என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இயக்குனர்கள் தன்மீது கோபப்பட்டு திட்டியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
    உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்தன. அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு விமர்சனங்களிலும் சிக்கினார். 

    சமீபத்தில் குடும்பத்தினருடன் புகைப்பிடிக்கும் படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும் தனக்கு ஆஸ்துமா உள்ளது என்றும் பேசிவரும் பிரியங்கா சோப்ரா இப்படி புகைப்பிடிக்கலாமா? என்று வலைத்தள வாசிகள் கண்டித்தனர். இந்த நிலையில் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக பேசி உள்ளார். 

    பிரியங்கா சோப்ரா

    அவர் கூறியதாவது:- “நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன். பட வாய்ப்புக்காக அலைக்கழித்தனர். அப்போது சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. சினிமா பற்றிய புரிதலும் இல்லை. இயக்குனர்கள் என்மீது கோபப்படுவார்கள். திட்டவும் செய்வார்கள். என்னை ஒதுக்கினர். 

    சினிமாவில் இருந்து தூக்கி எறிந்தனர். அந்த துயரமான நாட்களில் எனது தந்தை ஆதரவாக இருந்தார். தோல்விகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. என்னை நானே ஊக்கப்படுத்தி முன்னேறினேன்.” இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.
    ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தில் தேசிய விருது பெற்ற பிரபலங்கள் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.
    ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கோமாளி’. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களின் இயக்குநர் லக்ஷ்மன் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.  ஜெயம் ரவியின் 25 வது படமான இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இதன் பிறகு இயக்குநர் அஹமத் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குநர்கள் ஸ்ரீராம் ஐயங்ரார் மற்றும் சுஜீத் போன்றோர் இந்த படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் புகழ்பெற்ற பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவதி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளனர்.

    ஜெயம் ரவி

    இந்த படத்தில் முக்கிய காட்சிக்கான அரங்கம் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    காலா படத்திற்குப் பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘காலா’  திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    ஆனால் தற்போது இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக குத்துச் சண்டையை மையப்படுத்திய கதையை தயார் செய்திருப்பதாகவும், ஆர்யாவுக்கு அந்தக் கதையைக் கூறி அவரது சம்மதத்தையும் பெற்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

    ஆர்யா

    விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் பணத்தை பெற்றுக் கொண்டு தற்போது நடிக்க மறுத்தும், பணத்தை திருப்பி தர மறுத்தும் வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
    புளுவேல் விளையாட்டை மையமாக வைத்து ‘புளுவேல்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் பூர்ணா, மாஸ்டர் கபிஷ் கண்ணா, பிர்லா போஸ், பொன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரங்கநாதன் இயக்கி உள்ளார். மது, அருமைச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    இதில் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்து கொண்டு பேசும்போது, “இயக்குனர் நினைத்தால் சாதாரண மனிதரையும் சூப்பர் ஸ்டாராக்க முடியும், சூப்பர் ஸ்டாரை சாதாரண மனிதராக்க முடியும். சிலர் உங்கள் படம் நன்றாக ஓடுகிறது என்று உசுப்பேத்துவதை நம்பி நடிகர்-நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவது வருத்தம் அளிக்கிறது.

    பிரகாஷ் ராஜ்

    புளுவேல் விளையாட்டைப் பற்றியும், அதை விளையாடுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமூக அக்கறையோடு இப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்” என்றார். தயாரிப்பாளர் சங்க கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நடிக்க நேரமில்லை என்று கூறிவிட்டார். ரூ.15 லட்சம் முன்பணத்தில் ரூ.5 லட்சம் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தைத் திருப்பிதர மறுக்கிறார். அவர் எந்த படப்பிடிப்பில் இருந்தாலும் மறியல் நடத்துவோம்” என்றார்.
    சசி இயக்கத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்திருக்கும் சித்தார்த், எனக்கு இன்னும் தகுதி வரவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
    சித்தார்த், ஜிவி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையொட்டி சித்தார்த் அளித்த பேட்டி:- 

    நெகிழ்வான படத்தில் நடித்த அனுபவம்?

    நான் நடித்த படங்களிலேயே ரொம்ப திருப்தியான படம். இயக்குனர் சசி அதற்கான சுதந்திரத்தை கொடுத்தார். கமிஷனர் அலுவலகத்தில் பேசும் காட்சி, நைட்டி பற்றிய வசனம் போன்ற முக்கிய காட்சிகளுக்கு நிறைய ஆராய்ச்சி செய்தோம். அந்த அபார உழைப்புக்கு தான் ரசிகர்கள் கைதட்டி மகிழ்கிறார்கள். இயல்பான போலீசை காட்ட திட்டமிட்டோம். அது நடந்து இருக்கிறது.

    ஜிவி.பிரகாசுக்கு நைட்டி அணிவிக்கும் காட்சி?

