என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பள்ளி விழாவில் பேசிய பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு என்று கூறியிருக்கிறார்.
    ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி (இன்று) அறிமுகம் செய்தது.

    கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார்.

    அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார்.

    இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், மேலும் நக்கீரன் கோபால் அவர்களும் கலந்துக் கொண்டார்.

    லிடியன் நாதஸ்வரம்

    லிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்ஷன் சதீஷ் பேசும்போது, ‘நான் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி. எங்களை இங்கு அழைத்ததற்கு நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் மற்றும் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி. பள்ளி பருவம் என்பது ஒரு அரிய வாய்ப்பு, அனைவரும் கூறும்படி லிடியன் உலக புகழ், பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் என் மகனிற்கு நான் ஒரு ரசிகன். 

    லிடியன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். இந்த வயது மிகவும் அற்புதமான வயது. அதை டெக்னாலஜி எனும் செல்போன், யூடியூப், கேம்ஸ் ஆகியவற்றில் நேரத்தை செலவிடாமல் இருத்தல் நல்லது. என் மகனை நான் பள்ளிக்கு அனுப்பவில்லை, ஆனால் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருவது சச்சின் டெண்டுல்கர் போன்றோரைத்தான் பார்த்துள்ளேன். இப்போது என் மகன் அப்படி செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

    ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, ‘என் வாழ்வில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக்கல்லூரி ஒன்று கட்ட வேண்டும் என்பது ஆசை. அதன் தொடக்கமாக இப்பள்ளியில் டிப்ஸ் கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி தொடங்கியுள்ளேன். 

    லிடியனின் தந்தை பார்க்கும் போது என் தந்தை நியாபகம் வருகிறது. என் தந்தையும் இதே போன்றுதான் உற்சாகப்படுத்தினார். உலகம் மறக்கமுடியாத இசையமைப்பளார்களில் ஒருவராக லிடியன் இருப்பார். 2002ல் இருந்து ஏ.ஆர்.ரகுமான் அவர்களை தெரியும். அவரிடம் உள்ள அதே அன்பு, பணிவு, அளவற்ற திறமை லிடியனிடம் உண்டு. மேலும் லிடியனின் பெற்றோர்களை பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன். இப்பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர் டாக்டர் சின்னுசாமி, நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
    90 மற்றும் 2000 காலங்களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய நடிகை மீனா, தற்போது உளவுத்துறை அதிகாரியாக களமிறங்க இருக்கிறார்.
    90 மற்றும் 2000 காலங்களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்டவர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    இவர் தமிழில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் 2011ல் நரேன் நடிப்பில் வெளியான தம்பிக்கோட்டை. தற்போது இவர் மீண்டும் தமிழில் ஒரு புதிய இணைய தொடரில் நடிக்கப்போகிறார். டிரெண்ட்லவுட் மற்றும் ஜீ5 தயாரிக்கும் இந்த தொடரை அருண் விஜய் நடிக்கும் பாக்சர் படத்தை இயக்கிவரும் விவேக் இயக்குகிறார்.

    நடிகை மீனா

    இந்த தொடருக்கு கரோலின் காமாட்சி என்று பெயரிட்டுள்ளனர். இந்திய உளவுத்துறை அதிகாரியாக மீனாவும் பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரியாக ஜியார்ஜியோ அன்ரியானியும் நடிக்கிறார்கள். இந்த தொடரின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
    இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் இயக்கி இருக்கும் ஆபரேஷன் அரபைமா படத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    துருவங்கள் 16 படத்தின் மிக பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம், “ஆபரேஷன் அரபைமா”.

    பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர், ப்ராஷ். இவர் இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இயக்குனர் ப்ராஷ், நடிகர் ரகுமான்

    டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான். கதையின் நாயகியாக “நாடோடிகள்” அபிநயா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது, “ஆபரேஷன் அரபைமா” என்றார்.

    முருகன் மந்திரம் பாடல் வரிகளுக்கு ராகேஷ் பிரம்மானந்தம் இசையமைத்திருக்கிறார். பீனிக்ஸ் உதயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.

    தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

    நடிகை கஸ்தூரி

    நேற்று திடீரென்று நடிகர் சரவணன் சில காரணங்களால் அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிரபல நடிகையான கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதற்கு முன் நடைபெற்ற இரண்டு சீசன்களிலும் வைல்ட் கார்டு மூலம் சில நடிகர்கள், நடிகைகள் சென்றார்கள். அதன்படி மூன்றாவது சீசனில் வைல்ட் கார்டு மூலம் விரைவில் நடிகை கஸ்தூரி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் விமர்சனம்.
    ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் தங்கி வெவ்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடுபவராக இருக்கிறார். 

    ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோருடன் மூன்று பெண்களும் விருந்துக்கு செல்கிறார்கள். அப்போது அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, இதில் அர்ஜுன் சிதம்பரத்தை தாக்கிவிட்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தப்பித்து செல்கிறார்.

    ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங்

    இந்த சம்பவத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற பயத்தில் மூன்று பெண்களும் இருக்கிறார்கள். நினைத்தபடி அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தாவை பழிவாங்க நினைத்து அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

    அர்ஜுனின் தொல்லையை பற்றி போலீசில் புகார் கொடுக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் போலீஸ், அர்ஜுன் முதலில் புகார் கொடுத்ததாக கூறி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கைது செய்கிறார்கள். இவை அனைத்தையும் எதிர் வீட்டில் குடியிருக்கும் வழக்கறிஞர் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ஆதரவாக வாதாட ஆரம்பிக்கிறார்.

    இறுதியில் அஜித், தனது திறமையான வாதத்தால் எப்படி வழக்கை முடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்

    மேலே குறிப்பிட்ட கதையில் அஜித்தின் பெயர் சிறிதளவே வந்தாலும், படத்தின் முழு வலுவையும் அஜித்தே சுமந்து நிற்கிறார். இந்தியில் வெளியான பிங்க் படத்தில் அமித்தாப்பச்சன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை அஜித் ஏற்று நடித்திருக்கிறார். இதனால், மிகுந்த சவாலாக இருந்த கதாபாத்திரத்தை அஜித் மிகவும் நேர்த்தியாகவும், தனக்கே உரிய பாணியில் திறம்பட நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சி, பைக் ஓட்டும் காட்சிகளில் அவரது ரசிகர்களை திருப்திபடைத்திருக்கிறார். , 

    நாயகியாக நடித்திருக்கும் வித்யாபாலன், குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும், மனதில் நிற்கிறார். அஜித்துடனான இவரின் கெமிஸ்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

    அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்

    ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு வலுவான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமான காட்சிகளில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படம் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இவரது தோழிகளாக வரும் பிக்பாஸ் அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர், கோர்ட் விசாரணை காட்சிகளில் நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

    அர்ஜுன் சிதம்பரம் பார்ப்பதற்கு அழகாகவும், கொடுத்த வேலையை சிறப்பாகவும் செய்திருக்கிறார். கோர்ட்டில் அஜித்துடன் விவாதம் செய்யும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜூனியர் பாலையா, அரசியல்வாதியாக வரும் ஜெய பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    அஜித்

    தீரன் அதிகாரம் ஒன்று என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பின் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். பிங்க் படத்தின் ரீமேக் என்றாலும், அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு, அதே சமயம் பிங்க் படத்தின் கதையை ஏந்தவிதத்திலும் பாதிக்காத அளவிற்கு படத்தை இயக்கி இருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு உண்டான பாதுக்காப்பு குறித்தும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றியும் அஜித் பேசும் காட்சிகளில் உயிரோட்டமாக உருவாக்கி இருப்பது சிறப்பு. தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வரும் சூழ்நிலையில், இம்மாதிரியான படங்கள், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதும், அதில், முன்னணி நடிகர்கள் நடிப்பதும், சமுகத்திற்கு இதுவும் ஒருவழியில் உதவும் என்பதில் ஐயமில்லை.

    யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதம். பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். பிங்க் படத்தின் அதே காட்சிக்காக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மெனக்கெட்டிருக்கிறார். 

    மொத்தத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ பெண்களின் பாதுகாப்பு.


    நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
    நாடக கலைஞரும், நடிகருமானவர் ஒய்.ஜி.மகேந்திரன். இவரின் தாயும் கல்வியாளருமான ராஜலட்சுமி இன்று காலமானார். இவருக்கு வயது 93. உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ லட்சுமி, சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார்.

    ராஜலட்சுமி

    இவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி சடங்கு நாளை மாலை தி.நகரில் நடக்க இருக்கிறது. 
    ஜேசன் ஸ்டாதம், டுவேன் ஜான்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா படத்தின் விமர்சனம்
    ஜேசன் ஸ்டாதமின் (ஷா) தங்கை வனேசா ஒரு சீக்ரெட் போலீஸ் ஏஜெண்ட். உலகை அழிக்கும் வல்லமை உள்ள வைரஸை எடுக்க செல்கிறார் வனேசா. இதேபோல் வில்லனும் வைரஸை எடுக்க முயல்கிறார். இந்த வேளையில் வைரஸை கண்டுபிடிக்கும் வனேசா, அதை தனது உடலில் ஏற்றிக்கொள்கிறார். ஆனால் சூழலை மாற்றும் வல்லமை படைத்த வில்லன், சீக்ரெட் போலீஸ் ஏஜெண்டான வனேசா வைரஸை திருடிவிட்டதாக பழி சுமத்துகிறார். 

