என் மலர்
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் ஜெயம்ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீள்கிறார். அவரது நண்பர் யோகிபாபு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கி சொல்கிறார். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசும் காட்சி ஓடுகிறது. அதை பார்த்ததும் ஜெயம்ரவி இது 1996-ம் வருடம்தான் 2016 அல்ல என்கிறார்.
இந்த காட்சி ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்வது போல் உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. கமல்ஹாசனும் டிரெய்லரை பார்த்து அதிருப்தி தெரிவித்தார்.

இதுகுறித்து படத்தின் நடிகர் ஜெயம் ரவி கூறும்போது, ”நான் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும், ‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இந்த முன்னோட்டத்துக்கு மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இருப்பினும் அந்த முன்னோட்டத்தில் மரியாதைக்குரிய ரஜினி சார் தொடர்பான காட்சி, அவரின் ரசிகர்ளின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது. அந்த விஷயம் நேர்மறையாகச் சித்தரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அவரது ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினி சாரின் அதி தீவிர ரசிகன் என்ற முறையில் காணக் காத்திருக்கிறேன். நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது அவரையோ அவரது ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது.
அவர் ‘கோமாளி’ பத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டினார். எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார். இருந்தபோதும், எந்த விதமான உள் நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் அந்த காட்சியால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கு மதிப்பளித்து, அக்காட்சியை படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியன் 2-வில் எனது கதாபாத்திரம் பற்றி பேட்டிகளில் தெரிவிக்ககூடாது என இயக்குனர் ஷங்கர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்தியில் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. சென்னை வந்த காஜல் அளித்த பேட்டி: சூப்பர் ஹீரோ படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க தான் காத்திருக்கிறேன்.
நமது நாட்டிலும் அதுபோன்ற படங்கள் விரைவில் தயாராகும் என்ற நம்பிக்கை உள்ளது. பாரிஸ் பாரிஸ் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படம் எனது சினிமா வாழ்க்கையிலேயே மிகுந்த திருப்தி அளித்த படம். தொடர்ந்து இதுபோன்ற வலிமையான கருத்தும் கதையும் உடைய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்.

இந்தியன் 2-வில் எனது கதாபாத்திரம் பற்றி பேச ஆசை தான். ஆனால் ஷங்கர் கட்டுப்பாடு விதித்துள்ளார். ஆனால் என்னுடையது கதாபாத்திரமாக ஆச்சர்யமான இருக்கும். நவம்பரில் என் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இதற்காக களரிச்சண்டையும் குதிரையேற்றமும் கற்று வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜோதிகா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோதிகா திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில், ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். இரண்டாவது இன்னிங்சில் தான் என் மனதுக்கு நெருக்கமான படங்களாக அமைகின்றன என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்‘, ‘காற்றின் மொழி’ என இவர் நடித்த மூன்று படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வருடம் வெளியான ‘ராட்சசி’ படத்திற்கும் நல்ல வரவேற்பு. தற்போது, ‘ஜாக்பாட்’ படத்தில் ரேவதியுடன் காமெடி செய்திருக்கும் ஜோதிகாவை குடும்ப ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

