என் மலர்tooltip icon

    தரவரிசை

    விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் அசோக் குமார் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையில் வெளியாகி இருக்கும் ‘நெருப்புடா’ படத்தின் விமர்சனம்...
    நாயகன் விக்ரம்பிரபு சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார். இவரது நண்பர்கள் நான்கு பேரும் இவருடன் இணைந்து அதே நோக்கத்துடன் இருந்து வருகிறார்கள். வேலை கிடைக்கும் வரை ஒரு வண்டியை வைத்துக் கொண்டு, எங்கெல்லாம் தீ பிடிக்கிறதோ அங்கு சென்று, தீயை அணைத்து உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

    தீயணைப்பு தேர்வுக்கு முன் தினம், விக்ரம்பிரபுவின் நண்பரில் ஒருவரான வருணிடம், அந்த பகுதியின் ரவுடியான வின்சென்ட் அசோகன் வம்புக்கு இழுக்க, அவர் அந்த ரவுடியை கீழே தள்ளிவிடுகின்றார். இதில் எதிர்பாராத விதமாக வின்சென்ட் அசோகன் இறந்து விடுகிறார்.

    இதிலிருந்து விடுபட விக்ரம்பிரபு மற்றும் நண்பர்கள் ஏரியா கவுன்சிலர் மொட்டை ராஜேந்திரனின் உதவியை நாடுகிறார்கள். இறந்தவர் ஊரிலேயே பெரிய தாதாவாக இருக்கும் மதுசூதனனின் நண்பர் என்று அனைவருக்கும் தெரியவருகிறது. இதையறிந்த மொட்டை ராஜேந்திரன் உதவி செய்ய மறுக்கிறார்.

    வின்சென்ட் அசோகன் இறப்புக்கு காரணமாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் விக்ரம் பிரபு, மதுசூதனன் நம்மை தேடி வருவதற்கு முன், நாம் மதுசூதனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால், விக்ரம்பிரபு மற்றும் நண்பர்களில் ஒருவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும் மதுசூதனன், விக்ரம்பிரபுவை மிரட்டிவிட்டு செல்கிறார்.

    இறுதியில், மதுசூதனனிடம் இருந்து விக்ரம்பிரபும் அவரது நண்பர்களும் தப்பித்தார்களா? விக்ரம் பிரபுவின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

    தீயணைப்பு வீரர் ஆகி உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடனும் இருக்கும் கதாபாத்திரத்தை தாங்கி நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. ரவுடியுடன் முறைப்பது, நிக்கி கல்ராணியுடன் காதல் செய்வது என நடிப்பில் முதிர்ச்சி பெற்றிருக்கிறார். விக்ரம்பிரபு-நிக்கி கல்ராணி ஜோடிப்பொருத்தம் சூப்பர்.

    மருத்துவக் கல்லூரி மாணவியாக வரும் நிக்கி கல்ராணி, துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    வழக்கம்போல் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார் மதுசூதனன். அப்பா பாசத்தை உணர்த்தும் விதமாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் பொன்வண்ணன். மொட்டை ராஜேந்திரனின் காமெடி ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் வருண். மற்ற நண்பர்களும் அவரவர் பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    ஒரு தீயணைப்பு வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் அசோக் குமார். காட்சிக்கு காட்சி திருப்பங்கள் வைத்திருப்பது படத்திற்கு பெரிய பலம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்க முடியாத அளவிற்கு படம் செல்கிறது. யாரும் எதிர்ப்பார்க்காத கிளைமாக்ஸ் கொடுத்திருப்பது சிறப்பு.

    ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

    மொத்தத்தில் ‘நெருப்புடா’ சிறப்புடா.
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒன் ஹார்ட் என்னும் பெயரில் புதிய படம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இப்படத்தின் விமர்சனம்
    ஒன் ஹார்ட் என்னும் பெயரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் புதிய படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு இசைக்கலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். தமிழில் இப்படியொரு படம் வருவது இதுவே முதல்முறை.

    ஏ.ஆர்.ரகுமான், அமெரிக்காவில் மேற்கொண்ட இசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து ஒரே படமாக உருவாக்கி இருக்கிறார். 87 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான சிறந்த பாடல்களை தேர்வு செய்து அதை ஒரு தொகுப்பாக பாடியிருக்கிறார்கள்.

    ஏ.ஆர்.ரகுமான், மேடையில் பாடியிருப்பதைக் பார்த்திருக்கிறோம். ஒரு லைவ்வான இசை நிகழ்ச்சியை அவர் எப்படி ஒருங்கிணைத்து நடத்துவதை நேரில் பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால், ஒரு இசை நிகழ்ச்சிக்கு முன் எப்படி தயாராக வேண்டும். ஒரு இசையை உருவாக்க தன் குழுவினருடன் எடுத்த முயற்சி. இசைக்கலைஞர்களுடன் இணைந்து எப்படி மேம்படுத்துகிறார் என்கிற பின்னணி குறித்தோ அவரின் ரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இவை அனைத்தையும் இப்படத்தில் பார்க்கலாம். மேலும் இசைக் குழுவினர் ஏ.ஆர்.ரகுமான் பற்றி பேசுவதும், தன்னுடைய குழுவினர்களைப் பற்றி ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துக் கொள்ளுவதும் இதில் சிறப்பான அம்சம். இப்படத்தில் இடம் பெறும் பாடல்களை அப்படியே பாடாமல், சில புது இசைகளை புகுத்தி மிகவும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள். மேலும் தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் எப்படியெல்லாம் இசையை கொடுக்கலாம் என்று விவரித்தும் இருக்கிறார். குறிப்பாக ஒரு சிறு கருவியை கணிணியுடன் இணைத்து அதில் இசை வரவைக்கும் காட்சி ரசிகர்களை மிரள வைக்கிறது.

    இது ஒரு திரைப்படமா அல்லது கதையாக இருக்கும் என்று நினைத்து போனால் ஏமாற்றம். இது ஒரு புதுவிதமான அனுபவம் என்றே சொல்லலாம். இசைக்கு அடிமையாகாதவர்கள் எவரும் இல்லை என்று சொல்லலாம். குறிப்பாக இசைப் பிரியர்கள், ஏ.ஆர்.ரகுமான் இசைக்கு அடிமையானவர்கள் அனைவருக்கும் இந்த படம் கொண்டாட்டமாக இருக்கும்.

    அவருடைய லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை இப்படம் கொடுத்திருக்கிறது. துள்ளியமான இசை, சிறு கருவிகளிலும் இசை, என இசையின் புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார். டால்மி அட்மாஸ் தொழில் நுட்பத்துடன் உள்ள திரையரங்குகளில் இப்படத்தை பார்த்தால் இப்படத்திற்காக இவர் எடுத்த நுட்பமான முயற்சியை மிகவும் ரசிக்கலாம். ஏ.ஆர்.ரகுமானின் இந்த புதுமையான முயற்சிக்கு பெரிய பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.