    இதனால் வனேசாவிடம் உள்ள வைரஸை மீட்க போலீஸ் அதிகாரியான டுவேன் ஜான்சன் (ஹாப்ஸ்) நியமிக்கப்படுகிறார். அவரின் உதவியாளராக ஜேசன் ஸ்டாதம் (ஷா) செல்கிறார். எதிரெதிர் துருவங்களான இருவரும் எப்போதும் சண்டை போட்டுக்கொள்ளும் குணமுடையவர்கள். முதலில் இணைந்து பணியாற்ற மறுக்கும் இருவரும் பின்னர் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவிக்கின்றனர். அப்போது வைரஸை திருடியது தனது தங்கை என்பதையும், அவள் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதையும் அறிகிறார் ஜேசன் ஸ்டாதம் (ஷா).  

    பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா

    தன்னிடம் உள்ள சக்தி மூலம் டுவேன் ஜான்சன் (ஹாப்ஸ்) மற்றும் ஜேசன் ஸ்டாதம் (ஷா) மீது பழி சுமத்துகிறார் வில்லன். இதையடுத்து வனேசாவிடம் உடம்பில் உள்ள வைரஸை எடுத்தார்களா? வில்லனின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.

    பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ள படத்தொடர். அப்படங்களில் கார் சேசிங், கடத்தல் , ஆக்சன் என சில அம்சங்கள் இடம்பெற்றிருக்கும், கிட்டத்தட்ட ஒரே கதை தான் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தில் ஹாப்ஸ் மற்றும் ஷா என்ற இரண்டு கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதை அமைத்து சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் டேவிட் லெட்ச். 

    பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா

    ஹாப்ஸ் மற்றும் ஷாவாக வரும் டுவேன் ஜான்சன், ஜேசன் ஸ்டாதம் இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பலம். இருவரின் ஆக்சன் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வதும், பஞ்ச் டயலாக் பேசுவதுமாக நம்மை ரசிக்க வைக்கிறார்கள். படத்தில் வரும் தங்கை மற்றும் வில்லன் கேரக்டர்கள் நடிப்பில் மிளிர்கின்றனர். ஜோனாதன் செலாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் “பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா” ஆக்சன் விருந்து.
    நாடோடிகள் 2 படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கும் அடுத்த படத்தில் விஷால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நாடோடிகள் 2 படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

    இந்தநிலையில் பல படங்களில் நாயகனாகவும், முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து வரும் சமுத்திரக்கனி இயக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய சிவம் என்ற ஆன்மிக நாவலை படித்த சமுத்திரக்கனி இந்த கதைக்கு விஷால் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் கதையைக் கூறியுள்ளார்.

    விஷால், சமுத்திரகனி

    விஷாலுக்கும் இந்தக் கதை பிடித்துவிட, உடனே அந்தக் கதையைத் திரைப்படமாக்க உரிமை பெற்றுள்ளார். இந்த திரைப்படம் ஓர் ஆன்மிக ஆக்‌‌ஷன் திரைப்படம் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் பங்குபெற உள்ள கலைஞர்கள் பற்றிய விவரம் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    நடிகர் கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் போட்டியாளர்களாக இருப்பவர்கள் கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ஏற்கனவே தயாராகி கிடப்பில் போடப்பட்ட மருதநாயகம் படம் பற்றியும் கேள்வி எழுப்பினர். அவற்றுக்கு பதில் அளித்து கமல்ஹாசன் கூறியதாவது:-

    “நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்க ஆசை இல்லையா? என்று கேட்கிறீர்கள். நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நான் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழி நடத்துகிறேன். எம்.ஜி.ஆருடன் ‘நாளை நமதே’ படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். நாளை நமதே படத்தை என்னால் ‘ரீமேக்’ செய்ய இயலாது. அதனால் அந்த படத்தின் தலைப்பை மட்டும் வாங்கி வைத்து இருக்கிறேன்.

    கமல்ஹாசன்

    சிவாஜி நடித்துள்ள தேவர் மகன் படத்தை ரீமேக் செய்து அதில் சிவாஜிகணேசன் நடித்த வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். உலகின் தலை சிறந்த காதல் ராவணனின் காதல். பத்து தலைகள் இருந்தாலும் ராவணனின் காதல் ஒரு தலை காதல்தான். நடக்கவே நடக்காது என்று தெரிந்தும் ராவணன் காதலித்தார் என்றால் அவருக்கு எத்தனை அன்பும் வெறியும் இருந்திருக்க வேண்டும்.

    மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். குஷ்புவுடன் நடித்த படங்களில் மைக்கேல் மதன காமராஜன் எனக்கு பிடித்த படம். அந்த படங்களில் 4 கதாநாயகிகள் இருந்தனர். ஆனாலும் குஷ்பு உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டே அதில் நடித்தார்.”

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
    பஸ்சில் பெண்களை உரசிய விவகாரத்தை எளிதில் மன்னிக்க முடியாது எனக்கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் திடீரென நீக்கம் செய்யப்பட்டார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் 23-ந்தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக ரேஷ்மா கடந்த ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்டார்.

    பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நடிகர் சரவணன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களை பற்றி கமல்ஹாசன் பேசி கொண்டிருந்த போது, தான் தனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பெண்களை உரசியதாக தெரிவித்தார். இதை கேட்டு அப்போது கமலும் சிரித்தார், அங்கு கூடியிருந்த மக்களும் சிரித்தனர். ஆனால், இந்த விவகாரம் பின்பு பெரிய சர்ச்சையாக வெடித்தது.

    அது எப்படி பெண்களை பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தியதாக கூறியதை கேட்டு, கமல் உள்ளிட்ட அனைவரும் அமைதியாக போகலாம் என சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. விவகாரம் பெரிதாவதை உணர்ந்த பிக்பாஸ் உடனடியாக சரவணனை ஆலோசனை அறைக்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தார். இதனால் அப்போதைக்கு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    சரவணன்

    இந்நிலையில், நேற்று அதிரடியாக சரவணனை மீண்டும் ஆலோசனை அறைக்கு அழைத்த பிக்பாஸ் இது தொடர்பாக அவரிடம் பேசினார். அப்போது, இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் மன்னிக்க முடியாது எனவும், உடனடியாக சரவணனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் அனுப்புவதாகவும் பிக்பாஸ் தெரிவித்தார். இதை பார்த்துக்கொண்டு இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் தான் ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

    கடந்த வாரம் வெளியேற்றப்படுபவர் பட்டியலில் கூட சரவணன் பெயர் இல்லை. அப்படியிருக்கும்போது அவசர அவசரமாக இரவு நேரத்தில் சரவணனை வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்தது. நேற்று யாருக்கும் தெரியாமல் சரவணன் பிக்பாசில் இருந்து வெளியேறிவிட்டார். இன்று தான் இதற்கு பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களின் மனநிலை என்ன என்பது தெரியும்.
    ரகுமான் நடிப்பில் அறிமுக இயக்குனர் ப்ராஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஆபரேஷன் அரபைமா’ படத்தின் முன்னோட்டம்.
    துருவங்கள் 16 படத்தின் மிக பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம், “ஆபரேஷன் அரபைமா”. ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன், பாலாஜி, ரமேஷ், டேனி, மோகிதா பட்டக்,  மணிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை : ராகேஷ் பிரம்மானந்தம்,  ஒளிப்பதிவு : ஃபீனிக்ஸ் உதயன், படத்தொகுப்பு: விஜயகுமார், ஷைஜூ, பாடல்கள் : முருகன் மந்திரம்,  வசனம் : ப்ராஷ், அரவிந்த் கலாதர், முருகன் மந்திரம், இணை இயக்குநர் : சஜி சுரேந்திரன், சண்டைப் பயிற்சி : கேப்டன் அனில்குமார், மற்றும் கமாண்டோ அஜித்குமார்.

    அபிநயா

    டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது, “ஆபரேஷன் அரபைமா”.
    ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இதில் ஜெயம்ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீள்கிறார். அவரது நண்பர் யோகிபாபு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கி சொல்கிறார். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசும் காட்சி ஓடுகிறது. அதை பார்த்ததும் ஜெயம்ரவி இது 1996-ம் வருடம்தான் 2016 அல்ல என்கிறார்.

    இந்த காட்சி ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்வது போல் உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. கமல்ஹாசனும் டிரெய்லரை பார்த்து அதிருப்தி தெரிவித்தார். 

    ரஜினிகாந்த்

    இதுகுறித்து படத்தின் நடிகர் ஜெயம் ரவி கூறும்போது, ”நான் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும், ‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இந்த முன்னோட்டத்துக்கு  மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இருப்பினும் அந்த முன்னோட்டத்தில் மரியாதைக்குரிய ரஜினி சார் தொடர்பான காட்சி, அவரின் ரசிகர்ளின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது. அந்த விஷயம் நேர்மறையாகச் சித்தரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

    அவரது ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினி சாரின் அதி தீவிர ரசிகன் என்ற முறையில் காணக் காத்திருக்கிறேன். நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது அவரையோ அவரது ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது.  

    அவர் ‘கோமாளி’ பத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டினார். எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார். இருந்தபோதும், எந்த விதமான  உள் நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் அந்த காட்சியால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கு மதிப்பளித்து, அக்காட்சியை படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×