. அருட்பணி ஜாண்சன் தலைமை தாங்கினார். குளச்சல் மண்ணின் மைந்தர் அருட்பணியாளர் ஆன்றனி ரொசாரியோ மறையுறையாற்றினார்.

    விழாவில் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும். மறைமாவட்ட நிதி நிர்வாகி அருட்பணியாளர் அலாய்சியஸ் பென்சிகர் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சசி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார்.

    மாலை 6 மணிக்கு புனித காணிக்கை மாதா தேர் பவனி நடைபெறும். இரவு 8 மணிக்கு நடைபெறும் சிறப்பு திருப்பலியில் எட்டாம்மடை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுறையாற்றுகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலையில் திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் திருப்பலி நடைபெறும். நிகழ்ச்சியில் முன்னாள் பங்குத்தந்தை செல்வராஜ் தலைமை தாங்குகிறார். சைமன்காலனி பங்குத்தந்தை கோல்ரிட்ஜ்ஜிங் மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    6 -ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருவிழா முதல் திருப்பலி நடக்கிறது.

    தொடர்ந்து நடைபெறும் ஆடம்பர திருவிழா திருப்பலியில் அருணாச்சலப்பிரதேசம் மியாவோ ஆயர் டென்னிஸ் பனிப்பிச்சை தலைமை தாங்குகிறார். கோட்டார் பேராலய அதிபர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுறையாற்றுகிறார்.
    திசையன்விளை அருகே உள்ள உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
    திசையன்விளை அருகே உள்ள உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருவிழாவை தொடங்கிவைத்தார்.

    திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடக்கின்றது. 13-ம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பெருவிழா கூட்டு திருப்பலியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி, நடத்தி வைக்கிறார்.

    தொடர்ந்து சப்பர பவனி நடக்கிறது. கொடியேற்ற விழாவில் உவரி பஞ்சாயத்து தலைவர் தேம்பாவணிபவர் சிங், ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் அந்தோணி அமலராஜா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    இயேசுவின் அன்னையான தூய மரியாள் புனிதரான நாள் பிப்ரவரி 2. ஆண்டுதோறும் இந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    இயேசு கிறிஸ்து தூய மரியாளின் வழியாகவே இந்த மண்ணுலகம் வந்தார். தூய மரியாள் இயேசு கிறிஸ்துவை ஈன்றெடுத்ததால் சொல்லொண்ணா துன்பங்களையும் வசைச் சொற்களையும் எதிர்கொண்டார். காலம் முழுக்க இயேசுவுக்காக அவர் மறைவான வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. 'அருள் நிறைந்த மரியே' என்று அகிலத்தோர் புகழ்ந்தாலும் இவர் வாழ்ந்த காலம் முழுக்க, எந்த அற்புதங்களையும் செய்யாமல் பொறுமை கொண்டார். எல்லா ஞானங்களையும் அன்னை மரியாள் பெற்றிருந்தபோதும் கர்த்தருக்காக அமைதி காத்தார். இதனாலேயே உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல்களை இந்த தூய மாதாவின் வழியாகவே சொல்லி மன்றாடி வருகிறார்கள்.

