என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல பாலிவுட் நடிகையும், தற்போது அஜித்துடன் ஜோடியாக நடித்தவருமான வித்யா பாலன், நடிப்பு தான் உயிர் என்று கூறியிருக்கிறார்.
    கேரளாவை பூர்வீகமாக கொண்ட வித்யா பாலன் தமிழில் அறிமுகமாக வேண்டியவர். இங்கே சிலர் நிராகரித்ததால் இந்திக்கு சென்று முன்னணி கதாநாயகியாகி விட்டார். சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

    அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- பொதுவாக திரையுலகில் இருக்கும் நடிகைகள் 26 வயதில் திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால் நானோ 26 வயதில் தான் சினிமா உலகிற்குள் நுழைந்தேன். அதனால் என்னுடைய திரை பயணம் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வரும் என்று ஆரம்பத்தில் நினைத்தேன்.

    வித்யா பாலன்

    40 வயதுடைய நான் 14 வருடங்களாக திரை துறையில் இருக்கிறேன். என் வாழ் நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன். தற்போது நல்ல வாய்ப்புகள் அமைந்து சிறப்பாக செல்கிறது. இது வருங்காலங்களிலும் தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்’ என்று கூறினார்.
    தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷின் பட போஸ்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் வெளியிட இருக்கிறார்.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை சசி இயக்கி இருந்தார்.

    தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் புதிய படம் உருவாக இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்க இருக்கிறார். ஆக்‌சஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ஹர்பஜன் சிங்

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறார். 
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
    இயக்குநர் விஜய்யுடனான விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலாபால் சினிமா துறையில் பிசியான நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை படத்தில் ஆடையில்லாமல் தைரியமாக நடித்து அசத்தினார். அடுத்து அமலா பால் கையில் 5க்கு மேற்பட்ட படங்கள் உள்ளன. 

    பெரும்பாலும் முதன்மை கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார். 

    அமலாபால்

    தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் உள்ள சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நீச்சல் உடையில் மலையின் மீது ஏறும் போது எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அமலா பாலின் இந்த கவர்ச்சியுடனான சாகசத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. தற்போது படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதுவரை பர்ஸ்ட் லுக்காக 2 படங்களை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. 

    2020-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பதால் டிசம்பரில் இருந்து தான் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 'தர்பார்' படத்தை முடித்துவிட்டு சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி. ஆனால், சூர்யாவை இயக்க சிவா ஒப்பந்தமாகிவிட்டதால் உடனடியாக ரஜினியை இயக்க அவரால் முடியவில்லை. 

    இயக்குனர் ஏஆர் முருகதாஸ், ரஜினிகாந்த்

    இதனால், ரஜினியின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது குறித்து குழப்பம் நீடித்தது. இந்நிலையில், 'தர்பார்' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் ஏ.ஆர்.முருகதாசே இயக்க பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட்டுள்ளது. 

    ரஜினியிடம் அவர் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, அவரும் ஒ.கே சொல்லியிருப்பதாகக் கூறுகிறார்கள். அனேகமாக இந்த படம் தர்பார் 2 என்று பெயரிடப்பட்டு அதன் தொடர்ச்சியாகவே இருக்கும். இதிலும் ரஜினி போலீசாகவே தொடர்வார் என்கிறார்கள். 
    பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிப்பதற்கு இயக்குனர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
    இயக்குனர் விஜய், வித்யா பாலனை வைத்து இயக்குவதாக இருந்த ஜெயலலிதாவின் பயோபிக், தற்போது கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகி வருகிறது. `தலைவி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. 

    தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு `தலைவி’ எனவும், இந்தி வெர்ஷனுக்கு ’ஜெயா’ எனவும் பெயரிடப்பட்டது. இந்த பெயர்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இந்தப் பெயர்கள் குறித்த தன்னுடைய கருத்தை, இயக்குநர் விஜய்யிடம் கங்கனா தெரிவித்துள்ளார். 

