என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகியுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இதனிடையே உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கே.பி.செல்வா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பணத்திற்காக வழக்கை தொடரவில்லை என கே.பி.செல்வா தரப்பு மறுப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
ஹாசிம் மரிக்கார் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் உன் காதல் இருந்தால் படத்தின் முன்னோட்டம்.
கேரளாவில் பிரபலமான 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் முதல் முதலாக தமிழில் தயாரிக்கும் படம் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருடன் 3 நாயகிகளும் நடிக்கிறார்கள். சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், சாக்ஷி திவிவேதி, மற்றும் காயத்ரி ஆகியோரும் நடிக்கிறார்கள். சாஜித் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் சுரேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். மன்சூர் அஹமத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா மேற்கொண்டுள்ளார்.

படம் குறித்து ஹாசிம் மரிக்கார் கூறியதாவது :- 'உன் காதல் இருந்தால்' படம் ஹாரர், நகைச்சுவை, குடும்ப உறவுகள், காதல் என்று பல திருப்பங்கள் நிறைந்திருக்கும். படத்தின் நேரம் 2 மணி நேரம் தான். படம் பார்க்கும் மக்கள் படத்துடன் அவர்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் படியாக.. இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும் வண்ணம் இருக்கும். மேலும், இந்த படத்தில் ஒரே ஒரு காட்சி தான். அந்த ஒற்றைக் காட்சியின் விளக்கம் தான் முழு படம். அது தான் இந்த படத்தின் சிறப்பு. என கூறினார்.
ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார்.
இயற்கை, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடிக்கும் படம் லாபம். விவசாயிகளின் பொருளாதார நிலை பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு குன்றத்தூர் அருகே பெருவயல் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி அந்த கட்டிடத்தை செட்டாக போடாமல் உண்மையான கட்டிடத்தையே கட்ட சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கட்டிடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்க சொல்லி இருக்கிறார். இந்த படத்தை விஜய்சேதுபதியின் விஜய் சேதுபதி புரடக்ஷன்ஸ் நிறுவனம் 7சிஎஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘சர்கார்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்திப் படங்களை ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ், கடந்த ஒரு வருடமாக தமிழ் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார். அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் இப்படம் முழுக்க திரில்லர் பாணியில் உருவாகிறது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ’பெண்குயின்’ என பெயரிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிரிஷ் எடிட் செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு, கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகிறது. ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே நான்கு முறை ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்த பியர்ஸ் ப்ரோஸ்னன் கூறும்போது, “இனிமேல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்தான் நடிக்க வேண்டும்” என்றார். இந்த நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்துக்கு நடிகை லஷானா லின்ச் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு போட்டியாக ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவும் விரும்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- “ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக எனக்கு ஆசை உள்ளது. ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன். அந்த வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன். ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த முதல் நடிகை என்ற பெயரும் எனக்கு கிடைக்கும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் ஒரு நடிகை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வேண்டும்”
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நடிகை ஷாலினி பாண்டே, பாலிவுட் பட வாய்ப்பால் சிக்கலில் சிக்கி உள்ளார்.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து ஒரு படத்திலேயே முன்னணி நடிகைகளுக்கு இணையாக பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் விக்ரம் மகன் துருவ் நடிக்க ரீமேக்கும் ஆகிறது. தொடர்ந்து ஷாலினி பாண்டேக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
கொரில்லா படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த 100 சதவீதம் காதல் சமீபத்தில் திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கில் தயாராகும் நிசப்தம் படத்தில் மாதவன், அனுஷ்காவுடன் நடித்து வருகிறார். இட்டரி லோகம் ஒக்டே என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

மேலும் சில படங்களுக்கு கதை சொல்லி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெஸ்பாய் ஜோர்தார் என்ற இந்தி படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்க ஷாலினி பாண்டேவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை விட மனமில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளை இந்தி படத்துக்கு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
அவர் ஏற்கனவே நடித்த படங்கள் பாதியில் நிற்பதாக பட உலகினர் குறை சொல்கிறார்கள். இந்தி படத்தை முடித்து விட்டுத்தான் மற்ற படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ஷாலினி பாண்டே மீது தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கங்களில் புகார் அளிக்க முடிவு செய்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்து, பட தயாரிப்பாளர் ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
பழம்பெரும் நடிகை ஊர்வசி சாரதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்தவர். தமிழில் துலாபாரம், ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், மிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதை 3 முறை வென்ற ஒரே நடிகை இவர்தான். இதன்காரணமாக சாரதா என்ற அவரது பெயருக்கு முன்னால் ஊர்வசி என்ற பட்டமும் இணைந்து விட்டது.
பிரபலமாக விளங்கிய இவரை வைத்து 1979-ம் ஆண்டு, புஷ்யராகம் என்ற பெயரில் மலையாளப்படம் ஒன்றை கேரள மாநிலம், ஆலுவாவை சேர்ந்த தயாரிப்பாளர் வி.வி. ஆண்டனி எடுத்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்போது அவர், நடிகை ஊர்வசி சாரதாவுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் வழங்கினார்.
தொடர்ந்து வி.வி.ஆண்டனி எடுத்த படங்கள், வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி பெறவில்லை. இதனால் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை அவர் தர முடியாமலேயே போய்விட்டது. காலங்கள் உருண்டோடின. 40 ஆண்டுகள் கடந்து விட்டன. தனக்கு பட தயாரிப்பாளர் ஆண்டனி சம்பள பாக்கி தர வேண்டியதை நடிகை ஊர்வசி சாரதா மறந்தே போய்விட்டார். ஆனால் ஆண்டனி மறக்கவில்லை.

