என் மலர்tooltip icon

    தரவரிசை

    வினய் மற்றும் கேஷ கம்பாட்டி, சாக்‌ஷி சௌத்ரி, ஸ்வஸ்திகா ஆகியோர் நடிப்பில் சரண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் விமர்சனம்.
    எதிரும் புதிருமான இரட்டையர்களின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாக செல்லும் படம் ஆயிரத்தில் இருவர்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கதாநாயகன் வினய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருவரும் எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே அடித்துக்கொள்ளும் அளவிற்கு இவர்கள் இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒத்துப்போவதில்லை.

    ஒருநாள், வினய் குடும்பத்தினர் அனைவரும் குடும்பத்துடன் வெளியூர் செல்கின்றனர். அங்கு நாயகி ஸ்வஸ்திகாவை பார்த்து அவர் பின்னாடியே சென்று விடுகிறார் வினய். அப்போது தன் அப்பாவின் பல நாள் எதிரியான பங்காளியின் காரில் ஏறி சென்று விடுகிறார். இதை பார்க்கும் ஒருவர், வினய்யை பங்காளி கொலை செய்துவிட்டதாக கூறிவிடுகிறார். இதனால், கோபமடையும் வினய்யின் அப்பா, பங்காளியை கொன்று விடுகிறார்.

    அந்தப் பெண்ணின் மீது கொண்ட காதலால் வினய், ஆந்திராவில் தங்கி விடுகிறார். ஆந்திரா ஜெயில் இருந்து வெளியே வரும் அப்பா, வினய் உயிரோடு இருப்பதை தெரிந்துக் கொள்கிறார். ஊருக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், ஆந்திராவிலேயே இருக்கும்படி கூறுகிறார். எனவே, ஆந்திராவிலேயே தங்கும் வினய், ஹவாலா மோசடி செய்து வருகிறார்.

    இதுஒருபுறமிருக்க, திருநெல்வேலியில் இருக்கும் வினய், வேலைக்கு போகாமல், சொத்தில் பங்கு கேட்டு தொந்தரவு கொடுத்து வருகிறார்.

    இந்த சூழ்நிலையில், இறந்துபோன பங்காளியின் தம்பி ஒரு வினய்க்கு தொந்தரவு கொடுக்க, ஊரில் சொத்து இருப்பதை அறிந்து ஆந்திராவில் இருந்து மற்றொரு வினய் ஊருக்கு வர, இருவருக்குள் நடக்கும் ஆள்மாறாட்டமே படத்தின் மீதிக்கதை.

    வினய் இரண்டு வேடங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். படத்தில் கேஷ கம்பாட்டி, சாக்‌ஷி சௌத்ரி, ஸ்வஸ்திகா ஆகியோர் படத்திற்கு கலர்ப்புல்லாக உதவியிருக்கிறார்கள். அருள் தாஸின் காமெடி படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்திருக்கிறது. தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் மயில்சாமி.

    பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண், இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஆள்மாற்றம், காமெடி, ஹவாலா பணம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். படம் கலர்ப்புல்லாக இருந்தாலும், திரைக்கதை ஜொலிக்க வில்லை. பல கிளைக்கதைகளை தவிர்த்திருக்கலாம். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ள இப்படத்தில், கடைசி 15 நிமிட காமெடி காட்சி மட்டுமே கைகொடுத்திருக்கிறது.

    பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் அளவிற்கு கொடுத்திருக்கிறார். கிருஷ்ணா ரமணனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஆயிரத்தில் இருவர்’ குழப்பவாதி.
    பி.ஜவஹர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் - ரேஷ்மி மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பயமா இருக்கு' படத்தின் விமர்சனம்.
    கணவன், மனைவியான சந்தோஷ் பிரதாப்பும், ரேஷ்மி மேனனும் கிராமத்திற்கு ஒதுக்கபுறமாக தண்ணீர் சூழ்ந்த பகுதியில் உள்ள தனி வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ரேஷ்மியின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவுவதற்காக இலங்கையில் உள்ள ரேஷ்மியின் அம்மாவை அழைத்து வருவதற்காக நாயகியை தனியாக விட்டுவிட்டு சந்தோஷ் இலங்கை செல்கிறார்.

    இந்நிலையில், இலங்கையில் நடந்த போரில் ரேஷ்மியின் அம்மா இறந்துவிட்டதாக தகவல் அறிந்து நாயகன் மீண்டும் ஊர் திரும்பும் வேளையில், இலங்கை வீரர்களிடம் துப்பாக்கி முனையில் சிக்கிக் கொண்ட ஜெகன், ராஜேந்திரன், லொல்லு சபா ஜீவா, பரணி ஆகிய நான்கு பேரையும் காப்பாற்றி தன்னுடன் அழைத்து வருகிறார்.

    நான்கு பேரையும் தனது வீட்டிற்கு அருகேயுள்ள உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் ஊருக்குள் செல்லும் சந்தோஷிடம், ரேஷ்மி மேனன் இறந்து விட்டதாக அந்த கிராமத்தில் உள்ள சிலர் கூறுகின்றனர். மேலும் அவரது வீட்டில் பேய் இருப்பதாகவும், இரவு நேரத்தில் அங்கிருந்து சில சத்தங்கள் வருவதாகவும் கூறுகின்றனர்.

