என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    'பூமராங்' படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவிருக்கும் ஆக்‌ஷன் படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்குகிறது. #Atharvaa #RKannan
    அதர்வா நடிப்பில் 'பூமராங்' வருகிற மார்ச் 1-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. அதர்வா தற்போது ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் 'குருதி ஆட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.

    அதனைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை இயக்குவதுடன், தனது 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் மூலமாக ஆர்.கண்ணன் தயாரிக்கவும் செய்கிறார். சமுத்திரகனி, சதீஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.



    ரதன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. ஆக்‌‌ஷன் கதையில் உருவாகும் 
    இந்த படத்திற்கு தற்காலிகமாக `தயாரிப்பு எண் : 3' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றது. #Atharvaa #RKannan

    ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். #Jai #BreakingNews
    ஜெய் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூயோவில் நடைபெற்றது. ஷங்கர் படங்களில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ள இந்த படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே.திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். 

    படத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ.கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். 



    சமூகத்தில் நடக்கும் அநீதிகள், பிரச்சனைகள், புல்வாயா குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒரு சாமானிய இளைஞன் சந்திக்கும் பிரச்னையை பற்றிய பேசும் படமாக இப்படம் உருவாக உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இப்படத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விஷூவல் எஃபெக்டில் இப்படம் உருவாக உள்ளது. இதில் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.
    ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் சந்தோஷ், ஷீலா நடிப்பில் பல விருதுகளை குவித்திருக்கும் டூலெட் படத்தின் விமர்சனம். #Tolet #ToletReview #ToletMovieReview
    ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் மிக எளிமையாக எடுக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களின் விருதுகள் முதல் தேசிய விருது வரை டூலெட் திரைப்படம் வென்றுள்ளது.

    நாயகன் சந்தோஷ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்துவிட்டு படம் இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி ஷீலா, மகன் தருண். ஏழ்மையான நிலையில் இருக்கும் சந்தோஷுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இந்நிலையில், சந்தோஷ்க்கும் வீட்டு ஓனருக்கும் பிரச்சினை வருகிறது. இதனால் வீட்டை காலி செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. 

    குறிப்பிட்ட நாட்களில் வீட்டை காலி செய்ய சொன்னதால், வாடகைக்கு வீடு தேடி தன் குடும்பத்துடன் அலைகிறார். அவர்களது தேடல் என்ன ஆனது என்பதே படம்.



    வளர்ச்சி என்று கூறிக்கொள்ளும் நகரமயமாக்கல் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை எளிய கதை மூலம் தெளிவாக உணர்த்தி இருக்கிறார் செழியன்.

    வீடு தேடி செல்லும் காட்சியில் ஒரு வீட்டில் முதியவர்களின் நிலையை பார்த்துவிட்டு திரும்பும் காட்சி, சந்தோஷ், ஷீலா தம்பதியோடு சேர்ந்து குருவிகளிடம் கூட எழும் பதற்றம், மனைவிக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நீட்டும்போது இருவரின் ரியாக்‌‌ஷன், புது வீட்டுக்கு செல்வதுபோல் மகன் நடித்து காட்டும் காட்சி என படம் நெடுக கவிதைகள்.

    சந்தோசும் ஷீலாவும் அடித்தட்டு தம்பதிகளாக வாழ்ந்து இருக்கிறார்கள். சினிமா கனவை துரத்த கதை எழுதும்போதும், மனைவிக்காக கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்கும்போதும், வீடு தேடி அலையும்போதும், சுயகவுரவத்தை சீண்டும் வீட்டு ஓனரிடம் சண்டைக்கு போகும்போதும் சந்தோஷ் கைதட்ட வைக்கிறார்.



    ஷீலா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு பெரிய நம்பிக்கை. கணவனிடம் செல்ல சிணுங்கல், வீட்டு ஓனர் முன் பணிவு, வீட்டுக்குள் வந்து கோபப்படுவது, மகனை கொஞ்சுவது என்று நம் வீட்டு பெண்களை பிரதிபலிக்கிறார். தருணின் சின்ன சின்ன குறும்புகளுக்கு பின்னாலும் ஒரு அழகிய கதை இருக்கிறது.

    பின்னணி இசையோ பாடல்களோ இல்லாத படத்தில் அருள் எழிலன் வீடு காண்பிக்கும் காட்சிகளும் கணவன் மனைவிக்குள் நடக்கும் காதல் காட்சிகளும் சுவாரசியமாக்குகின்றன. செழியனின் ஒளிப்பதிவும் தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவும் நம்மை சந்தோஷ் ஷீலா வாழ்க்கைக்குள் கூட்டி செல்கின்றன. 

