என் மலர்
சினிமா செய்திகள்
நிவின்பாலி, நயன்தாரா நடிப்பில் உருவான லவ் ஆக்ஷன் டிராமா திரைப்படம் தற்போது வெளியாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களை மலையாள திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த படம் ’பிரேமம்’. நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் மலையாள இயக்குனர்கள் படங்களை இயக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ‘லவ் ஆக்ஷன் டிராமா’.
நிவின் பாலி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் அஜு வர்கீஸ், தன்யா, பிரஜன், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் தயான் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரகுமான் இசையமைத்துள்ளார்.

களவாணி விமல், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா போல் ஊதாரித்தனமாக சுற்றும் நிவின் பாலிக்கு தனது மாமா மகள் மீது ஆசை. சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்கும் என கூறி நிவின் பாலிக்கு தனது மகளை திருமணம் செய்துவைக்க மறுக்கிறார் அவரது மாமா. இதையடுத்து தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்கிறார் நிவின் பாலியின் மாமா. இதனால் மணமுடையும் நிவின் பாலி தனது குடிகார நண்பனுடன் சேர்ந்து மது பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.
நிவின் பாலி மாமா மகளின் நெருங்கிய தோழி தான் நயன்தாரா. தோழியின் கல்யாணத்திற்காக கேரளா வரும் நயன்தாராவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் நிவின் பாலி, நயனுக்கும் நிவின்பாலி மீது ஒரு ஈர்ப்பு உருவாகிறது. திருமணம் முடிந்தவுடன் நயன்தாரா சென்னைக்கு செல்கிறார். அவரை காண நிவின் பாலியும் சென்னைக்கு வருகிறார். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். குடி, புகையை நிறுத்தினால் கல்யாணத்துக்கு ஓகே என கண்டிசன் போடுகிறார் நயன்தாரா. இந்த கண்டிசனை ஓகே செய்து நயன்தாராவை கரம் பிடிக்க நிவின் பாலி நடத்தும் டிராமா தான் இந்த ‘லவ் ஆக்ஷன் டிராமா’.
பருத்தி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகை பிரியா மணி, தற்போது வெப் சீரிஸில் களமிறங்கி இருக்கிறார்.
பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் எடுத்த பிரியாமணி திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கினார். தற்போது இணைய தொடர் மூலம் மீண்டும் வருகிறார்.
இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் - பிரியா மணி - சந்தீப் கிஷன் கூட்டணியில் ‘தி பேமிலி மேன்’ எனும் திரில்லர் தொடர் அமேசானில் செப்டம்பர் 20ந்தேதி முதல் வெளியாக உள்ளது. இந்தியில் 'ஸ்ட்ரீ', 'கோ கோவா கான்', 'ஷார் இன் த சிட்டி' ஆகிய படங்கள் மூலம் பாராட்டப்பட்ட இரட்டை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே இருவரும் இயக்குகிறார்கள்.

இந்த தொடரை டி2ஆர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புகளையும் கவனித்து சிறப்பாகச் செயல்படுகிறார் என்பது தான் ‘தி பேமிலி மேன்’ தொடரின் கதை ஆகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் எதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்புகள் வரவில்லை என பிரபல நடிகை வருத்தம் தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதற்கு பின் சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்த்தால் பெரிய படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. அவர் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:- ’சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டு வந்த பொண்ணு நான். ஆனால் 'மெட்ராஸ்' படத்துக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. முக்கியமாக, 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும்ன்னு நினைத்தேன்.