    வேண்டுபவர்க்கு வேண்டியதை அருளும் தேவமாதா டிசம்பர் 25-ம் தேதி தேவகுமாரனான இயேசு கிறிஸ்துவை ஈன்றெடுத்தார். அன்றிலிருந்து அக்கால முறைப்படி 40 நாள்கள் கடுமையான விரதம் இருந்து தேவனைப் பாதுகாத்தார். வீட்டைவிட்டு வெளியே வராமல் பத்திய உணவுகளை மட்டுமே உண்டு பேறுகால வலிகளைக் குணப்படுத்திக்கொண்டார். 40 நாள்கள் விரதத்துக்குப் பிறகு, தூய மரியாள் பிப்ரவரி 2-ம் தேதி விரதத்தை முடித்துக்கொண்டு இயேசு கிறிஸ்துவை தங்களது கோயிலுக்கு அழைத்துச் சென்று தேவனுக்கு அர்ப்பணித்தார். பேறுகால அவஸ்தைகள் நீங்கி புனிதரான தேவமாதா, தேவனால் அன்றைக்கு ஆசீர்வதிக்கப்பட்டார். இதே நாளில்தான் இயேசு கிறிஸ்துவும் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்; ஆகவே 'ஆண்டவரை அர்ப்பணிக்கப்பட்ட தினம்' என்றும் இந்நாள் அழைக்கப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு 40-வது நாள் வரும் இந்த அர்ப்பணிப்பு நாளே கிறிஸ்துமஸ் பண்டிகையின் இறுதி நாளாகவும் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ஜோசப்பும் மரியாவும் எருசலேமில் இருந்த ஆலயத்தில் கிறிஸ்துவை அர்ப்பணித்தார்கள் எனவும், இது மோசேயின் கட்டளைப்படி நடத்தப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மரபுவழி திருச்சபை குறிப்பிட்டுள்ள 12 பெருவிழாக்களில் இந்நாளும் ஒன்று. மரியாள் புனிதரான நாள் மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளை உலகின் சில நாடுகளில் 'கேன்டில்மஸ்' (Candle mas) என்ற பெயரில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். பிரகாசிக்கும் மெழுகுதிரிகளை ஏந்தி இந்த நாளில் அன்னை மரியாளையும், தேவகுமாரன் கர்த்தரையும் மகிமைப்படுத்துகிறார்கள். ஆலயங்களில் நடைபெற்ற திருப்பலிக்கு முன்பாக, ஏற்றப்பட்ட மெழுகுதிரிகளோடு வீதிகளில் பவனியாக மக்கள் பாடிக்கொண்டு வருவார்கள். எனவேதான் இந்த நாள் 'கேண்டில்மஸ்' (Candle mas) என்றும் அழைக்கப்பட்டது. இப்போதும் இந்த நடைமுறை சில நாடுகளில் உள்ளது.

    கத்தோலிக்க திருச்சபையில் இயேசு கிறிஸ்துவை அர்ப்பணித்த இந்த நாள் தேவகுமாரன் முதன்முதலாக ஆலயத்தில் நுழைந்த புனித நாளாகவும் போற்றப்படுகிறது. ஐரோப்பாவின் பல பகுதிகளில் இந்த நாளில் கிரீப் (Crepe) எனப்படும் மாவு, பால், முட்டை போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அப்பத்தை உண்ணும் வழக்கம் உள்ளது. இந்த அப்பத்தை தயாரிக்கும்போது ஒரு கையில் நாணயத்தை வைத்துக்கொள்வதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. இதனால் அடுத்த கிறிஸ்துமஸ் வரை தங்களுக்கு உணவோ, பணமோ கிடைக்காமல் போகாது என்பதே இந்த நம்பிக்கையின் அடிப்படை. ஸ்பானிஷ் (Spanish) நாடுகளில் இந்த விழா `Candelaria’ என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் தயாரிக்கப்பட்ட அப்பத்தையும், மெழுகுதிரிகளையும் தேவாலயத்துக்கு கொண்டு வருவது இந்த நாளின் வழக்கமாக உள்ளது.

    கிறிஸ்துமஸ் தினத்தில் வைக்கப்பட்ட குடில்கள், அலங்காரங்களை இந்த கேண்டில்மாஸ் தினமான இன்றுவரை வைத்திருப்பதும் சில நாடுகளில் வழக்கமாக இருக்கிறது. இந்த விழா நான்காம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் தூய மரியன்னையை மகிமைப்படுத்த 'புனிதரான மரியாள் விருந்தும்' தேவாலயங்களில் நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இந்த நாளுக்கு பொதுமுறை அளிக்கப்படவில்லை என்றாலும் கத்தோலிக்கர்களின் முக்கிய விழாவாகவே உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது.

