என் மலர்
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக டெல்லியில் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது இன்னும் தெரியாத நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்து வைரலாகியுள்ளது. அதில் விஜய் கழுத்தில் ஐடி கார்டு அணிந்து கொண்டு கல்லூரி மாணவர் போல இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் கல்லூரி மாணவராக விஜய் நடிப்பதாக கூறிவருகின்றனர். ஒரு சிலர் ஆசிரியர் வேடத்தில் நடிப்பதாக கூறுகிறார்கள்.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள வி 1 படக்குழு புதுவிதமான விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஒவ்வொரு படத்திற்கும் புதுப்புது விளம்பர யுக்தியை வெளிபடுத்தி அதில் வெற்றி பெறுவது என்பது சுலபமான விஷயமில்லை. அதிலும் முற்றிலும் புதுமுகங்கள் உள்ள படமென்றால் விளம்பர யுக்திகான மெனக்கெடல் அதிகமாகவே இருக்க வேண்டும். அந்த சவாலான பரிட்சையில் ‘வி 1’ படக்குழு சாதுர்யமாக வெற்றி பெற்றுள்ளது.
படத்தின் கதை இன்வஸ்டிகேட்டிவ் திரில்லர் என்பதால் அதையே கருவாக எடுத்துகொண்டு தங்கள் ‘வி 1’ போஸ்டர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிர் வைத்தனர். குழுந்தை பாலியல் விழிப்புணர்வை தூண்டும் வகையில் அந்த போஸ்டரில் 8 எழுத்துக்கள் மறைந்துள்ளது என்றும் அந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் ஒரு வார்த்தை உருவாகும் என்றும் கூறியிருந்தனர்.
சரியான விடையை தங்கள் டிவிட்டர் அக்கௌண்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் குலுக்கல் முறையில் வெற்றி பெறுபவருக்கு 8 கிராம் தங்க சங்கிலி அளிக்க படும் என்று கூறியிருந்தனர். விடையை கண்டறிந்த பலர் அந்த சரியான பதிலை அனுப்பிவைத்தனர். "Bad Touch" என்ற பதிலை அனைவரும் டிவிட்டரில் பதிவு செய்ய, அந்த வார்த்தை இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

இந்த நிகழ்வு ‘வி 1’ படக்குழுவிற்கு பெறும் மகிழ்ச்சியை அளித்தது மட்டுமன்றி தங்களின் விளம்பர யுக்தி வெற்றி பெற்றதை எண்ணி அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் தங்களது முதல் போஸ்டரிலும் இது போன்ற புதிர் வைத்து குலுக்கல் முறையில் வென்றவருக்கு ‘வி 1’ படக்குழுவினர் ஏ.சி பரிசாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள படக்குழுவினர் படத்தை டிசம்பர் 6ம் தேதி அன்று வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் டீசரும் ட்ரைலரும் வெளியாகவுள்ளது.
பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, அடுத்ததாக பேமிலி மேன் 2 வெப்சீரிசில் தீவிரவாதி வேடத்தில் நடித்து வருகிறார்.
ஓ பேபி படத்தை அடுத்து 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ள சமந்தா, அதையடுத்து இப்போது பேமிலி மேன் 2 என்ற வெப்சீரிசில் நடிக்கிறார். ஆங்கில மொழியில் வெளியான இந்த தொடரின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்ததால் இரண்டாவது பாகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மனோஜ் பாஜ்பாய் முதன்மை வேடத்தில் நடிக்கும் இந்த வெப்சீரிசில் சமந்தா நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் பெண் தீவிரவாதியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
கதிரேசன் தொடர்ந்த வழக்கில் நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய மதுரை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுசை தனது மகன் என்றும், வயது முதிர்வின் காரணமாக தனக்கும், தன்னுடைய மனைவி மீனாட்சிக்கும் மாதந்தோறும் ஜீவனாம்சத்தை நடிகர் தனுஷ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் கதிரேசன் மேலூர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. தனுஷ் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவை போலியானது. எனவே ஐகோர்ட்டில் போலி சான்றிதழ் தாக்கல் செய்ததற்காக அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதிரேசன் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த கோர்ட்டு, நடிகர் தனுஷ் மற்றும் மதுரை கோ.புதூர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுசின் அசல் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்யுமாறு, கதிரேசன் தரப்புக்கு மாஜிஸ்திரேட்டு முத்துராமன் உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ஆக்ஷன் படத்தின் முன்னோட்டம்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்ஷன். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அகன்ஷாபூரி, ஷாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி. கூறியதாவது: இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். இப்படத்தில் எனக்கு பக்க பலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற அன்பறிவு இருவரும் தான். மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது.
