என் மலர்

  ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

  இயேசு
  X
  இயேசு

  இயேசு அற்புதங்கள் செய்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மனிதரால் வெல்லமுடியாத எதிரிகளையும் தடைகளையும் வெல்ல இயேசுவுக்கு அதிகாரம் இருந்ததை அவர் செய்த அற்புதங்கள் மெய்ப்பித்துக் காட்டின.
  சாதாரண மனிதரால் சாதிக்க முடியாதவற்றைச் சாதிக்க இயேசுவுக்குக் கடவுள் தமது சக்தியை அருளினார். இயேசு அநேக அற்புதங்களைச் செய்தார், பெரும்பாலும் மக்களின் முன்னிலையில். அபூரண மனிதரால் வெல்லமுடியாத எதிரிகளையும் தடைகளையும் வெல்ல இயேசுவுக்கு அதிகாரம் இருந்ததை அவர் செய்த அற்புதங்கள் மெய்ப்பித்துக் காட்டின. சில உதாரணங்களைக் கவனிக்கலாம்.

  பசி பட்டினி : தண்ணீரைத் தித்திக்கும் திராட்சை மதுவாக மாற்றியதே இயேசு செய்த முதல் அற்புதம். வேறு இரண்டு சந்தர்ப்பங்களில், சில ரொட்டிகளையும் மீன்களையும் கொண்டு ஆயிரக்கணக்கானோரின் பசியை ஆற்றினார், இத்தனைக்கும் எல்லாரும் சாப்பிட்டதுபோக மீதமும் இருந்தது.

  வியாதிகள் : “எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும்” இயேசு குணப்படுத்தினார். (மத்தேயு 4:23) குருடு, செவிடு, தொழுநோய், காக்காய்வலிப்பு போன்ற அனைத்து உபாதைகளிலிருந்தும் மக்களுக்கு விடுதலை அளித்தார். கைகால் முடமானவர்களையும் சுகப்படுத்தினார். அவருடைய வல்லமைக்கு மிஞ்சிய வியாதி எதுவுமே இருக்கவில்லை.

  இயற்கை சீற்றங்கள் :  ஒருமுறை இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் கலிலேயாக் கடலைக் கடந்துகொண்டிருந்தபோது பலத்த புயல்காற்று வீசியது. சீடர்கள் திகிலடைந்தார்கள். இயேசுவோ புயல்காற்றைப் பார்த்து, “உஷ்! அமைதியாக இரு!” என்றார். அப்போது மிகுந்த அமைதி உண்டானது. (மாற்கு 4:37-39) மற்றொரு சந்தர்ப்பத்தில், கடும் புயல்காற்று வீசியபோது அவர் தண்ணீர்மீது நடந்து வந்தார்.—மத்தேயு 14:24-33.

  பேய் பிசாசுகள் :  மனிதர்களைவிட பேய்கள் சக்தி வாய்ந்தவை. கடவுளுடைய கொடிய எதிரிகளான இந்தப் பேய்களின் கோரப்பிடியிலிருந்து—அன்றும் சரி இன்றும் சரி—ஜனங்களால் வெளியே வரமுடியவில்லை. ஆனால் இயேசு பல சந்தர்ப்பங்களில், மனிதர்களைப் பிடித்த பேய்களை வெளியே வரும்படி கட்டளையிட்டார். அதன்பின் அந்தப் பேய்களால் அவர்களை ஆட்டிப்படைக்க முடியவில்லை. பேய்களைக் கண்டு இயேசு அஞ்சவில்லை, மாறாக அதிகாரமுள்ள இயேசுவைக் கண்டு அந்தப் பேய்கள்தான் அஞ்சி நடுங்கின.

  மரணம் :  “கடைசி எதிரி” என பொருத்தமாகவே அழைக்கப்படும் மரணத்தை எந்த மனிதனாலும் வெல்ல முடியாது. (1 கொரிந்தியர் 15:26) ஆனால், இறந்தவர்களை இயேசு உயிர்ப்பித்தார். ஒரு விதவையின் இளம் மகனையும், ஒரு சிறு பெண்ணையும் உயிர்ப்பித்து அவர்களுடைய பெற்றோரின் நெஞ்சில் பால் வார்த்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில், துக்கத்தில் ஆழ்ந்திருந்த ஜனக்கூட்டத்தின் கண்முன்னாலேயே தமது நெருங்கிய நண்பன் லாசருவை உயிர்த்தெழுப்பினார், அதுவும் அவர் இறந்து கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கழித்து! இயேசுவைக் கொலைசெய்ய துடியாகத் துடித்துக்கொண்டிருந்த எதிரிகளும்கூட அவர் செய்த இந்த அற்புதத்தை மறுக்கவில்லை.—யோவான் 11:38-48; 12:9-11.

  இயேசு ஏன் இந்த அற்புதங்களையெல்லாம் செய்தார்? அவரால் சுகம் பெற்றவர்களும் சுவாசம் பெற்றவர்களும் கடைசியில் இறந்துதானே போனார்கள்!

  உண்மைதான், ஆனால் இயேசு செய்த அற்புதங்கள் மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்தன. ஆம், மேசியாவின் ஆட்சியைப் பற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு அத்தாட்சி அளித்தன. ஆகவே, பசி பட்டினி, வியாதிகள், இயற்கை சீற்றங்கள், பேய் பிசாசுகள், மரணம் ஆகிய அனைத்தையும் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவால் ஒழிக்க முடியும் என்பதைக் குறித்து சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இவை அனைத்தையும் செய்ய கடவுள் தமக்கு முழு அதிகாரம் அளித்திருக்கிறார் என்பதை இயேசு ஏற்கெனவே நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

  —ஆதாரம்: மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் புத்தகங்கள்.
  Next Story
  ×