என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல நடிகை வடிவுக்கரசி தங்கியிருக்கும் தி.நகர் வீட்டில் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். #Vadivukkarasi
பிரபல நடிகை வடிவுக்கரசி. கன்னிப் பருவத்திலேயே படத்தில் அறிமுகமான அவர் முதல் மரியாதை, அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது.
இவரது வீடு இருக்கும் அதே பகுதியில் மகள் வீடும் உள்ளது. கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 8 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இது குறித்து வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகன் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து குடிமகன் என்ற படத்தை இயக்குனர் சத்தீஷ்வரன் இயக்கி தயாரித்து இருக்கிறார். #Kudimagan #Sathishwaran
“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”.
விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்த ஊர் கவுன்சிலர்.
அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் பேச்சுவார்த்தையால் ஒரு மாதத்திற்குள் கடையைமாற்றி விடுவதாக உறுதியளிக்கிறார் கவுன்சிலர். நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்தடிக்கிறார். அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த குடிமகன்களில் ஒருவனாக கந்தனும் மாறிவிடுகிறான். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.

அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சத்தீஷ்வரன்.
இப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார். செல்லக்கண்ணுவாக “ஈரநிலம்” ஜெனிபர் நடிக்கிறார். இவர்களுடன் “மது ஒழிப்பு போராளி” மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரித்திருக்கிறார் சத்தீஷ்வரன்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரமுக்கு தந்தையாக பிரபல இயக்குனர் நடிக்க இருக்கிறார். #DhruvVikram #AdithyaVarma
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்துக்கு ஆந்திரம், தெலுங்கானா மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்துக்கு வர்மா என்று தலைப்பிடப்பட்டது. எனினும், தயாரிப்பு நிறுவனத்துக்கும், பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் இந்தப் படம் கைவிடப்பட்டது. பின்னர் வேறு ஓர் இயக்குனரை வைத்து முழு படத்தையும் புதிதாக உருவாக்கப் போவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்தப் படத்துக்கு ஆதித்ய வர்மா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை கிரீசாயா இயக்குகிறார். கதாநாயகன் துருவ் விக்ரமை தவிர ஒட்டுமொத்த படக்குழுவையும் மாற்றியுள்ளனர். இந்தப் படத்தில் துருவ் விக்ரமின் தந்தையாக யார் நடிப்பதென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், துருவ் விக்ரமுக்கு தந்தையாக நடிக்க இயக்குனர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு பணிகளில் விரைவில் கவுதம் மேனன் இணைய உள்ளார். படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக நடிக்க பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். துருவ் விக்ரமின் நண்பர் வேடத்தில் அன்புதாசன் நடிக்கிறார்.
வடிவேல் நாயகனாக நடிக்க திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் யோகிபாபுவை வைத்து படம் எடுக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். #Vadivelu #Yogibabu
தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில் ஜோடி திரைப்படங்களில் அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் "என் ராசாவின் மனசிலே" படத்தில் கும்பலில் ஒருவராக நடிகர் ராஜ்கிரண் அறிமுகப்படுத்தபட்டவர் தான் வடிவேலு.
இவரது யதார்த்தமான உடல் மொழியும், வசன உச்சரிப்புகளும் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகனை ஏகாந்த நிலைக்கு கொண்டு சென்றது. நகைச்சுவை என்பது இருவர் சேர்ந்து பேசி நடித்தால் மட்டுமே பார்வையாளனை சிரிக்க வைக்க முடியும் என்ற அகராதியை மாற்றி எழுதியவர் இந்த வடிவேலு. திரைப்படங்களில் இவர் தனி ஆளாக என்ரி கொடுக்கும் போதே அரங்கம் அதிரும்.
தனிநபராக மக்கள் செல்வாக்கை பெற்ற வடிவேல் 2006ல் சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் கதை நாயகனாக நடித்தார். முதல் படமே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியது.
அதன் பின் கதாநாயகனாக நடிக்க முன்னுரிமை கொடுக்க தொடங்கினார் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. நாயகனாக நடித்துசொந்தமாக தயாரித்த படங்களும் தோல்வியடைந்தன. இப்போதும் வடிவேல் நாயகனாக நடிக்கும் புதிய படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