    மொத்தத்தில் ‘ஒன் ஹார்ட்’ புதிய அனுபவம்..
    தா.முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - கேத்தரின் தெரசா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கதாநாயகன்' படத்தின் விமர்சனம்.
    பயந்த சுபாவம் உடைய நாயகன் விஷ்ணு விஷாலுக்கு அரசு அலுவலகத்தில் வேலை கிடைக்கிறது. பணியில் சேரும் சமயத்தில் விஷ்ணுவின் பாலிய பள்ளித் தோழனான சூரியை சந்திக்கிறார். அதுமுதல் இருவரும் இணைபிரியாமல் நட்புடன் பழகி வருகின்றனர்.   பொதுவாக எந்த பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ளாத விஷ்ணு, சாலையை கடக்கக் கூட மற்றவர் துணையை தேடுபவர். அவ்வாறாக ஒருநாள் சாலையை கடக்கும் போது வண்டியில் வரும் நாயகி கேத்தரின் தெரசாவை பார்க்கிறார்.

    பார்த்த முதல் சந்திப்பிலேயே கேத்தரின் மீது அவருக்கு காதல் வந்துவிடுகிறது. இந்நிலையில், விஷ்ணுவை பார்க்கும் கேத்தரின் அவரை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு, அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் விடுகிறார். இதனால் மகிழ்ச்சியடையும் விஷ்ணு, சூரியிடம் அவளை காதலிப்பதாக கூறுகிறார். இந்நிலையில், அரசு வேலைக்கு தேர்வாகி இருக்கும் கேத்தரின் தெரசாவின் விண்ணப்பமும் இருக்கிறது.



    அதைப் பார்த்து குஷியாகும் விஷ்ணு விஷால், அவளது வீட்டு முகவரியை பார்க்க, அது அவரது வீட்டிற்கு, அடுத்த வீடு என்பது தெரிய வருகிறது. இயைதடுத்து தனது குடும்பத்தோடு பெண் கேட்க செல்வது போல சரிபார்ப்புக்காக செல்கிறார். இதையடுத்து கேத்தரினிடம் அவரது காதலையும் தெரிவிக்கிறார். கேத்தரின் அவளது பெற்றோரிடம் பேசச் சொல்ல, அவரது அப்பாவிடம் கேத்தரினை திருமணம் செய்து வைக்கும்படி கேட்கிறார்.

    ஆனால் விஷ்ணுவுக்கு, கேத்தரினை திருமணம் செய்து வைக்க அவளது தந்தை மறுப்பு தெரிவிக்கிறார். இதற்கு முன்னதாக ஏற்பட்ட சில பிரச்சனைகளில் விஷ்ணு பயந்து ஓடியதால் அவருக்கு கேத்தரினை திருமணம் செய்து வைக்க முடியாது. தனது மகளை ஒரு ஆம்பளைக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கூறிவிடுகிறார். இந்நிலையில், கேத்தரினும் தன்னை காதலிக்கிறாள் என்பதும் விஷ்ணுவுக்கு தெரிய வருகிறது.

    இதனால் அவமானத்துக்கு உள்ளாகும் விஷ்ணு விஷால் அடுத்ததாக என்ன செய்தார்? அவர்களது திருமணத்திற்கு கேத்தரின் தெரசாவின் தந்தை அனுமதி தந்தாரா? கேத்தரின் தெரசாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.



    பயங்கொள்ளியாக விஷால் விஷாலின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. காதல், நட்பு, காமெடி என அனைத்திலும் விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒருசில இடங்களில் மிகைநடிப்பை வெளிப்படுத்துவது போல இருந்தாலும், அதிலும் ரசிக்க வைத்திருக்கிறார். விஷ்ணு - கேத்தரின் இடையேயான காதலும் ரசிக்கும்படி இருக்கிறது. கேத்தரின் தெரஸா கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் அவரது வழக்கமான ஸ்டைலில் வந்து செல்கிறார்.

    விஷ்ணு விஷாலுடனே பயணம் செய்யும் சூரி அவரது சாயலில் காமெடியில் கலக்கியிருக்கிறார். துபாய் ஷேக்காக வரும் ஆனந்த்ராஜ், விஷ்ணுவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அருள்தாஸ் வில்லத்தனத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ராஜேந்திரன் அவரது குரலாலே கலகலப்பை ஏற்படுத்துகிறார்.

     

    படத்தில் கதை என்று சொல்லும்படி பெரிதாக இல்லையென்றாலும், காமெடிக்கு முக்கித்துவம் கொடுத்திருப்பதால் படம் ரசிக்கும்படி இருக்கிறது. எனினும் திரைக்கதைக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்பது பார்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது. விஷ்ணு விஷால் - சூரி சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. சிம்புவின் பின்னணி வர்ணனைக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    ஜே.லக்‌ஷ்மண் குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது.

    மொத்தத்தில் `கதாநாயகன்' சிரிக்க வைக்கிறான்.
    ராசாவிக்ரம் இயக்கத்தில் அப்துல்லா - ஜோதிசா - சாரிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாய மோகினி' படத்தின் விமர்சனம்.
    நாயகன் அப்துல்லா (பிரகாஷ்) தன்னுடைய தாய்மாமாவான இமான் அண்ணாச்சியுடன் ஊர் ஊராக சென்று துணி விற்கும் தொழிலை செய்து வருகிறார். இவர்கள் இருக்கும் அதே ஊரில் சாமியாராக இருக்கும் கே.ஆர்.விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு செல்லும் இவர்களிடம், வியாபாரம் சிறப்பாக நடக்கும், ஆனால், எந்தப் பெண்ணையும் தொடக்கூடாது என்று கூறுகிறார் கே.ஆர்.விஜயா.

    சாமியார் சொன்னபடி வியாபாரம் சிறப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், நாயகி சாரிகாவை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். ஆனால், சாரிகாவோ ஒரு ஆவி என்று தெரியாமலேயே காதலித்து வருகிறார். இந்நிலையில், பிரகாஷ் பல பெண்களிடம் பேசுவதை பார்க்கும் ஊர்மக்கள், அவரை அடித்து கொன்று விடுகிறார்கள்.