    அதில் நடிக்க ரொம்பவே தயங்கினேன். ஆனால் அது தவறு என்று என் அம்மாவாக நடித்த தீபா உணர்த்தும் காட்சி படத்துக்கு மிகவும் முக்கியமான காட்சி. சினிமாவை பார்த்து யாரும் திருந்தவேண்டும் என்று நினைக்கவில்லை. சில விஷயங்களை உணர்த்தினாலே போதும். மக்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலே போதும்.

    சித்தார்த்

    இன்னொரு கதாநாயகனுடன் நடிப்பது பற்றி?

    இந்த படத்தை பொறுத்தவரை கதை தான் முதன்மை. அடுத்து லிஜோமோல் என்ற நடிகை. இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நடிகனே கிடையாது. கதை கேட்கும்போதே தெரிந்துதான் சம்மதித்தேன். படம் நன்றாக வந்தால் போதும்.

    சாக்லேட் பாய் என்ற பட்டம் குறித்து?

    இனிமேலும் என்னை சாக்லேட் பாய் என்று அழைத்தால் கடும் கோபம் வரும். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட தான் நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் என்னை ஒரு வட்டத்துக்குள் சிக்க வைக்காதீர்கள்.

    டைரக்‌ஷன் எப்போது?

    எனக்குள் ஒரு உதவி இயக்குனர் இருக்கிறான். கதையில் ஏற்படும் சந்தேகங்களை கேட்பேன். எனக்கு இன்னும் இயக்குனர் ஆவதற்கான தகுதி வரவில்லை.

    ட்விட்டரில் சமூக கருத்துகளை சொல்வது அரசியலுக்கு வருவதற்காகவா?

    அரசியலுக்கு வந்தால் இப்படி வெளிப்படையாக கருத்து சொல்ல முடியாது. எந்த வட்டத்துக்குள்ளும் சிக்கி கொள்ளாமல் இருந்தால் தான் சுதந்திரமாக கருத்து சொல்லமுடியும். அரசியலுக்கு வரமாட்டேன்.
    புளுவேல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த், கதாநாயகனை நம்பி படம் எடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
    பூர்ணா, மாஸ்டர் கபீஷ் கன்னா, பிர்லா போஸ், திவ்யா, பொன்ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் புளுவேல். புளுவேல் என்ற விளையாட்டுக்கு பலியான சிறுவன் பற்றிய உண்மைக்கதையை ரங்கநாதன் படமாக்கி உள்ளார். 

    இந்த படத்தின் இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் பேசியதாவது:- ‘ஆந்திராவிலும், கேரளாவிலும் சினிமாத்துறை நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சரியில்லை என்று எல்லோரும் சினிமாவை குறை கூறுகிறார்கள். நடிகர் சங்கத்தில் ஒற்றுமையில்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமையில்லை. முதலில் நம் வீட்டில் ஒற்றுமை இருக்க வேண்டும். எப்போது நமக்குள் ஒற்றுமை இல்லையோ, அடுத்தவர்கள் வேடிக்கைப் பார்க்கத்தான் செய்வார்கள். அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

    ஸ்ரீகாந்த்

    கதாநாயகனை நம்பி படம் எடுக்காதீர்கள், கதையை நம்பி படமெடுங்கள். அதேபோல், நல்ல இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் அது அதிர்ஷ்டமாக கருதி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து மற்றவர்களைக் குறை கூறக்கூடாது. சினிமாவை சரிசெய்தால் தான் மக்கள் ஆர்வத்தோடு வருவார்கள். மக்களை கட்டாயப்படுத்த முடியாது. பிடித்திருந்தால் அவர்களே வந்து பார்ப்பார்கள். ஏகப்பட்ட படங்கள் வெளியாகிறது, திரையரங்க உரிமையாளர்கள் என்ன செய்வார்கள்? ஒரு படத்தைத் தூக்கிவிட்டு இன்னொரு படத்தை போடத்தான் செய்வார்கள். அதற்கு அவர்களை குறைகூறுவது சரியல்ல. நம்முடைய துரதிர்ஷ்டம்’. இவ்வாறு ஸ்ரீகாந்த் பேசினார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அசுரன்’ படத்தின் டிரைலர் வெளியாகி சாதனை படைத்துள்ளது.
    பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றி மாறன் இயக்கியுள்ள படம் அசுரன். வடசென்னை படத்துக்கு பின் வெற்றிமாறன் தனுஷுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் மஞ்சு வாரியர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

    விசாரணை படத்திற்கு பின் வெற்றிமாறன் நாவலை தழுவி எடுக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை அசுரன் படத்தின் முன்னோட்டம் வெளியானது. வெளியிட்ட 1 மணி நேரங்களில் 15 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தற்போது வரை 27 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். டிரெய்லரே அடர்த்தியும், அழுத்தமுமாக வந்திருக்கிறது. 