    ஏற்கனவே இதுபோன்ற ஒரு சந்தேகத்தில் இருந்த மொட்டை ராஜேந்திரன், இதனால் மேலும் பீதியடைந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து பேய் ஓட்டுபவரான கோவை சரளாவிடம் உதவி கேட்கின்றனர். இதையடுத்து அங்கு வரும் கோவை சரளா, அங்கு பேய் இருப்பதை உறுதிப்படுத்துகிறார். இதையடுத்து சந்தோஷை அந்த பேயிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவரது நண்பர்கள் முடிவு செய்கின்றனர்.

    கடைசியில் சந்தோஷை காப்பாற்றினார்களா? ரேஷ்மி உண்மையிலேயே இறந்து விட்டாரா? அல்லது ரேஷ்மியின் உடலில் பேய் ஏதும் புகுந்து இருக்கிறதா? சந்தோஷ் பின்னணியில் இலங்கை சென்றிருந்த போது என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஒரு கணவனாக சந்தோஷ் பிரதாப் பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பப் பெண்ணாக ரேஷ்மி மேனனின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. ஜெகன், லொல்லு சபா ஜீவா, பரணி என கூட்டாக காமெடிக்கு முயற்சி செய்திருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா தனது அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கின்றனர்.

    காதலுக்கு எல்லையில்லை. பாசத்திற்கு அளவில்லை. யார் என்ன சொன்னாலும் நம்மை நேசிக்கும் ஒருவர் உயிரோடு இல்லை என்றாலும் நம்மோடு இருக்கவே ஆசைப்படுவார்கள் என்பதை இக்கதையின் மூலம் பயத்துடன் கூற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பி.ஜவகர். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது.   

    சி.சத்யாவின் பின்னணி இசை ஓரளவுக்கு பயத்தை உண்டாக்குகிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். மகேந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `பயமா இருக்கு' அன்பான பேய்.
    டி.கிருஷ்ணசாமி இயக்கத்தில் கதிர் - குஷி நடிப்பில் வெளியாகி இருக்கும் `களவு தொழிற்சாலை' படத்தின் விமர்சனம்.
    நாயகன் கதிர் கோயில்களில் உள்ள சிறுசிறு சிலைகளை திருடுவது, அதனை விற்பது என சிறிய அளவில் சிலை கடத்தல் தொழிலை செய்து வருகிறார். சிலை கடத்தல் என்றாலே அந்த பகுதி போலீசால் கைது செய்யப்படும் முதல் ஆள் கதிர் என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவனாக வருகிறார். இதுஒருபுறம் இருக்க கதிரும், நாயகி குஷியும் காதலித்து வருகின்றனர்.

    மறுபுறத்தில் அதிக மதிப்புள்ள சிலைகளை திட்டம் போட்டு திருடி, அதனை வெளிநாட்டில் விற்று பணம் சம்பாதித்து வருகிறார் வம்சி கிருஷ்ணா. இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள சோழர் காலத்து புராதன கோயில் ஒன்றில் மரகத லிங்கம் ஒன்று இருப்பதும், அது பலநூறு கோடிக்கு விலைபோகும் என்றும் தெரிந்து கொண்டு வம்சி கும்பகோணத்துக்கு வருகிறார்.

    அங்கு சிலை கடத்தலில் பிரபலமான கதிரை சந்தித்து, அவன் மூலமாகவே அந்த மரகத லிங்கத்தை கடத்த திட்டமிடுகிறார். இதையடுத்து கதிரிடம் நட்பாக பழகும் வம்சி கிருஷ்ணா, மரகத லிங்கத்தை தனக்கு திருடித் தந்தால் அவன் திருமணம் செய்வதற்கு தேவையான பணத்தை தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி கதிரை சம்மதிக்க வைக்கிறார்.

    வம்சியின் பேச்சை கேட்டு கதிரும் அந்த சிலையை கடத்தி வம்சியிடம் கொடுத்துவிட்டு, தனது திருமணத்திற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சிலை கடத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரியான ஜெய் ருத்ரா கதிரை கைது செய்கிறார்.

    விசாரணையின் போது பல உண்மைகள் வெளிவர, கடைசியில் போலீசில் சிக்கிய கதிர் இந்த சிலை கடத்தில் வழக்கில் இருந்து தப்பினாரா? தனது காதலியை மணந்தாரா? பிரபல கடத்தல் மன்னன் வம்சி கிருஷ்ணா போலீசில் சிக்கினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கோயிலுக்குள் சென்று சிலைகளை கடத்தி வெளிவரும் காட்சிகளிலும், நாயகி உடனான காதல் காட்சிகளிலும் கதிர் சிறப்பாக நடித்திருக்கிறார். சிலைகளை உலகளவில் விற்கும் ஸ்டைலிஷ் கடத்தல் மன்னனாக வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு சிறப்பாகவே இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை அவரே முன்னெடுத்து செல்கிறார். சிலையை கடத்த அவர் போடும் திட்டங்களும், அதனை செயல்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

    நாயகி குஷி கதாபாத்திரத்திற்கு தேவயான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெய் ருத்ரா போலீஸ் அதிகாரியாக வந்து மிரட்டுகிறார். களஞ்சியம், நட்ராஜ் பாண்டியன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    புராதான சிலைகளை கடத்துவது கலாசாரத்தையே அழிப்பதற்கான ஆரம்பம் என்று சிலை கடத்தல் மற்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து படத்தின் மூலம் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் டி.கிருஷ்ணசாமி. படத்திற்கு கதை நல்லபடியாக அமைந்திருந்தாலும், திரைக்கதையை செதுக்குவதில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார். திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததால் காட்சிகள் மெதுவாக ஊர்ந்து செல்கிறது.