    பிரகாஷின் பிணத்தை வைத்துக் கொண்டு இரவில் அழுதுக் கொண்டு ஊர் மக்களை அச்சுறுத்தி வருகிறார் சாரிகா. இந்நிலையில், மற்றொரு நாயகியான ஜோதிஷா தனியார் தொலைக்காட்சியில் பணி புரிந்துக் கொண்டு, ஆவி, இருக்கிறதா? இல்லையா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

    ஊர் மக்கள் பலரும் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு போன் செய்து, எங்கள் ஊரில் ஒரு ஆவி இருப்பதாக அழைக்கிறார்கள். இதைப்பற்றி அறிய கேமராமேன் அப்துல்லா (சிவா) உடன் அந்த ஊருக்கு வருகிறார். தன்னுடைய காதலன் பிரகாஷ் உருவம் போல் இருக்கும் சிவாவை பார்த்தவுடன் அவரை அடைய நினைக்கிறார் சாரிகா.

    இறுதியில், ஆவியாக இருக்கும் சாரிகாவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    முதல் படத்திலேயே பிரகாஷ், சிவா என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அப்துல்லா. கிராமத்து இளைஞன், நகர இளைஞன் என நடிப்பில் வித்தியாசம் காண்பிக்க முயற்சித்திருக்கிறார். சாரிகா ஆவியாக வந்து மிரட்டியிருக்கிறார். கிளாமருடன் மாடர்ன் மோகினியாக வலம் வந்திருக்கிறார். மற்றொரு நாயகியான ஜோதிஷா தொலைக்காட்சி நிருபராக துணிச்சலுடன் நடித்திருக்கிறார். அவருக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இமான் அண்ணாச்சி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கிறார் கே.ஆர்.விஜயா. சாமியார் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    மோகினி படம் என்றாலே ஒருவர் மீது ஆசைப்படுவது, அவரை அடைய விரும்புவது என்று வழக்கமான கதையை மையமாக வைத்தே உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ராசாவிக்ரம். தற்போதுள்ள தொழில் நுட்பத்திற்கு ஏற்றார் போல் மாய மோகினியாக உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள். கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகளை படத்தில் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். ராஜனின் ஒளிப்பதிவு படத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மாய மோகினி’ பழைய பேய்.
    துவாரகா ராஜா இயக்கத்தில் துருவா - வெண்பா நடிப்பில் வெளியாகி இருக்கும் `காதல் கசக்குதய்யா' படத்தின் விமர்சனம்.
    படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் துருவா. அவரது தந்தையும், தாயும் விபத்து ஒன்றில் சிக்கிவிட அதில் அவரது தந்தை இறந்துவிட, தாய் கோமாவிற்கு செல்கிறார். வேலைக்கு சென்று கொண்டே, கோமாவில் இருக்கும் தாயையும் துருவா பொறுப்புடன் கவனித்துக் கொள்கிறார். அவரது அம்மாவின் சிகிச்சைக்கு உண்டான செலவை அரசே ஏற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வருகிறது.

    அரசு சிகிச்சையினாலோ என்னவோ, வெகு நாட்களாக சிகிச்சை பெற்றும் துருவாவின் அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், துருவாவின் தாய் மாமா அவரது அம்மாவை கருணை கொலை செய்யச் சொல்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் துருவா, தனது தாய் விரைவில் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்கிறார்.



    இந்நிலையில், சிகரெட் பிடிப்பதையே பொழுதுபோக்காக கொண்ட துருவாவை, 12-ஆம் வகுப்பு மாணவியான நாயகி வெண்பா பார்க்கிறார். பார்த்த உடனே அவர் துருவா மீது காதல் வருகிறது. அவளது தோழிக்கு ஆண் நண்பர்கள் இருந்தும், தனக்கு யாரும் இல்லையே என்ற கவலையில் இருக்கும் வெண்பா, துருவாவை பின்தொடர்ந்து அவரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். ஒருநாள் துருவாவின் போன் நம்பரையும் திருடி நாயனுக்கு போன் செய்து அவனை காதலிப்பதாக சொல்லி நேரில் சந்திக்க வரச் சொல்கிறாள்.

    தன்னை ஒருபெண் காதலிக்கிறாளா என்ற ஆனந்தத்தில் அவளை பார்க்க சென்ற துருவா நாயகியை பார்த்தவுடன் அதிர்ச்சியடைகிறார். 6 அடி உயரமுடைய தனக்கு குள்ளமான பெண்ணா என்று மனதில் நினைக்கும் துருவா வெண்பாவை தவிர்க்க நினைக்கிறார். ஆனால் நாயகி விடாப்பிடியாக துருவாவை துரத்தி காதலித்து வருவதால், ஒரு கட்டத்தில் துருவாவும், வெண்பாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.



    இந்நிலையில் வெண்பாவை ஒருதலையாக காதலித்து வரும் பள்ளி மாணவன் ஒருவர், வெண்பா, துருவாவுடன் சேர்ந்து ஊர்சுற்றுவதாக கூறுகிறார். இந்நிலையில், வெண்பாவுடன் தனது வீட்டில் இருக்கும் துருவாவை பார்த்த சார்லி, வெண்பாவை அடித்து வீட்டிற்கு இழுத்து செல்கிறார். இதனால் ஏற்பட்ட மனவேதனை மற்றும் அவமானத்தால் மனம் நொந்து போகிறார் துருவா. ஆனால், வெண்பா எப்போதும் துருவாவையே நினைத்து உருகுகிறாள்.

    இறுதியில் கோமாவில் இருக்கும் துருவாவின் தாய் மீண்டு வந்தாரா? துருவா, வெண்பாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.



    வேலையில்லாமல் ஊர்சுற்றி வரும் இளைஞர்களுக்கு மத்தியில், வேலைக்கு சென்றுகொண்டே அம்மாவையும் பொறுப்புடன் பார்த்துக் கொள்ளும் பொறுப்புள்ள இளைஞனாக துருவா நடித்திருக்கிறார். தனது கருத்தில் உறுதியுடன் இருக்கும் துணிச்சலான பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். பள்ளி சீருடையில் மாணவி போல தோன்றினாலும், மற்ற உடைகளில் ஒரு நாயகிக்கு உண்டான தோற்றத்துடன் ரசிக்க வைக்கிறார்.

