என் மலர்
சினிமா செய்திகள்
- இந்த படத்தில் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
- ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. லால் சலாம் படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் ரூ. 3 கோடியே 55 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் உலகளவில் பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக லால் சலாம் வெளியீட்டை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது மகளும், படத்தின் இயக்குனருமான ஐஸ்வரியாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
- நடிகர் காளிதாஸ் ஜெயராம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனா கதாநாயகனாக நடிக்கிறார்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து திறமையான நடிப்பால் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இவர் தற்போது 'லட்சுமி', 'மாறா' மற்றும் 'டிரிகர்' போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வழங்கிய மிராக்கிள் மூவிஸ் தயாரிப்பில் 'நிலா வரும் வேளை' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் தமிழில் காளிதாஸ் ஜெயராமும் தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனாவும் கதாநாயகனாக நடிக்கின்றனர். தெலுங்கில் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதற்கு முன்பு 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தின் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்த ஹரி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாலக்காட்டில் பூஜையுடன் தொடங்கியது.
தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா இந்தப் படம் குறித்து பேசியதாவது, "மிராக்கிள் மூவிஸ் எப்போதும் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு பிரம்மாண்டமாக உயிர் கொடுத்துத் திரையில் கொண்டு வரவேண்டும் என அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். அதற்கு எங்களின் முந்தையப் படங்களே சான்று. இப்போது உருவாகி வரும் 'நிலா வரும் வேளை' திரைப்படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும். படத்திற்கான லொகேஷன், செட் வேலைகள், பிரமிக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் போன்றவை சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் திரைப்பட ஆர்வலர்களை வசீகரிக்கும்" என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, "திரையில் வரும் நேரத்தைப் பொருட்படுத்தாமல் கதாபாத்திரத் தன்மை அறிந்து நடிகர் காளிதாஸ் ஜெயராம் தரும் அர்ப்பணிப்பும் திறமையும் ஒவ்வொரு படத்திலும் தெளிவாகத் தெரிகிறது. மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் இந்த படம் மூலம் அவருடன் இணைவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தப் படம் சந்தேகத்திற்கு இடமின்றி சினிமாவில் அவருக்கு இன்னும் பெரிய உயரத்தைக் கொடுக்கும். இயக்குனர் ஹரியின் தொலைநோக்கு பார்வையும் நிபுணத்துவமும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். 'நிலா வரும் வேளை' படம் தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்" என்றார்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அயலான்’.
- இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியான திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அயலான்' திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Reached destination: Earth ??#Ayalaan is streaming worldwide now only on #SunNXThttps://t.co/K9b36X3oUh#SivaKarthikeyan #ARRahman #RakulPreet #AyalaanOnSunNXT #SunNXTExclusiveAyalaan #AyalaanPremier pic.twitter.com/wzuL5UGytt
— SUN NXT (@sunnxt) February 10, 2024
- 'புதுப்பேட்டை 2’ எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
- செல்வராகவன் "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், சோனியா அகர்வால், சினேகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து சமீபத்தில் இந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில், "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். இதற்கு கொக்கி குமார் மீண்டும் வரார் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் 'புதுப்பேட்டை 2' திரைப்படத்தில் நடிக்க நடிகை சோனியா அகர்வால் விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சோனியா அகர்வால், "கண்டிப்பாக புதுப்பேட்டை-2 படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பேன். நடிப்பு என்னுடைய தொழில். செல்வாக்கூட சேர்ந்து வேலை செய்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், இதுவரை 'புதுப்பேட்டை 2' படத்தில் நடிக்கவேண்டும் என்று எந்த அழைப்பும் வரவில்லை. யார் யார் இதுல நடிக்க போகிறார்கள் என்றும் எனக்கு தெரியாது" என்றார்.
- இயக்குனர் விஷ்ணு வர்தன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணு வர்தன் கடைசியாக 'ஷெர்ஷா' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் தேசிய விருதையும் வென்றது. தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.

மேலும், சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
- கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
கடந்த 1976-ம் ஆண்டு பெங்காலியில் வெளியான 'மிரிகயா' என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று திரும்பி பார்க்க வைத்தார். இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'யாகாவா ராயினும் நாகாக்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாகவும் மிதுன் சக்கரவர்த்தி இருந்து வந்துள்ளார். பின்னர், சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கினார். அதை தொடர்ந்து எம்.பி- பதவியை மிதுன் சக்கரவர்த்தி ராஜினாமா செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை கடுமையான நெஞ்சுவலி காரணமாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நரம்பியல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கடந்த மாதம் குடியரசு தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
- ரஜினி 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.
'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி இன்று சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது:-
'லால் சலாம்' படம் ரசிகர்களின் அமோக வர வேற்பை பெற்று வெற்றியை அடைந்துள்ளது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ரஜினியிடம் விஜய், விஷால் அரசியல் பயணம் பற்றி கேட்டபோது, 'அரசியல் கேள்விகள் வேண்டாம்' என கருத்து கூற ரஜினி மறுத்துவிட்டார்.
- நடிகர் கவின் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இந்த படத்தை இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் கவின் தனது படத்தில் அனிருத் இசையமைத்தது குறித்து சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அனிருத் சார் என்படத்தில் பாட வேண்டும் என்பது என கனவு, ஆனால் அவர் என் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது நன் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. இது என் வாழ்நாள் ஆசை முழுவதும் நிறைவேறியது போல் இருக்கிறது. என் வாழ்க்கை பயணத்தில் என் உடன் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வருகை தந்த செண்பகமூர்த்தி சார் மற்றும் மிஷ்கின் சாருக்கு சிறப்பு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
- ரஜினி ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஜினியின் 171-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, 'வேட்டையன்' படப்பிடிப்பிற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்.
- நடிகர் விஷால் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல் பரவி வந்தது.
- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதாமக விஷால் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். விரைவில் நடக்கவுள்ள பாராளுமன்றம் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது இலக்கு என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து தனது 69-வது படத்திற்கு பிறகு திரைப்படங்களில் ஈடுபட போவதில்லை என்றும் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியலுக்கு வருகை தர உள்ளதாக செய்தி பரவி வந்தது. இதைத்தொடர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷால் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், "அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமா துறை மற்றும் பிற துறைகளைப் போல் அரசியல் என்பது ஒரு துறை கிடையாது. பொழுதுபோக்குக்காக வந்துவிட்டுப் போகும் இடமும் கிடையாது. மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வதே அரசியல்.

தமிழகத்தில் 2026-ல் தேர்தல் வருகிறது. நான் அரசியலுக்கு வருகிறேன், வரவில்லை என்று சொல்வதற்கோ, அல்லது மறைப்பதற்கோ எதுவுமில்லை. அதேபோல் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருக்கவும் மாட்டேன். அந்த நேரத்தில், அந்த காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுமோ அதுதான்.
நான் நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் ஆவேன் என்று நினைத்ததே கிடையாது. ராதாரவிக்கு போட்டியாக நிற்பேன் என்றும் நினைத்தது கிடையாது. இது எல்லாம் அந்த காலகட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுதான். எனவே அதற்கான நேரத்தில் இந்த கேள்விகளைக் கேட்டால் சரியானதாக பதில் கிடைக்கும்" என்றார்.
- சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருடன்’.
- 'கருடன்' படத்திற்கு ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருடன்'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'கருடன்' படத்திற்கு ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'கருடன்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலான 'பஞ்சவர்ண கிளியே' பாடல் வெளியாகியுள்ளது. காதலியை பார்த்து சூரி உருகுவது போன்று உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லால் சலாம்'.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.