    ஷியாம் பெஞ்சமின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ரசிக்கும்படியாக இருக்கிறது. வி.தியாகராஜனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

    மொத்தத்தில் `களவு தொழிற்சாலை' வேகமில்லை.
    உதய் சங்கரன் இயக்கத்தில் கோகுல் - நீனு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கொஞ்சம் கொஞ்சம்’ படத்தின் விமர்சனம்.
    தமிழ்நாட்டில் இருக்கும் நாயகன் கோகுல், வேலைத்தேடி கேரளாவிற்கு செல்கிறார். அங்கு பழைய இரும்பு கடை நடத்தி வரும் அப்புக்குட்டி கடையில் வேலைக்கு சேருகிறார். இவருடன் நான்கு நண்பர்களும் வேலைப் பார்த்து வருகிறார்கள். கடைக்கு பக்கத்திலேயே வசித்து வரும் நாயகி நீனுவுடன், முதலில் மோதலுடன் ஆரம்பிக்கும் இவர்களது நட்பு பின் காதலாக மாறுகிறது.

    இந்நிலையில், தனது ஊருக்கு செல்லும் நாயகன் கோகுல் தன்னுடைய அக்காவுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுக்கிறார். அந்த செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசும்போது, எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்து, கோகுலின் அக்காவிற்கு காது கேட்காமல் போகிறது.



    இதை குணப்படுத்துவதற்காக தன் அக்காவை கேரளாவிற்கு அழைத்து வந்து விடுகிறார் கோகுல். அக்காவுடன் சுற்றுவதை பார்க்கும் நாயகி நீனு, கோகுலை தவறாக புரிந்துக் கொண்டு, அவரை விட்டு விலகுகிறார்.

    அக்காவின் சிகிச்சைக்காக ஒரு லட்சம் பணம் தேவைப்படும் நிலையில், ஒரு நடனப் போட்டி ஒன்று நடக்க இருக்கிறது. இதில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றாரா? தன் அக்காவின் காதை சரி செய்தாரா? கோகுலின் உண்மை நிலையை அறிந்து நாயகி நீனு ஒன்று சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் கோகுல், இரும்பு கடையில் வேலை செய்துக் கொண்டு சாதாரண இளைஞனாக ஹீரோயிசம் இல்லாமல் நடித்திருக்கிறார். படம் முழுக்க ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி நீனு சாதாரண குடும்பத்து பெண்ணாக நடித்திருக்கிறார். அழகான முகபாவனையால் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகன் உடனான காதல் காட்சியில் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்.



    நாயகன் அக்காவாக நடித்திருக்கும் பிரியா மோகன், முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் காது கேட்காமல், ஒரு சீரியசான பெண்ணாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். அப்புக்குட்டி, இரும்பு கடை முதலாளியாக நல்ல மனதுடன் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கு மனைவியாக சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் மதுமிதா.

    கேரளா படங்களுக்கு உண்டான எதார்த்தமான பதிவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் உதய் சங்கரன். கதாபாத்திரங்களிடையே அழகாக வேலை வாங்கி இருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதை சரிசெய்திருந்தால் கூடுதலாக படத்தை ரசித்திருக்கலாம்.

    நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அதுபோல், வல்லவன் இசையில் பாடல் அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது. பின்னணியிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக எல்லா பாடல்களும் கேட்கும் படி அமைந்திருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் ‘கொஞ்சம் கொஞ்சம்’ பார்க்கலாம்.
    என்.டி.நந்தா இயக்கத்தில் அனு ஹாசன், நாசர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வல்லதேசம்' படத்தின் விமர்சனம்.
    ராணுவ அதிகாரியாக இருக்கும் நாசரிடம் ஒரு கமாண்டோ படை இருக்கிறது. இது அனுஹாசன் தலைமையில் இயங்கி வருகிறது. அனு ஹாசன் ஒரு ஆணுக்கு நிகராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 16 தீவிரவாதிகள் அதிநவீன துப்பாக்கியுடன் இருப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது. போலீஸ் சமாளிக்க முடியாததால், அனுஹாசன் தலைமையிலான கமாண்டோ படை அவர்களை தாக்கி வெற்றி பெறுகிறார்கள்.

    இந்த தீவிரவாதிகள் மூலம், இந்தியாவின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கிறது. இது லண்டனில் இருக்கும் டேவிட் தலைமையில் இயங்குவதும் தெரியவருகிறது. இதை ரகசியமாக விசாரிக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி அனுஹாசனை சஸ்பெண்ட் செய்வதுபோல் நாடகமாடி, குடும்பத்துடன் லண்டனில் குடியேறுகிறார் அனுஹாசன்.



    தீவிரவாதிகள் அனுஹாசனின் கணவர்தான் ரகசிய உளவாளி என்று கருதி அவரை கொலை செய்து விடுகிறார்கள். இந்த தாக்குதலில் தப்பிக்கும் அனுஹாசன் இறுதியில், தனி நபராக இருந்து, இந்தியாவை அழிக்க இருக்கும் டேவிட்டின் திட்டத்தை முறியடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலுடன் நடித்திருக்கிறார் அனுஹாசன். படம் முழுக்க விஜயசாந்தி போல் நடித்திருக்கிறார். ஆனால், காட்சிகள் வலுவாக இல்லாததால் இவரின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை. நிறைய காட்சிகள் மனதில் ஒட்டாதது வருத்தம். லண்டனில் பல காட்சிகள் படமாக்கி இருக்கிறார்கள். லண்டன் லொகேஷன்கள் சிறப்பாக இருக்கிறது.