    சார்லி அனுபவ நடிப்பால் அசர வைத்திருக்கிறார். மற்றபடி அபிராம் கிருஷ்ணா, ஜெய கணேஷ், வைஷாலி என மற்ற கதாபாத்திரங்களும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    10 மாதம் சுமந்து பெற்ற தாயை உயிருள்ள வரை காக்க வேண்டும் என்ற அம்மா பாசத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் இயக்குநர்  துவாரகா ராஜா. மறுபுறத்தில் காதலியின் உயரம் குறைபாட்டால் அவளது காதலை ஏற்க மறுத்து பின்னர் அவளிடமே சிக்கிக் கொள்ளும்படியான காட்சிகள் என ரசிக்கும்படி இருக்கிறது. நாயகனுக்கு காதல் வந்த பின்னர் கோமாவில் இருக்கும் அம்மா குறித்த காட்சிகளே வைக்காததால் படத்தின் தலைப்புக்கு ஏற்ப திரைக்கதை கொஞ்சம் கசக்கும்படியாகத் தான் இருக்கிறது. சிகரெட் பிடிப்பது தவறு என்று சொல்லிவிட்டு, சிகரெட் பிடிப்பது போன்று பெரும்பாலான காட்சிகள் இடம்பெற்றிருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

    சி.சரண் குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `காதல் கசக்குதய்யா' உண்மை.
    பேட்ரிக் ஹக்ஸ் இயக்கத்தில் ரயான் ரெனால்ட்ஸ் - சாமுவேல் ஜாக்சன் - எலோடி யங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தி ஹிட்மேன்ஸ் பாடிகார்டு' படத்தின் விமர்சனம்.
    நாயகன் ரயான் ரெனால்ட்ஸ் பாதுகாப்பு அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவரது காதலியான எலோடி யங் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ரயான் ரெனால்ட்ஸ் பாதுகாப்பில் இருக்கும் போது பிரபலமானவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரை சுட்டது யார் என்று தெரியவில்லை. இதனால் மூத்த அதிகாரியாக இருக்கும் அவரது தரம் குறைந்துவிடுகிறது.

    மேலும் தனது இந்த நிலைக்கு போலீஸ் அதிகாரியாக இருக்கும் அவரது காதலி தான் காரணம். அவள் அளித்த தகவலின்படி தான் போலீசார் சுட்டதாக நினைத்து எலோடி யங்கை விட்டுப் பிரிகிறார். இது ஒருபுறம் இருக்க சோவித் யூனியனில் அதிபராக இருக்கும் கேரி ஓல்ட்மேன் சர்வதியாகாரியாக ஆட்சி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு பதவியில் இருந்து இறக்கப்படுகிறார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.



    கேரி ஓல்ட்மேனுக்கு எதிராக சாட்சி சொல்ல பல கொலைகளை செய்துவிட்டு சிறைதண்டனை அனுபவித்து வரும் சாமுவேல் ஜாக்சனை போலீசார் அணுகுகின்றனர். அவர் அதற்கான ஆதராங்களை வெளியிட்டால், சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாமுவேல் ஜாக்சனின் மனைவியான சல்மா ஹயக்கை விடுதலை செய்வதாக சொல்ல, அவர் அதற்கு ஒப்புக் கொள்கிறார். இதையடுத்து எலோடி யங்கின் குழுவுடன் பாதுகாப்பாக சாமுவேல் ஜாக்சனை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

    நீதிமன்றத்திற்கு அவரை கொண்டு செல்லும் வழியில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் சாமுவேல் ஜாக்சன், எலோடி யங்கை தவிர்த்து மற்ற அனைவரும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். சாமுவேல் ஜாக்சன் காலில் குண்டுக்காயம் பட்ட நிலையில் இருக்க தனது முன்னாள் காதலனான ரயான் ரெனால்ட்ஸை, எலோடி யங் உதவிக்கு அழைக்கிறாள். அவளுக்கு உதவி செய்தால் அவர் இழந்த பதவியை மீண்டும் பெற தான் உதவுவதாக கூற ரயான் உதவிக்கு வருகிறார்.



    இதையடுத்து உதவ முன்வரும் ரயான், சாமுவேல் ஜாக்சனை பார்த்த உடனேயே அவருடன் சண்டைபோடுகிறார். அவரை பலமுறை கொல்ல முயற்சித்திருப்பதாகவும் கூறுகிறார். இதையடுத்து சாமுவேல் ஜாக்சனை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்படி ரயானிடம், எலோடி யங் கூறிவிட்டு செல்கிறார்.

    ரயான், சாமுவேல் ஜாக்சன் செல்லும் வழியில் எல்லாம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மேலும் இருவரும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் குறித்த பேசி வரும் போது, சாமுவேல் ஜாக்சனிடம், எலோடி யங்கை பிரிந்தது குறித்து ரயான் கூறுகிறார். இதையடுத்து அவரது பாதுகாப்பில் இருந்த பிரபலமானவரை சுட்டுக் கொன்றது எலோடி யங் அல்ல என்றும், தானே அவரை சுட்டுக் கொன்றதாகவும் சாமுவேல் ஜாக்சன் கூறுகிறார். இதையடுத்து சாமுவேல் ஜாக்சனிடம் கோபித்துக் கொண்டு ரயான் சென்று விடுகிறார்.



    கடைசியில் சாமுவேல் ஜாக்சன் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பாக சென்று சேர்ந்தாரா? கோபித்துக் கொண்டு சென்ற ரயான், அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றாரா? ரயான் தனது தவறை உணர்ந்தாரா? ரயான் ரெனால்ட்ஸ் - எலோடி யங் மீண்டும் இணைந்தார்களா? அதிபர் கேரி ஓல்ட்மேனுக்கு தண்டனை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பாதுகாப்பு அதிகாரியாகவும், காதலனாகவும், காதலியை பிரிந்து தனது தவறை உணரும் கதாபாத்திரத்தில் ரயான் ரெனாலட்ஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுக்க சாமுவேல் ஜாக்சனுடன் இணைந்து அவர் அடிக்கும் லூட்டியும் ரசிக்கும்படி இருந்தது. படத்தில் நாயகனை விட சாமுவேல் ஜாக்சனின் கதாபாத்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது நடையும், பாவனையும், பேச்சும் ஒவ்வொன்றுமே ரசிக்கும்படி இருக்கிறது. ஒரு காரியத்தை செய்யலாம் என்று மற்றவர்கள் யோசிக்கும் முன்னரே அதனை அசால்ட்டாக செய்துவிடும் சாமுவேல் ஜாக்சன் முதிர்ச்சியான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்கும் கதாபாத்திரத்தில் சாமுவேல் ஜாக்சன் நடித்திருக்கிறார்.



    எலோடி யங் ஒரு போலீஸ் அதிகாரியாகவும், காதலியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பதற்றமான காட்சிகளில் ரயான் வழியும் போது அவரிடம் கோபப்படும் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. கேரி ஓல்ட்மேன் அதிபராக, வில்லத்தனத்துடன் நடித்திருக்கிறார். சாமுவேல் ஜாக்சன் - சல்மா ஹயாக் இடையே நடக்கும் உரையாடலில் சல்மாவின் நடிப்பு முதிர்ச்சியை காட்டுகிறது.