    இயக்குனர் விஜய், கங்கனா ரனாவத்

    `ஒரு திரைப்படம் மூன்று மொழிகளில் எடுக்கப்படும்போது, அவை மூன்றுக்கும் ஒரே பெயர் வைப்பது தானே சரியாக இருக்கும். அதனால், இந்தி வெர்ஷனுக்கும் `தலைவி’ என்கிற பெயரையே வைக்கலாம்’ என கங்கனா ரெக்வஸ்ட் வைக்க, இது குறித்து படக்குழு யோசித்து வருகிறது. 'தலைவி' என்கிற பெயரில் இந்தி வெர்ஷனின் டைட்டில் லுக் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா, 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில், முதன் முறையாக 6 கோடி ரூபாய் சம்பளத்தை எட்டியுள்ளார். 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய நடிகை ஒருவருக்கு இவ்வளவு சம்பளமா என திரைத்துறையினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். சமீபத்தில் வெளியான சாஹோ படத்திற்காக ஷ்ரத்தா கபூர் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    நயன்தாரா

    அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல், ஐரா, கொலையுதிர் காலம் போன்ற தமிழ் படங்கள் தோல்வியடைந்த போதும், இவர் மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்த லவ் ஆக்‌ஷன் டிராமா படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தற்போது ரஜினியின் தர்பார், விஜய்யின் பிகில் மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் பெயரிடப்படாத படம் உள்ளிட்டவற்றில் நடித்து வருகிறார்.    
    தங்கல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள சிச்சோரே படம் குறித்து பார்ப்போம்.
    தேர்வில் தோல்வி அடைந்த மகனை வாழ்க்கையில் வெற்றிபெற செய்த தந்தையின் கதை தான் ’சிச்சோரே’. வழக்கமாக தமிழ் படங்களை பார்க்கும் நாம், பிற மொழிகளில் வரும் படங்களை கவனிக்க தவறுகிறோம். பிற மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பின்னர் தான் அதை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதே சினிமா விரும்பிகளின் கருத்தாக உள்ளது.

    அந்த வகையில் கடந்த வெள்ளியன்று வெளியான ’சிச்சோரே’ என்ற இந்தி படத்தை பற்றி இப்போது பார்ப்போம். 

    சுஷாந்த் சிங் ராஜ்புத் நாயகனாகவும், ஷ்ரத்தா கபூர் நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் பிரதிக் பாபர், வருண் ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் பிரீத்தம் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அமலேண்டு சவுத்திரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    கதைப்படி நாயகனுக்கும் நாயகிக்கும் திருமணமாகி, கல்லூரி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். கருத்து வேறுபாடு காரணமாக நாயகனும், நாயகியும் பிரிந்து வாழ்கிறார்கள். நாயகன் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தேர்வு முடிவுக்காக மிக பதற்றத்தோடு காத்திருக்கும் மகன், தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். 

    சிச்சோரே பட போஸ்டர்

    இதனால் பெரிதும் மனமுடைந்து போன நாயகன், தனது கல்லூரி அனுபவங்களை தன் மகனிடம் பகிர்ந்து கொள்கிறார். நாயகி மற்றும் அவருடைய நண்பர்களின் துணையுடன் தனது மகனை மீண்டும் புத்துணர்வோடு ஊக்குவித்து கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார்கள். இதில் நாயகனுடைய கல்லூரி வாழ்க்கை மிகவும் நகைச்சுவையாகவும், அதே சமயத்தில் தேர்வில் தோல்வி என்பது முடிவல்ல, அது வெறும் பாடம் என்று எடுத்துக்கொண்டு, முனைப்புடன் செயல்பட்டால் வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷங்களும், வெற்றியும் தேடி வரும் என்பதை சொல்லும் படம் தான் சிச்சோரே. 

    வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் குழந்தைகளுக்கு போதிக்கும் பெற்றோர்கள், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்று எப்போதாவது அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்களா?

    முயற்சியும் பயிற்சியும் இடைவிடாமல் கொண்டோரின் தோல்வி வெற்றிக்கும் சமானம் என்று புரிய வைத்திருக்கிறார்களா? இந்த கேள்விகளைப் சிச்சோரே படம் மூலம் பலமாக எழுப்பியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி.
    ரா.சுப்ரமணியன் இயக்கத்தில் சீமான், ஆர்கே சுரேஷ் மற்றும் அனு சித்தாரா நடிப்பில் உருவாகி வரும் அமீரா படத்தின் முன்னோட்டம்.
    சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் கதாநாயகர்களாக நடிக்கும் படம் அமீரா. பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயகுமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்.  