    படத்தில் ராணுவ கேப்டனாக நடித்திருக்கிறார் நாசர். அவருக்கே உரிய அனுபவ நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் டேவிட் யுவராஜன், மிகப்பெரிய வசதிப்படைத்த சர்வதேச வில்லனாக நடித்திருக்கிறார். புதிய முகம் என்று இல்லாமல், மனதில் நிற்கும் படி நடித்திருக்கிறார்.

    இராணுவத்தில் இந்தியாவிற்காக போராடுபவர்கள் ஆண்கள் மட்டுமில்லாமல், பெண்களும் போராடும் குணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று உனர்த்தும் விதமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா. ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் ஒரு சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. இவரே இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரின் ஒளிப்பதிவில் லண்டனின் அழகை மட்டும் ரசிக்க முடிகிறது. முத்துக்குமார சாமியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் ‘வல்லதேசம்’ வலு குறைவு.
    நாயகன் சார்லஸ் அருண், நாயகி தீர்த்தா நடிப்பில் ஹாபிஸ் எம்.இஸ்மாயில் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘கோம்பே’ படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரிய தாதா கோம்பே என்னும் ஹாபிஸ் எம்.இஸ்மாயில். இவரிடம் நாயகன் சார்லஸ் அருணின் அண்ணன் வேலைகிறார். இவரை சிறு சிறு பிரச்சனைகளுக்கு போலீஸ் அழைத்து செல்லும்போது, நாயகன் சார்லசையும் போலீஸ் அழைத்து செல்கிறது.

    சிறுவயதிலேயே ஜெயிலுக்கு சென்று வந்ததால் வளரும் போதே ரவுடியாக வளர்கிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த நாயகி தீர்த்தாவிற்கும் காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலித்து வரும் நிலையில், கோம்பேவின் தம்பி, நாயகியை அடைய விரும்புகிறார். இந்த விஷயம் சார்லஸ் அருணுக்கு தெரிந்து இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

    இந்த சண்டையில், எதிர்பாராத விதமாக கோம்பேவின் தம்பி இறந்து விடுகிறார். இதனால், சார்லஸ் அருணை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார் கோம்பே. இறுதியில் சார்லஸ் அருணை கோம்பே கொன்றாரா? நாயகன் சார்லஸ் அருணும், நாயகி தீர்த்தாவும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சார்லஸ் அருண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தீர்த்தா பாவாடை தாவணியில் கிராமத்து பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கோம்பேவாக வரும் ஹாபிஸ் எம்.இஸ்மாயில் வில்லத்தனத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இவரே இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.

    கிராமத்தில் ஒரு ரவுடியின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை திரைக்கதையாக எடுத்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்றாலும் பிற்பாதியில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதை சரி செய்திருந்தால் ரசித்திருக்கலாம். இவரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.

    அனுப் ரோக்வெல், டென்னிஸ் ஜோசப், கயோஸ் ஜோன்சன் ஆகியோரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையையும் தேவையான அளவிற்கு கொடுத்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘கோம்பே’ புது முயற்சி.
    சச்சின் ஜோஷி, இஷா குப்தா, தன்யா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் சத்யா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘யார் இவன்’ படத்தின் விமர்சனம்.
    கோவா போட் ஹவுஸில் நாயகி இஷா குப்தாவை நாயகன் சச்சின் ஜோஷி கொலை செய்கிறார். போலீசார் சச்சின் ஜோஷியை கைது செய்வதில் இருந்து தொடங்குகிறது படம்.

    நாயகி இஷா குப்தாவின் கொலை வழக்கை கிஷோர் விசாரிக்க ஆரம்பிக்கிறார். முதலில் இஷா குப்தாவின் தோழி தன்யாவின் மூலம் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் என்றும் பணத்திற்காகத் தான் இஷா குப்தாவை சச்சின் ஜோஷி காதலித்ததாகவும் கிஷோருக்கு தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து சச்சினின் நண்பரான சதீஷ் கூறும்போது, சச்சின் ஜோஷி ஒரு கபடி விளையாட்டு வீரர் என்றும், கபடி அவருக்கு வாழ்க்கை என்றும் கூறுகிறார்.

    இது தொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடக்க, ஒரு கபடி போட்டியின் போது ஒருவரின் இறப்புக்கு சச்சின் ஜோஷி காரணமாக இருந்திருக்கிறார். இறந்தவர் ஜெயில் வார்டனின் தம்பி என்பதால், தற்போது ஜெயிலில் இருக்கும் சச்சினை கொல்ல முயற்சி செய்கிறார்.

