என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான பிரியா வாரியர், உண்மையை பேசினால் சிலருக்கு பிரச்சினை என்று கூறியிருக்கிறார். #PriyaVarrier
    ஓமர் லுலு இயக்கத்தில் ரோ‌ஷன், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஒரு அடார் லவ்’. இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே பிரியா வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்களானார்கள். இதனால் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் காதலர் தினத்தன்று வெளியானது. ஆனால் மிக மோசமான விமர்சனங்களை பெற்று, படுதோல்வியை சந்தித்தது.

    இதனை தொடர்ந்து படக்குழுவினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். முதலில் தனக்குத்தான் முக்கியத்துவம் இருந்தது என்றும், பிரியா வாரியரின் வீடியோ பிரபலமானதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றிவிட்டனர் என்று நூரின் ஷெரீப் தெரிவித்தார்.



    அதன்பின் இயக்குநர் ஓமர் லுலு அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டியில், ’அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனவுடன் தயாரிப்பாளர் பிரியா வாரியரை பிரதானமாக வைத்து படத்தை எடுக்க சொன்னார். இதனால் கதை மாறியது’ என்றார். இந்த வி‌ஷயம் குறித்து பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதில், ’நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும். ஏன் அவர்களைப் போல இருக்க வேண்டும்? நான் அமைதியாக இருக்கிறேன். ஏனென்றால் என்ன ஆனாலும் கர்மா பார்த்துக் கொள்ளும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
    தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் விஜய்சேதுபதி, கொத்தடிமை மீட்பு பணிக்கு உதவியிருக்கிறார். #VijaySethupathi
    தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமூகத்தில் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நல்லது செய்பவர்களைக் கண்டறிந்து கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    நடிகர் விஜய் சேதுபதி அதன் தொகுப்பாளராக பங்கேற்று நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த மாதம் பச்சையம்மாள் என்ற இளம்பெண் கலந்து கொண்டார். செங்கல் சூளையிலும் முறுக்கு கம்பெனிகளிலும் 10 வருடங்களாக கொத்தடிமையாக இருந்து வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த பச்சையம்மாள் அங்கு நடைபெறும் கொடுமைகளை அதிகாரிகளுக்கு ரகசியமாக எடுத்துச் சொல்லி கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டெடுத்தார்.

    அப்படி கொடுமைப்படுத்திய முதலாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தார். தன்னைப் போல் கொத்தடிமைகளாக எங்கெங்கு மக்கள் சிக்கித்தவிக்கிறார்களோ அவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு தருவதை தனது லட்சியமாகக் கொண்டு, செயல்பட்டு வருகிறார்.



    பச்சையம்மாளிடம் விஜய்சேதுபதி ‘உங்களுக்கு என்னென்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு ‘ஒரு ஆபிஸ் போட வேண்டும். அதில் 3 கம்ப்யூட்டர்கள் வேண்டும். ஒரு கார் வாங்கவேண்டும்,” என்றார். கார் எதற்காக? என்று விஜய்சேதுபதி கேட்டார். ‘என்னை மாதிரி, பாதித்தவர்களை மீட்பதற்காக நாங்கள் இப்போது வாடகைக் காரைத்தான் எடுத்துக்கிட்டு செல்வோம். அதிகமாக செலவாகிறது. காரணம் சொன்னால் டாக்சிக்காரங்க வர பயப்படுறாங்க. அதனால் சொந்தமாக ஒரு கார் இருந்தால் உடனே, பெட்ரோலை போட்டுட்டு நாமே போய் சீக்கிரம் மீட்டுவிட்டு வந்துவிடலாம்’ என்றார்.

    இதை கேட்டு நெகிழ்ந்து போன விஜய்சேதுபதி, “பரவாயில்லை, அந்தக் காரை நானே வாங்கித் தருகிறேன். கம்ப்யூட்டர் மற்றும் ஆபிஸ் போடுறதுக்கும், நானே பணம் தாறேன், நீங்க தைரியமா பண்ணுங்க” என்றார்.

    விஜய் சேதுபதி அந்த மேடையிலேயே, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அந்த பெண்ணிடம் கொடுத்தார். அதைக்கண்டு, அந்த பெண் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அடுத்து தனது வாக்குறுதிப்படி கொத்தடிமைகளை மீட்பதற்காக ஒரு சொகுசு காரை வாங்கி அதனை கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்திடம் வழங்கினார். இந்த செயல்களுக்காக விஜய்சேதுபதியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
    ஜான்பால்ராஜ் தயாரித்து இயக்கியுள்ள அக்னி தேவி படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார் கூறியுள்ளார். #AgniDevi #BobbySimha
    பிரபல நடிகர் பாபிசிம்ஹா. பேட்டை, ஜிகர்தண்டா, நேரம், கருப்பன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இவர் டைரக்டரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னிதேவி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 5 நாட்கள் நடித்தேன்.

    என்னிடம் கூறிய கதைப்படி எடுக்காமல் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் தொடர்ந்து நடிக்கவில்லை.