    நலங்களையெல்லாம் அருளும் தேவமாதா, கர்த்தரால் எளிய மக்களின் பிரார்த்தனையை நிறைவேற்றப் படைக்கப்பட்டவர். ஒரே ஒரு மகனான ஆண்டவரை தூய மரியாள் நமக்காக ஒப்புக்கொடுத்து உயர்வடைந்தார். தியாக வாழ்வால் தேவனுக்கு அருகிலேயே வாழும் விண்ணுலக வாழ்வை உடலுடன் பெற்ற தூயவர் அன்னை மரியாள். எல்லா நிலையிலும் தன்னை தாழ்த்திக்கொண்டு கர்த்தரை மகிமைப்படுத்தியவர் தேவமாதா. அவர் தமக்காக ஒன்றுமே ஆண்டவரிடத்தில் கேட்காத அருமையான குணவதி. அதனாலேயே அவர் ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டார். தூய ஆவியாலே கருவுற்று கர்த்தரைப் பெற்றபோதிலும் விரதமிருந்து இந்த நாளில் புனிதமடைந்தார். எண்ணில்லாத தியாகங்களால் ஏற்றம் கொண்ட புனித மரியாள் பரிசுத்தமடைந்த இந்த நாளில் நமது வார்த்தைகளால், கீர்த்தனைகளால் அவரை மகிமைப்படுத்துவோம்!
    ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் கோவையில் ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஊரடங்கில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. அதுபோன்று வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்கப் பட்டன. இதன்படி டவுன்ஹால் புனித மைக்கேல் ஆலயம், நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணி யார் ஆலயம், காந்திபுரம் புனித பாத்திமா ஆலயம், அவினாசி சாலையில் உள்ள இம்மானுவேல் சி.எஸ்.ஐ. ஆலயம், திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல்சோல்ஸ் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து இருந்தனர். முன்னதாக ஆலயங்களுக்கு வந்தவர்களுக்கு நுழைவு வாயிலில் கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசங்கள் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து அணிந்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு வந்தது மன நிம்மதி யாக இருப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.
    மனிதரால் வெல்லமுடியாத எதிரிகளையும் தடைகளையும் வெல்ல இயேசுவுக்கு அதிகாரம் இருந்ததை அவர் செய்த அற்புதங்கள் மெய்ப்பித்துக் காட்டின.
    சாதாரண மனிதரால் சாதிக்க முடியாதவற்றைச் சாதிக்க இயேசுவுக்குக் கடவுள் தமது சக்தியை அருளினார். இயேசு அநேக அற்புதங்களைச் செய்தார், பெரும்பாலும் மக்களின் முன்னிலையில். அபூரண மனிதரால் வெல்லமுடியாத எதிரிகளையும் தடைகளையும் வெல்ல இயேசுவுக்கு அதிகாரம் இருந்ததை அவர் செய்த அற்புதங்கள் மெய்ப்பித்துக் காட்டின. சில உதாரணங்களைக் கவனிக்கலாம்.

    பசி பட்டினி : தண்ணீரைத் தித்திக்கும் திராட்சை மதுவாக மாற்றியதே இயேசு செய்த முதல் அற்புதம். வேறு இரண்டு சந்தர்ப்பங்களில், சில ரொட்டிகளையும் மீன்களையும் கொண்டு ஆயிரக்கணக்கானோரின் பசியை ஆற்றினார், இத்தனைக்கும் எல்லாரும் சாப்பிட்டதுபோக மீதமும் இருந்தது.

    வியாதிகள் : “எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும்” இயேசு குணப்படுத்தினார். (மத்தேயு 4:23) குருடு, செவிடு, தொழுநோய், காக்காய்வலிப்பு போன்ற அனைத்து உபாதைகளிலிருந்தும் மக்களுக்கு விடுதலை அளித்தார். கைகால் முடமானவர்களையும் சுகப்படுத்தினார். அவருடைய வல்லமைக்கு மிஞ்சிய வியாதி எதுவுமே இருக்கவில்லை.

    இயற்கை சீற்றங்கள் :  ஒருமுறை இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் கலிலேயாக் கடலைக் கடந்துகொண்டிருந்தபோது பலத்த புயல்காற்று வீசியது. சீடர்கள் திகிலடைந்தார்கள். இயேசுவோ புயல்காற்றைப் பார்த்து, “உஷ்! அமைதியாக இரு!” என்றார். அப்போது மிகுந்த அமைதி உண்டானது. (மாற்கு 4:37-39) மற்றொரு சந்தர்ப்பத்தில், கடும் புயல்காற்று வீசியபோது அவர் தண்ணீர்மீது நடந்து வந்தார்.—மத்தேயு 14:24-33.

    பேய் பிசாசுகள் :  மனிதர்களைவிட பேய்கள் சக்தி வாய்ந்தவை. கடவுளுடைய கொடிய எதிரிகளான இந்தப் பேய்களின் கோரப்பிடியிலிருந்து—அன்றும் சரி இன்றும் சரி—ஜனங்களால் வெளியே வரமுடியவில்லை. ஆனால் இயேசு பல சந்தர்ப்பங்களில், மனிதர்களைப் பிடித்த பேய்களை வெளியே வரும்படி கட்டளையிட்டார். அதன்பின் அந்தப் பேய்களால் அவர்களை ஆட்டிப்படைக்க முடியவில்லை. பேய்களைக் கண்டு இயேசு அஞ்சவில்லை, மாறாக அதிகாரமுள்ள இயேசுவைக் கண்டு அந்தப் பேய்கள்தான் அஞ்சி நடுங்கின.