ஆனால், புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முன்னாடி இருந்தது மாதிரியேதான் இருக்கு. அதுக்காக நான் வருத்தப்படவும் இல்லை. அது ஒரு நிகழ்ச்சி அவ்வளவுதான். என்கூட அந்த வீட்டிலிருந்த ஹவுஸ் மேட்ஸ்கூட இன்னும் தொடர்பில்தான் இருக்கேன். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஒருநாள் கமல் சாரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அப்போ ரெண்டு பேரும் நலம் விசாரிச்சுக்கிட்டோம்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'சிட்டிசன்’ மணி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜெயம், மதுனிக்கா நடிப்பில் உருவாகி வரும் ‘பெருநாளி’ படத்தின் முன்னோட்டம்.
அஜித்தின் ‘சிட்டிசன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மணி, அப்படத்தை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததோடு, வடிவேலுவின் காம்பினேஷனில் பல காமெடிக் காட்சிகளில் தனது காமெடி திறமையை மூலம் காமெடி நடிகர் ‘சிட்டிசன்’ மணியாக பிரபலமானவர், தற்போது ‘பெருநாளி’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஜெயம் என்ற புதுமுகம் நடிக்க, ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிரேன் மனோகர், சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குடும்ப சென்டிமெண்டுடன், காதல், ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து சொல்லும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாமா - மருமகள் சென்டிமெண்டை இதுவரை சொல்லப்படாத வகையில் சொல்லியிருக்கிறார்களாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ், காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘கோமாளி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இணைய தொடரில் வைபவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சிக்சர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவர் இயக்க இருந்த மாநாடு படத்திலிருந்து சிம்பு விலகியதால் அப்படம் கிடப்பில் உள்ளது. இதனால் தற்போது இணைய தொடரை இயக்க வெங்கட் பிரபு தயாராகியுள்ளார்.
மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் நிசப்தம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அனுஷ்காவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின.
கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் வந்தது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை. உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருந்ததால் அனுஷ்காவை ஒதுக்கினர். இதனால் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்து ஒல்லியான தோற்றத்துடன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அதன்பிறகு நிசப்தம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், நிசப்தம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வசனமே இல்லாத படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தில் அனுஷ்கா ஓவிய கலைஞராக நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படமாக தயாராகி உள்ள ‘பிகில்’ தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல்களை வருகிற 19-ந்தேதி சென்னையில் விழா நடத்தி வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய்யும், சிங்கப்பெண்ணே என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமானும் சொந்த குரலில் பாடி உள்ளனர்.
இரண்டு பாடல்களும் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. பிகில் படத்துக்கு பிறகு மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்றும், முழு நீள நகைச்சுவை படமாக தயாராகிறது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. கதாநாயகியாக நடிக்க பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி பெயர் அடிபடுகிறது. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். 2 படங்களுமே நல்ல லாபம் பார்த்தன. இதுபோல் திருமலை, ஆதி படங்களை இயக்கிய ரமணாவும் விஜய்யை வைத்து புதிய படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் 11 மாதமாக புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரிஷி கபூர் மும்பை திரும்பினார்.
பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர் தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ (என் பெயர் ஜோக்கர்) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து 1973-ம் ஆண்டு பாபி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், கடந்த ஆண்டு அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது மனைவியும், நடிகையுமான நீத்து கபூருடன் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கிற்கு சென்றார்.

அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரை நடிகர்கள் ஷாருக் கான், அமீர் கான், அபிஷேக் பச்சன், அனுபம் கெர் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் ஆகியோர் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ரிஷி கபூர் நேற்று காலை மும்பை திரும்பினார்.
இதுகுறித்து ரிஷி கபூர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘11 மாதம் 11 நாட்கள் கழித்து நான் வீடு திரும்பி உள்ளேன. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு எம்.ஜி.ஆர். பட தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அசுரன் படத்தை முடித்து விட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார் தனுஷ். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக வருகிறார். பெரும்பகுதி படப்பிடிப்பை லண்டனில் நடத்துகின்றனர். இந்த படத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் பரவி உள்ளன.
எம்.ஜி.ஆர், லதா நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் 1973-ல் வெளியானது. எம்.ஜி.ஆர் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த தலைப்பை பெறும் முயற்சியில் தனுஷ் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், ரகசிய போலீஸ், நம்நாடு என்ற பெயர்களில் படங்கள் வந்துள்ளன.