    அமீரா

    பல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளனர். 
    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா, கைவசம் அரை டஜன் படங்கள் வைத்துள்ளார்.
    திரிஷா 2002-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயது நிரம்பிய நிலையிலும் இன்னும் கதாநாயகியாகவே நீடிக்கிறார். கடந்த வருடம் திரைக்கு வந்த ‘96’ படத்தின் வெற்றி அவரை மேலும் உச்சத்துக்கு கொண்டு போனது. இந்த படத்தை தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர்.

    ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவும் இந்த வருடம் திரைக்கு வந்த ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியது. கர்ஜனை, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

    திரிஷா

    ராங்கி படம் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதையில் உருவாகிறது. சுகர் படத்தில் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார். அடுத்து மலையாள படமொன்றில் மோகன்லால் ஜோடியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

    மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஜீத்து ஜோசப் தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தை டைரக்டு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஹே ஜூட் என்ற படத்தில் திரிஷா நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு எம்.ஜி.ஆர் பட தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    'அசுரன்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்கு சென்றுள்ளார் தனுஷ். இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த படத்துக்கு எம்.ஜி.ஆர் பட தலைப்புகளில் ஒன்றை தேர்வு செய்து இருப்பதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் தலைப்பு 'உலகம் சுற்றும் வாலிபன்' என்று தகவல் வெளியானது. 

    தனுஷ், கார்த்திக் சுப்புராஜ்

    இது தொடர்பாக படக்குழுவினரிடம் கேட்ட போது, "இப்போது தான் படப்பிடிப்பே தொடங்கியுள்ளோம். இன்னும் தலைப்பை இறுதி செய்யவில்லை" என்று தெரிவித்தனர். இந்த படத்தில் தனுஷுக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். ஒரே கட்டமாக லண்டனில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இந்தியா திரும்ப உள்ளார்கள்.
    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு பிரபலம் விருந்தினராக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 

    16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன், ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் கடந்த வாரம் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இவர்கள் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினர். 

    சினேகன்

    இந்நிலையில், பிக்பாஸ் முதல் சீசனில் 2-வது இடம் பிடித்த சினேகன் விருந்தினராக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சினேகன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன். கருத்துக்கள் வரவேற்கத்தக்கது” என்று பதிவு செய்துள்ளார்.
    ரஜினிகாந்த் மற்றும் கமல் நடிக்கும் படங்களை இயக்க ஆசை இருக்கிறது, ஆனால் அதற்கான அனுபவம் இல்லை என அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.
    கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், ஷமிதாப் என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி விவேகம், கடாரம் கொண்டான் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி இருக்கிறார். இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சினிமாவுக்கு வந்து 4 வருடங்களில் நான்கு படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறீர்களே? என்று கேட்கிறார்கள். நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எனக்கு பிடித்த மாதிரி இல்லை. 

    நடன கலைஞராக வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறவில்லை. 4 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன்பிறகு எதிர்பாராமல் நடிகையாகிவிட்டேன். முடிந்தவரை நடிகையாகவே நீடிப்பேன். டைரக்டராக வேண்டும் என்றும் விருப்பம் உள்ளது. ரஜினிகாந்த் மற்றும் எனது அப்பா நடிக்கும் படங்களை இயக்க ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான அனுபவம் இல்லை.

    அக்‌ஷரா ஹாசன்
     
    அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதிர்ஷ்டம். எனது தனிப்பட்ட சில படங்கள் லீக் ஆகிவிட்டன. கடந்த காலம் பற்றி பேசுவதில் பிரயோஜனம் இல்லை. நாம் சரியாக இருந்தாலும் சில நேரம் தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இந்த துறையில் இருக்கிறது. நம்மை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். 

    நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை. அதை சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட்டு வாழ முடியாது. அம்மா, அப்பா பிரிந்ததில் வருத்தம் இருக்கிறது. இந்த உலகமே மூழ்கி போனது போல் இருந்தது. எனக்கு இருவருமே முக்கியமானவர்கள்.” இவ்வாறு அக்‌ஷரா ஹாசன் கூறினார்.
    ×