    மரணம் :  “கடைசி எதிரி” என பொருத்தமாகவே அழைக்கப்படும் மரணத்தை எந்த மனிதனாலும் வெல்ல முடியாது. (1 கொரிந்தியர் 15:26) ஆனால், இறந்தவர்களை இயேசு உயிர்ப்பித்தார். ஒரு விதவையின் இளம் மகனையும், ஒரு சிறு பெண்ணையும் உயிர்ப்பித்து அவர்களுடைய பெற்றோரின் நெஞ்சில் பால் வார்த்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில், துக்கத்தில் ஆழ்ந்திருந்த ஜனக்கூட்டத்தின் கண்முன்னாலேயே தமது நெருங்கிய நண்பன் லாசருவை உயிர்த்தெழுப்பினார், அதுவும் அவர் இறந்து கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கழித்து! இயேசுவைக் கொலைசெய்ய துடியாகத் துடித்துக்கொண்டிருந்த எதிரிகளும்கூட அவர் செய்த இந்த அற்புதத்தை மறுக்கவில்லை.—யோவான் 11:38-48; 12:9-11.

    இயேசு ஏன் இந்த அற்புதங்களையெல்லாம் செய்தார்? அவரால் சுகம் பெற்றவர்களும் சுவாசம் பெற்றவர்களும் கடைசியில் இறந்துதானே போனார்கள்!

    உண்மைதான், ஆனால் இயேசு செய்த அற்புதங்கள் மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்தன. ஆம், மேசியாவின் ஆட்சியைப் பற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு அத்தாட்சி அளித்தன. ஆகவே, பசி பட்டினி, வியாதிகள், இயற்கை சீற்றங்கள், பேய் பிசாசுகள், மரணம் ஆகிய அனைத்தையும் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவால் ஒழிக்க முடியும் என்பதைக் குறித்து சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இவை அனைத்தையும் செய்ய கடவுள் தமக்கு முழு அதிகாரம் அளித்திருக்கிறார் என்பதை இயேசு ஏற்கெனவே நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

    —ஆதாரம்: மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் புத்தகங்கள்.
    வேளாங்கண்ணி செபஸ்தியார் ஆலய பெரிய தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.இதில் குறைந்த அளவிலான கிறிஸ்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த பேராலயம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு சொந்தமானது. புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இரவு நடந்தது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி பிரார்த்தனை நடந்தது.

    அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செபஸ்தியார் சொரூபம் வைக்கப்பட்டு பவனி நடந்தது. தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.இதில் குறைந்த அளவிலான கிறிஸ்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    ஆண்டு தோறும் செபஸ்தியார், மைக்கேல் சம்மனசு, புனித அந்தோணியார் ஆகிய 3 தேர்பவனி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக செபஸ்தியார் தேர்பவனி மட்டும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க முக்குலத்தோர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
    வால்பாறையில் தூய இருதய ஆலய திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    வால்பாறையில் தூய இருதய ஆலயத்தின் தேர்த்திருவிழாவும், புனித செபஸ்தியாரின் திருவிழாவும் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு கோவை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையிலும், பங்கு குரு மரியஜோசப் முன்னிலையிலும் கூட்டு பாடல் தேர்த் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.திருப்பலியின் தொடர்ச்சியாக தேவாலயத்தை சுற்றி புனித செபஸ்தியாரின் அம்பு நேர்ச்சிக்கடன் பவனி ஒவ்வொரு குடும்பத்தினர் சார்பிலும் நடைபெற்றது. பின்னர் அன்பின் விருந்தும் நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பங்கு மக்களின் சார்பில் முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையிலும், சமூக சேவாமையத்தின் இயக்குனர் குரு அருண் முன்னிலையிலும் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தை சுற்றி தூய இருதய ஆண்டவர் மற்றும் புனித செபஸ்தியாரின் உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். இதையடுத்து வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிற்றாலயம் மந்தரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் பங்கு மக்கள், வாழைத்தோட்டம் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    ×