தற்போது ‘எங்க வீட்டு பிள்ளை’ தலைப்பை சிவகார்த்திகேயன் படத்துக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்று மாற்றி விட்டனர். உலகம் சுற்றும் வாலிபன் தலைப்பை பயன்படுத்தவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சாய் நாகராஜன் கூறும்போது, “எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து வருகிறோம். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் உரிமை என்னிடம் இருக்கிறது. எனவே தலைப்பை யாருக்கும் கொடுக்க மாட்டோம்” என்றார். எனவே இந்த தலைப்பு தனுஷ் படத்துக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய்குமார் அடுத்ததாக வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடிக்க உள்ளார்.
சரித்திர காலத்து சம்பவங்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அதுபோன்ற படங்கள் அதிகம் தயாராகின்றன. ஏற்கனவே வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்கள் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தின. தீபிகா படுகோனே நடிப்பில் ராணி பத்மினி வாழ்க்கை கதை ‘பத்மாவத்’ என்ற பெயரிலும், கங்கனா ரணாவத் நடிப்பில் ராணி லட்சுமிபாய் வாழ்க்கை ‘மணிகர்னிகா’ என்ற பெயரிலும் வெளியானது.
ஆந்திராவில் வாழ்ந்த உய்யலாவாடா நரசிம்ம ரெட்டி என்ற மன்னனின் வாழ்க்கை சைரா நரசிம்ம ரெட்டி'' என்ற பெயரில் படமாகி உள்ளது. இதில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் திரைக்கு வருகிறது. மோகன்லால், அர்ஜுன், மஞ்சு வாரியர் நடித்துள்ள ‘மரக்கார் அரபிக்கடலன்டே சிம்ஹம்’ என்ற சரித்திர படம் மலையாளத்தில் தயாராகி விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாறு 'பிருத்விராஜ்' என்ற பெயரில் படமாகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் மன்னன் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். முதன்முதலாக வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடிக்கிறேன் என்றும், அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் இந்த படம் வெளியாகும் என்றும் அக்ஷய்குமார் தெரிவித்து உள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது. இதில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.
இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில், ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு படத்தை அவரது கணவர் பார்த்து கண் கலங்கி இருக்கிறார்.
இந்தி முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு’ தி ஸ்கை ஐஸ் பிங்க்" எனும் வாழ்கை வரலாறு குறித்த இந்தி படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நோய் எதிர்ப்பு குறைபாடு கோளாறுடன் பிறந்த ஆயிஷா சவுத்ரி எனும் இளம் ஊக்கமளிக்கும் பேச்சாளர் பற்றிய கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் தனது கணவர் நிக் ஜோனஸ் இப்படத்தின் படப்பிடிப்பின் போது அழுது விட்டார் என்று கூறியுள்ளார்.
‘திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் படப்பிடிப்பு செட்டில் இருந்த படியே செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு இயக்குனர் சோனாலி போஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் இருவரும் எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தனர். படப்பிடிப்பின் போது தீவிரமாக ஒரு காட்சியில் நடிக்கும் போது மொத்த செட்டுமே மிகவும் அமைதியாக இருக்கும்.

அப்போது நிக் ஜோன்ஸ் படப்பிடிப்பு செட்டில் இருப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் அவர் செட்டில் இருந்த போது, ஒரு முக்கியமான காட்சி படமாக்கப்பட்டு வந்தது. படத்தில் பல துயரங்களுடன் போராடும் ஒரு தாய் கதாபாத்திரத்தில் நடித்தேன். அவரின் புதிதாக பிறந்த குழந்தை நோய் எதிர்ப்பு குறைபாடுதான் பல துன்பங்களை அனுபவித்துவரும். குழந்தையை காப்பாற்ற நிதி பற்றாக்குறை துயரங்களுடன் போராடி வரும் தாய் கதாபாத்திரம். பயங்கரமாக அழுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
முழு செட்டுமே மிகவும் அமைதியாக இருந்த தருணம் ஒரு விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. அது என் கணவர் நிக் ஜோனஸின் அழுகை சத்தம். அதை பார்த்ததும் சோனாலி, பிரியங்கா நீங்கள் உங்களுடைய கணவரை அழவைத்து விட்டீர்கள் என்று சிரித்தார்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