சாலை பாதுகாப்பு குறித்த கதையை மையமாக வைத்து உருவாகும் பச்சைவிளக்கு படம் உருவான விதம் குறித்து இயக்குனர் மாறன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவில் போக்குவரத்து நெறிமுறைகள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு, விபத்துகளுக்கு காரணம் போன்ற விஷயங்களை மையமாக வைத்து படங்கள் வந்ததில்லை. புதுமுகங்கள் நடிக்கும் 'பச்சைவிளக்கு' படம் குறித்து இயக்குனர் மாறன் கூறியதாவது: சாலை பயணங்களிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் மீறினாலும் ஆபத்து என்பதை பச்சை விளக்கு படத்தில் கமர்ஷியலாக சொல்லியிருக்கிறேன்.
புதுமுகங்கள் காதலர்களாக வருகிறார்கள். மகேஷ், தீஷா, நாஞ்சில் விஜயன், மனோபாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அடிப்படையில் நான் பேராசிரியர். எம்டெக், எம்பிஏ படித்துவிட்டு சாலை பாதுகாப்பு குறித்து டாக்டரேட் பண்ணியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். டிராபிக் சம்பந்தப்பட்ட படம் என்பதால் 'பச்சைவிளக்கு' என்பது தலைப்பு.
இது, சிவாஜி நடித்த படத்தின் தலைப்பும்கூட, சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திடமும் முறைப்படி அனுமதி வாங்கி இந்த தலைப்பை பயன்படுத்தி இருக்கிறோம். அந்த படத்துக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் டிராபிக் வார்டனாக நடித்திருக்கிறேன். இந்த கேரக்டர் தமிழ் சினிமாவுக்கு புதிது, எந்த வேலை செய்பவர்களும் டிராபிக் வார்டனாக பணியாற்றலாம். வாரத்தில் சில நாட்கள் டிராபிக் போலீசுக்கு ஸ்பாட்டில் உதவ வேண்டும்.
வாரத்தில் சில நாட்கள் கல்லூரி, பள்ளிகளுக்குச் சென்று சாலை பாதுகாப்பு பற்றி பாடம் எடுக்க வேண்டும். சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீஸில் இந்த பிரிவு இயங்குகிறது. இந்த சாலை பாதுகாப்பு கதையில் ஒரு பேயும் வருகிறது. சாலை விதிமீறலால் தனது உயிரை இழந்த ஒரு பெண் பேய், என்ன செய்கிறது? யாருக்கு தண்டனை கொடுக்கிறது என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறோம். அந்த கேரக்டரில் பெங்களூர் நடிகை ரூபிகா நடித்துள்ளார்.

செல்போனால் ஏற்படும், கள்ளக்காதல், அதன் பாதிப்புகள் இன்னொரு கிளைக்கதை சொல்கிறது. சென்னை, திருவண்ணாலையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கொஞ்சம் இடைவேளைக்குபின் வேதம்புதிது தேவேந்திரன் இசையமைத்து வருகிறார். பாடல்கள் மூலமாக சாலை பாதுகாப்பை சொல்லியிருக்கிறோம். பக்கா மோட்டிவேஷன் படம் இது, டிசம்பரில் ரிலீஸ்.
”இரு சக்கர வாகனம்” என்று தொடங்கும் சாலை பாதுகாப்பு பற்றிய பாட்டு பேசப்படும். அதை நானே எழுதியிருக்கிறேன். கடவுள் தந்த அற்புதமான உயிரை, அருமையான குடும்ப வாழ்க்கையை சாலை விபத்து ஒரு தலைகாதல் போன்ற அற்ப விஷயங்களால் இழந்து விடக்கூடாது, சாலை விதியை மதியுங்கள். அவசரமாக, பதட்டத்துடன் எங்கும் செல்லாதீர்கள். முன்பே பயணத்தை திட்டமிடுங்கள் என்பதை சொல்கிறது 'பச்சை விளக்கு', காரணம், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் 1 1/2 லட்சம் பேர் இறக்கிறார்கள். உஷார்" என்கிறார் இயக்குனர்.