இதை தொடர்ந்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம், அறிமுக இயக்குநர் பிரட்ரிக் இயக்கத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ என இரண்டு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இப்போது, அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன.
‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்த படத்தை இயக்க, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இக்கதையில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.
உடல் எடை குறைப்பு ரகசியத்தை நடிகை அனுஷ்கா மேஜிக் வெயிட் லாஸ் என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 100 கிலோ உடல் எடை போட்ட அனுஷ்கா அதன்பிறகு அந்த எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். ஏறக்குறைய ஒரு வருடம் போராடியும் எடை குறையவில்லை. வெளிநாட்டுக்கு சென்று ரகசிய சிகிச்சை எடுத்துக்கொண்டு எடையை குறைத்து ஓரளவுக்கு சாதாரண தோற்றத்துக்கு வந்தார்.
உடல் எடையை எப்படி குறைத்தீர்கள் என்று அவரிடம் பலரும் கேட்டு கடிதம் எழுதுவதுடன் இணைய தளங்களிலும் எடை குறைத்த ரகசியத்தை சொல்லும்படி கேட்கிறார்கள். எனவே தனது எடை குறைப்பு ரகசியங்களை அனுஷ்கா மேஜிக் வெயிட் லாஸ் என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அப்படியென்ன அந்த புத்தகத்தில் இருக்கிறது என்றவர்களுக்கு, ‘வாழ்க்கையில் எந்தெந்த கெட்ட வழிமுறைகள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நோயை வரவழைக்கிறது என்பதை புத்தகத்தின் ஒருபகுதியும், 62 எளிய வழிமுறைகள் மூலம் எப்படி ஆரோக்கியமாகவும் உடலை கட்டுக்கோப்போடு பிட்டாகவும் வைத்துக்கொள்வது என்பதை மற்றொரு பகுதியும் விளக்குகிறது’ என அனுஷ்கா தரப்பு பதில் அளித்துள்ளது.
உடல் எடை அதிகரித்ததால் நடிக்காமல் 1 வருடத்தை கழித்த அனுஷ்கா எடை குறைந்தபிறகு ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் ஜெயராம் அவரது உடல் எடையை குறைத்ததன் எதிரொலியாக, அவருக்கு வில்லன் வேடங்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயராம் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்து தற்சமயம் நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். திடீரென்று தனது இணையதள பக்கத்தில் கட்டுமஸ்தான தோற்றத்தில் புதிய ஹேர்ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த மார்கோனி மதாய் மலையாள படத்தில் நடித்திருந்த ஜெயராம் அடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார். இப்படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார். ஜெயராமின் புதிய தோற்றத்தை கண்ட கோலிவுட் இயக்குனர்கள் சிலரும் தங்கள் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க அவரிடம் பேசி வருகிறார்களாம்.
பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கும் ’விக்ரம் வேதா’ படத்தில் சயீப் அலிகான், அமீர் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பாலிவுட்டில் இப்படம் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, பி.எஸ்.வினோத் இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படம், தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய்சேதுபதியாக அமீர் கானும் நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இதை பாலிவுட்டிலும் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது. மார்ச் 2020ல் படப்பிடிப்பை தொடங்கி அந்த ஆண்டின் இறுதியிலேயே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் அனீபா, விஷ்வா, பிந்து நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஐ.ஆர்-8’ படத்தின் விமர்சனம்.
நாயகன் அனீபாவின் தந்தை ஆர்.வி.தம்பி கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு பின்னர் தனது மகனும் விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். அதன் எதிரொலியாக அவர் தனது மகன் அனீபாவை விவசாய கல்லூரியில் படிக்க வைக்கிறார். இந்த வேளையில் நாயகனின் முறைப்பெண்ணான நாயகி பிந்து, திருமணம் செய்யும் முனைப்பில் நாயகனை சுற்றி சுற்றி வருகிறார். இதில் விருப்பம் இல்லாத நாயகன் விலகி செல்கிறார்.

இந்த சூழலில் வில்லன் ஜெயக்குமாரிடன் விவசாய நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்குகிறார் நாயகனின் தந்தை ஆர்.வி.தம்பி. நாயகன் அனீபாவும் படித்து முடித்து விவசாயம் செய்கிறார். இயற்கை விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என நாயகனின் தந்தை ஆர்.வி.தம்பி உறுதியாக இருக்கிறார். ஆனால் நாயகன் அனீபா செயற்கை முறையில் விவசாயம் செய்யும் முனைப்போடு இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, நாயகனின் விவசாய நிலத்தை அரசியல்வாதி ஒருவர் அடைய முயல்கிறார். இதற்கு வில்லன் ஜெயக்குமாரை பகடை காயாக பயன்படுத்துகிறார். விவசாயம் செய்ய முடியாததால் மனமுடைத்து போகும் நாயகனின் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். இதையடுத்து இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணரும் நாயகன், வில்லனிடம் இருந்து விவசாய நிலத்தை மீட்டாரா? இயற்கை விவசாயம் செய்து தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா? நாயகியை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குனர் எஸ்.பி.இஸ்மாயில். படத்தில் பெரும்பாலான புதுமுகங்கள் நடித்திருந்தாலும், அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் நாயகன் அனீபா, காதல், சண்டை, பாசம் என நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகனின் முறைப்பெண்ணாக வரும் நாயகி பிந்து, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

நாயகனின் தந்தையாக நடித்துள்ள ஆர்.வி.தம்பி, விவசாயி காமராசுவாகவே வாழ்ந்துள்ளார். அரசு கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயக்குமார் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். மற்றபடி அப்புகுட்டி, கராத்தே ராஜா, பாபு, கவிதா, ராஜேஷ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். கோனேஸ்வரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. கே.வி.மணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் ’ஐ.ஆர்-8’ விவசாயிகளின் வலி.
பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, தற்போது பட ரிலீசில் அவருடன் மோத உள்ளார்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8-ந் தேதி ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படமும் ஆகஸ்ட் 9-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் அஜித், நயன்தாரா படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்கில் மோத உள்ளன. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ’கொலையுதிர் காலம்’ படத்தின் ரிலீஸ் தேதி 7 முறை மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து பாதிக்கும் வகையில் பட்டாசு வெடித்த ரசிகர்களின் செயலை கண்டு கடுப்பான விஜய்சேதுபதி, அவர்களை கண்டித்துள்ளார்.
விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு ‘துக்ளக் தர்பார்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகியாக அதிதிராவ் மற்றும் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கின்றனர். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சென்னை வடபழனியில் நடந்தது. இதில் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். அவருக்கு ரசிகர்கள் சாலையில் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.