இதற்கு இடையே பிள்ளைகளால் ஆண்டனியின் பொருளாதார நிலை உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அவர் நடிகை ஊர்வசி சாரதா வீட்டுக்கு சென்று, அவரை சந்தித்து சம்பள பாக்கியை கொடுத்துவிட விரும்பினார். இந்த நிலையில் நடிகை ஊர்வசி சாரதா, சினிமா விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கொச்சி டவுன் ஹாலுக்கு வருவதாக ஆண்டனிக்கு தெரிய வந்தது. அவருக்கு தர வேண்டிய பணத்தை விட கூடுதலான ஒரு தொகையை கவரில் போட்டு எடுத்துக்கொண்டு கொச்சி விழாவுக்கு ஆண்டனி சென்றார்.
விழாவுக்கு இடையே அவர் நடிகை ஊர்வசி சாரதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் தான் எடுத்து வந்திருந்த பண கவரை அவரிடம் தந்தார். 40 ஆண்டுகள் ஆன போதும், கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை மறக்காமல் திருப்பி தந்ததில், அவர் காட்டிய நேர்மை, நடிகை ஊர்வசி சாரதாவுக்கு வியப்பை தந்தது. அவர் நெகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு விடை பெற்றனர்.
சம்பள பாக்கிக்காக படங்களை முடக்கி வைக்கிற சூழ்நிலை நிலவுகிற இந்தக் காலத்தில், நடிகை ஊர்வசி சாரதாவுக்கு 40 ஆண்டு காலம் நிலுவையில் வைத்திருந்த சம்பள பாக்கியை தயாரிப்பாளர் ஆண்டனி கொடுத்து தீர்த்தது திரையுலகினர் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தை பார்த்து ரசித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது படமல்ல பாடம் என பாராட்டியுள்ளார்.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய படம் அசுரன். தனுஷ் நடித்த இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அசுரன் படம் கடந்த அக்டோபர் 4ந் தேதி வெளியானது. தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அசுரன் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு அசுரன் படத்தை பார்த்து ரசித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”அசுரன்- படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதைகளம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் சாதனை படைத்துள்ளார்.
நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது போன்றவற்றில் திறமை காட்டி வருகிறார் அஜித்குமார். படப்பிடிப்பு குழுவினருக்கு ருசியாக சமைத்து கொடுத்தும் பாராட்டு பெற்றுள்ளார். சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் வான்வெளி ஆராய்ச்சி குழு ஆலோசகராக பணியாற்றினார். ஆளில்லா விமானங்களை உருவாக்கும் மாணவர்களுக்கு உதவி செய்தார். துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
கோவையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். சமீபத்தில் டெல்லி சென்று அங்குள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலானது. இந்த போட்டியில் 3 பிரிவுகளில் அவர் கலந்து கொண்டு இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பான பட்டியலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் 12-ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9-வது இடத்தையும், பிரி பிஸ்டல் பிரிவில் 8-வது இடத்தையும் பிடித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்து இருப்பதை அஜித் ரசிகர்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பிகில்'. தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் அக்டோபர் 12ந்தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது. வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆனது.
தற்போது யூடியூப்பில் 2 மில்லியன் லைக்குகளை பிகில் டிரைலர் பெற்றுள்ளது. இது இந்திய மொழி படங்களின் டிரெய்லர்களில் அதிக விருப்பங்களை பெற்ற டிரெய்லர் என்ற சாதனையை பெற்றிருக்கிறது.

இதற்கு முன் இந்திய அளவில் அதிக விருப்பங்களை பெற்ற டிரெய்லரில் ஷாரூக் கான் நடித்த 'ஜீரோ' முதலிடத்தில் இருந்தது. அதை பிகில் டிரைலர் முறியடித்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
பிரபல இசையமைப்பாளரான அம்ரீஷ் தனது பிறந்தநாளை நடிகர் விஜய் சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார்.
‘நானே என்னுள் இல்லை’ என்ற படம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கியவர் இசையமைப்பாளர் அம்ரீஷ். இப்படத்தை அடுத்து, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொட்டு’, ‘சத்ரு’ போன்ற படங்களுக்கு இசையமைத்தார். தற்போது, ‘கர்ஜனை’, ‘யங் மங் சங்’, ‘வீரமாதேவி’, ‘பரமபத விளையாட்டு’, ‘கா’ போன்ற படங்கள் இவருடைய இசையில் வெளியாக இருக்கிறது.
இவரின் பிறந்தநாளை அவரது தாயும், நடிகையுமான ஜெயசித்ரா நேற்று இரவு பிரம்மாண்டமாக கொண்டாடினார். இந்த விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்ரீஷ்க்கு வாழ்த்து கூறினார்.

மேலும், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ், டி.சிவா, நடிகை நமீதா, இயக்குநர்கள் சாய் ரமணி, ரத்னா சிவா, படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.
அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க இருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் ‘அசுரன்’. தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வணிக ரீதியாக ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

வெற்றி மாறன் அடுத்ததாக எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். வெகு விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் பட்டியலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.