    இறுதியில் சச்சின் ஜோஷியை ஜெயில் வாடர்ன் பழி வாங்கினாரா? இஷா குப்தாவை சச்சின் ஜோஷி கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சச்சின் ஜோஷி கபடி வீரருக்கு ஏற்றார் போல் உடற்கட்டுடன் வலம் வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இஷா குப்தாவிற்கு பெரிதாக வேலை இல்லை. படத்தின் ஆரம்பத்திலேயே இறந்து விடுகிறார். பிளாஸ்பேக் காட்சிகளில் சச்சின் ஜோஷியுடன் டூயட் ஆட மட்டும் வந்து போகிறார். நாயகியின் தோழியாக வரும் தன்யாவின் நடிப்பு ஓரளவிற்கு சரி என்றாலும், பல இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது.

    வழக்கமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிரபு. சதீஷின் காமெடி படத்தில் பெரியதாக எடுபடவில்லை என்று சொல்வதைவிட இயக்குனர் சதீஷை சரியாக உபயோகப்படுத்த வில்லை என்றே சொல்லலாம்.

    துப்பறியும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கிய இயக்குனர் சத்யா, திரைக்கதையில் அந்த வேகத்தை காட்டாமல் விட்டிருக்கிறார். ஒரு காட்சி சுவாரஸ்யமாக செல்லும் போது, படத்தின் பாடல்கள் முட்டுக்கட்டையாக வருகிறது. யதார்த்தமான விஷயங்கள் கூட செயற்கைத் தனமாக அமைந்திருக்கிறது. கபடி போட்டியின் போது வரும் சண்டைக்காட்சி ஏற்கும்படியாக இல்லை.

    தமன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். பெனன்ரா மேனனின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘யார் இவன்’ புரியாதவன்.
    பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மகளிர் மட்டும்' படத்தின் விமர்சனம்.
    டிஸ்கவரி சேனலில் வேலை செய்யும் ஜோதிகா, வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொள்ளும் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு ஆவணப் படத்தை எடுக்கிறார். அதில் பெண்கள் படும் கஷ்டத்தையும் வேதனையும் உணர்கிறார். இந்நிலையில், தான் திருமணம் செய்து கொள்ளும் காதலனின் தாயான ஊர்வசி வீட்டில் திருமணத்திற்கு முன்பே தங்குகிறார். காதலன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் ஊர்வசிக்கு துணையாக தங்குகிறார்.

    இந்நிலையில், ஊர்வசியிடம் மிகவும் சகஜகமாக பேசி நட்பாக பழகி வருகிறார் ஜோதிகா. ஊர்வசி அவரது பள்ளிப் பருவத்தில் விடுதியில் தங்கி படித்ததாகவும், தன்னுடன் பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகிய இரண்டு தோழிகள் இருந்ததாகவும் கூறுகிறார். மேலும் ஒரு பிரச்சனையில் மூன்று பேரும் பிரிந்து விட்டதாகவும் கூறி வருத்தப்படுகிறார். இதை கேட்ட ஜோதிகா, பேஸ்புக் மூலம் பிரிந்த நண்பர்களை தேடி கண்டுபிடித்து, பிரிந்த அதே தேதியில் ஒன்று சேர்க்க ஆசைப்படுகிறார்.



    பானுப்பிரியா, சரண்யாவை கண்டுபிடித்த ஜோதிகா, அவர்கள் இருவரும் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழவில்லை என்று அறிகிறார். இவர்களுடைய வாழ்க்கையை வாழவில்லை என்றும் அறிகிறார். இதையடுத்து இவர்கள் மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வெளியூருக்கு அழைத்து செல்கிறார்.

    இறுதியில், பானுப்ரியா, சரண்யாவை பிரிந்த குடும்பத்தினர்கள், அவர்களின் அருமையை புரிந்துக் கொண்டார்களா? மனம் மாறி அவர்களுக்கு உண்டான மரியாதையை கொடுத்தார்களா? அனைவரும் ஒன்று சேர்ந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் ஜோதிகா, துறுதுறுப் பெண்ணாகவும், நிருபராகவும் நடித்து மனதை கவர முயற்சித்திருக்கிறார். வழக்கமாக இவரது நடிப்பு ஓவராக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உண்டு. இதை, முந்தைய படத்தில் உடைத்தெரிந்து அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார். ஆனால், இப்படத்தில் மீண்டும் ஓவர் ஆக்டிங் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

    ஊர்வசி, படத்தில் முக்கியமான கதாபாத்திரம். தனக்கே உரிய வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக மாணவர்களுக்கு டியூசன் எடுக்கும் போது, மாணவர்களிடையே லாவகமாக பேசி டியூசன் பீஸ் வாங்குவது போன்ற காட்சியில் கைத்தட்டல் வாங்குகிறார்.



    பானுப்ரியா, அரசியல்வாதி நாசருக்கு மனைவியாக நடித்திருக்கிறார். ஒரு குடும்பப் பெண்ணாக தன் குடும்பத்திற்காக வாழ்வது என நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். தன் மகன் மனம் திருந்தி வருந்தும் காட்சியிலும், அவனை சமாதானம் செய்யும் காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பு.

    சரண்யா பொன்வண்ணன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்பவர். அதே போல் இந்த படத்தில் அவரது பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக, கணவனை நினைத்து புலம்பும் காட்சியில் ரசனை.

    மாதவன், ஜோதிகாவின் காதலன். இறுதி காட்சியில் மட்டுமே வருகிறார். 15 நிமிடமே வந்தாலும் இவர் வந்த பிறகுதான் படம் முழுமை அடைந்திருக்கிறது. இந்த 15 நிமிடம்தான் படத்திற்கு பலம்.



