என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ’டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தில் தனது மகனை ஹீரோவாக நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். மகனை கதாநாயகனாக்கியது குறித்து தங்கர் பச்சான் அளித்த பேட்டி வருமாறு:- “எனது மகன் கதாநாயகனாக நடிப்பது தானாகவே அமைந்தது. எனது முதல் படம் மாதிரி இதை இயக்கி இருக்கிறேன். எனது முந்தைய படங்களில் உள்ள பாணி இந்த படத்தில் இருக்காது. 

    எனது படம் மாதிரியே இருக்காது. எனது படங்களில் போலீஸ் வந்தது இல்லை. ஆனால் இந்த படத்தில் போலீஸ், கொலை, போதைபொருள், கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கும். இந்த காலகட்டத்தில் கதை இல்லாத படங்களே அதிகம் வருகின்றன. குடும்ப உறவுகள் இல்லை. மக்கள் ரசனையும் மாறுகிறது. எனவே நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்து விட்டேன். அதற்காகவே டக்கு முக்கு டிக்கு தாளம் என்று பெயர் வைத்துள்ளேன். 

    தங்கர் பச்சான்

    இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள எனது மகனுடன் மிள்ளனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனிஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டன்ட் செல்வா, மன்சூர் அலிகான், யோகிராமநாதன் ஆகியோர் வில்லன்களாக வருகிறார்கள். முழுக்க சென்னையில் நடக்கும் கதை. விஜித் கீழ் நிலையில் இருக்கிற குப்பத்து ஏழை இளைஞனாக வருகிறார். அவருக்கும் கோடி கோடியாய் சொத்து வைத்து வாழ பிடிக்காத முனிஷ்காந்துக்கும் பணம் எதை கற்றுத்தருகிறது என்பது கதை. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை படம் விறுவிறுப்பாக இருக்கும்.”

    இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.
    ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் பேய் மாமா படத்தில் இருந்து வடிவேலு நீக்கப்பட்டதால், அவருக்கு பதில் யோகிபாபு ஒப்பந்தமாகியுள்ளார்.
    இம்சை அரசன்-2 படத்தில் நடிக்க மறுத்த வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் 2 வருடங்களாக புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. இதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார். இந்த இடைவெளியை யோகிபாபு பயன்படுத்திக்கொண்டார்.
    வடிவேலுக்கு பதிலாக நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு யோகிபாபுவை இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்தனர். நயன்தாராவே சிபாரிசு செய்யும் அளவுக்கு உயர்ந்தார். 

    கடந்த வருடம் மட்டும் யோகிபாபு நடித்து 19 படங்கள் திரைக்கு வந்தன. தற்போது 20-க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். கூர்கா, ஜாம்பி படங்களில் கதாநாயகனாகவும் வந்தார். பிரபல இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பேய் மாமா என்ற படத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்தார்.

    வடிவேலு, யோகிபாபு

    தற்போது இம்சை அரசன்-2 பிரச்சினை காரணமாக அவரை நீக்கி விட்டு யோகிபாபுவை ஒப்பந்தம் செய்து படவேலைகளை தொடங்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது குமுளி பகுதியில் நடந்து வருகிறது. யோகிபாபு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இம்சை அரசன் 2-ம் பாகம் படத்திலும் வடிவேலுக்கு பதில் யோகிபாபுவை நடிக்க வைக்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இதன் மூலம் வடிவேலுக்கு போட்டியாக யோகிபாபு மாறி இருப்பதாக பட உலகில் பேசுகின்றனர். இந்த நிலையில் வடிவேலு பிரச்சினையில் தற்போது சமரசம் ஏற்பட்டு உள்ளதாகவும் இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன், கடந்த 1982ல் நடந்த ஒரு விபத்தின் போது, அமிதாப்புக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் 'ஹெப்பாடிடீஸ் பி' வைரஸ் இருந்துள்ளது. இந்த ரத்தம் அவருக்கு செலுத்தப்பட்டதன் விளைவாக, அவரது கல்லீரல் 75 சதவீதம் செயல் இழந்தது. அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் அவருக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது, தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என சுறுசுறுப்புடன் இயங்கி வந்தார்.