    மேலும் ஏற்கனவே நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து விலகினேன்.

    இது தொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் படத்தின் பெயரை ‘அக்னி தேவி’ என்று மாற்றி 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.



    மேலும் அதில் நான் நடித்து உள்ளதாக விளம்பரமும் செய்து இருக்கிறார்கள்.

    எனக்கு பதிலாக ‘டூப்’ போட்டும், ‘கிராபிக்ஸ்’ செய்தும் படத்தை முடித்து உள்ளனர். இது தொடர்பாக டைரக்டர் ஜான் பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நந்தம்பாக்கம் போலீசாருக்கு துணை கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #AgniDevi #BobbySimha #JPR

    தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான பூஜா காந்தி 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டலில் தங்கியதற்கான ‘பில்’ தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்தியுள்ளார். #PoojaGandhi
    தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘கொக்கி’, சரத்குமார் நடித்த ‘வைத்தீஸ்வரன்’, அர்ஜூன் நடித்த ‘திருவண்ணாமலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. பிறகு கன்னட படத்தில் நடிக்க தொடங்கிய அவர், அங்கு முன்னணி நடிகையாக உள்ளார்.

    இவர் கடந்த 2012-ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் சேர்ந்தார். பிறகு அதில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2013-ம் ஆண்டு பி.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ரெய்ச்சூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி மீண்டும் ஜனதாதள கட்சியில் சேர்ந்தார்.



    இவர் பெங்களூரு ஹைகிரவுண்ட் அசோகா ஓட்டலில் 2016-ம் ஆண்டு தங்கி உள்ளார். அதே நாளில் பா.ஜனதா பிரமுகரான அனில் மென்சினகாய் என்பவரும் அந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். ஓட்டல் வாடகை, சாப்பாட்டு செலவு ஆகியவற்றை இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வதாக கூறி இருந்தனர். ஆனால் ஓட்டல் வாடகையில் ரூ. 3 லட்சத்து 53 ஆயிரம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

    ஓட்டல் நிர்வாகம் பலமுறை கூறியும், இருவரும் பணம் கட்ட மறுத்ததால் போலீசில் ஓட்டல் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர்.

    இதையடுத்து நடிகை பூஜாகாந்தியை அழைத்து போலீசார் விசாரித்தனர். முதற்கட்டமாக அவர் ரூ. 2 லட்சத்தை காவல் நிலையத்தில் செலுத்தி உள்ளார். #PoojaGandhi

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வராவிட்டாலும், ரசிகர்களிடையே பிரபலமான பூனம் பாஜ்வா கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். #PoonamBajwa
    சேவல், தம்பிகோட்டை, ஆம்பள, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்தவர் பூனம் பஜ்வா. தொடக்கத்தில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்த பூனம் தற்போது கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் போட்டோஷூட் நடத்தி பல்வேறு கவர்ச்சி படங்களை பகிர்ந்தார்.



    பட்டன்கள் திறந்த கவுன் அணிந்து பெட்டில் படுத்தபடி அவர் வெளியிட்ட படத்துக்கு ஏராளமான லைக்ஸ் வந்திருந்தாலும் சில ரசிகர்கள், ’பூனம் நீங்க ரொம்ப அழகுதான்... கவர்ச்சிதான்... ஆனால் இயக்குனர்களுக்கு பிடிக்கும்படியான தோற்றத்தில் இல்லையே... குண்டான தோற்றம் உங்களுக்கு மைனஸ் ஆக இருக்கிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறுங்கள். நீங்கள் சிரமப்படாமலே பட வாய்ப்புகள் தேடி வரும்” என்று அறிவுரை வழங்கியிருக்கின்றனர். #PoonamBajwa

    மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி - ஹன்சிகா - பல்லக் லால்வானி நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `பார்ட்னர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். #Partner #Adhi #Hansika
    ஆதி - ஹன்சிகா முதன்முதலாக இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு `பார்ட்னர்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். ஹன்சிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஆதி ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக குப்பத்து ராஜா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

    முக்கிய கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவி மரியா, 'டைகர்' தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.


    டோரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இந்த படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறியதாவது, "முழு நீள காமெடி படமாக இது உருவாகிறது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும். படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இது இருக்கும். இந்த பார்ட்னர் நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் படமாக இருக்கும்" என்றார்.

    சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இந்த படத்திற்கு சபீர் அஹமது ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஃப்.சி. கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.பி.கோலி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Partner #Adhi #Hansika #PallakLalwani

    பிங்க் படத்தை தொடர்ந்து அமிதாப்பச்சன் - டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Trisha
    அமிதாப்பச்சன் - டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித்குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

    இந்த படத்தில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். இந்த நிலையில் இந்தியில் வெற்றி பெற்ற இன்னொரு படமான ‘பட்லா’வும் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்திலும் அமிதாப்பச்சன், டாப்சி இணைந்து நடித்துள்ளனர். ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.