    நாசர், அவரது மகனாக நடித்திருப்பவர், இருவருமே ஒரு அரசியல்வாதியாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் பேசும் வசனங்கள் உடல் மொழி அனைத்தும் சிறப்பு.

    பிரம்மன், குற்றம் கடிதல் படம் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனர். குடும்ப பெண்களுக்கு அவர்களுடைய வீட்டில், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா. அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறாரா? என்பதை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். இந்த மாதிரியான படம் அவசியமான ஒன்று தான். இதை கொடுத்தத்திற்கு பெரிய கைத்தட்டல். ஆனால், படமாக பார்க்கும் போது அது கேள்வி குறித்தான். கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் தொடர்ச்சி இல்லாமல் காட்சிப்படுத்தி, பார்ப்பவர்களை சளிப்படைய செய்திருக்கிறார். கடைசி 15 நிமிடம் மட்டுமே ரசிகர்களுக்கு திருப்தியடைய வைத்திருக்கிறார்.

    ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவில் வடமாநிலங்கள் அனைத்தையும் காட்சிபடுத்தி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மகளிர் மட்டும்’ ஆண்களுக்கான படம்.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா - அனு இம்மானுவேல் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் விமர்சனம்.
    வின்சென்ட் அசோகன் பிறந்த நாள் அன்று அவரது மனைவி சிம்ரன் மற்றும் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது அவரது மகன் ஒரு பரிசு பொருள் கொடுக்கும் போது மின்னல் தாக்கி வின்சென்ட் அசோகனும், ஒரு மகனும் இறந்து விடுகிறார்கள்.

    அதுபோல், போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேனுக்கு பொது இடத்தில் ஒரு எறும்பு கடித்ததுபோல் உணர்கிறார். அதன்பின் நடக்கும் ஒரு மீட்டிங்கில் ஆடுகளம் நரேன் இறந்து விடுகிறார். இவர் இறப்பில் மர்மம் இருக்கிறது என்று போலீஸ் நம்புகிறது.

    இது ஒருபுறம் இருக்க, எந்த கேஸ் கொடுத்தாலும் தன்னுடைய திறமையால் விரைவில் துப்பறிந்து விசாரிக்கிறார் தனியார் துப்பறிவாளர் விஷால். ஆனால், இவரது திறமைக்கு ஏற்றார்போல் ஒரு கேஸும் அமையாமல் இருக்கிறது. இந்நிலையில், சிறுவன் ஒருவன் என் நாய் குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டு விட்டார்கள் என்று கூறுகிறான்.



    இதை விசாரிக்க ஆரம்பிக்கும் விஷாலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அதாவது, வின்சென்ட் அசோகன், போலீஸ் அதிகாரி சம்மந்தப்பட்ட தகவல்கள் கிடைக்கிறது.

    இந்த சம்பவங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்? அதன் பின்னணி என்ன? அதை எப்படி விஷால் துப்பறிந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற தனியார் துப்பறிவாளராக நடித்திருக்கிறார். கேஸ் கிடைக்கலையே என்று ஏங்கும் இவருக்கு, சிறந்த கேஸ் கிடைத்தவுடன் நின்று நிதானமாக ஒவ்வொன்றாக துப்பறியும் காட்சிகளில் சிறப்பாக நடித்து அசத்தி இருக்கிறார். இதுவரை பார்த்திராத விஷாலை இப்படத்தில் பார்க்கலாம்.



    விஷாலுக்கு அடுத்து படத்தில் அதிகம் கவர்வது வினய். ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அப்லாஸ் வாங்கியிருக்கிறார். விஷால் கூடவே இருந்து அவருக்கு உதவும் பாத்திரமாக நடித்திருக்கிறார் பிரசன்னா. பிக்பாக்கெட் பெண்ணாக நடித்திருக்கிறார் நாயகி அனு இம்மானுவேல். விஷாலை கண்டாலே பயந்து நடுங்கும் காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ஒரு பிக்பாக்கெட் காட்சியில் ரசிகர்களிடம் கைத்தட்டல் பெறுகிறார். வித்தியாசமான வேடம் ஏற்று நடித்திருக்கிறார் பாக்யராஜ். இறுதிக் காட்சியில் ரசிகர்களிடம் பரிதாபத்தை வாங்கிக்கொள்கிறார். ஸ்டைலிஷ் வில்லியாக வந்து அசத்தியிருக்கிறார் ஆண்ட்ரியா. சிம்ரனுக்கு கூடுதல் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

    துப்பறியும் கதையை எடுத்து அதை தனக்கே உரிய பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். கமர்ஷியல் படத்திற்கு உண்டான காமெடி காட்சிகள் படத்தில் ஏதும் இல்லை. விறுவிறுப்பான திரைக்கதை, மிஷ்கினின் கேமரா கோணங்கள் ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. விஷாலிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். விசாரணை காட்சிகளில் கூடுதல் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு துணை நின்றிருக்கிறது.

    மொத்தத்தில் ‘துப்பறிவாளன்’ துணிச்சலானவன்.
    திகில் பட வரிசையில் ரசிகர்களை பயமுறுத்த வந்திருக்கும் இட் படத்தின் விமர்சனம்...
    அமெரிக்காவின் டெர்ரி நகரில் வசித்து வரும் பில், தனது தம்பி ஜார்ஜிக்கு ஒரு மழை நாளில் காகிதக் கப்பலைச் செய்து தருகிறான். ஜார்ஜி அதை வைத்து மழையில் விளையாடும்போது, ஒரு வடிகாலுக்குள் விழுந்துவிடுகிறது காகிதக்கப்பல். அதற்குள் எட்டிப்பார்க்கும் ஜார்ஜியை, ஜோக்கர் வடிவிலிருக்கும் ஒருவன் கடித்துவிடுகிறான். பிறகு அந்த வடிகாலுக்குள் இழுத்து சென்று விடுகிறான்.