    அமிதாப் பச்சன்

    இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று நள்ளிரவு 2 மணிக்கு அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு இணையான தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பெரியத்திரை, சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ராதிகா சரத்குமார், தற்போது புதிய நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக மாறியுள்ளார்.
    பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ராதிகா. அதற்குப் பிறகு முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 300-க்கும் அதிகமான படங்களில் ராதிகா நடித்துள்ளார்.

    சின்னத்திரையில் வெளியான நாடகம் மூலம் பலரது இல்லத்தில் ஒருவராக மாறினார். மேலும் படத் தயாரிப்பு, டிவி நிகழ்ச்சிகளில் நடுவர் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தற்போது இவரது 'மார்க்கெட் ராஜா MBBS' படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    ராதிகா

    இந்நிலையில், தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறியிருக்கிறார் ராதிகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். 
    அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்க இருக்கும் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அசுரன். இதில் தனுஷ், மஞ்சு வாரியர், டிஜே, கென், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்திருக்கிறது.

    இந்நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் அடுத்த படத்தை எடுக்க தயாராகி விட்டார். இதில் காமெடி நடிகர் பரோட்டா சூரி கதாநாயகன் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    சூரி - வெற்றிமாறன்

    இப்படம் மறைந்த கவிஞர் நா.முத்துகுமாரின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. சூரியின் அப்பாவித்தனம் கதாநாயகன் பாத்திரத்திற்கு பொருந்தியதால் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார், ரகுல் பிரீத் சிங். தமிழில் அதிக படங்களில் நடிக்காததற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, 'எல்லா மொழிகளிலும் அதிக படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டேன். நான் மிகவும் எதிர்பார்த்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. 

    எனவே, கஷ்டப்பட்டு உழைத்ததற்கான பலன் கிடைக்கவில்லை. ஓரளவு இடைவெளி விட்டு புதுப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்தேன். ஓய்வு எடுப்பதற்கே நேரம் கிடைக்கவில்லை. இனி எல்லா வாய்ப்புகளையும் ஏற்க மாட்டேன். 

    ரகுல் பிரீத் சிங்

    எனக்கு மிகவும் பிடித்த கதையும், கேரக்டரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். வெறுமனே டூயட் பாடல் காட்சியில் ஆடிவிட்டு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை' என்ற அவர், விஜய் தேவரகொண்டா மற்றும் ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறார்.
    அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
    அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். மேலும் சின்னத்திரை புகழ் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார்.



    தற்போது இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'பிகில்'. அட்லீ இயக்கி இருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தீபாவளி ஞாயிற்று கிழமை என்பதால் அதற்கு முன்பே 24 அல்லது 25ம் தேதி வெளியாகும் என்று செய்திகள் வெளியானது.

    தற்போது அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.



    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் யூடியூப்பில் பல பார்வையாளர்களை கடந்தும், லைக்குகளைப் பெற்றும் இந்திய அளவில் சாதனை படைத்து வருகிறது. 
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கைதி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 



    ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தை அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, பப்பி படம் மூலம் கதாநாயகனாக நடித்த வருண், தற்போது கவுதம் மேனன் படத்தில் நடித்து வருகிறார்.
    தலைவா, போகன், வனமகன், நெருப்புடா, கோமாளி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருண், ‘பப்பி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் நடிப்பு, காதல், செண்டிமெண்ட் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பப்பி திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    இந்நிலையில், வருண் தற்போது கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    வருண்

    இப்படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அலெக்ஸ் மற்றும் சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் எதிர் வினையாற்று திரைப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

    எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

    இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

    அலெக்ஸ் - சனம் ஷெட்டி

    படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.

    இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

    வைரலாகும் புகைப்படங்கள்

    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ரஜினி இமயமலை சென்றுவிட்டார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளும், புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வந்தன. தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 
    ×