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லதா மங்கேஷ்கரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பை பிரீச் கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 90 வயதான அவருக்கு நெஞ்சுப்பகுதியில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் இருந்ததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவரது குடும்பத்தினர் கூறுகையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வருவார். வயது மூப்பின் காரணமாகவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம். மற்றபடி அவர் நலமுடன் உள்ளார் என்றனர்.
லதா மங்கேஷ்கர் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தான் தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடினார். 30 இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டு மொழிகளிலும் சுமார் 30 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது, பத்ம பூஷன் விருது, பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ளார். தேசிய விருது, தாதா சாகேப்பால்கே விருது, 4 முறைக்கு மேல் பிலிம்பேர் விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என பல விருதுகள் மற்றும் அங்கீகாரங்களை பெற்றுள்ளார்.
சக்தி சவுந்தரராஜன்-ஆர்யா கூட்டணியில் உருவாகும் ’டெடி’ படம் மூலம் பிரபல இயக்குனர் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களை இயக்கி புகழ் பெற்றவர் மகிழ்திருமேனி. இவர் தற்போது நடிகராக அறிமுகமாகி உள்ளார். ஆர்யா நடிப்பில் உருவாகும் டெடி படத்தில் மகிழ்திருமேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயிஷா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால், அவரது திருமணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா ‘பிகில்’ படத்துக்கு பிறகு ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையான ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து திருமணத்துக்கு தயாராவதாக கூறப்பட்டது.
நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்து 3-வது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்கிறார்கள். டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக நெருக்கமானவர்கள் பேசினர்.
இதனால் கைவசம் உள்ள படங்களை விரைவாக முடித்து கொடுக்க அவசரம் காட்டுவதாக கூறப்பட்டது. சமீபத்தில் இருவரும் திருப்பதி சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பியபோது நயன்தாராவிடம் உங்கள் திருமணம் எப்போது? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் சொல்லாமல் சிரித்தபடி நழுவினார்.

இந்த நிலையில் எல்.கே.ஜி. படத்தில் நடித்து பிரபலமான ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதன்மூலம் திருமணத்தை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப்போற்று’ படத்தின் டீசர் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
காப்பான் படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா ’மாரா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாகவும், அதற்காக மாரா எனும் சிறப்பு தீம் மியூசிக்கை உருவாக்கி வருவதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 27-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் மிஸ்கின் தற்போது துப்பறிவாளன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷால் நடத்தி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. இவர் இயக்கிய பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தி பியானிஸ்ட் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். ரோமன் தன்னுடன் ஒரு படத்தில் நடித்த ஷரன் டேட் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். 1970-ம் ஆண்டு லண்டன் சென்ற போது ஒரு கலவரத்தில் தனது 8 மாத கர்ப்பிணி மனைவியை பறிகொடுத்தார்.
இதனை தொடர்ந்து 1977-ம் ஆண்டு பதிமூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவரை கைது செய்ய போலீஸ் தேடியதும், ஐரோப்பா சென்று லண்டன் நகரத்தில் வசிக்க ஆரம்பித்தார். அந்த வழக்கில் அமெரிக்க போலீஸ் ரோமன் போலன்ஸ்கியை தேடி வருகிறது. பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஆஸ்கர் அகாடமியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். ரோமன் போலன்ஸ்கி தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ரோமன் போலன்ஸ்கி மீது பெண் ஒரு பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த அவர், 1975-ம் ஆண்டு தனக்கு 18 வயதாக இருந்தபோது அங்குள்ள ரிசார்ட்டில் வைத்து ரோமன் போலன்ஸ்கி தன்னை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது 60 வயதை கடந்துள்ள மோன்னியர் என்ற அந்த பெண் பிரெஞ்சின் லி பாரீசியன் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். இயக்குனர் ரோமன் போலன்ஸ்கியின் ஜே அக்யூஸ் என்ற படம் அடுத்த வாரம் பிரான்சில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் 40 ஆண்டுகள் கழித்து மோன்னியர், ரோமன் போலன்ஸ்கி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தகவலை தெரிவித்திருக்கிறார்.