    ஆக்‌ஷனுடன், காமெடியையும் சேர்ந்து இயக்கி பேட்ரிக் ஹக்ஸ் ரசிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையை அதற்கேற்ப அமைத்திருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக ரயான், சாமுவேல் ஜாக்சன் கூட்டணி படத்திகே பலத்தை கூட்டியிருக்கிறது. ஒரு பரபரப்பான காட்சியிலும் சாமுவேல் ஜாக்சன் செய்யும் குறும்பு, காமெடி ரசிக்கும்படி இருக்கிறது.

    ஜுல்ஸ் ஓ லவ்லினின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. அட்லி ஒர்வர்சோன் இசையில் பின்னணி இசை சிறப்பு. தமிழ் டப்பிங்குக்கு ஏற்ப வசனங்கள் எழுதியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `தி ஹிட்மேன்ஸ் பாடிகார்டு' அதிரடி காமெடி சரவெடி
    ரசிகர்களின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘புரியாத புதிர்’ படத்தின் விமர்சனம்.
    இசையமைப்பாளராக வேண்டும் கனவோடு இருக்கும் விஜய் சேதுபதி, நண்பனின் இசைக் கருவிகள் விற்கும் கடையை பார்த்துக் கொள்கிறார். இந்தக் கடைக்கு வயலின் ஒன்றை ஆர்டர் கொடுக்க வருகிறார் காயத்ரி. விலாசத்தை வாங்கி விஜய் சேதுபதியே கொண்டு கொடுக்கிறார். இதில் இருந்து இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.

    இதற்கிடையில் விஜய் சேதுபதி தன்னுடன் படித்த நண்பர்களில் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருக்கிறார். ஒருவர் பெண் கூட தவறாக தொடர்பு இருந்து வருகிறார். ஆனால், விஜய்சேதுபதி நேர்மையாக ஒழுக்கத்துடன் இருந்து வருகிறார்.

    விஜய்சேதுபதியும், காயத்ரியும் காதலித்து வரும் நிலையில், தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதாக விஜய் சேதுபதியிடம் கூறுகிறார் காயத்ரி. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாதானம் படுத்துகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில், காயத்ரியின் ஆபாச போட்டோ ஒன்று விஜய் சேதுபதியின் போனுக்கு வருகிறது. அந்த நம்பர் யாருடையது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். மற்றொருநாள் ஷாப்பிங் மாலில் காயத்ரி உடை மாற்றும் வீடியோ ஒன்று விஜய் சேதுபதிக்கு வருகிறது. அடுத்து காயத்ரி குளிக்கும் வீடியோ ஒன்றும் வருகிறது.

    என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஒரு போன் வருகிறது. இதுபோன்ற வீடியோக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு வேலையை செய்ய சொல்லி கட்டளை வருகிறது. இறுதியில் அந்த கட்டளையை விஜய் சேதுபதி ஏற்றாரா? இந்த துன்புறுத்தலுக்கு பின் யார் இருக்கிறார்? என்பதே மீதிக்கதை.

    படத்தில் கல்லூரி முடித்து விட்டு இசைக் கலைஞராக வேண்டும் என்று ஆர்வதுடன் இருக்கும் இளைஞராக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. முந்தைய படங்களை விட இதில் ரொமன்ஸ் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஒவ்வொரு முறை வீடியோ வரும்போதும், அந்தப் பதற்றத்தை அப்படியே ரியலாகவே காண்பித்திருக்கிறார்.


    காயத்ரியை சுற்றியே படம் நகர்கிறது. நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்ததை உணர்ந்து, அதை சிறப்பாகவே பயன்படுத்தி இருக்கிறார். ரொமன்ஸ் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்திருக்கிறார் மகிமா. திரையில் பார்க்காவும் அழகாக இருக்கிறார்.

    ஆபாச படங்களை பார்ப்பதும், அதை மற்றவர்களுக்கு பகிர்வதும் தவறு என்றும், தனது குடும்பத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் வலி எப்படி இருக்குமோ, அப்படித்தான் பார்ப்பவர்களும், பகிர்பவர்களும் சிந்திக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இதில் காதல், திரில்லர் கலந்து கொடுத்திருக்கிறார். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து இன்பமடையும் எல்லோருக்கும் சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். திரில்லர் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை சிறப்பாக கொடுத்திருக்கிறார் தினேஷ் கிருஷ்ணன்.

    மொத்தத்தில் ‘புரியாத புதிர்’ புரிந்தவர்களுக்கு மட்டும்.
    ராமகிருஷ்ணன், சவுந்தரராஜா, அமலா ரோஸ் ஆகியோர் நடிப்பில் விஜய் சங்கர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஒரு கனவு போல’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் ராமகிருஷ்ணனும் - சவுந்தர ராஜாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தாய், தந்தையை இழந்த சவுந்தரராஜா படிப்பை முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலைக்காக காத்திருக்கிறார். லாரி ஓட்டுநராக வரும் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே சவுந்தரராஜா வளர்ந்து வருகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் அன்போடு ஒருவரையொருவர் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், ராமகிருஷ்ணனுக்கு நாயகி அமலா ரோஸை பெண் பார்க்க செல்கின்றனர். மாப்பிள்ளை லாரி ஓட்டுநர் என்பதால் ராமகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து கொடுக்க பெண் வீட்டார் மறுக்கின்றனர். ராமகிருஷ்ணனுக்கு பெண் பிடித்திருந்தால், அமலா ரோஸை சந்தித்து பேசும் சவுந்தர ராஜா இருவருக்கும் இடையேயான நட்பின் புனிதம் குறித்து கூற, அமலா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

    இதையடுத்து ராமகிருஷ்ணனுக்கும், அமலாவுக்கும் திருமணமும் நடந்துவிடுகிறது. திருமணத்திற்கு பின்னர் தனியாக குடியேறும் ராமகிருஷ்ணன் தனது நண்பனை தனது வீட்டிலேயே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ராமகிருஷ்ணனின் வற்புறுத்தலால் சவுந்தர ராஜா பெரும்பாலும் அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டு வருகிறார்.

    ஒருநாள் வீட்டிற்கு உணவருந்த வந்த சவுந்தர் ராஜா மழை காரணமாக வெளியே செல்லமுடியாமல் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே தங்குகிறார். ராமகிருஷ்ணனுக்கு வேலையின் பளு காரணமாக வீட்டிற்கு வர தாமதமாகிறது. மழையால் ஏற்பட்ட ஒருவித உணர்ச்சியால் அமலாவை தொடுகிறார் சவுந்தரராஜா. தொட்டவுடன் அமலா பதறிக் கொண்டு எழுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் சவுந்தரராஜா அங்கிருந்து சென்றுவிடுகிறார். மேலும் தனது நண்பனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதை நினைத்து வருத்தம் கொண்டு மனம் நொந்து போகிறார்.