காமெடி கேரக்டரில் நடித்த போது நாள் கணக்கில் சம்பளம் வாங்கியதை கணக்கில் கொண்டு, கதாநாயகனாக நடிக்க தேவைப்படும் நாட்கள் எண்ணிக்கைக்கு சம்பளம் கேட்கிறார் வடிவேலு. இதனை கேட்கும் தயாரிப்பாளர் திரும்பி வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்டு வருவதே இல்லை என்கின்றனர்.
ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் வடிவேலு காமெடியனாக நடித்த போது ஒரு நாள் சம்பளம் 8 லட்ச ரூபாய். இன்றைய சினிமா வியாபாரத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வெளியிட சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
அதற்குரிய வியாபாரமும், வசூலும் வடிவேல் நடிக்கும் படங்களுக்கு இருக்காது என்பதால் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டால் படம் தயாரிக்கலாம் என்கின்றனர்.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது எனக்கோ பசியே கிடையாது என கூறுகிறாராம் வடிவேல். இதனால் வடிவேல் நாயகனாக நடிக்க திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தர்ம பிரபு படத்தின் மூலம் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்திருக்கும் யோகி பாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
தர்மபிரபு படத்தின் உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கடும் போட்டியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே என்ற படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவுக்கு மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. #Jyothika
மலையாள திரையுலகில் முன்னணி டைரக்டராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூ. காயங்குளம் கொச்சுன்னி, உதயனானுதாரம், மும்பை போலீஸ் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.
மஞ்சு வாரியரை வைத்து இயக்கிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் அதை தமிழில் ஜோதிகா நடிக்க ‘36 வயதினிலே’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்தையும் அவரே இயக்கினார்.
இந்த நிலையில் ரோஷன் ஆண்ட்ரூ அடிதடி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நள்ளிரவில் அடியாட்களுடன் மலையாள பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி வீட்டுக்குள் சென்று அவரை தாக்கியதாக எர்ணாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆல்வின் ஆண்டனியின் மகன் ஜான் ஆண்டனி கூறும்போது, “ரோஷன் ஆண்ட்ரூ 40 அடியாட்களுடன் வீட்டுக்குள் புகுந்து எங்களை தாக்கினார். எனது தாயை கீழே தள்ளினார். ரோஷன் ஆண்ட்ரூவின் தோழி ஒருவருடன் நான் பழகியது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் வீடு புகுந்து தாக்கியுள்ளார்” என்றார்.

இதனை மறுத்த ரோஷன் ஆண்ட்ரூ, “என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜான் ஆண்டனிக்கு போதை பழக்கம் இருந்தது. இதனால் அவரை நீக்கினேன். அதன்பிறகு என்னை பற்றி தவறான வதந்திகளை பரப்பினார். இதை தட்டி கேட்க சென்றபோது என்னையும், எனது நண்பர்களையும் ஜான் ஆண்டனியும் அவரது தந்தை மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து தாக்கினர்” என்றார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரோஷன் ஆண்ட்ரூ படங்களில் பணியாற்ற மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
ஜான்பால்ராஜ் தயாரித்து இயக்கியுள்ள அக்னி தேவி படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த புகாரின் பெயரில் நீதிமன்றம் படத்திற்கு தடை விதித்துள்ளது. #AgniDevi #BobbySimha
ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. இவர் டைரக்டரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது, 'அக்னி தேவி' படத்திற்கு தடை கோரியும் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார்.
அதில், கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னி தேவ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 5 நாட்கள் நடித்தேன். என்னிடம் கூறிய கதைப்படி எடுக்காமல் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் தொடர்ந்து நடிக்கவில்லை.
மேலும் ஏற்கனவே நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து விலகினேன்.
இது தொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், 'அக்னி தேவ்' படத்தின் பெயரை ‘அக்னி தேவி’ என்று மாற்றி 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்’ என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.