இதனை கண்டித்து விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:- இந்த விழாவுக்கு நான் வந்தபோது வரவேற்பு அளிப்பதற்காக சாலையில் வாகனங்களை நிறுத்தி பட்டாசுகள் வெடித்தனர். அதை பார்த்து வருத்தப்பட்டேன். பொதுமக்களுக்கு இடையூறு செய்து இதுபோல் பட்டாசுகள் வெடிப்பது எனக்கு பிடிக்காத விஷயம். பட்டாசுகள் வெடித்து ஏன் காசை கரியாக்குகிறீர்கள்?. இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு சுற்றுப்புறத்திலும் மாசு ஏற்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க சொன்னவர்களை நான் கண்டிக்கிறேன்” என்றார்.
விழாவில் பார்த்திபன் பேசும்போது, “படத்தின் தலைப்பில் அதிர்ஷ்டம் இருப்பதால் வெற்றி பெறும்” என்றார். நடிகை அதிதிராவ் பேசும்போது, “விஜய் சேதுபதியுடன் நடிப்பது அதிர்ஷ்டம். செக்க சிவந்த வானம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்தேன்” என்றார்.
நவீன் நயனி இயக்கத்தில் தருண் தேஜ், லாவண்யா நடிப்பில் உருவாகி இருக்கும் “ பூவே போகாதே“ படத்தின் முன்னோட்டம்.
கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் “சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “ பூவே போகாதே“ . இந்த படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:- இது 1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் இது. முழுக்க முழுக்க நாயகன், நாயகியை சுற்றி நடக்கும் திரைக்கதை இது.கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள்.

அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படி பார்த்தது என்பதை அழுத்தமாக பதிவிடுள்ளோம். தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.
ஒளிப்பதிவு - ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா, இசை - சபு வர்கீஸ், பாடல்கள் - விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர், எடிட்டிங் - ஜே.பி, நடனம்- நரேஷ் ஆனந்த், ஸ்டன்ட் - ராம் சுங்கரா, நபா சுப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாசுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். பாகுபலி படத்துக்கு பிறகு இவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. சம்பளமும் அதிகமானது. பாகுபலி தமிழிலும் வெற்றி பெற்றதால் தமிழ் நாட்டிலும் அவருக்கு மார்க்கெட் உள்ளது. பிரபாசின் தெலுங்கு படங்களை தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
தற்போது சாஹோ என்ற படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியிடுகின்றனர். சுஜித் இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

பிரபாசுக்கு 39 வயது ஆகிறது. எனவே விரைவில் அவரது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாஹோ படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வந்ததும் திருமணம் ஏற்பாடுகள் தொடங்க உள்ளன. அமெரிக்க தொழில் அதிபர் மகளை மணக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஓரிரு மாதங்களில் நிச்சயதார்த்தத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த வருடம் இறுதியில் பிரபாஸ் திருமணம் நடக்கும் என்று அவரது உறவினர் தெரிவித்து உள்ளார். பிரபாசுக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்றும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியின் கோமாளி பட டிரெய்லரில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கேலி செய்வதுபோல் காட்சி இடம்பெற்று உள்ளதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. பிரதீப் இயக்கி உள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் சுதந்திர தினத்தையொட்டி திரைக்கு வருகிறது. கோமாளி படத்தின் டிரெய்லர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் சர்ச்சை காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
ஜெயம் ரவி 16 வருடங்கள் கோமாவில் இருக்கிறார். பின்னர் அவர் குணமாகி எழுந்து பார்க்கும்போது இது எந்த வருடம் என்று கேட்கிறார். அதற்கு யோகிபாபு இது 2016-ம் ஆண்டு என்கிறார். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசும் காட்சி ஓடிக்கொண்டு இருக்கும். அதை பார்த்ததும் ஜெயம் ரவி இது 1996-ம் வருடம்தான் 2016 அல்ல என்பார். இந்த காட்சி ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருப்பதை கேலி செய்வது போல் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.

ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கோமாளி டிரெய்லரை கண்டித்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோமாளி பட டிரெய்லரை பார்த்து விட்டு படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி டிரெய்லரை பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். ‘நட்பின் வெளிப்பாடா, நியாயத்தின் குரலா’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
எதிர்ப்பு காரணமாக படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்படுமா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.