    மிகப்பெரிய அரசியலை எளியவர்களின் வாழ்க்கையை கொண்டு வலிமையாக சொன்ன விதத்தில் உலக சினிமாக்கள் வரிசையில் டூ லெட் இடம்பெற்று இருக்கிறது.

    மொத்தத்தில் ‘டூலெட்’ நடுத்தர குடும்பத்தினரின் போராட்டம்.
    கனா படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறார். #AishwaryaRajesh #Aishwarya
    கனா படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் தேடி வருகின்றன. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் படத்தில் முதலில் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்தார்கள்.

    அடுத்து தெலுங்கில் இன்னொரு கதையையும் ஓகே செய்து முடித்திருக்கிறார். கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தது போல, இந்தப் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    தனது கிராமத்தினரின் கனவை நனவாக்க மல்யுத்த வீராங்கனையாக களமிறங்கும் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதற்காக மல்யுத்த பயிற்சி எடுத்து வருகிறார்.
    கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் தாடி பாலாஜி மீது மீண்டும் போலீஸ் நிலையத்தில் மனைவி நித்யா புகார் செய்து உள்ளார். #Balaji #Nithya
    நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா, தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து வருகிறார்.

    நடிகர் பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக இருவரும் ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நித்யா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கணவர் பாலாஜி மீது புகார் கொடுத்து இருந்தார்.

    இதற்கிடையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜியும், நித்யாவும் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற சக நடிகர்கள் உள்பட பலரும் மகளுக்காக சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறினர். அதை ஏற்று இருவரும் சேர்ந்து வாழ்வதாக அறிவித்தனர். அதன்பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்று அனைவரும் நினைத்து இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நித்யா, மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாடி பாலாஜி மீது மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார்’ என்று கூறியுள்ளார்.



    மேலும், ‘எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுவரும் நிலையில் குடிபோதையில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நடிகர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனவும் அந்த புகாரில் நித்யா தெரிவித்து இருந்தார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், நித்யாவிடம் அதற்கான புகார் மனு ஏற்பு ரசீது வழங்கினர். இது தொடர்பாக போலீசார், நடிகர் தாடி பாலாஜியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

    அப்போது அவர், வெளியூரில் சினிமா படப்பிடிப்பில் இருப்பதாகவும், 2 நாட்களில் சென்னை வந்ததும், விசாரணைக்கு வருவதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
    ஹன்சிகாவை தொடர்ந்து இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களில் நடித்த, நடிகை பூஜா தேவரியாவின் செல்போனை ஹேக் செய்துள்ளனர். #PoojaDevariya
    நடிகர், நடிகைகளின் ட்விட்டர் கணக்குகளும், செல்போன்களும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு தகவல்களை திருடுவது தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் செல்போனை முடக்கி தகவல்களை எடுத்தார்கள். அந்தரங்க படங்களையும் வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதனால் பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

    இப்போது நடிகை பூஜா தேவரியாவின் செல்போனையும் ஹேக் செய்துள்ளனர். இவர் தமிழில் மயக்கம் என்ன, இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். செல்போன் முடக்கப்பட்டதை பூஜா தேவரியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.



    “எனது செல்போனை சிலர் ஹேக் செய்துள்ளனர். எனது வாட்ஸ் அப்பில் இருந்து நண்பர்கள் மற்றும் சினிமா துறையினருக்கு தகவல்கள் அனுப்பி தொடர்புகொள்கிறார்கள். எனவே எனது நம்பரை வைத்து இருப்பவர்கள் அதனை நீக்கிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படம் பற்றி வரும் வதந்திக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். #Indian2 #Kamal #Kamalhaasan
    கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கியது. சில காட்சிகளை படமாக்கியதும் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாமல் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாகவும், பின்னர் கமல் தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது ஷங்கருக்கும், இந்தியன்-2 படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் படத்தை நிறுத்திவிட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்த 2.0 படத்தையும் லைகா பட நிறுவனமே தயாரித்தது.

    அந்த படத்துக்கு திட்டமிட்டதை விட கூடுதல் செலவானதால் தயாரிப்பாளர் தரப்பினர் அதிருப்தியில் இருந்ததாகவும் இந்தியன்-2 படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை தாண்டக்கூடாது என்று நிர்ப்பந்தித்ததாகவும் இதனால் படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. படம் கைவிடப்படும் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.