    இந்த படத்தின் தமிழ் பதிப்பில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் டாப்சி வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த 96 படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. மேலும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். இப்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபத விளையாட்டு ஆகிய 4 படங்கள் திரிஷா கைவசம் உள்ளன. #AmitabhBachchan #Taapsee #Trisha

    சரண் இயக்கத்தில் ஆரவ் - காவ்யா தபூர் நடிப்பில் உருவாகி வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். #MarketRajaMBBS #Arav #RadikaaSarathkumar
    `ராஜ பீமா' படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ராதிகா ஆரவ்வுடன் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


    சிமோன் கே.கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு கே.வி.குஹான் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இவர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. #Arav #MarketRajaMBBS #RadikaaSarathkumar

    ஒமர் லூலு இயக்கிய `ஒரு அடார் லவ்' படத்தில் இணைந்து நடித்த பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. #OruAdaarLove #PriyaVarrier #NoorinSherif
    ஒரு அடார் லவ் படத்தில் கண் சிமிட்டியும் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த கண்சிமிட்டலுக்காகவே படம் ஓடும் என்று பேசினர். ஆனால் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓமர் லூலு கூறும்போது, “நூரின் ஷெரீப் திறமையான நடிகை. அவருக்கு முன்னுரிமை அளித்து கதையை உருவாக்கி இருந்தேன். ஆனால் பிரியா வாரியர் கண்சிமிட்டல் பாடல் வைரலானதும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் பிரியாவாரியரை முதன்மையான கதாபாத்திரமாக்கி கதையை மாற்றினேன்” என்றார்.



    நடிகை நூரின் ஷெரீப் கூறும்போது, “படத்தில் எனக்குத்தான் முதன்மையான கதாபாத்திரம் என்று சொல்லி படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால் பிரியா வாரியர் கண்சிமிட்டலால் கதையை மாற்றி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை ஓரம் கட்டி துணை நடிகையாக்கிவிட்டனர். இது வருத்தமாய் இருந்தது.” என்றார்.

    இதனால் பிரியா வாரியருக்கும், நூரின் ஷெரீப்புக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. நூரின் ஷெரீப்புக்கு பதில் அளித்துள்ள பிரியா வாரியர், “கதையை எனக்காக மாற்றியதாக குற்றம்சாட்டுகின்றனர். கண்சிமிட்டல் பாடலுக்கு பிறகு எனக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் கதையை மாற்றியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டதாக நூரின் ஷெரீப் குறை கூறி உள்ளார். அவரை படத்தில் ஓரம்கட்டவில்லை. முதலில் சொன்ன கதையைத் தான் அப்படியே படமாக்கி இருந்தனர்” என்றார். #OruAdaarLove #PriyaVarrier #NoorinSherif

    தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்திய குடியரசு கட்சி சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #PowerstarSrinivasan
    பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து இருக்கிறார். தென் சென்னை தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். 

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.



    இது குறித்து அவர் கூறும்போது, “1½ ஆண்டுகளுக்கு முன்பே நான் இந்திய குடியரசு கட்சியில் (அத்வாலே) இணைந்து விட்டேன். தற்போது கட்சியின் துணைத்தலைவராக உள்ளேன். இந்த தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற உள்ளேன். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன். மற்ற நடிகர்களை போல் பதுங்காமல், நான் துணிந்து களம் காண்கிறேன். இந்த பவர்ஸ்டாரை மக்கள் ஆதரிப்பார்கள்” என்றார். #LokSabhaElections2019 #PowerstarSrinivasan

    தாதா 87 படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் விஜய் ஸ்ரீஜி, மாதவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். #Madhavan #DhaDha87 #VijaySriG
    கலை சினிமாஸ் தயாரிப்பில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த படம் தாதா 87. இதில் சாருஹாசன், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். 

    இப்படத்தில் திருநங்கைகளின் வாழ்க்கையையும், வலியையும் திரைக்கதையாக அமைத்திருந்தார் இயக்குனர். மேலும் திருநங்கைகளை பெண்கள் என்றே அழைக்கலாம் என்பதை பதிவு செய்திருந்தார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நாயகியாக நடித்த ஸ்ரீபல்லவி இதில் திருநங்கையாக நடித்திருந்தார். ஒரு பெண் திருநங்கையாக நடித்தது இதுவே முதல் முறை. இப்படம் தற்போது தெலுங்கில் ‘பவுடர்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.



    அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்டரு படத்தை தற்போது இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கி வருகிறார். அதன்பின் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி, பிரைன் எனும் புதுவித சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை கலை சினிமாஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காக மாதவனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நடிக்க ஒப்பந்தம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் புதிய படம் டிராப்பானதாக வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். #Simbu #STR
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் ஜெய் நடிக்க இருப்பதாகவும், ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இப்படம் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பு தொடங்காததால் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.



    தற்போது இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘படம் கைவிடப்பட்டதாக வரும் வதந்திகளை நிறுத்துங்கள். ஒரு படத்தை தொடங்குவது அவ்வளவு சுலபமானது அல்ல. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என்றார். #STR #Maanadu #STRinMaanaadu #VP9 
    ×