    இந்த சம்பவத்தை அடுத்து ராமகிருஷ்ணன் வீட்டிற்கு வராமல் தவிர்த்து வருகிறார் சவுந்தரராஜா. வீட்டிற்கு வராதது குறித்து ராமகிருஷ்ணன் சவுந்தரராஜாவிடம் கேட்க, அதன் பின்னணியில் என்ன நடந்தது? அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டதா? குற்ற உணர்ச்சியில் இருந்து சவுந்தரராஜா மீண்டு வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்தை.

    ராமகிருஷ்ணன் ஒரு படிக்காத லாரி டிரைவராவும், நட்புக்கு மரியாதை கொடுப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பன் மற்றும் மனைவி, மீது சந்தேகப்படாத கதாப்பாத்திரத்தை ஏற்று, அதை திறம்பட செய்திருக்கிறார். சவுந்தரராஜா ஒரு படித்த இளைஞராகவும், தனக்கு வாழ்க்கை கொடுத்த ராமகிருஷ்ணன் மீது மரியாதையும், பாசமும் கொண்டவராகவும் நடித்திருக்கிறார். செய்த தவறை எண்ணி, வருத்தப்படும் காட்சிகளில் நடிப்பில் முதிர்ச்சி பெற்றிருக்கிறார். நாயகி அமலா, குடும்பப்பெண்ணாக பொறுப்பான கதாபாத்திரத்தை ஏற்று பொறுப்புடன் நடித்திருக்கிறார்.

    ஒரு ஆண், பெண் மீது ஏற்படும் சபலத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அதனால் ஏற்படும் பிரச்சனையும், நல்லவனாக இருந்தால் அந்த குற்ற உணர்ச்சியே அவனை கொன்று விடும் என்பதை மையக்கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் சங்கர். இதில் நண்பர்களுக்குள் இருக்கும் ஆழமான நட்பையும், கணவன், மனைவிக்குள் இருக்கும் பாசத்தையும் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்.

    ராம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். அழகப்பனின் ஒளிப்பதிவும் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஒரு கனவு போல’ ஏக்கம்.
    நித்திலன் இயக்கத்தில் பாரதி ராஜா - விதார்த் - டெல்னா டேவிஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `குரங்கு பொம்மை' படத்தின் விமர்சனம்.
    தஞ்சாவூரில் மிகவும் செல்வந்தராகவும், தாதாவாகவும் இருக்கும் தேனப்பனிடம் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. இவரது மனைவி, மகள், மகன் விதார்த் மற்றும் ஊர் மக்கள் பலரும் பாரதி ராஜா, தேனப்பனிடம் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவருடன் விசுவாசத்துடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், ஐந்து கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலை ஒன்று திருடப்பட்டு தேனப்பனின் கைக்கு வருகிறது. இந்த சிலையை சென்னை இராயபுரத்தில் இருக்கும் குமரவேல் மூலம் விற்க முயற்சி செய்கிறார். அதன்படி அந்த சிலையை குரங்கு பொம்மை உள்ள பையில் போட்டு பாரதிராஜாவிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். பாரதிராஜாவும் சென்னையில் கால்டாக்ஸி டிரைவராக இருக்கும் விதார்த்துக்கு தெரியப்படுத்தாமலே வருகிறார்.



    சென்னை வந்த பாரதிராஜாவிடம் அந்த குரங்கு பொம்மை பையை வாங்கிக் கொண்டு, தேனப்பனிடம் பாரதிராஜா வரவில்லை என்று கூறிவிடுகிறார். பாரதிராஜாவை தொடர்பு கொள்ள முடியாததால் சிலை என்ன ஆனது என்று பதட்டமாகிறார் தேனப்பன். இதற்கிடையில் சென்னைக்கு வந்த அப்பா காணவில்லை என்று அம்மா தகவல் கொடுக்க, விதார்த் பாரதிராஜாவை தேட ஆரம்பிக்கிறார்.

    இறுதியில், பாரதிராஜாவை விதார்த் கண்டுபிடித்தாரா? தேனப்பனுக்கு சிலை கிடைத்ததா? குமரவேலின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    தவறான ஒருத்தரிடம் இருந்தாலும், நட்பு ரீதியில் அவர் செய்த நன்மைக்காவும் அவருடன் இருக்கும் புரிதலுக்காகவும் அவருடன் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் பாரதிராஜா. தான் கொல்லப்பட இருக்கும் நிலையில், அவர் பேசும் நேர்மையான உரையாடலை பேசி சிலிக்க வைத்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் பாரதிராஜா மூலம் நிறைவு பெற்றிருக்கிறது.

    தேனப்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் நல்லவனா, கெட்டவனா என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். ரசிகர்கள் மனதில் நிற்கும் படி நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட நடித்து வரும் குமரவேல், இந்த படத்தின் மூலம், நடிப்பில் புதிய பரிமாணத்தை காண்பித்திருக்கிறார்.



    தனக்கென ஒரு பாதை அமைத்து சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து வரும் விதார்த், இந்த படத்தில் நாயகன் அந்தஸ்து இல்லாமல், தந்தைக்கு ஏற்ற மகனாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகி கதாபாத்திரத்திற்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

    படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் அழகாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் நித்திலன். அப்பா, மகனுக்கும் இடையேயான பாசத்தையும், நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பையும் யதார்த்தமாக காண்பித்திருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

    அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் கதையை விட்டு நகராமல் கொடுத்திருக்கிறார். உதயகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘குரங்கு பொம்மை’ அழகான பொம்மை.
    ராஜியா கிருஷ்ணா அவரே நடித்து இயக்கியிருக்கும் `அட்ரா ராஜா அடிடா' படத்தின் விமர்சனம்.
    போக்குவரத்து காவலரான நாயகன் ராஜியா கிருஷ்ணா தொப்பை நிறைந்த போலீசாக வருகிறார். அரசு ஊழியராக இருந்து கொண்டு, ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தி வசூல் வேட்டைகளிலும் ஈடுபடும் இவருக்கு மனைவியாக ஹேமலதாவும், ஒரு மகனும் இருக்கின்றனர். சம்பளத்தை தவிர்த்து அவர் வசூலிக்கும் கிம்பளங்கள் அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை.

    இதுபோன்ற தவறான வழிகளில் சம்பாதிக்க வேண்டாம் என்று ஹேமலதா பலமுறை கூறியும் ராஜியா வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. ராஜியா தனது மனைவி, மகன் மீது மிகுந்த பாசம் கொண்டிருப்பதால் ஹேமலதா அதனை பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

    இதுஒருபுறம் இருக்க காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியை தனது கையில் போட்டுக் கொள்ளும் பெண் ஒருவர், அந்த அதிகாரியின் பெயரை சொல்லி சில இடங்களில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில், போக்குவரத்தை தனது ஸ்டைலில் நடனமாடி சரிசெய்யும் ராஜியாவை பார்க்கும் அந்த பெண்ணுக்கு அவரை பிடித்து போக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது.