    தம்பியின் இழப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கும் பில்லுடன் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் சில சிறுவர்கள் ஒன்று சேர்கிறார்கள். தன்னுடைய தம்பி ஜார்ஜி உயிருடன் இருப்பதாக நம்பும் பில், பள்ளியின் இறுதி நாளான அன்று விடுமுறையில் தன் நண்பர்களுடன் இணைந்து தம்பியை தேட முயற்சிக்கிறார்கள். இதேபோல் பல இடங்களில் சிறுவர்கள் காணாமல் போகிறார்கள்.

    27 வருடங்களுக்கு முன்பு இந்த நகரை ஒரு தீய சக்தி அழித்ததாகவும், தற்போது அந்த தீய சக்திதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவாகவும் பில் நண்பர்களில் ஒருவன் கூறுகிறான்.

    இறுதியில் பில் தன் தம்பி ஜார்ஜியை கண்டுபிடித்தானா? ஜோக்கர் உருவத்தில் இருக்கும் அந்த நபர் யார்? அவன் இவ்வாறு செய்வதற்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஜார்ஜி முதன்முதலாக ஜோக்கரை சந்திக்கும்போது பயத்தின் உச்சத்திற்கு செல்கிறோம். ஆனால், அந்த அச்ச உணர்வை படம் முழுக்க இயக்குனரால் தக்கவைக்க முடியவில்லை.

    திகில் படம் என்ற வகையிலிருந்து பேண்டஸி வகை படமாக மாறிவிடுகிறது இட். பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங் எழுதிய இட் என்ற திகில் நாவலின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தில் தம்பியாக நடித்திருக்கும் ஜார்ஜி, தம்பியை இழந்து வாழும் பில், சிறுவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    பேயின் மீது நமக்கு ஏற்படும் எல்லா உணர்ச்சிகளுக்கும் காரணமான முதல் விஷயம் பயம் தான். அந்த பயத்தை மூலதனமாக வைத்து படம் உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொவருக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொரு ரூபத்திலும் வந்து பயமுறுத்துவது என அசத்தி இருக்கிறார் நடிகர் பில் ஸ்கர்ஸ்கார்ட்.

    தனது குறும்படமான மாமாவை மையமாக வைத்து முதல் படத்தில் ஹாரர் கிளப்பிய இயக்குனர் ஆண்ட்ரஸ் மஸ்சியி, இதிலும் கலக்கி இருக்கிறார். நாவலில் இருக்கும் பல விஷயங்களைக் கத்தரித்து சினிமாவிற்கு ஏற்ற வகையில் தந்திருப்பது ஸ்பெஷல். ஆனால், ஒரு ஆங்கிலப் படம் பார்ப்பது போல் இல்லாமல், தமிழ் படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

    பின்னணி இசை மூலம் பார்ப்பவர்களை அச்சுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பெஞ்சமின் வால்ப்பிஷ். சுங்-ஹூன் சுங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

    மொத்தத்தில் ‘இட்’ சுமாரான ஹிட்.
    நாயகன் அஜய், நாயகி கோபிகா மற்றும் பலர் நடிப்பில் ஹரி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘ஆறாம் வேற்றுமை’ படத்தின் விமர்சனம்.
    கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாயகி கோபிகா. தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இவரை, அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் வன அதிகாரி சேரன் ராஜ்.

    கோட்டைக்காடு கிராமத்திற்கு எதிர் மலையில் இருக்கிறது கூனிக்காடு. இங்கு வாழ்பவர்கள் அனைவரும் பேசத் தெரியாத காட்டு வாசிகள். இந்த ஊரில் தன் நண்பர்களுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அஜய்.

    ஒரு நாள் கோட்டைக்காடுக்கு வரும் அஜய், அங்கு நாயகி கோபிகாவை பார்த்து காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், ஊர் தலைவரான அழகுக்கு அவரை திருமணம் செய்வதற்கான சூழ்நிலை ஏற்படுகிறது.

    இறுதியில் கோபிகா, நாயகன் அஜய்யுடன் இணைந்தாரா? ஊர் தலைவருடன் திருமணம் நடந்ததா? வன அதிகாரி சேரன் ராஜ், கோபிகாவை அடைந்தாரா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் அஜய் இப்படத்தில் வசனங்கள் ஏதும் இல்லாமல், உடல் மொழியால் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். காட்டு வாசிகள் போல் வேகமாக ஓடுவது, நடப்பது என அனைத்திலும் திறம்பட செய்திருக்கிறார். நாயகி கோபிகா பாவாடை தாவணியில் படம் முழுக்க அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியின் தோழியாக வரும் உமாஸ்ரீக்கு முக்கியமான கதாபாத்திரம். கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

    வசனம் பேசாமலே ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார் யோகிபாபு. வன அதிகாரி சேரன் ராஜ், ஊர் தலைவர் அழகு ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    நாகரீகமான மலைவாழ் மக்கள், காட்டு வாசிகளான மலைவாழ் மக்கள் என இரண்டு கிராமங்களாக பிரித்து, அதில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி கிருஷ்ணா. புகழ் பெற்ற படமான ‘அப்போகலிப்டோ’ பாணியில் இப்படத்தின் தோற்றம் இருந்தாலும், தமிழ் படங்களுக்குண்டான காதல், சென்டிமென்ட் என அனைத்தையும் வைத்து, மாறுபட்ட கோணத்தில் உருவாக்கி இருக்கிறார்.

    கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். அறிவழகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஆறாம் வேற்றுமை’ அழகு.
    ஸ்ரீகாந்தன் இயக்கத்தில் சத்ய மூர்த்தி - சத்யா காய் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தப்புதண்டா' படத்தின் விமர்சனம்.
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலைதேடி வருகிறார் நாயகன் சத்ய மூர்த்தி. அந்த ஊரில் முன்னாள் எம்.எல்.ஏ.வான மைம் கோபியிடம்  வேலைபார்க்கும் சத்ய மூர்த்தியின் நண்பன், சத்ய மூர்த்தியிடம் நேர்மையாக இருந்தால் இந்த ஊரில் பிழைக்க முடியாது. ஏமாற்ற வேண்டும், பொய் சொல்ல வேண்டும் என்று பல அறிவுரைகளை கூறுவிட்டு, திருட்டு தொழில் நடத்தி வரும் ஜான் விஜய்யிடம் அனுப்பி வைக்கிறார். அங்கு ஏற்கனவே ஜான் விஜய்யுடன் 3 பேர் இணைந்து சிறிய அளவில் திருடி வருகின்றனர்.

    இந்நிலையில் தேர்தல் வந்ததால், அந்த தேர்தலில் கட்டாயம் ஜெயிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கும் மைம் கோபி அதற்காக பணத்தை வாரி வழங்க முடிவு செய்கிறார். மேலும் அந்த பணத்தை சத்யமூர்த்தியின் நண்பனிடம் கொடுத்து அனுப்பவும் திட்டமிடுகிறார். இந்த பண விஷயத்தை சத்யமூர்த்தியிடம் தெரிவிக்க அந்த பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று சத்ய மூர்த்தி, ஜான் விஜய்யிடம் கூறுகிறார்.



    இதையடுத்து முழு விவரத்தையும் சத்யமூர்த்தியின் நண்பனிடம் இருந்து வாங்கி, அவனுக்கு ஒரு பங்கு தருவதாக கூறி அந்த பணத்தை திருட முடிவு செய்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, மைம் கோபியிடம் வேலை பார்க்கும் மற்றொரு ஆள், அவரது நண்பனான போலீஸ்காரர் அஜய் கோஷ் இருவரம் இணைந்து அந்த பணத்தை திருட முடிவு செய்து பணத்தையும் கைப்பற்றிவிடுகின்றனர்.

    இதையடுத்து அஜய் கோஷிடம் இருந்த அந்த பணத்தை நாயகன் சத்ய மூர்த்தி எடுத்து செல்கிறார். சத்யமூர்த்தியிடம் இருந்து பணத்தை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று சத்யமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரத்தில் தனது பணத்தை திருயவர்களை பழிவாங்க முடிவு செய்யும் மைம் கோபியும் அவர்களை தேடி வருகிறார்.



    கடைசியில் சத்யமூர்த்தி அந்த பணத்துடன் தலைமறைவானாரா? அல்லது போலீசிடம் சிக்கிக் கொண்டாரா? மைம் கோபி அவரை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? அந்த பணம் என்னவானது? ஜான் விஜய் மற்றும் அந்த குழுவில் இருக்கும் மற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படம் முழுக்க சத்ய மூர்த்தி ஹீரோ காட்டாமல் படத்தின் முடிவில், தான் ஒரு ஹீரோயிசம் காட்டி நடித்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. தன்னுடன் இருப்பவர்கள் மொக்கை திருடர்கள் என்று தெரிந்தும், அடக்க ஒடுக்கமாக ஒன்றுமே தெரியாதது போல நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.

    குறைவான காட்சிகளில் வந்தாலும் ஸ்வேதா காயும் படத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மைம் கோபி ஒரு அரசியல்வாதிக்கு உண்டான அதிகார தோனியும் அவரது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திருடர்களை உருவாக்கி அனுப்பும் ஜாம்பவானாக ஜான் விஜய் சிறப்பாக நடித்திருக்கிறார். விசாரணை படத்தில் தெறிக்கவிட்டிருந்து அஜய் கோஷ் இந்த படத்திலும் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார். இ.ராமதாஸ் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    ஒரு புதுமையான கதையை திருட்டு என்பதை மையக் கருவாகக் கொண்டு வித்தியாசமாக இயக்கியிருக்கும் இயக்குநர் ஸ்ரீகாந்தனுக்கு பாராட்டுக்கள். கதைக்களம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் செல்வது சிறப்பு. படத்தில் இடம்பெற்றிருக்கும் டுவிஸ்ட்டுகளும் சிறப்பு. ஒரு வித்தியாசமான கதையை முயற்சி செய்திருக்கும் ஸ்ரீகாந்தன் திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் என்பது பார்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது.

    வினோத் பாரதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும் கேட்கும் ரகமாக இருக்கிறது.

    மொத்தத்தில் `தப்பு தண்டா' தப்பு தாண்டா.
    ×