பாபி சிம்ஹா அளித்த புகாரின் பேரில், அக்னி தேவி என்ற படத்திற்கும் தனக்கும் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றும், தான் அக்னி தேவ் படத்தில் நடித்த சில காட்சிகளை வைத்து மோசடியாக தனது முகத்தை வைத்தும், குரல் மாற்றம் செய்தும் டிரைலர் வெளியிட்டது சம்பந்தமாக டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட (குற்ற எண் 406, 420, 469, & 470) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் 'அக்னி தேவி' படத்திற்கு தடை கோரினார். அதன்பேரில், கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜான் பால்ராஜ் 'அக்னி தேவி' படத்தினை வெளியிட 'ஸ்டேட்டஸ்கோ' 20/03/19 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், படத்தினை வெளியிடுவதில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய நீதிமன்ற ஆணையாளராக வழக்கறிஞர் திருமதி. எம்.கார்த்திகா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற ஆணையாளர் அறிக்கையினை சமர்ப்பித்து நீதிமன்றம் மறு உத்தரவினை பிறப்பிக்கும்வரை, மேற்படி படத்தினை வெளியிடுவதில் முன்பிருந்த நிலையே தொடரும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆர்.கே.நகர்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். #RKNagar
இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் நடிகர் வைபவை வைத்து ‘ஆர்.கே.நகர்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார்.
இதில் வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடித்திருக்கிறார். மேலும் சம்பத், இனிகோ பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வந்தது.
Very happy to announce #Rknagar is releasing next month!!! The election date will be announced shortly!!! @badri_kasturi@blacktktcompany@saravanarajan5@actor_vaibhav@Premgiamaren@subbu6panchu@Cinemainmygenes@vasukibhaskar@Muzik247inpic.twitter.com/cqIp1fDUoZ
— venkat prabhu (@vp_offl) March 20, 2019
தற்போது இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் தேதி (படம் ரிலீஸ் தேதி)-யை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஐரா படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ள சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும் என்று நயன்தாரா பேசும் வசனம் வைரலாகி வருகிறது. #Nayanthara
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதில் நயன்தாரா பேசும் ‘சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும், பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும், எது நடந்தாலும் இல்லுமினாட்டிதான் காரணம்னு சொல்லனும்’ வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இப்படம் மார்ச் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu #SarjunKM #AiraaOnMarch28
விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். #WatchmanTrailer
சர்வம் தாள மயம் படத்திற்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக 100 பெர்சண்ட் காதல், குப்பத்து ராஜா, ஐங்கரன், அடங்காதே, ஜெயில், வாட்ச்மேன், 4ஜி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.
இதில் விஜய் இயக்கியிருக்கும் `வாட்ச்மேன்' படம் ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆக்ஷன் திரில்லர் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். ராஜ் அருண், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிரவ் ஷா, சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர். #WatchMan #GVPrakash
கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம், தற்போது கன்னட மொழியில் ரீமேக்காக இருக்கிறது. #PariyerumPerumal
ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது.
இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் காந்தி மணிவாசகம் (களவாணி மாப்பிள்ளை - 2 படத்தை இயக்கியவர்)
இந்தப்படத்திற்கு இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடி அலைந்தார். இறுதியாக மைத்ரேயா (ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன்) என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறார்.

இவரை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள்.
விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தமிழரசன் படத்தில் நடித்து ரம்யா நம்பீசன், தனது பிறந்த நாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். #RamyaNambessan
`கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாயகி ரம்யா நம்பீசன் தனது பிறந்தநாளை தமிழரசன் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அவருக்கு படக்குழுவினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான பிரியா வாரியர், உண்மையை பேசினால் சிலருக்கு பிரச்சினை என்று கூறியிருக்கிறார். #PriyaVarrier
ஓமர் லுலு இயக்கத்தில் ரோஷன், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஒரு அடார் லவ்’. இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே பிரியா வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்களானார்கள். இதனால் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் காதலர் தினத்தன்று வெளியானது. ஆனால் மிக மோசமான விமர்சனங்களை பெற்று, படுதோல்வியை சந்தித்தது.
இதனை தொடர்ந்து படக்குழுவினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். முதலில் தனக்குத்தான் முக்கியத்துவம் இருந்தது என்றும், பிரியா வாரியரின் வீடியோ பிரபலமானதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றிவிட்டனர் என்று நூரின் ஷெரீப் தெரிவித்தார்.

அதன்பின் இயக்குநர் ஓமர் லுலு அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டியில், ’அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனவுடன் தயாரிப்பாளர் பிரியா வாரியரை பிரதானமாக வைத்து படத்தை எடுக்க சொன்னார். இதனால் கதை மாறியது’ என்றார். இந்த விஷயம் குறித்து பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதில், ’நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும். ஏன் அவர்களைப் போல இருக்க வேண்டும்? நான் அமைதியாக இருக்கிறேன். ஏனென்றால் என்ன ஆனாலும் கர்மா பார்த்துக் கொள்ளும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.