    இந்நிலையில், அந்த வழியாக செல்லும் ஒரு இளைஞனை மடக்கிப் பிடிக்கும் ராஜியா அவனிடம் காசை கறக்க நினைத்து வண்டிக்குரிய ஆவணங்களை சமர்பிக்க கூற, தனது அப்பா மருத்துவமனையில் உயிருக்கு போராடுவதாகவும், அவரை காப்பாற்ற மருந்து வாங்க அவசரமாக வந்ததால் ஆவணங்களை எடுத்துவரவில்லை என்று கூறுகிறார். அவனது பேச்சை கேட்காமல் அந்த இளைஞனை அனுப்ப மறுப்பதால், அந்த இளைஞனின் தந்தை இறந்துவிடுகிறார்.



    இதையடுத்து ராஜியாவை தான் பழிவாங்கியே தீருவேன் என்று அந்த இளைஞன் கூறி செல்கிறார். இந்நிலையில், ராஜியா பணிநீக்கம் செய்யப்படுவதாக அவரது வீட்டுக்கு தபால் வர, இதுகுறித்து ஹேமலதா, ராஜியாவிடம் கூறும் போது அவரது போன் உடைந்து விடுகிறது. இதனால் மனவேதனையில் மது அருந்தும் ராஜியாவின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறான்.

    மகனை இழந்த துக்கத்தில், ராஜியாவால் தான் தனது மகன் இறந்ததாகக் கூறி ஹேமலதா கணவனை விட்டுப் பிரிகிறாள். மகனையும் இழந்து, மனைவியையும் பிரிந்த துக்கத்தில் தனது தவறை ராஜியா உணர்ந்தாரா? மீண்டும் மனைவியுடன் இணைந்தாரா? அனைவரையும் ஏமாற்றிய அந்த பெண் ராஜியாவையும் ஏமாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ராஜியா கிருஷ்ணா ஒரு போலீஸ் அதிகாரியாக காட்சிக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அவர் செய்யும் காமெடியும் ரசிக்கும் படி இருக்கிறது. ஹேமலதா ஒரு குடும்பபாங்கான பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி ஸ்ரீவாசன், கோவை பானு, சண்முக வேலு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    படத்தை இயக்கி தானே நடித்திருக்கும் ராஜியா கிருஷ்ணா, தனது பதவியின் மூலம் மற்றவர்களை மிரட்டி பணம் பறிக்கக் கூடாது. இதனால் மற்றவற்கள் பாதிக்கப்படுவது போல, அவர்கள் படும் வேதனைகள் தனது குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழியை நினைவுபடுத்தும்படி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். நேர்மையான வழியில் வாழ்வதே நல்லது என்பதை படத்தின் மூலம் தெரியப்படுத்துகிறார்.

    வி.கே.கண்ணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். வேதாசெல்வம் ஒளிப்பதிவில் பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் காட்சிகள் பார்க்கும்படி கொடுத்திருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் `அட்ரா ராஜா அடிடா' அதிகாரம்.
    எஸ்.முஜிபுர் ரகுமான் இயக்கத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் - டோனா ரோசோரியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `தப்பாட்டம்' படத்தின் விமர்சனம்.
    நாயகன் துரை சுதாகர் தனது மாமா மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து தப்பாட்டம் அடித்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். மாமாவின் போதைனைப்படியே அனைத்து காரியங்கையும் செய்யும் துரை சுதாகர், மாமா, நண்பர்களுடன் இணைந்து மதுக்டையே கதி என்று இருந்து வருகிறார். அவருக்கு திருமணமான அக்காவும், அக்காவின் இளம் பிராயத்து மகளான நாயகி டோனா ரோசாரியாவும் இருக்கின்றனர். அக்கா மற்றும் டோனா மீது மிகுந்த பாசத்துடன் இருக்கும் துரை சுதாகர் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறான்.

    அதே ஊரில் முக்கிய நபர்களுள் ஒருவரான பண்ணையாரின் மகன் ஊர் சுற்றி வருவதோடு, அந்த ஊரில் வயதுக்கு வரும் இளம் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறான். இதனாலேயே அந்த ஊர் மக்கள் வயதுக்கு வரும் பெண்களுக்கு உடனடி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். அதே போல் வயதுக்கு வந்த நாயகி டோனா ரோசாரியாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ய, டோனா அங்கிருந்து தப்பி ஓடி அவளது அம்மாவிடம் தெரிவிக்கிறாள்.



    வேறு யாரிடமும் இதுகுறித்து கூறவேண்டாம் என்று அவளுக்கு திருமண ஏற்பாடுகளை தீவிரப்படுத்துகிறாள். இதையடுத்து துரை சுதாகருக்கும், டோனாவுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணமான சில மாதங்களில் டோனா கர்ப்பம் தரிக்கிறாள். ஒருநாள் சுதாகரின் மாமா வெளியூருக்கு சென்ற சமயத்தில், மதுக்கடையில் பண்ணையாரின் மகன், துரை சுதாகரின் திருமணத்திற்கு முன்பே அவனது மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூற இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

    அவனது பேச்சைக் கேட்ட துரை சுதாகர், டோனாவிடம் முன்பு போல் இல்லாமல் சண்டை பிடிக்க ஆரம்பிக்கிறார். கடைசியில் இருவரும் பிரியும் நிலைக்கு செல்கின்றனர். தனது மகளின் வாழ்க்கையை நினைத்து டோனாவின் அம்மாவும் மனநோயால் இறந்து போகிறாள். இந்நிலையில், ஊரில் இருந்து வரும் துரை சுதாகரின் மாமா இருவரையும் சேர்த்து வைத்தாரா? துரை சுதாகருக்கு உண்மை தெரிந்ததா? மீண்டும் டோனாவுடன் வாழ்க்கை நடத்தினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.



    பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்தை கொண்ட துரை சுதாகர் தப்பாட்டம் அடிக்கும் இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடை, பேச்சு என அனைத்துமே குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு ஒப்பாகவே இருந்தது சிறப்பு. முதல் பாகத்தில் விளையாட்டுப் பெண்ணாக இருக்கும் நாயகி டோனா ரோசாரியா, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுப்பு வந்தது போல் நடித்திருப்பது ஏற்கும்படியாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.

