search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "37"

    • மாணவர்களிடம் கற்றலில் இடைவெளி ஏற்பட்டதை குறைக்க ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
    • ஈரோடு மாவட்டத்தில் 1,189 பள்ளிகளை சேர்ந்த 37,718 மாணவ,மாணவிகள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் அவல்பூந்துறை தொடக்க பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் செயல்படும் மாதிரி வகுப்புகளை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:

    கொரோனா தொற்றின்போது 19 மாதம் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் செயல்படாமல் இருந்தது.

    இதனால் மாணவர்களிடம் கற்றலில் இடைவெளி ஏற்பட்டதை குறைக்க 'எண்ணும் எழுத்தும்' திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1-ம் முதல் 3-ம் வகுப்பு மாணவர்கள் உரிய கற்றல் நிலையை அடைந்திருக்கவில்லை.

    இதற்கான பயிற்சி நூல் வழியாகவும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கையேடு மூலமும் பாட வாரியாக பயிற்சி வழங்கப்படுகிறது.

    குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகள், பாடல்கள், விளையாட்டு, புதிர்கள், கலைகள், கைவினை பொருட்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது.

    இதேபோன்ற பயிற்சி வரும் 2025 வரை வழங்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் பிழையின்றி படிக்க, எழுத, செயல்பட எழுத்தறிவு, எண்ணறிவு பெறுவர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள், மாதிரி பள்ளிகள், கே.ஜி.பி.வி. பள்ளிகள் என 1,189 பள்ளிகளை சேர்ந்த 37,718 மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    எண்ணும் எழுத்தும் மாதிரி வகுப்பறையில் கணினியில் பயில அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கூடுதல் செயல்பாட்டை பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது அவல்பூந்துறை பஞ்சாயத்து தலைவர் சித்ரா, தாசில்தார் சண்முகசுந்தரம், உதவி பொறியாளர் ரமேஷ், பி.டி.ஓ.க்கள் சக்திவேல், சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    ×