    இதனை லைகா பட நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது, “இந்தியன்-2 படத்தை கைவிட்டதாக பரவும் வதந்திகள் தவறானது. ஆதாரமற்றது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் ஒரு வாரமாக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்டமாக ஸ்டுடியோவிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். தற்போது பல இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடிய கார்த்திக், முதல் முறையாக மீடூ புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார். #MeToo #SingerKarthik
    தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடி உள்ள பிரபல பாடகர் கார்த்திக் மீது ‘மீ டூ’வில் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறப்பட்டது. வெளிநாட்டு தமிழ் பாடகி இந்த புகாரை கூறியிருந்தார். இதனை பாடகி சின்மயி வெளியிட்டார். இதற்கு தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:-

    “புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிர் துறந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்மீது கூறப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். என்னை சுற்றி எப்போதும் மகிழ்ச்சி பரவ வேண்டும் என்று விரும்புபவன் நான்.

    சமீபகாலமாக என் மீது வதந்திகள் வருகின்றன. நான் இதுவரை யாரையும் புண்படுத்தியது இல்லை. யாருக்கும் தொல்லையோ, அசவுகரியமோ கொடுத்ததும் இல்லை. கடந்த காலங்களில் எனது செயலால் யாராவது சங்கடப்பட்டு இருந்தால் அந்த தவறுக்கான விளைவுகளை சந்திக்க தயாராக இருக்கிறேன்.



    ‘மீ டூ’ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புகாரில் உண்மை இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கவும் சட்ட நடவடிக்கைக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன்.”

    இவ்வாறு பாடகர் கார்த்திக் கூறியுள்ளார்.
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில்  25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.

    வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது.அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்:

    "அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய

    25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.

    பாவலர் அண்ணனுக்கு கம்ïனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார்.

    இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார். இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார்.

    நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல்

    நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை. நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

    ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.

    நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார். அவர்கள் அண்ணனை நம்பினார்கள்.

    இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.

    ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்?

    அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.

    இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா.

    அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''

    இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-

    இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும்.

    ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மிïசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார். இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்ïமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார்.

    "அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன்.

    ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார், அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும்.

    அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.

    இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார்.

    அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும்.

    அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''

    அதிர்ந்தே போனேன். ஆனால் அதுதான் நடந்தது.

    16 ஆண்டுகளில் மட்டும் 793 திரைப்படங்களை மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடைசெய்துள்ளதாக தகவல் உரிமை சட்ட தகவல் மூலம் வெளியாகியுள்ளது. #CBFC #CensorBan #CBFCBan
    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நுதன் தக்கூர் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2000 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 793 படங்கள் தணிக்கைத் துறையால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 207 திரைப்படங்கள் வெளிநாட்டு படங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    தடை செய்யப்பட்ட இந்தியப் படங்களில், 231 இந்திப்படங்களும், 96 தமிழ்ப் படங்களும், 56 தெலுங்கு படங்களும், 36 கன்னடப் படங்களும், 23 மலையாள படங்களும், 17 பஞ்சாபி படங்களும் அடங்கும். கடந்த 2015-2016 ஆண்டில் அதிகபட்சமாக 153 படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 2014-15-ல் 152 படங்களும், 2013-14-ல் 119 படங்களும், 2012-13-ல் 82 படங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.



    இதில் பெரும்பான்மையான படங்கள் பாலியல் மற்றும் குற்றம் சார்ந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #CBFC #CensorBan #CBFCBan

    செழியன் இயக்கத்தில் சந்தோஷ் ஸ்ரீராம் - ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `டூலெட்' படத்தின் முன்னோட்டம். #Tolet #SanthoshSreeram #SheelaRajkumar
    ழ சினிமாஸ் சார்பில் சார்பில் பிரேமா செழியன் தயாரித்துள்ள படம் `டூலெட்'.

    சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலஷ்மி, தருண் பாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், இசை - தபஸ் நாயக், தயாரிப்பாளர் - பிரேமா செழியன், எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் - செழியன்.

    படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

    நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருக்கிறோம் என்றார்.



    65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #Tolet #SanthoshSreeram #SheelaRajkumar

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் - ஆர்யா - சாயிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர்.


    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya
     
    ×