    அசுரன் படத்தில் தனுஷ்

    ‘நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்திருக்கிருவானுக, ரூவா இருந்தா புடிங்கிக்கிருவானுக, படிப்ப மட்டும் நம்ம கிட்டயிருந்து எடுத்துக்கவே முடியாது’ என தனுஷ் பேசும் வசனம் நெடுங்கால அரசியலையும், படத்தின் மையத்தையும் பேசுவதாக அமைந்திருக்கிறது. தனுஷ் இளைஞனாகவும், வயதான கதாபாத்திரமாகவும் தோன்றி இருக்கிறார். பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். அக்டோபர் 4ந்தேதி அசுரன் வெளியாகவிருக்கிறது.
    மண்வாசனை படம் மூலம் அறிமுகமான நடிகை ரேவதி, திருமணம் செய்தது தவறான முடிவு என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.
    30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. மண் வாசனை படம் மூலம் அறிமுகமான இவர், நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டார். விவகாரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த ரேவதி தொடர்ந்து நடித்து வருகிறார். 

    தனது திருமணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’நான் பிளஸ் டூ முடிச்சிருந்த நேரம். என்னை பற்றி தெரிஞ்சுக்கிட்ட பாரதிராஜா அங்கிள், 'மண்வாசனை' படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அந்த 16 வயசுல, 'நான் நடிகையா?'ன்னு மிரண்டுபோய் 'அதெல்லாம் வேண்டாம்'னு சொன்னேன். என் மாமாதான் என்னை கன்வின்ஸ் பண்ணினார். 

    நடிகை ரேவதி

    'எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது'ன்னு பாரதிராஜா அங்கிள்கிட்ட சொல்ல, 'ரொம்ப நல்லதா போச்சு. உன்னை நடிக்க வைக்கிறது என் பொறுப்பு'ன்னு சொன்னார். பாரதி அங்கிள் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, அப்படியே நடிச்சேன்... 

    என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போ கொஞ்சம் நிதானமாக முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதை வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன். தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடிச்சேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பிச்சிருக்கு. ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படி எல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம்’. இவ்வாறு ரேவதி கூறியுள்ளார்.
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
    செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். திரிஷாவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. 

    யார் எல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்த ஒரு விபரத்தையும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இந்த படத்துக்காக 12 பாடல்களை எழுத உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

    மணிரத்னம்

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் அன்று தான் படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. 

    மேலும் இப்படத்தில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னத்துடன் நாயகன், தளபதி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். 
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் காப்பான் படத்தின் முன்னோட்டம்.
    என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் ’காப்பான்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யாவை வைத்து அயன், மாற்றான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். 

    காப்பான்

    முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். தீவிரவாதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 

    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தனது சம்பளத்தை திடீரென குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    காஜல் அகர்வாலுக்கு தமிழ், தெலுங்கு என 2  திரைத்துறைகளிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. கவர்ச்சியுடன் கனமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து பாரிஸ் பாரிஸ் ரிலீசாக இருக்கிறது. 

    சாதாரணமாக ஒரு தெலுங்கு படத்தின் சம்பளம் என்று பேசினால், அனைத்து சலுகைகளுக்கு பிறகு காஜல் அகர்வால் ரூ.1.75 கோடி வரை வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து செலவுகளுடன், மொத்த ஊதியம் 2 கோடியை அவருக்கு கொடுக்கிறார்களாம். காஜல் அகர்வால் இந்தியில் மும்பை சாகா திரைப்படத்தில் நடிக்கிறார். 

    காஜல் அகர்வால்

    இந்த படத்தில் நடிகர் ஜான் ஆபிரகாமும் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வாலுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே கொடுத்ததாக தகவல்கள் வெளிவருகின்றன. தமிழ், தெலுங்கில் நல்ல சம்பளம் வாங்கும் காஜல் இந்தி படம் என்பதால் தனது சம்பளத்தை கணிசமாக குறைத்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மக்களை நாய் என்று கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ரசிகர்களிடம் சாக்‌ஷி மன்னிப்பு கேட்டார்.
    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் உள்ளனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி அகர்வால், அபிராமி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் கடந்தவாரம் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தாளிகளாக சென்றனர். அந்த நேரத்தில் ஷெரின் - தர்ஷன் இடையேயான நட்பை காதல் என்று வனிதா கூறியதால் ஷெரின் மனம் உடைந்தார். 

    அவரை ஆறுதல்படுத்திய சாக்‌ஷி நிகழ்ச்சியை பார்க்கும் மக்களை நாய்கள் என்று ஷெரினிடம் கூறினார். இதற்கு பார்வையாளர்கள் சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாக்‌ஷி விஸ்வரூபம், காலா படங்களில் நடித்தவர். அதை தொடர்ந்து நேற்று
    ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சாக்‌ஷி பேசியதை மேடையில் குறிப்பிட்டார். ஆனால் சாக்‌ஷி நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

    சாக்‌ஷி அகர்வால்

    இதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:- ’அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும். எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது ஷெரினை ஆறுதல் படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி. 

    உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன். உங்கள் அனைவரிடம் இருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு, மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×