    திருமணம் என்னும் பந்தத்திற்குள் கணவன் - மனைவியாக வாழும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு பலர் அவர்களது வாழ்க்கையை அவர்களே நாசம் செய்துவிடுகின்றனர். அதுபோன்று நடக்காமல் மனைவி மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற சமூகத்து தேவையான ஒரு கருத்தை பதிவு செய்திருக்கும் எஸ்.முஜிபுர் ரகுமானுக்கு பாராட்டுக்கள். இந்த காலகட்டத்திற்கு தேவையான குறுந்தகவலுடன் படத்தை மக்களிடம் சென்று சேர்த்திருக்கிறார்.

    பழனி பாலுவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி வந்திருக்கிறது. பாடல்கள் வரும் இடங்களும் அந்த சூழ்நிலையை உணர்த்தும்படியாக இருப்பது சிறப்பு. ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `தப்பாட்டம்' ஆடக்கூடாது.
    சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் - விவேக் ஓபராய் - அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `விவேகம்' படத்தின் விமர்சனம்.
    இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர். இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இராணுவத்தில் ரகசிய பொறுப்பில் இருக்கும் அஜித்தின் குழுவுக்கு ஒரு வேலை வருகிறது.

    அதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின் சார்பாக அஜித்தின் குழு செல்கிறது. அவர்களது வேட்டையில் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்‌ஷரா ஹாசன் என்பதும் தெரிய வருகிறது.



    அக்‌ஷராவை கண்டுபிடித்தால் தான் அந்த கருவியை செயலிழக்கச் செய்ய முடியும். இந்நிலையில் கருணாகரன் உதவியோடு அஜித் மற்றும் அவரது குழு அக்‌ஷராவை கண்டுபிடிக்கிறது. மேலும் அக்‌ஷராவிடம் அஜித் ரகசிய விசாரணை ஒன்றை நடத்துகிறார். அதில் அக்‌ஷரா அந்த ஆயுதத்தை வெடிக்க வைக்கவில்லை என்பதும், அக்‌ஷரா ஒரு ஹேக்கர் மட்டுமே என்பதும் தெரிய வருகிறது. சிலரின் தூண்டுதலால், தான் அக்‌ஷரா அந்த ஆயுதத்தை ஹேக் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் தனக்கு பின்னால் தான் தெரிய வந்தது என்றும் அக்‌ஷரா கூறுகிறார்.

    இந்நிலையில், அக்‌ஷராவை கொல்ல வேண்டும் என்றும், அந்த ஆயுதங்களை கைப்பற்ற வேண்டும் என்றும் விவேக் ஓபராய் கூற, அவரது யோசனைக்கு அஜித் மறுப்பு தெரிவித்து அவளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் போது, விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட அஜித்தின் மற்ற நண்பர்கள் அக்‌ஷராவை கொன்றுவிடுகின்றனர். மேலும் அஜித்தையும் சுட்டுவிட்டு அந்த ஆயுதங்களை கைப்பற்றி பல ஆயிரம் கோடிக்கு அதனை விற்க முடிவு செய்கின்றனர்.



    அதேநேரத்தில் அந்த ஆயுதங்களை அஜித் கடத்திவிட்டதாக பழி சுமத்திவிடுகின்றனர். ஒரு மலைப்பகுதியில் நடக்கும் இந்த சண்டையில் குண்டு காயம் பட்ட அஜித் மரம் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இந்நிலயில் உயிருடன் திரும்ப வரும் அஜித் விவேக் ஓபராய் மற்றும் அவரது நண்பர்களை எப்படி பழிவாங்குகிறார்? தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார்? உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர்? அவர்களால் வரும் பிரச்சனைகளை அஜித் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

    தனது 25-வது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ள அஜித்தின் ஸ்டைலுக்கும், மாஸுக்கும் தீனி போடும் படமாக இது அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இராணுவ அதிகாரிக்கு உரிய தோரணையிலும், அதற்குண்டான தனித்தன்மையை வெளிப்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி வியக்க வைக்குப்படி நடித்திருக்கிறார். படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல் அஜித் பேசும் வசனங்கள் அனைத்திற்கும் விசில் பறக்கிறது. ஒரு ஹாலிவுட் ஹீரோவுக்குண்டான ஸ்டைலில் அஜித் ராணுவ உடை, சாதாரண உடை, மண், புழுதி என அழுக்குப் படிந்திருந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருக்கிறது.



    காஜல் அகர்வால் இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அஜித்துடன் மனைவியாக வரும் காட்சியிலும், அவர் மீது அக்கறை கொள்ளும் காட்சியிலும் அவரது நடிப்பு சிலிர்க்க வைக்கும்படியாக இருக்கிறது. படம் முடியும் தருணத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

    விவேக் ஓபராய் ஒரு பாதியில் ஹீரோவாகவும், மறு பாதியில் வில்லனாகவும் மாறி ரசிக்க வைக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பாகுபலி படத்தில் பிரபாசுக்கு குரல் கொடுத்தவரே இந்த படத்தில் விவேக் ஓபராய்க்கும் குரல் கொடுத்திருக்கிறார். அந்த கனீர் குரலில் அவர் பேசும் வசனங்கள் கேட்பதற்கு ரசிக்கும்படி இருக்கிறது.



    ஒரு ஹேக்கராக அக்‌ஷரா ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்‌ஷராவின் முதல் காட்சி ரசிக்கும்படி இருந்தது. அதேபோல் கருணாகரன் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார். செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சவுத்ரி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

    அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரு படங்களை கொடுத்த சிவா, முற்றிலும் மாறுபட்டு ஒரு ஹாலிவுட் ஸ்டைலில் அஜித்தை மாஸாக காட்டியிருக்கிறார். முதல் பாகத்தில் பட்டாசு சத்தம் போல துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்க, அடுத்த பாதியில் அஜித்தின் மாஸ் காட்சிகள் அதிகளவில் காட்டப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக அஜித்தை எல்லா லுக்கிலும் அழகாக காட்டியிருப்பது சிறப்பு. வெற்றி, தோல்வி குறித்து அஜித் பேசும் வசனங்கள் உட்பட படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. இது அஜித்தின் லுக்காக பார்க்க வேண்டிய படம். அதேபோல் விவேக் ஓபராய், அக்‌ஷரா கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஒரு முழு அதிரடி படத்திலும் தனக்கே உரிய ஸ்டைலில் செண்டிமென்ட் காட்சிகளையும் வைத்திருப்பது சிவாவின் சிறப்பு. விவேகம் என்ற தலைப்புக்கு ஏற்ப படம் அதிவேகமாக இருக்கிறது.

    அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதும் படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `விவேகம்' ரசிகர்களுக்கு மட்டும் அதிவேகம்.
    ×